Wednesday 25 July 2012

டூரிங்குக்கு மறுப்பு


(டூரிங்குக்கு மறுப்பு-திரு ஓய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி)
-எங்கெல்ஸ்

தமிழ் மொழி பெயர்ப்பு:கே.ராமநாதன்
முன்னேற்றப் பதிப்பகம் 1979
சோவியத் நாடு

இந்நூல் தோன்றியதற்கான பின்புலம் பற்றிய அறிமுகம்



முன்னேற்றப் பதிப்பகம் முன்னுரை:-
மார்க்சியத்திற்குப் பகைமையான ஜெர்மன் சித்தாந்தப் போக்குகளிடையே குட்டி பூர்ஷ்வா சித்தாந்தவாதியான டூரிங்கின் கருத்துக்களும் இடம் பெற்றிருந்தன. இவற்றை, கொச்சைப் பொருள்முதல்வாதம் கொச்சைப் பொருளாதாரம் மற்றும் கருத்தியல்வாத, நேர்க்காட்சி, போலி சோஷலிசத் தத்தவங்களிலிருந்து இரவல் பெற்ற எல்லாவகையான கருத்துக்கள் கருத்துருக்களின் ஒரு கதம்பக் கலவை என்று சித்தரிக்கலாம்.

டூரிங்குக்கு முந்திய மார்க்சிய விரோதிகள்  பிரதானமாயும் மார்க்சியத்தின் அரசியல் கோட்பாடுகளை எதிர்த்து நிராகரித்தார்கள். ஆனால் டூரிங்கோ மார்க்சியத் தத்துவத்தின் எல்லா உள்ளடக்கக் கூறுகளையும் அதாவது தத்துவவியல், அரசியல் பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான சோஷலிசத்தைக் கண்டன விமர்சனம் செய்து ஒரு புதிய சர்வப்பொது தத்துவ்வியல் அமைப்பை, அரசியல் பொருளாதாரத்தை மற்றும் சோஷலிசத்தைப் படைப்பவராக உரிமை கொண்டாடினார்.

இந்த சூழல்களின் கீழ், கட்சி இன்னும் விஞ்ஞான சோஷலிசக் கோட்பாடுகளை முழுமையாக மேற்கொள்ளாத பொழுது, தொழிலாளர் இயக்கம் கற்பனாவாத சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களின் செல்வாக்கிலிருந்து இன்னும் விடுபட்டிராத பொழுதில், டூரிங்கின் கருத்துக்கள் பரப்பப்படுவது தொழிலாளர் இயக்கத்துக்கு விசேஷ அபாயமாக இருந்தது. எனவே மார்க்சின் போதனையை ஆதரித்து வளப்படுத்தி மக்களிடையே பரப்புவது அவசியமாயிற்று.

       மார்க்சியத்துக்கு பகையானது என்றும், விஞ்ஞான சோஷலிசத்தைக் கண்டன விமர்சனம் செய்கின்றது என்றும், தொழிலாளர் இயக்கத்துக்கு விசேஷ அபாயமானது என்றும் இம்முன்னுரையில் எச்சரித்த டூரிங்கின் கருத்துக்கள் இன்று இர்ஃபான் ஹபீப் சோஷலிசம் என்ற நூலிலும், தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம் (தீக்கதிர் 22-07-2012)  “சோஷலிசம்என்ற இந்நூலுக்கான விமர்சனத்திலும் (டூரிங்கின் கருத்துக்கள்) முற்போக்கானதாகப் படுகிறது.

சமுதாயம், தத்துவம் மற்றும் சோஷலிசம் பற்றி டூரிங்கின் முற்போக்கான ஆனால் கருத்துக்களை எதிர்த்து நடத்திய கருத்துப் போராட்டத்தின் விளைவாகவே இந்நூல் எழுதப்பட்டது     இர்ஃபான் ஹபீப்-சோஷலிசம் பக்கம் 60

இதனையே தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் (டூரிங்கின் முற்போக்கான அனல் கருத்துக்களை எதிர்த்து..) வழிமொழிகிறார். இதன் படி பார்க்கும்போது டூரிங்கின் கருத்து முற்போக்காகவும் அதனை எதிர்க்கும் எங்கெல்சின் கருத்து எந்தப் போக்காக இவர்களுக்கு படுகிறது என்ற கேள்வி எழுகிறது. சோவியத் பதிப்பின் முன்னுரையில் கூறியது போல் இது தொழிலாளர் இயக்கத்துக்கு  விசேஷ அபாயமானது என்பதை குறிப்பாக உணர்த்துவதற்கே டூரிங்குக்கு மறுப்பு நூலின் தோற்றத்துக்கான காரணங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

டூரிங் போன்ற எதிரிகளின் கருத்துக்களை, எங்கெல்ஸ் காட்டுகின்ற மார்க்சியத்தின் வழியில் பாட்டாளி வாக்கம் எதிர்கொள்ள பயிற்சி பெறவேண்டும்.

நூலின் அறிமுகத்துக்குச் செல்வோம்.

மார்க்சும் எங்கெல்சும் பாரிஸ் கம்யூனின் நிகழ்வுகளை பகுத்தாராய்ந்து கொண்டிருந்த வேளையில், ஜெர்மனியில் ஏற்பட இருந்த இரண்டு  இயக்க இணைப்புகளில் கவனம் செலுத்தினர். ஜெர்மனியில் தோற்றுவிக்கப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் தலைவர்களான பெபெலும், லீப்னெட்டும் மார்க்சியக் கருத்துடன் நின்றாலும் சில தவறுகளை செய்தனர். 1875ஆம் ஆண்டு பாட்டாளிகளின் கட்சியை, குட்டி முதலாளித்துவ புரட்சியாளரான லஸ்ஸால் என்பரின் அனைத்து ஜெர்மானிய தொழிலாளர் ஒன்றியம் என்றழைக்கப்பட்ட இயக்கத்துடன் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இணைக்க முற்பட்டனர்.

இவ்விரண்டு இயக்கங்கள் அவசரகதியில் கொள்கையின்றி இணைவதை மார்க்சும் எங்கெல்சும் பொதுவாக எதிர்த்தனர். கொள்கையினுடைய ஒற்றுமையின் அடிப்படையில் இணைவதே போர்குணமிக்க பாட்டாளி வர்க்க கட்சி தோன்றுவதற்கு ஏதுவாய் இருக்கும் என்று வலியுறுத்தினர்.

லஸ்ஸாலியர்களுடைய கொள்கைகளுக்கு பெரிதளவான சலுகைகளை அளித்து இணைப்புக்குரிய நகல் திட்டம் திடீரென்று கிடைத்ததற்கு மார்க்சும் எங்கெல்சும் கட்சி தலைவர்களிடம் தமது கடும்எதிர்ப்பை உடனே தெரிவித்தனர். இருந்தும் இந்த விமர்சனம் 1857ல் கோத்தா என்ற இடத்தில் நடைபெற்ற காங்கிரசின் அமைப்பாளர்களிடம் உரிய விளைவை ஏற்படுத்தவில்லை. மார்க்சின் நகல் திட்டம் பற்றிய விமர்சனத்தில் ஒருசில அம்சங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டனர்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்த திட்டத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்று அறிவிக்கவே மார்க்சும் எங்கெல்சும் முதலில் முடிவெடுத்தனர். நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவிக்கும் என்பதால் பின்பு இந்த முடிவை மாற்றிக் கொண்டனர்.

கோத்தா வேலைத்திட்டத்தின் மீதான  விமர்சனத்தில் லஸ்ஸால்வாதிகளுடைய கொள்கையுடன் சமரசம் கொள்வதை தீவிரமாக மார்க்ஸ் விமர்சித்தார். இதனை ஜெர்மானி கட்சி ஏற்றுக் கொள்ளாததால் கோத்தா நகரில் உருவான இணைப்பு, சமரச சுவடுகளை கட்சிக்குள் ஏற்படுத்திவிட்டது. கட்சிக்குள் கொள்கை குழப்பம் ஏற்பட்டு, கட்சித் தலைவர்களில் பலர் டூரிங்கின் குட்டி முதலாளித்துவச் சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டனர். குட்டிமுதலாளித்துவ சித்தாந்த கருத்தாக்கம் பாட்டாளி வர்க்க கட்சிக்கு அச்சுருத்தலாகவும் அபாயகரமானதாகவும் இருப்பதை லீப்னெட் அறிந்துகொண்டார். மறுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த லீப்னெட் எங்கெல்சிடம் "டூரிங்குக்கு" மறுப்பை எழுத்துவடிவில் தெரிவிக்கும்படி ஓராண்டுகாலம் பெரும் முயற்சி எடுத்தார். இதன் விளைவே "டூரிங்கக்கு மறுப்பு" என்னும் நூல். இந்நூலில் முழுப்பெயர் "டூரிங்குக்கு மறுப்பு-திரு ஓய்கேன் டூரிங் விஞ்ஞானத்தில் நிகழ்த்திய புரட்சி" என்பதாகும்.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "மக்களரசி"ல் எங்கெல்ஸ் எழுதிய டூரிங்கு பற்றிய விமர்சனம் 1877ஆம் ஆண்டு முதல் 1879வரை தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்யிலுள்ள டூரிங் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் எங்கெல்சின் விமர்சனம் வெளிவருவது பிடிக்கவில்லை. நமது பத்திரிகை வாசகர்களுக்கு எங்கெல்சின் கட்டுரையால் பயனேதும் கிட்டப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து தடுக்க முயற்சித்தனர். ஆனால் எங்கெல்சின் கட்டுரை வெளியிட வேண்டும் என்றும், அக்கட்டுரை பத்திரிகையின் விஞ்ஞான அனுபந்த பகுதியில் அச்சிடப்படும் என்று கட்சி காங்கிரஸ் முடிவெடுத்தது.

டூரிங் மூன்று பெரும் தடித்த நூலைப் படைத்துள்ளார். 1, அரசியல் பொருளாதாரம் மற்றும் தோஷலிசத்தின் ஒரு திறனாய்வின் வரலாறு (1871). 2, அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரத்தின் செல்வழித் தொகுதி (1873). 3, தத்துவம் ஒரு கண்டிப்பான விஞ்ஞானக் கண்ணோட்டம் மற்றும் வாழ்க்கையின் மூலாதாரம் என்னும் வகையில் அதன் செல்வழித் தொகுதி (1875). நூல்களின் தலைப்பைப் போன்றே நூல்களும் பெரும் தொகுப்பாக காணப்படுகிறது.

இந்நூல்களை படித்து விமர்சிப்பது பற்றி எங்கெல்ஸ் கூறுகிறார்:- "எனது வேலைகளைப் புறக்கணித்து இந்தப் புளிக்கும் ஆப்பிளைக் கடிப்பது போன்ற இனிமையில்லாத வேலையில் இறங்குவது என்று உறுதிகொள்ள ஓராண்டு பிடித்தது. ஒரு முறை கடித்தால் முழுவதும் மென்று விழுங்க வேண்டிய வகைப்பட்ட ஆப்பிளாகும், இது மிகவும் புளிப்பானது மட்டுமல்ல மிகவும் பருமனானது." இங்கே எங்கெல்ஸ் வேறுவேலைகள் என்று குறிப்பிடுவதில் முதன்மையானது "இயற்கையின் இயக்கவியல்" என்ற தமது நூலை படைக்கும் பணியை நிறுத்திவிட்டு, டூரிங்குக்கு எதிரான இந்த இம்மாபெரும் வேலையைத் தொடங்கினார் என்பதேயாகும். "இயற்கையின் இயக்கவியல்" நமக்கு முழுமைப் பெற்ற வடிவில்  கிடைக்கவில்லை.

டூரிங்குக்கு முன்பான மார்க்சிய எதிர்ப்பாளர்கள், மார்க்சியத்தின் அரசியல் கொள்கையையே அதிகம் எதிர்த்தும் மறுத்தும் வந்தனர். டூரிங்கோ தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மார்க்சியத்தின் முதன்மையான மூன்று பிரிவின் உள்ளடக்கத்தை கடுமையாக விமர்சித்தார். டூரிங் சோஷலிசத்தில் கைதேர்ந்தவர், சீர்திருத்துவோர் என தாமே விடுத்த ஆறை கூவலுக்கு எதிராக, புளிக்கும் ஆப்பிளைக் கடிப்பது போன்ற இனிமையில்லாத வேலையில் இறங்கினார் எங்கெல்ஸ்.

எங்கெல்ஸ் டூரிங்குக்கு எதிராக எழுதிய விளக்கங்களை மார்க்ஸ் அறியாமல் வெளியிடக் கூடாது என்ற சுய இணக்கம் இருவருக்கும் இடையே இருந்தது. இந்நூல் அச்சிடப்படுவதற்கு முன்பாக கையெழுத்துபடியிலேயே எங்கெல்சால் மார்க்சுக்கு படித்துககாட்டப்படடது. பாகம் இரண்டில் உள்ள பத்தாவது இயல் மார்க்சால் எழுதப்பட்டது. மார்க்சிய முதலாசிரியர்களில் இருவரின் கைவண்ணமும் இப்படைப்பில் இடம்பெற்றுள்ளது.

டூரிங்குக்கு விமர்சனம் என்ற எங்கெல்சின் படைப்பு டூரிங்குக்கு மறுப்பாகவும் மார்க்சியம் பற்றிய விளக்கமாகவும் அமைந்துவிட்டது. இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"அவர் (டூரிங்) சென்ற விடமெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து செல்லவும் அவரது கருத்தோட்டங்களுக்கு எதிராக எனது கருத்தோட்டங்களை முன்வைக்கவும் நான் கட்டாயப்படுத்தப் பெற்றேன். இதன் விளைவாக எனது எதிர்மறை விமர்சனம் நேர்நிலை  விமர்சனமாயிற்று, இந்த வாதம் மார்க்சும் நானும் ஆதரித்துப் போராடிவருகிற இயக்கவியல் முறை மற்றும் கம்யூனிஸ்ட் உலகக் கண்ணோட்டம் பற்றிய ஏறத்தாழ ஒரு தொடர் விளக்கமாக மாற்றப்பட்டது-ஓரளவு விரிவான கல்வித் துறைகளைத் தழுவிய ஒரு விளக்கமாக இருந்தது."

மார்க்சிய இலக்கியத் தொகுப்பிலுள்ள தத்துவம், அரசியல் பொருள்முதல்வாதம், விஞ்ஞான சோஷலிசம் பற்றிய அடிப்படை விவரங்கள் "டூரிங்குக்கு மறுப்பு" என்ற இந்நூலில் ஒருங்கிணைந்த வடிவில் தொகுப்பாய் நமக்கு கிடைத்திருக்கிறது.

4 comments:

  1. மார்க்சிய மூல நூல்க​ளை குறித்த அறிமுகத்​தை எளிய தமிழில் இ​ணையத்தில் எழுதி ​வெளியிட ​வேண்டியது கட்டாயம். தாங்கள் அப்பணி​யை பல்​வேறு வழிகளில் ​தொடர்ந்து ​செய்கிறீர்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ​தொடர்ந்து இப்பணி​யை தாங்கள் ​செய்ய ​​வேண்டும் என்பது என்னு​டைய விருப்பம்.

    ReplyDelete
  2. எனது மூகநூலில் இருந்து
    Ec Ramachandran Erode தோழர் ஈஸ்வரன் உங்களுடையக் கட்டுரை மார்க்ஸிய ஆசான்களின் மூல நூலை வாசிக்கும் ஆர்வத்தைக் தூண்டுகிறது. அந்த மாபெரும் மனிதர்களின் வரலறும், அவர்களுடையப் படைப்பாக்கத்தின் வரலாறும், அதன் விவாதங்களும் நமக்கு சோர்வடையாத உற்சகத்ததைத் தருகிறது.“சமூதாயம், தத்துவம்,மற்றும் சோசலிசம் பற்றிய டூரிங்கின் முற்போக்கான, ஆனால் கருத்துக்களை எதிர்த்து நடத்தியக் கருத்துப் போராட்டத்தின் விளைவே இந்நூல் எழுதப்பட்டது.” என்று இர்ஃபன் ஹபீப் கூறும் கருத்து அன்றைய காலக்கட்டத்தில் மற்ற முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்னையாளர்களேடு ஒப்பிடுகையில் டூரிங்கின் கருத்து முற்போக்கதனது என்பதுதான் அதன் அர்த்தமாக நான் பார்க்கிறேன்.

    Eswaran Ak Ec Ramachandran Erode@ டூரிங்கின் கருத்து, முதலாளித்துவத்துக்கு சாதகமானதாகவும் கம்யூனிஸ் கட்சிக்கு பாதகமானதாகவும் இருக்கிறது. இதனை நூல் முழுதும் பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்:-
    "..இவ்வாறு நாம் செல்வத்தை இரு இன்றியமையாத அம்சங்களான உற்பத்தி மற்றும் வினியோகம் என்பவற்றின் கீழ் மிகவும் பத்திரமாக இப்போது கொண்டு வந்து விட்டோம், பொருட்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையிலான செல்வம், உற்பத்திச் செல்வம்-நல்ல அம்சம், மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும செல்வம், வினியோகச் செலவம் இன்றுவரை-மோசமான அம்சம், அது ஒழிக! இன்றையய நிலைமைகளுக்குப் பிரயோகித்துப பார்த்தால், இதன் பொருள்: முதலாளித்துவ உற்பத்தி முறை முற்றிலும் நல்லது, இது இருக்கலாம், ஆனால் முதலாளித்துவ வினியோக முறை நல்லதல்ல, அது ஒழிக்கப்பட வேண்டும். உற்பத்திக்கும் வினியோகத்துக்கும் இடையிலான தொடர்பைக் கூடப் புரிந்து கொள்ளாமல் பொருளியல் பற்றி எழுதுவதால் கூடப் புரிந்து கொள்ளாமல் பொருளியல் பற்றி எழுதுவதால் வரும் மடத்தனம் இவ்வாறு உள்ளது" "டூரிங்குக்கு மறுப்பு" பக்கம் 324-325
    முதலாளித்துவத்தை காப்பதற்கான பெரும் முயற்சியை எடுத்தவர் டூரிங். மார்க்சின் மூலதன நூலை மறுதலித்தே தமது அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தை படைத்துள்ளார் டூரிங். மூலதனம் முதல் தொகுதி வெளிவந்ததைத் தொடர்ந்தே, மூலதன நூலுக்கு எதிராக பல கருத்துக்களை தம் நூலில் எழுதியிருக்கிறார் டூரிங்.

    இது போன்ற மார்க்சிய முதலாசிரியர்களின் நூல்களை படித்தவர்கள் தமிழகத்தில் சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் அங்கங்கு முதலாசிரியர்களின் நூல்களை, ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்பெடுத்தால் நன்றாக இருககும். இன்றைய தேவையாக நான் பல வாசர் வட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. Ec Ramachandran Erode நன்றி தோழர் மார்க்ஸிய ஆசான்களின் மூல நூல்களை வாசிக்க ஆங்காங்கே சிறுளவிலான அமைப்புகள் தேவை. ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்துச் செயல்படவேண்டும். நாங்கள் முன்பு “மார்க்ஸிய பயிலரங்கம்” என்ற பெயரில் சிறு அமைப்பு வைத்திருந்தோம் இப்போது அது செயல்பாட்டில் இல்லை.


    Eswaran Ak முன்பைய முயற்சியைப் பற்றிய செய்திக்கு நன்றி. மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்க வேண்டியதே நமது பணியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

    ReplyDelete
  4. http://www.facebook.com/photo.php?fbid=182612138537287&set=a.137688413029660.28762.100003655058620&type=1&theater
    “தீக்கதிர்” (29-07-2012) திருத்தம் வெளிவந்திருக்கிறது. அதன் அடிப்படையில் எனது "டூரிங்குக்கு மறுப்பு" நூலின் தோன்றியதற்கான பின்புலம் பற்றிய அறிமுகத்தில் கீழ் காணும் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
    “இதனை தனிநபர் அறிவுத்துறை விவாதமாக எடுத்துச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை."

    “தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் தமது விமர்சனத்தல் "வழிகாட்டும் தத்துவமாக மார்க்சியம் நமது நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் அதை விமர்சனம் செய்யலாமா, நிச்சயமாக அதனை விமர்சனம் செய்யலாம்." என்பதை சுட்டுகிறார்.”

    “ மார்க்சியத்தை வழிகாட்டும் தத்துவமாக ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் சமூகத்தில் இருப்பார்கள். ஆனால் இடதுசாரி கட்சிகளிலும், அமைப்புகளிலும் மார்க்சியத்தை ஏற்றவர்களே இருப்பார்கள், மார்க்சிய வழிகாட்டுதலின் அடிப்படையில் தமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வர். ஆனால் மார்க்சிய எதிர்பாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிகளும், அமைப்புகளும், மார்ச்சியத்தை ஏற்ற தனிநபர்களும் மார்க்சியத்தின் அடிப்படையில் விமர்சிப்பர்.”

    “மாக்சியத்தை ஏற்காதவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகளிலும், அமைப்புகளிலும் அடிப்படை உறுப்பினராகக்கூட ஏற்கமாட்டார்கள் என்று நம்புவோமாக.”

    ReplyDelete