Monday 26 May 2014

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?

எர்னஸ்ட் ஃபிஷர்

தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி

வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018.

தொலை பேசி: 044- 24332424, 24332924, 24339024

மார்க்சின் படைப்புகளிலிருந்து அடிப்படையானவைகளை தேர்ந்து தொகுப்பதும், பெரும்பாலும் திரிபுக்குட்படுத்தப்பட்டு முன்னிறுத்தப்பட்டிருக்கும் மார்க்சுடைய பிம்பத்திற்கு, எதிராக உண்மையான மார்க்சை முன்னிறுத்துவதும் இந்நூலின் நோக்கம் என்று இந்நூலாசிரியர் எர்னஸ்ட் ஃபிஷர் முகவுரையில் கூறியிருக்கிறார்.

தோழர் ப.கு.ராஜன் தமது தமிழ் பதிப்புரையில், காலமும் மண்ணும் மூட முடியாத அவரை விளக்க வந்த பலரும் உருவாக்கிய திரிபுகள் மூடியுள்ளன... இவ்வாறு திரித்தவர்களில் மார்க்சின் எதிரிகள் மட்டுமல்ல அவரது நண்பர்களும் அடங்கவர், என்று எழுதியிருக்கிறார்.

வளர்ச்சியுற்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த தருணத்தில் மார்க்ஸ் உண்மையில் கூறியதையும், அந்த உண்மையை திரித்த மார்க்சின் நண்பர்களையும் இனம் காட்டுவது அவசியமே.

ஆனால் இந்நூல் மார்க்ஸ் கூறியதை உள்ளதை உள்ளபடி கூறவில்லை என்பதே உண்மை. மார்க்சினுடைய கருத்தின் மீது நம்பிக்கையற்ற முறையிலும் திரிபான வகையிலும் எழுதப்பட்டுள்ளது. முதல் அத்தியாயத்தில், எர்னஸ்ட் ஃபிஷர் "இந்த நிகழ்வுப் போக்கு கம்யூனிஸ சமூகமாக முழுமை பெறுவதை அவர் (மார்க்ஸ்) கனவு கண்டார்" (பக்கம்79) (He dreamed of communism as a society that hand completed this process.) என்று எழுதப்பட்டிருக்கிறது.

இயற்கை, சமூகம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை நிர்ணயிக்கின்ற பொது விதிகளை மார்க்ஸ் கண்டு பிடித்தார்இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உலகத்தை அறிவதுடன், புரட்சிகரமாக மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழியினைக் காட்டினார். விஞ்ஞான வழிமுறையில் நிலைநாட்டப்பட்ட ஒரு கோட்பாட்டின் முடிவை எர்னஸ்ட் ஃபிஷர், மார்க்ஸ் கனவுகண்டார் என்று எழுதியிருக்கிறார்.  "கனவு காணுதல்" என்பதற்கு ஒருவர் நினைத்தது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் என்றே பொருள்படும். ஆனால் இன்றைய சமூகம் கம்யூனிச சமூகமாக  மாற்றமடைவது பற்றி மார்க்ஸ் கூறியதை கம்யூனிஸ்டுகள் கனவுகாணுதல் என்ற சொல்லால் குறிப்பிடப்படுவதிலை. ஏன் என்றால் இதுவரையிலான சமூக மாற்றத்தின் அடிப்படையில் கூறப்பட்டதே இந்த சமூக மாற்றம். சமூக மாற்றம் பற்றி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவதில்லை. எர்னஸ்ட் ஃபிஷர் மார்க்ஸ் கனவு கண்டார் என்று சொல்வதற்கு காரணம், இவர் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் குறிப்பிடுகின்ற வழிமுறையில் ஏற்றுக் கொள்ளாமையேயாகும்.

சமூக மாறுதலின் காலகட்டத்தை சமூக உணர்வுநிலையில் இருந்து மதிப்பிட முடியாது, இதற்கு மாறாக சமூக உணர்வை சமூக வாழ்நிலையில் இருந்து பெறப்படுகிறது. அதாவது சமூக உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் காணப்படும் மோதலில் இருந்து இந்த சமூக உணர்வை விளக்க வேண்டும் என்று, "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு- முன்னுரை" என்ற நூலில் மார்க்சால் தெள்ளத்தெளிவாக எழுதப்பட்ட ஒன்றை எர்னஸ்ட் ஃபிஷரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எர்னஸ்ட் ஃபிஷரால் எழுதுகிறார்:-"தான் ஒரு மகத்தான இயக்கவியலாளராக இருந்தாலுமகூட, மார்க்ஸே சில சமயங்களில், தானே சுயமாக இயங்கக்கூடிய ஒரு சாதனம் போல அதாவது, அந்த (வரலாறு என்கிற) சாதனத்தின் மிக முக்கியமான அங்கங்களாக இருப்பதை வாழும் மனிதர்களல்ல, மாறாக உழைப்புக் கருவிகள், இயந்திரங்கள், பொருளியல் உறவுகள் போன்ற உயிரற்ற பொருட்கள் என்பது போல, வரலாற்றை நோக்குவதற்கான வாய்ப்பை எதிர்கால மார்க்சிவாதிகளுக்கு வழங்கியிருக்கிறார்.
..
..ஏன் இந்தச் சமயங்களிளெல்லாம் அவர் (மார்க்ஸ்) தன்னையறியாமலேயே மிகை-எளிமைப்படுத்தலுக்கும், தவறான புரிதலுக்குக்கும் களம் அமைத்ததுக் கொண்டிருந்தார்." (பக்கம் - 160)

மார்க்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எந்த வகையிலும் எளிமைப்படுத்திக் கூறவில்லை. எர்னஸ்ட் ஃபிஷர் தான் மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் காணப்படும் விஞ்ஞானத் தன்மையை மறுதலித்து அதாவது பொருளாயதக் காரணங்களை நீக்கிவிட்டு மக்களே தன் விடுதலையை தீர்மானிக்கின்றனர் என்று கூறுகிறார்.

எர்னஸ்ட் ஃபிஷர் கூறுகிற எதிர்கால மார்க்சியவாதிகளாக மார்க்சும் எங்கெல்சும் லெனினும் அடங்குகின்றனர் என்பதே மெய்யான உண்மை.

மார்க்சும் எங்கெல்சும் தமது புகழ்பெற்ற "கம்யுனிஸ்டுக் கட்சி அறிக்கை" என்கிற நூலில் எழுதியுள்ளனர்:-
"உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.
..
அனைத்து உற்பத்திக் கருவிகளின் அதிவேக மேம்பாட்டின் மூலமும், தகவல் தொடர்பு சாதனங்களின் பிரம்மாண்ட முன்னேற்றத்தின் மூலமும் முதலாளித்துவ வர்க்கம் அனைத்துத் தேசங்களையும், மிகவும் அநாகரிகக் கட்டத்தில் இருக்கும் தேசங்களையும்கூட, நாகரிக வட்டத்துக்குள் இழுக்கிறது.
..
பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்க நிலைக்கு உயர்த்துவதும், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதும், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியில் முதல் படியாகும் என்பதை மேலே கண்டோம்.

முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து படிப்படியாக மூலதனம் முழுவதையும் கைப்பற்றவும், உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தவும், உற்பத்தி சக்திகளின் மொத்த அளவை முடிந்தவரை அதிவேகத்தில் பெருக்கவும், பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தும்."

லெனின் கூறுகிறார்:-
"சோஷலிசம் என்பது எதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள அல்ல, நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும்  அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினர்.
..
தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்பவருமாறு சொல்லிவிடலாம்: தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள், மேலும் கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள். (..they substituted science for dreams.)" (பிரெடெரிக் எங்கெல்ஸ்)

இங்கு லெனின் கனவுகள் இருந்த இடம் என்று கற்பனாவாத சோஷலிஸ்டுகளைப் பற்றி கூறுகிறார். கற்பனாவாத சோஷலிஸ்டுகள் கம்யூனிச சமூகத்தை ஒரு எதிர்கால சித்திரமாக, அருவமான திட்டத்தில் முன்வைத்தனர். இதற்கு மாறாக மார்க்சும் எங்கெல்சும் வரலாற்று வளர்ச்சியின் இயக்கம் புறநிலையான விதிகளால் நிர்ணயிக்கப்படுவதையும் இந்த வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவே கம்யூனிச சமூகம் என்பதை நிலைநிறுத்தினர்.

விஞ்ஞான வழிப்பட்ட கம்யூனிசத்தை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்:-
"கம்யூனிசம் என்பது இயன்ற அளவுக்கு முழுமையான லட்சிய சமூகத்தைக் கற்பனையின் மூலம் புனைந்தியற்றுதலை இனியும் குறிக்கவில்லை, அதற்கு மாறாக, பாட்டாளி வர்க்கம் நடத்துகின்ற போராட்டத்தின் தன்மை, நிலைமைகள் மற்றும் அதன் விளைவாகிய பொது நோக்கங்களை ஊடுருவி அறிதலைக் குறித்தது." (கம்யூனிசஸ்டுகள் சங்கத்தின் வரலாறு குறித்து)

மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரால் விஞ்ஞானம் என்று கூறப்பட்டவை எர்னஸ்ட் ஃபிஷர்க்கு  இன்னும் கனவாகப்படுகிறது. இவருக்கு ஏன் கனவாகப்படுகிறது என்பதை அறிய வேண்டுமானால், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை (பக்கம் - 160) இவர் புரிந்து கொண்ட விதத்தைக் குறிப்பிட வேண்டும்.

மார்க்ஸ் "தத்துவத்தின் வறுமை" என்ற நூலில்:-
சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது." (தத்துவவியலின் வறுமைபக்கம் 139 – 140)

இதனை எர்னஸ்ட் ஃபிஷர் இப்படி எழுதுகிறார்:-

"மார்க்சியத் தத்தவத்தை எளிமைப்படுத்துகின்ற பலர் இதிலிருந்து, சமூக மாற்றத்தை உண்மையிலேயே துவக்கி வைப்பதும், நடத்திக் காட்டுவதும் உழைப்பின் கருவிகள் தான், அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களல்ல என்கிற முடிவுக்கு வருகிறார்கள். இந்த முறையில் உற்பத்தி சக்திகள் பண்டமயமாக்கப்பட்டு விடுகின்றன, நீராவி-ஆலை இருக்கும்பொழுது, முதலாளித்துவத்தில் வர்க்கப் போராட்டத்திற்கான தேவை எனன? அணுசக்தி நிலையங்கள் நமக்குகிடைக்கும் பொழுது புதிய சமூகம் தாமாகவே வந்துவிடும் என்பது உறுதி அல்லவா? அதே "தத்துவத்தின் வறுமை" நூலில் கீழ்காணும் பாரா வருவது உண்மை தான்

உற்பத்தி சாதனங்கள் எல்லாவற்றிலுமே மாபெரும் உற்பத்தி ஆற்றல் படைத்தது புரட்சிகர வர்க்கவே"(பக்கம்- 161)

"தத்துவத்தின் வறுமை" என்ற நூலில் மார்க்ஸ் "உற்பத்திக் கருவிகளனைத்திலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்திச் சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமேயாகும்" என்று எழுதியிருக்கிறார். இவ்வாறு எழுதுவதற்கு முன் அவர் எதைக் கூறிவிட்டு இதனை சொல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்.

"ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னைத் தானே விடுதலை செய்துகொள்வதற்கு அவசியத் தேவை, ஏற்கெனவே பெறப்பட்டிருக்கும் உற்பத்திச் சக்திகளும், இருந்து வரும் சமூக உறவுகளும் மேலும அக்கம் பக்கமாக இருந்துவர முடியாதவையாக ஆகவேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

சமூக மாற்றத்தை  நிகழ்த்துவது புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமே என்பது உண்மை தான். தொழிலாளிவர்க்கத்தின் புரட்சிகர உணர்வின் அதாவது அவர்களுக்கு தேவைப்படுகிற அகநிலை உணர்வுநிலையை உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் அல்லது இறுதி முடிவாக்க உதவிடும் புறநிலை காரணங்களை மறுதலித்திட முடியாது.

உற்பத்திக் கருவிகளை மட்டும் குறிப்பிட்டு சமூக மாற்றத்தை முன்வைப்பது இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம்.

உற்பத்திச் சக்திகளில் புரடசிகர பாட்டாளி மக்களை மட்டும் முன்னிருத்துவது கருத்துமுதல்வாதம்.

உற்பத்திச் சக்திகளின் மாற்றத்துடன் உற்பத்தி உறவுகளின் மாற்றமும், அந்த மாற்றத்துக்கு ஏற்ப மனிதர்கள் உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப கோட்பாடுகளையும் கருத்துக்களையும் தோற்விக்கப்படுவதை மார்க்ஸ் பொருள்முதல்வாத அடிப்படையில் "தத்துவத்தின் வறுமை" என்ற நூலில் கூறியதை எர்னஸ்ட் ஃபிஷர் அதனைப் புறக்கணித்துவிட்டு, மார்க்ஸ் "பொருளியல் உறவுகள் போன்ற உயிரற்ற பொருட்கள் என்பது போல, வரலாற்றை நோக்குவதற்கான வாய்ப்பை எதிர்கால மார்க்சிவாதிகளுக்கு வழங்கியிருக்கிறார்." என்று எழுதியிருக்கிறார். மார்க்ஸ் கூறியதை மார்க்சிடமிருந்து பிரித்து எதிர்கால மார்க்சியவாதிகள் தவறாக புரிந்து கொள்வதற்கு அவர் இடம் கொடுத்துவிட்டது போல் ஓலமிடுகிறார்.

மார்க்ஸ் பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதத்தில் (28-12-1846) மேலும் தெளிவு பெறலாம். சமூகம் என்பது மக்களின் பரஸ்பரச் செய்கையின் விளைபொருள். மனிதர்கள் தாங்களாகவே ஏதாவதொரு சமூகத்தைத் தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் பெற்றிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

"மனிதர்களின் உற்பத்திச் சக்திகளில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அனுமானித்துக் கொள்ளுங்கள், வர்த்தகம் நுகர்வு பற்றிய ஒரு குறிப்பிட்ட வடிவம் உங்களுக்குக் கிடைக்கும். உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் நுகர்விலும் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களை அனுமானித்துக கொள்ளுங்கள், அவற்றிற்குப் பொருத்தமான ஒரு சமூக அமைப்பு முறையும் ஒரு பொருத்தமான குடும்ப அமைப்பும் படிப்பிரிவுகளின் அல்லது வர்க்கங்களின் அமைப்பும் உங்களுக்குக் கிடைக்கும்."

மார்க்ஸ் இங்கு மனிதர்களின் உற்பத்திச் சக்திகளில் குறிப்பிட்ட வளர்ச்சியே  ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பை தோற்றுவிக்கிறது என்கிறார்.

மேலும்
".. ஒவ்வொரு உற்பத்திச் சக்தியும் பெறப்பட்ட சக்தியாகும், முந்தைய நடவடிக்கையின் விளைபொருளேயாகும். எனவே உற்பத்திச் சக்திகள் மனிதர்களின் நடைமுறை ஆற்றலின் விளைவாகும், ஆனால் இந்த ஆற்றலுங்கூட மனிதர்கள் இருக்கக் காண்கிற சூழ்நிலைமைகளாலும் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள உற்பத்திச் சக்திகளாலும் அவர்களுக்கு முன்பே- அவர்களால் படைக்கப்படாமல் முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டு- இருந்துவரும் சமூக வடிவத்தாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது"

சமூக உற்பத்திச் சக்தி என்பது முந்தைய தலைமுறையினரால் விளைவிக்கப்பட்டது என்கிற இந்த வரலாற்றியல் பொருள்முதல்கண்ணோட்டம் இல்லாததால், எர்னஸ்ட் ஃபிஷர் மார்க்ஸ் தன்னையறியாமலேயே மிகை-எளிமைப்படுத்தலுக்கும், தவறான புரிதலுக்குக்கும் களம் அமைந்ததுக் கொடுத்துள்ளதாக வருத்தப்படுகிறார்.

மார்க்சியத்தில் காணப்படும் விஞ்ஞானத் தன்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதால் எர்னஸ்ட் ஃபிஷர் மார்க்சின் இளமைக்காலக் கருத்தான அந்நியமாதலோடு முடங்கிப் போகிறார்.

தனிச்சொத்துடைமை சமூகம் என்பதால், உழைப்பவனின் மதிப்பு உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்ட முதலாளிக்கு சென்றுவிடுகிறதுஅதாவது நிலைமாறிய அந்த உற்பத்தியின் மதிப்பு உபரி மதிப்பாய் முதலாளியிடம் சேர்கிறது. அது மூலதனமாய் மீண்டும் தொழிலாளியை சுரண்டுகிறது. மகிழ்ச்சியற்று முதலாளியிடம் தொழிலாளி வேலை செய்ய வேண்டிய நிலையில் அழுத்தப்படுகிறான். அவன் அவனாக இருப்பது வேலை செய்யாதிருக்கும் நேரத்தில் தான். வேலையில் ஈடுபடும் போது அவன் அவனிடமிருந்து அந்நியப்பட்டு போகிறான்.

இளம் மார்க்சை முன்னிலைப்படுத்துபவர்கள், மார்க்சின் விஞ்ஞான அணுகுமுறைக்குச் செல்லாமல் இத்துடன் நின்று, அந்நியப்பட்டவனுக்காக இரக்கம் மேலோங்கி கருணையோடு சமூக முரணை அணுகுகின்றனர். இந்தக் கருணைப் பெருக்கில் மூழ்கியவர்கள் சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாது, சமூக நிலைமைகளின் மாற்றத்தோடு தனது சிந்தனையை சுருக்கிக் கொள்கின்றனர்.

எர்னஸ்ட் ஃபிஷர் பற்றி இதே நூலில் ஜான் பெலாமி ஃபோஸ்டர் எழுதுகிறார்:-
“...ஃபிஷர் கடந்த காலங்களில் முதலாளித்துவதிற்கு மிகப் பெரும் பிரச்சனையாக இருந்தது போல பொருளாதார நெருக்கடிகள் தற்போதைய காலங்களில் இருப்பதில்லை என்று வாதிடுகின்ற மார்க்சிய விமர்சகர்களுடன் சற்று உடன்பாடு கண்டார். அரசாங்க வேண்டல்-நிர்வாகத்தின் அதாவது கீன்சியன் நல அரசுமுறை மூலமாகப் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தணிப்பது என்பதை முதலாளி வர்க்கம் கற்றுக் கொண்டதாக நம்பப்பட்டது. இருந்தபோதிலும், இன்று முதலாளித்துவம் குறைவிகித வளர்ச்சி, உயர்விகித வேலையின்மை, உலகப் பொருளாதார நிலையின்மை அதிகரிப்பு, எல்லாப் பகுதிகளிலும் நல-அரசுகளின் வீழ்ச்சி போன்றவற்றால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்சியம் மறு-சிந்தனைக்குள்ளாக்கப்பட்டதை மறுசிந்தனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.  (பக்கம் 194-195)

முதலாளித்துவ அமைப்பின் முரணை கீன்சிய பொதுநலஅரசால் தீர்க்கப்பட்டதாக முடிவெடுத்ததால் தான், மார்க்ஸ் கம்யூனிச சமூகம் பற்றி கனவுகண்டார் என்று எழுத முடிகிறது.

எர்னஸ்ட் ஃபிஷர்யைப் போன்று  மார்க்சியத்தை மறு-சிந்தனைக்குள்ளாக்குவார்கள் அதனை மீண்டும் மறுசிந்தனை  செய்து மார்க்சியம் சரி என்று கூறவேண்டும், அடுத்து இவரைப் போன்ற மற்றொரு கூட்டம் மறு-சிந்தனை செய்யும் மற்றவர்கள் அதனை மறு-சிந்தனைக்கு உள்ளாக்குவார்கள். இப்படி வளமையான காலங்களில் முதலாளித்துவ சிந்தனைப் பக்கம் ஓடுவார்கள், முதலாளித்துவம் திணறுகின்ற காலங்களில் மார்க்சியத்தின் பக்கம் வருவார்கள். இது அவர்களின் ஊசலாட்ட சிந்தனையைக் காட்டுகிறது. இந்த ஊசலாட்டம் பொருள்முதல்வாதத்தைப் புறக்கணித்ததினால் ஏற்பட்டது. இப்படிப்பட்டவர் எழுதும் நூல் "மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?" என்றுதலைப்பிட்டிருந்தாலும் தலைப்புக்குள் இந்நூல் அடங்குமா?

எர்னஸ்ட் ஃபிஷர்ரின் இந்நூல், "மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?" என்று ஜெர்மனியில் பெயரிடப்பட்டுள்ளது. "மார்க்சைக் கற்றறிவது எவ்வாறு?" என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது. உண்மையில் "மார்க்ஸ் உண்மையில் கூறியிருக்க வேண்டியது என்ன?" "மார்க்சை எவ்வாறு கற்பிக்கக் கூடாது?" என்பதாகவே நூல் அமைந்துள்ளது.

பாட்டாளி வர்க்கச் சார்பு இல்லாதவர்களால் மார்க்சியத்தை மார்க்சிய வழியில் புரிந்துகொள்ள முடியாது. சமூக மாற்றத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில் புரிந்து கொள்ளாதவர், அரசியல் பொருளாதாரத்தையும் வரலாற்றியல் பொருள்முதல்வாத வழிமுறையில் அணுகமாட்டார்கள். இதன் விளைவே மார்க்சியத்தை தவறான வகையில் புரிந்து கொள்வதும் அதன்படி விளக்குவதும் என்கிற நிலை ஏற்படுகிறது.

"மூலதன" முதல் தொகுதி ஆங்கில பதிப்புக்கு எங்கெல்ஸ் பொருளாதார நெருக்கடியைப் பற்றி முன்னுரையில் எழுதுகிறார்:-
"..ஓயாது திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த தேக்கம் (Stagnation) செழுமை (Prosperity) மிகையுற்பத்தி (Over production) நெருக்கடி (Crisis) இவற்றின் பத்தாண்டுச் சகடம் (Decennial Cycle) உண்மையிலேயே சுழன்று முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது, ஆனால் நிரந்தரமான, நீடித்த மந்தத்தின் விரக்திச் சகதியில் தான் அது நம்மை இறக்கிவிட்டுள்ளது. ஏக்கத்துடன் எதிர்பாத்த செழுமைக் காலம் வராது, அதன் முன்னறிகுறிகள் தெரிவதாக அடிக்கடி தோன்றுகிறது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவை மாயமாய் மறைந்து போகின்றன." (பக்கம் 23)

முதலாளித்துவ உற்பத்தி சக்தியின் வளர்ச்சியால் அதன் பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும், உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று மார்க்ஸ் தமது மூலதன நூலில் எழுதியிருக்கிறார்.

முதலாளித்துவ சமூகத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகும் போது மார்க்சின் இந்த முடிவுக்கே வருவோம்.

லெனின் பொருளாதார நெருக்கடியைப் பற்றி கூறுகிறார்:-
"நெருக்கடிகளின் தத்தவம் குறித்தும் தகர்வின் தத்துவம் குறித்தும் திருத்தல்வாதத்தின் நிலை மேலும் படுமோசமானதாகவே இருந்தது. மிகச் சொற்ப காலத்துக்கு மட்டுமேதான், அதுவும் மிக மோசமான பார்வைக்கேடு உள்ளவர் தான் ஒரு சில ஆண்டுக் காலத் தொழில்துறை ஏற்ற நிலையாலும் செழிப்புக் காலத்தாலும் வயப்படுத்தப்பட்டு, மார்க்சின் தத்துவத்தினுடைய அடிப்படைகளைத் திருத்தியமைக்க வேண்டுமென நினைக்க முடியும்.

நெருக்கடிகள் கடந்த காலத்துக்குரியனவாகிவிடவில்லை, செழிப்பைப் பின்தொடர்ந்து நெருக்கடி வருகிறது என்பதை யதார்த்த நிலைமைகள் மிகவிரைவாகவே திருத்தல்வாதிகளுக்குத் தெளிவுபடுத்தின. குறிப்பிட்ட நெருக்கடிகளின் வடிவங்களும் வரிசைமுறையும் சித்திரமும் மாறினவேயன்றி, நெருக்கடிகள் முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாய்த்தான் நிலைத்திருந்தன." (மார்க்சியமும் திருத்தல்வாதமும்)

மார்க்சின் நெருக்கடி கோட்பாட்டை திருத்துகின்ற திருத்தல்வாதம் பற்றி 1908ல் லெனின் எழுதியது இது. ஆனால் புதிதுபுதிதாக எர்னஸ்ட் ஃபிஷர்  போன்ற திருத்தல்வாதிகள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். மார்க்சியத்தின் அடிப்படையால் இதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மார்க்சின் இரண்டு மாபெரும் கண்டுபிடிப்புகளை நமக்கு எங்கெல்ஸ் அறிமுகப்படுத்துகிறார்:-
"வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம், உபரி மதிப்பு மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுத்தபடல் ஆகிய இந்த மாபெரும் இரு கண்டுபிடிப்புகளுக்காக நாம் மார்க்சுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்தக் கண்டு பிடிப்புகளின் விளைவாக சோஷலிசம் ஒரு விஞ்ஞானமாயிற்று,.." (கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்)

எர்னஸ்ட் ஃபிஷர்  இந்த விஞ்ஞானத்தை ஏற்றுக் கொள்ளாததால் தான் மார்க்ஸ் கம்யூனிச சமூகத்தைப் பற்றி கனவுகண்டார் என்று எழுத முடிகிறது.

உபரிமதிப்பு பற்றி மார்க்சின் கோட்பாட்டையும் தவறாகப் எர்னஸ்ட் ஃபிஷர் விளக்கப்படுத்துகிறார். தானியங்கி மயமாகும் ஒரு காலகட்டத்தில் உபரிமதிப்பின் கோட்பாட்டை மாற்றியமைக்கும் தேவை எழும் என்பதை மார்க்ஸ் முன்கூட்டியே கணித்திருந்தார் என்று எழுதுகிறார். (பக்கம் 191) மூலதன நூலில் மார்க்ஸ் மாறும் மூலதனம் மாறமூலதனம் என்று மூலதனத்தை பிரித்து விளக்கியிருப்பதின் விஞ்ஞானத் தன்மையை புரிந்து கொள்ளாவில்லை. புதிய மதிப்பைப் படைத்திடாத மாறா மூலதனத்தால், தானியங்கி இயந்திரம் வாங்கப்படுகிறது என்பதை அறிந்திடாமல் உபரிமதிப்பின் கோட்பாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று மார்க்சின் பெயரால் வேண்டுகோள் விடுகிறார். இவர் கூறுவது போல் உபரிமதிப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் மார்க்ஸ் கண்ட சமூக மாற்றம் கனவு வகைப்பட்டது என்று கூறலாம். ஆனால் அதற்கு வாய்பில்லை.

முதலாளித்துவ உற்பத்தி சக்தியின் வளர்ச்சியும் அதன் உடன்விளைவான முரண்பாட்டையும் அதனால் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடியும், தொடர்ந்து ஏற்படுகின்ற சமூக மாற்றத்தையும் ஏற்றுக் கொள்ளாததால் எர்னஸ்ட் ஃபிஷர் உபரிமதிப்பை மாற்றியமைக்கும் தேவை முதலாளித்துவ அமைக்குள்ளேயே ஏற்படும் என்பது போல் மார்க்சுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

எர்னஸ்ட் ஃபிஷர் குறிப்பிடுகிற இடத்தில் மார்க்ஸ் உண்மையில் கூறுயது என்வென்றால், உபரிஉழைப்பு இல்லாது போய்விடும் நிலையில் பரிவர்த்தனை மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் உற்பத்தி முறை நொறுங்கி வீழ்ந்து விடுகிறது. இவ்வாறு முதலாளித்துவ வீழ்ச்சியை குறிப்பிடுவதை எர்னஸ்ட் ஃபிஷர் முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே உபரிமதிப்பின் கோட்பாடு மாற்றியமைக்கும் தேவையை மார்கசே கூறியிருப்பது போல் திரித்துரைக்கிறார்.

பொதுவாக திரிபுவாதிகள், மார்க்சின் மூன்று மூலதனத் தொகுதியில் பதிப்பிக்கும் வடிவத்தில் கூறப்பட்டதை தமது எழுத்துக்களில் பயன்படுத்துவதில்லை, பதிப்பிற்கு தாயராக இல்லாத முழுமை பெறாத நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டுகின்றனர். "1844ஆம் ஆண்டின் பொருளாதார-தத்துவ கையேடு" மற்றும் மூலதன நூலுக்கான தயாரிப்பான "க்ருண்ட்ரிஸ்" (Grundrisse) இந்த இரு நூல்களில் இருந்தே எர்னஸ்ட் ஃபிஷரும் அதிகமான மார்க்ஸ் எழுத்துக்களை கையாளுகின்றனர். ஏன் என்றால் இவ்வெழுத்துக்கள் பதிப்பு வடிவத்தில் இல்லாமல் குறிப்பு வடிவத்தில் இருப்பதால் தமது கருத்துக்கேற்ப அதனை வளைத்துக்கொள்ள எளிதாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

எங்கெல்ஸ் "கூலியுழைப்பும் மூலதனமும்" என்ற நூலிக்கு எழுதிய (1891) முன்னுரையில், மார்க்ஸ் 1840களில் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்தை முடித்திருக்கவில்லை, அதனால் அவரது பிற்கால நூல்களில் இருந்து பார்க்கும் போது தொடக்க கால அரசியல் பொருளாதார நூல்கள், துல்லியமற்றதாகவும் தவறானதாக சில தொடர்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
"நாற்பதாம் ஆண்டுகளில் [1840-களில்] மார்க்ஸ் அரசியல் பொருளாதாரம் பற்றிய தமது விமர்சன நூலை இன்னும் முடித்திடவில்லை. ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதிவரையிலும் இதனைச் செய்து முடிக்கவில்லை. இதன் காரணமாக, மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனம் பற்றிய தமது நூலின் முதற்பகுதியை முடிப்பதற்கு முன்னதாக வெளிவந்த அவருடைய நூல்கள், 1859-க்குப் பின்னர் எழுதியவற்றிலிருந்து சில விவரங்களில் மாறுபடுகின்றன. அவருடைய பிற்கால நூல்களின் நோக்குநிலையிலிருந்து பார்க்கையில் துல்லியமற்றதாகவும் தவறானதாகவுங்கூடத் தோன்றும் [சில] தொடர்களும் முழு வாக்கியங்களும் அந்நூல்களில் காணப்படுகின்றன."

மார்க்ஸ் உண்மையில் கூறியவற்றை வெளிப்படுத்துவதாக பறைசாற்றி, இந்த மார்க்சிய திரிபுநூல் வெளிந்திருக்கிறது. இதன் ஆபத்தை பாட்டாளிவர்க்கமும் பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியும் உணர்ந்து கொள்ள வேண்டும். திரிபுடன் இதுபோன்ற நூல் வெளிவரும்போது இதனை மறுத்து இரண்டு அல்லது மூன்று விமர்சன நூலாவது உடனடியாக வெளிவர வேண்டும். அப்போது தான் பாட்டாளி வர்க்க உணர்வின் மீது ஏற்படுகின்ற சிதைவைத் தடுக்க முடியும்.

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்னவென்பதை அறிவதற்கு இதுபோன்ற நூல்கள் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். மார்க்ஸ் உண்மையில் கூறியதை அறிய மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் குறிப்பிடத்தக்க படைப்புகளே நமக்கு போதுமான அளவிற்கு இருக்கிறது.

லெனினை விடுத்த மார்க்சியம், மார்க்சால் கூறப்படாத கோட்பாடேயாகும்

எர்னஸ்ட் ஃபிஷர் இந்நூலில் லெனினைப் பற்றி ஏதும் கூறவில்லை. ஆனால் எதிர்காலத்திற்கு வலுவான, முக்கியத்துவம் வாய்ந்தவராக கிராம்சியை முன்னிருத்துகிறார்.

1917 டிசம்பர் 24ல் "'மூலதனத்திற்கு' எதிரான புரட்சி" என்று மார்க்சுக்கு எதிரான புரட்சியாக, ரஷ்யப் புரட்சியை வர்ணித்திருப்பவர் கிராம்சி.

"போல்ஷ்விக் புரட்சி, மார்க்சின் 'மூலதன'த்திற்கு எதிரான புரட்சியாகும். ரஷியாவில் பாட்டாளி வர்க்க்ததைக் காட்டிலும் பூர்ஷ்வாக்களின் மத்தியில்தான் 'மூலதனம்' அதிகத் தாக்கம் ஏற்படுத்தியது. பாட்டாளி வர்க்கம் தனது விடுதலை, தனது வர்க்க நலன்கள், தனது புரட்சி ஆகியன பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே தவிர்க்க முடியாத விதியின் பயனாக, ரஷியாவில் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கப்படும்., அங்கு முதலாளிய சகாப்தம் தொடங்கும், மேற்கத்தியப்பாணி நாகரிகம் அங்கு தழைக்கும் என்பதை 'மூலதனம்' விமர்சனரீதியாக விளக்கியது. ஆனால்,எந்தவொரு சட்டகத்திற்குள் ரஷிய வரலாறு வளர வேண்டும் என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வரையறுத்ததோ, அந்த சட்டகத்தை வரலாற்று நிகழ்வுகள் உடைத்தெறிந்தன. போல்ஷ்விக்குகள் காரல் மார்க்ஸை மறுதலித்துள்ளனர். அவர்கள் தங்கள் செயல்கள் மூலமும் வெற்றிகள் மூலமும், இதுகாறும் நம்பப்பட்டு வந்தது போல வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின விதிகள், அவ்வளவு இறுக்கமானவை அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர்"
கிராம்ஷி புரட்சியின் இலக்கணம்- எஸ்.வி.ராஜதுரை, ,கீதா-பக்கம் 86-87

கிராம்சியின் இக்கருத்து லெனின் எழுதிய "ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்" நூலோடும், ஸ்டாலின் எழுதிய "லெனினியத்தின் அடிப்படைகள்" என்ற நூலோடும் முரண்படுகிறது.

எர்னஸ்ட் ஃபிஷரின் இந்த நூல் தொடக்கம் முதல் இறுதிவரை மார்க்சிய வழிப்பட்டதாக இல்லாது போனதற்கு கிராம்சி பெரும் காரணமாகிறார்..

******************************************************************************************

மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கு உதவிடும் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் சிறுபடைப்புகள்:-

மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்கள்.

1. காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ்
2. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - எங்கெல்ஸ்
                (https://www.marxists.org/tamil/marx/1847/prin-of-com.htm)
3. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ் - எங்கெல்ஸ்
                (https://www.marxists.org/tamil/marx/1848/communist-manifesto/index.htm)
4. அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு- முன்னுரை - மார்க்ஸ்
5. காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு" - எங்கெல்ஸ்

7. கூலியுழைப்பும் மூலதனமும் - மார்க்ஸ் (https://www.marxists.org/tamil/marx/1847/wage-labour/index.htm)
7. கூலி விலை லாபம் - மார்க்ஸ்
8. கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் - எங்கெல்ஸ்
                (https://www.marxists.org/tamil/marx/1880/soc-utop/index.htm)
9. லுத்விக் ஃபாயர்பாகும் சென்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் - எங்கெல்ஸ்
                (https://www.marxists.org/tamil/marx/1886/feuerbach.htm)
10. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்தரம் - எங்கெல்ஸ்

லெனின் நூல்கள்.

1. காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றி விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
2. பிரெடெரிக் எங்கெல்ஸ்
3. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
4. மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்
5. வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்.

6, மார்க்சியமும் திருத்தல்வாதமும்
7. மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்
8. நமது வேலைத்திட்டம்
9. எங்கிருந்து தொடங்குவது?
10. அரசு

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களைப் போல் அவர்களின் வழியொற்றி எழுதப்பட்ட நூல்களைப் படிக்கலாம்.