Wednesday 10 August 2016

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை- நூலுக்கு எதிர்வினை

மூல நூல் ஆசிரியர்- ரங்கநாயகம்மா
ஆங்கிலம் வழி தமிழில்-கொற்றவை

விலை: ரூ80/-

Published by
SWEET HOME PUBLICATION
Hyderbad

Distributed by
Kurali Pathippagam
Mobile- 9500150047
email Id- kotravaiwriter@gmail.com


ரங்கநாயகம்மா அவர்கள் தெலுங்கில் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!” என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்நூலின் ஆங்கில வழி தமிழில் கொற்றவை மொழி பெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அம்பேத்கர் எழுதிய “புத்தரா! காரல் மார்க்சா!” என்ற கட்டுரைக்குக் கம்யூனிஸ்டுகள் எதிர்வினையாற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வந்துள்ள நூல் இது. அந்த வகையில் நான் வெகுகாலமாக எதிர்பார்த்த நூல்.

நமக்கு மார்க்ஸ் அல்ல புத்தர் தான் தேவையானவர் என்று அம்பேத்கர் கூறியதற்கு மார்க்ஸ் எந்த வகையில் தேவையானவர் என்பதைக் கூறியாக வேண்டிய நிலையில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இது போன்ற நூல்கள் வரவேண்டியது அவசியமாகிறது.

மார்சியத்தைவிடப் பவுத்தமே மகத்தானக் கோட்பாடு, அதுவே தமக்கான பாதை என்று அம்பேத்கர் நம்முன் முன்வைக்கிறார். ரங்கநாயகம்மா இதனை மறுத்து மார்க்சியமே சாதியத்திற்குச் சரியான தீர்வளிக்கிறது என்று மார்க்சிய அணுகுமுறையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழங்குடி மக்களின் மிச்ச சொச்சம் சாதியமாக உருமாறியிருக்கும் என்ற கருத்தைவிட, உழைப்புப் பிரிவினை, தொழில் முறை ஆகியவற்றால் தோன்றியவையே சாதி என்பதையே பெரும்பான்மையினர் ஏற்பதாகக் கூறுகிறார். அடுத்து, அம்பேத்கர் கேட்கின்ற ஒரு கேள்வியை நல்ல கேள்வி என்று ரங்கநாயகம்மா முன் வைக்கிறார். உழைப்புப் பிரிவினை எல்லா நாடுகளில் காணப்பட்டலும் சாதி இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கிறது? இந்தியாவின் சில விஷேச சூழ்நிலை பங்களித்தது என்று பதிலளித்தாலும் அந்த விஷேச சூழ்நிலை என்னவென்று விளக்க முடியவில்லை. இந்த நிலையில் அம்பேத்கர் அக்கேள்விக்கு 1916ஆம் ஆண்டு எழுதிய “இந்தியாவில் சாதிகள்” என்ற நூலில் பதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அம்பேத்கார் அகமணமுறையின் தொடக்கமே சாதியத்தின் தோற்றுவாய் என்கிறார்.

அம்பேத்காரிடம் முரண்பாடு காணப்படுவதாக ரங்கநாயகம்மா கூறுகிறார். அம்பேத்கர் ஓரிடத்தில் அகமணமுறை என்பது காரணம், சாதி என்பது அதன் விளைவு. இதன்படி இரண்டும் ஒத்ததல்ல, ஆனால் மற்றொரு இடத்தில் அகமணமறையும் சாதியும் இரண்டும் ஒன்று தான் இந்த இரண்டில் எதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரங்கநாயகம்மா கேள்வி எழுப்புகிறார்.

அம்பேத்கரின் நால்வருணம் பற்றிய கருத்தை ரங்கநாயகம்மா ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். அம்பேத்கரைப் பொருத்தளவில் நால் வருணமும் சாதியமும் வேறுவேறு, வருண அமைப்பில் ஒருவர் தன்னுடைய வருணத்தை மாற்றிக் கொள்ள முடியும் ஆனால் சாதியத்தில் அவ்வாறு முடியாது. வருணம் தொழில் அடிப்படையிலும், சாதி அகமணமுறை அடிப்படையிலும் தோன்றுவதாக (34) அம்பேத்கர் கூறுகிறார். மேலும் சாதியத்தைப் பற்றிக் கூறும் போது மனுவோ அல்லது பிராமணர்களோ மக்கள் மீது சாதியத்தைச் சுமத்தவில்லை, மக்களே முழு மனதுடன் தங்களுக்குள் சாதியை அறிமுகம் செய்து கொண்டதாக அம்பேத்கர் கூறுகிறார். இதற்கு ரங்கநாயகம்மா கேள்வியை எழுப்புகிறார்.

தீமையான ஒன்றை மக்கள் ஏன் அறிமுகம் செய்ய வேண்டும்?, அதுவும் அதனைச் சகித்துக் கொள்ளக் கூடாது என்று உணர்ந்தபின்னர்?. இது போன்ற கேள்வி அம்பேக்கருக்கு ஏன் எழவில்லை என்று ரங்கநாயகம்மா கேட்பதுடன், இதனை நம்பமுடியவில்லை என்றால் அவருடைய சொற்கள் இதோ என்று அவரது தொகுதியில் இருந்து பேராபேராவாக நமக்கு அள்ளித் தெளிக்கிறார். இந்த நூலில் ஆதாரத்திற்காக அம்பேத்கரின் வார்த்தைகள் நேரடியாக மேற்கோளாக அதிகம் பக்கங்களில் இடம்பெறுகிறது. அம்பேத்கர் முரணாகக் கூறிய பலவற்றைத் தொகுத்தளித்துள்ளார். தவறானதை சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் பக்கங்கள் அதிகம் கொண்ட நூலாக உருவெடுத்துள்ளது.

சிறுமி திருமணம், சதி போன்றவை அகமணமுறையினால் உருவானவை என்று அம்பேத்கர் கூறியதை ரங்கநாயகம்மா விமர்சித்துள்ளார். மனைவி இறந்து கணவன் உயிருடன் இருந்தால் அவன் ஒரு ‘கூடுதல் ஆண்’, அதே போல் கணவன் இறந்து மனைவி இறந்தால் அந்தப் பெண் ‘கூடுதல் பெண்’, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இந்துசமூக அமைப்பு சதி என்கிற இறந்த கணவனின் உடலோடு மனைவியையும் சேர்த்து எரித்தல். இரண்டாவது விதவை மறுமணத்தைத் தடுக்கக் கட்டாய விதவைக் கோலம் பூணவைப்பது. மூன்றாவதாகச் சிறுமித் திருமணம். அகமணமுறை வழக்கத்தைக் கட்டிக்காக ஆண்கள், பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை சம அளவினதாக இருக்குமாறு பேணுவதற்காக இந்து சமுகம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாகக் கூறுகிறார். ரங்கநாயக்கம்மா இதனை முன்வைத்துக் கேள்வி எழுப்புள்ளார், ஒரு கூடுதலான ஆண் சிறுமையைத் திருமணம் செய்தால் அதே பிரச்சினை தொடரத்தானே செய்கிறது, ஆண்களும் பெண்களும் சம அளவிலேயே சமூகத்தில் காணப்படுவர் என்றால் சிறுமியை மனைவி இழந்தவர் திருமணம் புரிந்ததால் சிறுவன் ஒருவனுக்கு நாளை பெண் கிடைக்காமல் கூடுதல் ஆணாகத் தானே இருப்பான். இதுபோன்று நிறைய இடங்களில் அம்பேத்கரின் வாதங்கள் உடைந்து தொடர்பற்றுப் போய்விடுகின்றன என்கிறார் ரங்கநாயக்கம்மா

சூத்திரர்களைப் பற்றி அம்பேத்கர் கூறும் போது நிகழ்காலச் சூத்திரர்களுக்கும், கடந்தகாலச் சூத்திரர்களுக்கும் தொடர்பே இல்லை என்று (52) கூறுகிறார். தன்னுடைய கோட்பாடு எல்லாப் புதிர்களுக்கும் பதிலளிக்கும் என்று முழுஉரிமை கோருகிறார், ஆனால் பிற இடங்களில் தன்னடக்கத்துடன் எழுதிகிறார் என்று ரங்கநாயக்கம்மா சுட்டிக்காட்டியுள்ளார். அம்பேத்கருக்கு மதச் சடங்குகள் பற்றி விவரிப்பது மிகவும் பிடித்திருப்பதாகவும், மதச் சடங்குகளை விளக்குகையில் அம்பேத்கர் ஒரு பரவச நிலை அடைகிறார் என்றும் கூறுகிறார்.(63)

பிராமணர்கள் தங்கள் குடியிருப்பிற்குள் நுழைந்தால் தங்களுக்குத்தான் கேடு விளைவுகள் எற்படும் என்று தீண்டப்படாதவர்கள் கருதியதாக அம்பேத்கரின் ஆய்வுகள் வியக்கவைக்கிறது!!(92) தீண்டப்படாவதர்களை, சாதி இந்துக்கள் தாழ்த்தவில்லை தாங்களே தாழ்த்திக்கொண்டனர் என்பது என்ன வகையான ஆய்வு!!!!!! இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்தவகையில் உதவும்???

சாதியம் இந்தியாவில் மட்டும் காணப்படுகிறது என்று கூறப்படும் போது சிலர் பிற நாடுகளில் அடிமைத்தனம் உள்ளன. அக் கொடுமைக்கு முன்னால் தீண்டாமை ஒரு பெரிய விசயமா? என்ற கேள்விக்கு அடிமைத்தனத்தைவிடத் தீண்டாமை அதிக ஒடுக்கும் தன்மை கொண்டது என்பதற்காக அம்பேத்கர் அதிக மெனக்கிடுகிறார். இரண்டும் ஒடுக்குமுறைக்கு உட்பட்டது என்ற பதிலே போதுமானது அனால் இதற்காகப் பெரிய விவாதங்களைத் தொடுக்கிறார்.

இப்படி விவாதங்களைத் தொகுத்ததால் ரங்கநாயகம்மா அவர்களின் இந்நூல் நானூறுபக்கத்தைத் தாண்டுகிறது. மார்க்சிய வழியில் பதிலளித்ததோ 10 பக்கம் மட்டுமே. அதற்கு 400 பக்கங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பத்துப் பக்கத்தில் சாதியைப் பற்றிய அணுகுமுறையின் கருத்தாக்கத்தைத்தான் (concept) கொடுத்துள்ளார். அதற்கு அம்பேத்கரை இப்படி வறுத்தெடுக்க வேண்டுமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காந்தியைப் பற்றியும் பக்கம்பக்கமாக அதே முறையிலேயே பேசுகிறார்.

அம்பேத்கரின் அணுகுமுறை மார்கசிய அணுகுமுறைக்கு மாறானது தான், ஆனால் அவர் எதற்காப் போராடினாரோ, அதனை சமூகத்தில் இருந்து களைவதற்கு கம்யூனிஸ்டுகளும் போராடுகின்றனர். அணுகுமுறைச் சிக்கலை அடிப்படைச் சிக்கலாக்கினால் எதிரிகளுக்கே ஆதரவாகப் போய்விடும். இதனை ரங்கநாயக்கமா கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோர்களின் சித்தாந்தங்கள் ஒன்று என்று கூறினால் அதனை அம்பேத்கரே ஒப்புக் கொள்ளமாட்டார். அம்பேத்கர் தமது அணுகுமுறையை "புத்தரா காரல் மார்க்சா?" வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சீரழிவை எதிர்த்து போராட ஒன்றுபடுவோம், சித்தாந்தத்தை விவாதிப்போம்.
எந்த ஒரு சிந்தனையாளனும் தமது விமர்சனத்தைத் தனது கண்ணோட்டத்தின் வழியிலேயே அணுகுவர். ரங்கநாயகம்மாவும் அவ்வாறு தான் அணுகுகிறார் ஆனால் கூடுதலாக ஒவ்வொருரையும் எந்த வகையில் தனது சித்தாந்துக்குரியவர் அல்ல என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார். புத்தரை அணுகும் போது அவருக்கு மார்க்சியம் தெரியாமல் போனதில் வருத்தம் ஏற்படும் அளவுக்கு அவரை இன்றைய நிலையில் இருந்து விமர்சிக்கிறார். அம்பேத்கரின் பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பேசும் போதும் அவ்வாரே அணுகுகிறார். அம்பேத்கர் பேசுகிற அரசு சோஷலிசம் என்பதைக் கம்யூனிச அரசுக்கு இணையாக வைத்து விமர்சிக்கிறார். அரசு சோஷலிசம் கம்யூனிச அரசாகாது என்ற விமர்சனமே போதுமானது.

இந்த அரசு சோஷலிசத்தை லெனின் அமைத்த அரசு முதலாளித்துவத்தோடு இணைக்கும் போது விமர்சன தொனியே மாறும் என்பதே எனது கருத்து. புரட்சியை முடித்து ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் போதே லெனின் கம்யூனிச சமூகத்தை அடைவதற்கு அரசு முதலாளித்துவம், சோஷலிசம் என்ற இரண்டு கட்டங்களைக் கடக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கரின் அரசு சோஷலிசத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டு விமர்சித்தாலே போதுமானது.

புத்தரா காரல் மார்க்சா? என்ற கேள்விக்குப் புத்தரே போதும் என்று அம்பேத்கர் கூறியதால் புத்தரை கடுமையாக அணுகுகிறார். புத்தரை பகுத்தறிவாத கண்ணோட்டத்தோடு தான் அணுகியுள்ளார். பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு அணுகியிருந்தால் இந்தச் சிக்கல் நேர்ந்திருக்காது. காந்தியையும் அப்படித்தான் அணுகியிருக்கிறார். புத்தரை அம்பேத்கர் கதைகட்டி காப்பாற்றியது போலவே ரங்கநாயகம்மாவும் கதைகட்டி விமர்சிக்கிறார். கதையாலேயே தீர்வை சொல்கிறார். புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் அன்றைய நிலையில் அதற்கு மேல் செல்வதற்கு ஒன்றும் இல்லை. இதனை ரங்கநாயக்கம்மாவும் குறிப்பிடுகிறார் மார்க்சே அப்போது வாழ்ந்தாலும் செய்ய முடியாததைப் புத்தரிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார். ஆனால் அம்பேத்கரை முன்னிட்டு புத்தரை கடுமையாகவே விமர்சிக்கிறார்.

ரங்கநாயக்கம்மா புத்தரை ஒட்டுண்ணி என்கிறார்(245). சந்நியாசியும் தன் கோட்பாட்டைப் பரப்புரை செய்ய வேண்டுமாயின் தன்னையும் பராமரித்துக் கொண்டு அதனைச் செய்ய வேண்டும் என்கிறார். தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர் இவ்வாறு செய்ய முடியாது என்பதையும் சேர்த்து சொல்கிறார்.

“ஒரு சந்நியாசி (பிட்சு) ஒட்டுண்ணியே. இது புத்தருக்கும் பொருந்தும்: அவருடைய கோட்பாடு எத்தனை மகத்தானதாக இருந்தாலும் ….” (பக்கம்263) அப்படி என்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமறைவாகச் செயல்படாத முழுநேர செயற்பாட்டாளர்கள் தினமும் சில மணிநேரம் உழைக்காமல் செயற்பட்டால் அதுவும் உழைப்புச் சுரண்டல் தானே. ஏன் மார்க்சும் எந்த உடல் உழைப்பையும் செய்திடாமல் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதியதும், தமது விஞ்ஞானப் பணியைத் தொடர்ந்து செய்ததும் தவறு தானே!!. எங்கெல்சின் உழைப்பில் வாழ்ந்தது ஒட்டுண்ணி வாழ்க்கை தானே!!!. இவரது விமர்சனத்தைத் தொடர்ந்து மார்க்சையும் எதிராளிகள் இப்படி விமர்சிக்கலாமே.

அஷ்டாங்க மார்க்கத்தையும் பகுத்தறிவு கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார், சொத்தை எப்படிப் பெருக்குவது என்று அஷ்டாங்க மார்க்கம் சொல்லவில்லை அதனால் எஜமானருககும் அது பயன்படாது என்கிறார் ரங்கநாயக்கம்மா. அஷ்டாங்க மார்க்கத்தில் உள்ள சரியான பார்வை, சரியான நடத்தை, சரியான சிந்தனை என்பவை நடைமுறைப்படுத்துவற்கு, வர்க்க சமூக இடம் கொடுக்காதது எஜமானருக்தானே பயன்படும்.

ரங்கநாயகம்மா புத்தத்தின் சாரமாகத் தொகுத்துக் கூறுகிறார்:-“சமூகம் குறித்து அவர் சொன்னவற்றில், “மனிதர்கள் நல்ல பண்புகளைக் கெண்டிருக்க வேண்டும்” என்ற கருத்தையும் மேலும் சில கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளலாம். இது மனித நடத்தையைப் பண்படுத்தும். இதுவே பௌத்த்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. கூடுதலாக ஏதுமில்லை.”

மனித நடத்தையைப் பண்படுத்தும் பண்பாட்டிற்கு வர்க்க சார்பில்லை? எஜமானருக்கு அடிமைக்கும் ஒரே பண்பாடா?

வறுமை, செல்வம், எஜமானர் அடிமை, உறவுமுறை, சொத்து ஆகிய பிரச்சினைகளைப் பற்றி அன்றைக்குப் பவுத்தம் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியதோடு, “மனித உறவுகள் (உழைப்புசார் உறவுகள்) பற்றிப் புத்தருக்கு ஏதும் தெரியவில்லை என்பதே இதன் பொருள்” என்று முடிக்கிறார். இங்கே ரங்கநாயக்கம்மா குறிப்பிடுவது உற்பத்தி உறவுகளைத்தான் ஆனால் இந்த உற்பத்தி உறவுகளைப் பற்றி இந்நூலில் எங்கேயும் விரிவாக விளக்கவில்லை. ஆனால் இது தான் அனைத்துக்கும் தீர்வு என்று நூல் முழுதும் சொல்லிவருகிறார். இவர் எழுதிய இந்தத் தொழில்சார் உறவை பற்றிப் பார்ப்பதற்கு முன் சாதியைப் பற்றி மார்க்ஸ் கூறியதைப் பார்ப்போம்.

“சாதி குறித்து மார்க்ஸ்” என்ற இறுதி பகுதியில் சாதி பற்றிய மார்க்சியத்தின் கண்ணோட்டத்தை ரங்கநாயகம்மா தொகுத்துத் தருகிறார். மார்க்ஸ் சாதி குறித்துச் சிறப்பு ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள சாதியைப் பற்றியும், மற்ற நாடுகளில் காணப்படும் சாதிக்கு இணையானதைப் பற்றியும் எதியுள்ளதை எடுத்துக் கொடுத்துள்ளார். “மார்க்ஸின் அவதானிப்புகளை உதவியாகக் கொண்டு சாதிக் கருத்தியல்களையும், அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்து கொள்ள முடியும்” என்று தொடக்கத்திலேயே அறிவுறுத்தியுள்ளார்.

மார்க்சிய எதிர்ப்பாளர்களிடம் காணப்படும் இரண்டு கருத்துக்களை ரங்கநாயகம்மா குறிப்பிடுகிறார். ஒன்று, மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானது, தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. மற்றொன்று மார்க்சின் கோட்பாடு மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமானதாக இருக்கலாம், சாதியத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்குப் பொருத்தமானதல்ல. இந்த இரண்டாவது கருத்து மார்க்சிய எதிர்ப்பாளர்களிடம் மட்டுமல்ல இங்குள்ள இடது சிந்தனையாளர்களிடமும் காணப்படுகிறது.

ரங்கநாயகம்மா இந்த இரண்டுவிதமான பார்வையும் தவறு என்று சரியாகவே சொல்கிறார். உற்பத்தி உறவுகள் (உழைப்புசார் உறவுகள்) பற்றிப் பேசுவது அனைத்து நாட்டிற்கு உரியதே என்று உறுதியாகக் கூறுகிறார். எங்கெல்சோடு மார்க்ஸ் எழுதிய ஜெர்மன் சித்தாந்தம், மார்க்ஸ் எழுதிய தத்துவத்தின் வறுமை, மூலதனம் என்ற நூலிலும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலும் இந்திய சாதியத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார். இதன் அடிப்படையில் அணுகுவதே மார்க்சியக் கண்ணோட்டம்.

மார்க்ஸ் கருத்தின் அடிப்படையில் ரங்கநாயகம்மா கூறுகிறார்:-“சாதிப் பிரச்சனையானது உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிப்படுத்த்திக் கொள்ள வேண்டும். சாதிக்கும், உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திறக்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடலாம்”(405) என்று கூறுகிறார். இதனை விவராமாக விவரிக்கவில்லை. அதாவது சாதியப் பிரச்சினையின் தீர்வுக்கு மார்க்ஸ் அவசியத் தேவை என்று கூறும்போது புத்ததரும் அம்பேத்கரும் போதுமானவர் என்று ஏற்றுக் கொண்டவர்களுக்குப் புரியவைக்கும்படியான விளக்கம் தேவைப்படுகிறது.

எனது வலைப்பூவில் காணப்படும் “இந்தியாவில் சாதியம்”என்ற கட்டுரையின் பகுதியை கீழே பதிவிடுகிறேன்.

“மார்க்ஸ் மாற்றமின்றிக் காணப்படும் வேலைப் பிரிவினை பாரம்பரியமாகத் தொழில் புரிவதை சாதியத்தோடு இணைத்துக் காண்கிறார். சாதியத்தை உற்பத்தி முறையோடு இணைத்து புரிந்து கொள்ளும் போது, சாதியம் நிலவுடைமைச் சமூகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட வடிவமாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறும்போது நிலவுடைமை உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்படும் போது அதன் வடிவமான சாதியமும் மறைந்து போகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம் பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே செய்திட வேண்டும், சாதியத்தை அதன் அழிவுவரை அல்லது அதன் மறைவுவரை பொருமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள்கொள்ளப்பட்டால் அது பெரும் தவறாகும். சாதிப் போராட்டத்தைப் பொருளாதாரப் போராட்டத்துடன் உள்ளடங்கியதாகப் புரிந்து கொண்டு சாதியத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பது தான் மார்க்சிய வழிகாட்டுதலாகும்.

நிலவுடைமை மேலோங்கிய இடத்திலும் அதன் கூறுகள் இன்னும் உயிரோட்டத்துடன் காணும் இடங்களில் சாதியப் போராட்டம் பொருளாதாரப் போராட்டத்துடன் இணைந்தே நடத்தப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த நகர்புறங்களில் முதலாளித்துவத் தன்மைகள் தோன்றிய இடங்களில் சாதியப் போராட்டம், ஒரு கருத்தியல் போராட்டமாக, அதாவது பொருளாயத (material) உள்ளடத்திலிருந்து விடுபட்டும் சிந்தனையில் சாதியம் செயற்படும் போது இங்குச் சித்தாந்தப் போராட்டமாக நடத்தப்பட வேண்டும்.

முதலாளித்துவம் அனைத்துத் துறைகளில் வளர்ச்சியடையும் போது சாதியம் உள்ளடக்கத்திற்கான வடிவமாகக் காணப்படாமல், மீதமிச்சமாக உதிர வேண்டிய நிலையாக மாறிவிடும். அந்நிலையில் கருத்தியல் போராட்டமாக நடத்தப்பட்டுச் சாதியம் உலர்ந்து மறையும்.

மதம் எவ்வாறு வர்க்கத்தோடு தோன்றியதோ அதே போல் சாதியமும் வர்க்கத்தோடு தோன்றியது, சமூகத்தில் வர்க்கம் மறையும் போதுதான் மதம் மறையும் என்பது போலவே சாதியமும் வர்க்கத்தின் மறைவோடுதான் மறைந்து போகும் என்ற கருத்து சரியானதன்று.

சாதியத்தை உற்பத்தி உறவோடு புரிந்து கொள்ளும் போது, முதலாளித்துவ வளர்ச்சியில் சாதியத்தின் வடிவம் தேவையற்றதாகும். அதாவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் சாதிய அடிப்படையிலானதல்ல. ஆனால் கருத்தியலாகச் சாதியத்தை மேலும் நீடிக்கிறது என்று சொல்லாம், அதற்கெதிரான போராட்டம் கருத்தியலான மீதமிச்சத்துடனான கருத்தியில் போராட்டமாகவே இருக்கும்.

சாதியத்தைக் காப்பதால் அல்லது துணைபோவதால் தொழிலாளியின் நலன்கள் தான் பாதிக்குள்ளாகிறது என்பதைச் சாதியத்திற்கு ஆட்பட்ட தொழிலாளிக்கு உணர்த்த வேண்டும். முதலாளியின் நலன்கள் வேறு, தொழிலாளர்களின் நலன்கள் வேறு. இவைகளுக்கு அப்பாற்பட்டது சாதிய நலன்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சாதிய நலன்களைவிட வர்க்க நலன்கள் வாழ்வியல் நலன்களின் அடிப்படையில் தோன்றுவதால் நிச்சயமாக வெல்லும்.

சாதிய நலன்களைவிட வர்க்க நலன் முனைப்போடே செயல்படும். சாதிய நலன்களைவிட வர்க்க நலனே வாழ்க்கைக்குப் பயன்படும். வர்க்க நலன் வாழ்வியல் நலன் என்பதை அறியும் போது சாதிய நலன் வலுவிழக்கும்.”

இந்திய கம்யூனிஸ்டுகள் பலரிடம் காணப்படும் பிரச்சினை அதாவது சாதி மேற்கட்டமைக்கு உரியதா? அடித்தளத்திற்கு உரியதா? என்ற பிரச்சனை ரங்கநாயகம்மாவிடம் காணப்படவில்லை, ஆனால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் புரிந்து கொள்வதில் பெரும் சிக்கல் அவரிடம் காணப்படுகிறது.

உற்பத்தி உறவுகள் என்ற சொல்லிற்குப் பதில் நூலில் அதிகமாக உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதையே பயன்படுத்துகிறார். அடித்தளம் என்பதில் உற்பத்தி உறவு மட்டும் கூறிவிட்டு மிகவும் முக்கியான உற்பத்தி சக்திகளை மறைத்துவிடுகிறார். இந்த உற்பத்தி சக்திகள் அடிப்படையில் தான் உற்பத்தி உறவுகள் அமைகிறது. உழைப்பு சக்திகள் யாரிடம் இருக்கிறதோ அந்தத் தனியுடைமையே உறவுகளை அமைக்கிறது. இதுவே மேற்கட்டமைப்பில் சிந்தனைகளாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பார்வை முற்றப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ரங்கநாயகம்மாவால் உழைப்பு சக்திகளைப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உழைப்புசார் உறவுகள் (உற்பத்தி உறவுகள்) புனிதப்படுத்தப்படுகிறது. புனிதமான ஒன்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதுவே சரியானது என்று மதவாதிகளைப் போல் கோரிக்கை வைக்கிறார். “மனித சமூகம் உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலானது என்னும் உண்மையை ஒருவர் அறியாதபோது அவர்களுக்கு உழைப்பு இழிவானதாகவும், உழைப்பிலிருந்து தப்பிப்பது மகத்தானதாகவும் தோன்றும். புத்தருக்கோ அல்லது அம்பேத்கருக்கோ அல்லது உற்பத்தி உறவுகள் குறித்து அறியாதவர்களுக்கோ அப்படித்தான் தோன்றும்”.(253) இந்தப் புனிதம் உற்பத்தி உறவு என்பது பிரம்மநிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதே உண்மை. இதன் காரணமாகச் சுரண்டல் பிரச்சினைக்கு அவர் அறநிலை வழிப்பட்ட தீர்வைவே முன்வைக்கிறார். “சுரண்டல் மீது எழுப்பப்பட்ட சமுதாயம் என்பதால் அதைமாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்”.(300)

சாதியைப் பற்றிக் குறிப்பிடுகிற “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் மார்க்ஸ் எந்தவித குழப்பம் இல்லாமல் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள உறவை இயக்கவியல் முறையில் நிலைநிறுத்தியுள்ளார்.

மார்க்ஸ்:-
“சமுதாய உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
-தத்துவவியலின் வறுமை

மேற்கட்டமைப்பை மாற்றுகின்ற உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே தான் அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ் தெளிவாகவே எழுதியுள்ளார். உற்பத்தி உறவுகளை நிலைநிறுத்துவதில் கருவிகளே பெரும்பங்காற்றுகிறது. சுரண்டலை ஒரு அறநெறிக் கண்ணோட்டத்தில் தான் ரங்கநாயகம்மா அணுகியிருக்கிறார் இது மார்க்சிய பார்வைக்கு மாறானதாகும்.

“மாக்ஸியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஓட்டுமொத்த இலாபமும் உழைப்பாளர்களிடமிருந்தே வருகிறது. முதலாளிகள் மூலதனத்தை 1) உற்பத்தி சாதனங்கள் மீதும் 2) தொழிலாளர்களின் கூலி மீதும் முதலீடு செய்கின்றனர். இந்த இரண்டில், உற்பத்தி சாதனங்கள் அதற்குரிய மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக எதையும் திரும்பத் தரப்போவதில்லை. “கூலி”க்கு அவர்கள் ஒதுககும் பணமே மேலும மதிப்பை திருமபத்தருகிறது. உழைப்பாளிகள் தங்கள் உழைப்பிற்கு ஈடாகக் கூலி பெறுகிறார்கள் என்பது உண்மையே, ஆனால், கூலி மட்டுமே உழைப்பின் மதிப்பில்லை. அது உழைப்பு மதிப்பின் ஒரு பகுதி மட்டுமே. மீதமிருக்கும் பகுதி இலாபம் (உபரிமதிப்பு). அதில் தொழிலாளர்களுக்கு மட்டுமே பங்கிருக்கிதே ஒழிய, தொடக்கத்தில் முதலீடு செய்த மூலதனத்தின் மதிப்பிலிருந்து மேலும மதிப்பை உயர்த்த உற்பத்தி சாதனம் எந்தப் பங்கையும் ஆற்றுவதில்லை. இது தான் மார்க்ஸி விளக்கம்.” (345-346)

ரிக்கார்டோவைப் போலவே ரங்கநாயகம்மா தொழிலாளர்களுக்கே விளைபொருள் முழுவதும் சொந்தம் என்கிறார். இதனைத் “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் மறுத்துரைக்கிறார்:-
“சமுதாய விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தாகும். ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள், என்னும்படியான ரிக்காடோ தத்துவத்தின் மேற்கூறி செயற்பாடு நேராகக் கம்யூனிசத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் மேலே மேற்கோள் காட்டிய பகுதியில் மார்க்சும் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவு வகையிலே அது பொருளாதார ரீதியிலே தவறாகும். ஏனெனில் அது வெறுமே நீதிநெறி முறைமையை அரசியல் பொருளாதாரத்தில் செயல்படுத்துவதாகும்.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருளின் மிகப் பெரும் பகுதி அதை உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடிச் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. இந்தப் பொருளாதார உண்மை நமது நீதிநெறி உணர்ச்சிக்கு முரண்படாக இருக்கிறது என்று மட்டுமே சொல்லிக் கொள்கிறோம். எனவே தான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளுக்கு ஆதாரமாகக் கொள்ளவில்லை முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டார்- அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது, கூலி கொடுபடாத உழைப்பு அடங்கியதே உபரி மதிப்பு ஆகும் என்று மட்டுமே அவர் சொல்கிறார். அது ஒரு எளிய உண்மையாகும். ஆனால், புறவடிவு வகையிலே பொருளாதாரீதியிலே தவறாயிருக்கக் கூடியது உலக வரலாற்றின் பார்வை நிலையிலே சரியாயிருக்கக்கூடும்.”

அறநெறிமுறையிலேயே உற்பத்தி உறவை ராங்கநாயகம்மா கணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தை அறநெறி வழியிலேயே முன்வைக்கிறார்.

“எங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும். உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்புப் பிரிவினை, ஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்புப் பிரிவினை- இவையாவுமே இதன் கீழ் வருகின்றன. சமூகத்தில் நிலவும் “தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்) மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராகச் சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்.”(பக்கம் 410)

ரங்கநாயகம்மாவின் வர்க்க கண்ணோட்டம் அறநெறிச் சம்பந்தப்பட்டது, அது பொருளாதாரத் தொடர்புடையதல்ல. அவருக்குப் பொருளாதாரம் என்றாலே ஒவ்வாமை அதனால் தான் அம்பேத்கர் மார்க்சின் கோட்பாடாக “முதன்மையாகப் பொருளாதார சக்திகளே வரலாற்றுப் போக்கை உருவாக்கும் சக்திகளாக உள்ளன”(பக்கம்294) என்று கூறிய போது உடனே, அவர் உற்பத்தி உறவுகள் என்னும் பொருளைக் கொண்டிருந்தால்தான் பொருளாதார சக்திகள் என்னும் அந்தச் சொல் சரியானதாக இருக்கும், என்று தெரிவிக்கிறார். உற்பத்தி சக்திகள் தான் உறவுகளைப் படைக்கிறது என்பதை எந்த நிலையிலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் காணப்படும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கருத்தாக்கத்தைப் பொருளாதார அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இதனை எங்கெல்ஸ் தெளிவாக்குகிறார்.

எங்கெல்ஸ்:- "வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல." (டூரிங்குக்கு மறுப்பு)

பொருளாதாரப் பார்வையற்ற வகையிலேயே ரங்கநாயகம்மா அம்பேத்கரை விமர்சித்துள்ளார். நூல் முழுமையிலும் இது வெளிப்படவே செய்கிறது. “புத்தரர்? காரல் மார்க்சா?” கட்டுரைக்குப் பதிலளிக்கும் நிலையில், சோஷலிசம் தவிர்க்கயிலாதது என்பதைக் கேள்விக்குள்ளாக்கும் இடத்தில் ரங்கநாயகம்மா மனிதத் தலையீடின்றிச் சோஷலிசம் தமாகக் கனியும் என்று இதற்குப் பொருள் இல்லை (297) என்று கருத்தியல் ரீதியில் தான் பதிலளிக்கிறார். இதற்கான பொருளாதாய நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை. முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்முரண்பாடே வர்க்கப் போராட்டமாக வெளிப்படுகிறது என்பதைக் கூறவேயில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் காலத்திற்குச் சற்றுமுன் தோன்றிய கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கற்பனாவாதத்தைக் குறிப்பிடும் போது, எங்கெல்ஸ், முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும், முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய் முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்கிறார்.

சுரண்டல் என்பது அநியாயமானது என்பதை ஆட்சியாளர்களுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும், சமூகத்தில் அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாகக் கற்பனாவாதிகள் எண்ணிக்கொண்டனர். முதலாளிகள், சமூகத் தர்மகர்ததாக்களாக, அனைவருக்கும் பொது அதிகாரிகளாக மாறவேண்டும் என்பதே கற்பனாவாத சோஷலிஷ்டுகளின் கோரிக்கையாக இருந்தது. இதனைத் தான் எங்கெல்ஸ் முதிர்ச்சியற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிலைமைகளால் தோன்றிய கோட்பாடாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கரின் “புத்தத்தில்” காணப்படும் தூய்மை, நேர்மை, நற்குணம் போன்றவற்றின் வழியே அடையும் கம்யூனிசத்தின், இயலாத் தன்மையை இங்கே விவரித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானச் சோஷலிசத்தைப் புத்தர் படைத்தார் என்ற அபத்தத்தை விவரிக்கத் தேவையில்லை.

அம்பேத்கரும் மார்க்சியத்தை அதன் விஞ்ஞானவழியில் புரிந்து கொள்ளவில்லை, ரங்கநாயகம்மாவும் இந்த விஞ்ஞான வழி மார்க்சியத்தைச் சுட்டிக்காட்டவும் இல்லை. ரங்கநாயகம்மாவிடம் பொருளாதயத (material) சிந்தனையே காணப்படவில்லை அதனால் தான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் ஏற்படுகிற உற்பத்தி உறவின் இயலாத் தன்மையே சோஷலிசப் புரட்சியைத் தவிர்க்கவியலாததாக ஆக்குகிறது என்பதைச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

மூலதனம் நூலில்(முதல் தொகுதி- 1026-1027) மார்க்ஸ் வளர்ச்சியடைந்த பொருளுற்பத்தி முறைக்கு முதலாளித்துவ மேற்கட்டமைப்பு பொருத்தமற்றுப் போனதால் உடைத்தெறியப்படுகிறது என்றும் முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவு மணி ஒலிக்கிறது என்றும் உடமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது என்று தான் கூறுகிறார். உழைக்கும் மக்களின் புரட்சிக்கு பொருளாயதமே (material) அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளாது, “உடைமையாளர்களின் எண்ணிக்கையை உழைக்கும மக்களின் எண்ணிக்கை விஞ்சுவதால் உழைப்போர் அரசாட்சியைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவுவார்கள். இதைத்தான் காரல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுகிறார்” என்ற அம்பேத்கரின் கருத்தை மறுக்க வேண்டும் என்றுகூட ரங்கநாயகம்மாவுக்குத் தோன்றவில்லை.

ரங்கநாயம்மா, புதிய சிந்தனை, புரட்சிகர உறவு என்று கருத்தியில் ரீதியாகவே சிந்திக்கிறார். “தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய சிந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத் தனது போராட்டத்தின் மூலம் மாற்ற வேண்டும்.”(325), “புரட்சிகர உறவுகளை”(343) அதே போல் “சமத்துவ உறவு” என்று கூறுகிறார். அந்தச் சமத்துவ உறவுகளுக்குத் தேவைப்படுகிற பொருளாயத (material) நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை, “ஏற்றத்தாழ்வு மிக்க உறவுகள் தகர்க்கப்பட்டு, வாழ்வின் எல்லா மட்டத்திலும் சமத்துவ உறவுகள் நிலைநாட்டப்பட வேண்டும்”(318) என்று கருத்தியில்ரீதியில் தான் உறவுகளைப் படைக்கிறார்.

கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கோரிக்கை முதலாளிகளின் மனம் திரும்புதலில் இருக்கிறது. ரங்கநாயகம்மாவின் கோரிக்கை தொழிலாளிகள், வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதலில் அடங்கியிருக்கிறது. முதலாவது முதலாளிகளை நம்பியிருக்கிற கற்பனாவாதம், இரண்டாவது தொழிலாளர்களை நம்பியிருக்கிற கற்பனவாதம். விஞ்ஞானச் சோஷலிசமானது முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்முரண்பாட்டில் அடங்கியிருக்கிறது.

“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலில் எங்கெல்ஸ்:-
“சாத்தியமான அளவுக்குக் குறைகளற்ற முழுநிறைவான ஒரு சமுதாய அமைப்பை உற்பத்தி செய்வது சோஷலிசத்தின் பணியாக இனியென்றும் இருக்கப் போவதில்லை; இந்த வர்க்கங்களும் அவற்றுக்கு இடையேயான பகைமையும் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழக் காரணமாக இருக்கும் நிகழ்வுகளின் வரலாற்று-பொருளாதாரத் தொடர்ச்சியை நுணுகி ஆய்வதும், இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார நிலைமைகளில் இந்த மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான சாதனங்களைக் கண்டறிவதும்தான் சோஷலிசத்தின் பணியாகும்.” 

பொருளாயத சிந்தனையற்ற போக்கு என்னும் குறைபாட்டைக் கடந்து பார்க்கும் போது ரங்கநாயகம்மா அம்பேத்கரின் மார்க்சிய எதிர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அவர் மார்க்சியம் எந்த வகையில் அவசியம் என்பதை விரிவாக எழுதவில்லை.

மார்க்சிய வழியில் சாதியம் பற்றிய விரிவான ஆய்வை முன்வைக்க வேண்டும். இதுவே இடதுசாரிகளின் உடனடிக் கடமையாகும்.

அம்பேத்கர்:- “..பொது உடைமைத் தத்துவமும் அதே போலத் தவறானதே. ஏனென்றால் அந்தத் தத்துவத்தின் நோக்கம், மனிதர்களும் பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பது போல, அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது” (புத்தரா, காரல் மார்சா?)


       இதற்கு மார்க்சிவாதிகள் பதிலளிக்க வேண்டியுள்ளது.

5 comments:

  1. தோழர் மிகவும் பயனுள்ள பதிவு நூலை வாசித்துவிட்டது போல் உள்ளது.

    ReplyDelete
  2. நன்றி தோழர்

    ReplyDelete
  3. மிக விரிவான ஆய்வுக் கட்டுரை. அந்த நூலைப் பற்றிய சிறந்த மதிப்பீடு. அந்நூலைப் படித்த பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரைையை மீண்டும் படிக்கிறேன். நன்றி தோழர்.

    ReplyDelete
  4. நூல் விமர்சனம் மார்க்சிய பார்வையோடு அமைந்துள்ளது.

    “சமுதாய உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

    உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.”
    -தத்துவவியலின் வறுமை

    எங்கெல்ஸ்:- "வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டமானது (மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின்) உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும் தான், சமுதாயக் கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. வரலாற்றில் தோன்றியுள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்விதம் செல்வம் வினியோகிக்கப்படுகிறது, சமுதாயம் எப்படி வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பது, என்ன உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்திப் பொருள்கள் எவ்விதம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பவற்றைச் சார்ந்தே உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின் படி எல்லாச் சமுதாய மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி மற்றும் வினியோக முறைகளின் மாற்றங்களில் கண்டறிய வேண்டுமே அல்லாது, மனிதனது மூளையில் அல்ல, நிலையான சாசுவத உண்மை மற்றும் சாசுவத நீதி குறித்து மனிதனுக்குக் கிடைக்கப் பெறும் முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வில் அல்ல. இவற்றை அந்தந்த சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டறிய வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல." (டூரிங்குக்கு மறுப்பு)

    இந்த இரண்டு அடிப்படைகளையும் ஒரு வரலாற்றை ஆய்வு செய்வதற்கு அடிப்படையாகவும், குறிப்பாக மதத்தின் பங்கு என்ன என்பதை ஆய்வு செய்வதற்கு அடிப்படையாகவும் ஏற்க வேண்டும். இந்த கட்டுரையின் விமர்சனம் வெகு நாட்களுக்குப் பிறகு தற்போது மயில்வாகனன் அவர்களுக்கு விமர்சனத்திற்காக குறிப்பிடும் போது படிக்க நேர்ந்தது. சிறப்பனாதொரு விமர்சனமாக வைத்திருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக சுட்ட வேண்டுமென்றால்
    “அறநெறிமுறையிலேயே உற்பத்தி உறவை ராங்கநாயகம்மா கணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தை அறநெறி வழியிலேயே முன்வைக்கிறார்.”
    முத்தாய்ப்பாக “ரங்கநாயகம்மாவின் வர்க்க கண்ணோட்டம் அறநெறிச் சம்பந்தப்பட்டது, அது பொருளாதாரத் தொடர்புடையதல்ல. அவருக்குப் பொருளாதாரம் என்றாலே ஒவ்வாமை அதனால் தான் அம்பேத்கர் மார்க்சின் கோட்பாடாக “முதன்மையாகப் பொருளாதார சக்திகளே வரலாற்றுப் போக்கை உருவாக்கும் சக்திகளாக உள்ளன”(பக்கம்294) என்று கூறிய போது உடனே, அவர் உற்பத்தி உறவுகள் என்னும் பொருளைக் கொண்டிருந்தால்தான் பொருளாதார சக்திகள் என்னும் அந்தச் சொல் சரியானதாக இருக்கும், என்று தெரிவிக்கிறார். உற்பத்தி சக்திகள் தான் உறவுகளைப் படைக்கிறது என்பதை எந்த நிலையிலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.” என்கிற விமர்சனம் முற்றிலும் சரியானதே.

    இதே தவறைதான் எல்லோரும் அம்பேத்கர், பெரியாரை பற்றி மதிப்பிடுவதிலும் நடக்கிறது என்று சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  5. தோழர் சேல் முருகன் நிங்கள் விமர்சனத்தின் சாரத்தை உள்வாங்கி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

    எழுதியது சரியாக சென்றடையும் போது தான் தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆவல் பிறக்கிறது.

    ReplyDelete