Tuesday 6 October 2020

என்ன செய்ய வேண்டும்? – லெனின் (ஐந்தாம் அத்தியாயம்- சுருக்கம்)

(“மார்க்சியர் மேடை என்கிற படிப்பு வட்டத்தில், லெனின்  எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் ஐந்தாம் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.)

 


இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் ஐந்தாம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். 

அதற்குமுன், போன வகுப்பில் பார்த்ததை சுருக்கமாகப் பார்த்துவிட்டு, ஐந்தாம் அத்தியாயத்திற்கு செல்வோம். 

நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.” 

கம்யூனிச வழிப்பட்ட போராட்டத்துக்கு எதிரான, தொழிற்சங்கவாதம், பொருளாதாரவாதம் ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். 

நான்காம் அத்தியாயத்தில் பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் அதற்கு மாறான புரட்சிகர கம்யூனிச அமைப்பு பற்றியும் பேசப்பட்டுள்ளது. 

தொழிற்சங்கவாதத்தில் காணப்படும் பக்குவமின்மையைத் தான் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கப்படுகிறது. பக்குவமின்மை என்று லெனின் எதைக் கூறுகிறார் என்பதை பார்ப்போம். 

தொழிலாளர்களின் தன்னியல்பானப் போராட்டம், தங்களது கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தில், ஒன்றாக இணைவது போன்ற போக்குடன், தங்களை சுருக்கிக் கொள்வதையே, தொழிற் சங்ககத்தில் ஈடுபடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் கூறுகிறார். 

இந்தப் பக்குமின்மையை நியாயப்படத்தி, அதையே கோட்பாடாக தூக்கிப்பிடிக்கிறப் போக்கின் ஆபத்தை லெனின் சுட்டிக்காட்டுகிறார். 

இந்தப் பக்குவமின்மை, தொழிலாளர் இயக்கத்திற்கும் புரட்சிகர கம்யூனிச அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதாவது, தொழிலாளர் இயக்கத்தை புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியிறுத்துகிறது. 

இன்னொரு முக்கியமான விஷயமும் இந்த அத்தியாயத்தில் பேசப்படுகிறது. 

தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே தகுதியானவர் என்று கருதுவது தவறாகும். 

முதலாளிகும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும், தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்கு தகுதிப் பெற்றவர்களே ஆவர். 

புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தையே இந்த அத்தியாயம் வலியுறுத்துகிறது. 

தொழிலாளர்கள், பொருளாதாரப் போராட்டத்தை கடந்து முழுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்த வேண்டுமனால், தொழிலாளி வர்க்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்க வேண்டும். 

இப்போது இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

இன்று ஐந்தாம் அத்தியாயம். இதன் தலைப்பு, “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்”” 

இது பிரத்யேகமான ருஷ்ய நிலைமைக்கானது, அதனால் இதனை மிகமிக சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது. இருந்தாலும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான். 

கட்சி தான் பத்திரிகையை படைக்க முடியும், கட்சி அமைப்பை  ஒரு பத்திரிகையால் படைக்க முடியாது என்பது பொதுவான உண்மை, ஆனால் ரஷ்யாவின் எதார்த்த நிலைமை இதற்கு இடம் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருந்தது. 

கட்சி அமைப்பின் சார்பாக இரண்டு முறை பத்திரிகை தொடங்கப்பட்டு தோல்வி கண்ட பிறகு தான், ஒர் அதிகாரப் பூர்வமற்ற பத்திரிகையை வெளியிடுவது என்று லெனின் முடிவெடுக்கிறார். 

இது அன்று ரஷ்யாவின் நடைமுறை அனுபவத்தில் இருந்து எடுக்கப்பட்ட முடிவு. 

இந்தப் பத்திரிகை வெறும் பத்திரிகைப் பணியை மட்டும் செய்தால் போதாது. அதாவது, அனைத்து ரஷ்யப் பத்திரிகையின் மூலமாக, பலமான அரசியல் அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கும், படியான திட்டத்தை லெனின் முன்வைக்கிறார். 

ஒரு கூட்டுப் பிரச்சாரத்தையும், கூட்டுக் கிளர்ச்சியையும், கூட்டான அமைப்பாளனாகவும் அந்தப் பத்திரிகை செயற்படுத்த வேண்டும் என்கிறார் லெனின். 

போன அத்தியாயத்தில் பார்த்தது போல், ஊள்ளூர் வேலையையும் அனைத்து ரஷ்ய வேலையையும் இணைப்பதற்கு அன்றைய நிலையில் பத்திரிகையே, ஒரு அமைப்பாளனாக செயற்பட முடியும் என்பதை லெனின் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். 

ஒருங்கிணைப்பை பத்திகையினால் தான் இதனை செய்ய முடியும் என்று கூறுகிற போதே லெனின் மற்றொன்றையும் குறிப்பிடுகிறார். எதேனும் உள்ளூர் ஒன்றில் கட்சி ஊழியர்கள் அனைவரையும் கைதி செய்யப்படுமாயின், அந்த உள்ளூர் தனிமைப்பட்டு, துண்டித்துப் போகும். ஆனால் அனைத்து உள்ளூர் அமைப்புகளும் ஒரே பொதுவான நடவடிக்கையில்  இணைந்து இருக்கும் போது, பல பேர் கைது செய்யப்பட்டாலும், புதியத் தோழர்களை கொண்டு, மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த ஒருங்கிணைந்த பொது நடவடிக்கை துணைபுரியும். 

அதாவது உள்ளூர் கைதுகள் உடனடியாக, பொது நடவடிக்கைக்கு தெரிந்துவிடுகிறபடியால், மாற்று தோழர்களை கொண்டு, அந்த உள்ளூர் வேலைகள் தடைபடாமல் தொடரச் செய்ய முடியும். 

இத்தகைய பொது நடவடிக்கையின் மூலமே ரஷ்யாவில், உள்ள அனைத்து புரட்சிகர  அமைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும் அதே நேரத்தில் ரகசியமாகவும் தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு பயிற்சி கொடுக்க முடியும். 

உள்ளூர் நடவடிக்கைகளையும் அனைத்து ரஷ்ய நடவடிக்கைகளையும் ஒன்றிணைப்பதற்கு பத்திரிகையே, கட்சி அமைப்பாளனாக செயற்பட முடியும் என்கிற புதிய முயற்சியை சரியாக முடிவெடுத்து, செயற்படுத்திக் காட்டியுள்ளார் லெனின். 

முதலாளித்துவ நாடுகளில் காணப்படும் ஜனநாயக உரிமைகள் இல்லாத ரஷ்யாவில், இதுவே சரியான வழி என்பதை அதன் வெற்றி உறுதிப்படுத்தியது. 

இந்த இறுதி அத்தியாயத்தின் சுருக்கம் இவ்வளவு தான். 

“என்ன செய்ய வேண்டும்?” என்கிற நூலின் சுருக்கத்தையும் சாரத்தையும் பார்த்துவிட்டோம். 

இந்த சுருக்கம் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் கிடைக்கிறது. 

இதனை மீண்டும் மீண்டும் கேட்டும் படித்தும் முடித்துவிட்டு, லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” நூலை முழுமையாகப் படித்தறிய வேண்டும். 

எந்த நூலையும் சுருக்கத்தையும் சாரத்தையும் அறிந்தால் மட்டும் போதாது, அந்த நூலை எடுத்து முழுமையாக படித்து அறிய வேண்டும். 

இந்த நூலில் காணப்படும் ஐந்து அத்தியாயத்தையும் மீண்டும் சுருக்கமாகப் பாத்துவிட்டு, இன்றைய வகுப்பையும், என்ன செய்ய வேண்டும்? என்கிற நூலின் தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்வோம். 

முதல் அத்தியாயத்தின் தலைப்பு 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”. 

 மார்க்சியம் வறட்டுச் சூத்திரமல்ல, மார்க்ஸ் எங்கெல்சால் வளர்க்கப்பட்ட மார்க்சியம், ஏகாதிபத்திய காலகட்டத்தில் லெனினால், புதிய நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். ஆனால் பொருளாதாரவாதிகளான தொழிற்சங்கவாதிகள் முதலாளித்துவ வளர்ச்சியைத் தவறாகப் புரிந்து கொண்டு, இன்றைய நிலையின் வளர்ச்சிக்கு அன்றைய மார்க்சியம் பொருந்தாது, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது. 

இதனை ஏற்க மறுப்பவர்கள் வறட்டுச் சூத்திரவாதிகள் என்று கூறினர். அத்தோடு நில்லாமல் இதனை மறுப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

உண்மையில் இந்த தொழிற்சங்கவாதிகள் குறிவைத்து தாக்குவது மார்க்சிய அடிப்படைகளையே, அதனை நன்றாகப் புரிந்து கொண்ட லெனின் இத்தகையப் போக்கை கடுமையாக இந்த அத்தியாயத்தில் விமர்சித்துள்ளார். 

இந்த தொழிற்சங்கவாதிகள் உண்மையில் விஞ்ஞான கம்யூனிச அடிப்படைகளையே மறுக்கின்றனர். அதன் மூலம் இன்றைய சமூகம், சோஷலிச சமூகமாக மாறிடும் என்பதையே மறுக்கின்றனர். 

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தின் உள்முரண்பாட்டை, மார்க்சிய வழியில் அணுகாமல், தன் அக நிலையினால், முதலாளித்துவத்தில் உள்முரண்பாடுகள் இப்போது கடுமையாக இல்லை என்று கூறிவிடுகின்றனர். இது உண்மை நிலைமைக்கு மாறான கருத்தாகும். 

மார்க்சியத்தின் அடிப்படையில் உள்ள முக்கியமானதையே மறுத்துவிட்டதால் அவர்களால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் மறுத்துவிடுகின்றனர். சோஷலிசமாக சமூகம் மாறும் என்கிற இறுதி குறிக்கோளையும் மறுத்துவிடுகின்றனர். 

இத்தகைய போக்கு புதிய வகை சந்தர்ப்பவாதமாகும் என்கிறார் லெனின். 

இவர்களை மறுத்து லெனின் புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான அமைப்பு இல்லை என்று வலியுறுத்துகிறார். 

அதாவது. இந்த சந்தர்ப்பவாதிகளின் கருத்தாக்கத்தால் புரட்சிகரமான அமைப்பைக் கட்ட முடியாது. புரட்சிகரமான அமைப்பு வேண்டும் என்றால் புரட்சிகரமான கோட்பாடு வேண்டும். 

அடுத்து, இரண்டாவது அத்தியாயம். இதன் தலைப்பு, “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” 

இரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்படுகின்றன. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிஸ்டுகளின் உணர்வு. 

மக்களின் தன்னியல்பு என்றால் என்ன? 

கூலி உயர்வுக்கான போராட்டத்தை தன்னியல்பானப் போராட்டம் என்று கூறலாம். ஆனால் இது கம்யூனிச உணர்வு வகைப்பட்டப் போராட்டமாக ஆகாது. இந்த கூலிக்கானப் போராட்டத்தை கூலி முறை ஒழிப்புக்கானப் போராட்டமாக மாற்றுவதே கம்யூனிச வகைப்பட்ட போராட்டமாகும். 

இதற்கு மாறாக கூலி உயர்வுக்கானப் போராட்டத்தோடு நின்று போவது தன்னியல்பை வழிபடுவதாகும். 

இந்த தன்னியல்பு கம்யூனிசப் போராட்டத்துக்கு பெரும் தடையாக இருக்கிறது. 

அதனால், புரட்சிகர கம்யூனிஸ்டுகள், தன்னியல்புப் போராட்டத்தை அம்பலப்படுத்தி, கம்யூனிச உணர்வை, தொழிலாளர்களுக்கு ஊட்ட வேண்டும். அவர்களை அரசியல் வழிப்படுத்த வேண்டும். அதாவது அவர்களை முழுமையான வர்க்க உணர்வு பெறும் வகையில், வளர்த்தெடுக்க வேண்டும். 

இந்த அத்தியாயத்தில் லெனின், மக்களின் தன்னியல்புக்கும் கம்யூனிச உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி, கம்யூனிச உணர்வை வலியிறுத்துகிறார். 

அடுத்து மூன்றாம் அத்தியாயம். இந்த அத்தியாயத்தின் தலைப்பு “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.” 

இந்த அத்தியாயத்தில் லெனின் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளார். 

பொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை, பொருளாதாரப் போராட்டத்தோடு, தொழிற்சங்க நடவடிக்கைகளை சுருக்கிக் கொள்வதையே மறுத்துள்ளார். 

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை தொழிலாளர்கள் நன்றாக உணர்ந்து கொள்வர்,  இந்த தொடரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருகிற கம்யூனிச போதனையே தொழிலாளர்களுக்கு வேண்டியது, தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் கம்யூனிச அரசியல் தொழிற்சங்கத்திற்கு வரமுடியும். 

கம்யூனிஸ்டுகள் குறிப்பிட்ட தொழிலாளர் - முதலாளி பிரச்சினையைக் கடந்து, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டை முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் தொழிற் சங்கத்தில் கம்யூனிச வழிப்பட்ட அரசியலை நடத்திட முடியும். 

இந்த வகுப்பின் தொடக்கத்திலேயே நான்காம் அத்தியாயத்தின் சுருக்கத்தைப் பார்த்துவிட்டோம். அதனால் அதை மிகமிக சுருக்கமாக இங்கே பார்ப்போம். 

நான்காவது அத்தியாயத்தின் தலைப்பு, “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.” 

பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மை என்று லெனின் எதைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம். 

பொருளாதாரப் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சினை அடிப்படையில் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இணைவது போன்ற தன்னியல்பானப் போராட்டத்தோடு நின்றுவிடுவது தொழிற்சங்கவாதிகளின் பக்குவமின்மை ஆகும். 

இந்தப் பக்குவமின்மை குறுகிய பொருளதாரப் போராட்டத்தைக் குறிப்பிடுவதோடு, அதனையே கோட்பாடாக உயர்த்திப் பிடிக்கிறது. இதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது. 

இந்த ஆபத்தின் விளைவாக நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், தொழிலாளர் இயக்கத்திற்கும் - புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உள்ள உறவின் அவசியத்தை அறிந்து கொள்வதாகும். 

கம்யூனிசக் கட்சி பலமான புரட்சியாளரின் அமைப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் கூலிப் போராட்டம் என்கிற தொழிற்சங்க போராட்டத்தைக் கடந்து கூலி முறை ஒழிப்புக்கான போராட்டமாக அதை மாற்ற முடியும். 

தொழிற்சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்தை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் தொழிற்சங்க அரசியலுக்கும் கம்யூனிச அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து, சிறப்பாக செயற்பட முடியும். 

அடுத்து ஐந்தாவது அத்தியாயம், இதனை சுருக்கமாக இப்போது தான் பார்த்தோம். இருந்தாரும் அதன் சாரத்தை மட்டும் பார்ப்போம். 

இந்த ஐந்தாம் அத்தியாயத்தின் தலைப்பு, “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்”” 

இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியை எழுப்புகிறது. என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் லெனின் பதிலளிக்கிறார். 

முதலாளித்துவ சுதந்திரம் இல்லாத ரஷ்யாவில், எதேச்சாதிகாரம் கோலோச்சும் நிலையில், கட்சி கட்டுவது, அதுவும் ரகசிய கட்சி கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல. 

இந்த ரஷ்ய பிரத்யேக நிலைமையை கணக்கில் கொண்டு, ஒரு பத்திரிகையின் வாயிலாக, பத்திரிகையை வினியோகிப்பதின் மூலம், கட்சி நடவடிக்கைகளை ஒன்றிணைக்கலாம் என்று திட்டமிட்டார் லெனின். 

இந்தத் திட்டம் சரியானது என்பதை அக்டோபர் புரட்சி உறுதிப்படுத்தியது. 

லெனினைப் போல, அந்தந்த நாட்டு நிலைமைகளை, அந்தந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள், நன்றாக பரிசீலித்து, அதற்கு உரிய செயல்தந்திரத்தை வகுத்து செயற்பட்டால், இறுதி குறிக்கோளை நிச்சயமாக அடையலாம். 

நம் நாட்டில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், இந்த நாட்டின் உற்பத்தி முறையையும், அதன் வர்க்கத் தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும். 

கட்சி தொடங்கி 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்க நிலையில் இருந்தது போல இன்றைய நாடு இல்லை. இன்றைய நிலைமையை நன்றாக ஆய்வு செய்து, நமது நடவடிக்கையை அமைத்துக் கொண்டால், நமது வெற்றி நடையை, வெற்றியுடன் தொடங்கலாம். 

இத்துடன் இந்த வகுப்பு முடிவடைந்தது. 

ஒரு நூலைப் பற்றி வகுப்பு எடுப்பது என்பது பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. 

நூலை அறிமுகப்படுத்துவது, நோக்கமாகக் கொண்ட வகுப்பு என்றால் அந்த நூல் தோன்றியதற்கான் காரணம், மற்றும் அந்த நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை மட்டும் பேசினால் போதுமானது. இந்த வகுப்பை ஒன்று அல்லது இரண்டு முறை கேட்டாலே அதில் கூறப்பட்டது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

இன்னொன்று வரிக்குவரி வகுப்பெடுப்பது இது நீண்ட நாள் பிடிக்கக்கூடியது ஆகும். இதனை இரண்டு மூன்று முறை கேட்டால் போதாது, பல முறை, மீண்டும் மீண்டும் கேட்டால் தான் அதனை நான்றாகப் புரிந்து கொள்ள முடியும். 

மூன்றாவது அந்த நூலின் சுருக்கமும் சாரமும் ஆகும். இது நூலை வரிக்குவரி விளக்கம் கொடுக்காமல், அதன் சுருக்கத்தையும் சாரத்தையும் மட்டும் எடுத்துக் கூறுவதாகும். 

நூலையே சுருக்கிக் கூறுவதால் இந்த வகுப்பை, ஒரு முறை கேட்டால் போதாது, பலமுறை கேட்டால் தான் அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மீண்டும் மீண்டும் வகுப்பை கேட்பது அவசியமாகும். 

நமது வகுப்பு சுருக்கமும் சாரமும் ஆகும். அதனால் அது சிறிது கடினமாக இருக்கும் என்பது மறுக்க முடியாது. 

நூலை ஒரு முறைப் படித்தால், அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதது போல, வகுப்புகளையும் ஒரு முறை கேட்டால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது, இதனை பலமுறை கேட்க வேண்டும். அப்போது தான் அதன் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். சாரத்தைப் புரிந்து கொண்ட பின்பு, அந்த நூலைப் படிக்கத் தொடங்கினால், நூல் முழுமையையும் புரிந்து கொள்வதற்கு அது துணைபுரியும். 

இத்துடன் இன்றைய வகுப்பும், தொடர் வகுப்பும் முடிந்து விட்டது. 

கேள்விக் கேட்பவர்கள் கேட்கலாம், என்னாலான பதிலை அளிக்கிறேன்.

No comments:

Post a Comment