Friday, 14 April 2017

ஏகாதிபத்தியமும் தேசிய இனப் பிரச்சினையும்.

(லெனின் நூல்களின் அடிப்படையில் சிறு அறிமுகம்)

ஏகாதிபத்தியப் போர் தொடங்கிய நேரத்தில் முதலாளித்துவம் தேசியஇனப்பிரச்சினையை தோற்றுவித்தது. மக்களையும் தொழிலாளர்களையும் பிளவுபடுத்துவற்கு இது சிறந்த வழியாக கண்டது. ஜார் அரசும் தேசிய விடுதலை இயக்கங்களை ஒடுக்கி, தேசியஇனங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டிவிட்டது. சர்வதேசியக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகவேண்டியது போல்ஷிவிக்குகளின் உடனடி கடமையாகியது.

1903ஆம் ஆண்டு நடைபெற்ற ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் தேசியஇனங்களின் சுயநிர்யண உரிமை ஏற்கப்பட்டிருந்தது. மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துக்களுடன் இரண்டாவது அகிலத்தின் லண்டன் (1896) மாநாட்டிலும் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டிருந்தது.

தேசிய இனப்பிரச்சினை என்பது அரசியல் பிரச்சினைதான். ஆனால் வெறும் அரசியல் பிரச்சினையாக மட்டும் இதனை புரிந்து தீர்வினை வகுக்க முடியாது. ஏன் என்றால் இதற்கான பொருளாதார அடிப்படைகளையும் இதனைச் சார்ந்த மக்களின் கருத்துக்களையும் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்சிய தேசியஇனப் பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்படுகின்ற சுயநிர்ணய உரிமை என்பது பொருளாதார அடித்தளங்களைக் கொண்டும், வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களைக் கொண்டும் அணுகப்பட்ட அரசியல் முடிபாகும்.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற புகழ்பெற்ற நூலில் லெனின் தனது முடிவுகள் எப்படி மார்க்ஸ், எங்கெல்ஸ் வழிவந்தது என்பதைத் தொகுத்தளித்திருக்கிறார். 1864ஆம் ஆண்டு மார்க்ஸ் அகிலத்திற்கான உரையை தயார் செய்து கொண்டிருக்கும் போது மாஜினியின் தேசியவாதத்தை எதிர்த்து வாதிடும்போது மார்க்ஸ் கூறிய கருத்தைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார்:-
“”உரையில் சர்வதேச அரசியல் வந்தது என்ற அளவுக்கு நான் நாடுகளைப் பற்றியே பேசினேன். தேசியஇனங்களைப் பற்றியல்ல, ருஷ்யாவை கண்டித்தேனே தவிர சிறிய தேசங்களையல்ல.” “தொழிலாளர் பிரச்சினையுடன்” ஒப்பிடும் போது தேசியஇனப் பிரச்சினைக்கு உரிய இடம் இரண்டாவது இடமே என்பதில் மார்க்சுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது கோட்பாடு தேசியஇன இயக்கங்களைப் புறக்கணித்ததே கிடையாது”1

1866ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் தேதி மார்க்ஸ் எழுதியதை லெனின் குறிப்பிடுகிறார்:-
“ மார்க்ஸ் எழுதுகிறார் :- “நேற்று அகிலத்தின் கவுன்சிலில் தற்போது நடக்கும் போரைப் பற்றி ஒரு விவாதம் நடந்தது… எதிர்பார்க்கப்பட்டபடியே இந்த விவாதம் பொதுவாக “தேசியஇனப்” பிரச்சினை மற்றும் அதன்பால் நாம் எடுக்கும் உறவுநிலை என்ற விஷயத்தோடு முடிவடைந்தது… ‘இளம் ஃபிரான்சின் பிரதிநிதிகள் (தொழிலாளரல்லாதார்) எல்லாத் தேசிய இனங்களும் – தேசங்களும் கூட – பழைமைப்பட்டுப் போன தப்பெண்ணங்களே என்ற கருத்தை முன்வைத்தார்கள். இது புரூதோன்வாத முறையிலான ஷ்டிர்னரியம்…””2

இந்த மார்க்சின் குறிப்புகளில் இருந்து லெனின் தொகுத்து எழுதுகிறார்:-
“மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளில் இருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது: தேசியஇனப் பிரச்சினையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி எல்லா தேசிய இனங்களையும் கட்டாயமாக சுதந்திரமான வாழ்வை நோக்கியே எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசியஇன இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும்,” 3

இதே போன்று போலந்து, அயர்லாந்து பிரச்சினைகள் பற்றி மார்க்ஸ் கூறியதை அடிப்படையாகக் கொண்டே லெனின் தனது சுயநிர்ணய உரிமைப் பற்றி கோட்பாட்டை வளப்படுத்தினார்.

மார்க்ஸ் மறைந்த பிறகு, எங்கெல்ஸ் மறைந்து ஒராண்டு கடந்த பிறகு கூடிய இரண்டாம் அகிலத்தின் லண்டன் மாநாட்டின் தீர்மானத்தை, லெனின் தமது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற நூலில் கொடுத்துள்ளார்.

“இத்தீர்மானம் கூறுவதாவது:
“எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணயத்துக்கான முழு உரிமை உண்டு என்பதை, ஆதரிப்பதாக இந்தக் காங்கிரஸ் அறிவிக்கிறது, ராணுவ, தேசியஇன அல்லது இதர வரம்பற்ற அதிகாரத்தின் நுகத்தடியின் கீழ் துயருறும் எல்லா நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இது தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது, சர்வதேச முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காகவும், சர்வதேச சமூக-ஜனநாயகத்தின் குறிக்கோள்களை அடைவதற்காகவும் ஒன்று சேர்ந்து போராடுவதற்காக உலகம் முழுவதுமுள்ள வர்க்க உணர்வு கொண்ட (தமது வர்க்க நலன்களைப் புரிந்து கொள்வோர்) தொழிலாளர்களின் அணிகளில் சேர வருமாறு அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் இக்காங்கிரஸ் அழைக்கிறது.”

நாம் ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருப்பது போல, நமது சந்தர்ப்பவாதிகளான செம்கோவ்ஸ்கி, லீப்மன், யுர்க்கோவிச் ஆகியோருக்கு இந்தத் தீர்மானம் இருப்பதே தெரியாது. ஆனால் ரோஸா லுக்சம்பர்க்குக்குத் தெரியும்.”4

இந்தத் தீர்மானம் இருக்கிறதைத் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிற சந்தர்ப்பவாதிகள் இந்த பெயர்பட்டியலில் இடம்பிடித்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டு, லெனினது கருத்துக்குச் செல்வோம்.

லெனின் தேசியஇனப்பிரச்சினைப் பற்றி சிறிய - பெரிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கவை, நமது வேலைத்திட்டத்தில் தேசியஇனப் பிரச்சினை- இஸ்க்ரா- 1903. தொழிலாளி வர்க்கமும் தேசியஇனப்பிரச்சினையும்- பிராவ்தா- 1913. மகா ருஷ்யர்களது தேசியப்பெருமித உணர்ச்சி குறித்து- 1914. ருஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்- 1913. தேசியஇனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- 1913. தேசியஇனங்களின் சுயநிர்ண உரிமை- 1914. சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்-1916. சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு-1917. தேசிய இனங்களின் பிரச்சினை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”-1922

இவ்வளவு நூல்களால் இப்பிரச்சினை பற்றி தெளிவுபடுத்திய பின்பும் லெனின் தேசியஇனப் பிரச்சினை பற்றி முழுமையாக வெளிப்படுத்தவில்லை அவரது முடிவுகள் குழப்பமானது என்று கூறுபவர்கள் இன்றும் உண்டு. அவ்வாறு எந்த குழப்பத்தையும் அவர் இந்தப் பிரச்சினையில் ஏற்படுத்தவில்லை என்பதைப் பார்ப்போம்.

தேசியப் பிரச்சினை இரண்டு காரணங்களால் தோன்றுகிறது. ஒரு பேரரசில் உள்ள முதலாளிகள் தனது பொருளாதார நலன்களின் அடிப்படையில் பிற அரசுகளை தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் நிலையில் அவ்வரசுகள் உரிமைக்காகப் போராடும் போது தேசியப் பிரச்சினை எழுகிறது. மற்றொன்று, ஒர் அரசு தேசியமாக உருவாகின்றபோது ஒரே அரசின் கீழ் உள்ள பேரினத்தைச் சார்ந்த முதலாளிகள் தமது பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக மற்ற சிறிய தேசியத்தின் பண்பாடு, கல்வி, நீதி, பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றை ஒடுக்கும்போது ஏற்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வளாச்சி அடைகின்ற பொழுது தமது சரக்கைச் சந்தைப்படுத்தும் முனைப்பில் தனக்கு கீழ் உள்ள முதிர்ச்சியடையாத சிறிய தேசங்களை ஒருங்கிணைக்கும்போது ஏற்படுகிடுகின்ற பாதகமான சூழ்நிலையே தேசிய இனப்பிரச்சினையாக வடிவெடுக்கிறது. இவற்றில்தான் தேசிய இன இயக்கங்களின் தோற்றத்துக்கான பொருளாதார அடித்தளம் அமைந்திருக்கிறது.

"ருஷ்யாவில் தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. இவை இந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி தேசிய இன இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்கு வேண்டும், அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்கவும், குறுக்கே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது."5

சரக்கு உற்பத்தியின் முழு வெற்றிக்கு முதலாளித்துவம் உள்நாட்டு சந்தையை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும், அதற்கு ஒரே மொழி, ஒரே அரசியல் வழியில் ஒருங்கிணைக்கப்பட்டதான பிரதேசம் தேவைப்படுகிறது. இந்த ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே அரசதிகாரம் போன்றவற்றை நிலைநாட்ட முற்படுகின்ற பொருளாதார நலன்களில்தான் தேசிய இன பிரச்சினைக்கான இயக்கங்கள் தோன்றுவதற்கான அடிப்படை அமைந்துள்ளது.

இதனை ஸ்டாலின் கூறுகிறார்:-
“நிலப்பிரபுத்துவம் இன்னும் ஒழிக்கப்படாத இடங்களிலும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி பலவீனமாக உள்ள இடங்களிலும் பொருளாதார அளவில் தங்களுக்குள் ஒருங்கிணைந்த தேசங்களாக இன்னமும் உருவாகாது, பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட தேசிய இனங்கள் வாழ்வின்ற இடங்களிலும் அரசுகளின் உருவாக்க முறை இப்படித் தான் காணப்பட முடியும்”6
               
இந்த விடுதலை இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாது, நாகரிகம் அடைந்துவரும் அனைத்து நாடுகளுக்கும் உரியது என்கிறார் லெனின்.

தேசிய இனப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். அதில் எந்த தேசிய இனத்துக்கும், எந்த மொழிக்கும் தனி உரிமை என்பது கிடையாது, தேசிய இனங்களின் அரசுகள் பிரிவது ஜனநாயக வழியில் நடத்தப்பட வேண்டும்.

"தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:-
எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எவ்விதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை,

தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்,

எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாகவோ இருக்கும்படியான எந்த நடிவடிக்கையும் சட்ட விரோதமானது என்றும் செயலுக்கு வர முடியாதது என்றும் பிரகடனம் செய்து,

இம்மாதிரியான நடிவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும்,

இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்."7

ஒரு தேசத்தில் காணப்படும் இரு தேசிய இனங்களில் உள்ள பாட்டாளிகளின் வர்க்க ஒற்றுமைதான் கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமானது, சிறிய தேசிய இனங்களின் பிரிதல் என்பது சிறிய தேசிய இன தேசியவாதத்துக்குத்தான் துணைபோகும் என்று சந்தேகிப்பவர்களுக்கு லெனினது பதிலளிக்கிறார்.

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை. ஏனெனில், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாக  பிரிந்து போகும் உரிமையை மறுப்பதுதான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின்.

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், ஒடுக்கத்துக்கு ஆளான தேசிய இனத்துக்கு கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது முதலாளித்துவத்தின் தேசியவாதப் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் புரிவதில் போய் முடிந்துவிடும்.

“பிரபுத்துவ ஆதிக்கம் அனைத்தையும், தேசிய இன ஒடுக்குமுறை அனைத்தையும், எந்த ஒரு தேசிய இனத்துக்கோ எந்த ஒரு மொழிக்கோ உள்ள எல்லாத் தனியுரிமைகளையும் ஒழித்துக் கட்டுதல் ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சயமாய் உகந்ததாகும்- தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான பூசல்கள் இவ்வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பவை, தடுத்து மட்டுப்படுத்துகிறவை. ஆனால், பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான இந்த வரம்புகளுக்கு- வரலாற்று வழியில் அமைந்த இந்தத் திட்வட்டமான எல்லைகளுக்கு - அப்பால் செல்வது, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும். இங்கு எல்லை வரம்பு இருக்கிறது, பல சந்தர்ப்பங்களிலும் இது மிக மெல்லியதாய் இருக்கக் கூடியது. புந்து, உக்ரேனியத் தேசியவாத சோஷலிஸ்டுகள் இதனை அறவே மறந்து விடுகிறார்கள்.”8

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாக செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய இனப் பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீழ்ந்து கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை சார்ந்ததாகிவிடும்.

"..தேசிய இனப் பிரச்சினையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான, சிறிதும் முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்கு மேல் செல்வது சாத்தியமன்று, எனெனில் இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் "நேர்முகச்" செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகி விடுகிறது."9

                முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தைத் துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றென தவறாக புரிந்து கொள்கின்றனர். பிரிவினைவாதம் வேறு சுயநிர்ணய உரிமை என்பது வேறு. பிரிவினை வாதம் தேசத்தை துண்டாட வேண்டும் தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றுவது. பாட்டாளிகளின் சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு தேசங்களில் உள்ள தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றிணைத்து முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான வழியாக உருவாக்கப்பட்டது.

"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள எல்லா தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும் சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுவதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலுமுள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."10

                இங்கு லெனின் கூறுவதை உணர்ந்தால் தேசங்களின் பிரிந்து போதல் என்ற உரிமை பாட்டாளிகளின் முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு துணைபுரியும். அத்தோடு தேசங்கள் ஜனநாயகமான வழிமுறையில் மேலும் நெருங்கி ஒன்றிணைந்து கலக்க முடியும்.

யாருடனும் ஒன்றாத தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கேட்கப்படுகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையை கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மனவேறுபாட்டை முன்னிருத்துகின்றனர். தனக்கான ஒரு நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்திருக்க விரும்புதல், மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது.

அது மட்டுமல்லாது முதலாளிகள் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால்தான் மார்க்சியவாதிகள் சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் மற்றொரு தேசிய இனத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது  பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசிய இனத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றனர்.

தேசியத்தை ஒடுக்குகின்ற கொள்கையின் விளைவாகத்தான் தேசத்தில் பிரிவினை தூண்டப்படுவதாக மார்க்சியம் கருதுகிறது. சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனை தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்து சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார்.

பிரிந்து செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராக குற்றஞ்சாட்டுவது போன்றது.

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்கு சமம் என்பதை லெனின் எச்சரிக்கையை யோடு நமக்கு விளக்குகிறார்.

“சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரைத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளுக்குக் கேடுவிளைக்கும் வகையில் போலீஸ் நிர்வாக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”11

                விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கையே தேசிய இன அரசைத் தோற்றுவிக்கிறது. தேசியவாத பிரிவினையை மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் பிரிவினைவாதமாகவே கருதுகிறது. அதனால் சுயநிர்ணய உரிமையை பிரிவினையைத் தூண்டும் கருத்தாக பார்க்க முடியாது. லெனின் மேலும் கூறுகிறார், ஒரு குறிப்பிட்ட தேசிய இன அரசின்  பிரிவு தேவையான ஒன்றா என்று, ஸ்தூலமான நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதை கம்யூனிஸ்டுகள் நிராகரிப்பதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

"சமூக-ஜனநாயகவாதிகள் எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரமளிப்பதனால் ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசிய இனத்தின் அரசின் பிரிவு அவசியமானதுதான் என்பதை சுயேச்சையாக மதிப்பிடுவதை சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயமானது ஆகும்"12

-ஆக இணக்கம் காணமுடியா நிலைமையில் தான் பிரிதலை மார்க்சியம் முன்வைக்கிறது. பிரிந்து இருத்தலை வலியுறுத்துகிற தேசிய இனக் கலாச்சாரம் என்பதை மார்க்சியம் மறுதலிக்கிறது.

“தேசிய இனக் கலாசாரம் என்னும் முழக்கம் பூர்ஷ்வா ஏமாற்றாகும். நம்முடைய முழக்கம்:  ஜனநாயகத்தினுடைய, உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாசாரம்.”13

                சுயநிர்ணய உரிமை என்பதை குட்டிமுதலாளித்துவவாதிகள் தேசிய இனக் கலாச்சாரமாக புரிந்து கொள்கின்றனர். இது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் ஆகாது, நிச்சயமாக பூர்ஷ்வா தேசியவாதமேயாகும். அதைவிட இது தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வை பிரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிவது அவசியமா? அவசியம் இல்லையா? என்கிற சூழ்நிலையை கம்யூனிஸ்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

“சர்வதேசியவாதத்தை வார்த்தைகளில் அங்கீகரிப்பதும் ஆனால் செயலில், எல்லா விதமான பிரச்சாரம், கிளர்ச்சி, செய்முறை நடவடிக்கைகளிலும் அதற்குப் பதிலாகக் குட்டி முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அமைதிவாதத்தைப் பின்பற்றுவதும் இரண்டாவது அகிலத்தில் இருந்த கட்சிகளில் மட்டுமன்றி, அதை விட்டு வெளியேறி வந்த கட்சிகளிடமும் இருக்கின்றன, அதிலும் இப்பொழுது கம்யூனிஸ்டு என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற கட்சிகளிலும் கூட அதிகம் இருக்கின்றன.

இந்தத் தீமைக்கு எதிரான, மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் குட்டி முதலாளித்துவ தேசியவாதத் தப்பெண்ணங்களுக்கு எதிரான போராட்டத்தின் அவசரத் தன்மை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஒரு தேசத்திலுள்ள சர்வாதிகாரம் என்பதில் இருந்து சர்வதேசச் சர்வாதிகாரமாக மாற்றுகின்ற கடமையின் அதிகரித்து வருகின்ற தேவையோடு இது மேன்மேலும் முக்கியத்துவம் அடைகிறது.

குட்டி முதலாளித்துவத் தேசியவாதம், தேசிய இனங்களின் சமத்துவத்தை அங்கீகரிப்பதையே சர்வதேசியவாதம் என்று பிரகடனம் செய்கிறது, அதற்கு மேல், அதில் ஒன்றுமில்லை. இந்த அங்கீகாரம் வெறும் வார்த்தை அளவில் மட்டுமே என்ற உண்மை ஒரு புறமிருக்கட்டும், குட்டி முதலாளித்துவத் தேசியவாதம் தேசிய சுயநன்மையைக் கட்டுக்கோப்போடு பாதுகாக்கிறது. …”14

                தனித்தனி தேசிய இனங்களாக பிரிந்திருப்பதே அந்தந்த தேசங்களுக்கு சிறந்ததாய் இருக்கும் என்ற நிலையை, சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இணக்கமற்ற நிலையில் பிரிந்து செல்வதையும் இணக்கமும் நெருக்கமும் உள்ள நிலையில் சேர்ந்திருத்தலையும் வலியுறுத்துகின்றனர் கம்யூனிஸ்டுகள்.

பயன்படுத்திய நூல்கள்

1. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை -தேர்வு நூல்கள் தொகுதி 3 – பக்கம்- 356
2. மேற்கண்ட நூல்– பக்கம்- 357
3. மேற்கண்ட நூல்– பக்கம்- 357 -358
4. மேற்கண்ட நூல்– பக்கம்- 347-348
5. மேற்கண்ட நூல்– பக்கம்- 291
6.மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்-பக்கம் 23
6. 7. & 8.தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
9.தேசிய இனப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277
10.தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119
11.தேசிய இனப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜுன் 26) - பக்கம் 89
12.தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்கம் 25
13.தேசிய, காலனியப் பிரச்சினைகளைப் பற்றி பூர்வாங்க நகல் ஆய்வுரைகள்
(கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்காக)

கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும் -லெனின் (கட்டுரை அறிமுகம்)

"புது வாழ்வு" (நோவயா ஷீஸ்ன்) என்ற பெயரில் ஒரு சட்டவழியிலான போல்ஷிவிக்குகளின் செய்சித்தாளை லெனின் வெளியிட்டார். இந்த செய்தித்தாளில் லெனின் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினார். இதில் வெளிவந்தவைகளில் கட்சி அமைப்பும் கட்சி இலக்கியமும் என்ற கட்டுரை முதன்மை பெற்றதாகும். இந்த கட்டுரை புது வாழ்வு இதழ் பன்னிரண்டில், 1905ஆம் ஆண்டு நவம்பர் பதிமூன்றில் வெளிவந்தது.

 

இந்தக் கட்டுரையில், தற்போதைய புரட்சியின் நிலைமைமைப் பற்றியும், கட்சி அமைப்புக்கும் கட்சி இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் லெனின் எழுதினார். தற்போதைய புரட்சியில் தலைமறைவானது, சட்டவழியிலானது என்ற இயற்கையல்லாத கலவைப் பற்றி அதில் எழுதினார்.

 

“புரட்சி இன்னும் நிறைவுற்றாகவில்லை. புரட்சியைத் தோற்கடிக்க இனிமேல் ஜாரிசம் போதிய பலமுடையதாய் இல்லை, அதேபோல் ஜாரிசத்தைத் தோற்கடிக்க இன்னனும் புரட்சி போதிய பலம் பெற்றாகவில்லை. பகிரங்கமான, ஒளிவுமறைவில்லாத, நேடியான, முரணற்ற கட்சி மனப்பான்மையானது தலைமறைவான, இரகசிய, “ராஜதந்திர” சூழ்ச்சிகரச் “சட்ட முறைமையுடன்” சேர்ந்திருக்கும் இயற்கைக்கு ஒவ்வாத இந்த கலவை, எங்கும் யாவற்றிலும் செயல்படும் ஒரு காலத்தில், இப்பொழுது நாம் வாழ்ந்து வருகிறோம்.”

 

கட்சி இலக்கியம் பற்றி கூறுகிறார்:-


“கட்சி இலக்கியம் என்னும் கோட்பாடு என்பதென்ன? சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்துக்கு, இலக்கியமானது தனியாட்கள் அல்லது குழுக்கள் செல்வம் திரட்டிக் கொள்வதற்குரிய ஒரு சாதனமாய் இருக்க முடியாது என்பது மட்டுமல்ல இக்கோட்பாடு, உண்மையில் இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தின் பொதுக்குறிக்கோளைச் சாராத ஒன்றாய், தனியாள் முயற்சியாய் இருக்க முடியாது என்பதும் ஆகும். கட்சி சார்பில்லா மனப்பாங்குடைய எழுத்தாளர்கள் ஒழிக!! இலக்கியத்துறை மீமனிதர்கள் ஒழிக! (Down with literary supermen!) இலக்கியமானது பாட்டாளி வர்க்கத்தினது பொதுக்குறிக்கோளின் ஒரு பகுதியாக வேண்டும், தொழிலாளி வர்க்கம் அனைத்தின் அரசியல் உணர்வு கொண்ட முன்னணிப் படை அனைத்தாலும் இயக்கப்படும் தனியொரு மாபெரும் சமூக-ஜனநாயகப் பொறியமைவைச் சேர்ந்த “பல் சக்கரமும் திருகும்” ஆகிவிட வேண்டும். ஒழுங்கமைந்த, திட்டமிடப்பட்ட, ஒருமித்த சமூக-ஜனநாயகக் கட்சிப் பணியில் இலக்கியம் ஒரு கூறாகிவிட வேண்டும்…

 

முதலாளித்துவத் தனிநபர் மனப்பான்மையோராகிய உங்களுக்கு இதை நாங்கள் சொல்லியாக வேண்டும், அறுதியான சுதந்திரம் (absolute freedom) என்பதாய் நீங்கள் பேசுவது முழுக்க முழுக்க கபடமான புரட்டே ஆகும். பணத்தின் வல்லமையை அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், உழைக்கும் திரளான மக்கள் வறுமையில் வாட, ஒரு சில செல்வந்தர்கள் புல்லுருவிகளாய் வாழும் ஒரு சமூகத்தில் மெய்யான, பயனுள்ள “சுதந்திரம்” இருக்கவே முடியாது.

..

..அறுதியான இந்தச் சுதந்திரம் முதலாளித்துவ அல்லது அராஜகவாதத் தொடராகும் (உலகக் கண்ணோட்டம் என்ற முறையில் அராஜகவாதமானது உட்புறம் வெளிப்புறமாய் மாற்றப்பட்ட முதலாளித்துவ தத்துவமாகும்). யாராலும் சமூகத்தில் இருந்து கொண்டு, அதேபோதில் சமுகத்தில் இருந்து சுதந்திரமாயும் இருப்பது முடியாத காரியம். முதலாளித்துவ எழுத்தாளர் அல்லது கலைஞர் அல்லது நடிகையின் சுதந்திரம் எல்லாம், பண மூட்டைக்கு, லஞ்ச ஊழலுக்கு, விபசாரத்துக்குக் கீழ்ப்படியும் முகமூடி பூண்ட (அல்லது கபடமாய் முகமூடி இடப்பட்ட) சார்புநிலையே அன்றி வேறல்ல.”

 

மேலும், இக்கட்டுரையின் முடிவில், முதலாளித்துவச் சமூகத்தின் கட்டுக்கோப்பிற்குள் இருந்தாலும் முதலாளித்துவ அடிமை நிலையிலிருந்து உடைத்து வெளிவந்து, மெய்யாகவே முன்னேறிய, முழுக்க முழுக்க புரட்சிகரமான வர்க்கத்தோடு இரண்டறக் கலக்க முடியும் என்று லெனின் வலியுறுத்துகிறார்.



Thursday, 13 April 2017

எங்கிருந்து தொடங்குவது?- லெனின் (கட்டுரை அறிமுகம்)

1901ஆம் ஆண்டு மே மாத இஸ்க்ரா இதழில் லெனின் எங்கிருந்து தொடங்குவது? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் ஒரு கட்டுரை எழுதினார்.

 

இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவு படுத்திவிட்டார். மார்க்சியமே நமது திசைவழி என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போதையப் பிரச்சினை தேர்ந்து தெளிந்த திசைவழியில் செல்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதேயாகும். அதாவது திட்டமும் அதனை நடைமுறைப்படுத்த தேவைப்படுகிற அமைப்பு பற்றியதாகும். போராட்டத்தின் தன்மையையும் வழிமுறைகளையும் பற்றிய முடிவைத் தீர்க்க வேண்டும் என்ற முனைப்போடு இக்கட்டுரையும், இதன் விரிவாக்கமாக என்ன செய்ய வேண்டும்? என்ற நூலையும் லெனின் எழுதினார்.

 

தனித்தனிச் சலுகைகளைப் போராடிப் பெறுவதோடு நிற்காமல், எதேச்சதிகாரக் கோட்டையை தகர்த்தெறிவதை நோக்கமாகக் கொண்ட அமைப்பு முறையில் அணிதிரட்டப்பட்ட வலுமை வாய்ந்த கட்சியை அமைப்பதே முதன்மையான திட்டமாகும். ‘24 மணிநேரத்தில் செயற்தந்திரப் பிரச்சினையை மாற்றிக் கொள்வது சாத்தியமே’ என்பது போன்ற சொற்களுக்குள், கட்சியின் அவசியத்தை மறுதலிக்கின்ற போக்கை லெனின் கண்டித்தார். புரட்சிக் கலகங்கள் திடீரென்று வெடித்தெழும் பொழுது, அந்நேரத்தில் அமைப்பை கட்டுது என்பது காலங்கடந்த முயற்சி ஆகிவிடும்.

 

“நொடி நேர எச்சரிக்கையில் செயலில் இறங்குவதற்குத் தயார் நிலையில் அமைப்பு இருக்க வேண்டும். “இருபத்துநான்கு மணி நேரத்தில் செயற்தந்திரங்களை மாற்றிக் கொள்வதாம்”! ஆனால் செயற்தந்திரங்களை மாற்றிக் கொள்வதற்கு முதலிலேயே செயற்தந்திரங்களை வகுத்திருக்க வேண்டுமே. எல்லாவிதச் சூழ்நிலைகளிலும் எல்லாக் காலங்களிலும் நடத்தப்பட்ட அரசியல் போராட்டத்தில் சோதித்துப் பெற்ற வலுவான அமைப்பு இல்லாமல், உறுதியான கோட்பாடுகளால் ஒளியூட்டப்பட்டு விடாப்பிடியாக நிறைவேற்றப்பெறும் முறையிலான செயல்திட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கே இடமில்லை.”


பயங்கரம் (Terror) என்பது இன்றைய பிரச்சினையாகிவிட்டது என்று கூறுபவர்களிடம் லெனின் தமது நிலைப்பாட்டை கூறுகிறார். ஆங்கிலத்தில் டெரர் (பயங்கரம்) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கே பலப்பிரயோகம் (Force) பற்றிப் பேசப்படுகிறது என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். பலப்பிரயோகம் பற்றிய மார்க்சிய கொள்கையை இதில் லெனின் பதிவிடுகிறார்.

 

“கோட்பாடு முறையில் நாம் பயங்கரத்தை (Terror)  ஒருபொழுதும் நிராகரித்ததில்லை, நிராகரிக்கவும் முடியாது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட நிலைமையும், குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் பொறுத்து, போராட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தில் முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால் இவர்களது கூற்றின் சாரம் என்ன?

 

போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த வகையில், களம் புகுந்து போர்புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும், தொடர்பற்ற விதத்தில், தனித்து நிற்கும் தாக்குச்செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள். மைய அமைப்பு இல்லாத நிலையில், வட்டாரப் புரட்சி அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில் பயங்கரவாதம் இந்த வகையிலேதான் உருவாகும். எனவேதான், தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய போராட்ட முறை காலத்திற்கு ஒவ்வாததாயும் பொருத்தமற்றதாயும் உள்ளதென்று நாம் உறுதியாகச் சாதிக்கிறோம்.

 

மேலும் இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக் கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையில் இருந்து அப்பால் திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிச் சக்திகளையே சீர்குலைக்கிறது என்றும் நாம் உறுதியாகப் பிரகடனம் செய்து வருகிறோம்.

…

தனிப்பட்ட வீரச் செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப் பலரை ஈர்த்திருக்கிறது.  பயங்கரவாதம் என்பது போராட்ட நடிவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப் போனால், தீர்மானமான தாக்குதலின் வழித்துறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்.”

 

                புரட்சிச் சக்திகளை சீர்குலைக்கிற இடதுதிரிபான அராஜகவாதத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையிலான வேறுபாட்டை இங்கே லெனின் தெளிவுபடுத்துகிறார். பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது என்று கூறியதின் மூலம் கம்யூனிஸ்டுகள் வன்முறையாளர்கள் என்கிற பொய்யான கூற்று தவிடுபொடியாகிறது.

 

                வட்டார வேலைகளில் முழுகிக் கிடக்கும் சமூக ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்டுகள்) சிதறிக்கிடப்பதே ஊசலாட்டத்துக்கு காரணமாகும். இதையே மிகப்பெரிய குறைபாடாக சுட்டிக்காட்டிய லெனின், இதில் இருந்து விடுபடுவதற்கான வழியாக பல்வேறு வட்டார இயக்கங்களை ஒரே அகில ருஷ்ய இயக்கமாக மாற்றியமைக்க வேண்டும் என்கிறார்.

 

அமைப்பை உருவாக்குவதற்கு முதலில் ஓர் அகில ருஷ்ய அரசியல் பத்திரிகையை நிறுவவேண்டும். வெளிப்படையான கட்சி செயற்பட முடியாத நிலையில் பத்திரிகையின் மூலம், சிதறலான கிளர்ச்சியை முறையான பொதுக் கிளர்ச்சி மூலம் வலுப்படுத்துவதற்கு பத்திரிகை தேவையான ஒன்றாகும். இத்தகைய பத்திரிகை கூட்டுத்துவப் பரப்புரையாளனாகவும், கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் செயற்படும் என்கிறார்.

 

“.. பத்திரிகை ஆற்ற வேண்டிய பங்கு, கருத்துக்களைப் பரப்புவதிலும் அரசியல் அறிவைப் புகுத்துவதிலும், அரசியல் கூட்டாளிகளை ஈர்த்துக் கொள்வதிலும் மட்டும் அடங்கிவிடுவதில்லை. பத்திரிகை என்பது கூட்டுத்துவப் பரப்புரையாளனாகவும், கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் உள்ளது.

 

இவ்வகையில் இதனைக் கட்டிடம் கட்டும் பொழுது அதனைச் சுற்றி எழுப்பும் சாரத்திற்கு ஒப்பிடலாம், சாரம் கட்டிடத்தின் புற வடிவத்தைக் காட்டுகிறது, தனித்தனிக் கட்டிடத் தொழிலாளர்களிடையே உள்ள தொடர்புக்கு வசதி ஏற்படுத்தி வேலையைப் பிரித்துக் கொடுக்கவும் ஒழுங்கமைந்த உழைப்பினால் அடையப் பெற்ற பொதுப்பலன்களைக் கணித்தறியவும் உதவுகின்றது.

 

செய்தித்தாளின் உதவியாலும் தொடர்பினாலும் ஒரு நிரந்தர அமைப்பு தானாகவே அமையத் தொடங்கும். அந்த அமைப்பு வட்டார வேலைகளில் மட்டுமின்றி, முறையான பொது வேலையிலுங்கூட ஈடுபடும், அரசியல் நிகழ்ச்சிகளை கவனமாகக் கண்காணிக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தையும் மக்கட்தொகையின் பல்வேறு பகுதியினரின்மீது அவை செலுத்தும் செல்வாக்கையும் மதிப்பிடவும், புரட்சிகரமான கட்சி இந்நிகழ்ச்சிகளை மாற்றி உருவாக்குவதற்கேற்ற வழிமுறைகளை வகுக்கவும் அது தன் உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கும்.”

 

                இக்கட்டுரையின் இறுதியில் லெனின் தப்பெண்ணத்தைத் தவிர்ப்பதற்காக சிலவற்றை கூறுகிறார். அதில், “முறையான திட்டமிட்ட தயாரிப்பைப் பற்றி பேசிவருகிறோம், ஆனால் சரியான முற்றுகை அல்லது நன்கு ஒழுங்கமைந்த தாக்குதல் மூலமே எதேச்சதிகாரம் வீழ்ந்து ஒழியும் என்று உட்குறிப்பாக உணர்த்துவது நம்முடைய விருப்பம் அல்ல” என்று தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாது “அத்தகைய கருத்து முட்டாள்தனமானது, புத்தகப் புழுவுக்கு உரியது?. மேலும் கூறுகிறார்.

 

“அதற்கு மாறாக, எல்லாப் பக்கங்களில் இருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல்பாகத் தோன்றும் திடீர் வெடிப்புக்களில் ஒன்றின் நிர்ப்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின் நிர்ப்பந்தத்தாலோ எதேச்சதிகாரம் தகர்ந்து ஒழியும் என்பது முற்றிலும் சாத்தியமானது, வரலாற்றுப் போக்கில் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யோசனையற்ற முரட்டுத் துணிச்சலான செயல்களில் வழுக்கி விழுவதைத் தவிர்க்க விரும்பும் எந்த அரசியல் கட்சியும், மேற்சொன்ன திடீர் வெடிப்புக்களையும் சிக்கல்களையும் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் தன் நடவடிக்கையை அமைத்துக் கொள்ள முடியாது.

 

நம் வழியே நாம் போக வேண்டும், நம்முடைய முறையான வேலையில் ஒரே விடாப்பிடியாக ஈடுபட வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள் மீது எவ்வளவு குறைவாக நாம் நம்பிக்கை வைக்கிறோமோ, அவ்வளவுக்கு “வரலாற்றுத் திருப்பங்கள்” நம்மைத் திகைக்கச் செய்ய மாட்டா என்ற உறுதி அதிகமாகும்.”

 

                எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறாமல் போனால், வரலாற்றுத் திடீர் திருப்பம் திகைப்படையச் செய்துவிடும். அதனால் போராட்ட வடிவங்களை முன்கூட்டி தீர்மானிப்பதை இங்கே லெனின் மறுக்கிறார். அனைத்துவித போராட்டங்களுக்கும் தயாரா இருக்க வேண்டும் என்பதை இங்கே மறுப்பதாக தவறாக எண்ணக் கூடாது. ஓரு குறிப்பிட்ட போராட்டத்திற்கு மட்டும் தயாராவதையே மறுக்கிறார்.

 

                இக்கட்டுரையில் பேசப்பட்டதை விரிவாக்கி ஒரு நூல் தயாராகிவருவதாக லெனின் குறிப்பிட்டுள்ளார். நூலின் பெயர் என்ன செய்ய வேண்டும்?.

தொலைவிலிருந்து கடிதங்கள்- லெனின் (நூல் அறிமுகம்)

பிப்ரவரிப் புரட்சியின் தொடக்கத்தில் போல்ஷிவிக் கட்சியினர் தமது தலைமறைவு வாழ்க்கையில் இருந்து வெளிப்படையான செயற்பாட்டுக்கு வந்தனர். மீண்டும் 1917ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாளில் இருந்து பிராவ்தா வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த லெனினுக்கு புரட்சி தொடங்கியது பற்றி செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தபடியே புரட்சியின் போக்கை கவனித்துக் கொண்டிருந்தார். பிப்ரவரி புரட்சியை அறிந்ததுமே, புரட்சி தொடர்பாக கட்சி சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் தொலைவிலிருந்து கடிதங்கள் என்ற பெயரில் ஐந்து கடிதங்களை எழுதி அனுப்பினார். ஐந்தாவது கடிதம் முழுமையடையாத நிலையில் காணப்படுகிறது. முதல் கடிதம் மார்ச் பிராவ்தா இதழில் சுருக்கமாக வெளிவந்தது. மற்றவை அக்டோபர் புரட்சிக்குப் பின்பே பதிப்பிக்கப்பட்டது. ஐந்தாவது கடிதத்தில் காணப்படும் கருத்துக்களை செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற தொடர் கட்டுரைகளில் விரிவாக்கினார்.

ஏகாதிபத்திய உலகப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற போல்ஷிவிக்கின் முடிவின்படி, முதல் புரட்சி ருஷ்யாவில் ஏற்பட்டதைக் குறிப்பிட்டுத் தொலைவிலிருந்து கடிதங்கள் என்ற சிறுகட்டுரை தொடங்குகிறது. எட்டே நாட்களில் ஒரு முடியாட்சி தகர்ந்து விழுந்த அற்புதத்தைச் சுட்டுகிறார்.

“இயற்கையிலேயோ வரலாற்றிலேயோ அற்புதங்கள் கிடையா. ஆனால் வரலாற்றின் ஒவ்வொரு திடீர் திருப்பமும் அத்தகைய செழுமையான உள்ளடக்கத்தினை வழங்குகின்றது. போராட்ட வடிவங்கள் மற்றும் போராடும் தரப்புக்களின் சக்திகளது அணி சேர்க்கையில் இத்தகைய எதிர் பாராத பிரத்தியேக இணைப்புக்களை வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு புரட்சிக்கும் பொருந்தும். எனவே சாமான்யர் மனதில் அற்புதமாகத் தோற்றமளிப்பவை நிறைய இருக்கும்”1

      ஜார் ஆட்சி இவ்வாறு வீழ்ந்து போனதற்கு பல காரணிகள் இணைந்திருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை 1905-07ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வர்க்கப் போராட்டம் ஆகும். அகிலத்தில் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக் கொள்ளப்படாத திட்டம், இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

“ஏகாதிபத்தியப் போர் புறவயப்பட்ட தவிர்க்கவொண்ணாமையுடன், முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை முன் என்றும் கண்டிராத அளவுக்கு மிகப் பெரிதாகவே முடுக்கும், தீவிரமாக்கும் என்பது திண்ணம், பகைமை வர்க்கங்களுக்கு இடையே ஒர் உள்நாட்டுப் போராக இது மாறுவது நிச்சயம்.

இந்த மாற்றமானது 1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சியால் ஏற்கெனவே துவக்கப்பட்டு விட்டது.” 2

      இன்று போரிடுகிற முதலாளித்துவப் பிரிவுகளையும், முதலாளித்துவ அமைப்பின் எஜமானர்களையும், முதலாளித்துவ அமைப்பின் அடிமை உடமையாளர்களையும் இந்தப் போர் இரும்புச் சங்கிலிகளால் ஒன்றுடன் ஒன்று பிணைத்திடுகிறது என்று லெனின் கூறுகிறார்.

“போர் வெடித்தவுடன் முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் துறந்தோடியுள்ள சோஷலிஸ்டுகள்- ஜெர்மனியில் டேவிட்கள், ஷெய்டெமன்கள், ருஷ்யாவில் பிளாகானவ்கள், பத்ரேசவ்கள் குவஸ்தியோவ்கள் வகையறாக்கள் அனைவரும்- புரட்சியாளர்களின் “பிரமைகளுக்கு” எதிராக, ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப போராக மாற்றும் “கேலிக்கூத்தான கனவுக்கு” எதிராக உரத்தும் நீண்ட காலமாயும் ஆரவாரம் செய்து வந்தனர். முதலாளித்துவம் வெளிப்படுத்துவதாகக் கூறப்படும் வலிமை, விடுபடாவுறுதி, தகவமைப்பு ஆகியவற்றுக்கு சர்வ சுரங்களிலும் புகழ்மாலை பாடினார்கள். இவர்கள்தான் பல்வேறு நாடுகளிலுமுள்ள தொழிலாளர் வர்க்கங்களைத் “தகவமைக்கவும்”, வதக்கி அடக்கவும், ஏமாற்றம் செய்யவும், பிளவுறுத்தவும் முதலாளிகளுக்கு உதவியர்கள்!” 3

      பாட்டாளி வர்க்க சிந்தனையில் இருந்து துறந்தோடியவர்களைப் பற்றி கடுமையான கோபத்தில் இவ்வாறு லெனின் எழுதியுள்ளார். மேலும் இரட்டை ஆட்சியின் தோற்றத்தையும் அதன் வர்க்க இயல்பையும் எடுத்துக் காட்டுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலைகளின் எதார்த்தத்தை துல்லியமாக வரையறுத்தால்தான் மார்க்சிய வழிப்பட்ட செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை வலியுறுத்துகிறார்.

“ருஷ்யா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களைப் போலவே பெத்ரோகிராத் தொழிலாளர்களும் ஜாரிச முடியாட்சியை எதிர்த்துத் தன்னல மறுப்புடன் போராடினார்கள். சுதந்திரத்திற்காகவும், விவசாயிகளுக்கு நிலம் கோரியும், ஏகாதிபத்தியப் படுகொலையை எதிர்த்து சமாதானத்திற்காகவும் போராடினார்கள். அந்தப் படுகொலையைத் தொடர்ந்து நடத்தவும் அதைத் தீவிரப்படுத்தவும் வேண்டி ஆங்கில-பிரெஞ்சு ஏகாதிபத்திய முதலாளிகள் அரசபரிவாரச் சதிகளைத் தொடுத்தார்கள், காவற்படை அதிகாரிகளுடன் கூடிச் சதிபுரிந்தார்கள். குச்கோவ்களையும் மில்யுக்கோவ்களையும் தூண்டிவிட்டு ஊக்குவித்தார்கள், முழுமையான புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார்கள். இவர்கள்தான் பாட்டாளி வர்க்கம் ஜாரிசத்தை எதிர்த்து முதல் தாக்குதலைத் தொடுத்ததும் உடனடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள்.
…
இந்த அரசாங்கம், தற்போதைய போரைப் பொருத்தவரை கோடி டாலர் “நிறுவனமான” “இங்கிலாந்து மற்றும் ஃபிரான்சின்” கையாளாகவே இருந்து வந்துள்ளது. இதனுடன் அக்கம் பக்கமாக முக்கியமான, அதிகாரபூர்வமல்லாத இன்னும் வளர்ச்சி பெற்றிராத, ஒப்பளவில் பலவீனமான தொழிலாளர் அரசாங்கம் தோன்றியுள்ளது. அது பாட்டாளி வர்க்கத்தின், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற மக்கள் தொகையின் எழைகள் பகுதி முழுமையின் நலன்களை வெளிப்படுத்துகிறது. இதுவே பெத்ரோகிராதில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத் ஆகும்.

இத்தகைய படைப்பாளிகளின் சோவியத் விவசாயிகளுடனும், விவசாயத் தொழிலாளிகளுடனும் தொடர்பை நாடுகிறது. விவசாயிகளை விட மேலதிகமாக விவசாயத் தொழிலாளிகளிடம் குறிப்பாயும் முதன்மையாயும் தொடர்புகளை நாடுகிறது.

மெய்யான அரசியல் நிலைமை இத்தகையதே. இதை நாம் ஆகக்கூடுமான அளவு புறவயமான துல்லியத்துடன் முதலில் வரையறுக்க முயல வேண்டும். அதன் வழி, மார்க்சிய செயற்தந்திரங்கள் சாத்தியமான ஒரே உறுதியான அடித்தளம்- மெய்நடப்புகளின் அடித்தளம்- மீது நிறுவப்படலாம்.

ஜாரின் முடியாட்சி நொறுக்கப்பட்டது, ஆனால் இறுதியாக அழிக்கப்படவில்லை.” 4

            தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத்தின் கரு, மக்கள் தொகையின் பத்தில் ஒன்பது பேரின் நலனான சமாதானம், உணவு, சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிறது. ஆனால் இடைக்கால அரசால் இதனைச் செய்திட முடியாது. காரணம் அது ஒரு முதலாளித்துவ அரசு. உணவு இருக்கிறது,  அதைத்தர முடியும், ஆனால் மூலதனம் மற்றும் நிலவுடைமையின் புனிதத் தன்மையினை மதிக்காத முறைகளின் மூலம் மட்டுமே இது முடியும் என்பதால் வாய்ப்பில்லை. சுதந்திரத்தை வழங்க முடியாது. காரணம் அது ஒரு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அரசாகும். இதனை தெளிவுபடுத்திய லெனின், பாட்டாளி வர்க்கம் தமக்குரிய நேசசக்திகளை இணைத்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார். முதல் நேசசக்தி சிறு விவசாயிகள், இரண்டாவது போரிடும் நாடுகள் அனைத்தின் பாட்டாளி வர்க்கமுமாகும்.

“இந்த இரு நேசசக்திகளுடன் சேர்ந்து பாட்டாளி வர்க்கம் தான், இன்றைய மாறுதல் கட்ட நிலைமையின் பிரத்தியேகத் தன்மைகளைப் பயன்படுத்தி குச்கோல், மில்யுக்கோவ் அரை-முடியாட்சிக்குப்பதில் ஒரு ஜனநாயகக் குடியரசை அடைவதற்கு, நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் முழுவெற்றி பெறுவதற்கு முதலில் முன்செல்ல முடியும். சோஷலிசம் மட்டுமே போரால் சோர்வுற்ற மக்களுக்கு சமாதானம், உணவு மற்றும் சுதந்திரத்தை வழங்க முடியும்.” 5

புரட்சியின் விளைவாக ஜாரின் யதேச்சாதிகாரம் நீங்கியது. பேசுவதற்கும், அச்சகங்களை நடத்துவதற்கும், கூட்டங்கள் கூடுவதற்கும், சங்கங்கள்  அமைப்பதற்கும் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி போல்ஷிவிக்குகள் மக்களை மேலும் விழிப்படையச் செய்தனர்.

பயன்படுத்திய நூல்கள்
1.தொலைவிலிருந்து கடிதங்கள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 11-12
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 15
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 16
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 21-22-23
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 29


Tuesday, 11 April 2017

ஏப்ரல் ஆய்வுரைகள்- லெனின் (நூல் அறிமுகம்)

(இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், இரட்டை ஆட்சி, செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்.)

-இந்நூல் என் சி பி எச் புத்தக நிறுவனத்தினால் 1967ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது-

நாடு கடந்து வாழ்ந்து வந்த லெனின், 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் பெத்ரோகிராத்திற்கு சென்றார். புரட்சிகர ருஷ்யா லெனினை உற்சாகத்துடன் வரவேற்றது.

       பின்லாந்து ரயில் நிலையத்தில் வந்திறங்கிய லெனினை வரவேற்க தொழிலாளர்களும் விவசாயிகளும் மக்களும் குழுமியிருந்தனர். தரைப்படை, கடற்படை வீரர்களின் புரட்சிகரப் பிரிவுகள், லெனினுக்கு ராணுவ மரியாதையை அளித்தன. கூடியிருந்த மக்களிடம் லெனின் உரை நிகழ்த்தினார்.

       பெத்ரோகிராத் வந்தடைந்த உடனே அடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார். ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் போல்ஷிவிக்குகளின் கூட்டத்தில், புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். பெத்ரோகிராத் வருவதற்காக ரயிலில் பயணிக்கும்போது லெனின் இதனை எழுதினார். இந்த ஆய்வுரையை இரண்டு இடங்களில் நிகழ்த்தினார். போல்ஷிவிக்குகள் கூடியிருந்த கூட்டத்திலும், தவ்ரீதா மாளிகையில் போல்ஷிவிக்குகள் மற்றும் மென்ஷிவிக்குகள் சேர்ந்திருத்த கூட்டத்திலும் இவ்வுரையை நிகழ்த்தினார். இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (1917ஆம் ஆண்டு எப்ரல் 4-5) என்ற தலைப்பில் இந்த ஆய்வுரை பிராவ்தாவில் ஏப்ரல் 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவையே பின்னால் ஏப்ரல் ஆய்வுரைகள் என்று புகழ்பெற்றது. இந்த ஆய்வுரையில் கூறிய கருத்தை விரிவாக்கி எழுதிய செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் (ஏப்ரல் 8-13), நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (ஏப்ரல் 10) ஆகியவற்றை இணைத்து ஏப்ரல் ஆய்வுரைகளாக கூறுவது வழக்கம்.

இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்

                இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற கட்டுரையில் பத்து ஆய்வுரைகளை வைக்கிறார் லெனின்.

1) தற்போது ஏற்பட்ட புரட்சியில் தோன்றிய இடைக்கால அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால் கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போராகவே தொடர்கிறது. இதன் காரணமாக “புரட்சிகரப் பாதுகாப்புவாதத்திற்கு” என்ற முழக்கத்தின் மூலம் இந்த இடைக்கால அரசை ஆதரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறார். இந்தப் புரட்சிகரப் பாதுகாப்புவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நேர்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறுகிறார். அவர்களிடம், முதலாளித்துவ வர்க்கத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்படுவதை, விடாப்பிடியாகவும், பொறுமையுடனும் விளக்கிக் கூற வேண்டுவது அவசியமானதாகும். மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்ட முடியாது.

“மூலதனத்தை வீழ்த்தாமல் இந்தப் போரை உண்மையிலேயே ஒரு ஜனநாயகப்பூர்வமான சமாதானத்தோடு, வன்முறையால் திணிக்கப்படாத ஒரு சமாதானத்தோடு முடித்துக் கொள்வது சாத்தியமல்ல என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.” 1

2, தற்போதைய புரட்சியின் முதல் கட்டத்தின் பிரத்தியேக நிலைமைகளை கூறுகிறார். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வின் ஒழுங்கமைப்பு போதாமையினால், அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்று விட்டது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் பாட்டாளி மற்றும் விவசாயிகளிடம் வந்தடைய வேண்டும்.

3) இடைக்கால அரசின் பிரமைகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த அரசினுடைய வாக்குறுதிகளின் பித்தலாட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

4)தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையாகவே இருக்கின்றனர். மக்கள் சோஷலிஸ்டுகள் என்ற குட்டி முதலாளித்துவ கட்சியினர், பல்வேறு நரோத்னிக்கு குழுக்களையும் இணைத்து நிறுவிய சோஷலிஸ்ட்-புரட்சியாளர் கட்சியினர் போன்றோர்களே பெரும்பான்மை இடங்களில் அமர்ந்துள்ளனர். இவர்கள் இடைக்கால அரசை மறைமுகமாக ஆதரித்தனர். முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்குக்கு இவர்கள் பணிந்து கிடக்கின்றனர் என்பதை பாட்டாளி வர்க்கத்திடம் அம்பலப்படுத்த வேண்டும்.

5) தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். தேர்வு செய்யப்படவும் எந்த நேரமும் திரும்பி அழைக்கப்படக் கூடியவர்களுமான  பிரதிநிதிகளடங்கிய, அடிமுதல் முடிவரை தொழிலாளர், விவசாயத் தொழிலாளர் ஆகியோர்களைக் கொண்ட சோவியத்துகளின் குடியரசு வேண்டும். இவர்களின் ஊதியம் ஒரு தொழிலாளியின் சாராசரி ஊதியத்தைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.

6) நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும். வட்டார சோவியத்துகள் நிலத்தை விநியோகிக்கும். பெரிய எஸ்டேட்டுகள் ஒவ்வொன்றிலும் மாதிரிப் பண்ணைகள் அமைக்கப்படும்.

7) நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் உடனடியாக தனியொரு தேசிய வங்கியில் இணைத்தல்.

8)“சோஷலிசத்தைப் “புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்”.

9) கட்சிக் காங்கிரசை கூட்டுவது, வேலைத்திட்டத்தை மாற்றுவது, பாரிஸ் கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட அரசமைத்தல், மற்றும் கட்சியின் பெயரை மாற்றுவது.

10)  சமூக-தேசிய வெறியர்களையும், நடுநிலைவாதிகளையும் எதிர்க்கின்ற ஒரு புதிய அகிலம் உருவாக்குதல்.

இந்த பத்து ஆய்வுரைகளும் ஏப்ரல் மாதத்தில் 7ஆம் நாளில் பிராவ்தாவில் வெளிவந்ததன.

இரட்டை ஆட்சி

                ருஷ்யாவில் இரட்டை ஆட்சி ஏற்பட்டதின் சூழ்நிலைமையைப் பற்றி இரட்டை ஆட்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை லெனின் எழுதினார். இது ஏப்ரல் மாதம் 9ஆம் நாளில் பிராவ்தாவில் வெளியிடப்பட்டது. இதில் தற்கால சூழ்நிலையைப் பற்றிய விளக்கம் கொடுத்து அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு லெனின் அழைப்புவிடுத்தார்.
               
                இந்த இரட்டை ஆட்சி என்கிற யதார்த்தத்தை முதலில் ஏற்றுப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
:
“நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் கிரகித்துக் கொள்ள வேண்டும், இது புரிந்து கொள்ளப்படா விட்டால் நாம் முன்னேற முடியாது. பழைய “சூத்திரங்களை” உதாரணமாக போல்ஷிவிசத்தின் சூத்திரங்களை எவ்வாறு நிறைவு செய்வது, திருத்தம் செய்வது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் அவை சரியாகவே இருந்தன என்ற போதிலும் அவற்றின் ஸ்தூலமான செயலுருவம் வேறாக மாற்றம் அடைந்திருக்கிறது. ஓர் இரட்டை ஆட்சி குறித்து இதற்கு முன்னால் எவருமே நினைக்கவில்லை, அல்லது நினைத்திருக்கவும் முடியாது.” 2

                இதற்கு அடுத்து இரட்டை ஆட்சியின் தன்மையை விவரிக்கிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் அரசுக்குப் பக்கத்தில் தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் இருக்கிறது. இந்த சோவியத் பலவீனமாகவும், முளைப்பருவத்திலும் இருந்தாலும் உண்மையில் வளர்ந்து வருகிற ஓர் அரசாகும். இந்த அரசு கீழிருந்து மக்களின் நேரடியான முன்முயற்சியின் அடிப்படையில் அமைந்த புரட்சிகரமான சர்வாதிகாரமாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் நடாளுமன்றத்தைப் போன்றதல்ல. இது பாரிஸ் கம்யூன் வழியில் வந்தது என்றும், அதன் தன்மைகளைத் தொகுத்தும் தருகிறார்.

“இந்த ஆட்சி 1871 பாரிஸ் கம்யூனுடையது போன்ற அதே மாதிரியானது. இந்த மாதிரியின் அடிப்படை குணாம்சங்களாவன,

1) ஆட்சியின் மூலாதாரம் முன்னதாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதான ஒரு சட்டம் அல்ல, மாறாக கீழிருந்து அந்தந்த இடங்களில் மக்கள் மேற்கொண்டதன் நேரடி முன்முயற்சி, நடப்புத் தொடரைப் பயன்படுத்திக் கூறினால் நேரடிப் “பற்றுகை”,

2) மக்களிடமிருந்து விலகி நின்று மக்களுக்கு எதிராக இயக்கப்படும் அமைப்புகளான போலீசையும், ராணுவத்தையும் அகற்றி அதற்குப் பதில் மக்கள் அனைவரையும் நேரடி ஆயுதமேந்தச் செய்தல், இத்தகைய ஆட்சியின் கீழ் உள்ள அரசில் ஒழுங்கமைதியை ஆயுதமேந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் தாமாகவே ஆயுதமேந்திய மக்களும் கட்டிக் காப்பார்கள்,

3) பணித்துறையாளர், அதிகார வர்க்கத்தார் இதே போன்று மக்கள் தாமாகவே நடத்தும் நேரடி ஆட்சியால் மாற்றீடு செய்யப்படுவர் அல்லது குறைந்தபட்சம் தனிப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவர், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணித்துறையாளர்கள் ஆவது மட்டும் அல்ல, ஆனால் மக்களின் முதல் கோரிக்கையின் பேரில் திருப்பி அழைக்கப்படுவதற்கும் உட்பட்டோராவர், அவர்கள் சாமான்ய இயக்கிகள் நிலைக்குத் தாழ்த்தப்படுவர், உயர்ந்த முதலாளித்துவ விகிதத்தில் ஊதியம் பெறும் “தொழில்களை” வைத்திருக்கும் தனிச்சலுகை பெற்ற குழு என்பதிலிருந்து தாழ்த்தப்பட்டு, அவர்கள் “சேவைத் துறையின்” விசேஷ “பிரிவின்” ஊழியர்களாவர், அவர்களது ஊதியம் ஒரு திறம்படைத்த தொழிலாளியின் சாமான்ய சம்பளத்தைவிட அதிகமாக இருக்காது.”3

                சோவியத்தின் தனிமாதிரியான அரசை இவ்வாறு லெனின் விளக்கியிருக்கிறார். இடைக்கால அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை அவரே எழுப்பி அதற்கு பதிலளிக்கிறார்.

“இடைக்கால அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டுமா? என்ற கேள்வியை “அப்படியே” முன்வைக்கும் போது, நமது தோழர்களும் கூட ஏன் இத்தனை பல தவறுகளைச் செய்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிய வரும்.

இதற்கு எனது விடை:
1) அது வீழ்த்தப்பட வேண்டும், காரணம் அது ஒரு சிலராட்சி, முதலாளித்துவ அரசாங்கம், மக்கள் அரசாங்கமல்ல, மேலும் அதனால் சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரத்தை வழங்க முடியவில்லை.

2) அதை இந்தக் கணத்தில் வீழ்த்த முடியாது. ஏனெனில் அது, தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளுடன், முதன்மையாயும் பிரதான சோவியத்தான பெத்ரோகிராத் சோவியத்துடன் நேரடியாயும் நேரடியின்றியும், ஒரு சகஜமான மற்றும் மெய்யான உடன்பாட்டின் மூலம் அதிகாரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

3) பொதுவாக அதை சாதாரண வழியில் “வீழ்த்த” முடியாது, காரணம் அது இரண்டாவது அரசு – தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்- முதலாளித்துவ வர்க்கத்திற்கு அளிக்கும் “ஆதரவின்” மீது நிற்கிறது.” 4

                இறுதியாக லெனின் கூறுகிறார், குட்டி முதலாளித்துவ பிரமைகளுக்கு எதிராக, தேசியவெறிக்கு எதிராக, சொற்ஜாலம் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை சார்ந்து இருப்பதற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம். பாட்டாளி வர்க்க இயல்புடைய கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டு முறியடிப்போம். பாட்டாளி வர்க்கப் பணிகளுக்காக அணிகளை ஒன்றுதிரட்டி போராடுவோம். குட்டி முதலாளித்துவ மயக்கங்களில் இருப்பவர்களின் மனங்களில் தெளிவு ஏற்படுத்தப் போராடுவோம், முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருப்பவர்களிடம், நமது வர்க்க நலனுக்கு உகந்த அரசாக செயற்படாத இடைக்கால அரசை அப்பலப்படுத்துவோம். இவ்வரசு சமாதானம், உணவு அல்லது முழு சுதந்திரம் வழங்காததை மக்களுக்கு சுட்டிக்காட்டி விழிப்படையச் செய்வோம்.

செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்

ஏப்ரல் மாதத்தில் எழுதிய கட்டுரைகளில் செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள் அதிக விவரங்களைக் கொண்டுள்ளது. நிதானமாகவும், முழுமையாகவும் இதனைப் படிக்க வேண்டும்.

நமது போதனை செயலுக்கு வழிகாட்டியே அன்றி வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை வலியுறுத்தி லெனின் கூறுகிறார்

“இந்தச் சூத்திரங்கள் அதிகபட்சமாகச் சொன்னால் பொதுவான கடமைகளை வரையறுக்க மட்டுமே முடியும், இந்தப் பொதுவான கடமைகள் சரித்திர இயக்கப் போக்கின் குறிப்பிட்ட ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய ஸ்தூலமான பொருளாதார அரசியல் நிலைமைகளால் அவசியம் மாற்றப்படவே செய்யும்” 5

மார்க்சியப் பகுப்பாய்வைப் பற்றி முதலிலேயே லெனின் சொல்லிவிடுகிறார்.

“வர்க்கங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளையும் ஒவ்வொரு வரலாற்று நிலைமைக்கும் தனிச்சிறப்பாயுள்ள ஸ்தூலமான இயல்புகளையும் பற்றிக் கறாராகத் துல்லியமான எதார்த்த வழியில் சரிபார்க்கத்தக்க பகுப்பாய்வு செய்யுமாறு மார்க்சியம் கோருகிறது.6

இதன் அடிப்படையில், ருஷ்யாவின் ஸ்தூலாமான இந்த இரட்டை ஆட்சி நிலைபெற்றிருப்பதை மனதில் கொண்டே நமது செயற்பாட்டை வகுத்துக் கொள்ள  வேண்டும். பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பு பிரபுத்துவ நிலச்சுவான்கள் கையில் அரசு இருந்தது. புரட்சியின் போது வேறு வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கு மாறியுள்ளது. இந்த அளவுக்கு, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுள்ளது என்பதை கூறுகிறார். இந்தக் கூற்றை நிறுவுவதே ஏப்ரல் கட்டுரைகளின் பணியாகும்.

“1917ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு ருஷ்யாவின் அரசு அதிகாரம் பழைய வர்க்கத்தின் கையில், அதாவது நிக்கொலாய் ரொமானவ் தலைமை தாங்கிய பிரபுத்துவ நிலச்சுவான்தார்கள் கையில் இருந்தது.

இப்புரட்சிக்குப் பிறகு அதிகாரம் வேறு ஒரு வர்க்கத்தின், ஒரு புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் கையில் இருக்கிறது.

இரண்டு வகையிலும், சரியான விஞ்ஞான அர்த்தத்திலும், நடைமுறை அரசியல் அர்த்தத்திலும், அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்தின் கையிலிருந்து மற்றொன்றுக்கு வந்து சேருவது தான் புரட்சியின் முதற் பெரும் அடிப்படை அறிகுறி.

இந்த அளவுக்கு, முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ருஷ்யாவில் முடிந்து முற்றுப் பெற்றுவிட்டது.”7

லெனினது இந்த முடிவை ஏற்காமல், சில போல்ஷிவிக்குகள் ஆட்சேபித்தனர். இவர்கள் பழைய போக்கையே பிடித்துக் கொண்டிருக்கிறபடியால் இவர்களை பழைய போல்ஷிவிக்குகள் என்கிறார் லெனின். பாட்டாளி, விவசாயி ஆகிய வர்க்கங்களின் ஜனநாயக சர்வாதிகாரத்தின் மூலமாகத்தான் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிட முடியும் என்றுதானே இதுவரை சொல்லி வந்துள்ளோம். அது இன்னும் தொடங்கக்கூட இல்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதா? என்பதே இவர்களின் ஆட்சேபம்.

இதற்கு பதிலாக லெனின்:-
“போல்ஷிவிக்கு முழக்கங்களும் கருத்துகளும் பொதுப்படையாய் வரலாறு முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஸ்தூலமான விவகாரங்கள் வேறு விதமாக உருவாகியுள்ளன, அவை யாரும் எதிர்ப்பாத்திருக்கக் கூடிய அளவுக்கு மேலாகத் தனிமாதிரியாகவும், சிறப்பாகவும் பலவாறாகவும் உருவாகியுள்ளன.

இந்த உண்மையைப் புறக்கணிப்பது அல்லது பார்க்கத் தவறுவது என்பதற்கு பொருள், புதிய உயிர்ப்புள்ள எதார்த்தத்தின் பிரத்தியேக இயல்புகளைப் பயில்வதற்குப் பதிலாகப் பொருள் விளங்காமல் மனப்பாடம் செய்து கொண்ட சூத்திரத்தை திருப்பிச் சொல்லி, நம் கட்சியின் வரலாற்றில் ஏற்கெனவே ஒரு தடமைக்கு மேலாகவே எவ்வளவோ வருந்தத்தக்க பாத்திரம் வகித்த அந்தப் “பழைய போல்ஷிவிக்குகளைப்” பின்பற்றிச் செல்வதேயாகும்.” 8

                மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்றைய (பழைய) முடிவுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மாறிய சூழ்நிலைக்கு ஏற்ப செயற்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்திடவில்லை என்றால் உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துகளுக்கு பலியிடுவதாகிவிடும்.

“ஒரு மார்க்சியவாதி உண்மையான வாழ்க்கையை, எதார்த்தத்தின் உண்மையான நிலவரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள வேண்டும், நேற்றைய கோட்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது (not cling to a theory of yesterday). அது எல்லாக் கோட்பாடுகளையும் போல் அதிகபட்சமாக போனால் பிரதானமானதையும் பொதுவானதையும் மட்டுமே குறிக்கக் கூடியது, வாழ்க்கையை அதன் எல்லாச் சிக்கலோடும் முழுமையாய்க் காட்டும் நிலையை நெருங்குவதோடு நின்றுகொள்வது- என்கிற மறுக்க முடியாத உண்மையைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்துவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
..
பூர்ஷ்வாப் புரட்சியின் “நிறைவேற்றம்” என்கிற பிரச்சினையைப் பழைய வழியிலே அணுகுவதானது உயிர்ப்புள்ள மார்க்சியத்தை உயிரற்ற எழுத்துக்குப் பலியிடுவதாகும்.” 9

                ஒரு ஸ்தூலமான இடத்திற்கு கூறியதை மற்றொரு பொருந்தாத எதார்த்தத்திற்கு பொருத்தக் கூடாது. மார்க்சியத்தைப் பொறுத்தளவில் கோட்பாடு (theory) என்பது ஒரு ஸ்தூலமான நிலைமைக்கு எடுக்கப்பட்ட முடிவாகும். கோட்பாடு (theory) என்பது அந்தந்த காலத்திற்கு உரிய நடைமுறையை (practice) வகுத்தளிக்கிறது. சமூக வளர்ச்சியோடு ஏற்படும் மாற்றத்தோடு கோட்பாட்டையும் (theory) மாற்ற வேண்டும். புதிய நிலைமைக்கு பொருந்தாத பழையக் கோட்பாட்டை பிடித்துத் தொங்கக்கூடாது.

                எதார்த்தத்தை புரிந்து கொண்டு நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகமிக சுயமான புதிதான, முன்னெப்போதும் கண்டிராதபடி ஒரே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியான இடைக்கால அரசும், பட்டாளி - விவசாயிகளின் சோவியத்தும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. இத்தகைய இரட்டை ஆட்சி முறையை ருஷ்யா மட்டுமல்ல எந்த நாடும் கண்டதில்லை.

தொழிலாளர்களின் சோவியத்தின் மீது இடைக்கால அரசு தாக்குதல் தொடுக்கவில்லை, தொடுக்கவும் முடியாது. காரணம் அந்த அரசாங்கத்திடம் போலீஸ், ராணுவம் இல்லை. மக்களுக்கு மேல்நிலையில் நிற்கும் பலம் பொருந்திய அதிகார வர்க்கம் இல்லை. இந்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                ருஷ்யப் புரட்சியை உடனடியாக, சோஷலிசப் புரட்சியாக மாற்ற வேண்டும் என்று தான் திட்டமிடவில்லை என்றும், தமது ஏப்ரல் ஆய்வுரை ஏட்டில் “சோஷலிசத்தைப் புகுத்துவது” எமது உடனடிக் கடமை அல்ல, ஆனால் சமூக உற்பத்தியையும் பொருட்களின் விநியோகத்தையும் மட்டும் உடனடியாக தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகளின் கண்காணிப்புக்குள் கொண்டு வருவோம்” என்று கூறியதை லெனின் நினைவுபடுத்துகிறார். அங்கு கூறப்பட்ட உற்பத்தி விநியோகத்தை இந்தக் கட்டுரையில் சற்று விரிவாக்கி எழுதியுள்ளார்.

“அதிக அளவில் தானியம் உற்பத்தி செய்தல், அதைத் திறம்பட விநியோகித்தல், படைவீரர்களுக்குத் திறம்படக் கிடைக்கச் செய்தல் முதலான கடினமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளைக் காட்டிலும், போலீசைக் காட்டிலும் தொழிலாளர்கள், படைவீரர்கள், விவசாயிகள் சிறந்த முறையில் தீர்வு காண்பார்கள்- இந்த ஒன்றின் மீது மட்டுமே, முழுக்க முழுக்க இதன்மீதுதான் நான் “திட்டமிடுகிறேன்”” 10

                இதனைப் பாராளுமன்ற குடியரசைக் காட்டிலும் சோவித்துகள் விரைவாகவும் பயனுள்ள முறையிலும் செய்திட முடியும். இந்த முடிவு விருப்பம் சார்ந்த முடிவு கிடையாது. இந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி சூழ்நிலைமைகளே கட்டாயப்படுத்துகின்றன. “பஞ்சம், பொருளாதாரச் சீர்குலைவு, நெருங்கிவரும் தகர்வு, போரின் பயங்கர விளைவுகள், போரால் மனிதகுலத்துக்கு ஏற்படும் பயங்கர கொடுமைகள்,” இவைகளே இன்றைய புரட்சியை, சோஷலிசப் புரட்சியை நோக்கி இட்டுச் செல்வதாக லெனின் இக் கட்டுரையிரையில் வலியுறுத்துகிறார்.


நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் (படைப்பு)

நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் என்ற இக்கட்டுரை ஏப்ரலில் நடக்க இருக்கும் ருஷ்ய சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (போல்ஷிவிக்) ஏழாவது அகில ருஷ்ய மாநாட்டிற்கு எழுதிய நகல் அறிக்கையாகும்.

நிலப்பிரபுக்களின் எதேச்சதிகார ஜார் அரசு நீக்கப்பட்டு, முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவப் போக்குடைய நிலவுடைமையாளர்களின் கைக்கு அரசு மாறிய வகையில், ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை அடைந்து விட்டது என்று இந்த அறிக்கையின் முதல் பக்கத்திலேயே லெனின் கூறிவிடுகிறார்.

“ருஷ்யாவில் அரசு அதிகாரம் புதிய வர்க்கத்தின், அதாவது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் முதலாளித்துவப் போக்குள்ள நிலவுடைமையாளர் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த அளவுக்கு ருஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையடைந்துவிட்டது” 11

                ஆனால் இந்த புதிய முதலாளித்துவ ஆட்சி, முடியாட்சிவாதிகளுடன் ஒரு கூட்டை நிறுவியுள்ளது. புரட்சிகரத் தொடர்களின் திரையின் பின்னே இந்த அரசாங்கம் பழைய ஆட்சியின் சார்பாளர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளது. புதிய அரசின் சீர்திருத்தங்கள் மிகவும் குறைவானதாகவே இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை அமைப்பதற்கான நாளைக்கூட முடிவு செய்யாமல் அறிவிப்போடு நிற்கிறது. அதனால் இந்த அரசு பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவைப் பெறத் தகுதியானதல்ல என்பதை நடைபெற்றுள்ள புரட்சியின் வர்க்கத் தன்மை என்ற உட்தலைப்பில் லெனின்  விவரிக்கிறார்.

                புதிய அரசின் அயல்துறைக் கொள்கையும் இதனடிப்படையில் தான் அமைந்துள்ளது. அதனால்தான் ஏகாதிபத்தியப் போரை தொடர்ந்து நடத்துவதாகவே உள்ளது. இந்த அரசின் மீது மக்கள் சிறிதும் நம்பிக்கை வைப்பதற்கு அருகதையற்றதாகிறது.

                அடுத்து, இரட்டை ஆட்சியின் பிரத்தியேக இயல்பும் அதன் வர்க்க முக்கியத்துவமும் பற்றி பேசுகிறார். இன்றைய புரட்சி ருஷ்யாவில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலாளித்துவ இடைக்கால அரசு மற்றொன்று தொழிலாளர் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அதற்கு இணையான சோவியத் வடிவிலான ஒரு அரசு. இந்த அரசிற்கு அதிகார அமைப்புகள் எதுவும் இல்லை, ஆனால் நேரடியான மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள, ஆயுதம் ஏந்திய தொழிலாளர் படைகளையும் கொண்டுள்ளது.

                இப்படி இரட்டை வர்க்கத்தின் ஆட்சி பிணைப்புற்று நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமேயில்லை.  இவற்றில் ஒன்று மறைந்தாக வேண்டும். முதலாளித்துவ இடைக்கால அரசு மக்களின் சோவியத்தை பலவீனப்படுத்த தன்னாலான அனைத்தையும் செய்துவருகிறது. இந்த மாறிவரும் கட்டத்தைப் பற்றி கூறுகிறார் லெனின்:-
“சாதாரண முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சிக்கு அப்பால் சென்று ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயி மக்களின் சுத்தமான சர்வாதிகாரத்தை இன்னும் எட்டியிராத பொழுதில் புரட்சியின் வளர்ச்சியில் ஒரு மாறிவரும் கட்டமாய் இருக்கிறது இந்த இரட்டை ஆட்சி”12

                இந்த அடிப்படையில்தான், இந்தப் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றப்படியான செயற்தந்திரத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த செயற்தந்திரம் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

“நமது பணி விமர்சனப் பணியாக இருத்தல் வேண்டும். குட்டிமுதலாளித்துவ சோஷலிஸ்டு-புரட்சியாளரின் மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளின் தவறுகளை விளக்குவதாக இருத்தல் வேண்டும். உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க, கம்யூனிஸ்டுக் கட்சி சக்திகளைத் தயாரித்து சீராக இணைப்பதாக இருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் “பொதுவான” குட்டிமுதலாளித்துவ போதை மயக்கத்தைப் போக்கிக் குணப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

இது பிரச்சாரப் பணி “மட்டுமே” என்று தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது மிகப்பெரும் நடைமுறைப் புரட்சிகரப் பணியாகும். ஏனெனில் நிலைத்து நின்றுவிட்ட புரட்சி முன்னேற வழியில்லை.” 13

                புரட்சி தொடராமல் போனதற்கான முட்டுக்கட்டை வெளிக்காரணங்களால் ஏற்பட்டதல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் வன்முறையும் காரணமல்ல, இவர்களின் மீதான மக்களின் நியாமற்ற நம்பிக்கையே காரணமாகும் என்கிறார் லெனின். அவர்களின் வர்க்கச் சார்பை புரிந்து இந்த போக்கில் இருந்து விடுபட வேண்டும். குட்டிமுதலாளித்துவத் தலைவர்கள் இடைக்கால அரசை நம்பும்படி போதிக்கின்றனர். முதலாளிகளை நம்பக் கூடாது என்று பாட்டாளிகளுக்கு சமூக பொருளாதாரக் காரணங்களைக் கொண்டு விளக்க வேண்டும்.

“.. நாளுக்கு நாள் நம்பிக்கையுள்ள நியாயமின்மையும், நியாயமில்லாத நம்பிக்கையும் விஷேசமாயும் பாட்டாளிகள் மற்றும் ஏழ்மை மிக்க விவசாயிகளிடையே வீழ்ச்சி அடையும். முதலாளிகளை நம்பக் கூடாது என்று அவர்களுக்கு அனுபவம் (அவர்களது சமூக, பொருளாதார நிலை) போதிக்கிறது.”14

                ஏகாதிபத்திய போரிலிருந்து ருஷ்யாவை காப்பதற்காக, முதலாளித்துவ இடைக்கால அரசை காப்பது என்கிற “பாதுகாப்புவாதம்” பற்றி லெனின் எழுதுகிறார்.

                பாதுகாப்பு வாதத்தில் நம்பிக்கையுள்ள அணியினர், சாதாரண மனிதனைப் போன்று எளிய முறையில் இதனை நோக்குகின்றனர். பிரதேசக் கைப்பற்றல்களை விரும்பாதவன், ஆனால் ஜெர்மனி நம்மை தாக்கும் போது, நாட்டைக் காப்பது என்பது ஏகாதிபத்தியத்தின் நலன்களின் அடிப்படையிலானது கிடையாது என்கின்றனர். இந்த குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டம், புரட்சியின் மேற்பட்ட முன்னேற்றத்துக்கும் இறுதி வெற்றிக்கும் படுமோசமாக விரோதமானதாகும்.

“புரட்சிகரப் பாதுகாப்புவாதம் என்பது ஒரு புறத்தில் முதலாளித்துவ வர்க்கத்தால் மக்கள்திரள் ஏமாற்றப்படுவதன் விளைவாகும், விவசாயி மக்கள் மற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினரிடம் நிலவும் நியாயமில்லாத நம்பிக்கையின் விளைவாகும். மறுபுறத்தில் இது சிறு உடைமையாளரின் நலன்கள் மற்றும் கருத்து நிலையின் ஒரு வெளியீடாகும்.” 15

                காலகாலமாக இருந்து வருகிற தப்பெண்ணங்களின் தொடர்ச்சியே பெரும்பாலும் இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாகிறது. அதனால் இந்த நம்பிக்கைகளின் தவறை மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்குரிய திறமைகள் போல்ஷிவிக்குகளுக்குத் தேவைப்படுகிறது. தவறுகள் நேராமல் இதனை உடனடியாகச் செய்வது எளிதானதல்ல என்பதையும் லெனின் சுட்டுகிறார்.

முதலாளித்துவ வளர்ச்சியில் ஏகாதிபத்தியக் கட்டத்தின் உள்முரண்பாட்டால் போர் தோன்றியது. இது ஏகாதிபத்தியவாதிகளின் சித்தத்தில் தோன்றியது கிடையாது. மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கையில் எடுத்துக் கொள்ளாமல், போரில் இருந்து விடுபட முடியாது.

“கொடுங்கொள்ளைக்கார முதலாளிகளினுடைய நலன்களுக்காக மட்டுமே போர் நடத்தப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் செல்வம் குவிப்போர் அவர்கள் மாத்திரமே என்ற போதிலும் போர் அவர்களின் தீய சித்தத்தின் விளைவு அல்ல. இந்தப் போர் உலக முதலாளித்துவத்தின் அரை நூற்றாண்டுக் கால வளர்ச்சி மற்றும் அதன் லட்சக்கணக்கான இழைகளினுடைய தொடர்புகளின் விளைவாகும். மூலதனத்தின் ஆட்சி அதிகாரத்தை வீழ்த்தாமல், அரசு அதிகாரத்தை இன்னொரு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்துக்கு மாற்றி அளிக்காமல் ஏகாதிபத்தியப் போரிலிருந்து வெளியேறி ஒரு ஜனநாயகமான பலவந்தமில்லாத சமாதானத்தை அடைவது சாத்தியமல்ல.” 16

                ருஷ்ய புரட்சியின் இக் கட்டத்தில் காணப்படும் இந்த நிலைமைகளை அறிந்து கொள்ளாமல், ருஷ்யாவின் சோஷலிசப் புரட்சியைப் பற்றி லெனின் குறிப்பிடுகின்றவைகளை புரிந்து கொள்ளமுடியாது. அனைத்து நிலத்தையும் தேசவுடைமையாக்க வேண்டும் என்பது போன்ற மக்களின் சோஷலிசக் கோரிக்கையை, இரட்டை ஆட்சியில் ஒன்றான முதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ இடைக்கால அரசால் நிறைவேற்ற முடியாது.

இரட்டை ஆட்சியில் ஒருபக்கம் சோவியத்தை வைத்துக் கொண்டு, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதில் மார்க்சிய வளர்ச்சி பற்றிய வறட்டுக் கண்ணோட்டத்தின் படி முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிக்குப் பிறகு சோஷலிசப் புரட்சி என்று பேசிக் கொண்டிருப்பது, ருஷ்ய எதார்த்த சூழலுக்கு எதிரான போக்காகும்.  பழைய தப்பெண்ணங்களில் வீழ்ந்துகிடக்கும் பிளாகானவ், காவுத்ஸ்கி போன்ற போலி மார்க்சியவாதிகளிடம் இருந்து விடுபட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இது பற்றி அடுத்த உட்தலைபான நமது புரட்சியிலிருந்து ஒரு புது மாதிரியான அரசு தோற்றமளிக்கிறது என்பதில் விவரிக்கிறார்.

“பொருளாதார வீழ்ச்சியும் போரினால் ஏற்பட்டதான நெருக்கடியும் எந்தளவு அதிக ஆழமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆக முழுநிறைவான அரசியல் வடிவத்தின் தேவையும் அதிக அவசரமானதாகி விட்டது. இது போர் மூலம் மனிதகுலத்தின் மீது சுமத்தப்பட்ட பயங்கரமான காயங்களை ஆற்றுவதற்கு நிச்சயம் துணை செய்யும். ருஷ்ய மக்களின் ஒழுங்கமைப்பு அனுபவம் எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உறுதியுடன் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் “நல்ல நிலையிலுள்ள” அதிகார வர்க்கத்தார் மூலம் மட்டும் அன்றி, மக்கள் தமக்குத் தாமே ஒழுங்கமைப்பை வளர்த்துக் கொள்ளுவதை செயலூக்கத்துடன் துவக்க வேண்டும்.

போலி மார்க்சியத்தின், பிளாகானவ் காவுத்ஸ்கி வகையறாக்களால் புரட்டப்பட்டதான மார்க்சியத்தின் பழைய தப்பெண்ணங்களை எவ்வளவு விரைவாக நாம் விட்டொழிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகச் செயலூக்கத்துடன் மக்கள் எல்லா இடங்களிலும் உடனடியாகவும் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிதிகள் சோவியத்துகளை ஒழுங்கமைப்பதற்கு நாம் உதவி புரிய ஏற்பாடு செய்கிறோமோ- அந்த சோவியத்துகள் வாழ்க்கை முழுவதையும் தமதுகண்காணிப்புக்குள் மேற்கொள்ளலாம்- லுவோவ் வகையறாக்கள் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவதற்கு எந்தளவு அதிகத் தாமதம் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு மக்கள் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிகளின் சோவியத்துகளின் குடியரசுக்குச் சாதகமாக முடிவு எடுப்பது எளிதாகும்.
..
நாம் நம்மையே ஒழுங்கமைத்துக் கொண்டு, நமது பிரசாரத்தைத் திறம்படச் செய்வோமானால், பாட்டாளிகள்  மட்டுமின்றி விவசாயி மக்களில் பத்தில் ஒன்பது பங்கினர் போலீஸ் மீண்டும் நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பார்கள். நீக்கம் செய்ய முடியாத தனியுரிமையுள்ள அதிகாரவர்க்கத்தையும், மக்களிடமிருந்து விலகி நிற்கும் ராணுவத்தையும் எதிர்ப்பார்கள். புதிய மாதிரியான அரசை ஆதரித்து நிற்பது இவற்றை குறித்தே.” 17


                இதற்கு அடுத்து, நிலம் மற்றும் தேசிய வேலைத்திட்டத்தைப் பற்றி பேசுகிறார். பாட்டாளி வர்க்கக் கட்சி உடனடியாக விவசாயிகளின் நலன்களுக்கு உகந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். எல்லா நிலமும் தேசவுடைமையாக்கப்பட வேண்டும், அதாவது நாட்டில் உள்ள நிலம் அனைத்தும் மைய அரசு அதிகாரத்தின் உடைமையாக்கப்பட வேண்டும்.

                தேசியத் திட்டத்தில், தேசிய இனப்பிரச்சினையைப் பற்றி பேசுகிறார். ஜாராட்சியால் ஒடுக்கப்பட்ட, அரசின் எல்லைக்குள் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ள அனைத்து தேசங்களுக்கும் மக்களினங்களுக்கும் பிரிந்து போவதற்கான முழுசுதந்திரத்தை அறிவித்து அதனை உடனடியாக நிறைவேற்றுவதையும் ஆதரிக்க வேண்டும். இதற்கான காரணத்தை லெனின் கூறுகிறார்:-
“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவுப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புக்களே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையானதே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.
..
முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம், ஆக விரிவான ஸ்தல (மற்றும் தேசிய) சுயாட்சி, தேசியச் சிறுபான்மையினர் உரிமைகளுக்கு விரிவான உத்தரவாதம்- இதுவே புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம்.” 18

                பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சியின் வேலைத்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை சுருக்கமாகவும் தெளிவாகவும் லெனின் முன்வைத்துள்ளார். பிரிதலை மறுக்கவும் இல்லை அதே நேரத்தில் இந்தப் பிரிதல் பின்னாளைய இணைவுக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்தப்படுகிறது. அதனால் இங்கே குட்டி முதலாளித்துவ கோட்பாடான “தேசிய-கலாசார தன்னாட்சி”யை ஏற்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சிறிய இனங்கள் அப்படியே என்றென்றும் இருந்தாக வேண்டும் என்பது சர்வதேசியவாதமல்ல.

                லெனின் ருஷ்யாவில் சோஷலிசத்தை உடனடியாகப் புகுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் கூறுகிறார்.

“சோஷலிஸ்டுப் புரட்சியின் அவசியத்தை மக்கள் தொகையின் மிகப் பெரிய பெரும்பான்மை தெளிவாக உணராத காலம் வரையில், ஒரு சிறு விவசாயிகளின் நாட்டில் சோஷலிசத்தைப் “புகுத்தும்” நோக்கத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி எந்தவொரு சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழும் முன்வைக்கக் கூடாது.

ஆனால், “மார்க்சியத்திற்கு நெருங்கியதான” கவர்ச்சித் தொடர்களின் பின்னே ஒளிந்து நிற்கும் முதலாளித்துவக் குயுக்திவாதிகள் மட்டுமே, இந்த மெய்விவரத்தில் இருந்து, உடனடியாக புரட்சிகர நடவடிக்கைகளை ஒத்திப்போடுவதற்கான ஒரு கொள்கையை நியாயப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்கான உரிய காலம் ஏற்கெனவே கனிந்துவிட்டது. இவை பல முதலாளித்துவ நாடுகளால் போரின் தறுவாயில் ஏற்கெனவே அடிக்கடி கையாளப்பட்டன. வர இருக்கும் முழுமையான பொருளாதாரக் குலைவு மற்றும் பஞ்சத்தை எதிர்த்துப் போராட இவை முற்றிலும் இன்றியமையாதவை.

நிலம், அனைத்து வங்கிகள் மற்றும் முதலாளித்துவ சிண்டிகேட்டுகளை சேதவுடைமையாக்குதல் அல்லது குறைந்த பட்சம் தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கட்டுப்பாட்டை உடனடியாக அவற்றின் மீது நிலைநாட்டுதல் போன்ற நடவடிக்கைகள் (எந்த வழியிலும் சோஷலிசத்தைப் “புகுத்துவது” என்று அமையாத நடவடிக்கைகள்) முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும். எப்பொழுது சாத்தியமோ அப்பொழுது இவை புரட்சிகரமான வழியில் செய்து முடிக்கப்பட வேண்டும்” 19

                அடுத்து இரண்டாம் அகிலத்தின் நிலையினை விமர்சிக்கிறார். முதலாளிகளுக்கு இடையேயான ஒர் போர் எற்படும்போது அதனை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பது அகிலத்தின் முடிவு. ஏகாதிபத்திய உலகப் போர் தொடங்கிய போது மேலே எடுக்கப்பட்ட கருத்தோடு சோஷலிஸ்டுகள் முரண்பட்டனர். அப்போது மூன்றுவிதமான போக்குகள் தோன்றியது. முதல் போக்கு, ஏகாதிபத்தியப் போரை எதிர்க்காமல் தாயகத்தைப் பாதுகாப்போம் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் விளைவித்து முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் போய்ச் சேர்ந்த தேசிய வெறியர்கள். சொல்லில் சோஷலிசம் செயலில் தேசியவெறி.

                இரண்டாவது, “நடுநிலைவாதிகள்” இவர்கள் சமூக தேசிய வெறியர்களுக்கும் உண்மையான கம்யூனிச சர்வதேசியவாதிகளுக்கும் இடையே ஊசலாடினர். சொல்லில் சர்வதேசியம் செயலில் கோழைத்தனமான சந்தர்ப்பவாதம்.

மூன்றாவது, உண்மையான சர்வதேசியவாதிகள். நமது முதன்மையான எதிரி உள்நாட்டில் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்பதை ஏற்றவர்கள்.

அடுத்து, மூன்றாவது அகிலத்தை நிறுவ வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார். இரண்டாம் அகிலத்தினுடைய தகர்வின் காரணமானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் கொண்டிராத புதிய மூன்றாம் அகிலத்தை அமைக்க வேண்டும். செயலிலும் சர்வதேசிய வாதிகளாக செயற்படுகிற ருஷ்ய போல்ஷிவிக்குகளுக்கே இத்தகைய பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“நாம்தான் இக்கணமே எவ்விதத் தயக்கமும் இன்றி ஒரு புதிய புரட்சிகரமான பாட்டாளி வர்க்க அகிலத்தை நிறுவ வேண்டும். அதைவிடவும் இந்தப் புதிய அகிலம் ஏற்கெனவே நிலைநாட்டப்பட்டு விட்டது, இயங்கி வருகிறது என்பதைப் பகிரங்கமாக அங்கீகரிப்பதற்கு நாம் அஞ்சக்கூடாது.”20

                கட்சியின் பெயரை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொள்வது பற்றி இக்கட்டுரையின் இறுதியில் லெனின் பேசுகிறார். சமூக ஜனநாயகம் என்பது விஞ்ஞான வழியில் பிழையாகாது. ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவம். மார்க்சியவாதிகள் ஒவ்வொரு வகையான அரசையும் எதிர்ப்பவர்களே. ஆனால் இன்றைய நிலையில் அதாவது சோவியத்துக்கு எதிராக செயற்படும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் சார்பாளர்களையும் இவர்கள் முற்ற முழுக்க எதிர்த்தாக வேண்டும். அதனால் ருஷ்யாவிற்கு ஆயுதமேந்திய படைகள் தேவை, ஆனால் இந்த வழக்கமான அரசு அச்சொல்லின் சரியான பொருளில் அரசு அல்ல. ஏன் என்றால் இந்த அரசில் ஆயுதமேந்திய படைகள் மக்கள் திரளினரிடையே தாமே தோன்றியதாகும். மக்களுக்கு மேல் அமர்த்தப்பட்ட எந்த அதிகார சக்தியும் இதில் கிடையாது. இது முதலாளித்துவ மாதிரியான ஜனநாயகமாக அல்லாது புதியதாய் பிறந்து வரும் புதிய ஜனநாயகமாகும். இதன் தொடர்ச்சியாய், வளர்ச்சியாய் எல்லா விதமான அரசும் உலர்ந்து உதிர்வதன் முன்னடையாளமான அரசாகும்.

பயன்படுத்திய நூல்கள்

1.இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் – தேர்வு நூல்கள் 5 பக்கம் 31
2.இரட்டை ஆட்சி - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 39
3. மேற்கண்ட நூல் -பக்கம்- 40-41
4. மேற்கண்ட நூல் - 5 பக்கம்- 42
5.6.7.8.9&10.செயற்தந்திரம் பற்றிய கடிதங்கள்
11.நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் - தேர்வு நூல்கள் 5 - பக்கம்- 45
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 51-52
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 54-55
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 56
15. மேற்கண்ட நூல் - பக்கம்- 57
16. மேற்கண்ட நூல் - பக்கம்- 61
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 64-65-66
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 70-71
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 72-73
20. மேற்கண்ட நூல் -பக்கம்- 85