Friday, 11 September 2020

என்ன செய்ய வேண்டும்? – லெனின் (இரண்டாம் அத்தியாயம்)


(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின்  எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் இரண்டாம் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.

 

வகுப்பின் காணொளியை கீழே காணும் இணைப்பில் காணலாம்

https://www.youtube.com/watch?v=Iy9CSs0ZaFc

 

அனைத்தையும் பார்க்க:-

https://www.youtube.com/channel/UCN4ahSJzeZcpsRtuh0myX5g)              

 


இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் இரண்டாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன், போன வகுப்பில் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம். 

போன வகுப்பின் தலைப்பு, “1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”. 

புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மாறாமல், பழைய கோட்பாட்டைப் பிடித்துக் கொண்டிருப்பதையே வறட்டுச் சூத்திரவாதம் என்று கூறுவோம், ஆனால் லெனின், ஒரு புதிய போக்கினரை இங்கே குறிப்பிடுகிறார். 

முதலாளித்துவம் வளமையாக இருக்கின்ற காலத்தைக் கணக்கில் கொண்டு, இனிமேல் முதலாளித்துவம் மறையாது, அதனால், பழைய பாணியிலான மார்க்சியம் மறைந்துவிட்டது. அதனால் பழைய மார்க்சியத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பது வறட்டுச் சூத்திரவாதம்.

பழைய மார்க்சியத்தை விமர்சிப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும், என்பதே இந்தப் புதிய போக்கினரின் கோரிக்கை. 

உண்மையில், இந்தப் புதிய போக்கினர் விமர்சனம் செய்ய விரும்புவது, மார்க்சிய அடிப்படைகளையே, கம்யூனிசத்தில் உள்ள விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரத் தன்மையையும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். இத்தகைய புதிய போக்கை லெனின், புரட்சிகரப் போக்குகளை மறுக்குகிற சீர்திருத்தவாதம் என்று விமர்சித்துள்ளார். 

இது தான் இந்த முதல் அத்தியாயத்தன் சாரம். 

இன்றைக்கு இரண்டாம் அத்தியாயம், 2) “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” 

இந்த அத்தியாயம் சுமார் 40 பக்களைக் கொண்டிருக்கிறது. இதனை வரிக்குவரியாக விளக்காமல், இதன் சாரத்தை மட்டும் சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

இந்த அத்தியாயத்தில் மூன்று கலைச்சொற்கள் இருக்கிறது:- 

மக்களின் தன்னியல்பு,

தன்னியல்பு வழிபாடு,

கம்யூனிஸ்டுகளின் உணர்வு, 

புத்தகத்தில் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்று தான் இருக்கும், அதனைக் கம்யூனிஸ்டுகளின் உணர்வு என்று புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே லெனின் ஒன்றை குறிப்பிடுகிறார். அதனை முதலில் படித்துப் பார்ப்போம். 

“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை” 

தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி. 

இந்தப் பணி தான் பலவீனமாக இருப்பதாக, லெனின் அன்றைய ருஷ்ய நிலைமையை முன்வைத்துக் கூறியுள்ளார். 

இங்கே தலைவர்கள் என்று பொதுப்படக் கூறப்பட்டிருந்தாலும், கட்சி தலைமையில் உள்ளவர்களை மட்டும் குறிப்பிடவில்லை. வெகுஜன அமைப்பில் உள்ள தலைவர்களையும் சேர்த்துத் தான் கூறப்பட்டுள்ளது. 

இதனைப் பொதுவாகக் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாக எடுத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுவதானால், கம்யூனிஸ்டுகளும் தலைவர்களே. அதனால் கம்யூனிஸ்டுகளின் குறைபாடாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். 

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற, கம்யூனிஸ்டுகளின் விழிப்புணர்வைப் பற்றித் தான் இந்த நூல் பேசுகிறது. 

அதனால், இந்த நூலை கம்யூனிஸ்டுகள் அனைவரும் நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகுப்பு, இந்த நூலைப் பற்றிய அறிமுகமே… சாரமே.. அதனால் இந்த அறிமுகத்தை நன்றாகப் புரிந்து கொண்டு “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை முழுமையாகப் படித்து அறிய வேண்டும். 

கம்யூனிஸ்டுகள், தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தொழிலாளர்களின் தன்னியல்புக்கும், கம்யூனிஸ்டுகளின் உணர்வுநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

தன்னியல்பான எழுச்சியின் தொடக்கத்தைப் பற்றி லெனின் கூறுகிறார். 

தொழிலாளர்களின் தன்னியல்பான போராட்டம் என்றால், முதலாவதாக இயந்திரங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடக்ககாலப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். நவீன இயந்திரங்கள் முதலில் புகுத்திய போது, தொழிலாளர்களில் பலர் வேலைகளை இழந்தனர். இந்த நிலைமைக்குக் காரணம் இயந்திரம் என்று நினைத்து அவர்கள் உடைத்தனர். இது தான் பாட்டாளிகளின் முதலாவதான தன்னியல்பான போராட்டம். 

அடுத்தப் படியாக வேலைநிறுத்தத்தைத் தன்னியல்பான போராட்டம் என்று சொல்லலாம். அதாவது கூலி உயர்வுக்கான போராட்டம் போன்றவை ஒரு தன்னியல்பான போராட்டமே. 

இந்தத் தன்னியல்புப் போராட்டம் கரு வடிவிலான வர்க்கப் போராட்டமே. கருவடிவிலான வர்க்கப் போராட்டம், சமூகத்தை மாற்றுகிற முழுமையான வர்க்கப் போராட்டமாக மாற வேண்டும் என்றால், தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். 

இந்த இயந்திரத்தை உடைத்தல், வேலை நிறுத்தம் போன்ற போராட்டம் ஒரு வகையான அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியலாக இல்லாது, முதலாளித்துவ அமைப்புக்குள் போராடுகிற சீர்திருத்த வகைப்பட்ட போராட்ட அரசியலாகவே இருக்கிறது. 

இத்தகைய சீர்திருத்த அரசியல் போராட்டம், தொழிலாளர்களின் அன்றைய மேம்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. அந்த மேம்பாடு தொழிலாளர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் போக்காது. 

ஏன் என்றால் முதலாளி, தொழிலாளிகளுக்கு ஒரு வகையில் கொடுத்ததை, மற்றொரு வகையில் பறித்துக் கொள்ளவார். 

கூலி உயர்வுக்கான போராட்டம், “கூலை முறை”யை ஒழிப்பதற்கான போராட்டமாக மாறாதவரை, தொழிலாளர்களுக்கு அவ்வப்போது கிடைக்கிற மேம்பாடு என்பது, நிரந்திரத் தீர்வாக இருக்காது. 

பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதைத் தொழிலாளர்களும் காணாமல் இருக்க மாட்டார்கள். 

இந்தக் கூலிக்கான போராட்டத்தைக் கூலி உயர்வுக்கானப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்கிற உணர்வு கண்டிப்பாகத் தன்னியல்பில் கிடையாது. இதற்கு, மார்க்சியப் புரிதல் அவசியமாகிறது. 

மார்க்சியப் புரிதல் உள்ள கம்யுனிஸ்டுகளின் கடமை:- 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தின் எல்லைகளை, தொழிலாளர்களுக்குப் புரியவைத்து, கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டமாக உயர்த்த வேண்டும் என்பதை விளக்க வேண்டும். 

இந்தக் கடமையைக் கம்யூனிஸ்டுகள் உணரவேண்டும் என்பதையே இந்த அத்தியாயமும் இந்த நூலும் நமக்குச் சொல்லித் தருகிறது. 

இதுரைவரைப் பார்த்ததைத் தொகுப்போம்:- 

தொழிலாளர்களிடம் தன்னியல்பான போராட்டத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியும். 

தொழிலாளர்கள் தமது சொந்த முயற்சியால், தொழிற்சங்க உணர்வை மட்டுமே பெறமுடியும். 

அதாவது தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்ற, அரசை கட்டாயப்படுத்துவது. 

இந்தத் தன்னியல்பான போராட்டத்தைத் தாண்டி தொழிலாளர்கள் கம்யூனிச உணர்வு பெற வேண்டும். இந்த உணர்வை ஊட்டுவதற்கு வெளியில் இருந்து தான் அறிவு சக்தி வரவேண்டும் 

அந்த வெளி சக்தி தான் கம்யூனிஸ்டுகள். 

இந்த நூல் எழுதுகிற காலத்தில், அத்தகையா அறிவு சக்தி, வெளியில் இருந்து வரவேண்டிய நிலை இருந்தது. இன்று தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் skilled labour-ராக, அதாவது கல்விபெற்ற தொழில்நுட்ப தொழிலாளர்களாக வளர்ந்துள்ளனர். 

அதனால் இன்றைய நிலையில், பாட்டாளி வர்க்கத்திற்குத் தேவையான அறிவுத் தலைமை, தொழிலாளர் மத்தியிலும், தொழிலார் குடும்பங்களில் இருந்தும் வருவதற்கு வாய்ப்பு பெருகி உள்ளது. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். 

கம்யூனிசம் என்பது, வெறும் அரசியல் செயற்பாடு மட்டும் கிடையாது. 

ஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் அரசியல் செயற்பாடு, விஞ்ஞானத் தன்மை கொண்டது. 

விஞ்ஞானத் தன்மை பெற வேண்டும் என்றால், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றிலும் திறம்பெற வேண்டியுள்ளது. 

விஞ்ஞானத் தன்மையான அரசியலாக இருக்க வேண்டும் என்றால், தத்துவத்திலும் பொருளாதாரத்திலும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

இத்தகைய பயிற்சிக்கான முயற்சியே இந்த “மார்க்சியர் மேடை” போன்ற படிப்புவட்டம் செயற்படுகிறது. 

லெனின் இந்த நூலில் தன்னியல்பை மறுக்கவில்லை, இந்தத் தன்னியல்போடு நின்று போகாமல், கம்யூனிச உணர்வாக மாற வேண்டும் என்று தான் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் லெனின், தன்னியல்பு வழிபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். இதை நன்றாகக் கவனித்தில் கொள்ள வேண்டும். 

லெனின், தன்னியல்பான போராட்டத்தை, கருவடிவிலான வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுவதனால், தன்னியல்பை லெனின் மறுத்துள்ளார் என்று தவறாகச் சிலர் புரிந்து கொண்டுள்ளனர். அது தவறு. 

கருவடிவிலான வர்க்கப் போராட்டத்தை, முழுமையான வர்க்கப் போராட்டமாக மாறா வேண்டும். லெனின் மறுப்பது தன்னியல்பு வழிபடுவதை. அதாவது தன்னியல்பான போராட்டத்தோடு நின்றுவிடுவதையே மறுத்துள்ளார். 

தொழிற்சங்கப் போராட்டமே தன்னியல்பான போராட்டம் தான். இதனைக் கடந்து கம்யூனிச உணர்வுபெற வேண்டும். இதற்குத் தன்னியல்பை வழிபடுகிற போக்குத் தடையாக இருக்கிறது. 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு உதவிடாது, அதனால், பொருளாதாரப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டமாக, முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும். 

இன்று நமது நாட்டில், தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது கேள்வக்குறியாகவே இருக்கிறது. 

இதனை இங்கே விவாதம் வேண்டாம். விவாதிக்க வேண்டிய ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொள்வோம், சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்வோம். இங்கே மார்க்சியக் கல்வி பெறுவதோடு நிறுத்திக் கொள்வோம். 

தன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன் எதிர்க்கிறார்? அதை அவரே விளக்குகிறார். 

தொழிலாளி வர்க்க இயத்தின் தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழிலாளிகள் மீது, முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின். 

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும். 

இந்த ஆபத்தை உணராதவரை தொழிலாளர்களுக்கு முழுமையான விடுதலைகிட்டாது. 

உலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம். இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை. 

கம்யூனிஸ்டுகளின் பணியாக லெனின் கோடிட்டுக் கூறுவதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த வகுப்பை முடித்துக் கொள்வோம். 

கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை எதிர்த்துப் போராடுவதேயாகும். முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும் 

இந்த அத்தியாயம் நமக்கு என்ன சொல்கிறது என்றால், தொழிலார்களின் போராட்டம் இயல்பாகத் தன்னியல்போடு நின்றுவிடும். அது அதிகபட்சமாகச் சங்கமாக இணைந்து, முதலாளியை எதிர்த்துக் கொண்டிருப்பதோடு நின்றுவிடும். இந்தப் போக்கில் இருந்து மாறாது இருப்பது, தன்னியல்பை வழிபடுவதாகும். 

அதனால், பொருளாதாரப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டம் என்பதோடு நின்றிவிடாமல், வர்க்கப் போராட்டமாக, முதலாளியை எதிர்க்கின்ற போராட்டம் முதலாளித்துவ உற்பத்தி முறையை எதிர்க்கின்ற போரட்டமாக, சமூக மாற்றத்திற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். 

தொழிற்சங்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர வேண்டும், அந்தப் போராட்டம், பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல், அரசியல் போராட்டமாக, சமூக விடுதலைக்கான போராட்டமாக மாற வேண்டும். 

இப்படிக் கற்பிக்கிற இந்த அத்தியாயத்தை, நாம் சரியாகப் புரிந்து, சிறந்த கம்யூனிஸ்ட்டாகத் திகழ வேண்டும். 

இந்த அத்தியாத்தைப் படிக்கும் போது நிச்சயமாக நமது நாட்டு நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. 1902ல் லெனின் ருஷ்ய நிலைமையாக என்ன சொல்கிறாரோ, அதைவிட மோசமாகத் தான். நமது நாட்டு நிலை இருக்கிறது. இதை ஒப்புக் கொள்வது கடினமாக இருந்தாலும். இந்த உண்மையை உணர்ந்து, சுய விமர்சனம் இடதுசாரிகள் செய்ய வேண்டும். 

இத்தோடு இந்த அத்தியாயம் முடிந்தது.



 

என்ன செய்ய வேண்டும்? – லெனின் (முதல் அத்தியாயம்)

 

(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் முதல் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.

 

வகுப்பின் காணொளி கீழே காணும் இணைப்பில் காணலாம்

https://www.youtube.com/watch?v=9jiZ8vTVP6E&t=848s

 

அனைத்தையும் பார்க்க:-

https://www.youtube.com/channel/UCN4ahSJzeZcpsRtuh0myX5g  )



லெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்?” என்கிற இந்தப் புத்தகம், சுமார் 300 பக்கத்தைக் கொண்டது. இது ஒரு பெரிய புத்தகம் தான்.

இந்தப் புத்தகத்தை முழுமையாக, வரிக்கு வரி விளக்கப் போவதில்லை, சுருக்கமாக அதன் சாரத்தை மட்டுமே சொல்லப் போகிறேன்.

இந்தச் சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தைச் சுயமாக, முழுமையாகப் படிக்க வேண்டும். சாரத்தை அறிந்து கொள்வதின் நோக்கமே, புத்தகத்தை முழுமையாகப் படிக்க உதவ வேண்டும் என்பதே.

இந்த நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவகுப்பாக ஐந்து வகுப்பு எடுக்கப் போகிறேன். சுருக்கமாகச் சாரத்தை மட்டும் சொல்வதனால், ஐந்து வகுப்பில் இந்த மொத்த புத்தகத்தையும் சொல்லிவிடலாம்.

1 மற்றும் 5 அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகத் தான் பார்க்கப் போகிறோம். இடையில் உள்ள மூன்று அத்தியாயம் கண்டிப்பாக விரிவாகப் படிக்க வேண்டியது. அந்த மூன்று அத்தியாயத்தில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக இன்று பார்ப்போம்.

2) இரண்டாவது அத்தியாயம், “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு நிலையும்.”

சமூக- ஜனநாயகவாதிகள் – அப்படினா.. கம்யூனிஸ்டுகள்.. அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே அழைத்தனர். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதானால, இந்தப் பெயரே அப்போது வழத்தில் இருந்தது.

மக்களின் தன்னியல்பு :-

மக்கள் தங்களுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு, உடனடியாக எதிர்வினை புரிவது, தன்னியல்பு. எந்த இயக்கமோ, அமைப்போ, கட்சியோ அந்தப் பிரச்சினைக்குத் தலைமை தாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களே போராட்டத்தில் இறங்குவது தான் தன்னியல்பு.

சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு:-

சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்றால், கம்யூனிஸ்டுகளின் உணர்வு, அதாவது வர்க்க உணர்வு.

மக்களின் தன்னியல்பான உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமே போராடுவது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தன்னில்பாக எழுச்சி கொண்ட மக்களுக்கு, வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும், அவர்களை வர்க்க அரசியலுக்குக் கொண்டு வரணும். இது தான் கம்யூனிஸ்டுகளின் உணர்வு.

தன்னில்பான போராட்டத்தின் எல்லைக்கும், வர்க்க உணர்வு பெற்ற போராட்டத்தின் எல்லைக்கும் உள்ள வேறுபாட்டை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.

3) மூன்றாவது அத்தியாயம், “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.”

தொழிற்சங்கவாத அரசியல் என்பது, வர்க்க உணர்வு ஊட்டாமல், பொருளாதார முன்னேற்றத்திறகு மட்டும் போராடுவது. அதாவது கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது. ஆனால் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டம்.

கூலி உயர்வுக்கான போராட்டத்தில் தொடங்கி, கூலி முறை ஒழிவதற்கான போராட்டம் வரை கொண்டு செல்வது தான் கம்யூனிஸ்டுகளின் வர்க்க அரசியல்.

4) நான்காவது அத்தியாயம், “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”

இதுவும் மேலே கூறப்பட்ட விஷயத்தைப் பற்றியது தான், கூலி உயர்வுக்கு மட்டும் போராடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையை வெளிப்படுத்தி, அந்தப் பக்குவமின்மையைப் போக்க வேண்டும் என்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றித் தான் இந்த நான்காம் அத்தியாயம் பேசுகிறது.

இந்த மூன்று அத்தியாயத்தைச் சற்று விரிவாக வகுப்பெடுக்க வேண்டும். 1 மற்றும் 5ஆம் அத்தியாயம் சுருக்கமாக வகுப்பெடுத்தா போதும்.

ஐந்தாவது அத்தியாயம், “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””

இது குறிப்பாக அன்றைய ருஷ்ய நிலைமைக்கானது. அதனால் இதைச் சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது.

இன்றைய வகுப்பு முதல் அத்தியாயம். 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.

இதில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன, ஒன்று வறட்டுச் சூத்திரவாதம், மற்றொன்று விமர்சன சுதந்திரம்.

மார்க்சியம், வறட்டுச் சூத்திரவாதமல்ல, செயலுக்கு வழிகாட்டியே, எதிர்படும் புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை அது வளப்படுத்திக் கொள்ளும். இதைக் கேள்விபட்டிருப்பீர்கள்.

அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது பற்றியும் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்” என்ற இந்த அத்தியாயம் இது பற்றிப் பேசவில்லை.

வறட்டுச் சூத்திரவாதம், விமர்சன சுதந்திரம் என்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி மார்க்சிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை, லெனின் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.

அதாவது விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று, புதியதாகக் கிளம்பியவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை லெனின் இந்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

மார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்?

காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.

இதை நல்லா புரிஞ்சிக்கிட்டா… இந்த அத்தியாயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வறட்டுச் சூத்திரவாதம் என்றால் என்ன? மார்க்சியத்தைப் புதிய மாற்றத்திற்கு ஏற்ப உட்படுத்தாம இருப்பதையே வறட்டுச் சூத்திரம் என்று கூறுவோம். ஆனால் இவர்கள்…..மார்க்சிய அடிப்படைகளை ஊன்றி நிற்பவர்களைப் பார்த்து, வறட்டுச் சூத்திரவாதிகள் என்று இந்தப் புதிய போக்கினர், கூறுகிறார்கள்.

ஏன் என்றால் மார்க்சிய அடிப்படைகளை விடாம பின்பற்றுவது இவர்களுக்கு வறட்டுச் சூத்திரவாதம். ஆனால் கம்யூனி’ஸடுகளைப் பொருத்தளவில், இயக்கவியல் பார்வை அற்ற போக்கே வறட்டுச் சூத்திரவாதம்.

அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்.., மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

காலம்மாறி போச்சு, மார்க்சிய அடிப்படைகள் காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.

அவர்கள் கூறுகிற பட்டியலை முதலில் பார்ப்போம்:-

1) கம்யூனிசத்தை விஞ்ஞான அடிப்படையில் அணுகுவதை மறுப்பது.

2) சோஷலிச சமூகமாக மாறிடும் என்கிற தவிர்க்க முடியாத தன்மையை மறுத்தல், அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து கூறப்படுகிற சமூக மாற்றத்தை மறுத்தல்.

3) முதலாளித்துவச் சமூகத்தில் வறுமை அதிகமாகி வருவதை மறுத்தல்,

4) முதலாளித்துவ உற்பத்தில் முரண்பாடுகள் கடுமையாகிக் கொண்டிருப்பதை மறுத்தல்,

5) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையே மறுத்தல். 

6) “இறுதிக் குறிக்கோள்” என்று கூறுவதையே மறுத்தல். 

மொத்தத்தில் அவர்கள் கூறவருவது இதுவே:- 

புரட்சிகரமான கம்யூனிசக் கோட்பாடுகளை விடுத்து, முதலாளி வர்க்க சார்பான, சமூகச் சீர்திருத்தவாதத்தைக் கொண்டுவருதல். 

முதலாளித்துவ வர்க்கம் பல காலமாக மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, இந்தப் போக்கினர், கம்யூனிசத்தின் பேரால் “விமர்சன சுதந்திரம்” வேண்டும் என்ற போர்வையில் வைக்கின்றனர். அவ்வளவு தான். 

இந்தப் போக்கினர் கோருகிற சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

“விமர்சன சுதந்திரம்” என்பது கம்யூனிசத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற சுதந்திரம், 

புரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம், 

கம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம். 

இந்தப் போக்கை லெனின் புதிய வகைச் சந்தர்ப்பவாதம் என்கிறார். 

இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும். 

சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை. 

புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.

புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும். 

கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும். 

மார்க்சிய அடிப்படைகளை வீடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள், வைதீக மார்க்சியவாதிகளாம். இவர்கள் தான் உண்மையான மார்க்சியவாதிகளாம். விமர்சன சுதந்திரத்தை இவர்கள் தான் பின்பற்றுவது போலப் பாசாங்கு செய்கிறார்கள். 

இந்தப் பாசாங்குக்காரர்களின் சீர்திருத்த போக்க் எதிர்த்து, கம்யூனிசத்தில் இருக்கும், விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரனமான போக்கையும் நாம் காப்பாற்ற வேண்டும். இந்த அத்தியாயம் நமக்கு இதைத் தான் போதிக்கிறது.

லெனின் வழியில், 

“திருத்தல்வாதம் எதிர்ப்போம் மார்க்சியம் காப்போம்” 

என்று கூறி, இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

 





 

 

 

 

 

 


Wednesday, 17 June 2020

ஜே.வி.ஸ்டாலின் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்ட New Horizon Book Trust- அணிந்துரை


(இந்தியாவில் ஜே.வி.ஸ்டாலின் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிட்ட New Horizon Book Trust நிறுவனத்தின் பதிப்புரை. அலைகள் வெளியிட்டுள்ள தமிழ் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது)


ரொட்டியைத் தியாகம் செய்யுங்கள்,
குண்டுகள் தயாரிக்க...
தியாகியாக மாறவும் தயாராக இருங்கள்,
சந்தைக்காக...

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மக்களிடையே முதலாளித்துவம் செய்துவரும் சுவிசேஷப் பிரசங்கம் இதுதான். இதை அப்படியே ஏற்றுக் கொண்டால் நீங்கள் ஓர் அறிவுஜீவி. இதை மறுத்துப் பேசினாலோ நீங்கள் ஒரு முட்டாள்.

ஆம், இப்படித்தான் இந்த உலகம் சென்று கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள், நிதி மூலதனம் ஆகியவற்றின் கருணையால் வாழ்ந்து வரும் உலகிற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.

பணப்பெட்டியை மட்டுமே போற்றி, பூசித்து வரும் இந்த உலகம் ஜோசப் விசாரியோனோவிச் ஜுகாஷ்விலி என்ற இயற்பெயருடைய ஸ்டாலினைக் கொடுங்கோலன் என்றும், இரக்கமே இல்லாத அரக்கன் என்றும், ஜார் மன்னனின் மூதாதையும் ருஷ்யாவின் அரசனும் ஆன 'இவான் த டெரிபிள்' என்று அழைக்கப்பட்ட இவானின் கொடூரச் செயல்களை எல்லாம் விஞ்சிய கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்ட நாசக்காரன் என்றும் அர்ச்சனை செய்து கொண்டே இருப்பதில் வியப்பேதும் இல்லை.

ஏன் ஸ்டாலின் மீது மட்டுமே இத்தகைய பழிச்சொற்களை, நச்சு வார்த்தைகளை, அண்டப்புளுகைக் கட்டவிழ்த்துவிட வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

முதலாவதாக, அவர் லெனினின் உண்மையான சீடர் என்ற வகையில் ஒடுக்குவோர்-சுரண்டுவோர், முதலாளிகள்-நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான போரில் தனது சமகாலப் போல்ஷ்விக்குகளை எல்லாம் விஞ்சி முன்னே நிற்பவராக இருந்தார். வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலோ அவர் யாரையும், எதையும் விட்டு விடவில்லை. ஜாராட்சி அடியாள்களின் எதிர்ப்புரட்சி இயக்கத்தை இருந்த இடம் தெரியாமல் நசுக்கிய போதோ அல்லது சோசலிச வகைப்பட்ட சீரமைப்பிற்குக் கேடு விளைவிக்கத் துணிந்தவர்களை நச்சுப் பாம்புகளென நசுக்கிய போதோ அல்லது பாசிசத்தின் கோட்டையைச் சுக்குநூறாகத் தூளாக்கியபோதோ மிகக் கடுமையானவராக, எதற்கும் இடம் கொடாத ஒருவராகத்தான் அவர் இருந்தார்.

சோசலிசத்தின் எதிரிகளைச் சலனமற்ற உறுதியுடன் ஸ்டாலின் எதிர்த்துப் போராடினார். அவரைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உணர்ச்சிக்கு இடமில்லை; தனிப்பட்ட உறவுகளுக்கு எவ்விதச் சலுகைகளும் இல்லை. அவரது சிந்தனை முழுவதுமே உழைக்கும் மக்களின் போராட்டம் என்ற ஒரே நோக்கத்தில்தான் எப்போதும் ஆழ்ந்திருந்தது.

ஒரு செருப்பு தைப்பவனின் மகன்; ஒரு பண்ணை அடிமையின் பேரன் என்ற வகையில் ஒடுக்கும் வர்க்கங்கள் மீதான வெறுப்பே ஸ்டாலினின் செயல்களை வடிவமைத்தது. ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களில் புகழ்பெற்ற ஒருவர் - ஸ்டாலின் சென்ற பாதையில் எவ்வித நம்பிக்கையும் இல்லாதவராக இருந்தவர் அவர் என்பதை இங்கே குறிப்பாகச் சுட்டிக் காட்டவேண்டும் - அவர்தான் ஸ்டாலினைப் பற்றிய மிகச் சரியானதொரு சித்திரத்தை வழங்கியிருந்தார். வர்க்க விரோதிகளின் மீதான வெறுப்பு என்பது ஸ்டாலினுக்கு இயற்கையாகவே அமைந்திருந்த ஒரு குணம் என்பதுதான் அவரின் கணிப்பு. புரட்சிகர இயக்கங்களின் தாக்கம் மிகவும் அரிதாகிப் போன இன்றைய சூழலில் தொழிலாளி வர்க்கம், சோசலிசத்திற்கான போராட்டம் ஆகியவற்றுக்கு விரோதமான சக்திகளால் கொடுமையின் அவதாரமே ஸ்டாலின்தான் என்று குறிப்பாகப் பழிக்கப்படுவதும் இயல்பான ஒன்றுதான்.

லெனினின் புரட்சிகரமான அறிவுத்திறன்தான் ருஷ்யாவின் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்த உதவியது என்று கூறுவோமேயானால், உருக்கு போன்ற மன உறுதி படைத்த ஸ்டாலினின் தலைமையின் கீழ்தான் அந்நாட்டின் அடித்தட்டு மக்கள் தாம் மேற்கொண்ட சோசலிச வகைப்பட்ட சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றனர் என்பது மட்டுமின்றி, மனிதகுல வரலாற்றில் முதன்முறையாகக் கோடிக் கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது பொருள் - கலாச்சார தேவைகளில் மிக அதிகமான அளவிற்குத் திருப்தியும் அடைந்தனர்.

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக உருவான இந்தப் புதிய சமூக அமைப்பின் வெற்றி என்பது அளவுகடந்த வியப்பைத் தருவதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பெரும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடாகச் சோவியத் யூனியன் உருவாகியிருந்தது. இதன் விளைவாக, சர்வதேச வர்த்தகப் பெருமுதலைகளாலும், அறிவுசார் உலகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்திருந்த அவர்களது அடியாள்களாலும் போற்றப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்த சமூக - பொருளாதார அமைப்பிற்குச் சோவியத் யூனியன் மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. 'ஒரே நாட்டிற்குள் சோசலிசத்தைக் கட்டுவது' என்பது லெனின் உருவாக்கிய கருத்தோட்டமாகும். ஸ்டாலினின் வீரஞ்செறிந்த, ஊக்கமூட்டும் வகையிலான முயற்சியின் விளைவாகவே இந்தக் கருத்தோட்டமானது உயிரோட்டமானதோர் அமைப்பாக உருமாற்றப்பட்டதோடு, உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஒளிமயமானதோர் உலகை, எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் திசைகாட்டியாகவும் திகழ்ந்தது.

இடைக்கால நிலப்பிரபுத்துவ இருளில் மூழ்கிக் கிடந்த ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவதற்கு அவர் வழங்கிய வெற்றிகரமான தலைமைக்காகவும், கொள்ளை லாபம் அடிப்பவர்கள், மக்களைச் சுரண்டுபவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் கையாண்ட சமரசமற்ற கடுமையான அணுகுமுறை ஆகியவற்றுக்காகவுமே பொய்களும் அவதூறுகளும் நிரம்பிய கூச்ச நாச்சமற்ற பிரச்சாரத்தின் இலக்காக ஸ்டாலின் மாறுகிறார். முதலாளித்துவக் கொடுங்கோலன்களும், அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கின்ற அறிவு ஜீவிகளும் காட்டு மிராண்டித்தனமான அவதூறுகளையும், கோபத்தில் கொந்தளிக்கும் வெறுப்பு நிறைந்த வசவுகளையும் அவர்மீது வீசிக் கொண்டே இருக்கின்றனர். 1950 களின் நடுப்பகுதியில் குருச்சேவ் தலைமையிலான திருத்தல்வாதக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தும், இறுதியில் 1990களின் துவக்கத்தில் சோவியத் யூனியனே முற்றிலுமாகச் சிதறுண்டு போனதைத் தொடர்ந்தும், ஸ்டாலின் மீது பொழியப்பட்ட தொடர்ச்சியான அவதூறுப் பிரச்சாரமானது இதுவரைக் கண்டிராத உச்சத்தைத் தொட்டது. இதனால் புரட்சிகர எண்ணம் கொண்டோர் மத்தியிலும் கூட அவர்களால் குழப்பத்தை ஏற்படுத்த முடிந்தது.

இத்தகைய பின்னணியில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்ற வகையிலும், ஒரு நாட்டில் சோசலிசத்தை மறுகட்டுமானம் செய்த நிபுணர் என்ற வகையிலும், மார்க்சிய-லெனினிய தத்துவத்தை விளக்கிக் கூறியவர் என்ற வகையிலும் ஸ்டாலினது பங்கைக் காய்தல் உவத்தல் இன்றி மதிப்பீடு செய்ய வேண்டியதென்பது மிக அவசரமானதொரு கடமையாகவே தோன்றுகிறது. ஸ்டாலினின் சொந்த எழுத்துகள், (மிக அரிதாகவே கிடைக்கும்) அவரது உரைகள் ஆகியவையே இந்தக் கடமைக்குப் பேருதவி செய்வதாக இருக்குமே தவிர, சந்தைக்கான தத்துவத்திடம் சோரம் போய்விட்ட 'அறிஞர்'களின் உள்நோக்கம் கொண்ட ஆய்வுகளோ, கருத்துகளோ அல்ல.

இந்த நோக்கத்துடனேயே, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் மத்தியக் குழுவின்கீழ் இயங்கிய மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் கழகத்தால், 1946-49 காலப்பகுதியில் ருஷ்ய மொழியில் வெளியிடப்பட்டு, அவர்களது அந்நிய மொழிகள் பதிப்பகத்தால் 1952-55 காலப் பகுதியில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட ஸ்டாலின் தொகுப்பு நூல்களை எவ்விதக் கூட்டலும் கழித்தலும் திருத்தலும் இன்றி அப்படியே உங்களிடம் வழங்குகிறோம். இந்த முயற்சி பிரம்மாண்டமான ஒரு முயற்சி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை . எமது இந்த முயற்சியை வாசகர்கள் பாராட்டுவார்கள் என்றே நம்புகிறோம்.

செப்டம்பர், 1998.

Monday, 10 February 2020

பெரியார் தத்துவம் ஒரு மார்க்சிய விமர்சனம்- கார்முகில்

ஆசிரியர்-கார்முகில்
வெளியீடு: தமிழ்நாடு மார்க்சிய-லெனினியக் கட்சி
விலை –ரூ25/-


திராவிடர் கழகத்தின் “உண்மை” (1988) இதழுக்கு பதிலளிக்கும் முகமாக “கேடயம்” இதழில் (1989) எழுதப்பட்டதை நூலாக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்குப் பொருந்தாத வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இங்கே நிகழ்த்த வேண்டியது வர்ணப் போராட்டமே, அதனை நடத்துவது திராவிடர் கழகமே. அதனால் பெரியார் இயக்கமே உண்மையான கமயூனிச இயக்கம் என்று “உண்மை” இதழ் கூறியதை, மறுத்து “கேடயம்” எழுதியதே “பெரியார் தத்துவம் ஒரு மார்க்சிய விமர்சனம்” என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இந்நூலின் தொடக்கமே பெரியார் தத்துவத்தின் தன்மையை வறையறுத்துள்ளது. கம்யூனிச இயக்கத்தின் சோசலிசம் விஞ்ஞானச் சோசலிசம், பெரியாரின் சோசலிசம் கற்பனா சோசலிசம். கம்யூனிச இயக்கத்தின் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம், பெரியாரின் தத்துவம் மார்க்சியத்திற்கு முன்பான கொச்சைப் பொருள்முதல்வாதம்- சாராம்சத்தில் கருத்துமுதல்வாதம். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் பொருளாதாரம் வர்க்கப் போராட்டத்தைப் போதக்கிறது, பெரியாரின் பொருளாதாரம் வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறது.

பெரியார் எழுதிய “தத்துவ விளக்கம்” என்ற நூலின் அடிப்படையில் அவரின் தத்துவம் விமர்சிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” (1952-1959)ல் வெளிவந்த கருத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பெரியாரின் கருத்து விமர்சிக்கப்படுகிறது. இந்நூலில் கொடுக்கப்பட்ட பெரியாரின் மேற்கோளே அவரின் கருத்துமுழுவதையும் வெளிப்படுத்திவிடுகிறது.

“நல்ல தொழிலாளர் சங்கம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது முதலாளயிடத்தில் விசுவாசம், சொந்தப் பொறுப்பு போலக் கருதி தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது முதலியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.” இந்தக் கருத்தை இந்நூல் பெரியாரின் தொழிற்சங்க இயக்கப் பிரகடனம் என்று கூறுகிறது.

கடவுளும், மதமும் மனிதர்களால் படைக்கப்பட்டுப் பரப்பட்டதாகக் கருதுகிற பெரியாரின் கருத்து, மார்க்சின் மதம் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் மறுக்கப்படுகிறது.
பார்ப்பனர், மற்றும் மதங்களின் ஒழிப்பில் தான் சாதி ஒழிப்பு இருப்பதாகப் பெரியார் கருதுகிறார். இதற்கு மாறாக “சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி முறையினால் ஆதிக்கம் பெறுகின்றவர்களும் அதற்கான உற்பத்தி மறையும் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற இந்நூல் மார்க்சிய வழியில் தீர்வைக் கூறுகிறது. சாதிய ஒழிப்பில் பெரியாரின் வர்க்க சமரத்தை இந்நூல் மிகத் தெளிவாக அம்பலப்படத்தியுள்ளது.

“சாதிக்கு எதிரான போராட்டம் என்பது உண்மையில் நிலப்பிரபுக்களின் நிலவுடைமைக்கும், அவர்களுடைய சாதிய ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டம் என்பதை மறைத்து பார்ப்பானுக்கு எதிரான போராட்டம், கடவுள், மதத்துக்கு எதிரான போராட்டம் என்பதாகச் சுருக்கிவிடுகிறார். இதனால் பெரியாரின் சாதி ஒழிப்புக் குரல் பார்ப்பானுக்கு எதிராகச் சம அந்தஸ்து கோரி மேல்சாதி பணக்காரர்கள் எழுப்பும் குரலாக இருக்கிறதே தவிர முழுமையான சாதி ஒழிப்புக்கான குரலாக இல்லை.
…
முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டாளிகளாகவும் பங்காளிகளாகவும் இருப்பது பற்றிப் பேசுகிறார், கணவன் மனைவி போல் குடும்பமாக வாழ்வது பற்றிப் பேசுகிறார், வர்க்க சமரசம் பேசுகிறார்.” (பக்கம் -42)

“உண்மை” பத்திரிகையில் வெளிவந்துள்ள கருத்திற்கு “கேடயம்” உடனடிப் பதிலாக எளிமையாகவும் உறுதியாகவும் விமர்சித்துள்ளது. பெரியாரின் சமதர்மத்திற்கும் விஞ்ஞானக் கம்யூனிசத்திற்கும் உள்ள வர்க்க வேறுபாட்டை முழுமையாக விமர்சித்து எழுத வேண்டியது, கம்யூனிஸ்டுகளின் கடமையாக இருக்கிறது. கடமையை நிறை வேற்றுவோம்.

Saturday, 18 January 2020

லெனின் பாட்டாளி வர்க்கத் தலைவர் - முன்னுரை


நூல்:- லெனின் பாட்டாளி வர்க்கத் தலைவர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்
விலை: ரூ90-00
வெளியீடு:செஞ்சோலைப் பதிப்பகம்
           1015, பூஞ்சோலை நகர்
           முனீஸ்வர் நகர் விரிவாக்கம்,
           ஓசுர்.
           தொடர்புக்கு 98948 35373
மின்னஞ்சல்: sencholaipathippagam@gmail.com
லெனின் வாழ்க்கை வரலாற்றையும், ருஷ்யப் புரட்சியையும் பற்றியும் இதுவரை அறிந்திடாத வாசகர்கள், முதலில் சுருக்கமாக அறிய வேண்டுமானால் “லெனின்: பாட்டாளி வர்க்கத் தலைவர்” என்ற இந்நூல் ஒரு சிறந்த தொடக்கமாக அமையும். ஏன் என்றால் லெனினது வாழ்க்கை ருஷ்யப் புரட்சியோடு தொடர்புடையது, ருஷ்யப் புரட்சியின் வெற்றியானது பல திருப்பங்களையும் பல்வேறு சிக்கல்களையும் கடந்து பெற்றதாகும். அதனால் லெனின் வாழ்வும், அவரது நூல்களையும், ருஷ்யப் புரட்சியையும் புரிந்து கொள்வதற்குப் பல நூறு பக்கங்களைப் படிக்க வேண்டிவரும்.

தொடக்க வாசகர்களுக்கு இது சிரமமே. இது போன்ற சிரமத்தை நமக்குத் தராமல் இந்நூல் 100 பக்கத்திற்குள் சுருக்கமாக லெனினது வாழ்வையும் அவரது பணிகளையும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் பேசாமல் முதல் வாசிப்புக்கு எது தேவையோ அதனை மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த நூலின் சுருக்கத்தைப் போலவே தோழர் நிழல்வண்ணன் அவர்களின் தமிழ் மொழியாக்க எளிமையாக இருக்கிறது.

என்னதான் சுருக்கமாக இருந்தாலும், முதல் முறையாக வாசிப்பவர்கள் சில பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். இதுவரை கேட்டறியாத புதிய கலை சொற்களே அந்தப் பிரச்சினையாகும். அனைத்து முதல் வாசர்கள் சந்தித்தப் பிரச்சினைத்தான் இது.

முதல் முறை வாசிப்பில் அனைத்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது பற்றிக் கவலை கொள்ளாது முழுமையாக வாசித்துவிடுங்கள். இந்நூலை அடுத்த முறை வாசிக்கும் போதோ, அல்லது இதன் தொடர்பான பிற நூல்களைப் படிக்கும் போதோ நிச்சயமாகப் புரியத் தொடங்கும். தொடங்கினால் தான் பிரச்சினைத் தீரும். அதனால் சில சொற்கள் சில விடயங்கள் புரியவில்லை என்றால் அந்த இடத்திலேயே நின்றுவிடாமல் தொடர்ந்து படித்து முடியுங்கள்.

அன்றைய கட்டத்தில் சில காரணங்களுக்காகக் கம்யூனிஸ்ட்டை சமூக-ஜனநாயகவாதிகள் என்று அழைத்தனர். இந்த நூல் முழுதும் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே சமூக-ஜனநாயகவாதி என்று படிக்கும் போது அது கம்யூனிஸ்டுகளையே குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல நரோத்தினிக்குகள், பொருளாதாரவாதிகள், சட்டபூர்வ மார்க்சியவாதிகள், போஷ்விக்குகள், மென்ஷிவிக்குகள் என்ற புதிய சொற்கள் வரும்போது நிதானமாக அதன் பொருளை அறிந்து, குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் லெனின் எழுதிய நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, அந்த நூலின் தலைப்பையும் அந்த நூல் எதைப் பற்றிப் பேசுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த முயற்சியாக லெனின் நூல்களை நேரடியாகப் படிப்பதற்கு இம்முறை பயன்படும்.

லெனின் வாழ்க்கை நமக்குப் பெரும் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அவர் புறநிலைமைகள் மாறமாற அவர் தம் கருத்தை மாற்றிக்கொள்கிற திறம் வியக்கவைக்கிறது. மார்க்சைத் தொடர்ந்து மார்க்சியத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு நமக்கு லெனினியமாகக் கிடைத்துள்ளது.

லெனின் தமது அரசியல் போராட்டத்தினால் பல காலம் வெளிநாடுகளில் தங்க வேண்டிவந்து. அவ்வாறு வெளியே தங்கினாலும், ருஷ்யாவில் ஏற்படுகிற தொடர் மாற்றங்களைக் கண்ணுற்று வந்துள்ளார். அதனால் அவரது சிந்தனை ருஷ்ய மக்களோடு நெருங்கியதாகவே இருந்தது.

மார்க்சியத்தைத் திரித்துரைக்கின்ற போக்கையும், பொருள்முதல்வாதம் காலாவதியாகிவிட்டது என்கிற விமர்சனங்களையும் லெனின் எதிர் கொண்டு பதிலளித்துள்ளார். சட்டபூர்வ வழிப் போராட்டத்திலேயே பழக்கப்படுத்திக் கொண்ட வலது திரிபையும், அதே போலச் சட்டவழிப்பட்ட போராட்டத்தைப் புறக்கணித்துச் சட்டவழியற்றப் போராட்டத்தை மட்டுமே மேற்கொள்கிற இடது திரிபையும் லெனின் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். இந்த வழிகாட்டுதல்கள் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.

பொதுவாக ருஷ்யப் புரட்சி வரையிலான பகுதியை அதிகமாகவும் அதற்குப் பின்பான பகுதியை குறைவாகவும் விவரிப்பதே வழக்கமாக உள்ளது. ஆனால் இந்நூல் அதற்குப் பின்பான் பகுதி சற்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது. லெனின் வாழ்க்கையும் அவரது பணியையும், ருஷ்யப் புரட்சியையும் அதற்குப் பின்பான சோஷலிச நிர்ணமானத்தையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இந்தச் சுருக்கமான நூல் கண்டிப்பாக உதவிடும். இது போன்று சுருக்கமான நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் செஞ்சோலை பதிப்பகத்தைப் பாராட்ட வேண்டும். இப் பணி தொடரட்டும். நாளைய உலகம் உழைக்கும் மக்களுக்கே.


Wednesday, 10 July 2019

ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு என்ற நூலினுடைய முன்னுரை- மார்க்ஸ் (சிறு அறிமுகம்)


சுரண்டலுக்கு ஆளான வர்க்கத்தின் இன்பம் சொர்க்கத்தில், சுரண்டும் வர்க்கத்தின் இன்பம் இவ்வுலகத்தில் என போதிக்கும் மதத்தை மார்க்ஸ் இவ்வுலக துன்பங்களுக்கான காரணத்தை அறியமுடியாமல் மறைக்கும், மழுங்கடிக்கும் போதை என்னும் பொருள்படும்படி, மதம் என்பது மக்களின் அபின் என்று வலியுறுத்தினார்.

மார்க்ஸ்  ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்கு பங்களிப்பு  என்ற நூலினுடைய முன்னுரையில் கூறுகிறார்:-
“ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்துவிட்டது. மதத்தைப் பற்றிய விமர்சனம் அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது.

.. பரலோகத்தில் வினோதார்த்தமான யதார்த்தத்தில் அதிமானுடனைக் காணவிரும்பிய மனிதன் அங்கு தனது சொந்தப் பிரதிபிம்பத்தைத் தவிர வேறு எதையுமே காணவில்லை, தான் தேடுகின்ற இடத்தில் அந்த அதிமானுடன், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது. மனிதன் தனது உண்மையான யதாரத்தத்தையே கண்டறிந்தாக வேண்டும்.
..
மதஎதிர்ப்பு விமர்சனத்தின் அடிப்படையாக இருப்பது: மனிதனே மதத்தை உண்டாக்குகிறான், மதம் மனிதனை உண்டாக்குவதில்லை.  இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், தன்னைத்தானே இன்னும் கண்டறிந்து கொள்ளாதவன் அல்லது தன்னைத் தானே மறுபடியும் இழந்துவிட்டவனின்  தன்னறிவும் தன்னுணர்வும்தான் மதமாகும். ஆனால் மனிதன் இவ்வுலகிற்கு அப்பால் அமர்ந்திருக்கும் கற்பனையானவன் அல்ல.

மனிதன் என்பவன் மனிதனின் உலகம், நாடு, சமூகம் அனைத்தும் தான். இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளன. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. அந்த உலகத்தின் பொதுவான கொள்கையாகவும், அறிவுத் திரட்டலாகவும், தர்க்கத்தின் பிரபல வடிவமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரமாகவும் அது மதிக்கப்படுகிறது. ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்கான பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. அது மனித சாராம்சத்தின் விசித்திரமான புரிந்துணர்வு ஆகும். ஏனெனில் மனித சாராம்சம் என்பது இன்னும் எந்த உண்மையான யதார்த்தத்தையும் அடையவில்லை. எனவே, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, ஆன்மீக மணம் வீசும் மதத்தைக் கொண்டு  விளங்கும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.

மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

கட்டுத்தளையின் மீதுள்ள கற்பனை மலர்களை விமர்சனம் பிடுங்கி எறிந்துவிட்டது. எந்தவிதமான மன ஆறுதலும், மனோகற்பிதமும் இல்லாமல் மனிதன் அந்தத் தளையைத் தரித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அவன் அந்தத் தளையை உதறித் தள்ளி, ஜீவனுள்ள மலரைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மதத்தின் விமர்சனம் என்பது மனிதனின் பிரம்மையைக் குலைத்து, அவனைச் சிந்திக்கவும், செயல்படுத்தவும், அவனது யதார்த்தத்தை அவனே உருவாக்கவும் பிரம்மையைக் குலைந்த மனிதனைப்போல் அவன் பகுத்தறிவுக்கு மீண்டு வந்து, தன்னைத்தானே அவன் சுற்றிவரவும், அதன்மூலம் அவனது உண்மையான சூரியனைச் சுற்றிவரவும் செய்கிறது. மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச் சூரியன்தான் மதம் என்பது.

எனவே, வரலாற்றின் கடமை என்பது, உண்மைக்குப் புறம்பான உலகம் மறைந்தவுடனேயே, இந்த உலகத்தின் உண்மையை நிலைநாட்ட வேண்டியதுதான். வரலாற்றிற்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கும் தத்துவத்தின் உடனடிக் கடமையும், மனிதன் தன்னைத் தானே அன்னியமாகிக் காட்டும் மகானுபாவ உருவத்தை திரைகிழித்துக் காட்டியவுடனேயே, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அன்னியப்படுத்தும் தன்மையையும் திரைகிழித்துக் காட்டவேண்டியதுதான். இவ்வாறாக. பரலோகத்தைப்பற்றிய விமர்சனம் பூவுலகைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது, மதத்தைப் பற்றிய விமர்சனம் உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது.
..
விமர்சனம் என்ற ஆயுதத்தை, நிச்சயமாக ஆயுதத்தின் விமர்சனத்தை அகற்ற முடியாது. பொருளாயத பலத்தைப் பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, கொள்கையும் ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது. கொள்கை மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்தவுடனேயே அது மக்களைப் பற்றிப் பிடித்துவிடுகிறது, அது பகுத்தறிவு பூர்வமாக மாறியவுடனேயே மனித உணர்ச்சியைத் தொட்டுச் சாதித்துவிடுகிறது. பகுத்தறிவு பூர்வமாக ஆவதெனில், அது விஷயத்தின் ஆணிவேரையே பற்றிப் பிடிக்கவேண்டும். ஆனால் மனிதனுக்கோ மனிதன்தான் ஆணிவேர். ஜெர்மன் கொள்கையின் பகுத்தறிவு வாதத்துக்கும், அதன் காரணமாக அதன் காரியார்த்தமான சக்திக்கும் உரிய கண்கண்ட சாட்சியம் எதுவெனில், அது உறுதியாக, உறுதிப்பாடான மத ஒழிப்பிலிருந்து தொடங்குகிறது.

மதத்தைப் பற்றிய விமர்சனம் மனிதனுக்கு மனிதன்தான் உன்னதமாக சாராம்சம் என்பதைப் போதிப்தோடு, எனவே கீழ்த்தரமாக, அடிமையாக, ஒதுக்கப்பட்டவனாக, வெறுக்கத்தக்க சாராம்சமாக மனிதனை ஆக்கிவைத்துள்ள எல்லா உறவுகளையும், நாய்களின் மீது வரிபோடவேண்டும் என்று திட்டமிடப்பட்ட பொழுது  “அட, அப்பாவி நாய்களே”  அவர்கள் உங்களை மனிதர்களைப்போல் நடத்த விரும்புகிறார்களே- என்று கூக்குரல் எழுப்பிய ஒரு பிரஞ்சுக்காரனைக் காட்டிலும் விளக்கமாகக் கூறிவிட முடியாத, அந்த உறவுகள் அனைத்தையும் தூக்கி எறியவேண்டிய திட்டவட்டமான அத்தியாவசியத்தையும் போதிப்பதோடு அது முடிவடைகிறது.
..
இதற்கிடையில், அடிப்படை பூர்வமான ஜெர்மன் புரட்சியின் பாதையில் ஒரு பெரும் தடை குறுகிட்டு நிற்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், புரட்சிகளுக்கு ஒரு செயலற்ற தன்மையும், ஒரு பொருளாயத  அடிப்படையும் தேவை. எந்த அளவுக்கு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அந்த மக்களிடையே கோட்பாடும் நிறைவு செய்விக்கப்படுகிறது. ஆனால், ஜெர்மானியச் சிந்தனையின் கோரிக்கைகளுக்கும், ஜெர்மானிய யதார்த்தம் அளிக்கும் விடைகளுக்குமிடையே உள்ள பூதாகரமான வேற்றுமையானது.  குடிமை சமூதாயத்துக்கும் அரசுக்கும், குடிமை சமூதாயத்துக்கும் தனக்குமே இடையேயுள்ள அதேபோன்ற வேற்றுமையைக் கண்டுகொள்ளுமா? கோட்பாடார்த்தமான தேவைகளே உடனடியான காரியார்த்த தேவைகளாகிவிடுமா? யதார்த்த சித்திபெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்.

ஆனால் நவீன நாடுகளைப்போல் அரசியல் விடுதலைக்கான இடைநிலைக் கட்டத்துக்கு அதே சமயத்தில் ஜெர்மனி உயர்ந்து வந்துவிடவில்லை. கோட்பாடு விஷயத்தில் அது மேம்பட்டு எட்டிவிட்ட கட்டங்களுக்கு அது நடைமுறையில் இன்னும் எட்டி வந்துவிடவில்லை .. .. ..
..
.. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?

விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன் மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது, எனவே அந்தப் பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.

வளர்ந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..

தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:

ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம், இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”

வழக்கம்போல் மார்க்சிய அடிப்படைகளை திரித்து விளக்கம் கொடுக்கும் மார்க்சிய அறிஞர்கள்!! மார்க்ஸ் எழுதிய இந்த முன்னுரையில் காணும் கருத்தையும் திரித்தும், புரட்டியும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதனால் இதனைச் சற்று விரிவாக ஆராய்வோம்.

ஜெர்மனியில் மதத்தைப் பற்றிய விமர்சனம் சாராம்சத்தில் நிறைவடைந்து விட்டது என்றும், மதத்தைப் பற்றிய விமர்சனம், அனைத்தும் பற்றிய விமர்சனத்தின் முன்நிபந்தனையாக உள்ளது என்றும் மார்க்ஸ் முதலிலேயே கூறியுள்ளார்.

பரலோகத்தில் தம்மை விடுவிக்கும் அதிமானுடனைக் காண விரும்பிய மனிதன் அங்குத் தமது சொந்தப் பிரதிபிம்பத்தையே கண்டான். அந்த அதிமானுடத்தில், தன்னையே ஒத்திருக்கும் தோற்றத்தைக் காண்பதன்றி வேறு எதையும் காணுமாறு அவனை இனியும் வற்புறுத்த இயலாது, அதனால்  மனிதன் தனது உண்மையான யதார்த்தத்தைக் கண்டறிந்தாக வேண்டும்.

இதனை அடுத்து மத எதிர்ப்பின் அடிப்படையை விவரிக்கிறார். இதுவே இந்த முன்னுரையின் சாரம்சம் என்று சொல்லலாம்.

மதத்தை மனிதன்தான் படைத்தான், மதம் மனிதனை படைக்கவில்லை. இந்த அரசும், சமூகமும் உலகம் பற்றிய தலைகீழ் உணர்வாக மதத்தைப் படைத்துள்ளது. ஏனென்றால் அவையும் தலைகீழ் உலகமே. மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது, மதம் ஆன்மீக மணத்தோடு குறிப்பிடும் மறுஉலகத்தை எதிர்த்து நடத்தும் தொடர்பு மிக்க போராட்டம்தான்.

தம்மை விடுவிக்கும் சக்தி என்று கருதிவந்த பரலோக அதிமானுடன் என்பவன் இகலோக மனிதனின் பிரதிபிம்பம்தான் என்பதை அறிந்து, அதனிடம் நம்பியிருத்தல் பயனற்றது என்பதைத் தெரிந்து, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பதை, ஆன்மீக மணம் கமழும் மறுஉலகத்தை மறுதலிக்கும் போராட்டமாக மாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்.

இதனை மேலும் விரிவாக்கி, மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக விளங்கும் மதம், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது என்கிறார் மார்க்ஸ். இது மக்களின் அபினியாக உள்ளது

இதனை சில மார்க்சிய அறிஞர்கள்!! இதயம் இழந்தவர்களுக்கு இதயமாகவும், ஆன்மாவை இழந்தவர்களுக்கு ஆன்மாவாகவும் மதம் உதவுகிறது என்று மாற்றி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர். இங்கு மார்க்ஸ் கூறிய  இது மக்களின் அபினியாக உள்ளது  என்பதற்கும், பொருள்மாற்றி விளக்குகின்றனர்.

‘ஒடுக்கப்பட்ட வர்க்க சமூகத்தி்ல், புகலற்ற மனிதன் மதத்திடம் கற்பிதமான உதவியை நாடுகிறான். தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ அதே போல மதமும் மனிதனுக்குத் தற்காலிகமான நிவாரணம் அளிக்கிறது. அந்தத் துன்பத்திற்கு உண்மையான, நிரந்தரமான நிவாரணத்திற்குத் தற்காலிக நிவாரணம் மாற்றாக முடியாது. அதேபோல், மதம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கின்றது’

மார்க்சின் கருத்திற்கு மாறாக கூறப்படும் விளக்கம் இந்த வழியிலேயே செல்கிறது. 

பல காலத்திற்கு முன்பே லெனின் இதற்கான விளக்கத்தை தெளிவோடு எழுதியிருக்கிறார்.  மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேணும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்  (சோஷலிசமும் மதமும்) இங்கே லெனின், மார்க்சினுடைய கருத்தான மக்களின் அபினியே மதம் என்பதற்கு மிகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து கூறுகிறார்:-
“வர்க்க உணர்வு படைத்த நவீன காலத் தொழிலாளி, பெருவீத ஆலைத் தொழிலால் வளர்த்து ஆளாக்கப்பட்டு  நகர வாழ்வினால் ஒளியூட்டப் பெற்ற இந்தத் தொழிலாளி, மதத்தின் தப்பெண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு, விண்ணுலக வாழ்வைக் குருமார்களிடத்தும் முதலாளித்துவப் பித்தர்களிடத்தும் விட்டுவிட்டு, தனக்கு இங்கே மண்ணுலகில் நல்வாழ்வைப் போராடிப் பெற முயலுகின்றான். இன்றையப் பாட்டாளி வர்க்கம் சோஷலிசத்தின் பக்கம் அணி திரளுகின்றது. சோஷலிசமானது மதத்தின் இருளுக்கு எதிரான போரில் விஞ்ஞானத்தைப் படைசேர்த்துக் கொள்கிறது. இப்பொழுதே இம்மையில், மண்ணுலகில்  நல்வாழ்வுக்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்வதன்மூலம், அது அவர்களை மரணத்துக்குப் பிற்பாடான மறுமையில் நம்பிக்கை வைப்பதிலிருந்து விடுவிக்கிறது” 
-சோஷலிசமும் மதமும்

மார்க்சின் இந்த முன்னுரையின் விளக்கமாகத்தான், லெனின் சுருக்கமாகவும் தெளிவுபடவும் கூறியிருக்கிறார்.

மார்க்சின் முன்னுரைக்குச் செல்வோம்.

உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கு, மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை மறுதலிப்பது மக்களுக்கு அவசியமாகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை (புறநிலைமைகளை) விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம் பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்குப் பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.

மதபிரமைகளை விலக்குவதற்காக எழுதப்பட்டதே இந்த முன்னுரை. மதபிரமையிலிருந்து விடுபட முடியாதவர்கள் இதனைப் புரிந்துகொள்ள முடியாமல் திணருகின்றனர்.

மதத்தின் மகிழ்ச்சி என்பது மாயையானதே என்பதை அறிந்து, கம்யூனிஸ்ட்டுகள் அதிலிருந்து விடுபட வேண்டும், மற்றவர்கள் விடுபடுவதற்குத் துணைபுரிய வேண்டும், இந்தப் புரிதலில் பின்தங்கியவர்கள் விடுபடுவதற்கான (புற) நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவது பற்றியும் தெளிவாக மார்க்ஸ் கூறுயிருக்கிறார். இதனை மறைத்துவிட்டுத் தாங்க முடியாத வலியால் துடிக்கும் ஒருவனுக்கு, அபினி எவ்வாறு தற்காலிக நிவாரணம் அளிக்கிறதோ, அதே போல மதமும் தற்காலிகமாக கேட்கும் உதயை அளிக்கிறது என்று கருத்துரைப்பது மார்க்ஸ் கணணோட்டத்திற்கு முரணானதாகும்.  மாயையான மகிழ்விலிருந்து விடுபட்டு உண்மையான மகிழ்வை அடைவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியதின் அவசியம்பற்றியே இந்த முன்னுரையில் மார்க்ஸ்  வலியுறுத்துகிறார்.

மனிதன் தன்னைத்தானே சுற்றி வராதவரையிலும், மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியன்தான் மதம் என்கிறார் மார்க்ஸ்.

இந்த மாயைச் சூரியனான மதத்தைவிட்டு வெளிவந்து, மனிதன் தனக்கான விடுதலையை தனது உலகத்தில் படைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு மனிதன் தன்னைத்தானே சுற்றிவர வேண்டும். மனிதனைச் சுற்றிவரும் மாயைச்சூரியனான மதத்திடமிருந்து விலக வேண்டும்.

தற்போதைய வரலாற்றின் கடமை என்பது உண்மைக்கு மாறான உலகம் (பரலோகம்) மறைந்தவுன், உண்மையான உலகை இங்கு நிறுவுவதற்குப் பாடபட வேண்டியதுதான்.

மனிதனுக்கு அந்நியமான பரலோக அதிமானுடனின் திரை கிழிபடும்போது, அதன் புனிதமற்ற உருவங்களிலுள்ள தன்னைத்தானே அந்நியப்படுத்தும் தன்மையான திரைகிழிந்து போகிறது. இதன்படி பரலோகம் பற்றிய விமர்சனம் இந்த பூவுலகம் பற்றிய விமர்சனமாக மாற்றம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மதத்தைப் பற்றிய விமர்சனம், உரிமையைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. இறையியலைப் பற்றிய விமர்சனம், அரசியலைப் பற்றிய விமர்சனமாக மாறுகிறது என்று மதத்தைப் பற்றிய விமர்சனத்தை அனைத்தும் பற்றிய விமர்சனமாக மார்க்ஸ் கொண்டு செல்கிறார்.

பொருளாயத பலத்தை, பொருளாயத பலத்தினால்தான் தூக்கி எறிய முடியும். ஆனால் கொள்கை என்பது மக்கள் மனத்தைப் பற்றிப் பிடித்தவுடனேயே, அது ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்கிறார் மார்க்ஸ்.  மார்க்சின் இந்தக் கருத்தும் அதிகமாகப் புரட்டப்படுகிறது.

இங்கு மார்க்ஸ் கொள்கை என்று சொல்வது,  பொதுவாக கொள்கை  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதப் பொதுவான கொள்கை என்றாலும் அது அனைத்து மக்களைப் பற்றிக்கொண்டு பொருளாயத சக்தியாக மாறிவிடுகிறது என்று கூறவில்லை. அதாவது எந்த வர்க்கத் தன்மை என்றெல்லாம் குறிப்பிடவில்லை.

எந்த வர்க்கத்தின் கருத்தாயினும் அது பொது மக்கள் அனைவரையும் பற்றிக் கொண்டால், பொருளாத சக்தியாக மாறிவிடுகிறது என்று பொருள் கொள்வோமாயின் மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்துபவராவோம். ஏன் என்றால், சமூகம் வர்க்கமாகப் பிளவுற்று இருக்கும்போது கருத்து என்பது அனைவருக்குமானதாக இருக்க முடியாது என்பதை மார்க்சியம் விளக்கியிருக்கிறது. அதன்படி ஒரு வர்க்கக் கருத்து அவ்வர்க்கத்தினரிடையே மற்றும் அவ்வர்க்கச் சார்புடையவரிடத்திலே பற்றும்போது அது பொருளாயத சக்தியாகிறது என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை என்றால், ஒரு வர்க்கத்தின் சார்பான கருத்து, பரப்புரையின் மூலம் அனைத்து மக்களையும் பற்றச் செய்திட முடியும் என்ற தப்பான முடிவிற்கு வந்துவிடுவோம். மக்களைப் பற்றிக் கொண்டால் என்று இங்கு மார்க்ஸ் குறிப்பிடுவது கருத்தை அல்ல (Theory) கொள்கையைத்தான்  என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை என்பது வர்க்கச் சார்பானது. இதனைக்  கருத்து  என்று பொதுமைப்படுத்தி விளக்குவது மார்க்சியத்திற்கு எதிரான கண்ணோட்டத்திற்கே இட்டுச் செல்லும்.

லூக்காஸ், கிராம்சி ஆகியோர், ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் உருவானதின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைப் புரிந்து கொள்ளாமல், வெறும் கருத்துப் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாக கருதிக்கொண்ட பண்பாட்டு மார்க்சியவாதிகள், எந்த வர்க்கத்தின் கருத்தாயினும், அது மக்களைப் பற்றிக் கொண்டால் பொருளாயத சக்தியாகிவிடும் என்று விளக்கம் கொடுத்துவருகின்றனர். 

மார்க்சின் முன்னுரையின் இறுதிப்பகுதியில் கூறியதை இவர்கள் மீறிவிடுகின்றனர்.  தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தை பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.   இங்கு பாட்டாளி வர்க்கக் கருத்தின் தோற்றத்தையும் அது கொள்கை வடிவம் பெறுவதையும், அதனைப் பாட்டாளி வர்க்கம் பற்றிக் கொண்டு செயல்பட வேண்டியதையும் வலியுறுத்துகிறது. இதே போலத்தான் அனைத்துக் கருத்துப் பிரிவுகளும், அந்தந்த வர்க்கப் பிரிவுமக்களின் மனத்தைப் பற்றுகிறது என்று விளங்கிக்கொள்ளவேண்டும்.

பொதுவாக இந்த முன்னுரையை ஒருங்கிணைந்து விளங்கிக்கொள்ளாமல், தமக்கு ஏற்றபடி பிரித்து உடைத்து விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் மார்க்ஸ் செறிவோடு தமது கண்ணோட்டத்தை இம்முன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பொருள்மாற்றி விளக்கம் அளிப்பவர்கள், கொள்கை என்றவுடன், தாம் வகுத்தளித்த கருத்து அல்லது தாம் ஏற்றுக்கொண்ட கருத்து, பாட்டாளிகளின் மனங்களைப் பற்றிக் கொண்டால் அது பொருளாயத சக்தியாக மாறிவிடும் என்று விளக்குகின்றனர். முன்னுரையில் மார்க்ஸ்,  யதார்த்த சித்தி பெறுவதற்குச் சிந்தனை மட்டும் பாடுபட்டால் போதாது, யதார்த்தமும் சிந்தனையை நோக்கிப் பாடுபட வேண்டும்  என்று தெளிவுபடக் கூறியுள்ளார். அதாவது சிந்தனை யதார்த்தத்திற்கு நெருங்கி இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கத்தின் யதார்த்த (புறநிலை) சூழலால் உருவாகும் சிந்தனை பாட்டாளி வர்க்கச் சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ வாழ்நிலையில் உள்ள (புறநிலை) சூழ்நிலை முதலாளித்துவ சிந்தனையையே பிரதிபலிக்கும்.

சமூகத்தில் எவ்வளவோ வர்க்கங்கள் இருக்க சமூக விடுதலைக்குப் பாட்டாளி வர்க்கத்தை மார்க்ஸ் தேர்ந்தெடுத்தது ஏன்? சமூக விடுதலை என்பது அனைவருக்கும் ஒரே நேரத்தில் என்று சொல்லாமல் பாட்டாளி வர்க்கத்திற்கு என்று சொன்னதின் நோக்கம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களே இம்முன்னுரைக்குத் தம் மனம்போனபடி விளக்கம் கொடுத்துவிடுகின்றனர்.

இம்முன்னுரையின் இறுதியில் உள்ளவற்றை இணைத்துப் பார்ப்போம்:-
“ .. ஒரு ஜெர்மன் விடுதலைக்கான உறுதிப்பாடான சாத்தியப்பாடு எங்கேயுள்ளது?
விடை:- ..
..இறுதியாக, சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன்மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது. எனவே அந்தப்பகுதி மனிதனை  மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும். சமுதாயம் இத்தகைய ஒரு குறிப்பிட்ட பகுதியாக சீர்குலைந்து உருமாறுவதுதான் பாட்டாளி வர்க்கம்.

..வளந்துவரும் எந்திரத் தொழில் இயக்கத்தின் விளைவாகப் பாட்டாளி ஜெர்மனியில் உருவாகத் தொடங்கியுள்ளான். ஏனெனில், இயற்கையாகத் தோன்றும் ஏழையராக    இல்லாமல், செயற்கையாகப் பஞ்சையராக்கப்பட்டவர்கள் ..  .. .. ..
தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்துவத்திடம் காண்கிறது.
..
நாம் இதன் முடிவைத் தொகுத்துச் சொல்வோம்:
ஜெர்மனியின் நடைமுறை சாத்தியமான ஒரே விடுதலையானது, மனிதனுக்கு மனிதன்தான் மேன்மையான சாராம்சம் என்று பிரகடனப்படுத்தும் அந்தக் கொள்கையின் கருத்தோட்டத்திலிருந்து கிட்டும் விடுதலைதான்.
..
ஜெர்மானிய விடுதலை என்பது மனிதனின் விடுதலைதான். இந்த விடுதலையின் மூளை தத்துவம். இதன் இதயம் பாட்டாளி வர்க்கம்.”

-இதில் மார்க்ஸ் விடுதலைக்கான சாத்தியப்பாடு பாட்டாளிவர்க்கத்திடம் இருப்பதையும், பாட்டாளி வர்க்கம் தமது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடமும், தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடத்திலும் காண்பதை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். அதாவது பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமான பொருள்முதல்வாதம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் சார்புடையதாகும். இங்கே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவச் சார்பையே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை புரிந்து கொள்ளாததால்தான், பலபேர் தமது கருத்திற்கு ஏற்ப மார்க்சின் இந்த முன்னுரைக்கு விளக்கம் கொடுக்க முனைகின்றனர்.

கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை  (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்) என்று எங்கெல்ஸ் கூறுகிறார். இதனை மேலும் விரிவாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் :-
“கம்யூனிஸ்ட்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக இருக்கவிலலை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள். பாட்டாளி வாக்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை”.

-என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டுள்ளபடி கம்யூனிஸ்டுகள் தமது கோட்பாட்டை உருவாக்குவதற்கு வேண்டிய தத்துவத்தைப் பாட்டாளி வர்க்கத்திடமிருந்தே பெறுகின்றனர். இதனைத்தான் மேலே மார்க்சின் முன்னுரை கூறுகிறது:-  தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவே, பாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தைத் தத்துவத்திடம் காண்கிறது .

      இவ்வாறு மார்க்சின் படைப்புகளை இணைத்துக் கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தின் தத்துவம் என்பது பொருள்முதல்வாதம்தான் என்பதை லெனின் விளக்குவதை பார்ப்போம்.

“பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும்  .. ..

.. ஆகவே பொருள்முதல்வாதத்தை  மறுப்பதற்கும்  பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்துமுதல்வாதத்தின் பலவகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.”
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      கம்யூனிஸ்டுகள் பொருள்முதல்வாதத்திடமிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் தவறாய்ப் போவதை மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி விளக்கி வந்ததை லெனின் இங்கு குறிப்பிடுகிறார். மேலும்  ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷிவிக்)யின் நகல் வேலைத்திட்டத்திலிருந்து மதத்தைப் பற்றிக் குறிப்பிடும் வேலைத் திட்டப்பகுதில் தெரிவிக்கிறார். சுரண்டும் வர்க்கங்களுக்கும் நிறுவன மதப் பிரசாரங்களுக்கும் இடையில் உள்ள இணைப்பை முழுமையாக ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள். இதன் மூலமே மதக் கேடுகளிலிருந்து உழைக்கும் மக்களை உண்மையிலேயே விடுவிக்க முடியும். இதற்கான விஞ்ஞானக் கல்விக்கும், மத எதிப்புப் பிரச்சாரத்திற்கும்  நிறுவன முறையில் சிறந்த ஏற்பாடுகளைக் கட்டாயம் கம்யூனிஸ்ட் கட்சி  செய்து தர வேண்டும் என்கிறார் லெனின். மதத்தை அரசிலிருந்தும், கல்வி நிலையங்களை மதத்திலிருந்தும் பிரித்துவிடுவதற்கு பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள்கூட வாக்குறுதிகள் கொடுத்தார்கள். ஆனால் உலகில் எங்கும் இவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதற்குக் காரணம் என்று லெனின் கூறுகிறார்:-

மூலதனத்திற்கும் மதப் பிரச்சாரத்திற்கும் இடையில் உண்மையில் பல்வேறு வகைகளில் இணைப்புகள் இருப்பதுதான்.

      இதன்மூலம் மதத்திற்கு உரித்தான வர்க்கச் சார்பை புரிந்துகொள்ள வேண்டும். இதனை லெனின் வேறோர் இடத்தில் மேலும் விவரிக்கிறார். எதிர்ப்புரட்சி பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரிதிநிதி மதத்தைப் பலப்படுத்தவே விரும்புகிறார். மக்களுக்கிடையில் மதத்தின் செல்வாக்குப் பெருகவேண்டும், அதற்கு இன்றைய மதம் போதாக் குறையானதாகவும், காலம் கடந்துவிட்டதாகவும் இருக்கிறது என்று கருதுகிறார். மதம் சமூக வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பூர்ஷ்வா வார்க்கத்தின் பிரதிநிதி விரும்புகிறார்:-
‘குறிக்கோள்களைச் சாதிப்பதற்கு லாயக்கற்ற முறையில் கந்தல் கந்தலாகி விட்டன. எனவே சற்று அதிகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட மெருகிடப்பட்ட சாதனங்கள் தேவைப்படுகின்றன. மக்களை வெறிமயக்க முறச்செய்வதற்குப் போலீஸ், மதம் இனிமேல் சரிப்பட்டு வராது. அதிகமான அளவில் பண்புள்ள, சற்று நவீனமான தேர்ச்சித் திறம் அதிகமான மதத்தை எங்களிடம் கொடுங்கள். சுய நிர்வாகம் நடத்தும் மத நிறுவன வட்டாரங்கள் சிறந்தவையாக இருக்கும். இதைதான் எதேச்சாதிகாரத்திடமிருந்து மூலதனம் வேண்டிக் கொண்டிருக்கிறது.”
(-வர்க்கங்களும் கட்சிகளும் மதம் மற்றும் மாதா கோவில்களின்
பால் அவர்களுடைய மனப்பான்மையும்)

மூலதனத்திற்கும் மதஒடுக்குமுறைக்கும் உள்ள நெருக்கத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் புரிந்திருக்க வேண்டும், அப்போதுதான் மதத்தின் வர்க்கச்சார்பை அறிந்தவர்களாவார்கள். மதத்திற்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையேயுள்ள உறவையும் சார்பையும் உணராதவர்கள், பாட்டாளி வர்க்க உணர்வை முழுமையாக பெற்றவர்களாக மாட்டார்கள்.