Wednesday 4 April 2018

மார்க்சியப் பார்வையில் அத்வைதம் – நூல் விமர்சனம்


ஆசிரியர் : பி.இளங்கோ சுப்பிரமணியன்
விலை :ரூபாய் 70/-

வெளியீடு:-
நியூட்டன் அறிவியல் மன்றம்,
சுபிக்சா அடுக்ககம்,
5/5, 6ஆவது தெரு,
சௌராஷ்டிரா நகர், சூளைமேடு,
சென்னை 94.

அலைபேசி எண்- 9677219512



இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.

இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

பிரம்மம் ஒன்றே மெய், பிரபஞ்சம் பொய்என்ற ஒற்றை வரியின் அடிப்படையிலேயே நூல் முழுதும் அத்வைதத்தை விமர்சித்துள்ளார். இந்த ஒற்றை வரியை விளக்குவதற்கு ஆதி சங்கரர் எழுதிய எதையும் கணக்கில் கொள்ளவில்லை. போகிற போக்கில் மாயை, கயிற்றரவு என்கிறார் அவ்வளவே. அத்வைதத்தின் உலக மறுப்பு என்ற ஒன்றே விமர்சிப்பதற்குப் போதுமானதாக எண்ணியுள்ளார்.  

அத்வைதம், மிகத் தீவிரமான ஓர் அப்பாலைத் தத்துவம் (பக்கம் 18) என்ற விமர்சனத்தை மட்டுமே முன்வைத்துள்ளார். கருத்துமுதல்வாதம், அகநிலையானதாக (அத்வைதம்) அல்லது புறநிலையானதாக (துவைதம்) இருந்தாலும் அதன் வர்க்க சார்பை அம்பலப்படுத்துவதே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் நோக்கமாகும். ஆனால் தோழர் அத்வைதத்தின் தீவிரமான அப்பாலை கண்ணோட்டத்தைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறார். அதனால் ராமாநுஜரின் விசிட்டாத்வைதம் சிறப்பானதாகத் தோழருக்குத் தோன்றுகிறது.

புறவுலகம் மாயை என்ற சங்கரின் கருத்தை ராமானுஜர் நிராகரித்து, புறவுலகின் உண்மையை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அத்வைதத்தில் உள்ள அப்பாலைத் தத்துவத் தன்மையை அகற்றினார்.” (பக்கம் - 40)

அத்வைதத்தின் அதிதீவிர அப்பாலைத் தத்துவத்தை மறுத்து, எளிய அப்பாலைத் தத்துவத்தை முன்னிருத்துவது எந்தவகை மார்க்சியப் பார்வை?  இரு அப்பாலைத் தத்துவமும் தீர்வை, இந்த உலக்கிற்கு அப்பால் உள்ளதில் (பிரம்மத்தில்) தானே வைத்துள்ளது.

மேலும், சங்கரின் ஞான மார்க்கத்திற்குப் பதிலா பக்தி மார்க்கத்தைப் பரிந்துரைத்தார். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு என்றார் ராமானுஜர். இப்படிச் சொல்வதன் மூலம் இதில் ஒரு இருமை ஏற்படுகிறது. ஆனால் இடைவிடாத பக்தியின் மூலம் ஜீவாத்மா முக்தி அடைந்து பரமாத்மா என்னும் உன்னத நிலையை எய்த இயலும் என்று ராமானுஜர் கூறுவதால். இதில் அத்வைதம் உருவாகி விடுகிறது. எனவேதான் ராமாநுஜரின் தத்துவம் சிறப்புப் பொருந்திய அத்வைதம் எனப்படுகிறது.” (பக்கம் - 40)

ராமானுஜரின் இந்தச் சிறப்புப் பொருந்திய அத்வைதத்தால் பொருள் உற்பத்திக்கு என்ன பயன்? இது தோழரின் வழியிலான கேள்வி. இக்கேள்வி மார்க்சிய வழிப்பட்டதல்ல. ஜீவாத்மா முக்தி அடைந்து பரமாத்மா என்னும் உன்னத நிலையை எய்த இயலும் என்று ராமானுஜர் கூறுவதால் பொருளுற்பத்திக்கு என்ன பயன்கிட்டப் போகிறது.

அத்வைதத்தை எளிமையாகப்பட்ட விதத்தில் புரிந்து கொண்டது போலவே மார்க்சியத்தையும் எளிமைப்பட்ட வகையில் புரிந்து கொண்டுள்ளார். இந்தப் புரிதலின் பலவீனம் நூல் முழுதும் காணப்படுகிறது.

மாயை என்பதற்குப் பொருளே இல்லை (பக்கம் 32) என்று அத்வைதம் கூறுவதாகத் தோழர் குறிப்பிட்டுள்ளர். அத்வைதத்தின் மாயைப் பற்றிய விளக்கம் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அத்வைதம் முற்ற இல்லை என்று கூறவில்லை. இருப்புடையது, இருப்பில்லாதது, இந்த இரு வகைப்பட்டதும் அன்று என்றே பிரபஞ்சத்திற்குக்கு விளக்கம் கொடுக்கிறது.

மாயைக்கு இருப்புக் கிடையாது. இருப்பிடம் இல்லாமலும் இல்லை. இந்த இரு வகைப்பட்டதன்று. பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ இல்லை. அங்கங்கள் உள்ளதாகவோ, அங்கங்கள் இல்லாததாகவோ இரண்டும் கூடியதோ இல்லை. அறியவொண்ணா அநிர்வசநீயமாகும்
(விவேகசூடாமணி- 109)

மாயை என்பதை ஒன்றும் இல்லாத சூனியம் என்று அத்வைதம் விளக்கப்படுத்தவில்லை. உலகே மாயம் என்கிற பாமர மக்களின் கருத்தில் இருந்து தோழர் அத்வைதத்தைப் பற்றிய முடிவுக்கு வந்துள்ளார். உண்மையில் மாயை உலகைப் படைக்கிறது என்று தான் சங்கரர் கூறுகிறார்.

மாயை என்பது அவ்யக்தம் எனப் பெயருடையது, அநாதியானது, அவித்தை வடிவானது, முக்குண வடிவானது, பரமேஸ்வனுடைய உன்னதச் சச்தியாக இருப்பது. சிறந்த புத்திமானால் தான் அதனுடைய செயல்களினின்று அது ஊகித்தறியப்படும். அந்த மாயையால் இந்த உலகம் முழுவதும் தோற்றுவிக்கப்படுகிறது
(விவேகசூடாமணி- பக்கம் 108)

                மாயை அநாதியானது என்று தான் சங்கரர் கூறுகிறார். மாயை இறைவனின் சக்தியாகவும், உலகப் படைப்புக்கு காரணமாகவும் இருப்பதாகத் தான் சங்கரர் கூறுகிறார்.

ஞானயோகத்தையே அத்வைதம் வலியுறுத்துகிறது என்பது உண்மையே, ஆனால் அது கர்ம யோகத்தைப் புறக்கண்ணிக்க வில்லை மறுக்கவும் இல்லை. கர்ம யோகம், ஞானம் பெறுவதற்கு முதற்படியானது என்ப்தையே சங்கரர் மறுக்கிறார். ஞான யோகத்தை மேற்கொள்வதற்கான பக்குவத்தை அதாவது சித்தசுத்திக்கு (மனத்தூய்மைக்கு) கர்ம யோகம் செய்ய வேண்டும் என்பதே சங்கரரின் கருத்தாகும்.

வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்கள் சுயதர்மத்தை கடைபிடிப்பதும் அதனால் அந்தக்கரணச் சுத்தியும் ஏற்படுகிறது. மனத்தூய்மை பெற்ற அவனுக்கு இறை அனுபூதி கிடைக்கிறது. அதுவே சம்சாரத்தை நாசமடையச் செய்கிறது
(விவேகசூடாமணி- பக்கம் 148)

சாஸ்திரங்களைப் படிக்கட்டும், தேவர்களைக் குறித்து யாகங்களைச் செய்யட்டும், பலவிதக் கர்மங்களைச் செய்யட்டும், அநேக தேவதைகளை வழிபடட்டும், ஆயினும் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றேஎன்ற ஐக்கியப் போதம் ஏற்படாதவரை, பிரம்மாவின் நூறு வயது முடிந்த போதிலும்கூட முக்தி என்பத கிடைக்காது
(விவேகசூடாமணி-6)

-ஆக இறைவழிபாட்டையோ அதற்கான சடங்கையோ சங்கரர் மறுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

கர்மத்தை வலியுறுத்தும் பிரவிருத்த தர்மமானது பல வர்ணங்களையும் ஆஸ்ரமங்களையும் கருத்திற்கொண்டு விதிக்கப்பட்டதாகும். அது செல்வம் பெறுவதற்கும், சொர்க்கத்திற்குச் செல்வதற்கும் உரியதாக இருந்தபோதிலும் பயன்கருதாது, ஈஸ்வரார்ப்பணமாகச் செய்யப்படும் பொழுது சித்தசுத்தியை உண்டுபண்ணும். சித்தசுத்தி என்னும் பரிசுத்தமான மனம் ஞானநிஷ்டைக்குத் தகுதி பெறுகின்றது. இவ்வாறு ஞானம் பெறச் செய்வதின் மூலம் அது முக்திக்குக் காரணமாகின்றது
(ஆதிசங்கரர் - பகவத்கீதை அறிமுகம்)

வேத சடங்கு செய்வதைச் சங்கரர் தடுக்கவில்லை. ஆனால் தோழரின் கடவுளுக்கோ சடங்குகளுக்கோ அத்வைதம் எந்த விதமான சிறப்பிடத்தையும் அளிக்கவில்லை.என்ற எளிமைப்படுத்தப்பட்ட புரிதல் தவறானதாகும்.

விவகார உலகில் கடவுள் இருக்கிறார் என்பதை அத்வைதம் மறுக்கவில்லை. மாயையினால் கடவுள் தோன்றுகிறார். அவித்தையினால் ஜீவன் தோன்றுகிறது என்பதுதான் அத்வைதம். ஞானிகளுக்கு விதிக்கப்பட்டதை மட்டுமே தோழர் கணக்கில் கொண்டுள்ளார். மனத்தூய்மை பெறுவதற்கான கர்ம யோகத்தைக் கண்டு கொள்வேயில்லை.

மேலும் தோழர் இயக்கவியல் அற்ற பொருள்முதல்வாதத்தைப் பின்பற்றுவதனால் அவரது பார்வை பகுத்தறிவு வகைப்பட்டதாகவே மிஞ்சுகிறது. இந்தப் பகுத்தறிவு பார்வையை இறுதியில் பார்ப்போம்.

பொருள்முதல்வாதத்துடன் ஒப்பிடும் போது கருத்துமுதல்வாதம் பல மடங்கு பின்தங்கியே நின்றது (பக்கம்- 22) என்கிறார் தோழர்.  மேலும், பொருள்முதல்வாதம் ஒரு வாழ்வு ஏற்புத் தத்துவம் அதனால் தத்துவ அரங்கில் சிம்மாசனத்தல் அமர்ந்திருக்கிறது (பக்கம்- 56) என்று கூறியுள்ளார். இது மார்க்சிய அணுகுமுறைக்கு மாறான போக்காகும்.

பழைய பொருள்முதல்வாதம் விஞ்ஞான வளர்ச்சியை எட்டாத காலத்தில் கருத்துமுதல்வாதத்தின் முன் நிலைமறுக்கப்பட்டது என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

தொன்மைக் காலத் தத்துவம் புராதனமான இயற்கைப் பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும் இடையிலான உறவை தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால் இந்தப் பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும், இறுதியாக ஒரு கடவுட் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது.

எனவே பழைய பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால் தத்துவத்தின் மேலதிக வளர்ச்சிப் போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது.
(டூரிங்குக்கு மறுப்பு)

நவீன விஞ்ஞான வளர்ச்சி பெறாத காலத்தில் கருத்துமுதல்வாதத்திற்கு முன்பாகப் பொருள்முதல்வாதம் பின்தங்கி இருந்தது. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இன்று பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்தை நிலைமறுத்துவிட்டு நிலைபெற்றது என்பதே மார்க்சியப் பார்வையாகும்.

தத்துவத்தின் வர்க்க சார்ப்பை சுட்டுவதே மார்க்சியப் பார்வையாகும். ஆனால் தோழர் உற்பத்திக்கு உதவிடுவது தத்துவம் என்கிறார். (பக்கம் - 43)

உற்பத்திக்கு உதவிடும் தத்துவம் கருத்துமுதல்வாதமா? பொருள்முதல்வாதமா? என்று கேள்வி கேட்டால் பதில் எத்தகையதாக இருக்கும். கருத்துமுதல்வாதம் சுரண்டல்வாதிகளுக்கு உதவிடும், பொருள்முதல்வாதம் சுரண்டலுக்கு ஆளானவர்களுக்கு உதவிடும்.

உற்பத்திக்கு பயன்படுவதே தத்துவம் என்றால் தத்துவத்தின் வர்க்க சார்பை எப்படிப் பேச முடியும். உற்பதிக்கு உதவிடும் என்ற கண்ணோட்டத்தில் பெரிய ஆபத்து இருக்கிறது. உற்பத்திக்குக் கருத்துமுதல்வாதம் உதவிடுகிறதா? பொருள்முதல்வாதம் உதவிடுகிறதா? என்ற கேள்வி எழுப்பினால் தொழிலாளர்களின் பொருள்முதல்வாதம், போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இது உற்பத்திக்குத் தடையான தத்துவம் என்ற முடிவுக்கு வரவேண்டிதாகிவிடும்.

தோழரின் பார்வை பகுத்தறிவு வகைப்பட்டதே இருக்கிறது. அயன் ராண்ட்டை முன்வைத்து, மதம் மனிதனுக்குத் தேவையற்றது என்கிறார்.

மார்க்சியம் மதத்தின் இருப்பிற்கான காரணத்தைப் புறநிலையில் கண்டு, அந்தப் புறநிலையின் மறைவோடு மதத்தின் மறைவை விவரிக்கிறது. மதம் தேவை- தேவையில்லை என்ற அணுகுமுறையை மார்க்சியம் பின்பற்றுவது இல்லை.

சுரண்டும் எதார்த்த உலகை அப்படியே அங்கிகரிப்பதே சங்கரரின் அத்வைதத் தத்துவத்தின் வர்க்க கண்ணோட்டமாகும்.  இந்தச் சமூகத்தை அப்படியே ஏற்பதின் மூலம் வர்க்க ஒடுக்கு முறைக்கு ஆதரவாக இருப்பதே அத்வைதத்தின் வர்க்க சார்பாகும். அத்வைதம் இன்றைய பல நவீன சித்தாந்தப் போக்குகளுக்கு இடம் கொடுக்கிறது. இருத்தலியல்  சிந்தனைக்கு அத்வைதம் இடம் கொடுக்கிறது.

ஆதிசங்கரர்:- “சென்றதோ, இன்னும் வராமல் இருப்பதோ, எதையும் நான் நினைவில் கொள்வதில்லை, ஆலோசித்துப் பார்ப்பதும் இல்லை, இப்போது (நிகழ் காலத்தில்) கிடைக்கும் , நல்லதையும் கெட்டதையும் ஆசையோ வெறுப்போ இன்றி அனுபவிக்கிறேன்(சதாசாரானுசந்தானம்- 15)

இதனைத் தோழர் எந்த வகையிலும் புரிந்து கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தோழரின் கண்ணோட்டத்தில் வர்க்க சார்பு இல்லை எனபதேயாகும்.

அதனால் தான் அவரால், இவ்வாறு எழுத முடிகிறது:-

தத்துவம் என்பது எவரின் மடியிலும் தவழும் குழந்தை. பயன்படுத்துகிறவர்களைப் பொறுத்து எந்தத் தத்துவமும் எந்த முகாமுக்கும் பயன்படும்.
…..
எந்தத் தத்துவத்தையும் எவரும் எந்த நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம். அதற்கெல்லாம் இடமளிப்பதுதான் தத்துவம்” (பக்கம் - 46)

இந்த வர்க்கப் பார்வையற்ற கண்ணோட்டம் திருத்தல்வாதத்திற்கே பயன்படும். இது முரணற்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு எதிரானதாகும். வர்க்கப் பார்வையற்ற தோழரின் கண்ணோட்டம் ஆன்மீகப் பாதையாகவும் வெளிப்பட்டுள்ளது.

அத்வைதம் ஞான மார்க்கத்தைப் போதித்தது. மார்க்கம் என்றால் வழி என்று பொருள். அத்வைதம் கூறும் உன்னத நிலையை ஒருவர் அடைய வேண்டும் என்றால் அவர் அதற்கான ஞானத்தைப் பெற வேண்டும்.

இதற்கு மாறாக, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் பக்தி மார்க்கத்தைப் போதித்தது. இடைவிடாத பக்தி மூலம் விசிஷ்டாத்வைதம் கூறும் உன்னத நிலையை ஒருவர் எய்த முடியும் என்றார் ராமானுஜர் (பக்கம் - 40)

வாழ்க்கைக்கு வழிகாட்டாத ஆன்மீகம் உன்னதமான முக்திக்கு வழிகாட்டுகிறது.

ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தையும் தவறாகவே விளக்கப்படுத்துகிறார்:-
“..இடைவிடாத பக்தியின் மூலம் ஜீவாத்மா முக்தி அடைந்து பரமாத்மா என்னும் உன்னத நிலையை எய்த இயலும் என்று ராமாநுஜர் கூறுவதால், இதில் அத்வைதம் உருவாகி விடுகிறது. எனவே தான் ராமாநுஜரின் தத்துவம் சிறப்புப் பொருந்திய அத்வைதம் எனப்படுகிறது.” (பக்கம் - 40)

விசிஷ்டாத்வைதம் பரபக்தியையே வலியுறுத்துகிறது, பரபக்தி என்றால் சரணாகதி, அடுத்து இத் தத்துவத்தின் தனித்த பார்வை அந்தர்யாமியாகும். அதாவது பரமாத்மா, அனைத்திலும் அந்தர்யாமியாக இருக்கிறார். ஜீவன் உட்பட அனைத்திலும் பரமாத்மா அந்தர்யாமியாக ஊடுருவி இருப்பதனால் தான் இதனைச் சிறப்புப் பொருந்திய அத்வைதம் என்று அழைக்கப்படுகிறது. விசிஷ்டாத்வைதத்தையும் தோழர் எளிமைப்படுத்தப்பட்ட புரிதலில் தான் இருக்கிறார்.

மோட்டார் சைக்கிளில் செல்பவனுக்கு திடீரென்று அத்வைத மனநிலை வாய்த்துவிட்டால் அவனால் வீடு போய் சேர முடியுமா? (32) என தோழர் கேட்கிறார். அத்வைத நிலை அடைந்தால் அவன் ஏன் வீட்டை நோக்கி செல்கிறான். அதன் மறுப்பு தானே அத்வைத நிலை. ஞானம் பெற்ற அத்வைத நிலையில் மனைவி, குழந்தை என்ற உறவுகளை துறக்கப்படுகிறது என்று தான் அத்வைதம் போதிக்கிறது. அத்வைத ஞானம் பெற்றவன் வியவகார சத்தியத்தை விடுத்து பரமார்த்த சத்திய நிலைக்கு செல்கிறான்.

இந்த ஞான நிலை பெறுவதற்கு முன்பு உள்ள வியவகார சத்தியத்தில் பன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை சங்கரர் பல இடங்களில் விளக்கியிருக்கிறார். விவேக சூடாமணியையும், பாஷியத்தையும் ஏற்ற தோழர் இந்த இரு சத்தியத்தை வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாமல், பரமார்த்த சத்திய நிலையை, வியவகார சத்திய நிலைக்கு பொருத்தி குழப்பிக் கொள்கிறார்.

பிரம்ம சூத்திரம்- பாஷ்யம், 2-1 சூத்திரம் பதினான்கில், இதற்கு நேரடியாகவே சங்கரர் பதிலளித்துள்ளார்.

ஒன்றாய் இருக்கும் தன்மை ஒன்றுதான் உண்மையானது என்று ஒப்புக்கொண்டால் பலவாக இருக்கும் தன்மை கிடையாது என்று கூறினால், உலகத்தில் உள்ள பிரத்தியட்சம் முதலான பிரமாணங்கள் பொருளற்றுப் போய்விடும். கட்டளையிடுவதும் தடுப்பதுமான சாஸ்திரமும், குரு சீடன் முதலான வேற்றுமையும் இல்லாததாகிப் போய்விடும். அவ்வாறாயின் மோட்சத்தை அளிக்கிற சாஸ்திரத்திற்கு பாதகம் ஏற்படும் என்று எழுப்பும் கேள்விக்கு, மறுத்து பதிலளிக்கும் போது சரங்கரர் வியவகார உலகத்தைப் பற்றி கூறுகிறார்.

இது பாதகமில்லை. பிரம்மமே ஆத்மா என்ற ஞானம் ஏற்படுவதற்கு முன்னால் எல்லா வியவகாரங்களுக்கும் உண்மைத் தன்மை பொருந்துகிறது. இந்த இடத்தில் ஒரு உதாரணத்தையும் தருகிறார். உறக்கத்தின் போது மனிதன் கனவில் காணும் பொருட்கள் விழித்துக் கொள்ளும்வரை அவனுக்கு பிரத்தியட்சமாகத் தோன்றுவது போல், வியவகார உலகத்தில் பன்மைகள் பொருந்தும். பிரம்மமே ஆத்மாவென்ற அறிவு ஏற்படுவதற்கு முன்னால் லௌகிகமோ, வைதீகமோ எல்லா வியவகாரமும் பொருந்தும் என்று தமது பகத்தை சங்கரர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகு மறுப்பாளர்களை மறுத்தால் போதும் என்று தோழர் கருதுகிறார். உலகு பற்றிய சங்கரரின் கண்ணோட்டத்தை மார்க்சிய வழியில் புரிந்து கொள்வதற்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாய வழிகாட்டுகிறார். இடதுசாரிகள் இவரின் வழியில் தத்துவ விவாதத்தைத் தொடர்வோம்.

உலகம் வெறும் பொய்; வக்கரித்துத் திரிந்து போன மனம் படைத்தபொய்யே அது. இப்படி உலகத்தைப் பற்றி வெளிப்படையாகவே காட்டும் அசிரத்தையின் மறுபுறம் இந்த உலகத்தை அப்படியே எதிலும் தலையிடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாதமும் இருக்கிறது. நிஜமான ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் இந்தச் சோம்பேறிகளைக் கொழுக்க வைப்பதற்காக மட்டும் உழைத்து ஓடாக வேண்டும் என்பதற்காகவே உலகம் பொய் என்ற சாக்குப் போக்கும் சமாதானமும் யாவும் எப்போதும் முன்பு இருந்தபடியே இருப்பதே சட்டம் என்று பேசுவதும் வேண்டியதாயிற்று; ஏனெனில், இதுவே வர்ணாசிரம முறைச் சமுதாயத்தின் இயல்பான கொத்தடிமைத்தனம்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
அழிந்தனவும் பக்கம்-643)

       அத்வைதம் இந்த மண்ணில் தோன்றிய தத்துவம் ஆனால் குறைவாக அறியப்பட்டு இருக்கிறது என்றும், இது மேட்டுகுடி தத்துவம் என்றும், தோழர் கூறுகிறார். தத்துவப் படிப்பு அதிகமாக மேட்டுகுடியில் தான் இருக்கிறது. ஆனால் இன்றைய நிலையில் மேட்டுகுடியல்லாத இளைஞர்களும் தத்துவத்தின் மீது ஆர்வம் மேலோங்கி படித்து வருகின்றனர். அப்படிப் படிப்பவர்கள் அதிகமாக அத்வைதத்தையே நாடுகின்றனர் என்பதே உண்மை. அது மட்டுமல்லாத மற்ற தத்துவ விளக்கங்களில் அத்வைதத்தின் தாக்கம் இருக்கிறது என்பதே உண்மை. ஓஷோவின் நூல்களை மேட்டுகுடியினர் மட்டும் படிக்கின்ற நிலை எப்போதோ மாறிவிட்டது.

       இன்றைய நிலையில் அதிகமானோர் கற்கின்ற தத்துவமாக அத்வைதம் இருக்கிறது. மார்க்சிய தத்துவமும் இதற்கு அடுத்த நிலையில் தான். இந்த நிலைமாற வேண்டும் என்பதே இடதுசாரிகளின் விருப்பம். அதற்கு மார்க்சிய தத்துவ வகுப்புகளும், அதனைத் தொடர்ந்து மார்க்சிய அணுகுமுறையில் இந்திய தத்துவங்களுக்கான வகுப்புகளும் அவசியம்.

தமிழில் வெளிவந்துள்ள தத்துவ நூல்களில் அத்வைதம் பற்றிய நூல்களே அதிகம். இடைவிடாமல் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக அத்வைத நூல்கள் கிடைக்கின்றன. சைவசித்தாந்த நூல்கள் கூட 90-களில் கிடைக்காமல் இருந்தது. தற்போது சைவசித்தாந்த நூல்கள் அதிகமாக வெளிவந்துள்ளது. இருந்தாலும் அத்வைத நூலுக்கு அடுத்தபடியாகத்தான் சைவசித்தாந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்வைதத் தத்துவத்தைப் படிப்பதற்கு அதிகப் பயிற்சி பள்ளிகள் இருக்கின்றன. இதிலும் சைவசித்தாந்த பயிற்சி பள்ளிகள் குறைவு தான். அத்வைத நூல் வெளியீட்டகமும் அதிகமே.

ஆக இந்நூல் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்குமே அல்லாது இடதுசாரிகளுக்கு முழுமையாக உதவிடும் நூலாக ஆகாது. இடதுசாரிகளின் சித்தாந்த பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையே இந்நூல் வெளிப்படுத்துகிறது.  நா.வானமாமலை, ராகுல்ஜி, தேவிபிரசாத் சட்டோபாத்யாய ஆகியோர்களின் நூல்கள் இன்றைய நிலையில் இந்தியத் தத்துவத்தை மார்க்சியப் பார்வையில் அறிந்து கொள்வதற்கு உதவிடும்.

தேவை அதிகமாகத் தான் இருக்கிறது. இப்போது தத்துவத்தின் மீது ஆர்வம் கொண்டு படித்துவருகிற தோழர்களைப் பயிற்சி கொடுத்து நூலாக எழுத வைப்பதே முதன்மையானக் கடமையாகும்.  இடதுசாரிகளில் தத்துவச் சிந்தனை மேலோங்க இதனை உடனடியாக இணைந்து செய்ய வேண்டும்.

4 comments:

  1. ஆழமாக அலசி உள்ளீர்கள்.சிறப்பான பதிவு மட்டுமல்ல.பாரபச்சமற்ற பதிவும் கூட.

    ReplyDelete
  2. நன்றி தோழர்.

    ReplyDelete
  3. மிக ஆய்ந்து உணர்ந்து வரையப்பட்ட பதிவு.மெய்யை மெய்யாகக் காண முயலவேண்டும் என்பதே வெளிப்பாடு. 👏

    ReplyDelete
  4. நல்ல முயற்சி பாராட்டுகள்.

    ReplyDelete