Sunday, 12 September 2021

தோழர் ஏவின் மனோ அவர்களால் எழுதப்பட்டு, ஆய்தம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “கம்யூனிசம் என்றால் என்ன?” நூல் அறிமுகம்



கம்யூனிஸ்டாக செயல்படுபவர்களுக்கு கம்யூனிசத்தின் அடிப்படைகளைப் பற்றிய புரிதல் அவசியம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. 

கம்யூனிசம் கற்று அறிவது கடினமா? என்ற கேள்விக்கு “கடினம்” என்பது தான் பதில். கடினம் எனறு கூறுவதால் இதை அனைவராலும படித்திட முடியாது என்று பொருள் கொள்ள கூடாது. 

கம்யூனிசத்தைப் படித்தல் என்பதே நடைமுறையோடு தொடர்புடையதே. கம்யூனிசம் சரியானது என்பதை நடைமுறையில் தான் உறுதி செய்கிறோம். 

கம்யூனிசம் மூன்று பிரிவுகளாக இருக்கிறது. தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம். இந்த மூன்றினுள் அனைத்தும் அடங்கும். இந்த மூன்றையும் படித்துப் புரிந்து கொள்வதற்கு சில அடிப்படைத் அறிவு தேவைப்படுகிறது. அந்த அடிப்படை அறிவை கட்சிகளில் செயல்படும் போது பெறலாம். 

கம்யூனிசத்தை பிறர் துணை இன்றி படிப்பது சிரமம் தான். தோழர்களின் உதவியோடு படிக்கும் போது அந்த சிரமம் குறையும். எத்தகைய மெனக்கெடலும் இல்லாமல் கம்யூனிசத்தைப் படிக்க முடியாது. முயற்சி அவசியம். 

எளிய அறிமுக நூல்களில் இருந்து கம்யூனிசத்தைப் படிக்கத் தொடங்க வேண்டும்.  அப்படிப் பட்ட எளிய அறிமுக நூல் தான் தோழர் ஏவின் மனோ எழுதிய கம்யூனிசம் என்றால் என்ன? 

இந்த நூல் ஒரு புது முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதாவது பேச்சுத் தமிழில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 

எளிமை என்ற பெயரால் நீர்த்துப் போக வைத்தல் மிகவும் தீங்கானது, மற்றபடி இது போன்ற முயற்சியை வரவேற்க வேண்டும். தொடக்க நிலை வாசகர்களை மனதில் கொள்ளும் போது இது போன்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன. 

எளிமை என்ற பெயரால் எந்த மார்க்சியக் கலைச் சொற்களையும் மாறிட முடியாது. இந்த நூலிலும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம், இயக்கவியல், வாழ்நிலை, உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகள் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டள்ளது. இதனைத் தவிர்த்து கம்யூனிசத்தைக் கற்க முடியாது. எல்லாத் துறைகளிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் இருக்கின்றன. இந்த கலைச் சொற்களை முதலில் அறிந்து கொண்டால், அதுவே அந்த துறையை நன்றாகப் புரிந்து கொள்ளவதற்கு உதவிடும். 

இதனை இந்த நூல் சரியாக சுட்டிக்காட்டுக்கிறது. 

““மார்க்சியம்” ங்குறது ஒரு தத்துவம். அந்த தத்துவத்த கத்துக்கனும்னா சில. பல தத்துவார்த் வார்த்தைகள நாம கத்துகிட்டே ஆவணும். கொஞ்சம் எளிமை படுத்தலாமேனு எதையாவது மாத்த ஆரம்பிச்சா வார்த்தையோட அர்த்தம் மாறிடும், அப்புறம் சிக்கலாகிடும்” (31) என்று இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. 

தலைவர்களைக் கொண்டாடுவதோடு அவர்களின் தத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் என்று இந்த நூலில் கூறப்பட்டது மிக முக்கியமான விஷயமாகும். இங்கே மார்க்சை எவ்வளவு கொண்டாடுகிறோமோ அந்தளவுக்கு மார்க்சியத்தை அறிந்திருகிறோமா? என்ற கேள்வி எழுப்பினால் பதில் எதிர்மறையாத்தான் இருக்கிறது. தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் கோட்பாடுகளை அறிந்து கொள்வதற்கு உதவிட வேண்டும். அவர்களை போற்றுவதோடு நின்றுபோய் விடக்கூடாது.  உண்மையில் அவர்களை சிறப்பிக்க வேண்டுமனால், அவர்களின் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும். கம்யூனிசம் என்றால் என்ன? என்ற இந்த நூலில் காரல் மார்க்சின் கம்யூனிசத்தை சுருக்கமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தத்துவம் என்றால் என்ன என்பதற்கு பெரிய விளக்கங்கள் கொடுக்கின்ற போக்குக்கு மாறாக இந்த நூல். 

"நடைமுறையில் நாம் எவற்றை எல்லாம் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமோ அதன் மீது நமக்கு இருக்கும் அறிவே தத்துவம்" என்ற ஜார்ஜ் பொலிட்சர் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிவை இந் நூல் நமக்கு அளிக்கிறது. 

இந்த நூலில் ஒரு கேள்வி எழுப்பட்டுள்ளது, மார்க்சும் எங்கெல்சும் பிறக்க வில்லை என்றால் மார்க்சியம் தோன்றி இருக்குமா என்பதே அந்த கேள்வி? இதற்கு தோன்றியிருக்கும் என்று மார்ச்சிய வழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

மார்க்சியத்தை மார்க்ஸ் உருவாக்கியதால், மார்க்ஸ் மீது பலருக்கு கோபம் இருக்கிறது. ஆனால் மார்க்ஸ் பிறந்திருக்காவிட்டாலும் இந்தக் கோட்பாடு தோன்றியே இருக்கும். அதன் பேர் தான் மாறியிருக்கும். அப்பவும் கோபப்படுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள், மாறிய பெயர் மீது கோபப்படுவார்கள். 

கோட்பாடு உருவாவதற்கான அடிப்படை புறநிலையில்  தான் இருக்கிறது. எந்த சிறந்த அறிஞர்களின் மூளையில் அல்ல. ஆனால் இந்த புறநிலையைப் புரிந்து கொள்வதற்கு சிறந்த அறிஞர்கள் தேவைபடுகிறார்கள். 

இயற்கையின் விதி புறநிலையில் இருக்கிறது, ஆனால் அது மனிதனை கொண்டு இயங்குவதில்லை, மனிதனின் செயற்பாடு இயற்கையில் சில தாக்கத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாம். ஆனால் இயற்கையை இயக்க முடியாது. இயற்கை அறிந்து கொண்டால் விரைவாகப் பயணிக்கலாம். 

சமூகமும்  புறநிலைவிதியின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அது மனிதனைக் கொண்டே செயற்படுகிறது. இந்த பொருளில் தான் மக்களே சமூகத்தைப் படைக்கின்றனர் என்று கூறப்படுகிறது. மக்கள் தாம் நினைத்தபடி எல்லாம் படைத்திட முடியாது, புறநிலைக்கு ஏற்பவே படைக்கின்றனர் என்பதுதான் அதன்பொருள். 

இந்த “கம்யூனிசம் என்றால் என்ன?” என்ற நூல் ஒரு அறிமுகத்தை சிறப்பாக அளித்துள்ளது என்பதில் எனக்கு மன நிறைவைத் தந்துள்ளது. இருந்தாலும் இதில் கூறப்பட்ட சில விஷயங்களைப் பற்றி எனது கருத்தை சொல்ல வேண்டும். 

எது பொருள் என்ற விளக்கத்துக்கு, இந்த நூல், “தோற்றமும், முடிவும் இல்லாத, ஐம்புலன்களால் அறியப்பட கூடிறய புறநிலை யதார்த்தமே பொருள்” என்று கூறப்பட்டுள்ளது. தொடக்க நிலை பொருள்முதல்வாத (Primitive Materialism)    விளக்கம் தான் இது. பார்டீரியா, வைரஸ் ஆகியவற்றை கருவிகளைக் கொண்டு அறியப்படுவது பற்றியும் இந்த நூல் பேசியிருக்கிறது. ஆனால் ஐம்புலன்களுக்கே இந்த நூல் அதிகம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

பொருள் பற்றிய நவீன விளக்கத்திற்கு லெனின் கூறியதற்கு செல்ல வேண்டும். 

 பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் அனைத்தும் பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது. மனிதனை சாராமல் புறநிலையில் இருப்பது பருப்பொருள். இந்த விளக்கத்தையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

அடுத்து இயக்கவியல் பற்றியது, இந்த நூலாசிரியர் நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றி கூறிய அனுபவமே எனக்கும் ஏற்பட்டுள்ளது.  மூன்று விதியில் இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு, அதுவும் சுயமாக எனது இளம் பருவதில் படிக்கும் போது சிரமம் ஏற்பட்டது. ஆனால் புரிந்து கொண்ட பிறகு, இந்த மூன்றாவது விதிதான் எளிமையானதாகப்பட்டது. மூன்று விதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து புரிந்து கொள்ள வேண்டும். முதல் இரண்டு விதிக்கு உதாரணமாக நீரை எடுத்துக் கொண்டது போலவே நிலைமறுப்பு விதிக்கும் நீரை உதாரணமாகக் கொண்டால் மிகவும் எளிதாக இருக்கும். 

பனிக்கட்டி நீராவதும், நீர் ஆவியாவதைக் கொண்டு விளக்கலாம்.  பனிக்கட்டி வெப்படையும் போது பனிக்கட்டி என்கிற திடநிலை மறுக்கப்பட்டு நீர் என்ற திரவ நிலைக்கு மாறும். 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு செல்லும் போது நீர் என்கிற திரவவிலை மறுக்கப்பட்டு நீராவி என்கிற ஆவி நிலைக்கு மாறுகிறது. அவ்வாறு ஒவ்வொரு நிலையும் புதிய நிலையால் மறுக்கப்படுகிறது. அதனால்தான் இந்த விதிக்கு நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்று கூறப்படுகிறது. 

வர்க்கம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இந்த நூலில், “ஒரே விதமான வாழ்நிலையும், அந்த வாழ்நிலையிலிருந்து பிறக்கும் ஒரே விதமான சிந்தனைகளையும் கொண்ட மனித குழுக்கள் வர்க்கங்கள் எனப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் தவறானது கிடையாது தான். இதற்கு முன் சிலவற்றை புரிந்து கொள்ள வேண்டும். 

வர்க்கத்தின் தோற்றம் தனிவுடைமையின் தோற்றத்தோடு தொடர்புடையது. உழைக்கும் வர்க்கம் உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் என்ற இருண்டு வர்க்கங்கள் தனிவுடையினால் தோன்றியது. உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் பணம்படைத்ததாகவும், உழைப்பைச் செலுத்தும் வர்க்கம் ஏழ்மையிலும் இருக்கிறது. வாழ்நிலை எவ்வாறு தோன்றியது என்பதின் பின்புலத்தையும் கூற வேண்டும். 

வாழ்நிலையும் சிந்தனையும் பற்றி பேசும் போது, முதல் உலகப் போர் ஏற்பட்டதுக்கு ஆஸ்திரிய நாட்டு இளவரசர் சுட்டுக் கொண்றதும், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டதுக்கு காரணம் ஹிட்லரை கொல்வதற்கும் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையான சூழ்நிலை என்ன வென்றால், ஏகாதிபத்தியத்தின் சந்தை பிடிக்கும் நோக்காத்தால் தான் உலகப் போர் ஏற்பட்டது. ஏகாதிபத்திய சந்தை தேவையின் நெருக்கடி என்கிற வாழ்நிலையே போருக்கு அடிப்படைக் காரணம் ஆகும். 

இந்த நூலில் கூறப்பட்ட காரணம் சாக்போக்கு காரணமே ஆகும். அடிப்படைக் காரணத்தையும் சேர்த்து கூறவேண்டும். அப்போதுதான் வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ள முடியும். 

மதம் மனிதனுக்கு அபின் என்பதின் விளக்கமாகத்தான் இதயம் அற்றவர்களின் இதயமாக என்று கூறப்பட்டுள்ளது.  இரண்டையும் பிரித்து இந்த நூல் பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. 

மதம் மனிதனுக்கு அபின் என்ற அடிப்படையை விளக்குவதற்கு கூறப்பட்டதே இந்த இதயம் பற்றிய உதாரணம். அடிப்படையை விடுத்து உதாரணத்தைப் பிரிக்கக்கூடாது. மார்க்ஸ் கூறியதை பார்ப்போம். 

மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.

மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும். மதம்பற்றிய விமர்சனம் என்பது, அதன் கருவிலேயே துயரப் பள்ளதாக்கு பற்றிய, அதன் ஒளிப்பிரமையாகவுள்ள மதத்தைப் பற்றிய விமர்சனமாக உள்ளது.”

(ஹெகலின் சட்டம் பற்றிய தத்துவம் குறித்த விமர்சனத்துக்கு பங்களிப்புமுன்னுரை) 

இதுதான் மார்க்ஸ் கூறியது. எந்த வகையிலும் மதத்தை தூக்கிப் பிடிப்பதற்காக இதயத்தைப் பற்றி மார்க்ஸ் கூறவில்லை. 

இந்த நூலை முழுமையாகப் படித்து முடிக்கும் போது இரண்டு விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஆதி பொதுவுடைமைச் சமூக உற்பத்தியில் இருந்து, அடிமை உற்பத்திக்கும், அடிமை உற்பத்தி முறையில் இருந்து, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், முதலாளித்துவ உற்பத்தி முறையில் இருந்து சோஷலிச உற்பத்தி முறைக்கும் மாறுவதற்கு காரணம் என்பதை உற்பத்தி சக்திகள் என்று பொத்தாம் பொதுவாகக் கூறாமல், உற்பத்தி கருவிகள் என்று கூறப்பட்டதை மிகவும் வரவேற்கிறேன். 

 உற்பத்தி சக்திகள் என்றால் உழைக்கும் மக்களை மட்டுமே முன்னிருத்தி, மார்க்ஸ் உழைப்புக் கருவிக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்று மார்க்சியத்தை திருத்தும் போக்கு காணப்படுகிறது. உற்பத்தி கருவி அடிப்படையானது என்பது ருஷ்ய மார்க்சியம் என்று கூறுகிற போக்கும் இருக்கிறது. ஆனால் மார்க்ஸ் கருவிகளையே முன்னிருத்தி உள்ளார் என்பதே உண்மை. 

அடுத்து சாதியைப் பற்றி பேசியது, சரியான அணுகுமுறையாக எனக்குப் பட்டது. 

சாதியத்தை மதத்தோடு மட்டும் முடிச்சுப் போடும் முற்போக்குவாதிகள் இங்கே நிறைபேர் இருக்கின்றனர். ஆனால் இந்த நூல் இதை மறுத்து, “இந்து மதத்தை ஒழிச்சிட்டா சாதி ஒழிஞ்சிரும்னு சொல்றது இந்த உற்த்தி முறைய பத்துன புரிதல் இல்லாத பேச்சி” என்று சரியாக கூறியுள்ளது. 

இவ்வாறு கூறியவுடன் கம்யூனிஸ்டுகளுக்கு சாதியப் பற்றிய புரிதல் இல்லை, மார்க்சியத்தை வறட்டுத்தனமாக புரிந்து கொண்டு இந்திய நிலைமைகளை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விமர்சிக்கின்றனர். 

இந்த விமர்சனத்தை இந்த நூல் ஒரு கேள்வியாக கேட்டு சரியான பதிலும் அளித்துள்ளது. 

“அப்போ ஜாதி, மதம், கடவுள் ஒழிக்கிறதெல்லாம் கம்யூனிஸ்டுகளோட வேலைத்திட்டத்துல இல்லையா…? நல்ல கேள்வி. இங்கிட்டு கடவுள ஒழிக்கணுமா…. இல்ல கடவுளுக்கான தேவையை ஒழிக்கனுமா….. ஜாதிய ஒழிக்ககனுமா….. இல்ல. ஜாதிக்கான தேவையை ஒழிக்கனுமா….. மதத்த ஒழிக்கனுமா,,,, இல்ல, மதத்துக்கான தேவைய ஒழிக்கனுமா… நல்லா யோசிச்சி பாத்தீங்கனா ஜாதி, மதம், கடளுக்கான தேவைய ஒழிச்சா மட்டுமே நீங்க ஜாதி, மதம், கடவுள் ஒழிக்க முடியும்.” 

இந்த விளக்கம் சிறப்பாக இருக்கிறது. இந்த நூலை நான் ஆர்த்தோடு படித்தற்கு இது போன்றவையே காரணம் ஆகும். மார்க்சிய அடிப்படைப் புரிதலில் இருந்து இந்த நூல் விலகவில்லை. 

இந்த நூலைப் பற்றி ஒன்றை கூறுவதோடு எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன்.  தமிழ் மொழி மிகவும் பழைமையானது, தமிழில் எழுத்துக்கும் பேச்சுக்கும் இடைவெளி அதிகம் காணப்படுகிறது. பேச்சுத் தமிழில் எழுதும் முயற்சியை பலர் செய்து வருகின்றனர். அதுபோன்ற முயற்சியாக இந்த நூலைப் பார்க்கிறேன். இந்த நூலை இதே வடிவத்தில் ஒலி வடிவமாக வெளியிட்டால், பலன் அதிகம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இதனை எழுத்தில் படிப்பதைவிட ஆடியோவில் கேட்பது அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது நிறைய ஆடியோ நூல்கள வந்து கொண்டிருக்கிறது. 

அதே போல இதையும் ஆடியோ நூலாக வெளிட்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்த்தோடு எனது பேச்சை முடித்துக் கொள்கிறேன். 

 





No comments:

Post a Comment