(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட37 வது வார வகுப்பு – 02-10-2021)
இயற்கை, புற உலகு, மனித சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கத்தின் பொதுவான விதிகளைப் பற்றிய விஞ்ஞானம் தான் இயக்கவியல்.
இயக்கவியல் விதிக்குச் செல்லும் முன் பொதுவான விதியைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். நிகழ்வுகளில் காணப்படுகின்ற புறநிலையான ஒழுங்கு முறைதான் விதி.
அனைத்து நிகழ்வுகளையும் மனிதன் கண்டுவருகிறான். அதில் திரும்பத் திரும்ப நிகழ்வதை தொடர்ந்து காணும்போது அதன் அவசியத்தை அறிகிறான். அந்த அவசியமான உறவுகளே விதியாகும். அனைத்து நிகழ்வுகளையும் விதி என்று கூறிடமுடியாது. அதாவது நிகழ்வது அனைத்தும் விதியாகாது. அவசியமான, உறுதியான, மீண்டும் மீண்டும் நடைபெறுவதையே விதி என்று கூறப்படுகிறது. இந்த விதிகள் இயற்கையிலும் சமூகத்திலும் மனிதனை சார்ந்திடாது புறநிலையில் இருக்கிறது, அதனால்தான் இதை விதி என்று அழைக்கப்படுகிறது.
இயக்கவியலின் விதியை ஏன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இயற்கையாக இருந்தாலும்சரி, சமூகமாக இருந்தாலும்சரி அதன் மாற்றமும் வளர்ச்சியும் இயக்கவியல் விதிகளின்படியே நிகழ்கிறது. அதனால்தான் இயக்கவியல் பற்றிய அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் அவசியமாகிறது.
மூன்று விதிகளும் படிப்பதற்கு மிகவும் எளிதாகத் தெரியும், ஆனால் அந்த விதிகள் விரிவான ஆழமான பொருளைக் கொண்டுள்ளது. இயக்கவியலை மேலோட்டமாக பார்க்காமல் அதனை நுட்பமாகப் பார்க்க வேண்டும். அதனால்தான் இதனை ஒரு தனி வகுப்பாகப் பார்க்கிறோம்.
இயக்கவியலுக்கு எதிரான இயக்கமறுப்பியலை சுருக்கமாக ஒரு பார்வை பார்ப்போம். இயக்கமறுப்பியல் வளர்ச்சியை ஏற்றுக் கொள்கிறது, ஆனால் அதை ஒரு அளவு மாற்றமாக, வெறும் அதிகரித்தல் - குறைதல் என்பதாகப் புரிந்து கொண்டுள்ளது. மேலும் இயக்கமறுப்பியல் வளர்ச்சியை எதிர்பாராத தற்செயல் நிகழ்வாகப் பார்க்கிறது. அதனால்தான், வளர்ச்சி பற்றிய நியதியை அறிந்திட முடியாது என்று இயக்கமறுப்பியல் கூறுகிறது. நிகழ்கின்றவற்றில் ஒரு சில தன்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதும், மற்ற முக்கியமானதை கவனிக்காது விடுவதும் இயக்கமறுப்பியலில் உள்ள முக்கியமானக் குறைபாடாகும்.
வளர்ச்சியை ஒரு தொடர் வரிசையாக இயக்கமறுப்பியல் பார்க்கிறது, வளர்ச்சியில் காணப்படுகின்ற பண்பு மாற்றத்திற்கான முறிவை, அதாவது பழைய பண்பு நிலை மறுத்து புதிய பண்பு நிலைபெறுவதை மறுக்கிறது. மேலும் வளர்ச்சியானது வெளி சத்தியினால் மட்டுமே ஏற்படுவதாக அது கூறுகிறது.
இயக்கவியலானது இதற்கு மாறானக் கருத்துக்களைக் கொண்டுள்ளது.
இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வரலாற்றை பொதுமை படுத்திய நியதிகளில் இருந்துதான் இயக்கவியல் உருவானது. அனைத்து, பொருட்களும் நிகழ்வுகளும் இயக்கவியல் அடிப்படையில்தான் செயல்படுகிறது.
இயக்கவியலின் பொதுப்படையான நியதிகளை மூன்றாகச் சுருக்கலாம்.
1)
அளவு
மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக மாறுவது பற்றிய விதி
(The Law of the Transformation of Quantitative
into Qualitative Changes)
2)
எதிர்நிலைகளின்
ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி
(The Law of the Unity and Struggle of
Opposites)
3)
நிலைமறுப்பின்
நிலைமறுப்பு பற்றிய விதி
(The Law of the Negation of the Negation)
ஒவ்வொரு விதியையும் தனித்தனியாகப் பார்த்துவிட்டு இறுதியில் மூன்றையும் இணைத்துப் பார்க்கலாம்.
1) அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக மாறுவது பற்றிய விதி
அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாக மாறுவது பற்றிய விதியில் அளவு, பண்பு என்ற இரண்டு விஷங்கள் பேசப்படுகின்றன. நம்மை சுற்றி பலப் பொருட்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் எண்ணிக்கையிலும் பண்பிலும் வேறுபடுகின்றன.
அளவு என்பது எண்ணிக்கையின் அடிப்படையிலானது. அதாவது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்று எண்ணப்படுவதைக் குறிக்கிறது. ஒரு வீடு, பத்து சட்டைகள், நூறு கட்டில்கள், ஆயிரம் முட்டைகள். இதில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்பது அளவுகளைக் குறிக்கிறது. இரண்டு ஹைட்ரஜன் ஒர் ஆக்சிஜன் (H2O) என்ற அளவானது நீர் என்ற பொருளாக ஆகிறது. இதில் உள்ள இரண்டு ஒன்று என்பது அளவுகளாகும்.
ஒரு பொருளை மற்றொரு பொருளோடு வேறுபடுத்துவது அதன் பண்பு ஆகும். சட்டை என்பது ஒரு பண்புடைய பொருள். கட்டில் என்பது வேறோரு பண்புடைய பொருள். ஒவ்வொரு பொருளையும் அதன் பண்புகளே மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஒவ்வொரு பொருளும் தன்னை ஒரு பொருளாகக் காட்டிக் கொண்டிருக்கும் போதே அளவு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறிய அளவிலான மாற்றங்கள் அந்தப் பொருளின் பண்பை பாதிப்பது இல்லை. ஆனால் அந்த அளவு மாற்றம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவைத் தொட்டவுடன், அந்த பழைய பொருளோடு முரண்படுகிறது. இதற்குக் காரணம் அளவு மாற்றத்தில் ஏற்பட்ட குறிப்பிட்ட வளர்ச்சி நிலையே ஆகும். புதிய அளவு மாற்றத்துக்கு பழைய பொருள் பொருந்தாததாகி நீக்கப்பட்டு புதிய பொருள் உருவாகிறது. பண்பு மாற்றம் என்பது ஒரு முறிவாக, பாய்ச்சலாக ஏற்படுகிறது. பழையப் பொருளை முறித்துக் கொண்டு புதிய பொருளுக்குப் பாய்ச்சாலாக மாறுகிறது. இவ்வாறு மாறுவதனால்தான் உலகம் அனைத்தும் புத்திளமையோடு காட்சி அளிக்கிறது.
சமூகத்திலும் அப்படி தான், ஒர் உற்பத்தி முறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் உடனடியாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை, குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் போதுதான் கண்ணுக்குத் தெரிகிறது. அனால் பண்பு மாற்றம் என்பது, ஒரு பொருளில் இருந்து பாய்ச்சலாக மாற்றொரு பொருளாக மாறுவதையே குறிக்கிறது. சமூகத்திலும் பண்பு மாற்றம் என்பது பாய்ச்சலாக புரட்சியாக அடுத்த உற்பத்தி முறைக்கு மாறுகிறது.
நீர் என்ற உதாரணத்தைக் கொண்டு விளக்கம் பெறுவோம். நீர் என்கிற உதாரணம் மிகவும் எளிமையானதுதான். முதலில் எளிமையான உதாரணத்தின் மூலம் கற்றுகொண்டு சிக்கலான உதாரணத்துக்குச் செல்ல வேண்டும். இங்கே நாம் எளிய உதாரணத்தை மட்டுமே பார்க்கப் போகிறோம்.
உதாரணம், விதியைப் புரிந்து கொள்வதற்குத் தான். விதியின் பல்வேறு பகுதிகளில் ஒன்றைத் தான், ஒவ்வொரு உதாரணமும் விளக்குகிறது. அதனால் உதாரணத்தை புரிந்து கொள்வது, விதியைப் புரிந்து கொண்டதாகாது. விதியின் விரிவானப் பொருளின், ஒன்றை மட்டுமே அந்த உதாரணம் விளக்குகிறது அதனால் உதாரணத்தோடு நின்றுவிடக்கூடாது. விதியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீர், 100 டீகிரி செல்சியஸ் கொதி நிலைக்கு உள்ளாகும் வரை, அது நீர் என்ற பண்பையே கொண்டுள்ளது. 100 டீகிரி செல்சியஸ் அளவைத் தொட்டவுடன் அது நீர் என்கிற பண்பை இழந்து, ஆவி என்கிற பண்பை பெறுகிறது.
அதாவது திரவ நிலையில் இருந்து ஆவி நிலைக்கு மாறுகிறது.
அதே போல் நீர், குளிர்ச்சுக்கு உள்ளாகும் போது அது 0 டீகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைவாகச் செல்லும் நிலையில், நீர் என்கிற பண்பை இழந்து, பனிக்கட்டி என்கிற பண்பாக மாறுகிறது. இங்கே திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுகிறது.
அளவு மாற்றம் ஏற்படும்போதே, பண்பு நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை, அளவு மாற்றம் படிப்படியாக அதிகரித்து குறிப்பிட்ட எல்லையைத் தொட்டவுடன் தான், அது மற்றொரு பொருளாக – பாய்ச்சலாக மாறுகிறது என்பதை இந்த உதாரணத்தின் மூலம் அறிய முடிகிறது. முரண்பாடே மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை.
2) எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி
இயற்கை, சமூகம் ஆகியவற்றின் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையானது முரண்பாடாகும். ஒரு பொருளிலுள்ள உள் முரண்பாடே அதன் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
முரண்பாடுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்று கூறியதனால் அந்த முரண்பாட்டுப் பொருள்களுக்கு இடையே ஒற்றுமை எதுவும் கிடையாதா? என்று கேட்டால் ஒற்றுமை இருக்கிறது என்பதே பதில் ஆகும். ஒவ்வொன்றின் உள்ளும் ஒற்றுமை இருக்கிறது, அந்த ஒற்றுமை மோதலுடன்தான் காணப்படுகிறது.
முரண் என்று கூறியவுடன் அவைகள் தனித்தனியே பிரிந்து கிடப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. முரண்பாட்டின் இணைப்பு தான் வளர்ச்சிக்கு காரணமாகிறது. ஒற்றுமையில்லாத முரண்பாடு மாற்றத்துக்கு உள்ளாகாது.
முதலாளித்துவ உற்பத்தி முறையில், முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையே முரண் இருக்கிறது. முதலாளியையும் தொழிலாளியையும் தனித்தனியே பிரித்துவிட்டால் முரண் தீர்ந்துவிடுமா? தீராது, உற்பத்தி நிகழுமா? நிகழாது. உற்பத்தி நிகழ வேண்டுமானால் முரண்பட்டவைகளிடையே ஒற்றுமையும் இருக்க வேண்டும். தனித்தனியே பிளந்து காணப்படுவதை முரண் என்று கூறுவதில்லை. முரண் என்றாலே அது ஒன்றினுள் காணப்படுவதே ஆகும். ஒரு காந்த துண்டில்தான் எதிரெதிரான இரண்டு துருவங்கள் இருக்கின்றன. எவ்வளவு சிறய துண்டாக வெட்டினாலும் காந்தத்தில் இரு துருவங்கள் இணைந்து இருக்கும்.
பொருளின் ஒற்றுமை அதன் இருப்பையும், அவற்றில் காணப்படும் போராட்டம் வளர்ச்சியையும் குறிக்கிறது.
ஒற்றுமையானது கால ஒட்டத்தில் குறைந்து செல்கிறது, முரண் கால ஓட்டத்தில் வளர்கிறது - முற்றுகிறது. அதாவது ஒற்றுமை இறங்கு முகத்திலும், போராட்டம் ஏறுமுகத்திலும் இருக்கிறது. அதனால் தான் ஒற்றுமை சார்பானது என்றும், போராட்டம் அறுதியானது என்றும் கூறப்படுகிறது.
ஒரு நிகழ்வில் ஒற்றுமையானது அதன் சுற்றுவட்டத்துக்குள் நிகழ்கிறது, போராட்டம் சுற்றுவட்டத்துக்குள் நிகழ்ந்தாலும், இறுதியில் அது அடுத்த பண்பை நோக்கி செல்கிறது.
சமூக நிகழ்வில் ஒற்றுமையை சீர்திருத்தத்தோடும், போராட்டம் என்கிற முரணை, வர்க்கப் போராட்டத்துடனும் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். ஒற்றுமையோடு நின்றுவிட்டு, போராட்டத்தைக் கைவிடுபவர்கள் சீர்திருத்தவாதியாகவும் வலதுதிரிபாகவும் ஆகிவிடுகிறார்கள் ஒற்றுமையைப் புறக்கணித்து போராட்டத்தை மட்டும் முன்னிருத்துபவர்கள் அராஜகவாதியாகவும் இடது திரிபாகவும் ஆகிவிடுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் ஒற்றுமையின் சார்புத் தன்மையையும் போராட்டத்தின் அறுதித் தன்மையையும் பரிந்து செயல்படுகின்றனர்.
3) நிலைமறுப்பின் நிலைமறுப்பு பற்றிய விதி
முதலில் கூறப்பட்ட இரண்டு விதிகளையும் நன்றாகப் புரிந்து கொண்டால், இந்த மூன்றாம் விதியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். முதல் விதி அளவு மாறுபாடு பண்பு மாறுபாடு ஆகியவற்றை விளக்குகிறது, இரண்டாவது விதி ஒவ்வொரு பொருளிலும், நிகழ்விலும் ஒற்றுமையும் போராட்டமும் இருப்பதைக் கூறுகிறது.
முதல் விதியில், குறிப்பிட்ட அளவைத் தொட்டவுடன் தன் பழைய பண்பை இழந்து புதிய பண்பை பெறுகிறது என்று பார்த்தோம். பழைய பண்பு இழக்காத காலம்வரை இரண்டாவது விதியில் கூறப்பட்ட ஒற்றுமை கோலோச்சும். குறிப்பிட்ட அளவு தொட்டவுடன் பழையதில் இருந்து புதியப் பண்புக்கு பாய்ச்சலாக மாறும். இந்த பாய்ச்சலை போராட்டமே நிகழ்த்துகிறது.
ஒன்று தன் பண்பை மறுக்காமல் புதிய பண்பை பெறாமல், ஒன்றினுள்ளே மாறிக் கொண்டே இருக்கிறது என்று கூறுவதை நாம் இயக்கமறுப்பியல் என்று முன்பே பார்த்தோம். இதனையே பரிணாமவாதம் என்றும் கூறப்படுகிறது.
டார்வின் கூறுகிற பரிணாமம் வேறு இந்த பரிணாமவாதம் என்பது வேறு. டார்வின் பரிணாமத்தில் ஒன்று தன்நிலை மறுக்கப்பட்டு புதிய பண்புக்கு மாறுவதை ஏற்கப்படுகிறது. பரிணாமவாத்தில் மாற்றம் என்பது வளர்ச்சியாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது, பழைய நிலைமைளை மறுத்திடாது. புதிய பண்பையும் ஏற்காது.
முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் இயக்கவியலை மறுத்து பரிணாமவாதத்தையே ஏற்றுக் கொள்வர். அவர்கள் முதலாளித்துவமே இறுதியான உற்பத்தி முறையாக கருதுகின்றனர். தொடக்கநிலை முதலாளித்துவம், வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம், ஏகாதிபத்திய முதலாளித்துவம், உலகமயமாதல் முதலாளித்துவம் என்று வளர்ந்து கொண்டே போகும், இதில் எந்த முறிவும் ஏற்படாது, முதலாளித்துவ உற்பத்தி முறையே இறுதியானது உறுதியானது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கு மாறாக இயக்கவில் வளர்ச்சியில் முரண் முற்றுகிறது, அந்த முரணின் காரணமாக, பழைய உற்பத்தி முறையில் இருந்து விடுபட்டு புதிய உற்பத்தி முறைக்கு மாறுகிறது.
ஒவ்வொரு நிலையும் வளர்ச்சியினால் மறுக்கப்பட்டு புதிய நிலையினை அடையும். அது மற்றொரு புதிய நிலையினால் மறுக்கப்பட்டு நிலைபெறும் என்கிறது இயக்கவியல்.
முதலிரண்டு விதிகள், மீண்டும் மீண்டும் மறுக்கப்படுவதையே இந்த மூன்றாவது விதி கூறுகிறது. நிலை மறுத்தது, புதிய ஒன்றால் நிலை மறுக்கப்படும், அதுவும் மற்றொரு புதிய ஒன்றால் மறுக்கப்படும். இதனால் தான் இந்த விதியை நிலைமறுப்பின் நிலைமறுப்பு என்று கூறப்படுகிறது.
திரவமாக இருக்கின்ற நீர், கொதிநிலைக்கு உள்ளாகும் போது 100 டீகிரி செல்சியசை எட்டியவுடன் நீர் என்கிற பண்பை மறுத்து ஆவி என்கிற புதிய பண்ணை எட்டுகிறது.
சமூகத்தைப் பொறுத்தளவில், ஆதி பொதுவுடைமை சமூகம் அதன் முரண்களின் வளர்ச்சியினால் நிலைமறுக்கப்பட்டு அடிமை சமூகம் நிலைபெற்றது, அடுத்து, அடிமை சமூகம், அதன் முரண்களின் வளர்ச்சியினால் மறுக்கப்பட்டு நிலவுடைமை சமூகம் நிலை பெற்றது, அடுத்து, நிலைவுடைமை சமூகம், அதன் முரண்களின் வளர்ச்சியினால் நிலை மறுக்கப்பட்டு முதலாளித்துவம் நிலை பெற்றது, அடுத்து, முதலாளித்துவ சமூகம் அதன் முரண்களின் வளர்ச்சியினால் நிலைமறுக்கப்பட்டு சோஷலிச சமூகம் நிலைபெற்றது. ஒவ்வொரு நிலையினை மறுத்து புதிய நிலையினை பெறுவதே வளர்ச்சியாகும்.
ஒவ்வொரு நிலைமறுப்பும் மற்றொன்றால் நிலைமறுக்கப்படுகிறது. இது ஒரு தொடர் நிகழ்வாகும்.
இயக்கவியலின் மூன்று விதிகளை மட்டும் படிக்கும் போது எளிதாகத் தோன்றும், உண்மையில் அது அவ்வளவு எளிதானது அல்ல. மூன்று இயக்கவியல் விதிகளையும் நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கு அதன் வகையினங்கள் துணைபுரியும்.
அடுத்து இயக்கவியலின் சில வகையினடங்களைப் பார்ப்போம்.
1.
தனியானது, குறிப்பானது, பொதுவானது (Individual, particular, Universal)
2.
காரணமும் விளைவும் (Cause
and Effect)
3.
அவசியமும் தற்செயலும் (Necessity
and Chance)
4.
உள்ளடக்கமும் வடிவமும் (Content
and Form)
5.
சாத்தியமும் எதார்த்தமும் (Possibility
and Reality)
6. சாரமும் புலப்பாடும் (Essence and Phenomenon)
1. தனியானது, குறிப்பானது, பொதுவானது (Individual, particular, Universal)
ஒவ்வொரு பொருளும் நிகழ்வும் அதற்கென்று தனியான உள்ளடக்கத்தையும் கூறுகளையும் கொண்டுள்ளது. ஒரே மாதிரியான இரண்டை எங்கேயும் பார்க்க முடியாது. மனிதர்களிடையே ஒரே மாதிரியான இரண்டு பேரை பார்க்க முடியாது. இரட்டைப் பிறவிகளாகப் பிறந்தாலும் அவர்களுடையிலும் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
அதியமான், கபிலன், கோவலன் ஆகிய மூன்றுபேர்களும் வெவ்வேறு மனிதர்கள், தனித்தனியானவர்கள். ஆனால் அவர்கள் மனிதர்கள் என்கிற வகையில் பொதுவானவர்கள். அதியமான் அரசர், கபிலன் கவிஞர், கோவலன் வணிகர் என்பது இவர்களை குறிப்பாக வேறுபடுத்திக் காட்டுவது குறிப்பானது.
அதியமான், கபிலன், கோவலன் என்று பெரியட்டு அழைக்கும் ஒவ்வொருவரும் தனியானர்வர்கள். மூன்று பேர்களும் மனிதன் என்பதில் பொதுவானர்கள். அதியமான் ஒரு அரசர், கபிலன் ஒரு கவிஞர், கோவலன் ஒரு வணிகர் என்று வேறுபடுத்துவது அவர்களைப் பற்றிய குறிப்பானதாகும்.
சமூகத்தையும்
இவ்வாறு பிரித்து அறியலாம். சமூகம் நிலையானது அல்ல, ஒரு சமூகம் மற்றொரு சமூகமாக மாறும்
என்பது பொதுவானது, அந்த சமூக மாற்றம் தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி என்பதாகப் பிரித்தறிவது தனியானது, தனிப்பட்ட நாட்டில் நடைபெற வேண்டியது குறிப்பானது.
ஒரு தேசம் அடிமைப்பட்டிருந்தால் அங்கு நடைபெற வேண்டியது தேசிய விடுதலை, நிலப்புரப்புத்துவ சமூகத்தில் நடைபெற வேண்டியது முதலாளித்துவப் புரட்சி, முதலாளித்துவ சமூகத்தில் நடைபெற வேண்டியது சோஷலிச புரட்சி இவைகள் சமூகத்தின் குறிப்பான நிகழ்வாகும்.
2. காரணமும் விளைவும் (Cause and Effect)
ஒன்று நிகழ்கிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருந்தாக வேண்டும். ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் இருக்கும், சாலைகளில் நீர் தேங்கி இருந்தால் அதற்குக் காரணம் மழை, மழை பெய்ததால் ஏற்பட்ட விளைவே, சாலையில் நீர் தேக்கம். நில நடுக்கம் ஏற்பட்டது என்றால் அதற்கு பூமி பந்தில் எங்கேயோ நிலத்தட்டுகள் இடம்பெயந்துள்ளது என்பது காரணம், நிலநடுக்கம் என்பது விளைவு.
காரணம் இல்லாது நிகழ்வு ஏற்படுவதில்லை, சில நிகழ்வுக்கான காரணத்தை நாம் அறியாது போனாலும் அதற்கான காரணம் இருக்கவே செய்யும்.
காரணமும் விளைவும் என்கிற வகையினம் அவசியத் தன்மையை வெளிப்படுத்துகிறது. காரணம் இருப்பின், அது இன்றியமையாமல் அதன் விளைவை ஏற்படுத்தும். காரணம் இருக்குமேயானால் அதற்கான விளைவு கட்டாயம் ஏற்பட்டேதீரும், இதனை தவிர்க்க இயலாது. இந்த தவிர்க்க இயலாத் தன்மையே அவசியமாகும்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும், உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண் முற்றிய போது தவிர்க்க முடியாமல் சோஷலிசப் புரட்சியால் அந்த முரண் தீர்க்கப்படும். முதலாளித்துவ உள் முரண்பாடு காரணம், சோஷலிச புரட்சி அதன் விளைவு.
ஒவ்வொரு விளைவுக்கும் பின்னால் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. காரணங்கள் இல்லாமல் விளைவுகள் இல்லை.
3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)
காரணமும் விளைவும் என்கிற
வகையினத்தில் அவசியத்தைப் பற்றி பேசினோம். இங்கே அவசியமும் தற்செயலையும் பற்றி பார்ப்போம்.
பழங்களை சாப்பிட்ட பறவைகள் எச்சமாகப் போடும் போது அதில் உள்ள விதைகள் பல இடங்களில் முளைகிறது, சில இடங்களில் முளைப்பதில்லை. அந்த எச்சம் முளைக்கும் நிலையில் உள்ள இடங்களில் போடும் போதுதான் விதை முளைக்கும், மற்ற இடங்களில் விதை முளைக்காது வாடிவதங்கி போய்விடும்.
அவசியமான நிகழ்ச்சி பல்வேறு தற்செயல் நிகழ்வின் மூலமாகவே நடைபெறுகிறது.
தற்செயலை அவசியத்துக்கு எதிராகப் பார்க்கக்கூடாது. அவசியமும் தற்செயலும் நெருக்கியத் தொடர்புடையவை ஆகும். தற்செயல், அவசியத்தின் வெளிப்பாடாகவும் பிற்சேர்க்கையாகவும் விளங்குகிறது. தற்செயல் நடந்தேறுவதற்கு பல அவசியமான துணைசெயல்கள் உதவி செய்துள்ளது என்பதை மறந்திடக்கூடாது. தற்செயலை அவசியத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் பார்க்கக்கூடாது.
தற்செயலின் விளைவாகவே பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அந்த தற்செயல் நிகழ்வில் பற்பல அவசியமான நிகழ்வுகள் இணைந்தே காணப்படுகிறது.
4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)
காரணமும் விளைவும் என்கிற வகையினத்தைப் போலவே உள்ளடக்கமும் வடிவமும் என்கிற இந்த வகையினமும் பலரால் புரிந்து கொள்ளப்பட்டவையே ஆகும். உள்ளடக்கத்துக்கு ஏற்ற வடிவமே அமைந்திருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்தவையாகும்.
உள்ளடக்கமும் வடிவமும் பிரிக்க முடியாதவையாகும். இதில் உள்ளடக்கம் வடிவத்தை நிர்ணயிக்கிறது. ஏன் என்றால் உள்ளடக்கத்தின் மாற்றத்துக்கு ஏற்பவே வடிவம் உருவாகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் உள்ளடக்கத்தை வைத்தே ஒன்றை முடிவு செய்ய வேண்டும், வடிவத்தைக் கொண்டு உள்ளடக்கத்தை முடிவு செய்யக்கூடாது.
ஜார் ஆட்சி செய்த போது ரஷ்யா பின்தங்கிய நாடுதான், ஆனால் அந்த அரசு சர்வதேசத்தில் தொடர்பு கொண்டதுடன், சர்தேசத்தில் அது ஏகாதிபத்தியமாக செயல்பட்டது. ஜார் அரசின் ஏகாதியத்தியக் கூறுகளைக் வைத்து அன்றைய ரஷ்யாவை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக புரிந்து கொள்ளக்கூடாது. லெனின் ஜார் அரசு, ராணுவவாதம், எதேச்சாதிகாரம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியக் கூறுகளைக் கொண்டதாக வரையறை செய்தார்.
உள்ளடக்கம் வடிவத்தைக்காட்டிலும் வேகமாக வளர்கிறது. உள்ளடக்கத்தில் புதிய வளர்ச்சி அடையும் போது பழைய வடிவம் உள்ளடக்கத்துக்குப் பொருந்தாமல் போகிறது. புதிய உள்ளடக்கத்துக்கு பழைய வடிவம் தடையாகப் போகும்போது அது தூக்கி எறியப்பட்டு புதிய வடிவத்தைப் பெறுகிறது.
புதிய வடிவம் வளர்ச்சியை விரைவுபடுத்தும், பழைய வடிவம் வளர்ச்சியை பின்னுக்கு இழுக்கும். அதனால்தான் பழைய வடிவம் தூக்கி எறியப்பட்டு பொருத்தமான புதிய வடிவம் உருவாக்குபடுகிறது
5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)
சொற்களை வைத்துப் பார்க்கும் போது, பொதுப் பார்வைக்கு சாத்தியமும் எதார்த்தமும் ஒன்றாகத் தோன்றும், ஆனால் இரண்டும் வெவ்வேறானவை. வெவ்வேறானைவை என்றாலும் இரண்டும் பின்னிப் பிணைந்தவையே ஆகும்.
ஆங்கிலத்தில் பாசுபில்ட்டி (Possibility) என்ற சொல்லுக்கு சாத்தியம் என்றே பலரால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாத்தியம் என்றால் கட்டாயம் நடைபெறக்கூடியது என்றே நாம் பொருள் கொள்வோம். ஆனால் பாசுபில்டி (Possibility) என்றால் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றே பொருள் ஆகும். அதாவது நடைபெறலாம், நடைபெறாமலும் போகலாம் என்பதையே இச் சொல் பொருள் கொள்கிறது.
முதலாளித்துவ உற்பத்திமுறையில், உள்முரண்பாட்டின் விளைவாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இது புரட்சிக்கான புறநிலை. எல்லாப் பொருளாதார நெருக்கடியும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. உள்முரண்பாடு முழுமை அடையும் போதுதான் புரட்சியை யதார்த்தமாக்கும் சூழ்நிலை உருவாகிறது, ஆனால் அதற்கான தயாரிப்பு இல்லை என்றால் எதார்த்தமாகாமல் போகிறது. அன்றைய மக்களின் தன்னெழுச்சியைப் புரிந்து கொண்டு, அதன் தலைமையை ஏற்கும் கட்சியின் செயற்பாடு இருந்தால்தான் புரட்சி சாத்தியமாக்கி எதார்த்தமாகும். இது புரட்சிக்கான அகநிலை.
புறநிலையை அறிந்து கொண்ட அகநிலையினால்தான் புரட்சியை வெற்றி பெற செய்ய முடியும். புறநிலையை புரிந்து கொள்ளாத அகநிலை புரட்சியை ஏற்படுத்தாது.
இயற்கையில் சாத்தியமாக்கக்கூடியது எளிதில் எதார்த்தமாகிவிடுகிறது, ஏன் என்றால் அதற்கு மக்களின் செயற்பாடு தேவையில்லை. ஆனால் சமூகத்தில் சாத்தியமாகக்கூடிய புறநிலை, எதார்த்தமாக வேண்டுமானால் அதற்கு மக்களின் செயற்பாடும் கட்சியின் தலைமையும் தேவைப்படுகிறது.
இயற்கையும் சமூகமும் புறநிலை விதியினால் தான் இயங்குகிறது. இயற்கையில் புறநிலை விதி செயல்படுவதற்கு மனிதன் தேவைப்படவில்லை, ஆனால் சமூகத்தின் புறநிலை விதி மக்களைக் கொண்டு தான் செயல்படுகிறது.
இதுவே இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ஆகும்.
6. சாரமும் புலப்பாடும் (Essence and Phenomenon)
சாரம் என்பது எதாவதொரு பொருள் அல்லது நிகழ்வின் அவசியத் தன்மைகள் மற்றும் தொடர்புகளின் முழுமொத்தத்தையும் குறிக்கிறது. சாரத்தின் வெளிப்பாடு தான் புலப்பாடு. தோற்றம் என்ற சொல்லும் புலப்பாட்டையே குறிக்கிறது. சாரமானது புலப்பாடுகளின் மூலம் மட்மே தன்னை வெளிப்படுத்தும். சாரத்தின் தோற்றமே புலப்பாடு.
ஒரு பொருளின் இயக்கத்தை, மனிதன் புலன்களின் மூலமாகவே அறிகிறான். அதாவது பொருளினுடைய நிகழ்வின் மேற்பரப்பை முதலில் மனிதன் கவனிக்கிறான். வடிவத்தை முதலில் பார்க்கிறான். தோற்றத்தின் வழியாகவே சாரத்தை அறிந்து கொள்கிறான்.
மின்சாரம் என்பது சாரமாகும், அந்த மின்சாரத்தின் ஆற்றல் மின்விசிறியாக, மின்சார ரயிலாக, மின்மோட்டாராக நமக்கு வடிவமாகப் புலப்படுகிறது.
எந்த ஒரு நிகழ்வின் புலப்பாடும், உள்ளே இருக்கும் சாரத்தின் ஆற்றலையே பிரதிபலிக்கின்றது.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடு சாரமாகும். இந்தச் சாரத்தின் வெளிப்பாடு வர்க்கப் போராட்டமாகப் புலப்படுகிறது. வர்க்கப் போராட்ம் என்பது முதலாளித்துவ முரண்பாட்டின் புலப்பாட்டு வடிவமாகும்.
இயக்கவியல் வகையினங்களை சுருக்கமாப் பார்த்துவிட்டோம்.
நம்மைச் சுற்றியுள்ள இயற்யையும் சமூகமும் இயக்கவியல் அடிப்படையில்தான் இயங்குகிறது. அதனால் தான் இயக்கவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயக்கவியலின் அடிப்படையில் நுட்பமாக அணுகுவதற்கு இயக்கவியல் வகையினங்கள் துணைபுரிகிறது. இயக்கவியலை மட்டும் படித்தால் போதாது அதன் வகையினங்களையும் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
இயற்கை சமூகம் என்கிற வெளியுலகுக்கு மட்டுமல்லாது மனித உணர்வுநிலைக்கும், அறிதல் என்கிற நிகழ்வுக்கும் இயக்கவியலே அடிப்படை ஆகும்.
இதன் அவசியத்தின் விளைவாகவே இயக்கவியலும் இயக்கவியல் வகையினங்களும் தனி வகுப்பில் விளக்கத்தைப் பார்க்கிறோம்.
நன்று தோழர்
ReplyDeleteசிறப்பு தோழர்.வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி தோழர்களே
ReplyDelete