Sunday 13 August 2023

ஸ்டாலின் எழுதிய “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்”

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 96- வது வார வகுப்பு  – 13-08-2023  )


ஸ்டாலின் எழுதிய இரண்டு சிறு கட்டுரைகளை இன்று பார்க்கப் போகிறோம். முதலாவது காவுத்ஸ்கி எழுதிய “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்ற நூலுக்கு ஸ்டாலின் எழுதிய முன்னுரை, மற்றொன்று “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்.” இந்த இரண்டு சிறு கட்டுரைகளும் ஸ்டாலின் 1907-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எழுதியது. ஒரே விசயத்தைப் பற்றி பேசுவதால் இரண்டையும் சேர்த்துப் பார்க்கலாம்.

“உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்கிற தலைப்பில் காவுத்ஸ்கி எழுதிய நூல் ஜார்ஜிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஸ்டாலின் எழுதிய முன்னுரையை முதலில் பார்க்கலாம்.

காவுத்ஸ்கி என்ற பெயரைக் கேட்டாலேயே பலருக்கு ஓடுகாலி காவுத்ஸ்கி என்று லெனின் கூறியதே நினைவுக்கு வரும். ஓடுகாலி என்பது சரியான சொல் கிடையாது, கொள்கை மாறி, அதாவது கொள்கையை விட்டு ஓடியவர் என்பதே பொருள் ஆகும். கடுமையாக விமர்சிக்கப்பட்ட காவுத்ஸ்கி நூலை மொழியாக்கம் செய்யப்பட்டு அதற்கு ஸ்டாலின் ஏன் முன்னுரை எழுத வேண்டும் என்று உடனடியாக சிலருக்குக் கேட்கத் தோன்றும்.

காவுத்ஸ்கி முதலில் சிறந்த கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்தார். அதே போல பிளாகனவ்வும் தொடக்கத்தில் சிறந்த மார்க்சியவாதியாகத்தான் இருந்தார். பின்னாளில்தான் அவர்கள் மார்க்சியத்தை விட்டு விலகுகினார்கள். பின்னால் மாறிப் போனதால் அவர்களால் எழுதப்பட்ட பழைய நூல்களும் சந்தேகத்துக்கு உரியது என்று கருதிட முடியாது.

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டாம் அகிலம் ஆகியவற்றின் முக்கியமான தலைவர்களில் காவுத்ஸ்கி ஒருவர். தொடக்கத்தில் சிறந்த மார்க்சியவாதியாகத்தான் இருந்தார், முதல் உலக போர் ஏற்பட்டப் போது தடுமாறி போனார். சந்தர்ப்பவாதத்தின் வழியில் சென்று தொழிலாளர் இயக்கத்துக்கு பெரும் ஆபத்தானவராக மாறினார். இருந்தாலும் மார்க்சியவாதியாக இருந்த போது அவர் எழுதியதை குறைத்து மதிப்பிட முடியாது. அப்படிப்பட்ட நூல்களில் ஒன்றுதான், “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்”. காவுத்ஸ்கி மார்க்சியத்தை விட்டு விலகுவதற்கு முன் எழுதிய இந்த நூலுக்கு ஸ்டாலின் முன்னுரை எழுதினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முன்னுரையில் ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

காவுத்ஸ்கி கம்யுனிச இயக்கத்தின் மிகச் சிறந்த கோட்பாளராகத் திகழ்ந்தவர். கோட்பாட்ளராக மட்டும் இல்லாமல் செயல்தந்திரத்திலும் மிகச் சிறந்தவராகவும் புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவர் ருஷ்ய நிலைமையின் செயல்தந்திரங்களைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

ருஷ்யாவில் இரண்டுவிதமான செயல்தந்திரம் பற்றிய விவாதம் காரசாரமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் அவச்சொற்களையும் வீசி எறிந்தார்கள். இத்தகைய கடுமையான நிலையில் காவுத்ஸ்கி போன்ற அனுபவம் வாய்ந்த தோழர் இது பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அறிய ருஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு ஆர்மாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் பொருட்டே காவுத்ஸ்கியின் நூல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பிளவுபட்ட இரண்டு குழக்களின் முக்கியமான கருத்துக்களைப் பற்றி இந்த நூல் பேசியிருக்கிறது.

ருஷ்யாவில் காணப்படும் செயல்தந்திரப் பிரச்சினைப் பற்றி பிளாகானவ் ஐரோப்பிய தோழர்களின் கருத்தினைக் கேட்டுள்ளார். அதற்கான பதில் தான் இந்த காவுஸ்கியின் நூல்.

செயல்தந்திரத்தால் பிளவுபட்ட இரண்டு போக்குகளில் ஒன்று போல்ஷிவிக்குடையது மற்றொன்று மென்ஷிவிக்குடையது. இந்தப் பிரச்சினையில் காவுத்ஸ்  எதை ஆதரிக்கிறார், யார் பக்கம் நின்றார் என்பதே கேள்வி. ருஷ்யப் புரட்சியின் பொதுவான தன்மையைப் பற்றியே கேள்வி எழுப்பட்டது.

ருஷ்யப் புரட்சியானது ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியே தவிர, சோஷலிசப் புரட்சி அல்ல. நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும் இதற்கு விரைவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். இதை இரண்டு பிரிவுகளும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இதற்கு யார் தலைமைத் தாங்குவது என்பதில் தான் இரண்டு பதில்கள் மோதுகின்றன.

பாதிப்புக்குள்ளான அனைவரையும்  இணைத்து தலைமைத் தாங்க வேண்டியது, முதலாளித்துவ வர்க்கமா? பாட்டாளி வர்க்கமா?

பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடந்ததைப் போலப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் வலைப் பிடித்துக் கொணடு செல்ல வேண்டுமா? அல்லது பாட்டாளி வாக்கத்தின் பின்னால் முதலாளி வர்க்கம் வருமா?

இதுதான் முக்கியமானக் கேள்வி.

பிரெஞ்சுப் புரட்சியைப் போல நடத்த வேண்டும் என்று மென்ஷிவிக்குகள் கோரிக்கை வைத்தார்கள். நடத்த வேண்டியது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பதனால் இதற்கு முதலாளி வர்க்கமே தலைமைத் தாங்க வேண்டும் என்பது மென்ஷிவிக்குகளின் கருத்து.

போல்ஷிவிக்குகள் இதற்கு மாறாக, பிரான்சில் அப்போது பாட்டாளி வர்க்கம் மிகவும் பலவீனமாக இருந்தது, அங்கு பாட்டாளி வர்க்கம் மிகமிகக் குறைந்த வர்க்க உணர்வைக் கொண்டதாகவும் அணித்திரட்டப்படாமலும் இருந்தது. அதனால் பிரான்சில் ஜனநாயகப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைத் தாங்கியது. ஆனால் ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெற்றதாகவும் அணித்திரட்டப்பட்ட சக்தியாகவும் இருக்கிறது. ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமானதொரு வர்க்கம் என்ற வகையில் இயக்கத்தின் தலைமையை தாங்குகிறது, அதே போல புரட்சிக்கும் தலைமைத் தாங்க வேண்டும் என்பது போல்ஷிவிக்குகளின் கருத்தாகும்.

இந்தக் கேள்விக்கு காவுத்ஸ்கி என்ன பதில் தருகிறார் என்பதைப் பார்ப்போம்.

தாராளவாதிகள் பெரும்பாலும் பிரெஞ்சுப் புரட்சியைக் குறிப்பிடுகின்றார்கள் பெரும்பாலும் நியாயப்படுத்தப்படாமல் அவ்வாறு செய்கிறார்கள். இன்றைய ரஷ்யாவின் நிலைமைகள் 1789 இல் பிரான்சில் இருந்ததை விட பல விதங்களில் முற்றிலும் வேறுபட்டவை என்று காவுத்ஸ்கி முதலிலேயே தெரிவித்துவிடுகிறார். அதனால் பிரெஞ்சுப் புரட்சியை ருஷ்யப் புரட்சிக்கு முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுவது மிகப்பெரும் தவறாகும். அத்துடன் மேற்கு ஐரோப்பாவில் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களில் முன்னணியில் இருந்தது குட்டி முதலாளித்துவ வர்க்கமாகும்.

மேலும் முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியின் உந்து சக்தியாக இருந்த நிலை முடிந்துவிட்டது. பாட்டாளி வர்க்கம், சுதந்திரமான வர்க்கமாக, புரட்சிகர நோக்கங்களைக் கொண்ட சுயேச்சையான வர்க்கமாக மாறிவிட்டது என்று காவுத்ஸ்கி அந்த நூலில் கூறியுள்ளார்.

ருஷ்யாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம் தலைமைத் தாங்க முடியாது, ருஷ்யப் பாட்டாளி வர்க்கமே புரட்சிக்கு தலைமைத்தாங்க வேண்டும் என்று ருஷ்யப் புரட்சியின் பொதுத்தன்மையாக காவுத்ஸ்கி கருத்தினார்.

ருஷ்ய ஜனநாயகப் புரட்சியில் தாராளவாத முதலாளித்துவம் குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளியாக இருக்க முடியுமா? என்பது அடுத்தக் கேள்வி.

தாராளவாத முதலாளித்துவம் கூட்டாளியாக இருக்க முடியாது என்பது போல்ஷிவிக்குகளின் பதில் ஆகும். பிரெஞ்சுப் புரட்சியில் தாரளவாத முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமான பாத்திரம் வகித்தது உண்மைதான். ஏன் அங்கு அப்படி நடந்து என்றால், அப்போது அங்கே வர்க்கப் போராட்டம் தீவிரம் அடையவில்லை, பாட்டாளி வர்க்கமானது மிகமிகக் குறைந்த வர்க்க உணர்வு பெற்றிருந்தக் காரணத்தால், தாராளவாத முதலாளி வர்க்கத்தின் தொங்குசதையாக அப்போது பாட்டாளி வர்க்கம் செயல்பட்டது.

ஆனால் ருஷ்யாவின் நிலைமை வேறு. ருஷ்யப் பாட்டாளி வர்க்கமானது மிக அதிக அளவிலான வர்க்க உணர்வை பெற்றதாக இருக்கிறது. அதானால் அதற்கு தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் உதவி தேவைப்படவில்லை. மேலும் பாட்டாளிகள் வர்க்க உணர்வுடன் போராடும் இடத்தில் தாராளவாத முதலாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வு இழந்து விடுகிறது. உண்மையில் ருஷ்ய தாராளவாதக் கேடேட்டுகள் பிற்போக்குவாதிகளிடம் தஞ்சம் அடைந்து கொண்டதுடன், புரட்சியை எதிர்த்து போராடுகிறார்கள். அதனால் பிற்போக்காளருடன் கைகோர்த்த தாரளமாவாத முதலாளி வர்க்கத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள முடியாது.

அவர்கள் பிற்போக்காளர்களுடன் கூட்டணி வைத்துள்ளர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிற்போக்காளர்கள் காடேட்டுகள் ஆகிய கூட்டணிக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஏழை விவசாயி வர்க்கத்துடன் தான் உறுதியான கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போல்ஷிவிக்குகள் கருதுகிறார்கள். அப்படிக் கூட்டணி வைத்துக்கொள்ளாது போனால் வெற்றி என்பது இயலாத ஒன்றாகிவிடும். பாட்டாளி-விவசாயி கூட்டணியே வெற்றி பெறும் என்று போல்ஷிவிக்குகள் உறுதியுடன் கூறினார்கள்.

தேர்தலின் போது டூமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் போல்ஷிவிக்குகள் தாராளவாத காடேட்டுகளை ஆதரிக்கவில்லை. விவசாயிகளின் புரட்சிகரப் பிரதிநிதிகளை மட்டுமே போல்ஷிவிக்குகள் ஆதரித்தார்கள்.

மென்ஷிவிக்குகள் இதற்கு மாறாகவே சென்றார்கள். தாராளவாத முதலாளிகள் புரட்சிகரமான பாத்திரம் வகிப்பார்கள் என்று மென்ஷிவிக்குகள் கருதினார்கள். பிரான்சைப் போல இங்கேயும் தாராளவாத முதலாளிகள் புரட்சிகரமாக செயல்படுவார்கள், பழைய சமூக அமைப்பினை எதிர்பார்கள். அதனால் தாராளவாத முதலாளிகளை புரட்சியில் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மென்ஷிவிக்களின் முடிவாக இருந்தது.

மென்ஷிவிக்குகள் டூமாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தாராளவாத முதலாளி வர்க்கத்தை ஆதரித்தார்கள்.

பிளாகானவ்வும் தேர்தலில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியானது, முதலாளிகளின் கட்சியான காடேட்டுகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதினார்.

தாராளவாத முதலாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தன்மையில் மென்ஷிவிக்குகள் மிகவும் கவரப்பட்டார்கள்,  அவர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்தார்கள். அது எந்தளவுக்கு செல்கிறது என்றால், தாராளவாத முதலாளிளைத் திருப்திபடுத்துவதற்காக, ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை காணாமல் செய்திடும் அளவுக்கு, அவர்கள் தயராக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இத்தகைய தாராளவாத முதலாளித்துவத்தை காவுத்ஸ் எப்படிப் பார்க்கிறார்? பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான நட்பு சக்தியாக அவர் யாரைப் பார்க்கிறார்? என்பதை அடுத்துப் பார்க்கலாம்.

இதற்கு முன்பு நடைபெற்றது போல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் இனிமேலும் முதலாளித்துவத்தின் தொங்குசதையாகவும் அதன் கைக்கருவியாகவும் இருக்க முடியாது என்பது காவுத்ஸ்கியின் கருத்தாகும்.

பாட்டாளி வர்க்கம் அதற்கே உரிய சுயேட்சைத் தன்மையுடன் தனது நோக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில் தாராளவாத முதலாளித்துவ வர்க்கமானது புரட்சிகர தன்மையினை இழந்துவிடுகிறது. ஆக, ருஷ்யாவில் புரட்சிகர இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒன்றாக முதலாளித்துவம் இருக்க முடியாது.

பாட்டாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமும் இணைந்த கூட்டணியானது, தங்களது நலன்களில் உறுதியாக இருக்கிறது என்பதே காவுத்ஸ்கியின் கருத்தாகும்.

ருஷ்யப் புரட்சியின் உள்ளடக்கம் என்னவாக இருக்கும்?

ருஷ்யப் புரட்சியில் எந்த வர்க்கங்கள் வெற்றி அடை வேண்டும்? எந்த வர்க்கங்கள் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்?

ருஷ்யப் புரட்சியில் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் முக்கிய சக்திகளாக இருப்பதால், அவர்கள் ஒருவரையொருவர் ஆதரிக்காமல் வெற்றி சாத்தியம் இல்லை. பாட்டாளி-விவசாயி கூட்டணியே அதிகாரத்தை வெல்வார்கள். பாட்டாளி வர்க்கம்  விவசாயி வார்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை நிறுவுதல் என்பதே  இதற்குப் பொருள் என்று போல்ஷிவிக்குகள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு மாறாக, மென்ஷிவிக்குகள் பாட்டாளி வர்க்கம் விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் சர்வாதிகாரத்தை மறுதலித்தார்கள். இந்த இரு வர்க்கமும் இணைந்து வெற்றியை அடைய முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். தாராளவாத முதலாளி வர்க்க பிரதிநிதிகளான காடேட்டுகளின் தலைமையிலான ஒரு டூமாவின் கைகளில்தான் அதிகாரம் சென்றடைய வேண்டும் என்று மென்ஷிவிக்குகள் கருதினார்கள்.

இவைகளைப் பற்றிய காவுத்ஸ்கியின் கருத்து என்னவென்று அடுத்துப் பார்க்கலாம்.

ருஷ்யாவின் புரட்சியானது பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம் ஆகியவற்றின் இணைப்பில்தான் இருக்கிறது. இந்த இரண்டு வர்க்கங்களும் தோளோடுதோள் சேர்ந்து நின்றால் மட்டுமே வெற்றி சாத்தியம். தாராளவாத முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான காடேட்டுகள் புரட்சிக்கு விரோதமானவர்கள் என்பதே காவுத்ஸ்கியின் கருத்தாக இருக்கிறது.

புரட்சிகர கொந்தளிப்பான சூழ்நிலையில் தற்காலிகமான புரட்சிகர அரசு என்று அழைக்கப்படுகிற ஒரு நிலை இயற்கையாகவே தலைதூக்கும். அத்தகைய புரட்சிகர அரசில் கம்யூனிஸ்டுகள் நுழைவது அனுமதிக்கத்தக்கதா?

பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும், தற்காலிகப் புரட்சியின் நலன்களையும் திறம்பட பாதுகாக்கும் வகையில், அத்தகைய தற்காலிக அரசாங்கத்திற்குள் நுழைவது கொள்கையின் பார்வையில் அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், நடைமுறை காரணங்களுக்காகவும் நுழைவது அவசியம் என்று போல்ஷிவிக்குகள் கருதினார்கள்.

ஆனால் தற்காலிக அரசில் நுழைவது தவறு என்றனர் மென்ஷிவிக்குகள். பாட்டாளி வர்க்கத்துக்கு இது உயிரைப் பறிக்கும் முயற்சி என்பதே அவர்கள் கருத்து.

தற்காலிக அரசு பற்றி காவுத்ஸ்கி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தற்காலிக அரசில் நுழைவது அனுமதிக்கக்கூடியது என்கிறார் காவுத்ஸ்கி. அரசின் தலைமைப் பொறுப்பானது தற்காலிகமானதுதான், அந்தத் தலைமையை ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வதற்கு வாய்ப்பு உண்டு என்றும் கருதினார்.

காவுத்ஸ்கி எழுதிய “உந்து சக்திகளும் ருஷ்யப் புரட்சிக்கான வாய்ப்புகளும்” என்கிற நூலில் கூறப்பட்டவைகள் போல்ஷிவிக்குகளின் கருத்துகளோடு ஒத்துப் போகிறது. அன்றைய நிலையில் காவுத்ஸ்கி ஒரு சிறந்த கோட்பாட்டாளர் என்பதை நினைவு கொண்டு பார்க்கும் போது, போல்ஷிவிக்குகளின் முடிவுகள் சரியானதாக இருக்கிறது.

மென்ஷிவிக்குகளுடைய கருத்துகளோடு காவுத்ஸ்கியின் கருத்துக்கள் முழுதும் ஒத்துப்போகவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மென்ஷிவிக்குகளின் கருத்துக்கள் தாளராளவாத முதலாளிகளின் பிரதிநிதியான காடேட்டுகளின் கருத்துக்களோடு ஒத்துப் போகிறது.

அன்றைய சிறந்த கோட்பாளரான காவுத்ஸ்கியின் கருத்தோடு இணைகிற போல்ஷிவிக்குகளின் கருத்துக்களே சரியானது என்பதை எதாத்தமும் உறுதிப்படுத்தியது.

அடுத்து ஸ்டாலின் எழுதிய “செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேர்தல் பரப்புரையும் மென்ஷிவிக்குகளும்” என்கிற கட்டுரையில் உள்ளவற்றைப் பார்க்கலாம்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்பது தொழிற்சாலைகள் நிறைந்த நகரம், அங்கு தொழிலாளர்கள் நிறைந்து இருந்தார்கள். அதனால் அங்கு டூமா தேர்தல் பரப்புரை தீவிரமாக இருக்கும். கட்சிகளுக்கு இடையேயான மோதல்களும் அதிகம் நடைபெறும்.

நரோத்னிக்குகள், காடேட்கள், கறுப்பு நூற்றுவர், போல்ஷிவிக்குகள், மென்ஷிவிக்குகள், ட்ருடோவிக்குகள், சோசலிஸ்ட்-புரட்சியாளர்கள் ஆகியவர்களுக்கு இடையில் கடுமையான போராட்டம் நடந்தது.

இதற்கு மறுபுறத்தில், பல்வேறு கட்சிகளின் நிறமானது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைப் போல வேறெங்கும் அவ்வளவு தெளிவாக வெளுத்ததும் இல்லை. தேர்தலைப் பற்றி இங்கே ஸ்டாலின் சொல்வதை அவர் சொற்களிலேயே காண்போம்.

 

“ஒரு தேர்தல் பரப்புரை என்பதுதான் உண்மையான நடவடிக்கை. கட்சிகளின் தன்மையை அவற்றின் நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். எவ்வளவு தீவிரமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த அளவிற்குச் சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் நிறமானது மேலும் மேலும் தெள்ளத் தெளிவாக அம்பலமாகவே செய்யும்.”

தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு விசயம், ஆனால் கட்சியின் நடவடிக்கை ஒரசிப்பார்ப்பதற்கு தேர்தல் களம் ஒரு கல்லாக இருக்கிறது. கட்சியின் நடவடிக்கைகள் எந்தளவுக்கு மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பதை அறிவதற்கு தேர்தலின் முடிவுகள் உதவுகிறது. டூமா போன்ற சிறிதும் அதிகாரமற்ற தேர்தல் களத்தையே ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்தல் பரப்புரையின்போது போல்ஷிவிக்கள், மென்ஷிவிக்குகள் ஆகியோரின் நடத்தையானது மிகுந்த கவனத்தைக் கவரும்விதமாக இருக்கிறது என்கிறார் ஸ்டாலின்.

தேர்தலுக்கு முன்பாக, அரசியல் அமைப்புச் சட்டவழியிலான ஒரு சட்ட மன்றமும், ஜனநாயக வழியிலான ஒரு குடியரசும் தேவையற்ற ஒரு சுமை என்றுதான் மென்ஷிவிக்குகள் கூறினார்கள். தேவைப்படுவது டூமாவும் காடேட்டுகளின் ஒர் அமைச்சரவையும் ஆகும்.

வர்க்கப் போராட்டம் என்பது இந்தத் தருணத்தில் தற்கொலைக்கு ஒப்பானது மேலும் தீமை விளைவிக்கக் கூடியதும் ஆகும். எனவே பல்வேறு வர்க்கங்களும் குழுக்களும் சிறிது காலத்துக்கு மிகச் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் முற்றிலுமாக கைவிட வேண்டும், அரசியல் அமைப்புச் சட்ட வழியிலான ஒரே கட்சியாக இணைய வேண்டும். இதுவே மென்ஷிவிக்குகளின் இறுதிக் குறிக்கோளாகக் காணப்பட்டது.

தொடக்கத்தில் இருந்தே இத்தகையப் போக்கை போல்ஷிவிக்குகள் கண்டித்து வந்தார்கள். காடேட்டுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பொருத்தமற்றது என்றும் தேர்தல் பரப்புரையில் கம்யூனிஸ்டுகள் தனித்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் தாராளவாத முதலாளித்துவத்துக்கு எதிராகவும் ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் போராட வேண்டும் என்றே போல்ஷிவிக்குகள் கூறினார்கள்.

ஆனால் மென்ஷிவிக்குகள் வேறு வேலையில் இறங்கினார்கள். காடேட்டுகளுடன் டூமாவில் மூன்று இடங்களுக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாட்டாளி வர்க்கத்தைச் சுற்றிப் புரட்சிகரச் சக்திகளை ஒன்றிணைப்பதிலும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்தந்திரம் எந்தவிதத்திலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமலும் ஊசலாட்டம் இல்லாமலும் செயல்பட வேண்டும் என்று போல்ஷிவிக்குகள் கருதினார்கள். அதே நேரத்தில் மென்ஷிவிக்குகள் தொழிலாளர்களின் முதுக்குக்குப் பின்னால் காடேட்டுகளுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

காடேட்டுகளின் மேலாதிக்கம் ஒழிக என்று போல்ஷிவிக்குகள் அறிவித்தார்கள். ஆனால் மென்ஷிவிக்குகள் காடேட்டுகளின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து அவர்களின் வலைப் பிடித்துக் கொண்டு பின்னால் சென்றார்கள்.

தொழிலாளர் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. மென்ஷிவிக்குகள் ஆதிக்கம் செலுத்திவந்த மாவட்டங்களிலும் தோல்வி கண்டார்கள், அங்கே சோஷலிசப் புரட்சியாளர்கள் வெற்றிப் பெற்றார்கள்.

போல்ஷிவிக்குகள் சமரமின்றி அனைத்து புரட்சிகரச் சக்திகளையும் ஒன்றிணைத்தார்கள். சோஷலிசப் புரட்சிவாதிகள் போன்றவர்கள் வெளிப்படையாகவே காடேட்டுகளின் மேலாதிக்கம் ஒழிக என்று போல்ஷிவிக்குகளின் முழக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் மென்ஷிவிக்குகளுடனான பேச்சுவார்த்தைகளை காடேட்டுகள் முறித்துக் கொண்டார்கள். ஆனால் போல்ஷிவிக்குகள் மற்ற புரட்சிகரச் சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு காடேட்டுகளை தனிமைப்படுத்தி தாக்குதலைத் தொடுத்தார்கள்.

இறுதியில் மென்ஷிவிக்குகள் தங்களது செயல்தந்திரங்களை மறுதலித்துவிட்டு போல்ஷிவிக்குகளின் செயல்தந்திரத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்கள். இறுதியாகப் பார்க்கும் போது மென்ஷிவிக்குகள் காடேட்டுகளின் வலைப் பிடித்துக் கொண்டு செல்வதை விடுத்து இப்போது போல்ஷிவிக்குகளின் வலைப்பிடித்துக் கொண்டார்கள்.

இவ்வாறு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மென்ஷிவிக்குகளின் செயல்தந்திரம் தோல்வி கண்டது, போல்ஷிவிக்குகளின் செயல்தந்திரம் சரியானது என்று நிரூபிக்கப்பட்டது.

No comments:

Post a Comment