நூல் : சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்
ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை
விலை : ரூ.120/-
க.சுபாஷ்ணி அவர்கள் கேட்டக்
கேள்விகளுக்குச் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அளித்த பதில்களே “சங்க இலக்கியம்
எனும் சிந்துவெளி திறவுகோல்” நூலாக வடிவம் பெற்றுள்ளது. இந்த நூல் கேள்விக்கான பதிலாக
இருந்தாலும் சுருக்கமாக இல்லாது சிறு கட்டுரைபோல் விரிவாக இருக்கிறது.
சிந்துவெளி நாகரிகத்தைப்
பொதுமக்களுக்கும் எளிதாகப் புரியும் வகையில் பேசிவருபவர் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளி
நாகரிகத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் உள்ள தொடர்பை எளிய மக்களும் புரிந்து கொள்ளும்
வகையில் இந்த நூலில் பதிலளித்துள்ளார்.
பதிலைப் பெறும் வகையில்
க.சுபாஷ்ணி கேள்வி இருக்கிறது அதன் தலைப்புகள் அதனை வெளிப்படுத்துகிறது.
1) சிந்துவெளி நூற்றாண்டு ஏன் கொண்டாடப்பட வேண்டும்?
2) இந்திய வரலாற்றில் ஜான் மார்ஷலின் பங்களிப்பு
3) பரவலாகப் பரவியிருந்த சிந்துவெளிப் பண்பாடு
4) சிந்துவெளி பண்பாட்டின் முக்கியமான அடையாளங்கள்
5) வணிகத்தில் சிறந்திருந்த சிந்துவெளி மக்கள்
6) சிந்துவெளியின் திராவிடப் பரிமாணம்
7) சிந்துவெளியின் திராவிட அடித்தளமும் சங்க இலக்கியத் தொடர்பும்
8) கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகம்: இடப்பெயர் ஆய்வுகள்
9) சிந்துவெளி எழுத்துக்களும் குறியீடுகளும்
10)
சிந்துவெளி ஆய்வின் அணுகுமுறையும், எதிர்கால ஆய்வின் தேவையும்
சிந்துவெளியைப் பற்றி நாம்
அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய பதில்களை, இந்தத் தலைப்புகள் வரவழைக்கும் என்பதைக் கேள்விகளைப்
படிக்கும் போதே தெரிகிறது.
சிந்துவெளி நூற்றாண்டு ஏன் கொண்டாடப்பட வேண்டும்? என்கிற முதல் தலைப்புக்கான
பதிலில், சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்ககால ஆய்வாளர்கள் பற்றிய செய்திகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளது.
சிந்துவெளி அகழாய்வு நடைபெற்று
நூறாவது ஆண்டில் நாம் இருக்கிறோம். இந்த நூற்றாண்டு விழாவானது, சிந்துவெளி நாகரிகக்
கண்டுபிடிப்பின் வரலாற்றைத் திருப்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாக உள்ளது என்று ஆர்.பாலகிருஷ்ணன்
கூறுகிறார். மேலும், “நாம் அறியாததைப் புரிந்து கொள்வதன் மூலம், நாம் அறிந்தவற்றின்
முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வோம். அதுதான் முக்கியம். அதனால்தான் இந்த ஆண்டுச்
சிந்துவெளி நூற்றாண்டாகக் கொண்டாடப்படவேண்டும்.” என்கிறார்.
சிந்துவெளி நூற்றாண்டைக்
கொண்டாட வேண்டியதன் அவசியத்தை இதற்குமேல் தெளிவாகக் கூறிட முடியாது. தொல்லியல் ஆய்வுகள்
பழம்பெருமை பேசுவதற்கு மட்டுமில்லை. இன்றைய நிலையினைத் தொடர்புபடுத்தி, இன்றைய நிலையினைப்
புரிந்து கொள்வதற்கே ஆகும்.
சிந்துவெளிப் பண்பாட்டின் முக்கியமான அடையாளங்கள் என்கிற நான்காம் தலைப்புக்கு
அளிக்கும் பதில்களில்; முத்திரைகள், கைவினைப் பொருட்கள், செங்கல், நகர வடிவமைப்பு,
தாய்தெய்வ உருவங்கள், விளையாட்டுப் பொம்மைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.
இந்தப் பதில் பகுதியில்
“பிரமாண்டமான கட்டமைப்பு மற்றும் கோவில் போன்ற பெரிய வழிபாட்டுத் தளங்கள் இல்லாதது.
ஆயுதங்கள் இல்லாதது மிக முக்கியமானது. இதுவே தனித்துவமாக நான் கருதுகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
பிரமாண்ட கோவில் கிடையாது
இதுஒரு பெரிய உண்மையே, ஆனால் சிலையை வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாகச் சிலைகள்
நிறையக் கிடைத்திருக்கிறது. மேலும் பெருங்குளம் (Great Bath) என்பது வழிபாட்டிற்குத்
தொடர்புடையதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. பசுபதி (Proto Siva) என்பது வழிபாட்டிற்கு
உரியதே. வழிபாடு இல்லா சமூகம் இதுவரை எங்கேயும் கண்டதில்லையே. இயற்கை வழிபாடு, முன்னோர்
வழிபாடு, வீர வழிபாடு இதன் தொடர்ச்சியாகவே வழிபாடு வருகிறது. இன்றைய பகுத்தறிவுப் பார்வை
பழைய சமூகத்தில் காணமுடியாது.
சிந்துவெளி நாகரிகத்தில்
ஆயுதங்கள் இல்லை என்று சொல்லிட முடியாது, பலவீனமான உலோக ஆயுதங்கள் கிடைத்திருக்கிறது.
சிந்து வெளியில் கீழ் பகுதியில் உழைப்பை செலுத்துபவர்கள் இருந்திருக்கின்றனர், மேல்
பகுதியில் வேலை வாங்கியவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அங்கே காணப்படும் வாழ்விடங்களின்
அமைப்பின் வேறுபாட்டிலேயே வர்க்க வேறுபாடு காணமுடிகிறது. இந்த வர்க்க முரணை எதிர்கொள்வதற்குக்
கண்டிப்பாக அந்தச் சமூகத்தில் ஆயுதமும், அங்குள்ள வழிபாட்டு முறைக்கு உட்பட்ட ஆன்மிகமும்
இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
சிந்துவெளியின் திராவிட அடித்தளமும் சங்க இலக்கியத் தொடர்பும், என்கிற ஏழாம் தலைப்பில்,
மொகஞ்சதாரோவில் கிடைத்த ஒரு சிலை பெரும்பான்மையினரால் நடனமாடும் பெண் என்று கூறப்பட்டிருக்க,
ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் அது ஒரு விளையாட்டு வீரப்பெண் என்கிறார். இது ஒரு புதுப்
பார்வையாக இருக்கிறது. இனிமேல் இந்தப் பார்வையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே
போல, சங்க இலக்கியம், சிந்துவெளிப் பண்பாடு, கீழடி ஆகிய மூன்றும் இணைந்து ஒரு நேர்க்கோட்டில்
செல்வதாக அவர் கருதுவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஆய்வுகள் புதிய கண்ணோட்டத்தில்
வளர்ந்து செல்லும் என்பதற்கு இதுபோன்றவையே தக்க சான்றாகும்.
சிந்துவெளி ஒரு வன்பொருள்
என்றால் அதைப் புரிந்து கொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான் என்று ஆர்.பாலகிருஷ்ணன்
அவர்கள் ஆணித்தரமாகக் கூறியுள்ளார், அதற்கான ஆதாரங்களையும் இந்த நூலில் நிறையத் தந்துள்ளார்.
சிந்துவெளி என்பது பண்பாடுகளைக்
கொண்ட ஒரு நாகரிகம் அதனால் சிந்துவெளி நாகரிகம் என்று பொதுவாக அழைப்பதே சரியாக இருக்கும்.
அதில் உள்ள பண்பாடுகளைக் குறிக்கும் போது பண்பாடு என்று கூறலாம். பொதுப்படக் கூறும்
இடத்தில் சிந்துவெளி நாகரிகம் என்று கூற வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும்
இடையே உள்ள வேறுபாட்டு நன்றாகத் தெரிந்தால்தான், வேதப் பண்பாட்டுக்கும் சிந்துவெளி
நாகரிகத்துக்கும் இடையே உள்ள பெரும் வேறுபாட்டைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட முடியும்.
இந்த நூலில் பல இடங்களில் சிந்துவெளிப் பண்பாடு என்றே காணப்படுகிறது. ஆங்கிலத்தில்
நாகரிகம் என்று கூறப்பட்டது தமிழில் பண்பாடாக மாறிவிடுகிறது. இது போன்றவற்றில் கவனம்
தேவை என்று நினைக்கிறேன்.
கீழடி தமிழ்நாட்டில் இருப்பதனால்,
இதனைத் தமிழர் பண்பாடு என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன். அதே நேரத்தில் சிந்துவெளியை தமிழர்
பண்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிபடக் கூறுகிறார். இது அவரது
ஆய்வின் தெளிவைக் காட்டுகிறது.
“.. சிந்துவெளிப் பகுதியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா, தோலாவீரா, தேசல்பூர் போன்ற பகுதிகளில் தொல் தமிழ்ப் பண்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டேன். அங்குக் கிடைக்கும் முத்திரைகளை வாசித்து, அதில் நம் தமிழ்ச் சொற்கள் கிடைக்கும்வரை அது திராவிடப் பண்பாடுதான். அவ்வாறு கிடைக்காத பொழுது தொல் தமிழ்ப் பண்பாடு என்று நான் கூறினால், என் ஆய்வில் சார்பு நிலை என்று அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிடும்”
(பக்கம்
37 - 38)
என்னோட பார்வையும் இதுவேதான்.
ஆதாரங்கள் கிடைக்கும் முன்பே கருத்துரைப்பது நம்பகத் தன்மையை இழந்துவிடும். நமது விருப்பத்தின்
அடிப்படையில் ஆய்வு செய்யாது தரவுகளின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்றால், இதுவே
சரியானது.
கீழடி பற்றிய கேள்வி ஒன்று
எனக்கு இருக்கிறது. கீழடி என்பது தமிழ் நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் நாகரித்தையே காட்டுகிறது.
ஆனால் கீழடியை சிந்துவெளியோடு தொடர்பு படுத்தி, இரண்டுக்குமான ஒற்றுமைக் காணும் போது
பொதுத்தன்மை அடிப்படையில் அதனைத் திராவிட நாகரிகம் என்று சொல்வது தவறாகாது என்று தோன்றுகிறது.
சிந்துவெளி தொல்லியல் ஆய்வின்
100 ஆண்டைக் குறிப்பிட்டு கொண்டாடும் போது, “சங்க இலக்கியம் எனும் சிந்துவெளி திறவுகோல்”
என்பது போன்ற புதிய ஆய்வுகளைக் கொண்ட நூல்களை நாம் படிக்க வேண்டும். கொண்டாட்டம் என்பது
நமது புரிதலை வலுவாக்கக்கூடியதாக இருக்க வேண்டுமானால் இதுபோன்ற நூல்கள் வெளிவர வேண்டும்,
அவைகளைத் தமிழர்கள் படிக்க வேண்டும்.
இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை மாற்றுவதற்கான, ஆதாரமாக இருந்த சிந்துவெளி நாகரிகத்தை போற்றுவோம், அதனை மறைக்க முயலும் ஆதாரமற்றக் கூற்றுகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துவோம்.
நல்ல மாற்றம் முன்னர் பல குழப்பமான கருத்துகளை முன் வைத்தனர் சுபாஷினியின் நிலைப்பாடு தவறாகவே உள்ளது என்று நினைக்கிறேன் தோழர். தொகுத்தளித்தமைக்கு நன்றி தோழர் அன்றைய விவாதம் அறிய உதவியது.
ReplyDeleteஎனக்கு எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை, சுபாஷினி இங்கே கேள்விதான் கேட்டுள்ளார், அதில் என்ன நிலைப்பாடு தவறைக் கண்டீர்கள்
ReplyDelete//“.. சிந்துவெளிப் பகுதியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா, தோலாவீரா, தேசல்பூர் போன்ற பகுதிகளில் தொல் தமிழ்ப் பண்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டேன். அங்குக் கிடைக்கும் முத்திரைகளை வாசித்து, அதில் நம் தமிழ்ச் சொற்கள் கிடைக்கும்வரை அது திராவிடப் பண்பாடுதான். அவ்வாறு கிடைக்காத பொழுது தொல் தமிழ்ப் பண்பாடு என்று நான் கூறினால், என் ஆய்வில் சார்பு நிலை என்று அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிடும்”(பக்கம் 37 - 38) // இதில் திராவிட மற்றும் தமிழ் என்று கூற்றை ஏற்க மறுக்க அவர் கூறுவதை நான் ஏற்கவில்லை திராவிடம் என்பது ஆங்கிலேயர்களின் தேவை ஒட்டி ஏற்பட்டது எனலாம் இதற்கான ஆதாரம் மனித இனம் பற்றிய ஆய்வு நூலின் அடிப்படையில் "இனக் குழுக்கள்" என்பதே சரியாக இருக்கும் மேலும் விரிவாக தேடிக் கொண்டிருக்கிறேன். ஆம் சுபாஷினியின் நூல் பற்றிய என் விமர்சனம் அவை தோழர்.
ReplyDeleteநீங்கள் மேற்கோள் காட்டியது சுபாஷினி கூறவில்லை, பதிலளிக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் கூறியது.
ReplyDeleteதிராவிடம் ஆரியம் என்கிற பிரச்சினை இங்கிலாந்தில் ஏகாதிபத்தியம் தொடங்குவதற்கு முன்பே தோன்றியது. இதனை ஏகாதிபத்தியம் தமக்காகப் பயன்படுத்திக் கொண்டது என்ற கூறலாம். அது தோற்றுவித்தது என்று கூறிட முடியாது.