Sunday 4 July 2021

1) தேசியப் பிரச்சினையும் சுயநிர்ணயம் என்கிற உரிமையும் -முதல் வகுப்பு

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

24 வது வார வகுப்பு - 19-06-2021) வகுப்பு)     

இன்றைய வகுப்பில் நாம் ஒரு முக்கியமான பிரச்சினையைப் பற்றிப் பேசப்போகிறோம். “தேசிய பிரச்சினையும் சுயநிர்ணயம் என்கிற உரிமையும்” என்ற தலைப்பில், தேசிய பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமையை மார்க்சியம் எவ்வாறு தீர்வாக முன் வைக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறோம். 

இந்தப் பிரச்சினைக்குக் குறிப்பாக லெனின் நூல்களையே அதிகம் பயன்படுத்தி விளக்க இருக்கிறேன். இருந்தாலும் மார்க்ஸ், எங்கெல்ஸ், ஸ்டாலின் போன்றோர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்தே லெனின் கருத்துக்கள் இங்கே முன்வைக்கப்பட இருக்கிறது. 

அயர்லாந்து, போலந்து போன்ற தேசங்களின் பிரச்சினைகளில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எவ்வாறு கையாண்டர்கள் என்பதும், ஸ்டாலின் “மார்க்சியமும் தேசிய பிரச்சனையும்” என்ற நூலும், லெனின் எழுதி முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதும்” என்ற தொகுப்பில் உள்ள நூல்களும், அதே போல முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட, லெனினது தொகுப்பு நூலான “பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம்” என்ற நூலில் உள்ள தேசிய பிரச்சினைப் பற்றிய கட்டுரைகளில் இருந்தும் கருத்துக்கள் எடுத்து வகுப்பு நடத்தப்படுகிறது. அதாவது இவைகளே இன்றைய வகுப்பின் ஆதார நூல்கள். இந்தப் பிரச்சினையை ஆதாரத்தோடு விளக்குவதைதவிர வேறு வழியில்லை. 

இது ஒரு சுருக்கமான வகுப்புதான், இதனை விரிவாகப் புரிந்து கொள்வதற்கு நூல்களைப் படிக்க வேண்டும். படிப்பதற்கு இந்த வகுப்பு உதவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

மூன்று தலைப்புகள் 

1) தேசிய பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதர அடிப்படைகள்

2) தேசிய பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்

3) சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும் 

நாம் முதலிரண்டு தலைப்புகளை இன்று பார்க்கப் போகிறோம். மூன்றாம் தலைப்பு, அடுத்த வாரத்தில் பார்க்கலாம். 

தேசிய பிரச்சினையை மார்க்சியம் எவ்வாறு கையாள்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்தத் தலைப்புகள் போதுமானது என்று நான் கருதுகிறேன். இது ஒரு சுருக்கமான அறிமுகமாக இருந்தாலும் ஒரு முழுமையான வகுப்பாக இருக்கும். ஏன் என்றால் தேசிய பிரச்சினையின் அடிப்படைகள் அனைத்தையும் இங்கே சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். 

நம் நாட்டில் தேசிய பிரச்சினைப் பற்றியும், தேசிய இனப் பிரச்சினைப் பற்றியும் விவாதங்கள் நிறைய நடந்து வருகின்றன. இந்நிலையில் மார்க்சியம், தேசம் என்பதை எவ்வாறு வரையறுக்கப் படுகிறது. தேசிய ஒடுக்கு முறைக்குத் தீர்வாக, பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை எவ்வாறு தீர்வாக முன்வைக்கிறது என்பதை இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம். 

கம்யூனிஸ்டுகள் பேசுகிற தேசியம், சர்வதேசிய அடிப்படையிலானது, தேசிய-கலாசாரத் தன்னாட்சி என்று பேசுவது எவ்வாறு சர்வதேசிய வாதத்துக்கு எதிரானது என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கப் போகிறோம். 

இன்று நாம் பார்க்கப் போவது, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர்களின் மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையாகும். இதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் இங்கே மார்க்சிய அணுகுமுறையைத் தொகுத்துப் பார்க்கப் போகிறோம். மார்க்சிய வழியில் தேசியத்தையும் தேசிய பிரச்சினைக்குத் தீர்வையும் இங்கே தொகுகப்பட்டுள்ளது. இங்கே விவாதத்தை அல்ல ஆதாரத்தையே பார்க்கப் போகிறோம். 

1) தேசிய பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதர அடிப்படைகள் 

முதலில் நாம் பார்க்கப் போகிற தலைப்பு, தேசிய பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதர அடிப்படைகள். எந்த ஒன்றும் தோன்றுகிறது என்றால் அதற்கான காரணம் இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை அழிக்காமல் காரியத்தை அழிக்க முடியாது. மார்க்சியம் மதம் இருப்புக்கான காரணத்தை அறிந்து அதை ஒழிப்பது ஒட்டியே மதம் அழிவது பற்றிப் பேசுகிறது. மதத்தை அழிக்க வேண்டும் என்றால் மதம் இருப்புக்கான வேரை அறிந்து, அதையும் ஒழிக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையாக அழித்திடும். அதே போலத் தேசிய பிரச்சினையின் தோற்றத்தை முதலில் சுருக்கமாகப் பார்ப்போம். 

தேசிய பிரச்சினை இரண்டு காரணங்களால் தோன்றுகிறது. ஒரு பேரரசில் உள்ள முதலாளிகள் தனது பொருளாதார நலன்களின் அடிப்படையில் பிற நாடுகளைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயல்போது ஏற்கிறது. அந்த ஆதிக்கப் பேரரசை, ஒடுக்கத்துக்கு ஆளான நாடு, ஆதிக்க நாட்டை எதிர்த்து உரிமைக்காகப் போராடும் போது தேசிய பிரச்சினை எழுகிறது. இது ஒரு தேசம் மற்றொரு தேசத்தை ஒடுக்கும் போது ஏற்படுகிற பிரச்சினை. 

மற்றொன்று, ஒர் அரசு தேசமாக உருவாகின்ற போது பேரினத்தைச் சார்ந்த முதலாளிகள், தமது பொருளாதார விரிவாக்கத்தின் காரணமாக, மற்ற சிறிய தேசங்களின் பண்பாடு, கல்வி, நீதி, பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றை ஒடுக்கும் போது ஏற்படுகிறது. இது ஒரே சேதத்துக்குள் ஏற்படுகிற தேசிய பிரச்சினை. 

இங்கே பேரினம் என்று கூறப்பட்டுள்ளது. இனம் என்பது திராவிடம், ஆரியம், மங்கோலியம், கருப்பினம், வெள்ளையினம் என்ற பொருளில் அல்ல. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம், ஜெர்மனி, ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பெரும்பான்மையாகப் பேசுகிற பிரதேசத்தையே குறிப்பிடுகிறோம். இங்குப் பிரதேசமே முக்கியமானது. ஏன் என்றால் மார்க்சியம் பேசுகிற தேசியம், இனத்தின் அடிப்படையிலானது அல்ல. இனவாதத்துக்கு எதிரானது மார்க்சியம். 

தேசிய பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு முன், தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை வரையறுத்துக் கொள்ளலாம். ஸ்டாலின் “மார்க்சியமும் தேசிய பிரச்சினையும்” என்ற நூலில் சில வழிகாட்டுதல்களை நம்முன் வைக்கிறார். 

முதலாவதாகத் தேசம் என்பது குறிப்பிட்ட மக்களைக் கொண்ட சமூகமாகும். இங்கு மக்கள் என்பது இனம் மற்றும் பழங்குடிகளைக் (Nation is not a racial or tribal) குறிப்பிடவில்லை என்பதை முதலிலேயே ஸ்டாலின் தெளிவுபடுத்திவிடுகிறார். ஆதலால் தேசிய பிரச்சினையை. தேசிய "இனப்" பிரச்சினை என்று நாம் கூறுவதைத் தவிர்த்தால் குழப்பத்தைத் தவிர்க்கலாம். இந்த வகுப்பிலும் இனம் என்று குறிப்பிடப்பட்டால் அது இனம் அல்ல இனவாதமும் அல்ல, அந்தத் தேசத்து மக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

வரலாற்றுவழியில் சட்டரீதியாகத் திரட்டப்பட்ட சமூக மக்களையே தேசம் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். 

இங்குப் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொன்றும் இருக்கிறது. ராஜாக்களின் பேரரசுகளைத் தேசம் என்று அழைக்கப்படுவதில்லை. பேரரசுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் மக்கள், குழுக்களாகப் பல்வேறு வழிகளில் பிடிப்பின்றிப் பிரிந்தே கிடப்பர். இந்தப் பேரரசில் திரண்டுள்ள மக்கள், போர்களின் போது ஏற்பட்ட வெற்றியின் விளைவாய் இணைக்கப்பட்டவர்கள். அவ்விணைப்பானது பிணைப்புடன் இருக்காது. பிடிப்பின்றித் தனிதே சிதறிக்கிடக்கும். 

தேசம் என்பதில் மக்கள் நிலையான சமூகமாக இருக்க வேண்டும். அதற்கென்று பொது மொழியும், பொதுவான பிரதேசமும் இருக்க வேண்டும். நிலப்பிரபுத்துவக் கட்டத்தின் வழியாக ஏற்பட்ட பொதுவான பொருளாதார வாழ்வும், பொருளாதார ஒன்றிணைப்பு என்பதும் தேசத்துக்கான முதன்மையான அம்சமாகும். இங்கே ஒன்றை நான்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தேசம் என்பது நிலப்பிரபுத்துவம் சிதைந்து முதலாளித்துவம் தோன்றும் போது ஏற்படுவதாகும். இதற்கு முன்பு இருந்தது எல்லாம் நாடுகள். முதலாளித்துவத்துக்குப் பிறகு நாடுகள் தேசமாக மாற்றம் பெறுகிறது. 

தேசமாக ஆவதற்கும் இன்னும் இருக்க வேண்டியது, மக்களிடையே தனித்துவமான பொதுப் பண்பாட்டோடு, உளவியல் வழிப்பட்ட ஒன்றிப்பும் தவிர்க்க முடியாதது ஆகும். 

தொகுக்கப்பட்ட எல்லாத் தன்மைகளையும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கும் போதுதான் நாம் ஒரு தேசத்தைக் காணமுடியும் என்கிறார் ஸ்டாலின். மேலும் கூறுகிறார், மக்கள் தலைமுறை தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து, அதன் மூலம் ஏற்படும் ஒரு நீண்ட நெடிய மற்றும் முறையான கலப்பின் மூலமாகவே ஒரு தேசம் உருவாகிறது. 

இனவாதிகள், தேசியவாதிகள் ஆகியோர்களால் இந்தக் கலப்பு என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்றோ, ஏற்றுக் கொள்வார்கள் என்றோ கூறிடமுடியாது. 

ஸ்டாலின் கூறியதை அப்படியே பதிவிடுகிறேன்:-

“ஒரு தேசம் என்பது மக்கள் தலைமுறை தலைமுறையாக ஒன்றாக வாழ்ந்து, அதன் மூலம் ஏற்படும் ஒரு நிண்ட நெடிய மற்றும் முறையான கலப்பின் மூலமாகவே உருவாகிறது” (பக்கம் 15) 

(A nation is formed only as a result of lengthy and systematic intercourse, as a result of people living together generation after generation.) 

இறுதியாகத் தேசத்தைப் பற்றி ஸ்டாலின் தொகுத்து அளிப்பதை பார்ப்போம். 

“தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் உளவியல் இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று வழியில் உருவான நிலையான மக்கள் சமூகமாகும்.”

(A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture.) 

இங்கே தொகுத்துக் கூறப்பட்டவற்றில் எதையேனும் தனியாக ஒன்றை எடுத்துக் கொண்டு ஒரு தேசத்தை விளக்க முடியாது. மேலும் இங்குக் கூறப்பட்டத்தில் எதெனும் ஒன்று குறைந்தாலும், அது தேசமாக இருக்க முடியாது என்கிறார் ஸ்டாலின். 

இது ஒரு தேசம் பற்றிய பொதுக்கோட்பாடு ஆகும். ஏன் இதைப் பொதுக் கோட்பாடு என்று கூற வேண்டியிருக்கிறது எனறால், ஸ்டாலின் இதே நூலில், “ஒரே நேரத்தில் பல மொழிகளைப் பேசும் எந்தத் தேசமும் இல்லை, ஆனால் ஒரே மொழியை இரண்டு தேசங்கள் பேச முடியாது என்று அர்த்தமல்ல!” என்று எழுதியிருக்கிறார். 

(There is no nation which at one and the same time speaks several languages, but this does not mean that there cannot be two nations speaking the same language) 

ஒரே மொழியைப் பேசக்கூடிய இரண்டு தேசம் இருக்க முடியும், ஆனால் பல மொழிகள் பேசக்கூடிய ஒரு தேசம் இருக்க முடியாது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஆனால், லெனின் சிறிய தேசத்தில்கூட மூன்று மொழிகளை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். 

லெனின்:- “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை அல்ல, ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது- இதனால் அதற்கு எந்தக் கேடும் ஏற்பட்டுவிடவில்லை, நன்மையே உண்டாகியிருக்கிறது.”

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-20) 

ஸ்டாலின் கூறுவது போல் தேசத்துக்கு ஒரே மொழிதான் இருக்க வேண்டும் அல்லது லெனின் கூறிய ஆதாரப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசினாலும் அது ஒரு தேசம். 

இதில் எதை எடுத்துக் கொள்வது, ஸ்டாலின் கூறியதற்கு மாறாக ஆதாரத்தோடு லெனின் கூறியதே எனக்குச் சரியாகப்படுகிறது. 

இதுரை தேசியம் என்பது எதைக் குறிக்கிறது எனப்தைப் பார்த்தோம். 

அடுத்து, சுயநிர்ணப் போராட்டம் ஏற்படுவதற்கான பொருளாதார அடிப்படைகளைப் பார்ப்போம். 

முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார வளாச்சி அடைகின்ற பொழுது, முதலாளி தமது சரக்கைச் சந்தைப்படுத்த முனைகிறார். அப்போது தனக்குக் கீழ் உள்ள முதிர்ச்சியடையாத சிறிய தேசங்களைக் கட்டாயப்படுத்தி ஒருங்கிணைக்கிறார். இந்நிலையில் ஏற்படுகிடுகின்ற பாதகமான சூழ்நிலையே தேசியப்பிரச்சினையாக வடிவெடுக்கிறது. இவற்றில் தான் தேசிய இயக்கங்களின் தோற்றத்துக்கான பொருளாதார அடித்தளம் அமைந்திருக்கிறது என்கிறார் லெனின். (பக்கம் 45) 

மேலும் லெனின் கூறுகிறார்:-

"ருஷ்யாவில் தேசிய இயக்கங்கள் தோன்றியிருப்பது இதுதான் முதல் தடவையல்ல. இவை இந்த நாட்டுக்கு மட்டுமே பிரத்தியேகமானதும் அல்ல. உலகம் பூராவும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளித்துவம் அடையும் இறுதி வெற்றியின் காலப் பகுதி, தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தி முழு வெற்றியடைவதற்கு, முதலாளி வர்க்கம் உள்நாட்டுச் சந்தையைக் கைப்பற்ற வேண்டும், ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசியல் வழியில் ஒற்றுமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அதற்குத் தேவை, அந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்று விளங்குவதற்கம், இடையே நிற்கும் தடைகள் யாவும் அகற்றப்பட வேண்டும் - இங்குதான் இந்த இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது."

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 76 

நம் நாட்டிலும், தேசிய பிரச்சினைக்குத் தீர்வான பிரிதலுடன்கூடிய சுயநிர்ணய உரிமை என்பது ருஷ்யாவின் பிரத்யேகமான நிலைமைக்கான தீர்வாகக் கூறப்பட்டது என்றும், அது ஒரு கம்யூனிஸ்டுகளின் பொதுக் கோட்பாடு கிடையாது என்ற கருத்துப் போக்கு உள்ளது. ஆனால் மேலே லெனின் கூறியுள்ளது அதற்கு மாறாக உள்ளது. முதலாளித்துவத்தின் தோற்றத்தோடு ஏற்படுகின்ற சிக்கலே தேசிய பிரச்சினை. அந்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சூழ்நிலைமைகள் முதலாளித்துவம் தோன்றுகின்ற அனைத்து நாடுகளிலும் காணப்படவே செய்யும். 

தேசிய விடுதலை இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்லாது, நாகரிகம் பெற்றுவரும் அனைத்து நாடுகளுக்கும் உரியது என்கிற லெனின் கூற்றைப் புரிந்தாக வேண்டும். 

தேசிய பிரச்சினையானது உருவாவதற்கான பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன என்பதை லெனின் வழியில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால்தான் தேசிய பிரச்சினையை மறைப்பதற்கு ஜாலவித்தைகள் செய்யாமல், சர்வதேசிய கம்யூனிஸ்டுகளின் முடிபான, விடுதலையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள முடியும். 

லெனின்:-

".. ஒவ்வொரு தேசிய இயக்கத்தின் போக்கும் தேசிய அரசுகளை நிறுவும் திசையிலானதாகும். அவ்வரசுகளின் கீழ் நவீன முதலாளித்துவத்தின் இந்தத் தேவைகள் மிகவும் நன்றாகப் பூர்த்திச் செய்யப்படும். மிகவும் தீர்க்கமான பொருளாதாரக் காரணிகள் இந்த லட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன. எனவே, மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுமைக்குமே முதலாளித்துவக் காலப் பகுதியில் தேசிய அரசு மாதிரிப் படிவமானது இயல்பானது.

 

இதன் விளைவாக, சட்ட வரையறைகளை வைத்துக் கொண்டு ஜாலவித்தை செய்வதன் மூலமோ, சூக்குமமான இலக்கணங்களைப் "புனைவது" மூலமோ, அல்லாமல், தேசிய இயக்கங்களின் வரலாற்று, பொருளாதார நிலைமைகளை ஆராய்வதன் வாயிலாக, தேசங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருளை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப் புரிந்து கொள்ளும் பட்சத்தில், இந்தத் தேசங்கள், அன்னிய தேசிய அமைப்புகளில் இருந்து, அரசியல் வழியில் பிரிந்து, சுதந்திரமான தேசிய அரசாக உருப்பெறுவதே தேசிய சுயநிர்ணயத்தின் பொருள் என்ற முடிவுக்குத் தவிர்க்க முடியாத வகையில் வந்து சேருவோம்"

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 76-77 

தேசங்களுக்கு இடையே பிரச்சினை மேலோங்கி இருக்கும் போது, அது வர்க்கப் போராட்டத்துக்குத் தடையாகவே இருக்கும். இந்தச் சூழ்நிலையில் எது பிரதான முரண்பாடு என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அன்றைய போராட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். 

வரலாற்று-பொருளாதாரக் கருத்துக்களின் படி தேசிய சுயநிர்ணயம் என்பது அரசியல் சுயநிர்ணயம், அரசின் சுதந்திரம் என்ற வகையில் தேசிய அரசின் தோற்றத்தையே மார்க்சியம் குறிப்பிடுகிறது. சுயநிர்ணய உரிமையே முதலாளித்துவச் சுரண்டலையும் ஒடுக்குதலையும் முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறவில்லை. தேசிய அரசுகள் தோன்றுவதற்கான வலிமையான பொருளாதாரக் காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன. இதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலைக்கு, சுயநிர்யண உரிமையின்படி பிரிந்து செல்வதே சரியானது என்ற முடிவுக்கு மார்க்சியம் வந்துள்ளது. 

லெனின்:-

"தேசிய இன உறவுகளின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த நிலைமைகளை தேசிய அரசுதான் உறுதியாக வழங்க முடியும் என்பது தெரியவரும். முதலாளித்துவ உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய அரசு தேசியங்கள் சுரண்டப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் ஒழித்துவிட முடியும் என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு. தேசிய அரசுகளை உருவாக்குவதற்கான அவாவினைத் தோற்றுவிக்கும் வலிமை வாய்ந்த பொருளாதாரக் காரணிகளை மார்க்சியவாதிகள் காணத் தவறிவிடக் கூடாது என்பதே இதன் பொருளாகும். மார்க்சிய வேலைத்திட்டத்திலுள்ள "தேசங்களின் சுயநிர்ணயம்" என்பதை வரலாற்று-பொருளாதாரக் கருத்துப்படிப் பார்த்தால் அது அரசியல் சுயநிர்ணயம், அரசு சுயாதீனம். தேசிய அரசின் உருவாக்கம் என்றே பொருள்படும், அது வேறு எதுவாகவும் இருக்க முடியாது."

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 82

தேசியம் என்கிற இந்தக் கோட்பாடு முதலாளித்துவச் சமூகத்தில் வரலாற்று வழியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மார்க்சியம் கருதுவதை லெனின் தெளிவுபடுத்தியுள்ளார். வரலாற்று வழியில் இவற்றின் நியாயத்தை முழு அளவுக்கு அங்கீகரிக்கவும் வேண்டும் என்கிறார். இதன் கூடவே லெனின் அளிக்கும் எச்சரிக்க என்னவென்றால், இந்த அங்கீகாரம் என்பது முதலாளித்துவ தேசியவாதத்துக்கு ஆதரவான விளக்கமாக ஆகிவிடக் கூடாது என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். தேசிய விடுதலை இயக்கத்தின் முற்போக்கான தன்மைகளுக்கு மட்டுமே மார்க்சியம் அங்கிகாரம் கொடுக்கிறது. (பக்கம் 44) 

முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்றில், தேசிய இனப் பிரச்சினை இரண்டு போக்குகளைக் கொண்டிருக்கிறது. 

முதலாவது, முசிர்ச்சியடையாத சிறிய தேசிய இனங்களை ஒருங்கிணைக்கும் போக்கின் போது ஏற்படுவது. அனைத்து விதமான தேசிய ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம் தோன்றுவதும், தேசிய அரசிகள் உருவாவதும் முதல் போக்கு. 

முதிர்ச்சிய அடைந்த தேசங்கள் இடையே ஒட்டுறவு வளர்ந்து, மேலும் மேலும் விரைவடைதலும், தேசிய பிரச்சினையின் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின் பொதுவாகப் பொருளாதார வாழ்வின் அரசியல் விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உண்டாக்கப்படுதல் என்பது இரண்டாம் போக்கு. 

இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவத்துக்கு உரிய உலகுதழுவிய விதியாகும். முதல் போக்கு முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்க ஆதிக்க நிலையில் காணப்படுவது. இரண்டாம் போக்கு முதிர்ச்சி அடைந்துள்ள, சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் இயல்பாய் வெளிப்படுத்துவதாகும் என்கிறார் லெனின். (தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் பக்கம்- 32-33). 

முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஏற்படுகிற உள்முரண்பாடே சோஷலிச சமூக மாற்றத்தைக் கோருகிறது என்பது முதலாளித்துவத்தின் இரண்டாவது போக்காகும். முதல் போக்கைப் புரிந்து கொள்ளாதவர்களால் இரண்டாவது போக்கையும் புரிந்து கொள்ள முடியாது. வேறுவகையில் கூறினால், முதல் போக்கான சுயநிர்ணய உரிமை என்கிற பிரிதலுக்குத் தடையாக உள்ளவர்கள், இரண்டாவது போக்கான சோஷலிச மாற்றத்துக்கும் தடையாகவே இருப்பர். அந்தத் தடை அவர்களின் தேசிய வளாச்சி பற்றிய புரிதலின் தவறு காரணமாக ஏற்படும். 

மேலே கூறிய முதலாளித்துவத்தின் இரு போக்குகளின் அடிப்படையில் தான் கம்யுனிஸ்டுகளின் தேசிய வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

லெனின்:-

"மார்க்சியர்களின் தேசிய வேலைத்திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காகப் பாடுபடுகிறது. முதலாவதாக, தேசங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்தவிதமான தனியுரிமைகளும் அனுமதிக்கபடலாகாது என்பதற்காகவும், இரண்டாவதாக, சர்வதேசியவாதம் என்னும் கோட்பாடுக்காவும், முதலாளித்துவ தேசியவாதத்தால் - மிகமிக நயமானதாலுங்கூட - பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காவும்."

தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் - 32-33 

கம்யூனிஸ்டுகளின் தேசிய வேலைத்திட்டம் இந்த இரண்டு தன்மைகளின் அடிப்படையில் அமைத்துப் பாடுபடுகிறது. சோஷலிச வெற்றிக்கு இதுவே அடித்தளமாக அமைந்திருக்கிறது. 

இதுவரை தேசிய பிரச்சினை தோன்றுவதற்கான பொருளாதர அடிப்படைகளைப் பார்த்தோம், அடுத்து தேசிய ஒடுக்கு முறைக்கு, பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையே தீர்வாகும் என்பதைப் பார்ப்போம். 

2) தேசிய பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் 

தேசங்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிய கோட்பாடு அமைக்கப்பட்டது முதல், இதன் மீது தவறான புரிதலினால் பல விமர்சனங்களைச் சந்தித்து வருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்கவை என்வென்றால் பாட்டாளி வர்க்கத்துக்குச் சர்வதேசிய கண்ணோட்டம் தான் முதன்மையானது. தேசங்களின் பிரச்சினையைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுப்பது பாட்டாளி வர்க்க சர்வதேசிய கண்ணோட்டத்தைச் சிதைப்பதாகும். 

தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாகச் சுயநிர்ணய உரிமையை முன்வைப்பது வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதற்குச் சமமாகும். 

சிறிய தேசிய இனத்துக்கு ஆதரவாகப் பேசுவது அந்தச் சிறு தேசிய முதலாளித்துவ தேசிய வெறிக்கு சாதகமாகிவிடும். 

தேசிய இனப்பிரச்சினை சோஷலிச சமூகத்தில் தான் தீர்க்க முடியும், ஏகாதிபத்தி காலகட்டத்தில் சுயநிர்ணய உரிமை என்பது செயல்பூர்வமானதல்ல. 

இது போன்ற விமர்சனத்திற்கான பதில்களை லெனின் பல்வேறு சிறுவெளியீகளிலும், கட்டுரைகளிலும் தெளிபடுத்தியிருக்கிறார். அதில் சிலவற்றை இங்குச் சுருக்கமாகப் பார்ப்போம். 

ஒடுக்கு முறை எங்கு நடைபெற்றாலும் அதனை எதிர்ப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். எந்தவிதமான ஒடுக்குமுறைக்கும் எதிரானவர்கள் கம்யூனிஸ்டுகள். அந்தக் கடமையைக் குருட்டாம் போக்கில் செய்திடாமல் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் தேசியப்பிரச்சினைக்கான தீர்வாகத் தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்ற கோட்பாட்டை வகுத்தனர். 

தேசியப்பிரச்சினையை வெறும் அரசியல் வழியிலான பிரச்சினையாகப் பார்க்கப்படும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. 

மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் அனைத்து தேசங்களுக்கும் முழுமையான சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்கிறார் லெனின். இந்த ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமானது, மாகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகவும் தேவையானதாகும். இதனைக் குறிப்பிடும் போது மார்க்ஸ் ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்தின் சுதந்திரத்தையும் தேசிய விடுதலையையும் ஆதரித்ததைச் சுட்டுகிறார் லெனின். 

லெனின் கூறுகிறார்:-

"முழுமையான தேசிய சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்வில் தொழிலாளிகளைத் தொடர்ந்து நீண்டநாள் பயிற்றுவித்து வளர்ப்பது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவையானது. எனவே, மகாருஷ்யர்களால் ஒடுக்கப்படும் எல்லாத் தேசங்களுக்கும், முழுமையான சமத்துவமும் சுயநிர்ணய உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்று மிகவும் உறுதியாகவும், சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், தைரியமாகவும் புரட்சிகரான முறையில் போராட வேண்டும் என்று       பொதுமக்களுக்கு முறையாகப் போதிக்க வேண்டும், மகாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கே இது மிகவும் தேவையானது.

 

மகாருஷ்யர்களின் தேசிய பெருமிதத்தின் நலன்களும் (அடிமைப்பொருளில் அல்ல) மகாருஷ்ய (இன்னும் இதர) பாட்டாளிகளின் சோஷலிச நலன்களுக்கும் முற்றிலும் பொருந்தியவைதான். எப்பொழுதும் நமக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மார்க்ஸ் தான், அவர் இங்கிலாந்தில் பல பத்தாண்டுகள் வாழ்ந்து, பாதி ஆங்கிலேயராக மாறி, ஆங்கிலேயத் தொழிலாளர்களின் சோஷலிச இயக்கத்தின் நலன்களுக்காக அயர்லாந்துக்குச் சுதந்திரமும் தேசிய விடுதலையும் கோரினார்."

மகாருஷ்யர்களின் தேசியஇனப் பெருமிதம் பற்றி - பக்கம் - 178 

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்களைக் (1864 நவம்பர் 4, 1866 ஜீன்7, ஜீன் 20) குறிப்பிட்டு லெனின் மேலும் கூறுகிறார்:-

"மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து இயல்பாக எழும் முடிவு தெளிவானது:- 

தேசிய பிரச்சினையையை குருட்டு வழிபாடு ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு உகந்த செயல் அல்ல. ஏனெனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி அனைத்து தேசங்களையும் கட்டாயமாகச் சுதந்திரமான வாழ்வை நோக்கி எழுச்சியுறச் செய்வது கிடையாது. ஆனால் மக்கள் திரளின் தேசிய இயக்கங்களை அவை தொடங்கிய பிறகு, ஒதுக்கித் தள்ளுவதும், அவற்றினுள் முற்போக்கானதாக இருக்கும் அம்சங்களை ஆதரிக்க மறுப்பதும் நடைமுறையில் தேசியவாத தப்பெண்ணங்களுக்கு இடமளிப்பதாகும், அதாவது "சொந்த" தேசிய இனத்தை "மாதிரி தேசிய இனம்" (அதற்கு மட்டுமே ஓர் அரசை நிறுவி கொள்ளும் தனிமுழு உரிமை இருக்கிறது என்பதைச் சேர்த்துக் கூறுவோம்) என்று ஏற்றுக் கொள்வதாகும்"

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை – 142 

மார்க்சின் விமர்சனக் குறிப்புகளிலிருந்து லெனின், தேசிய போராட்டம், இயக்கமாகத் தொடங்கிய பிறகு அதனை ஒதுக்கித் தள்ளுவதும் அதனுள் காணப்படும் முற்போக்கான அம்சங்களை ஆதரிக்காமல் இருப்பதும் தேசியவாத தப்பெண்ணங்கள் தோன்றுவதற்கு இடம் வகுத்துவிடும் என்று எச்சரிக்கிறார். அதாவது தேசிய பிரச்சினை ஏற்பட்ட பிறகு அந்த முரண்பாடடைத் தீர்க்க முனையாது போனால், அந்தப் போக்கு ஒடுக்கும் முதலாளிகளின் தேசியவாதத்துக்கு ஆதரவாகப் போய்விடும். 

இதனை குறிப்படும் போது லெனின் கூறுகிறார், தொழிலாளிகளின் வர்க்கப் போராட்டத்தோடு ஒப்பிடும் போது தேசிய பிரச்சினை என்பது இரண்டாம் இடமே மார்க்ஸ் கொடுக்கிறார், ஆனால் அவரது கோட்பாடு தேயசிய இயக்கங்களைப் புறக்கணித்ததே இல்லை என்பதையும் சேர்த்து வலியுறுத்துகிறார். 

லெனின்:-

"பாட்டாளிகளின் ஒற்றுமையின் நலன்களும், அவர்களது வர்க்க    ஒருமைப்பாட்டின் நலன்களும், தேசங்களின் பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறது."

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 152 

இதன் அடிப்படையில் தேசியப்பிரச்சினைக்கான கம்யூனிஸ்டுகளின் வேலைத்திட்டத்தை லெனின் தொகுத்துத் தருகிறார். லெனின் கூறுவதை அப்படியே பார்ப்போம் 

"தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:- 

எந்தத் தேசியத்துக்கும் எந்த மொழிக்கும் எவ்விதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை;

 

தேசங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்;

 

எந்த ஒரு தேசியத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாகவோ இருக்கும் படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாய் அறிவிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்றும்,

 

இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிறப்பித்தல்.”

(தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்கம் 23) 

ஒரு பெரிய தேசியம், தன்னைவிடச் சிறுதேசியத்தை ஒடுக்கும் போது கம்யூனிஸ்டுகள், ஒடுக்கத்துக்கு எதிராகவும், ஒடுக்கத்துக்கு ஆளான சிறிய தேசத்துக்கு ஆதாரவாகவும் போடுகின்றனர். அந்தப் போராட்டம், அந்தப் பெரிய தேசியத்தின் பிடியில் இருந்து சிறிய தேசமானது பிரிந்து செல்வதற்கானதாகும். சுயநிர்ண உரிமை என்பது பிரிதலுடன் கூடிய உரிமையே ஆகும். 

இன்று நடைபெற்றது ஒர் அறிமுக வகுப்பு தான். இதில் நாம் பார்த்தது, தேசிய பிரச்சினை ஏற்படுவதற்கு, பொருளாதாரம் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஒடுக்கத்துக்கு ஆளான தேசத்தைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர், அதன் விடுதலைக்குப் போராடுகின்றனர். இதை மட்டுமே இன்று நாம் பார்த்தோம். அடுத்த வகுப்பில் 3) "சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்" என்பதைப் பார்க்கப் போகிறோம். 

பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை விவாகரத்து உரிமையுடன் இணைத்துப் பேசுவது வழக்கம். விவாகரத்து உரிமை இருப்பதனால் அனைவரும் விவாகரத்துச் செய்து கொள்ள வேண்டிய தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களே விவாகரத்தைக் கோருவர். அதே போலச் சுயநிர்ணய உரிமையை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியதாகும். இதைப் பாதிக்கப்பட்டவர்களே பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பிரிந்து செல்வதையே சுயநிர்ணய உரிமை என்று மார்க்சியம் கூறுகிறது, பாதிக்காத தேசம் பிரிந்து போக வேண்டும் என்று கருதுவதைப் பிரிவினைவாதம் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியம் எதைப் பிரிவினைவாதம் என்று கூறுகிறது என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

2. சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்


No comments:

Post a Comment