Saturday 10 July 2021

2) சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும் - இரண்டாம் வகுப்பு

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 24 வது வார வகுப்பு - 19-06-2021) வகுப்பு)  


(தேசியப் பிரச்சினையும் சுயநிர்ணயம் என்கிற உரிமையும்  -முதல் வகுப்பு
முதல் வகுப்புக்குச் செல்ல)

சென்ற வகுப்பின் தொடர்ச்சியே இன்றைய வகுப்பு. அதனால் போன வகுப்பில் பார்த்ததைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு இன்றைய வகுப்புக்குச் செல்வோம். 

தேசிய பிரச்சினை எழுவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இருக்கின்றன. முதலாளித்துவம் தோன்றிய காலத்தில், அதற்கான சந்தையைப் பிடிக்கும் போது தேசிய பிரச்சினை எழுகிறது இதுவே இப் பிரச்சினையின் பொருளாதார அடிப்படை ஆகும். இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை இருப்பதினால், வெறும் சொல் ஜாலங்களால் இந்தப் பிரச்சினையைக் கடந்துவிட முடியாது. ஒடுக்கும் தேசத்தின் பிடியில் இருந்து ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் பிரிந்து, தனக்கான அரசை அமைத்துக் கொள்வதையே சுயநிர்ணய உரிமை என்று மார்க்சியம் கூறுகிறது. 

இன்றைய வகுப்பு, “சுயநிர்ணய உரிமையும் பிரிவினைவாதமும்” என்ற தலைப்பில் பார்க்கப் போகிறோம். சுயநிர்ணய உரிமையைப் பற்றியும், மார்க்சியம் எதைப் பிரிவினைவாதம் என்று கூறுகிறது என்பதைப் பற்றியும் சேர்ந்து பார்க்கப் போகிறோம். 

தேசிய சிக்கலின் தோற்றம் கட்டாயப் பிரதேச இணைப்பில் தான் அடங்கிருக்கிறது. ஒரு தேசம் பிறிதொரு தேசத்தைப் பலாத்தாரத்தால் ஐக்கியப்படுத்துவதையே கட்டாயப் பிரதேச இணைப்பு என்று கூறப்படுகிறது. 

கட்டாயப் பிரதேச இணைப்பு என்பது மக்களின் விருப்பத்துக்கு மாறான வழியில் அரசின் எல்லைகளை வகுத்துக் கொள்ளுதலையும், அந்தத் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை மீறுவதையும் குறிக்கிறது. 

கம்யூனிசம் அனைத்து ஒடுக்குதலுக்கும் எதிரானது ஆகும். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் கட்டாயப் பிரதேச இணைப்பை எதிர்த்துப் போராடும் இயக்கத்தை ஆதரிக்கின்றனர். எதிர்த்தும் போராடுகின்றனர். கட்டாயப் பிரதேச இணைப்பை எதிர்ப்போதோடு நிற்பது, அதாவது அந்தத் தீமைமீதான கண்டனத்தோடு நிற்பது, அந்தத் தீமையை அடியோடு விலக்கும் ஆக்கப்பூர்வமான செயலாக ஏற்க முடியாது. அதனால் தான் இதற்கான தீர்வாக தேசங்களின் சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப்படுகிறது. 

பெரிய அரசுகளில் உள்ள முதலாளிகளுக்கு ஏதிரான, ஒவ்வொரு எழுச்சியும், அந்த எழுச்சி பிற்போக்கு வர்க்கத்தின் எழுச்சியாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அதனை ஆதரிக்க வேண்டும். இங்கே பிற்போக்கு என்ற சொன்னவுடன் மார்க்சிய சித்தாந்தம் அல்லாத அனைத்தையும் பிற்போக்கு என்று முடிவெடுத்திடக் கூடாது. நிலவும் சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போக்கையே பிற்போக்கு என்று இங்குக் குறிப்பிடப்படுகிறது. 

ஏன் இதைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது என்றால், தேசிய சுயநிர்ணய உரிமையின் மூலம் விடுதலைப் பெறும் அரசு பிற்போக்காக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு லெனின் இவ்வாறு பதிலளிக்கிறார். 

"பிற்போக்குவாதிகள் பெரும்பான்மையாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்?" என்று கேட்பது மூன்றாம் வகுப்புப் பிள்ளை கேட்கக் கூடிய கேள்வி என்கிறார் லெனின். எழுபது புத்திசாலிகள் கூடப் பதில் கூற முடியாத கேள்விகளை ஏழு முட்டாள்கள் கேட்க முடியும் என்று கூறுகிறோம் அல்லவா, அது போன்றது தான் இது மாதிரியான கேள்வி என்கிறார் லெனின்.

 

ஜனநாயக முறையிலான வாக்கெடுப்பில் பிற்போக்குவாதிகள் பெரும்பான்மை பெறுவார்களானால், கீழ் காணும் இரண்டில் ஒன்று நடக்கக் கூடும். ஒன்று, பிற்போக்குவாதிகளின் முடிவு, நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் தீய விளைவுகளினால் மக்கள், ஜனநாயத்தை நோக்கியும் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகச் செல்வர், அல்லது ஜனநாயகத்துக்கும் பிற்போக்குக்கும் இடையிலான போராட்டம் ஒர் உள்நாட்டு போரை அல்லது வேறு ஒரு போரினால் முடிவு செய்யப்படும் (பக்கம்- 14-15) 

கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பிரதேசங்களின் எழுச்சியை ஆதரிக்க மறுக்கப்படுமானால், அது புறநிலை ரீதியில் கட்டாயப் பிரதேச இணைப்பை ஆதரிப்பதாகிவிடும். சோஷலிசத்துக்குத் துரோகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் எழுச்சிக்கு அதரவு அளிக்க வேண்டும் என்கிறார் லெனின். (பக்கம் 223) 

இந்த ஆதரவு என்பது, பிரிந்து சென்று, தனியான அரசை அமைத்துக் கொள்கின்ற சுயநிர்ணய உரிமையைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் லெனின் விளக்குகிறார், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்கம் செய்யும் தேசம், அரசு ரீதியாகப் பிரிந்து செல்ல விரும்புகின்ற தேசத்தின் மீது செலுத்தப்படும் பலப்பிரோகத்தை நிபந்தனயைற்ற வகையில் எதிர்க்க வேண்டும். பிரிந்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற, பிரச்சினைக்கு உரிய பிரதேசத்தின் மக்கள் எல்லோரும் நேரடியாக, சமமான மதிப்பைக் கொண்ட வாக்குகளின் மூலம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் தங்களது கருத்தை பதிவதை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க வேண்டும். தேசியங்களின் ஒடுக்குமுறைக்கு அனுமதிக்கின்ற, தேசியங்களின் சுயநிரிணய உரிமையை மறுப்பதை ஆதரிக்கின்ற, மிதவாத முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் உள்ள கட்சிகளை உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று லெனின் கூறுகிறார். (தேசியப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள் பக்கம் 87-88-89) 

ஒடுக்குதலுக்கு ஆளான தேசிய மக்கள் தங்களுக்கான அரசை பொதுவாக்கின் மூலமாகத் தீர்க்க வேண்டும். ஒரு மத்திய பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்துப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல இதன் பொருள். அதாவது ஒடுக்கும் தேசத்தின் மக்களும், ஒடுக்கத்துக்கு ஆளான தேசத்தின் மக்களும் சேர்ந்து வாக்களிப்பதைக் குறிப்பிடவில்லை. பிரிந்து போகும் சிறுபான்மையினருடைய பாராளுமன்றத்தில் அல்லது சபையில் அல்லது அவர்களுக்கு இடையில் நடத்தப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பில் தீர்வு காண வேண்டும் என்பதே அதன் பொருளாகும். 1905ல் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்த போது நார்வே மட்டும் தான் வாக்களித்து முடிவெடுத்தது. (பக்கம் 13) 

இடதுசாரிகளிடையே கூடத் தேசங்களின் சுயநிர்யண உரிமை பற்றிப் பல்வேறு சந்தேகங்களை எழுகின்றன. இந்தச் சந்தேகங்களுக்கான பதில்களைப் பல்வேறு சமயங்களில் லெனின் அளித்துள்ளார். இருந்தும் சந்தேகம் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 

ஒரே தேசத்தில் காணப்படும் இரு தேசங்களில் உள்ள பாட்டாளிகளின் வர்க்க ஒற்றுமை தான் கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமானது, சிறிய தேசங்கள், பிரிந்து போதல் என்பது சிறிய தேசியவாதத்துக்குத் தான் துணை போகும் என்ற சந்தேகத்துக்கான கேள்விக்கு லெனின் பதிலளிக்கிறார். 

சுயநிர்ண உரிமையை அங்கீகரிப்பது மிகவும் கடைக்கோடி முதலாளித்துவ தேசியவாதத்துக்கே உதவும் என்கிற கூற்று சிறுபிள்ளைத்தனமான மடமை என்கிறார் லெனின். ஏனென்றால், இந்த உரிமையை அங்கீகரிப்பதானது, பிரிவினையை எதிர்த்துப் பிரசாரம், கிளர்ச்சி செய்வதையோ அல்லது முதலாளித்துவ தேசியவாத்தை அம்பலப்படுத்துவதையோ எவ்வகையிலும் விலக்குவதில்லை. இதற்கு மாறாகப் பிரிந்து போகும் உரிமையை மறுப்பது தான் மிகக் கடைக்கோடி தேசியவாதத்திற்கு உதவுவதாகிவிடும் என்பதே மறுக்க முடியாத உண்மை என்கிறார் லெனின். 

ரோஸா லுக்சம்பர்க் செய்த நகைக்கும்படியான தவறின் சாரம் இதில் தான் இருக்கிறது. தன்னாட்சிக் கோரிக்கையை விதிவிலக்காகப் போலந்துக்கு மட்டும் எழுப்பக் கூடியதாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தவறினை லெனின் சுட்டிக்காட்டுகிறார்:- 

".. சிறப்புக்குரிய நமது ரோஸா லுக்சம்பர்க் எழுதுவதைப் படித்துப் பார்த்தால் நகைக்காமல் இருப்பதற்கில்லை, கருத்தார்த்த பாவனையோடு, "தூய மார்க்சியத்" தொடர்களைக் கையாண்டு, தன்னாட்சிக் கோரிக்கையானது போலந்துக்கு மட்டும்தான் பொருத்தமானது, அதுவும் விதிவிலக்காக மட்டும்தான் என்று அவர் நிரூபிக்க முயலுகிறார் !"

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் 64-65)

 

மேலும் ரோசா லுக்சம்பர்க்கைப் போன்ற பலருக்குச் சேர்த்து தேசிய சுயநிர்ணயம் என்பது பற்றி லெனின் கூறுகிறார்:-

"மார்க்சிய வேலைத்திட்டத்தின் "தெளிவின்மையை" ஏளனஞ்செய்து இப்பிரச்சினையையே அவர்கள் அசட்டை செய்து விட்டார்கள், தேசியங்களின் சுயநர்ணய உரிமை பற்றி, 1903ம் ஆண்டு ருஷ்ய வேலைத்திட்டத்தில் மட்டுமின்றி, 1896ல் நடைபெற்ற லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானத்திலேயே கூறப்பட்டுள்ளது என்பதைப் பேதமை காரணமாக அவர்கள் அறியவில்லை போலும். சம்பந்தப்பட்ட இந்தப் பிரிவின் சூக்குமமான, இயக்க மறுப்பியல் எனும் பாவத்துக்குச் சரணடைந்துவிட்டாரே என்பதுதான் இதைவிட அதிக ஆச்சரியமானது. ரோஸா லுக்சம்பர்க், தானே சுயநிர்ணயம் பற்றித் தொடர்ந்து பொது நிலையில் நின்று பேசுகிறார். ஆனால் அவர் இவ்விஷயத்தின் சாராம்சம் சட்ட வரையறுப்புகளில் காணக்கிடக்கிறதா, அல்லது உலக முழுவதிலுமான தேசிய இயக்கங்களின் அனுபவத்தில் காணக்கிடக்கிறதா என்று எங்குமே தெளிவாகவும் துல்லியமாகவும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ளவில்லை.

 

இப்பிரச்சினை துல்லியமான வரையறுப்பு (இதை எந்த மார்க்சியவாதியும் தட்டிக் கழிக்க முடியாது) ரோஸா லுக்சம்பர்க்கின் வாதங்களில் பத்தில் ஒன்பதை உடனடியாக நிர்மூலமாக்கிவிடும்"

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் பக்கம்- 75-76) 

பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பது, ஒடுக்கப்பட்ட தேசியங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பதாகும் என்று பலர் கூறிவருகின்றனர். அவர்களைப் பார்த்து லெனின் கூறுவதாவது. 

"ஒடுக்கப்பட்டுள்ள தேசங்களின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு உதவி விடுவோமோ என்ற அச்சத்தில் சில பேர்கள் ஒடுக்கும் தேசியத்தின் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு, அதற்கும் மேலாகக் கறுப்பு நூற்றுவர் வகைத் தேசியவாதத்திற்கு உதிவி விடுகிறார்கள்."

(ரு.ச.ஜ.தொ. கட்சியின் தேசியச் செயல்திட்டம் - பக்கம் 15) 

தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது, ஜனநாயக சக்தி என்ற முறையில், பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும். இக் கடமை பாட்டாளிகளது, வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சமாக உகந்ததாகும். எப்படி என்றால் தேசிய பிரசச்சினைத் தொடர்பான பூசல்கள் வர்க்கப் போராட்டத்துக்கும், தொழிலாளர்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும் தடையாக இருக்கின்றன. 

அதாவது, சிறிய தேசிய மக்கள் மீதான, ஒடுக்குதல் நடைபெறும் போது கம்யூனிஸ்டுகள் அவர்களை ஆதரிக்காவிட்டால் அனைத்து ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த நம்பிக்கை இழந்த நிலையில் தொழிலாளர்களை வர்க்க ரீதியாகக் கம்யூனிஸ்டுகளால் ஒன்றிணைப்பது இயலாத செயலாக மாறிவிடும். 

இதனைத் தொடர்ந்து ஒர் எச்சரிக்கை வைக்கிறார் லெனின், அது என்வென்றால் ஒடுக்கத்துக்கு ஆளான தேசியத்துக்குக் கொடுக்கப்படும் ஆதரவின் வரம்பை தாண்டுவது, முதலாளித்துவத்தின் தேசியவாதத்தின் பக்கம் சாய்ந்து, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்றும் லெனின் குறிப்பிடுகிறார். அதே போல, தேசிய ஒடுக்குமுறை காணப்படும் ஒரு நிலையில் தேசிய விடுதலைப் பணிக்களைப் புறக்கணிப்பது சோஷலிஸ்டுக் கருத்துப்படி நிச்சயம் தவறாகும் என்கிறார் லெனின். (134) 

லெனின்:-

“பிரபுத்துவ ஆதிக்கம் அனைத்தையும், தேசிய ஒடுக்குமுறை அனைத்தையும், எந்த ஒரு தேசத்துக்கோ, எந்த ஒரு மொழிக்கோ உள்ள அனைத்து தனியுரிமைகளையும் ஒழித்துக் கட்டுதல் ஜனநாயக சக்தி என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்துக்கு உள்ள கட்டாயமான கடமையாகும், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு நிச்சயமாய் உகந்ததாகும்- தேசியப் பிரச்சினை சம்பந்தமான பூசல்கள் இவ்வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பவை, தடுத்து மட்டுப்படுத்துகிறவை. ஆனால், பூர்ஷ்வா தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் கண்டிப்பான இந்த வரம்புகளுக்கு- வரலாற்று வழியில் அமைந்த இந்தத் திட்வட்டமான எல்லைகளுக்கு - அப்பால் செல்வது, பாட்டாளி வர்க்கத்துக்குத் துரோகம் புரிந்து முதலாளி வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து கொள்வதாகிவிடும்.”

(தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-பக்கம் 45) 

லெனினது எச்சரிக்கையின்படியே கவனமாகச் செயற்பட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். தேசிய பிரச்ச்சினையில் முற்போக்கான ஜனநாயகப் போராட்டத்தோடு நின்றுவிட வேண்டும், அதற்கு மேல் அதில் மூழ்கி கிடந்தால் முதலாளித்துவ தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடும். 

லெனின்:-

"..தேசிய பிரச்சினையின் எல்லாக் கூறுகளிலும் மிகவும் வைராக்கியமான, சிறிதும் முரணற்ற ஜனநாயகத்துக்காகப் பாடுபடுவது மார்க்சியவாதியின் கட்டாயமான கடமையாகும். இந்தப் பணி பிரதானமாய் எதிர்மறையானது. ஆனால் தேசியவாதத்துக்கு ஆதரவளிப்பதில் பாட்டாளி வர்க்கம் இதற்கு மேல செல்வது சாத்தியமன்று, எனெனில் இதற்கு மேல் முதலாளி வர்க்கத்தின் "நேர்முகச்" செயற்பாடு, தேசியவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி ஆரம்பமாகிவிடுகிறது."

(தேசியப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-பக்கம் 44-45) 

முதலாளித்துவ தேசிய வெறி பலநேரங்களில் தேசத்தைத் துண்டாடும் நோக்கிலேயே செயல்படுகிறது. இதனையும் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமான பிரிந்து செல்வதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையையும் ஒன்றெனத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. பிரிவினைவாதம் வேறு, சுயநிர்ணய உரிமை என்பது வேறு. 

பிரிவினை வாதம் தேசத்தைத் துண்டாட வேண்டும், தனித்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றியது. இது பல்தேசிய தொழிலாளர்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கிறது. மார்க்சியத்தின் சுயநிர்ணய உரிமை என்பது, ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலையைக் கோருகிறது. இதனால் இரு தேசங்களில் உள்ள தொழிலாளர்களிடையே ஒற்றுமை வலுபெறுகிறது. 

லெனின் கூறுகிறார்:-

"ருஷ்யாவின் பகுதியாக உருவெடுத்துள்ள, அனைத்து தேசங்களும் தடங்கலின்றிப் பிரிந்து போகவும், சுதந்திரமான அரசுகளை உருவாக்கிக் கொள்ளவுமான உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவற்றுக்கு இந்த உரிமையைத் தர மறுப்பதோ அல்லது அது நடைமுறையில் செயலுருப் பெறுவதை உத்தரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதோ, நாடு பிடித்தல் அல்லது பிரதேசக் கைப்பற்றல் கொள்கையினை ஆதரிப்பதற்குச் சமமாகும். தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினைப் பாட்டாளி வர்க்கம் அங்கீகரிப்பது மூலம் மட்டுமே, பல்வேறு தேசங்களிலுமுள்ள தொழிலாளிகளிடையே முழுமையான ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த முடியும், தேசங்களை உண்மையிலேயே ஜனநாயகமான வழிகளில் மேலும் நெருக்கமாக ஒன்றிணைக்க முடியும்."

(தேசியப் பிரச்சினை தீர்மானம்- பக்கம் 276-277) 

இன்றைய பிரச்சினை, பிற்கால நலன் அகிய அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் பிரிதலுடன்கூடிய சுயநிர்ணய உரிமையை என்கிற கோட்பாட்டைக் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினர்.

 

பிரிவினைவாதம் என்று மார்க்சியம் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பார்ப்போம். யாருடனும் சேராமல் தனித்திருத்தலை முன்வைத்து, தேசிய குறுகிய மனப்பான்மையால் உருவான இனவெறியாலும், தேசியவெறியாலும் கேட்கப்படுகின்ற பிரிவை பிரிவினைவாதம் என்கிறது மார்க்சியம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பிரிவினையைக் கோருகின்றனர், அதாவது இன வேறுபாட்டால் உருவான மன வேறுபாட்டை முன்னிருத்துகின்றனர். 

தனக்கான, தன் இனத்துக்கான ஒரு தனி நாட்டை, அதாவது யாருடனும் நெருங்காத வகையில் தனித்த நாடாக ஒதுங்குவதை விரும்புதல். மற்றும் தனது மொழிக்கென ஒரு நாட்டை எங்கேயேனும் கட்டியமைக்க வேண்டும் என்ற போக்கில் தனிநாடு கோருதலை மார்க்சியம் பிரிவினைவாதம் என்கிறது. 

அது மட்டுமல்லாது முதலாளிகள், பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் குலைப்பதற்கு தேசிய வெறியை ஊட்டுகின்றனர். அதனால் தான் மார்க்சியம் சர்வதேசிய கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒரு தேசியம் மற்றொரு தேசியத்தோடு சேர்ந்து இருப்பதற்கும் அல்லது பிரிந்து போவதற்கும் தாம் விரும்பும் வேறொரு தேசியத்தோடு இணைந்து கொள்வதற்குமான முயற்சியை வலியுறுத்துகின்றது. 

உலகோடு ஒட்டாமல், தனது தேசிய-கலாச்சாரத்தைக் காப்பதற்காக, அனைத்து மக்களிடம் இருந்து பிரிந்து தனித்திருத்தலுக்குப் போராடுவது பிரிவினையாகும். இது உலக உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் போக்காகும். சுயநிர்ணய உரிமை என்பது ஒடுக்கத்துக்கு ஆளான சிறிய தேசம், பிரிந்து போவதற்கான உரிமையை வலியுறுத்துகிறது அவ்வளவே. இதனைத் தெளிவுபடுத்துவதற்கு லெனின் விவாகரத்துச் சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்து விளக்குகிறார். 

பிரிந்து செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துவோர், பிரிவினையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டுவது, விவாகரத்தை ஆதரிப்போர் குடும்ப உறவுகளை அழிப்பவராகக் குற்றஞ்சாட்டுவது போன்றது. குடும்ப உறவில் விரிசல் இருக்குமாயின், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பில்லா அளவுக்குப் பிணக்கு இருக்குமாயின், அவர்கள் சமதான வழியில் -சட்ட பூர்வமாக- பிரிந்து போக அனுமதிப்பது விவாகரத்துச் சட்டமாகும். 

பிரச்சினை உள்ள தம்பதிகள் பிரிவதற்கு உருவான சட்டமே விவாகரத்துச் சட்டம் ஆகும். அந்நோன்யமாக உள்ள தம்பதிகள் விவாகரத்துச் சட்டம் இருக்கிறது என்பதற்காகப் பிரிவைக் கோரா மாட்டார்கள். பிரச்சினையில் உள்ள தம்பதிகளுக்குத் தேவைப்பட்ட விவகாரத்துச் சட்டம், அந்நோன்யமாக உள்ள தம்பதிகளுக்குத் தேவைப்படப் போவதில்லை. ஆனால் அந்நோன்யமாக இருக்கும் தம்பதிகளின் ஒற்றுமையை விருப்பாத சிலர் அவரிகளிடையே வேறுபாட்டை உருவாக்குவது என்பது வேறு விஷயம். அதுதான் பிரிவினை. 

முதலாளித்துவ அரசில் சுயநிர்ண உரிமையை நிராகரிப்பது, ஆதிக்க தேசியத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பதற்குச் சமம் என்பதை லெனின் எச்சரிக்கையையோடு நமக்கு விளக்குகிறார். 

லெனின் கூறுகிறார்:-

“சுயநிர்ணய சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்போர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது விவாகரத்துச் சுதந்திரத்தை ஆதரிப்போர் குடும்பப் பந்தங்கள் அழிக்கப்படுவதை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுவது போலவே முட்டாள்தானமானது, வஞ்சனையானது. பூர்ஷ்வா சமூகத்தில் பூர்ஷ்வா திருமண முறை சார்ந்து நிற்கும் தனியுரிமை மற்றும் ஊழல் நடத்தைகளைத் தாங்கி ஆதரிப்போர் எவ்வாறு விவாகரத்துச் சுதந்திரத்தை எதிர்க்கிறார்களோ அதே போல முதலாளித்துவ அரசில் சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதானது, அதாவது தேசங்களின் பிரிந்து போகும் உரிமையினை நிராகரிப்பதானது, ஆதிக்க தேசியத்தின் தனியுரிமைகளையும் ஜனநாயக முறைகளையும் தாங்கி ஆதரிப்பதே தவிர வேறெதுவுமல்ல.”

(தேசியங்களின் சுயநிர்ணய உரிமை - பக்கம் 118-119) 

விவாகரத்து உரிமை இருப்பதினால் விவாகரத்து நடைபெறுவதில்லை, கணவன் மனைவி ஆகியோர்களுக்கிடைய உள்ள நீக்க முடியாத பிணக்கே விவாகரத்துக்குக் காரணம் என்ற உதாரணத்தைப் போலவே, தேசியங்களின் சுயநிர்ணய உரிமை பெற்றிருப்பதனால் தேசங்களிடையே பிரிவு நிகழ்வதில்லை, பெரிய தேசங்களின் ஒடுக்குகின்ற கொள்கையே சிறிய தேசியத்தைப் பிரிக்கிறது. 

“கலாச்சார-தேசிய சுயாட்சி” என்ற அடைப்படையில் பிரிவை கேட்பது மார்க்சியம் பிரிவினைவாதம் என்றே கருதுகிறது. இந்தப் பிரிவினை தேசங்களுக்கு இடையே உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் போக்காகவே மார்க்சியம் கருதுகிறது. 

ஒரு குறிப்பிட்ட தேசிய அரசின் பிரிவு தேவையான ஒன்றா? இல்லையா? என்பதை ஸ்தூலமான நிலைமைகளை ஆராந்து கம்யூனிஸ்டுகள் முடிவெடுக்கின்றனர். 

லெனின் கூறுகிறார்:-

"சமூக-ஜனநாயகவாதிகள் அனைத்து தேசங்களின் சுயநிர்ணய உரிமைக்கு அங்கீகாரம் அளிப்பதனால், ஒவ்வொரு தனியான உதாரணத்திலும் அந்தத் தேசியத்தின் பிரிவு அவசியமானதுதானா, என்பதைச் சுயேச்சையாக மதிப்பிடுவதைச் சமூக-ஜனநாயகவாதிகள் நிராகரிக்கிறார்கள் என்பது பொருளல்ல என்பது நிச்சயானது ஆகும்"

(தேசியப் பிரச்சினைப் பற்றி ஆய்வுரைகள் (1913 ஜீன் 26) - பக்கம் 89.) 

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசியமும் தனித்திருப்பதை ஆதரிப்பதாகக் கொள்ளக்கூடாது. பிரச்சினை உள்ள இடங்களில் மட்டுமே பிரிவைக் கோருகிறது. பிரச்சினை எழாத இடங்களில் ஒற்றுமையை வலுப்படுத்தவே மார்க்சியம் விரும்புகிறது. 

லெனின் கூறுகிறார்:-

".. பூர்ஷ்வாக்களுக்கு, தேசிய சமத்துவக் கோரிக்கை பெரும்பாலும் நடைமுறையில் தேசிய குறுகிய மனப்பான்மைக்கும் தேசிய வெறிக்கும் ஆதரவு கொடுப்பதாக இருக்கிறது, அவர்கள் அநேகமாக அதைத் தேசங்களின் பிரிவினை மற்றும் மன வேறுபாட்டை ஆதரிப்பதோடு சேர்த்துக் கொள்கிறார்கள். தேசங்களுக்கிடையே அதிக நெருக்கமான உறவுகளை மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ள அனைத்து தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கச் சர்வதேசியவாதத்தோடு இது நிச்சயமாகப் பொருந்துவத்தில்லை."

(நாகரீகமான தேசியவாதத்தின் மூலம் 

தொழிலாளர்களைக் கெடுத்தல் (1914 மே 10) பக்கம் 124-125) 

பாட்டாளி வர்க்கத்தின் கண்ணோட்டம் சர்வதேசியவாதம் ஆகும், அகவே கலாச்சார-தேசிய சுயாட்சி என்கிற தேசியவாதத்தைப் பிரிவினைவாதமாகவே மார்க்சியம் கருதுகிறது. 

லெனின் கூறுகிறார்:-

"தேசிய கலாச்சாரம், ''தேசிய-கலாச்சாரச் சுயாட்சி'' பற்றிய இனிப்பான பேச்சுக்கள் தங்களைப் பிரித்து வைத்திருப்பதற்குத் தொழிலாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து தேசங்களின் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் ஸ்தாபனங்களில் முழுச் சுதந்திரத்தையும் முழுமையான சமத்துவ உரிமைகளையும் காப்பாற்றி நிற்கிறார்கள் - அதுவே உண்மையான கலாச்சாரத்துக்கு உத்தரவாதம்."

(தொழிலாளி வர்க்கமும் தேசிய பிரச்சினையும்– பக்கம் – 78-81) 

தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்பது தொழிலாளர்களின் வர்க்க உணர்வை பிளவுபடுத்துகிறது. தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்கிற போக்கு தேசியவாதத்தையே உருவாக்கும். தேசிய-கலாச்சாரத் தன்னாட்சி என்கிற குட்டி முதலாளித்துவ தேசியவாதமானது, பாட்டாளிகளின் சர்வதேசிய கண்ணோட்டத்துக்கு எதிரானது ஆகும். 

இதனை லெனின் போதுமான அளவுக்குப் பல இடங்களில் விளக்கி இருக்கிறார். 

லெனின் கூறுகிறார்:-

“"கலாசார-தேசிய தன்னாட்சி'' என்றால் மிகமிகத் துல்லியமாக்கப்பட்ட, எனவே மிகவும் தீமையை விளைவிக்கக்கூடிய தேசியவாதம் என்று பொருள்படும்; தேசிய கலாசாரம் என்ற முழக்கத்தின் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வைக் கெடுத்து விடுவது, தேசிய பாகுபாட்டின்படி பள்ளிகளைப் பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்ற மிகவும் தீமை தரத்தக்கதும் ஜனநாயகத்துக்கு முரணானதுமான பிரசாரம் என்றே அர்த்தப்படும். சுருங்கக் கூறினால், இச்செயல் திட்டமானது சந்தேகத்துக்கு இடமின்றிப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியவாதத்திற்கு முரண்படுகிறது; இது தேசியவாதக் குட்டி முதலாளிகளின் லட்சியங்களுடன் மட்டும் இணைந்ததாக இருக்கிறது.”

(ருஷ்யாவின் சமூக-ஜனநாயக

தொழிலாளர் கட்சியின் தேசிய செயல்திட்டம்- பக்-11) 

பாட்டாளி வர்க்கத்தின் முழக்கம் சர்வதேசிய கலாசாரமே ஆகும். 

லெனின் கூறுகிறார்:-

“தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் முழக்கம் “தேசிய கலாசாரம்” அல்ல, ஜனநாயகத்தின், உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரம் ஆகும்.”

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக்- 23) 

பாட்டாளி வர்க்க சர்வதேசியமானது, தேசங்களின் பிரிவினையை அகற்றுவதாகும். தேசங்களுக்கு இடையே உறவுகளை மேலும்மேலும் நெருக்கம் அடையச் செய்தலே ஆகும். இவை அனைத்தும் லெனினது போதனையாகும். இதில் எனது விளக்கங்கள் ஏதும் இன்றி அப்படியே வெளியிடுகிறேன். இதற்கு விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை. இந்த மேற்கோள்களைப் புரிந்து கொண்டு, அவைகள் இடம்பெற்றுள்ள நூல்களை நேரடியாகப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். 

“''நியாயமான முறையில்'' வரம்பிடப்பட்ட குறிப்பிட்ட அரங்குக்குள் தேசிய வாதத்தை உறுதி பெறச் செய்தல், தேசியவாதத்தை ''அரசியல் சட்ட வழிப்பட்ட தாய்'' ஆக்குதல், அனைத்து தேசியங்களும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிப் பிரிந்திருத்தலை விசேஷ அரசு நிறுவனத்தின் மூலம் உறுதியாக்கி கெட்டிபெறச் செய்தல், ஆகிய இவை தான் கலாசார-தேசியத் தன்னாட்சியின் சித்தாந்த அடிப்படையும் உள்ளடக்கமும் ஆகும். இந்தக் கருத்து முழுக்க முழுக்கப் பூர்ஷ்வா தன்மை வாய்ந்தது, முழுக்க முழுக்கத் தவறானது.

 

எவ்விதத்திலும் தேசியவாதம் நிலை நாட்டப் படுதலைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது, இதற்கு மாறாக தேசிய வேறுபாடுகளைக் குறையச் செய்து தேசிய பிரிவினைச் சுவர்களை அகற்ற உதவுகிறவை யாவற்றையும், தேசியங்களுக்கு இடையிலான பந்தங்களை மேலும் மேலும் நெருக்கம் பெறச் செய்கிறவை அல்லது தேசியங்களை மேலும் மேலும் இணைய வைப்பவை யாவற்றையும் அது ஆதரிக்கிறது. இவ்வாறின்றி வேறு விதமாய்ச் செயல்படுதல், பிற்போக்கான தேசியவாத அற்பர்களின் பக்கம் சென்று விடுவதையே குறிக்கும்.”

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்- பக் 46) 

பாட்டாளி வர்க்க சர்வதேசிய கலாச்சாரமானது, ஏதேனும் நாகரீகத்தில் வளர்ச்சிப் பெற்ற நாட்டின் கலாசாரத்தை அப்படியே ஏற்றுப் பின்பற்றுவது கிடையாது. ஒவ்வொரு தேசிய கலாச்சாரத்தில் காணப்படும் முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளைக் கொண்டே சர்வதேசிய கலாச்சாரம் உருவாக்கப்படுகிறது. 

லெனின் கூறுகிறார்:-

“சமூக-ஜனநாயகவாதத்தின் நிலையில் இருந்து தேசிய கலாச்சாரம் என்ற முழகத்தை – நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ- வெளியிடுவது அனுமதிக்கப்பட முடியாதது. ஏற்கெனவே முதலாளித்துவத்தின் கீழ் மனித குலத்தின் அனைத்துப் பொருளாதார, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை மென்மேலும் அதிமாகச் சர்வதேசத் தன்மையைப் பெற்றுக் கொண்டு வருவதால் இந்தக் முழக்கம் தவறானதாகும். சோஷலிசம் அதை முற்றிலும் சர்வதேசியமயமாக்கிவிடும்.

 

அனைத்து நாடுகளையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினரால் ஏற்கெனவே முறைப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டு வரும் சர்வதேசக் கலாச்சாரம் “தேசிய கலாச்சாரத்தை” (எந்தத் தேசியக் குழுவினுடையதாக இருந்த போதிலும்) மொத்தமாக உட்கொள்வதில்லை, ஆனால் ஒவ்வொரு தேசிய கலாச்சாரத்தில் இருந்து அதிலிருக்கின்ற முரணில்லாத ஜனநாயக மற்றும் சோஷலிசக் கூறுகளை – மற்றவற்றை விலக்கி – ஏற்றுக் கொள்கிறது.”

(தேசியப் பிரச்சினை பற்றிய ஆய்வுரைகள்-1913 ஜீன் 26) 

ஒர் அரசின் கீழ் காணப்படும் அனைத்து தேசிய தொழிலாளர்களை ஒன்றிணைப்பது, சர்வதேச மூலதனத்தை எதிர்கொள்வதற்கு அவசியமானது ஆகும். 

லெனின் கூறுகிறார்:-

“ஒரு குறிப்பிட்ட அரசில் இருக்கின்ற அனைத்து தேசியங்களின் தொழிலாளர்களையும், அரசியல், தொழிற் சங்க, கூட்டுறவு, கல்வித் துறை, இதரவை போன்ற ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க நிறுவனங்களில் இணைக்க வேண்டும் என்று தொழிலாளி வர்க்க நலன்கள் வற்புறுத்துகின்றன. பல்வேறு தேசியங்களின் தொழிலாளர்களையும், இப்படி ஒரே நிறுவனங்களில் இணைப்பது மட்டுமே, சர்வதேச மூலதனத்துக்கும் பிற்போக்குக்கும், எதிராகப் பாட்டாளி வர்க்கம் வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதைச் சாத்தியமாக்கும்.

 

“தேசிய கலாச்சாரம்” என்ற முழக்கத்தின் மூலம், தங்களுடைய பாட்டாளி வர்க்க எதிர்ப்பு நோக்கங்களை, வழக்கமாக மறைத்துக் கொள்ளும் அனைத்து தேசங்களையும் சேர்ந்த நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், பூர்ஷ்வா தேசியவாதிகளது பிரச்சாரத்தையும் நோக்கங்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு உதவும்.

 

உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் படைத்துக் கொண்டிருப்பதோடு ஒவ்வொரு நாளும் அதை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.”

(ரு.ச.ஜ.தொ. கட்சிகயின் மையக் கமிட்டி மற்றும் கட்சி ஊழியர்களின்

1913 கோடை காலக் கூட்டத்தின் தீர்மானங்களில் இருந்து-101-102) 

பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய கண்ணோட்டம், அனைத்துத் தொழிலாளர்களையும் இணைக்கிறது. தேசிய கலாச்சார என்கிற கண்ணோட்டம் தொழிலாளர்களைப் பிரித்து அவர்களைப் பலவீனப்படுத்துகிறது. 

“காலாச்சார-தேசிய சுயாட்சி, ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களை, ஒரே தொழில்துறை நிறுவனத்தில் வேலை செய்து வரும் மக்களை அவர்களது பல்வேறு “தேசிய கலாச்சாரங்களின்” பிரகாரம் செயற்கையாகப் பிரிக்கிறது. வேறு சொற்களில் கூறினால், இது தொழிலாளர்களுக்கும் அவர்களது தேசங்களின் முதலாளித்துவக் கலாச்சாரத்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகிறது. ஆனால் சமூக-ஜனநாயகவாதிகளின் நோக்கமோ உலகப் பாட்டாளிகளின் சர்வதேசிய கலாச்சாரத்தை வளர்ப்பதாகும்”

(தேசிய பிரச்சினை தீர்மானம்-1917 மே 16-பக்-277-278) 

பாட்டாளி வர்க்கத்தின் கலாச்சாரம் சர்வதேசிய வழியிலானது என்று கூறுவதனால், பாட்டாளி வர்க்கத்தின் தேசிய கடமைகள் புறக்கணித்துவிடக்கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்குத் தேசம் கிடையாது என்று கூறப்பட்டதில் உள்ள, உண்மைப் பொருளைப் புறக்கணித்துவிட்டு, சர்வதேசிய போராட்டத்தை மட்டும் வலியுறுத்துகிற போக்கு இன்று சர்வதேசத்திலும் காணப்படுகிறது. அவர்களே உலகில் நிறைந்தும் இருக்கின்றனர். அவர்கள் சர்வதேசியம் பேசிவிட்டு, தேசிய உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்வைத்து லெனின் கூறுவதைப் பார்ப்போம். 

லெனின் கூறுகிறார்:-

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசம் கிடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரியே. ஆனால் அதில் சொல்லப்பட்டிருப்பது இது மட்டும் அல்லவே. தேசிய அரசுகள் உருவாக்கப்படுகின்ற பொழுது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேஷமானதாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

முதல் கருதுகோளை (உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் கிடையாது) மட்டும் எடுத்துக் கொள்வதும், இரண்டாவது கருதுகோளோடு (தேசிய ரீதியாகத் தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அமைக்கப்பட்டிருக்கிறார்கள்- ஆனால் இது பூர்ஷ்வாக்களைப் போன்ற அதே பொருளில் அல்ல) அதற்குள்ள தொடர்பை மறந்து விடுவதும் மிகப் பெரிய தவறாகும்”

(இனோஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதத்தல் இருந்து-பக்-240) 

கூறியதை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், தமக்குச் சாதகமானதை மட்டுமே படிப்பதும், அதையே பிடித்துக் கொண்டிருப்பதும் தவறானப் போக்காகும். 

லெனின் வழிகாட்டுதல்கள் நமக்குப் போதுமான அளவுக்கு இருக்கிறது. தேசங்களிடையே பிணக்கு இருக்கும் போது ஒடுக்கத்துக்கு ஆளான தேசம் தனித்துப் பிரிந்து போவதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்தத் தேசத்துடனுடம் இணைந்திருக்க விரும்பாமல் தனித்திருக்க விரும்புகின்ற கலாச்சார தேசிய தன்னாட்சியை எதிர்க்க வேண்டும். சர்வதேசியம் என்பது தேசத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தேசத்தைப் புறக்கணித்துச் சர்வதேசியம் பேசுவது எதார்த்த தன்மைக்கு எதிரானதே ஆகும். தேசிய உள்நாட்டுப் போராட்டமானது, சர்வதேசிய மூலதனத்துக்கு எதிரான போராட்டமும் ஆகும். 

தேசிய பிரச்சினை என்பது மிகவும் நுணுக்கமானது. அதனால் தேசிய பிரச்சினையை மார்க்சிய வழியில் அணுகுவதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர்கள் தேசிய பிரச்சினையைப் பற்றி எழுதிய முக்கியமான நூல்களை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு பேசாமல், அனைத்தையும் அறிந்து கொண்டு பேச வேண்டும். இதற்குப் படிப்பது தவிர வேறுவழியில்லை. வகுப்புகள் படிக்கத் தூண்ட செய்யும் அவ்வளவே, சுயமாகப் படித்துப் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது ஆகும். 

லெனின் கூறுகிறார்:-

"ஒரு சர்வதேசியவாத சமூக-ஜனநாயகவாதியாக இருப்பதற்கு ஒருவன் தனது தேசியத்தைப் பற்றி மட்டும் சிந்திக்கக் கூடாது, அனைத்து தேசங்களின் நலன்களையும், அவற்றின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றையும் தமது தேசியத்தினுடையவற்றிற்கு மேலாக வைத்து நடக்க வேண்டும்."

(சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு - பக்கம் – 246) 

இந்த லெனின் கூற்றை நம் நாட்டில் உள்ள எத்தனை இடதுசாரிகளால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் லெனினுக்கு எதிராகச் செயல்பட முடியாது. அவ்வாறு செயல்படுபவன் கம்யூனிஸ்ட் என்று தன்னை அழைத்துக் கொள்ள முடியாது. கம்யூனிசத்துக்கு மாறன கருத்துடையவன், தன்னை எவ்வாறு கம்யூனிஸ்ட் என்று கூறிட முடியும். 

ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த கம்யூனிஸ்ட்டாகச் செயல்பட வேண்டுமானால், கம்யூனிச அடிப்படை நூல்களைப் படித்தே ஆக வேண்டும். அதன் அடிப்படையில் தமது தேசத்தை அணுகுபவனே கம்யூனிஸ்ட் ஆவான். கம்யூனிசம் மறுதலிக்கின்ற குட்டி முதலாளித்துவப் போக்கான, கலாச்சார தேசிய தன்னாட்சியையோ, முதலாளித்துவ தேசியவாதத்தையே பின்பற்றுபவன் கம்யூனிஸ்ட் அல்ல என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தச் சொற்கள் சற்று கடினமானது என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் வலியுறுத்திக் கூறுவதற்கு இதைத்தவிர வேறுவழித் தெரியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. 

லெனினது ஒரு சிறு மேற்கோளுடன் இன்றை வகுப்பை முடித்துக் கொள்கிறேன். 

லெனின் கூறுகிறார்:-

“பாட்டாளி வர்க்கத்திற்கு, பணி செய்ய முற்படுபவர்கள், அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும், மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ தேசியவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தேசிய கலாச்சாரம் என்ற முழக்கத்தை ஆதரிப்போர் இருக்க வேண்டிய இடம் தேசியவாதக் குட்டி முதலாளித்துவப் பகுதியோர் மத்தியிலே அன்றி, மார்க்சியவாதிகள் மத்தியில் அல்ல”

(தேசிய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் - பக்கம் 29) 

நாம் இரண்டு வகுப்புகளில், மார்க்சிய வழியிலான தேசிய சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்பது பற்றியும், அது தேசிய கலாச்சாரத் தன்னாட்சிக்கு எதிரானது -மாறானது என்பதையும் பார்த்தோம். இது மார்க்சிய அடிப்படைகளாகும், இதனைப் புரிந்து கொண்டு நமது நாட்டில் காணப்படும் தேசிய பிரச்சினைகளை அணுகுவது கம்யூனிஸ்டுகளாகிய நமது கடமையாகும். 

இத்துடன் இன்றைய வகுப்பு முடிவடைகிறது. 

இது ஒரு வகுப்பாக இல்லாமல் லெனின் கூறிய கருத்துக்களின் தொகுப்பாக இருக்கிறது என்பதே உண்மை.

****************************************************

No comments:

Post a Comment