Saturday, 21 February 2026

எங்கெல்ஸ் எழுதிய “கூலி அமைப்பு முறை” நூலின் சாரம்

          உடலுழைப்பைச் செலுத்தும் ஆலைத் தொழிலாளர்கள், நிலத்தில் வேலை செய்யும் உழவர்கள் இத்தகையோர் ஒரு நாளைக்கு எட்டு மணி முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வேலை செய்தும் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்த முடியாத சூழ்நிலையே இன்றும் நிலவுகிறது. உதிரித் தொழிலாளர்கள் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் உழைத்தாலும் அவர்களின் குடும்பம் ஒரு வேளை சாப்பாட்டுக்கே சிரமப்படுகிறது. உழைத்தாலும் வாழ்க்கை சிறப்பாக அமையாததற்கு என்ன காரணம், இந்த வாழ்க்கையில் இருந்து விடுதலைப் பெறுவது எப்படி என்று சிந்திக்காத தொழிலாளர்களே கிடையாது

இன்றைய நிலைமைக்கான காரணங்களையும், நாளைய விடுதலைக்கான வழியையும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் நமக்குக் காட்டியுள்ளனர். அது என்ன வழி என்று இந்த நூலில் பார்ப்போம்

இங்கிலாந்து தொழிற்சங்கத்தின் (The Labour Standard) தொழிலாளர் தரநிலை என்ற பத்திரிகையின் தலையங்கமாக எங்கெல்சால் மே 1881 முதல் ஆகஸ்ட் 1881 வரை தொடராக எழுதப்பட்டது. அதைத் தொகுத்துகூலி அமைப்புமுறைஎன்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது

அதில் சில தலையங்கத்தில் உள்ள கருத்துகளைத் தொகுத்துப் பார்ப்போம்

முதலாவது தலையங்கம் நேர்மையான நாள் வேலைக்கு நேர்மையான நாள் கூலி என்பதாகும்

 நேர்மையான நாள் வேலைக்கு நேர்மையான நாள் கூலியா? என்ற கேள்விக்கான பதிலைக் காண்பதற்கு, ஒழுக்கநெறிக்கோ அல்லது சட்டம் மற்றும் சமத்துவம் பேசுகிற அறிவுத்துறைக்கோ; மனிதநேயம், நீதி, தர்மம் போன்ற எந்தவொரு உணர்ச்சிகரமான உணர்விற்கோ விண்ணப்பிக்கக் கூடாது என்கிறார் எங்கெல்ஸ். ஏன் என்றால் ஒழுக்கநெறிக்கு நேர்மையாக இருப்பதும், சட்டப்படி நேர்மையாக இருப்பதும் சமூக ரீதியில் நேர்மை அற்றதாக இருக்கக்கூடும்

நேர்மையையும் நேர்மையற்றதையும் தீர்மானிக்கும் விஞ்ஞானம் எதுவென்றால், உற்பத்தி, பரிவர்த்தனை ஆகியவற்றுடன் தொடர்புடைய பொருளாயத உண்மைகளை எடுத்துரைக்கும் அரசியல் பொருளாதாரம் என்கிற அறிவியலே ஆகும்

அரசியல் பொருளாதார வழியில் முடிவெடுக்க வேண்டியதை, ஒழுக்கநெறி வழியில் அணுகினால், அதன் மூலம் எடுக்கப்படும் முடிவுகள், அறிவியல் வழிப்பட்டதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

இப்போது நாம் அரசியல் பொருளாதாரம் எதை நேர்மையான நாள் கூலி என்றும், நேர்மையான நாள் வேலை என்றும் கூறுகிறது என்பதைப் பார்ப்போம்

சாதாரண நிலைமைகளில் நேர்மையான நாள் கூலி என்பது தொழிலாளியின் நிலையையும், அந்தந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்தையும் கணக்கில் கொண்டு கொடுக்கப்படுகிறது

 உண்மையான கூலி விகிதம், வணிகத்தின் ஏற்ற இறக்கங்களையொட்டிச் சில நேரங்களில் மேலேயும் சிலநேரங்களில் கீழேயும் இருக்கும். ஆனால் சாதாரண நிலைமைகளில் அதன் ஏற்ற இறக்கங்களின் சராசரியாக இருக்க வேண்டும்

தொழிலாளி தமது முழுநாள் உழைப்பு சக்தியை முதலாளிக்குக் கொடுக்கிறார். இதற்குப் பரிவர்த்தனையாக ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப உழைப்பதற்குத் தேவையான பிழைப்புச் சாதனங்கள் எவ்வளவு அவசியமோ அதனை மட்டுமே பெறுகிறார். இந்தப் பேரத்தின் தன்மைக்கு ஏற்பத் தொழிலாளி உழைப்பை முதலாளிக்கு அதிகமாகக் கொடுக்கிறார், முதலாளி கூலியைத் தொழிலாளிக்குக் குறைவாகக் கொடுக்கிறார். இது மிகவும் விசித்திரமான நேர்மை என்கிறார் எங்கெல்ஸ்

கூலியைப் போட்டி தான் நிர்ணயிக்கின்றன என்று முதலாளித்துவ அரசியல் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியானால், இரு தரப்பினரும் சமமான நிலையில் நின்று பேசுவது தானே நேர்மையாக இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி நடைபெறுவதில்லை. ஏன் என்றால், முதலாளி, தொழிலாளியுடன் உடன்படவில்லை என்றால் முதலாளியால் தம்மைக் காத்துக் கொள்ள முடியும். இதுவரை தான் சேர்த்துவைத்ததைச் செலவழித்து வாழமுடியும். ஆனால் தொழிலாளியின் நிலையே வேறு, கூலி கிடைத்தால்தான் அவனால் பிழைக்க முடியும். ஆகவே தொழிலாளி எத்தகைய விதிகளின்படி வேலை கிடைக்கிறதோ அதனை ஏற்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இத்தகைய பேரத்தில் தொழிலாளருக்குச் சமநிலை இல்லை, பசி என்னும் பயங்கரத்தால் கட்டுப்பட்டவராக இருக்கிறார். ஆவினுங்கூட முதலாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதாரத்தின்படி இதுதான் மேன்மையான நேர்மையாகும்

தொழிற்சாலையில் புதிய இயந்திரங்கள் புகுத்தப்படும் போது, தொழிலாளர்கள் மேன்மேலும் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். மூலதனம் பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான தொழில்துறை சேமப்பட்டாளப் பகுதியில் நீக்கப்பட்ட தொழிலாளர்கள் சேர்க்கப்படுகிறார்கள்

நேர்மையான கூலி என்பது எந்த நிதியில் இருந்து கொடுக்கப்படுகிறது என்று பார்த்தால் நிச்சயமாக மூலதனத்தில் இருந்துதான் என்பது விளங்கும். நிலத்தைத் தவிர்த்தால் உழைப்பு ஒன்றே செல்வத்துக்குத் தோற்றுவாய். மூலதனம் என்பது உழைப்பின் சேமிக்கப்பட்ட விளைபொருளைத் தவிர வேறில்லை. மூலதனம் மதிப்பு எதையும் தோற்றுவிப்பதில்லை

தொழிலாளிக்குத் தனது சொந்த உற்பத்திப் பொருளில் இருந்தே கூலி கொடுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், தொழிலாளியின் கூலியானது அவன் உழைப்பின் உற்பத்திப் பொருளுடன் ஒத்திருக்க வேண்டும்

ஆனால் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் படி அது நேர்மையாக இருக்காது. ஆகவே தொழிலாளியின் உழைப்பின் விளைவுகள் முதலாளியிடம் செல்கின்றன. அதில் இருந்து தொழிலாளருக்குக் கிடைப்பது தொழிலாளியின் வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற அத்தியாவசியமானது தவிர வேறொன்றுமில்லை. “நேர்மையுள்ளஇந்தப் போட்டியின் முடிவில், வேலை செய்பவர்களின் உழைப்பின் விளைபொருள்கள், வேலை செய்யாதவர்களின் கைகளில் தவிர்க்க முடியாமல் குவிகிறது

இது எப்படி நேர்மையான நாள் வேலைக்கு நேர்மையான நாள் கூலி என்று கூறமுடியும். அதனால் இந்தப் பழைய முழக்கம் காலாவதியாகிவிட்டது. இதற்கு மாறாகப் புதிய முழக்கத்தை முன்வைக்க வேண்டும்

 

வேலைக்குரிய சாதனங்களான கச்சாப்பொருட்களும் தொழிற்கூடங்களும் இயந்திரங்களும் உழைக்கும் மக்களின் உடைமையாகுக”. 

            இதன் மூலம் எங்கெல்ஸ் கூறுவது என்னவென்றால், தொழிலாளர்களின் இறுதி குறிக்கோள் அனைத்தையும் பொதுவுடைமை ஆக்குவதாக இருக்க வேண்டும்

அடுத்து கூலி அமைப்பு முறையைப் பற்றி எங்கெல்ஸ் பேசுகிறார்

இன்றைய வளர்ச்சி அடைந்துள்ள சமூகம் இரண்டு எதிரெதிர் வர்க்கமாகப் பிரிந்துள்ளது, அதில் ஒரு பக்கம் முதலாளிகள் மறு பக்கம் உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகள். ஒருபுறம், உற்பத்தி, நிலம், மூலப்பொருட்கள், இயந்திரங்கள் முழுவதும் ஏகபோகமாக்கிக் கொண்ட முதலாளிகள். மறுபுறம் உற்பத்திச் சாதனங்களில் உடைமை அனைத்தையும் பறிக்கப்பட்டவராயும், தங்கள் சொந்த உழைப்பு சக்தியைத் தவிர வேறொன்றையும் சொந்தமாகக் கொண்டிராதவர்களான உழைக்கும் தொழிலாளிகள். இப்படி இரண்டு எதிரெதிர் வர்க்கமாய் இருக்கும்வரை கூலி பற்றிய விதி வலுவுள்ளதாகவே இருந்து வரும். கூலி அமைப்பு முறை என்ற ஒன்று ஒழியாதவரை தொழிலாளியின் கைவிலங்குகள் ஒவ்வொரு நாளும் இறுகிக் கொண்டே செல்லும்

கூலிக் குறைவை எதிர்த்தே தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. அதன் விளைவு என்ன? மூலதனத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார்களா? தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினரையாவது கூலி அடிமைகள் என்னும் நிலையில் இருந்து விடுபடுவதற்கோ, தங்கள் சொந்த உற்பத்திச் சாதனங்களுக்குத் தாங்களே சொந்தக்காரர்களாக்கி, தங்கள் சொந்த உழைப்பின் உற்பத்திப் பொருளுக்குத் தாங்களே சொந்தக்காரர்களாவதற்கோ தொழிற்சங்கங்களின் போராட்டம் உதவிச் செய்துள்ளதா? இவைகள் எதையும் செய்யவில்லை என்பதோடு அதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை. இது அனைவரும் அறிந்த விஷயமாகும்

இவைகளைச் செய்யாததினால் தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளுக்குப் பயன்படவில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அனைத்து நாடுகளிலும், தொழிலாளி வர்க்கத்துக்கு, மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கம் அவசியமானதேயாகும். அந்தந்த நாடுகளின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்பக் கூலி கொடுக்கப்படுகிறது. ஆனால் அதே நாட்டில் அனைவருக்கும் ஒரேவிதமான கூலி கொடுக்கப்படுகிறது என்று கூறிடமுடியாது

கூலி உயர்வு போராடுவதற்கு இயக்கமாகத் திரளாத பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்ற பகுதியைவிடக் குறைவாகவே கூலியினைப் பெறுகின்றனர். அவர்கள் ஒற்றுமையாகத் தங்களது சக்திகளை ஒன்றிணைக்காததே அதற்குக் காரணம் ஆகும். அந்த இடங்களில் முதலாளிகளின் அத்துமீறல்களுக்குத் தொழிலாளர்கள் அடங்கிப் போகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் கீழே செல்கிறது. அவர்களின் இயலாமைக் காரணங்களால், எதிர்க்க முடியாமல் அந்த நிலைமைகளுக்குப் பழகி ஏற்றுக் கொள்கின்றனர்

ஆக, ஒரே நாட்டில் ஒரே விதமாகக் கூலி பற்றிய விதி கறாராகக் கடைபிடிக்கப்படுவதில்லை. கூலி அதிகம் கிடைக்க வேண்டுமானால், உழைக்கும் பெரும்பான்மையினர் ஒன்றிணைந்து தங்களது சக்தியினைத் தொழிற்சங்கத்தில் வெளிப்படுத்தி, அதன் மூலம் நடைபெறுகிற பேரத்தினால் தான் கூலி அதிகரிக்க முடிந்திருக்கிறது என்பதையே வரலாறு காட்டுகிறது. தனித்தனியாக நின்று தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தால் அதனை முதலாளி எளிதாகத் தோற்கடிக்கச் செய்துவிடுவார். அதனால் தற்போதைய சமூகத்தில் பொருளாதாரச் சட்டத்தின்படி நேர்மையான நாள் வேலைக்கு நேர்மையான நாள் கூலி என்கிற குறைவான தொகையினைப் பெறுவதற்கு சங்கங்களாக இணைந்து செயல்பட  வேண்டியுள்ளது

தொழிற்சங்கங்கள் நடத்துகிற போராட்டத்தால் கூலி அமைப்புமுறை குலைக்கப்படவில்லை, அதற்கு மாறாக அத்தகைய போராட்டங்கள் கூலி அமைப்புமுறையின் விதியைச் செயல்படுத்துகின்றன. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் இத்தகைய போராட்டங்கள்கூலி அமைப்புமுறையை தாக்குவதில்லை. தொழிலாளி வர்க்கத்தின் இழிந்த நிலைமை கூலி உயர்வதாலோ, குறைவதாலோ ஏற்படவில்லை. தொழிலாளி வர்க்கம் தங்களது உழைப்பின் பயனை முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, உழைப்பின் பயனில் கூலி எனப்படும் பகுதியைப் பெறுவதோடு, திருப்திப்பட வேண்டி இருப்பதில் தான் அந்த இழிநிலை அடங்கியிருக்கிறது

முதலாளி உழைப்புச் சாதனங்களின் சொந்தக்காரராக இருப்பதினால் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கிறார். இதற்குக் காரணம் தனிச் சொத்துடைமையே. இந்தத் தனிச்சொத்துடைமை ஒழிந்து, நிலம், கச்சாப் பொருள், இயந்திரங்கள் ஆகியவை அனைத்தும் தொழிலாளி வர்க்கத்தால் பொதுச் சொத்தாக மாற்றாதவரை, தங்களது பொருளாதார இழிநிலையை முழுமையாக நீக்க முடியாது

கூலி உயர்வுக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாககூலி அமைப்பு முறைஒழிப்புக்கான போராட்டமாக வளர்ச்சி அடைய வேண்டும். “கூலி அமைப்பு முறைஒழியாதவரை தொழிலாளர்களின் பொருளாதார நிலை மேம்பாடு அடையாது

இதற்கு அடுத்து, எங்கெல்ஸ், தொழிற்சங்கங்கள் பற்றி இரண்டு கட்டுரையை எழுதியுள்ளார்

பொதுவாக உழைக்கும் வர்க்கங்கள் இதை முழுமையாகப் புரிந்து கொள்வது மிகமிக முக்கியம் என்று கூறியுள்ளார்

நமது நாட்டைப் பொருத்தளவில் தொழிற் சங்கங்களை நடத்துபவர்களும் இதனை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாக இருக்கிறது. தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் கூலி பற்றிய பேச்சோடு தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தொழிற்சங்கப் போராட்டம் கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நிற்பதில்லை, “கூலி அமைப்பு முறைஒழிப்புக்கான போராட்டமாக நீள்கிறது

உழைப்பாளிகளுக்கு அரசியல் பொருளாதாரப் புரிதல் அவசியம் என்று எங்கெல்ஸ் கூறுகிறார் என்றால் தொழிலாளர்களுக்குத் தலைமை தாங்கும் தொழிற் சங்கத் தலைவர்கள், அரசியல் பொருளாதாரத்தை அறிந்திருப்பது எந்தளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது

அரசியல் பொருளாதாரப் புரிதல் என்றால்மூலதனம்நூலின் மூன்று தொகுதியைக் கரைத்துக் குடித்து, அது பற்றிய தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது பொருள் அல்ல. அரசியல் பொருளாதாரம் பற்றிய பொதுப் புரிதல் அவசியம். குறிப்பாக உபரி மதிப்புக் கோட்பாடு பற்றிய புரிதல் இல்லாமல் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்துக் கூலி உயர்வுக்கான போராட்டத்தை நடத்த முடியாது

முடிந்தவரை கூலியைக் குறைப்பது என்பது தனிப்பட்ட முதலாளிக்கு மட்டுமல்லாது பொதுவாக முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு உகந்தது என்பது இன்றைய தொழிலாளர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்காது. அனைத்துச் செலவுகளையும் கழித்த பின் உழைப்பின் உற்பத்திப் பொருள் இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கு தொழிலாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்படுகிறது, மற்றொன்று முதலாளிக்கு லாபமாகப் பிரிக்கப்படுகிறது. தொழிலாளியின் கூலியைக் குறைத்தால் முதலாளியின் லாபம் அதிகரிக்கிறது, முதலாளியின் லாபம் குறைந்தால் தொழிலாளிக்குக் கூலி அதிகம் கிடைக்கிறது

கூலிக் குறைப்பு என்பது முதலாளியின் நலனுக்கானது என்பதை மறுப்பது முதலாளியின் லாபத்தை அதிகரிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை என்பதற்குச் சமம். 

முதலாளி தொழிலாளியின் கூலியைக் குறைப்பது பல்வேறு நிகழ்வுகளால் நடத்தப்படுகிறது. அதில் ஒன்றைப் பார்ப்போம். முதலாளிகளுக்கு இடையே போட்டியானது, லாபத்தை அதிகமாகப் பெறுவதில் அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு முதலாளியும் போட்டி முதலாளிகளைவிடக் குறைந்த விலைக்குத் தமது சரக்கை விற்க முயற்சிக்கின்றனர். இதற்கு அந்த முதலாளி தமது லாபத்தைத் தியாகம் செய்யாமல் இருக்க வேண்டுமானால், கூலியைத் தொழிலாளர்களுக்குக் குறைத்துக் கொடுக்க வேண்டும்

இந்த நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தொழிலாளர்கள் தனித்து நின்றார்களானால் அதனை முதலாளி எளிதாக எதிர்கொண்டு தமது நலனை நிலைநிறுத்திக் கொள்வார். தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் இல்லாத இடத்தில் எல்லாம் இதே நிலைதான் காணப்படுகிறது

தொழில் செழுமையுள்ள காலங்களில் இந்த நிலைமை சற்று மாறலாம். செழுமை நிலைமை மாறும் போது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கீழ்நிலைக்குச் செல்கிறது. இதனை எதிர்ப்பதற்குத் தொழிற்சங்கம் ஏற்படாது போனால் தொழிலாளர்கள் இதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எங்கெல்ஸ் எச்சரிக்கிறார்

இந்த நிலைமைகளை உணர்ந்து தொழிற்சங்கங்கள் அமைப்பதும் அதனைச் சட்டப்பூர்வமாக்குவதும் நடைபெறுகிறது. அப்போது முதலாளி வர்க்கம் தொழிற்சங்கங்கள் மீது வன்முறையை நிகழ்த்துகிறது

தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாக மாறுகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களைச் சக்திகளை ஒன்றிணைத்துக் கூலி உயர்வுக்காகவும், வேலை செய்யும் இடத்தில் தங்களது பாதுகாப்புக்காகவும் போராடுகிறது. அப்போராட்டம் பல நேரங்களில் வேலை நிறுத்தங்களாக வெளிப்படுகிறது. தொழிலாளர்களின் நலன்கள் தொடர்ந்து நடத்தப்படுகிற பேரங்களில் தான அடங்கி இருக்கிறது

தொழிற்சங்கங்களின் நடவடிக்கையின் மூலமே, முதலாளிகளுக்கு எதிராகக் கூலிச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது, தொழிலாளர்கள் முதலாளிகளிடம் விற்ற உழைப்பு சக்தியின் மதிப்பைப் பெற முடிகிறது. போராடிப் பெற்ற உழைப்பு நேரக் கட்டுப்பாடு போன்ற உரிமைகள் அரசாங்கச் சட்டங்களின் உதவியினால் நிலைநிறுத்தப்படுகிறது. இருந்த போதிலும் தொழிற்சங்கங்களால் அதிகப்பட்சம் பெற முடிவது இவ்வளவுதான். இதற்கும் இடையறாது போராட வேண்டியிருக்கிறது

பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது இருப்பது அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. இழந்ததை மீட்க மீண்டும் போராட வேண்டியுள்ளது. இந்த விஷ வட்டதுக்கு முதலாளித்துவத்தில் முடிவே கிடையாது

மார்க்ஸ் கூறியுள்ள பொருளாதார நெருக்கடி பற்றிய புரிதல் இல்லாமல் தொழிற்சங்கத்தை நடத்த முடியாது. தொழிலாளர்களும் இதனைப் புரிந்து கொண்டால்தான், தாம் வாழ்ந்து வருகிற இழிவான நிலைமைக்கான காரணத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டம் கூலி அடிமை முறை ஒழிப்புக்கான போராட்டமே ஆகும். ஆகவே தொழிலாளர்களின் இறுதி கோரிக்கைகூலி அமைப்பு முறையை ஒழிப்பதில் அடங்கியிருக்கிறது

இதுவரை மூலதனத்திற்கு எதிராகக் கூலி விகிதத்தை ஒழுங்கமைப்பதற்கு நடத்தும் போராட்டத்தில் தொழிலாளர்கள் சிறிதளவாயினும் எதிர்க்கும் வழியான தொழிற்சங்கத்தின் பங்கைப் பற்றி எங்கெல்ஸ் கூறினார்

அடுத்துத் தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பாளர்களாகத் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பங்கைப் பற்றி (தொழிற்சங்கங்கள் II) எங்கெல்ஸ் கூறுகிறார்

முதலாளித்துவத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எந்த வகையில் மறுத்தாலும் வர்க்கப் போராட்டம் எதார்த்தத்தில் இருக்கிறது என்பதை மறைக்கமுடியாது. முதலாளி தமது லாபத்தை உயர்த்துவதற்குக் கூலியைக் குறைப்பது என்கிற எளிதான வழிமுறையாக இருக்கும் வரை இது தொடர்ந்து நடைபெறும். அதுமட்டுமல்லகூலி அமைப்பு முறையை ஒழிக்காதவரை வர்க்கப் போராட்டத்தைத் தவிர்க்க முடியாது

தற்போதைய முதலாளித்துவச் சமூகத்தில் பகையான இரு வர்க்கங்கள் இருக்கின்றன என்பதை எந்த அலங்காரச் சொற்களாலும் மறைத்திட முடியாது

முதலாளித்துவத்தில், ஒருபுறம் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சொந்தமாக வைத்துள்ள முதலாளி வர்க்கத்தினர், மறுபுறம் தம் சொந்த உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறெதையும் கொண்டிராத தொழிலாளி வர்க்கத்தினர் இரண்டு வர்க்கமாகப் பிரிந்து உள்ளனர். இந்தப் பகைமையான இரு வர்க்கத்தினர் தனிச்சொத்தின் அடிப்படையில் உருவானவர்கள். அதனால் தனிச்சொத்துடைமை இருக்கும் வரை இதனை வெறும் வார்த்தைகளால் மட்டும் மறுத்திட முடியாது. மிகவும் வேடிக்கையான குற்றச்சாட்டு என்னவென்றால், தன் சொந்த உற்பத்திப் பொருளில் ஒரு சிறு பங்கு பெறப் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கம்தான் உண்மையாக முதலாளிகளைக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்

இன்றைய சமூகத்தில் காணப்படும் இந்த இரண்டு மாபெரும் வர்க்கங்களுக்கு இடையே நடைபெறும் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக மாற வேண்டும். நிலப்பிரபுத்துவத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போராட்டம் இவ்வாறு தான் நிகழ்ந்தது. அதேபோல் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்தப் போராட்டமும் தொடர்ந்து நிகழ்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகே வெற்றி கிட்டும்

ஒரு வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்தின் முதன்மையான குறிக்கோள் அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதாகும். ஆளும் வர்க்கம் தன் அரசியல் மேலாதிக்கத்தை, நாடாளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மை மூலம் பாதுகாத்துக் கொள்கிறது, கீழ்நிலையில் உள்ள வர்க்கம் நடப்பில் உள்ள சட்டங்களைத் தன்னுடைய தேவைகளுக்கும் நலன்களுக்கும் பொருத்தமாக மாற்றுவதற்குப் போராடுகிறது. அதாவது அதிகாரத்தின் ஒரு பகுதியைப் பெறுவதற்காகவும் அதன் பிறகு அதிகாரம் முழுவதும் பெறுவதற்காகவும் போராடுகிறது

ஒரு வர்க்கத்திற்கு எதிரான மற்றொரு வர்க்கத்தின் போராட்டமானது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானதே ஆகும்

முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் அரசியல் போராட்டத்தில், அமைப்பு (Organisation) மிக முக்கியமான ஆயுதமாகும்

சக்தி வாய்ந்த தொழிற்சங்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் மூலம் கூலியையும் வேலை நேரங்களையும் ஒழுங்குபடுத்த முடிந்திருக்கிறது. மேலும் தொழிலாளர்களுக்குப் பகையான சட்டங்களை நீக்கவும் முடிந்திருக்கிறது

தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு புதிய வாய்ப்பாக நாடாளுமன்றத்தில் தங்களது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த நபர்களை அனுப்பியது. இதன் மூலம் புதிய ஆயுதங்களுடன் மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தில் நுழைய அவர்களுக்கு உதவியது

தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட காவலராகத் தங்களின் கடமையினைச் செய்வதற்குத் தொழிற்சங்கங்கள் மறந்துவிட்டன என்று எங்கெல்ஸ் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார். இங்கே எங்கெல்ஸ் கூறுவது இங்கிலாந்தின் நிலைமையாகும். இந்தக் கூற்று நம் நாட்டில் எந்தளவுக்குப் பொருந்தும் என்பதையும் சேர்த்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும்

பத்தாண்டுகளுக்கு மேலாக அவற்றின் கைகளில் அந்தப் புதிய ஆயுதம் இருந்த போதிலும், பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டனர். அவர்கள் உண்மையில் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணியில் அணிவகுத்துச் செல்லாவிட்டால் இன்று வகித்துவரும் பதவியைக்கூடத் தொடர முடியாது என்பதை மறந்து விடக்கூடாது

இது இங்கிலாந்தின் அன்றைய நிலையைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியதாகும். இந்த எங்கெல்சின் கூற்றை, இன்றைய நமது நாட்டின் எதார்த்த நிலைமையுடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது

மேலும் இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கம் சில காலமாகவே தவறான பாதையில் பயணிக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் தென்படுகின்றன என்கிறார் எங்கெல்ஸ். கூலி உயர்வுக்காகவும், வேலை நேரக் குறைப்புக்காகவும் மட்டும் நடைபெறுகிற இயக்கங்கள் முடிவேயில்லாத ஒரு தீமையான வட்டத்தில் தன்னை வைத்துவிட்டது. அடிப்படையான தீமைகூலி அமைப்பு முறையே தவிர, கூலி குறைவாக இருப்பதல்ல என்பதை உணரத் தொடங்கி இருப்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய அறிவு ஒரு காலத்தில் பொதுவாகத் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பரவி விடுமேயானால் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு கணிசமாக மாறித் தீரவேண்டும். தாம் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளாக இருக்கும் சிறப்புரிமையையும் மேலும் அனுபவிக்கும் உரிமையும் இழக்க நேரிடும்

ஆகவே, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது, இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதில் தனக்கு உரிய முழுப்பங்கைத் தவறுக்கு இடம் தராத குரலில் கோரும் நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, உயர்வான கூலிக்கும் குறைவான வேலை நேரத்திற்கும் நடத்துகிற போராட்டமும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற் சங்கங்களின் முழு நடவடிக்கையும், தம்மளவில் ஒரு குறிக்கோள் ஆகாது. அந்த நடவடிக்கைகள்கூலி அமைப்பு முறையை அடியோடு ஒழிப்பது என்கிற மேலான குறிக்கோளை அடைவதற்கு உரிய ஒரு வழிவகை இதுவல்ல என்பதைத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ளக்கூடிய காலம் விரைவில் வருகிறது

நாடாளுமன்றத்தில் உழைப்பின் முழுப் பிரதிநிதித்துவத்திற்கும், “கூலி அமைப்பு முறையை ஒழிப்பதற்கான தயாரிப்பினைச் செய்வதற்கும் தொழிலாளி வர்க்கத்துக்கு முழுமைக்குமான ஒரு அமைப்பு அவசியமாகிறது. அது தனித்தனித் தொழில்களைச் சேர்ந்த அமைப்புகளாக அல்லாமல் அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். எவ்வளவு விரைவாக இது செய்யப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதாகும்

ஒர் அமைப்பாக -கட்சியாக- ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கத்தை எதிர்க்கக்கூடிய சக்தி உலகில் இல்லை என்கிறார் எங்கெல்ஸ்

இதற்கு அடுத்து தொழிலாளர் கட்சி பற்றி எழுதியுள்ளார்

"கட்சி அரசியலில் இருந்து விலகி இருங்கள்!" என்று நண்பர்களும் அனுதாபிகளும் எத்தனையோ முறை எச்சரித்துள்ளனர். அன்றைய இங்கிலாந்தின் கட்சி அரசியலைப் பொறுத்தவரை இந்த முழக்கம் சரியானதே. இக்கட்சிகள், தொழிலாளி வர்க்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். நிலப்பிரபுக்கள், முதலாளிகள், சில்லறை வியாபாரிகள் ஆகியோர்களின் கருத்துகளின் சாயல்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். உண்மையாக இவர்கள் தொழிலாளி வர்க்கத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். தொழிலாளி வர்க்கத்திற்கு என்று அதன் சொந்த அரசியல், சமூக நலன்கள் இருக்கின்றன. அந்த நலன்களின் அடிப்படையில் எப்படி நிமிர்ந்து நின்று தொழிலாளி வர்க்கம் போராடியது என்பதைத் தொழிற்சங்கங்களின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது

ஆனால் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம்மகத்தான லிபரல் கட்சியின்வாலாக இருந்து வருவதில் திருப்தி அடைந்து விட்டது. அது தன்னுடைய அரசியல் நலன்களை அநேகமாக முற்றிலும் மேல்தட்டு வர்க்கத்திடம் ஒப்படைத்து விட்டது. ஐரோப்பாவிலேயே மிகச் சிறந்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கத்துக்கு இது தகுதியான அரசியல் நிலைப்பாடு இல்லை. மற்ற நாடுகளில் தொழிலாளிகள் தீவிரமாகச் செயலாற்றி வந்துள்ளனர். இங்கிலாந்தைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்துக்காகவும், நாடாளுமன்றத்துக்காகவும் தன்னுடைய வர்க்கத்தின் நேரடிப் பிரதிநிதித்துவத்துக்காகவும் போராடிவந்துள்ளன

இங்கிலாந்தில் ஓர் உண்மையான ஜனநாயகக் கட்சியானது, தொழிலாளர் கட்சியாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். பிற வர்க்கங்களைச் சேர்ந்த அறிவாளிகள் கட்சியில் சேரலாம். பாட்டாளி வர்க்கச் சார்பில் அவர்கள் நேர்மையாக இருப்பதற்கு வாக்குறுதி அளித்தவர்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக ஆகலாம்

ஜெர்மனியில் தொழிலாளர் பிரதிநிதிகள் அனைவரும் தொழிலாளர்கள் அல்ல. ஆனால் இங்கிலாந்திலும், பிற இடங்களிலும் உள்ள எந்தவொரு ஜனநாயகக் கட்சியும் ஒரு தனித்துவமான தொழிலாளி வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்காவிட்டால் திறம்பட வெற்றி பெறமுடியாது. தொழிலாளி வர்க்கத் தனித்துவத்தை இழந்தால் குறுங்குழுவாகவும் போலிகளாகவும் மாறுவதைத் தவிர வேறுவழியில்லை

            மேலே எங்கெல்ஸ் கூறியதை இன்று படிக்கும் போது, நம்நாட்டில் உள்ள வலது, இடது திரிபுகளைக் கொண்ட கட்சிகள், அமைப்புகள் ஆகியவை நமது நினைவுக்கு வராமல் இருக்காது

            எங்கெல்ஸ் கூறுவதைத் தொடர்வோம்

ஒவ்வொருவரும் தங்களைத்தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய உலகத்தில் நாம் வாழ்கிறோம். இதை அறியாது நிலப்பிரபு, முதலாளி, சில்லறை வணிகர் என்னும் வர்க்கத்தினரும் அவர்களுக்கு வால் பிடிக்கும் வழக்குரைஞர்கள், பத்திரிகை எழுத்தாளர்கள் போன்றோர்களின் நலன்களை ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்கிறது

இங்கிலாந்து தொழிலாளிகள் மனம் வைத்துவிட்டால் போதும், தங்களுக்குத் தேவையான சமூகச் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொள்ளும் எஜமானர்களாகிவிடுவார்கள். இதனைப் புரிந்து தொழிலாளர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்

எங்கெல்ஸ் இந்ததொழிலாளர் கட்சிஎன்கிற கட்டுரையில் கட்சியைப் பற்றி மிகவும் குறைவாகத்தான் கூறியுள்ளார். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உள்ளபாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்என்ற இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்கும்போது தொழிலாளர்களைத் தலைமை தாங்கும் கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதில் கூறப்பட்டதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்

தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு மாறான கட்சியைக் கம்யூனிஸ்டுகள் அமைத்துக் கொள்வதில்லை. அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு நலன்களைக் கம்யூனிஸ்டுகள் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் தங்களது நலன்களை வெளிப்படுத்துவர், ஆனால் கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்க முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டுவர். தொழிலாளர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதில்தான் இருக்கிறது

ஆகவே தொழிலாளர்களைக் கடந்து கம்யூனிஸ்டுகளுக்கு உரிய திறனாக அறிக்கை கூறுவது என்னவென்றால், கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் தொழிலாளி வர்க்கக் கட்சியில் மிகவும் முன்னோக்கி உந்தித் தள்ளும் பிரிவாக இருப்பர். மேலும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகக் கோட்பாட்டு வழியில் கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளனர் என்கிறது அறிக்கை

அந்தப் புரிதல் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் வழியில் ஏற்பட்டதாகும். முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதற்கும், பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும் பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கம்யூனிஸ்டுகள் கட்டியமைக்க வேண்டும்

தொழிலாளர்களை வழி நடத்தும் முன்னணிப் படையே கம்யூனிஸ்ட் கட்சி. இந்த ஒருங்கிணைந்த சக்தியே முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தரும்

முதலாளித்துவ அறிவுத்துறையிடம் இருந்து அல்லாமல் இன்றைய நிலையில் தொழிலாளி வர்க்கத்திடம் இருந்தும் கம்யூனிஸ்டுகள் தோன்றுவதற்கான வளர்ச்சி பெற்றுள்ளோம். எது எப்படி இருந்தாலும், கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களைத் தலைமை தாங்கும் திறம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அனைத்து ஊடகச் சாதனங்களையும் பெற்றுள்ள முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு உரிய திறமைகளைத் திரட்டுபவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் மட்டும் கம்யூனிஸ்டுகளுக்குப் போதாது, அதனை மாற்றுவதற்குத் தேவைப்படுகிற மார்க்சியச் சித்தாந்தத்தின் அடிப்படைகளை அறிந்து, அதனடிப்படையில் செயற்படுபவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்

தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவைகளே மார்க்சிய அடிப்படைகளாகும். இதில் விஞ்ஞானக் கம்யூனிசம் என்பதே அரசியலுக்கு வழிகாட்டியாகும். இந்த அரசியல் வழிகாட்டி விஞ்ஞானத் தன்மை பெற்றுள்ளது என்று கூறுவதற்குக் காரணம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம், அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததே ஆகும். அதனால் கம்யூனிஸ்டுகள் சிறந்து விளங்க வேண்டுமானால் மார்க்சிய அடிப்படைகளின் வழிகாட்டுதலில் செயற்பட வேண்டும்

அடுத்த தலைப்பு சமூக வர்க்கங்கள் அவசியமானவையும் அவசியமற்றவையும்”. இதில் கூறப்படும் கருத்தை முதன்முறையாகக் கேட்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது

தோன்றிய எந்த வர்க்கமும் ஒரு காலத்தில் மறைந்து அழியத்தான் செய்யும். ஆனால் அதை, அது விரும்பாது என்பது தெரிந்ததே. அதனால் இறுதிவரை போராடி மடியும். முதலாளித்துவ வர்க்கம் தோன்றிய குழந்தைப் பருவத்தில் அதன் முன்பாக நிலப்பிரபுத்துவ வர்க்கம் அழியும் தறுவாயில் இருந்தாலும் பலமான அதிகாரத்தைச் செலுத்தியது. ஆனால் முதலாளித்துவ வர்க்கமானது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போராடி அதன் அரசியல் அதிகாரத்தை உடைத்தெறிந்தது. அதன் விளைவாகப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்கம் பெற்றது

இன்றைய காலகட்டத்தில் மூன்று வர்க்கங்களின் இருப்பிற்கு என்ன தேவை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்

இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கம் பொருளாதார வகையில் பயனற்றது, இந்தப் பயனற்ற தன்மையின் காரணமாக அயர்லாந்திலும், ஸ்காட்லாந்திலும் அதன் மக்களை வெளியேற்றி விடும் அளவுக்கு அது தீமை ஆகிவிட்டது. ஆனால், காலனிவழிப்பட்ட அரசாட்சியை நிறுவிய முதலாளித்துவ வர்க்கத்தின் நிலை என்ன? தொழிலாளி வர்க்கத்தை இயக்கிச் செலுத்தி மேன்மேலும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதில் தலைமை தாங்குகிற முதலாளித்துவ வர்க்கம்குறைந்த அளவிலாவது தொழிலாளி வர்க்கத்தைப் போன்று நிச்சயமாக அவசியமான வர்க்கமாகும்

முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி அடைந்த நிலையில் முதலாளித்துவ வர்க்கம் அவசியமானதா? வளர்ச்சி கட்டத்தில் சமூக உற்பத்தியை நிர்வகித்து விரிவாக்கும் வர்க்கம் என்ற வகையில் முதலாளித்துவ வர்க்கம் அதன் அத்தியாவசியச் செயல்பாட்டை அது தொடர்ந்து நிறைவேற்றுகிறதா? என்று கேள்வி எழுப்பினால், இதற்குப் பதில் எதிர்மறையாக இருப்பதைக் காணலாம்

எங்கெல்ஸ் அன்றைய நிலையில் உள்ளதை விவரிக்கிறார். இங்கிலாந்தில் விரிவான போக்குவரத்துக்கான ரயில்வேகளும், கடல்வழி நீராவிக் கப்பல்களில் பெரும்பாலானவையும், இவற்றின் சொந்தக்காரர்களான முதலாளிகளாலேயே முழுமையாக நிர்வகிக்கப்படுகின்றதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகும். அவை கூட்டுப்பங்கு நிறுவனங்களே, ஊதியம் பெறும் ஊழியர்களாலேயே நிர்வகிக்கப்படுகிறது. உயர் பதவி வகிக்கின்ற, அதிக ஊதியம் வாங்குகின்ற உழைப்பாளர்களே இதனை நிர்வகிக்கின்றனர். இந்த மாபெரும் நிறுவனங்களின் சொந்தக்காரர்களான முதலாளிகள் தமது பங்கிற்கு ஈவுத் தொகையை (Dividend) பெறுகின்றனர். இத்தகைய பெரும் கம்பெனிகளில் முதலாளிகள் அனைத்துத் துறைகளையும் தனியாக நிர்வகிக்க முடியாது

முதலாளிகளின் வேலைகள், ஊதியம் பெறும் உயர் பதவி வகிக்கும் வேலைக்காரர்களுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தனிச்சொத்தின் அடிப்படையில் முதலாளிகள் தங்களுடைய ஊதியத்தை ஈவுத் தொகைகளாகத் தமது பைகளில் போட்டுக் கொள்கின்றனர்

முதலாளித்துவம் தோன்றிய போது ஒரு தனித்த முதலாளி, தமது கம்பெனியை நிர்வகித்தது போல், வளர்ச்சி அடைந்த கூட்டுப் பங்கு கம்பெனிகளில் நிர்வகிக்க முடியாது. இயந்திர நெசவு வந்த போது எப்படி நெசவாளர்கள் விலக்கப்பட்டார்களோ அதே போலக் கூட்டுப் பங்கு கம்பெனியின் பிரம்மாண்ட வளர்ச்சியினால் முதலாளிகள் விலக்கப்படுவார்கள். நிர்வாகத்தில் இருந்து விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் அந்த முதலாளிகளுக்கு வேறொரு வேலை மீதம் இருக்கிறது. தங்களது பங்குகளை வைத்துப் பங்கு சந்தையில் ஊகபேரம் செய்கின்ற சூதாட்ட வேலையே அது

தொழிலில் இருந்து விலக்கப்படும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. தொழிலாளிகள் பட்டினியால் மெல்லமெல்லச் சாகிறார்கள், விலக்கப்பட்ட முதலாளிகள் மிதமிஞ்சிய உணவால் மெல்லமெல்லச் சாகிறார்கள். இதுவே, இவ்விருவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

வளர்ச்சி அடைந்துள்ள சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியானது உற்பத்தியை மகத்தான கம்பெனிகளாகச் சமூகமயமாகிவிட்டது, இந்தக் கம்பெனிகளை இனித் தனியொரு முதலாளியால் நிர்வகிக்க முடியாது. முடியாத அந்த வேலைகள் பல்வேறு தொழிலாளர்களால் ஊதியம் கொடுக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே மாபெரும் கம்பெனிகள் முதலாளி வர்க்கத்தின் குறுக்கீடு இல்லாமல், ஊதியம் பெறும் தொழிலாளர்களைக் கொண்டு நன்றாக நிர்வகிக்க முடியும். முதலாளிகளின் குறுக்கீடு மேன்மேலும் தீமையாகி வருவதாக எங்கெல்ஸ் கூறியுள்ளார்

இதன் விளைவாக முதலாளிகளுக்குக் கூறுவது என்னவென்றால், விலகிச் செல்லுங்கள், தொழிலாளி வர்க்கத்தின் நிர்வாக முறைக்கு வழிவிடுங்கள் என்று கூறுவதோடு எங்கெல்ஸ் முடிக்கிறார்

இன்றைய நிலையில் பல பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் தங்களது கம்பெனியைச் செயல்படுத்துகிறது. இந்தக் கம்பெனி முதலாளிகள் தன்னந்தனியாக அனைத்து நாடுகளிலும் இருந்து தங்களது கம்பெனியை நிர்வகிக்க முடியாது என்பது வெளிப்படையாக நமக்குத் தெரிகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள ஊழியர்களே கம்பெனியை நிர்வகிக்கின்றனர்

எங்கெல்ஸ் காலத்தைவிட இன்றைய நவீன வளர்ச்சி நிலையில் முதலாளிகள் தேவையற்ற வர்க்கமாக ஆகிவருவது கண்கூடாகத் தெரிகிறது.