Saturday 25 June 2016

மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவிகோல்

ஆசிரியர்-த.ஜீவானந்தம் B.Com., M.B.A.,

வெளியீடு;-
சுருதி வெளியீட்டகம்,
விலை- ரூ.100/-

அலைபேசி- 94440 09990
மின்னஞ்சல்- jeeva1953@yahoo.com



புவி ஈர்ப்பு விதி என்பது புறநிலையானது. அதனை நாம் மாற்றிடவோ அல்லது மீறிடவோ முடியாது. அதனைப் பற்றிய அறிவை மனிதன் பெற்றதனால், விமானங்களையும், புவி ஈர்ப்பு விசையை கடந்து செல்லக் கூடிய ராக்கெட்டுகளையும் உருவாக்கி அனுப்ப முடிகிறது. இது போன்றே புறநிலையான சமூக வளர்ச்சியின் விதியை தவிர்த்திடவோ மீறிடவோ முடியாது. இவ்விதிகளை அறிந்த மனிதன் சமூக மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மார்க்சியம் இந்த விதியை அறிந்து செயற்படுவதற்குத் தேவையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மார்க்சியம், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இம் மூன்றும் தம்முள் உள்ளிணைப்பைப் பெற்றதாக இருக்கிறது. இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம்  கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்ட்டுகள் அரசியல் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டியதின் அவசியத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மார்க்ஸ் இந்த அவசியத்தை இளம்வயதிலேயே அறிந்துகொண்டார்அவர் "ரைனிஷ் ஜீட்டுங்" பத்திரிகையில் காட்டு விறகுகள் திருட்டு பற்றிய சட்டம், மோஸெல் விவசாயிகளுடைய நிலைமை ஆகியவைகளைப் பற்றி எழுதும் போது, இது போன்ற பிரச்சினைகளை அரசியல்  மற்றும் தத்துவக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் உள்ள போதாமையை உணர்ந்தார். இவைகளுக்குப் பின்னுள்ள பொருளாதார உறவுகளில் அதாவது பொருளாயத நலன்களில் இருந்து அணுகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் நாற்பது ஆண்டுகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய ஆய்வில் தமது கவனம் முழுமையையும் செலுத்தினார். இதன் விளைவே "மூலதனம்" என்கிற மூன்று தொகுதிகள். இவற்றில் முதல் தொகுதி தம்மளவில் முழுமைபெற்ற நூலாகும். மூன்றாம் தொகுதியைப் படிக்காமல் இரண்டாம் தொகுதி முழுமையடையாது.

காரல் மார்க்ஸின் “மூல்தனம்” நூலின் முதல் தொகுதியை முழுமையாக இரண்டு முறை வகுப்பெடுத்த அனுபவம் பெற்றவர் தோழர் த.ஜீவானந்தம். "மூலதன" நூலை பன்னிரண்டு வகுப்புகளில் நடத்த தயார் நிலையில் இருக்கிறார். இந்த இரண்டு வகுப்புகளிலும் (மார்க்சிய சிந்தனை மையம், மூலதன நூல் வாசிப்பு மன்றம்) கலந்து பயனடைந்தவன் நான். மார்க்சிய சிந்தனை மையம்ஆசான்களின் நூல்களை படித்தல் படிப்பித்தல் என்ற முறையில் செயல்பட்டது. அவ்வாறு இருக்கும் கட்டத்தில் நான் இந்த படிப்பு வட்டத்தில் இணைந்தேன். சில மாதங்கள் தொடர்ந்து கலந்து கொண்ட பிறகு ஒரு கருத்தை முன்வைத்தேன். இதுவரை நாம் எவ்வற்றை எல்லாம் வகுப்பெடுத்திருக்கிறோம், இன்னும் எவைகளை வகுப்பெடுக்க வேண்டும் என்று வகைப்படுத்தி செயல் பட்டால் நமது வகுப்புமுறை மேம்படையும் என்று எனது கருத்தை வைத்தேன். அப்போது தோழர் த.ஜீவானந்தம் ஒரு கருத்தை முன்வைத்தார். நம்மவர்களில் ஒருவர் தத்துவத்தையும், மற்றொருவர் அரசியல் பொருளாதாரத்தையும், வேறொருவர் அரசியலையும் தொடர்ந்து வகுப்பெடுக்கலாம். அதன் படி அரசியல் பொருளாதாரப் பகுதியை தோழர் த.ஜீவானந்தம் எடுப்பதாக முடிவெடுத்து செயல்பட்டோம்.

அரசியல் பொருளாதாரம் என்று பொதுவாக எடுப்பதைவிட மார்க்சின் மூலதனத்தை தொடர் வகுப்பாக எடுக்கிறேன் என்று தோழர் த.ஜீவானந்தம் கூறியதும் அவ்வகுப்பில் இருந்த என்னைப் போன்றோர் இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றனர். மூலதனம் எடுப்பதற்கு முன்பாக எங்களுக்கு ஆடம்ஸ்மித்தின் "நாடுகளின் செல்வம்" என்ற நூலைப் பற்றிய அறிமுகமாக ஒரு வகுப்பை எடுத்தார். அடுத்ததாக மார்க்சின் மூதனத்தின் முதல் தொகுதியை தொடர் வகுப்பாக எடுத்தார். இரண்டு மூன்று வகுப்புகள் சென்ற பின், அவரிடம் "உங்களது வகுப்பு  மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கெல்ஸ் எழுதிய "கா.மார்க்ஸ் "மூலதனம்" முதல்தொகுதியின் பொழிப்பு" என்ற நூல் படித்துப்பாருங்கள்" என்று கொடுத்தேன். அதனை படித்துவிட்டு இந்நூல் சிறப்பாக இருப்பதையும், மூலதன நூலைப் பற்றி வகுப்பெடுப்பதற்கான வழிமுறை எங்கெல்சின் நூலில் காணப்படுவதையும் குறிப்பிட்டார். ஒரு வகையில் எங்கெல்சின் வழிமுறையிலேயே எங்களது மூலதன வகுப்பு தடைபடாமல் தொடர்ந்தது.

மார்க்சிய தத்துவத்தையும், இந்திய தத்துவத்தையும் படிப்பதிலும் அது பற்றிய நூல்களை படைப்பதிலும் இருந்த எனது விருப்பம், அரசியல் பொருளாதாரம் பற்றி படிப்பதிலும் அதுபற்றிய வகுப்புகளில் கலந்து கொள்ளதிலும் இருந்த எனது கவனம் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனம் எழுதும் அளவுக்கான தைரியம் தோழர் த.ஜீவானந்தம் எடுத்த வகுப்பில் கலந்துகொண்டபிறகே ஏற்பட்டது.

"மூலதன" நூல் வாசிப்பது இன்றைய நிலையில் சிரமமா? "மூலதன" முதல் தொகுதி வெளிவந்து சிலகாலம் வரை நூலைப் பற்றி முதலாளித்துவ சமூகம் ஏதும் பேசாது மவுன சதியாய் அமைதி காத்தது. ஆனால் இதனை சில காலகட்டத்துக்கு மேல் கடைபிடிக்க முடியவில்லை என்பது அன்றைய உண்மை.

"மூலதன" நூல் வாசிப்பது சிரமமானது என்ற வகையிலான சதியினை இன்றைக்கு சிலர் செய்து வருகின்றனர். வாசிப்பில் உள்ள சிரமம் பற்றி மார்க்சும் எங்கெல்சும் நூலின் முன்னுரையில் எழுதியிருப்பது உண்மையே. முதலில் இந்த எச்சரிக்கைகள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புள்ள நிலைமையினை குறிப்பிடுவதாகும்குறிப்பிட்ட சில சொற்களை, அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சாதாரண அரசியல் பொருளாதாரத்திலும் அவற்றுக்குள்ள அர்த்தத்தில் இருந்து வேறான அர்த்தத்தில் பிரேயோகித்திருப்பதைச் சொல்கிறோம். என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவது இன்றைக்கு அப்படியே எவ்வாறு பொருந்தும்?. மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கலைச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 150 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. தமிழகத்திலும் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் அறிமுகமாகி பல பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. உபரி மதிப்பு, உழைப்பின் இரட்டைத் தன்மை, சரக்கின் இரட்டை மதிப்பு போன்றவை புத்தம்புதிய சொற்களாக இன்றும் எவ்வாறு இருக்க முடியும். அப்படி புதிதாக இருந்தால் இதுவரை மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை படிக்க முயற்சிக்கவே இல்லை என்பதே உண்மை. முயற்சிக்காதவருக்கு எப்போதும் எல்லாமும் சிரம்மே.

மூலதன நூலின் பிரெஞ்சுப் பதிப்புக்கான முன்னுரையில் "உண்மையைக் காணத் துடிக்கிற வாசகர்களை முன்கூட்டேயே எச்சரித்து, முன்கூட்டியே ஆயத்தப்படுத்துவதன் மூலம் அல்லாமல் சங்கடத்தை சாமாளிக்கச் சக்தியற்றவனாய் இருக்கிறேன். விஞ்ஞானத்துக்கு ராஜபாட்டை ஏதுமில்லை, அதன் களைப்பூட்டும் செங்குத்துப பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாய்ப்புண்டு" என்று மார்க்ஸ் எழுதினார். இதுபோன்ற எச்சரிக்கைகள் படிக்கத் தூண்டுவதற்கு எழுதப்பட்டவையே. ஆனால் இன்றுவரை இதனை நமது மக்களிடையே படிக்கத் தடை ஏற்படுத்துவதற்கே பயன்படுத்தப் படுகிறது. சிரமம் என்ற மாயை உடைத்து, படிப்பதற்கு துணைபுரிய வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதே தோழர் த.ஜீவானந்தம் "மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்" என்ற நூல்.

களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்கள் துணைகோலாக  இந்நூலை பயன்படுத்தினால் ஒளிரும் உச்சியினை அடையலாம். "மூலதனம்" நூலைப் புரிந்து கொள்வதில் வர்க்கச் சார்பும் ஒரு வகையில் துணைபுரியும். பாட்டாளி வர்க்கச் சார்பற்ற அறிஞர்கள் அல்லது நபர்கள் மார்க்சின் "மூலதன" நூலை மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள முடியாது. அது மட்டுமல்லாது மார்க்சின் பல முடிவுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொள்ளாமை என்பதை அவர்கள் சிரமம் என்பதாக, "மூலதன" நூலைப் பற்றிய விமர்சனமாக வைக்கின்றனர்.

முதலாளித்துவத்திலிருந்து விடுபடுவதற்கான ஆயுதத்தை மூலதன நூல் சுரண்டப்படும் பாட்டாளி பாட்டாளி வர்க்த்துக்கு வழங்குவதை, பாட்டாளியால் புரிந்து கொள்ள முடியாது என்ற கூற்று அபத்தமேயாகும். அவர்களின் வாழ்நிலையும் அவர்களுக்கான கோட்பாடும் எவ்வாறு அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகும். "மூலதன" நூல் என்ன கூறுகிறது என்பது கண்டிப்பாக பாட்டாளிக்கு புரியக்கூடியதே.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்பது பாட்டாளி வர்க்கத்துக்கான விஞ்ஞானம். இந்த அரசியல் பொருளாதாரம், முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறை என்பது என்றும் நிலைபெற்று இருக்கக்கூடியதல்ல. சமூக வளர்ச்சியின் இடைகட்டத்தில் தான் முதலாளித்துவம் தோன்றியது. இதன் உற்பத்தி முரண்பாட்டால் குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில், வளர்ச்சியுற்ற சமூக உற்பத்திச் சக்திக்கும், பழைமைப்பட்டு போன உற்பத்தி உறவுக்கும் இடையே முரண்முற்றி சமூக புரட்சியை தோற்றுவிக்கிறது. இந்த விஞ்ஞான வழிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பாட்டாளிக்கு மார்க்சிய அரசியல் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்குரிய புறநிலை விதிகளை ஆராய்ந்து, பாட்டாளி வர்க்கத்தின் கடமையான முதலாளித்துவ சமூக அமைப்பை ஒழித்திடுவதற்கானக் கோட்பாட்டை வகுத்தளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தின் அடிப்படையில் இந்தப் பாட்டாளி வர்க்கக் கடமைகளை நிறைவேற்றுகிறது.

வர்க்க சார்பற்ற முறையிலான "மூலதன" வாசிப்பு என்பது நூலின் முடிவுகளோடு முரண்பாட்டை ஏற்படுத்தும். தோழர் த.ஜீவானந்தம் இந்நூலை பாட்டாளி வர்க்க சார்பான புரிதலோடு நமக்கு அளித்துள்ளார். இதுவே இந்நூலின் வெற்றிக்கான முதல் படியாக நான் கருதுகிறேன்.  தொழிலாளி உழைப்பு நிகழ்முறையின் முடிவை, தமது மனதில் தோற்றுவித்துக் கொண்டு உற்பத்தி செய்கிறார் என்பதே, படு மோசமான கட்டக் கலைஞனை தலைசிறந்த தேனிக்களிடம் இருந்து  வேறுபடுத்திக் காட்டுகிறது என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இதனைப் படித்தவுடன்  மார்க்ஸ் இங்கு அதாவது அரசியல் பொருளாதார நூலை படைத்திடும் போது சிந்தனைகளும் மனச் செயல்களும் சுதந்திரமாக செயல்படுவதாக கூறி பொருள்முதல்வாதத்தைக் கைவிட்டுவிட்டார் என்பது போன்று கருத்துரைக்கின்ற மார்க்சின் "மூலதன" வகுப்பாசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் தோழர் த.ஜீவானந்தம் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இந்தப் பகுதியை நமக்களித்துள்ளார்அதே போல், மார்க்ஸ் தமது நூலை சரக்கு பற்றிய கருத்துடன் எழுதத் தொடங்கியதை, காரண காரிய விளக்கம் இன்றியும், வேண்டுமானால் எடுததுக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் என்ற புதிரான முறையில் முன்வைத்திருப்பதாக சில "மூலதன" வாசிப்புக்கான வழிகாட்டும் நூல் கூறுகிறதுதோழர் த.ஜீவானந்தம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டாலாக காட்சி தருகிறது. இந்த செல்வத் திரட்டல் வடிவம் தான் சகலவிதமான சுரண்டலுக்கும் அடிப்படைக் காரணமாகும். சுரண்டல் முறைக்கு காரணமான சரக்கு பற்றிய ஆய்விலிருந்து மார்க்ஸ் தொடங்குகிறார், என்ற தெளிவோடு தமது நூலைத் தொடங்கியிருக்கிறார் தோழர் த.ஜீவானந்தம்.

முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாக குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறிவருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த,ஜீவானந்தம் 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குக் மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி, வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு, தனிச்சொத்துடைமையாக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்று போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூக புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸ் தெளிவுபட விவரித்துள்ளார். இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா!! என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் "மூலதன" நூலை படித்தாராய்கின்றனர். சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகளில் பலர் இதன் அவசியத்தை பற்றிய போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தை சுருக்கி புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.


சமூகத்தைப் பற்றிய விஞ்ஞான புரிதலுக்கும், அதனை புரட்சிகரமாக  மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற மார்க்சிய வழிப்பட்ட அரசியல் பொருளாதார அறிவை பெறுவதற்கு மார்க்சின் "மூலதன" நூலை படிக்க வேண்டும். "மூலதனம்" நூலில் காணப்படும் கடினமானப் பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார். இந்த சுருக்கத்தை மட்டும படித்தால் "மூலதனம்" நூல் முழுமையையும் அறிந்து கொண்டதாகாது. முழுமையாக நூலை படிப்பதற்கு துணைபுரியும் வகையில் அனைத்து அத்தியாயத்தையும் அறிமுகப் படுத்தியுள்ளார்இதனை புரிந்து இந்நூலின் துணையோடு மார்க்சின் "மூலதனம்" நூலை படித்து நிறைவு செய்ய வேண்டும்.