Sunday 20 February 2022

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” -2

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 50 வது வார வகுப்பு – 19-02-2022) 

 

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” என்ற நூல் மூன்று தலைப்புகளில் காணப்படுகிறது. 1) மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை. 2) மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம். 3) வரலாற்றியல் பொருள்முதல்வாதம். இதில் உள்ள முதல் இரண்டை போன வகுப்பில் பார்த்தோம். இன்று மூன்றாம் பகுத்தியான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பதைப் பற்றி பார்க்கப் போகிறோம்

      மூன்றாவது பிரிவைத் தொடங்கும் போதே ஸ்டாலின், வரலாற்று பொருள்முதல்வாதத்தின் பார்வையில், "சமூகத்தின் பொருளாயத வாழ்க்கையின் நிலைமைகள்" என்பதன் பொருள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதே இந்தப் பிரிவின் நோக்கம் என்று கூறுகிறார்.

      சமூகத்தின் பண்புகளையும் அதன் கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும், அரசியல் நிறுவனங்களையும் இறுதியாக நிர்ணிப்பது எது? என்ற கேள்விக்கு சென்ற பகுதியில் சமூகத்தின் பொருளாயத வாழ்நிலைமைகள் என்பதே பதில் என்று பார்த்தோம்.

      இப்போது வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி “சமூகத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள்” என்றால் என்ன என்பதை பார்க்கப் போகிறோம்.

      ஒரு சமூகத்தின் சூழ்நிலைமைகளைப் பற்றி பேசும் போது அதன் இயற்கை, புவியியல் சூழநிலைமைகள் முதலாவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த இயற்கை, புவியியல் போன்றவை ஒரு சமூக அமைப்பு முறையில் இருந்து புதிய சமூக அமைப்பு முறைக்கு மாறிச் செல்வதில் நிர்ணயகரமானப் பாத்திரம் வகிக்கிறதா? என்று கேள்வி எழுப்பினால்.

       “இல்லை” என்பதே பதிலாகும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இல்லை என்றே பதிலளிக்கிறது. ஆனால் சமூக வளர்ச்சியின் மீது இயற்கை, புவியியல் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மறுக்கவில்லை. அந்த தாக்கம் எப்படி இருக்கும் என்றால் அது, சமூக மாற்றத்தை விரைவுப்படுத்தும் அல்லது அதனை தடுத்து தாமதப்படுத்தும்.  தாக்கத்தின் விளைவு இவ்வாறுதான் இருக்க முடியும்.

      அதே போல மக்கள் தொகையின் பெருக்கம் சமூக அமைப்பின் வளர்ச்சியில் ஒரு பங்குவகிக்கிறது. ஆனால், மனித சமூக அமைப்பு முறையின் தன்மையை நிர்ணயிப்பதில் முதன்மை சக்தியாக இருப்பது மக்கள் தொகை வளர்ச்சியா? என்று கேள்வி எழுப்பினால்.

      “இல்லை” என்பதே பதிலாகும்.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் இல்லை என்றே பதிலளிக்கிறது. மக்கள் தொகை, சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும், ஆனால் நிர்ணயகரமானப் பாத்திரம் வகிக்காது.

      மக்கள் தொகை சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும்படியான சக்தி என்பது உண்மையானால், மக்கள் தொகை அடர்த்தி எங்கு அதிகமாக இருக்கிறதோ, மற்றதைவிட அங்கே தான் ஒரு மேலான சமூக அமைப்பு முறை ஏற்பட்டிருக்க வேண்டும். இங்கே ஸ்டாலின் அமெரிக்காவையும், அன்றைய சீனாவையும் ஒப்பிட்டு கூறுகிறார்.

      அமெரிக்காவைவிட சீனாவில் மக்கள் தொகை அடர்த்தி நான்கு மடங்கு கூடுதல் என்றபோதிலும், மேலான சமூக வளர்ச்சியில் சீனாவைவிட அமெரிக்கா மேலானதாக இருக்கிறது. ஏனென்றால் சீனாவில் ஒரு அரை நிலப்பிருப்புத்துச் சமூக முறை நிலவுகிறது. அமெரிக்காவில் முதலாளித்துச் சமூகமுறை நீண்ட காலத்துக்கு முன்பே தனது வளர்ச்சியை எட்டுவிட்டது. இந்த ஸ்டாலின் கூற்று 1938 ஆம் ஆண்டில் கூறியதாகும்.

      இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இயற்கை, புவியியல், மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை, சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் முதன்மை சக்தியாக இல்லை.

      அப்படி என்றால் சமூக வளர்ச்சிகளை நிர்ணயிகும்படியான முதன்மை சக்தி எது?

பழைய அமைப்பு முறையில் இருந்து புதிய அமைப்பு முறைக்கு மாறுவதற்கு உரிய முதன்மையான சக்தி எது? என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு இந்த நூலின் மூன்றாம் பிரிவு பதிலளிக்கிறது

இன்று வகுப்பாக எடுக்கப்படும் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்ற மூன்றாம் தலைப்பில் ஸ்டாலின் நான்கு விஷயங்களைப் பற்றி பேசுகிறார்.

                                                    

1) தீர்மானிக்கும் முதன்மை சக்தி என்றால் என்ன? 2) உற்பத்தியின் முதல் சிறப்புத் தன்மை 3) உற்பத்தியின் இரண்டாவது சிறப்புத் தன்மை 4) உற்பத்தியின் மூன்றாவது சிறப்புத் தன்மை.

1) தீர்மானிக்கும் முதன்மை சக்தி என்றால் என்ன?

      சமூகத்தின் வளர்ச்சிக்கு காரணாக இருப்பது எது?

       சமூக மாற்றத்தை நிர்ணயிப்பது எது?

      இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளிக்கிற பதிலாக ஸ்டாலின் கூறியதைப் பார்ப்போம்.

மனித வாழ்வுக்குத் தேவையான வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யும் முறைதான் அந்தச் சக்தியாகும். அதாவது சமூகம் வாழ்வதற்கும், வளர்வதற்கும் இன்றியமையாதத் தேவைகளாக இருக்கும்; உணவு, உடை, இருப்பிடம், காலணி, எரிப்பொருள், உற்பத்திக் கருவிகள் முதலிய பொருட்களை உற்பத்தி செய்யும் முறைதான் அந்தச் சக்தி என்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

       சமூகம் வளர்வதற்கும் சமூகத்தில் உள்ள மக்கள் வாழ்வதற்கும் தேவைப்படுகிற பொருட்களை உற்பத்தி செய்ய உதவிடும் உற்பத்திச் சக்திகள் தான், சமூகம் வளர்வதற்கும் மாறுவதற்கும் நிர்ணயகரமான பாத்திரம் வகிக்கிறது.

      அதாவது, சமூக வளர்ச்சியை நிர்ணயிப்பது உற்பத்திச் சக்திகளே ஆகும்.

      அடுத்து உற்பத்திச் சக்திகள் எது? என்பதைப் பார்ப்போம்.

      பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்திக் கருவிகள், உற்பத்திக் கருவிகளை இயக்கும் நபர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட உற்பத்தி அனுபவம், உழைப்புத் திறன் ஆகிய அனைத்தும் சமூகத்தின் “உற்பத்திச் சக்திகள்” ஆகும்.

      உற்பத்திச் சக்திகள் என்பவை உற்பத்தியின் ஒரு தன்மைதான்.

      பொருட்களை உற்பத்தி செய்யும் மக்கள், இயற்கையில் உள்ள பொருட்களையும், சக்திகளையும் பயன்படுத்தி கொள்ளும் போது இயற்கைச் சக்திகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கும் தன்மைதான் அது.

      அதாவது, உற்பத்தியில் ஈடுபடுகிற மனிதர்களிடையே காணப்படும் “உற்பத்தி உறவுகள்” தான் மற்றொரு தன்மை, பொருள் உற்பத்தியின் போது அதில் ஈடுபடுபவர்களிடையே ஏற்படும் உறவுகளே உற்பத்தி உறவுகள்.

      உற்பத்தி என்பது அனைத்துக் காலங்களிலும், அனைத்து நிலைமைகளிலும் சமூக வழியிலான உற்பத்தியாகத்தான் இருக்கிறது.

      சமூக வழியிலான உழைப்புப்பிரிவினை முழுமையாக வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தில் உள்ள உற்பத்தி முறையானது, முழுமையான சமூக உற்பத்தியாகக் காணப்படுகிறது.

      உற்பத்தி முறை என்பது உற்பத்திச் சக்திகளையும், மனிதர்களின் உற்பத்தி உறவுகளையும் ஒருங்கே குறிக்கிறது. பொருள் உற்பத்தியின் போக்கானது, உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளுடைய ஒற்றுமையின் உருவமாகத் திகழ்கிறது.

      இந்த முதல் பிரிவில், உற்பத்தியை தீர்மானிக்கும் முதன்மை சக்தி எது? என்பதற்கு உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்று பார்த்தோம்.

2) உற்பத்தியின் முதல் சிறப்புத்தன்மை

      ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மக்கள் வெவ்வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆதி கம்யூனிச சமூக உற்பத்தி முறை, அடிமை சமூக உற்பத்தி முறை, நிலப்புரப்புத்து சமூக உற்பத்தி முறை, முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை, சோஷிலிச சமூக உற்பத்தி முறை என பல உற்பத்தி முறைகளை வரலாறு கண்டுள்ளது.

      அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்பவே, மனிதச் சமூக அமைப்பு முறையும், மனிதர்களின் கருத்துக்களும், அரசியல் நிறுவனங்களும் மாறுபடுகிறது.

      இதன் மூலம் நமக்கு என்னத் தெரிகிறது என்றால், ஒவ்வொரு உற்பத்தி முறையும் நீண்ட காலத்துக்கு நிலைத்து இருப்பதில்லை. ஒர் உற்பத்தி முறையில் இருந்து மற்றொரு உற்பத்தி முறைக்கு முன்னேறிக் கொண்டே செல்கிறது.

      இந்த உற்பத்தி முறையின் மாற்றத்துக்கு ஏற்பவே; சமூக அமைப்புகள், சமூகக் கருத்துக்கள், அரசியல் கண்ணோட்டங்கள், அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் தவிர்க்க முடியாத வகையில் மாறுதல் அடைகிறது.

      ஒவ்வொரு உற்பத்தி முறையின் போதும், சமூக அரசியல் அமைப்பு முழுமையும் மறுவுருவாக்கம் செய்கின்றன. இவையே உற்பத்தியின் முதல் சிறப்புத் தன்மை ஆகும்.

      ஒவ்வொரு உற்பத்தி முறையின் உற்பத்தி உறவுகளுக்கு ஏற்பவே மனிதனின் வாழ்க்கை முறை அமைகிறது, அந்த வாழ்க்கை முறைக்கு ஏற்பவே சிந்தனைகள் ஏற்படுகிறது. அதாவது, மனிதன் எப்படி வாழ்கிறானோ அதன் வழியிலேயே சிந்திக்கிறான்.

      உற்பத்தி முறையின் வளர்ச்சியும் மாற்றமும் தான் சமூகத்தின் வரலாறாகும். மக்களின் உற்பத்தி உறவுகள் எப்படி எல்லாம் வளர்ந்து மாறிவந்துள்ளது என்பதைக் கூறும் வரலாறே சமூக வரலாறாகும்.

      ஆகவே, சமூக வளர்ச்சியின் வரலாறு என்பது பொருளுற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களின் வரலாறே ஆகும்.

      வரலாறு என்பது விஞ்ஞான வழிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால் அரசர்களின், தளபதிகளின் செயல்களை மட்டும் கூறுவதோடு நின்றுவிடக்கூடாது. அரசுகளை வென்ற மாவீரர்களின், அரசுகளை அடக்கி ஆண்ட மாமன்னர்களின் செயல்களை மட்டும் கூறுவதோடு நின்றுவிடக்கூடாது. பொருளுற்பத்தியை செய்கிற உழைப்பாளி மக்களின் நடவடிக்கைகளையும் வரலாற்றில் சேர்க்க வேண்டும்.

      இதன் மூலம் நமக்கு என்ன விளங்குகிறது என்றால், சமூகத்தின் வரலாற்று விதிகளை ஆராய்வதற்கு, மனிதனிடம் காணப்படும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக அந்த குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் இருக்கிற சமூகம், எந்த உற்பத்தி முறையில் இருக்கிறதோ அந்த சமூகப் பொருளாதார வாழ்க்கையை ஆராயந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் அதற்கு ஏற்பவே சிந்தனைகளும் கருத்துகளும் உருபெறுகிறது.

      வரலாற்று விஞ்ஞானத்தின் முதன்மையான கடமை என்ன?.

      உற்பத்தியின் விதிகளை, அதாவது உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளை ஆராய்ந்து வெளிப்படுத்துவதே விஞ்ஞானத் தன்மையான வரலாறாகும்.

      இந்த இடத்தில் ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை அப்படியே பார்ப்போம்.

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி உண்மையான கட்சியாக இருக்க வேண்டுமானால், அது எல்லாவற்றிற்கும் மேலாக உற்பத்தியின் வளர்ச்சி விதிகள், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி விதிகள் பற்றிய அறிவைப் பெற்று இருக்க வேண்டும்.

 

எனவே, கொள்கையில் தவறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, அதன் திட்டத்தை வரைவதிலும் அதன் நடைமுறைச் செயல்பாடுகளிலும், முதன்மையாக சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் விதிகளிலிருந்தும், உற்பத்தியினுடைய வளர்ச்சியின் விதிகளிலிருந்தும் தொடங்க வேண்டும்.”

      இதுதான் சமூகத்தை அணுகுவதற்கான விஞ்ஞான வழிமுறையாகும்.

       ஒவ்வொரு உற்பத்தி முறையின் போதும், சமூக அரசியல் அமைப்பு முழுமையும் மறுவுருவாக்கம் செய்கின்றன. இவையே உற்பத்தியின் முதல் சிறப்புத் தன்மை ஆகும் என்று இந்த பிரிவில் பார்த்தோம்.

3) உற்பத்தியின் இரண்டாவது சிறப்புத்தன்மை

      முதலில் உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சக்திகள் ஆகியவற்றில் மாறுதல்களும் வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகுதான் உற்பத்தியில் மாறுதல்களும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதுவே உற்பத்தியின் இரண்டாவது சிறப்புத் தன்மை.

      உற்பத்தியில் மற்ற எல்லாவற்றையும்விட புரட்சிகரமான தன்மையாக இருப்பது உற்பத்தி சக்திகளே. சமூகத்தில், மாறுதல்களும் வளர்ச்சியும் முதலில் உற்பத்தி சக்திகளில்தான் ஏற்படுகின்றன, இந்த மாறுதல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அடிப்படைக்கு ஏற்ற வகையில் மனிதர்களுடைய உற்பத்தி உறவுகளில் மாறுதல்களும் வளர்ச்சியும் உருவாகின்றன.

      இவ்வாறு கூறியவுடன் உற்பத்தி சக்திகளின் மீது உற்பத்தி உறவுகள் அதாவது மேற்கட்டமைப்புகள் தாக்கம் செலுத்துவதில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. அதே நேரத்தில், உற்பத்தி சத்திகளை சார்ந்து உற்பத்தி உறவுகள் ஏற்படுவதை மறந்துவிடக்கூடாது.

      உற்பத்திச் சக்திகள்தான் உற்பத்தி உறவுகளை தீர்மானிக்கிறது என்பது உண்மையே என்றாலும், உற்பத்தி உறவுகள் தமது பங்குக்கு உற்பத்திகளின் வளர்ச்சியின் மீது தாக்கத்தை செலுத்துகின்றன. இந்தத் தாக்கம் என்பது உற்பத்தியை விரைவுபடுத்தவோ, அல்லது தாமதப்படுத்தவோ செய்கின்றன.

      பொதுவாக உற்பத்தி சக்திகளுக்கு பொருத்தமான உற்பத்தி உறவுகளே ஏற்படுகின்றன. இது தொடக்க நிலையில்தான், வளர்ச்சி அடைந்த புதிய உற்பத்தி சக்திகளுக்கு ஏற்ப பழைய உற்பத்தி உறவுகள் வளர்வதில்லை.

      உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு, பின்தங்கிய நிலையில் உள்ள உற்பத்தி உறவுகள் நீண்ட காலத்துக்கு நிற்க முடியாது.

      ஆகவே உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் பின்தங்கியிருந்தாலும் அவை உடனடியாகவோ, சிறிது காலம் சென்ற பிறகோ உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டத்துக்கு ஏற்றவாறு முன்னேறியேத் தீரும். அதாவது பழைய உற்பத்தி உறவுகள் தூக்கி எறியப்பட்டு புதிய உற்பத்தி உறவுகள் உருவாகும். சமூக மாற்றத்துக்கு இதுவே பொருளாதார அடித்தளமாகும்

      உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான இயக்கவியல் இவ்வாறுதான் காணப்படுகிறது.

      உற்பத்தி சக்திகள்தான் உற்பத்தி முறையில், மற்றெல்லாவற்றையும் விட புரட்சிகரமானதாக இருக்கிறது. உற்பத்திச் சக்திகள்தான் உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கின்றன.

       உற்பத்திச் சக்திகள் எப்படி இருக்கின்றனவோ அதற்கு ஏற்பவே உற்பத்தி உறவுகள் அமைகின்றன.

       உற்பத்திக் கருவிகளை வளர்த்து மேம்படுத்தியது யார்? என்ற கேள்வியை ஸ்டாலின் எழுப்பி பதிலும் தருகிறார். இந்தக் கேள்விக்கு பதில், இந்த உற்பத்தியுடன் தொடர்புடைய மனிதர்கள்தான். மனிதர்களுக்கு அப்பாற்பட்டுத் தானாகவே அவை வளர்ந்துவிடவில்லை என்பதை தெளிவாக அறியலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

      இந்த ஸ்டாலின் கூற்றை துண்டாகப் பிடித்துக் கொண்டு, பலபேர் உற்பத்திச் சக்திகளில் உழைக்கும் மக்களே முதன்மையானவர்கள் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இது தவறாகும். இதற்கு அடுத்து ஸ்டாலின் கூறுவதை கவனமாக பார்த்தால் தெளிவு கிடைக்கும்.

      உற்பத்திச் சாதனங்களின் மாறுதலையும் வளர்ச்சியையும் தொடர்ந்து மனிதனுடைய உற்பத்திச் சக்திகளின் மிக முக்கியமான தன்மையாகிய மனிதனும் மாறுகிறான், வளர்ச்சி பெறுகிறான்.

      புதிய கருவிகளின் வளர்ச்சியினால் தொழிலாளியின் தொழில் அனுபவம் வளர்கிறது, வேலைத் திறன் கூடுகிறது. உற்பத்திக் கருவிகளை பயன்படுத்தும் தொழிலாளியுடைய திறன் மேம்பாடு அடைகிறது. ஸ்டாலினுடைய இந்த விளக்கத்தைக் கூட தவாறகப் புரிந்து கொண்டுள்ளவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்து ஸடாலின் கூறுவதை அப்படிய பார்ப்போம்.

“வரலாற்றின் போக்கில், சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் மாற்றம், மற்றும் வளர்ச்சிக்கு இணங்கவே, மனிதர்களின் உற்பத்தி உறவுகளும், அவர்களின் பொருளாதார உறவுகளும் மாறி வளர்ந்தன.”

      ஸ்டாலினுடைய இந்த வரிகள் போதுமான விளக்கமாக இருக்கும்.

      உற்பத்திக் கருவிகளை வளர்த்து மேம்படுத்தியது யார்? என்ற கேள்விக்கு உற்பத்தியுடன் தொடர்புடைய மனிதர்கள்தான், மனிதர்களுக்கு அப்பாற்பட்டுத் தானாகவே அவை வளர்ந்துவிடவில்லை. இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் பலருக்கு குழப்பமாகவே இருக்கிறது.

புறநிலைமைகளே மனிதர்களின் செயலையும் உறவையும் தீர்மானிக்கின்றன என்றால், புறநிலைமைகளால் நிர்ணயித்தவை, மனிதர்களைக் கொண்டே செயல்படுகிறது, புறநிலைமைகள் தாமே செயல்பட்டுக் கொள்வதில்லை, என்பதே இதன் பொருள் ஆகும்.

      இயற்கை விதிக்கும் சமூகத்தின் விதிக்கும் இடையே உள்ள முக்கியமான வேறபாடு இதுதான். இயற்கையின் விதிகள் தோன்றுவதும் செயல்படுவதும் மனிதனைச் சாராமேலேயே நடைபெறுகிறது. சமூகத்தின் புறநிலை விதி மனிதனைச் சாராமல் தோன்றுகிறது, ஆனால் அந்த விதி தானே நிகழ்வதில்லை, மனிதனைக் கொண்டே நடைபெறுகிறது.

      ஸ்டாலின், ஐந்து வகைப்பட்ட உற்பத்தி முறைகளைப் பற்றி விளக்குகிறார்.

1) ஆதி பொதுவுடைமை சமூக உற்பத்தி முறை

2) அடிமை சமூக உற்பத்தி முறை

3) நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை

4) முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை

5) சோஷலிச சமூக உற்பத்தி முறை

1) ஆதி பொதுவுடைமை சமூக உற்பத்தி முறை

      ஆதி பொதுவுடைமை சமூக அமைப்பு முறையில், மக்கள் பயன்படுத்தும் சிறிய உற்பத்திக் கருவிகள் சமூகத்தின் பொதுவுடைமையாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு ஏற்ற உற்பத்தி உறவுகள் எளிமையாக இருந்தது. இச் சமூகத்தில் சுரண்டல் என்பது கிடையாது, வர்க்கங்களும் கிடையாது.

2) அடிமை சமூக உற்பத்தி முறை

      அடிமை சமூக உற்பத்தி முறையில் உற்பத்திச் சாதனங்கள் அடிமைகளின் எஜமானுக்குச் சொந்தமாகும். உற்பத்தியில் ஈடுபடுகிற உழைப்பாளியாகிய அடிமையும் எஜமானனுக்கே சொந்தம். அந்த அடிமையை ஒரு விலங்கு போல் வாங்கலாம், விற்கலாம். தேவையில்லை என்றால் கொல்லவும் செய்யலாம். இதுதான் அடிமை சமூக உற்பத்தி முறையில் நிலவிய உற்பத்தி உறவுகள் ஆகும்.

3) நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறை

      நிலப்பிரபுத்துவ சமூக உற்பத்தி முறையில், உற்பத்திச் சாதனங்கள் நிலப்பிரபுக்குச் சொந்தமாகும். உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளியை அடிமை சமூகத்தைப் போல் முழுமையாக உடைமையாக்கிக் கொள்வதில்லை. அதே போல் கொல்லவும் முடியாது.

      நிலப்பிரபுத்துவ உடைமைக்குப் பக்கத்திலேயே, தொழிலாளி தனது கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்ய அனுமதி உண்டு. வாரத்தில் சில நாட்களுக்கு தமக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் வேலை செய்வதோடு, மற்ற நாட்களில் நிலப்பிரபுவின் நிலத்தில் கூலியின்றி உழைக்க வேண்டும். அடிமை சமூகத்தில் வேலை செய்வதில் முழுமையான விரும்பம் இல்லாதது போல் அல்லாமல் சற்று விருப்பமுடன் உழைப்பாளர்கள் உழைத்தனர்.

4) முதலாளித்துவ சமூக உற்பத்தி முறை

      முதலாளித்துவ சமூக உற்பத்தி முறையில், உற்பத்திச் சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமாக இருக்கும். உற்பத்திக் கருவிகள் போன்ற எதுவும் உழைப்பாளிக்கு சொந்தமில்லை. இதுவரை சமூகம் கண்ட, பிற உற்பத்தி முறையோடு ஒப்பிடும் போது முதலாளித்துவ சமூகத்தில் உள்ள தொழிலாளி சுதந்திரமானவன். அடிமை சமூகத்தைப் போல இங்கே உழைப்பாளியை வாங்கவோ விற்கவோ முடியாது. உற்பத்திச் சாதனங்களை இந்த உழைப்பாளி இழந்திருப்பதினால் தனது உழைப்பு சக்தியை எதேனும் ஒரு முதலாளிக்கு விற்கும்படியான நிர்பந்தத்தில் இருக்கிறார்.

      சுரண்டுகிற முதலாளிக்கும் சுரண்டப்படுகிற தொழிலாளிக்கும் இடையிலான கடுமையான வர்க்கப் போராட்டமே முதலாளித்து சமூக உற்பத்தி முறையின் உற்பத்தி உறவுகளாக இருக்கிறது.

5) சோஷலிச சமூக உற்பத்தி முறை

      சோஷலிச சமூக உற்பத்தி முறையில், உற்பத்திச் சாதனங்கள் சமூக உடைமையாக இருக்கும். இந்த சமூகத்தில் சுரண்டல் இருக்காது. உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் உழைப்புக்கு தக்கவாறு உழைப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படும்.

      இதுவே மனிதகுல வரலாற்றில் கண்ட ஐந்து சமூக உற்பத்தி முறைகளாகும்.

      இத்தகைய ஐரோப்பிய உற்பத்தி முறைகள் அப்படியே நம் நாட்டில் காணமுடியுமா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். ஆனால் அங்கேயும் இங்கேயும் ஆதி பொதுவுடைமை உற்பத்தி முறை இருந்தது, ஆனால் அங்கே காணப்பட்ட அடிமை சமூகம் இங்கே இல்லை, அதே போல இங்கே காணப்பட்ட சாதி அமைப்பு அங்கே இல்லை. வடிவங்களில் சில மாறுபட்டாலும் இரண்டும் இன்று முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்துள்ளது. இதற்கு அடுத்து மார்க்சியம் கூறுகிறபடி முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டால் சோஷலிச சமூகம் ஏற்படவே செய்யும்.

      ஐரோப்பிய உற்பத்தி முறை அப்படியே நம் நாட்டில் இல்லை என்பதையே முதன்மைப்படுத்தி பேசுபவர்கள், முதலாளித்துவத்துவத்தை அடுத்து சோஷலிசம் வரும் என்பதை ஏற்க தயக்கம் கொள்கின்றனர்.

      இத்தகையவர்களின் தயக்கத்தைக் கடந்து அனைத்து உலகத்திலும் சோஷலிசம் வந்தே தீரும் என்பதே மார்க்சியம் நமக்கு விளக்குகிறது.

      ஸ்டாலின், இந்தப் பகுதியின் இறுதியில் உற்பத்தியின் இரண்டாவது சிறப்புத் தன்மையை சுருக்கமாகக் கொடுத்துள்ளார்.

உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியானது, சமூகத்தின் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை, குறிப்பாக உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறது. இவ்வாறு சார்ந்து இருப்பதன் காரணமாகத்தான் உற்பத்திச் சக்திகளில் ஏற்படும் மாறுதல்களுக்கும், வளர்ச்சிக்கும் எற்ப, விரைவாகவோ, சற்று தாமதமாகவோ உற்பத்தி உறவுகள் மாறுகின்றன.

      இதற்கு ஆதாரமாக ஸ்டாலின், மூலதனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய நூல்களில் இருந்து நீண்ட மேற்கோள் கொடுத்துள்ளார். முன்பே சொன்னதுபடி, இந்த மேற்கோள்களையும், இந்த மேற்கோள்களைக் கொண்ட மூல நூல்களையும் நாம் நன்றாகப் படிக்க வேண்டும்.

       முதலில் உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சக்திகள் ஆகியவற்றில் மாறுதல்களும் வளர்ச்சியும் ஏற்பட்ட பிறகுதான் உற்பத்தியில் மாறுதல்களும் வளர்ச்சியும் ஏற்படுகின்றன. இதுவே உற்பத்தியின் இரண்டாவது சிறப்புத் தன்மை என்று இந்த பிரிவில் பார்த்தோம்.

4) உற்பத்தியின் மூன்றாவது சிறப்புத்தன்மை.

                புதிய உற்பத்திச் சக்திகளும் சரி, அவற்றுடன் தொடர்புடைய உற்பத்தி உறவுகளுக்கு சரி, பழைய சமூக அமைப்பு முறைக்கு அப்பால், அந்த அமைப்பு முறை அழிந்துபோன பிறகு தனியே தோன்றுவதில்லை. இதற்கு மாறாக அந்தப் பழைய சமூக அமைப்பு முறைக்கு உள்ளேதான் அவை முளைக்கின்றன.

      அதாவது புதிய சமூகத்தைப் படைக்கும் சக்தி பழைய சமூகத்தில் தான் உருவாகிறது.

      மேலும் மனிதர்களது தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்து புதிய உற்பத்திச் சக்திகள் உருவாவதில்லை. மனிதர்களது சித்தத்திற்கு அப்பாற்பட்டு இது நிகழ்கிறது.

      இதற்கு இரண்டு காரணங்களை ஸ்டாலின் சுட்டிக்காட்டுகிறார்.

      ஒர் உற்பத்தி முறையை அல்லது மற்றொரு உற்பத்தி முறையை தேர்வு செய்ய மனிதர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பது முதல் காரணம்.

      உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியானது சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மனிதர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வமுடிவதில்லை. இது இரண்டாவது காரணம்.

      இங்கே ஸ்டாலின் மனிதரால் அறிந்து கொள்ளவே முடியாது என்ற பொருளில் கூறவில்லை, முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியவில்லை என்பதைதான் சுட்டுகிறார். உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட நலன்களைப் பற்றி அதிகம் சிந்திக்கின்றனர். இது தொடக்க கால உழைப்பாளர்களின் நிலை ஆகும். அவ்வாறு சிந்திக்கும் மனிதர்கள், கருவிகளின் வளர்ச்சியினால் ஏற்படும் விளைவுகளை, வளர்ச்சி அடைந்த நிலையில்தான் அறிந்து கொள்கின்றனர். இதை ஏன் கூற வேண்டிவருகிறது என்றால், மார்க்சியம் அறிவொண்ணா தத்துவம் அல்ல.

      இதனை ஸ்டாலின் இந்த நூலின் பின்பகுதியில் விளக்கியிருக்கிறார். தவறான புரிதலுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்குதான் இங்கேயே இந்த விளக்கம் கொடுக்கப்படுகிறது.

      புறநிலைவிதிகள், மனிதனை சாராமல் நடைபெறுகிறது, அதன் தொடக்க நிலையில் அல்லாது வளர்ச்சி அடைந்த நிலையில்தான் மனிதன் அறிந்து கொள்ள முடிகிறது எப்பதை விளக்குவதற்கே ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

      ஆதிபொதுவுடைமை சமூகத்தில் எளிமையான கற்கருவிகளை அன்றைய மக்கள் பயன்படுத்தினர். பல்லாயிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரும்பு கண்டு பிடிக்கப்பட்டு அதன் மூலம் கருவிகள் உருவாக்கினர். இந்த இரும்புக் கருவிகள், என்ன விளைவுகளை பிற்காலத்தில் ஏற்படுத்தப் போகிறது என்பதை அந்த மக்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

      இந்த இரும்புக் கருவிகளின் வளர்ச்சியே பழைய உற்பத்தி முறையை கடந்து புதிய அடிமை உற்பத்தி முறைக்கு கொண்டு சென்றது. இதனை இரும்புக் கருவிகளை பயன்படுத்த தொடங்கிய, அன்றைய மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த இரும்புக் கருவிகள் உழைப்பின் கடுமையைக் குறைத்திருக்கிறது என்கிற தனிமனித நலன்களையே அப்போது உழைக்கும் மக்கள் கருதினர்.

      வளர்ச்சி அடைந்த நிலப்பிரபுத்துவத்துவ சமூகத்தில், ஒருபக்கத்தில் கில்டு பணிமனை இருக்க, இன்னொரு பக்கத்தில் இளம் பருவத்திய ஐரோப்பிய முதலாளி வர்க்கத்தினர் பெரிய பட்டறைகளை நிறுவி, அதன் வளர்ச்சியில் சமூக உற்பத்திச் சக்திகளை முன்னேறச் செய்தனர். இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பிற்காலங்களில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை அந்த இளம் முதலாளிகள் அறிந்திருக்கவில்லை.

      நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி, முதலாளித்துவ உற்பத்தி முறையை, அந்த உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி ஏற்படுத்தும் என்பதை இளம் முதலாளிகள் முன்கூட்டியே அறிந்து கொண்டிருக்கவில்லை.

      ஜாராட்சியை அப்படியே வைத்துக் கொண்டும், நிலப்பிரபுக்களின் கொடுமையின் கீழ் விவசாயிகளை அப்படியே வைத்துக் கொண்டு ரஷ்ய முதலாளிகள், வெளிநாட்டு முதலாளிகளுடன் இணைந்து, ரஷ்யாவில் நவீன பெரிய அளவிலான இயந்திரத் தொழிற்சாலைகைளை நிறுவினர். இந்த உற்பத்தி சக்திகள் என்ன விளைவை ரஷ்யாவில் ஏற்படுத்தப் போகிறது என்பதை ரஷ்ய முதலாளிகள் அப்போது அறியவில்லை.

      உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது, சமூக சக்திகளை ஒருபுதிய முறையில் அணிச் சேர்த்து. தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் ஐக்கியம் ஏற்படுத்தி, அந்த ஐக்கியம் ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சியைச் சாதிக்கும் என்பதை அந்த ரஷ்ய முதலாளிகள் அறிந்து கொள்ளவில்லை.

      அவர்கள் விரும்பியதெல்லாம், இயந்திரத் தொழில் உற்பத்தியை அதன் எல்லையின் இறுதி வரை விரிவாக்க வேண்டும். இது அவர்களின் உடனடி நலனுக்கானதாக இருந்தது. ஆனால் அதன் விளைவு சோஷலிசப் புரட்சி வரை சென்றது.

மார்க்ஸ்:-

“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் (அதாவது, மனிதனின் வாழ்வுக்கு அவசியமான பொருட்களை படைக்கும் உற்பத்தியில்- ஸ்டாலின்) திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும். அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது.”

(அரசியல் பொருளாதாரத்தார

விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு - முன்னுரை)

      இதுவரைதான் ஸ்டாலின் மேற்கோளாக கொடுத்துள்ளார். நாம் தொடர்ந்து மார்க்ஸ் கூறியதையும் சேர்த்துப் பார்ப்போம்.

“இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது.”

      இதற்கு அடுத்து ஸ்டாலின் கூறுகிறார், உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாறுதல்களும், பழைய உற்பத்தி உறவுகளை விட்டு புதிய உற்பத்தி உறவுகளுக்கு மாறும். அவ்வாறு மாறும் போது பழைய உற்பத்தி உறவுகள் தடையை ஏற்படுத்தாமல், அமைதியாக, மோதல்கள் இல்லாம், எழுச்சி இல்லாமல் நடைபெறுகிறது என்று இதற்கு பொருளல்ல. அதற்கு மாறாக, பழைய உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமான முறையில் தூக்கியெறிப்பட்டுதான் புதிய உற்பத்தி உறவுகளை அமைக்கமுடிகிறது.

      உற்பத்தி சக்திகளின் அமைதியான வளர்ச்சி, முத்திர்ச்சி அடைந்த போது தன்னிச்சையாக நடைபெற்றுவந்த வளர்ச்சியானது உழைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான நடவடிக்கையாக பரிணமிக்கிறது. படிப்படையாக ஏற்பட்ட முரண் உற்பத்தி சக்திகளின் முதிர்ச்சியான வளர்ச்சியில் முரண்முற்றி பழைய உற்பத்தி உறவுகள் புரட்சியின் மூலம் தூக்கி எறியப்படுகிறது.

      இதற்கு ஆதாரமாக ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, மூலதனம், அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு நூலின் முன்னுரை ஆகியவற்றில் இருந்து மேற்கோள் கொடுத்துள்ளார்.

அறிக்கையில் இருந்து கொடுக்கப்பட்ட மேற்கோளை மட்டும் இங்கே பார்ப்போம்.

“பாட்டாளி வர்க்கம் முதலாளியை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில், சூழ்நிலைமைகளின் நிர்பந்தத்தினால் தன்னை ஒரு வர்க்கமாக அணிதிரளும்படி நிர்பந்திக்கிறது. ஒரு புரட்சியின் மூலாமாக ஆளும் வர்க்கமாகத் தன்னை ஆக்கிக் கொள்கிறது. அந்த வழியில் பழைய உற்பத்தி நிலைமைகளை அது பலாத்கரத்தால் தூக்கு எறியப்படுகிறது.”

(கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை)

 

 

      முதலாளித்துவ சமூகத்தை தூக்கி எறிவதற்கு பாட்டாளிகளின் தத்துவ ஆயுதம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகும். இந்த தத்துவத்தை தவறாகப் புரிந்து கொண்டும், தவறாக விளக்கப்படுத்திக் கொண்டும் இருந்தால், பாட்டாளிகளின் கடமையை நிறைவேற்ற முடியாது. மார்க்சினுடைய மேற்கோளாக ஸ்டாலின் இந்த நூலில் சுட்டிக்காடியுள்ளார், அதனை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.

“மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வுநிலை அல்ல, அதற்கு மாறாக, மனிதர்களின் சமூக வாழ்நிலைதான் அவர்களின் உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு)

      இதனைத்தான் ஸ்டாலினது இந்த நூல் முழுதும் மிகமிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

சமூக வாழ்நிலை, அதாவது சமூக பொருளாதார நிலைமைகள் என்கிற அடித்தளம்தான் மனிதர்களின் உணர்வுநிலை என்கிற மேற்கட்டமைப்பைத்  தீர்மானிக்கிறது. அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கு இடைத்தொடர்பு இருக்கிறது. அந்த இயக்கவியல் தொடர்பு என்ன சொல்கிறது என்றால் அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, மேற்கட்டமைப்பு தன்னளவில் அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது.

      இந்த தீர்மானிக்கும் போக்கையும், தாக்கம் செலுத்தும் போக்கையும் சமப்படுத்தி இரண்டும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற கருத்து, மார்க்சிய இயக்கவியலுக்கு எதிரானதாகும்.

      வர்க்க சமூகத்தில் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரியாது. வர்க்கமற்ற சமூகத்தில் அதாவது சோஷலிச சமூகத்தைக் கடந்து, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் தான் இரண்டும் பரஸ்பர வினைபுரியும். அந்த நிலையில், அதாவது வர்க்கமற்ற அந்த சமூகத்தில் தான், அரசு உலர்ந்துவிடுவதற்கான புறநிலைமைகளும், மதம் மறைவதற்கான சூழ்நிலையும் தோன்றியிருக்கும்.

      அப்படிப்பட்ட சூழ்நிலை, இன்றே இருப்பது போல் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்று கூறுவது கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் அற்ற நடுப் போக்காகும். அப்படிப்பட்ட போக்கு இல்லை என்றே மார்க்சியம் கூறுகிறது. இந்த நடுப்பாதை இறுதியில் கருத்துமுதல்வாதத்துக்கே சேவை செய்கிறது என்பதே அனுபவ உண்மையாகும்

      ஸ்டாலினால் எழுதப்பட்ட இந்த நூல் போல்ஷிவிக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிறை பறைசாற்றும் நூலின் பகுதியாகக் காணப்படுகிறது. இந்த நூலில் ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கோட்பாட்டில் தவறு செய்யாது, இருப்பது பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிய-லெனினிய தத்துவம் வழிகாட்டியாக இருந்தது பற்றியும் கூறியுள்ளார். முன்பு பார்த்ததையே மீண்டும் ஒரு முறை ஸ்டாலின் கூறியதை நேரடியாகப் பார்ப்போம்.

 

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி உண்மையான கட்சியாக இருக்க வேண்டுமானால், அது எல்லாவற்றிற்கும் மேலாக உற்பத்தியின் வளர்ச்சி விதிகள், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி விதிகள் பற்றிய அறிவைப் பெற்று இருக்க வேண்டும்.

 

எனவே, கொள்கையில் தவறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, அதன் திட்டத்தை வரைவதிலும் அதன் நடைமுறைச் செயல்பாடுகளிலும் முதன்மையாக சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் விதிகளிலிருந்தும் உற்பத்தியினுடைய வளர்ச்சியின் விதிகளிலிருந்தும் தொடங்க வேண்டும்.”

      வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் இருந்து விலகிப் போவதானது அனைத்து முடிவுகளிலும் தவறையே ஏற்படுத்தும்.

      அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்கிற கோட்பாட்டை புரிந்து கொள்ளதாவர்கள் சாதியை அடித்தளத்திலும் இருக்கிறது மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்று கூறுகின்றனர். அடித்தளத்திலும் மேற்கட்டமைப்பிலும் இருக்கிறது என்றால் சாதியத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கோட்பாடு போதுமானதாக இல்லை என்பதுடன் இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்போடே தவறு என்ற கருத்தையும் இந்தப் போக்கு கட்டுகிறது.

      இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சாதி இரண்டிலும் இருக்கிறது என்கின்றனர். இப்படிக் கூறுபவர்கள் மார்க்சியத்தை மார்க்சிய வழியில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருளாகும்.

      அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற மார்க்சிய திரிபால், நம் நாடில் மார்க்சிய வழியில் எதையும் சாதித்திட முடியாது. மார்க்சியத் திரிபால் சோவியத் விழ்ந்ததை நாம் மறந்திடக்கூடாது. ஸ்டாலினை எதிர்த்து ஆட்சி நடத்தியவர்கள் ஸ்டாலினை எதிர்ப்பதன் நோக்கம் மார்க்சியத்தை மறுதலிப்பதற்கே ஆகும்.

      சோவியத் வீழ்ச்சிக்கு காரணமான மார்க்சியத் திரிபை பின்பற்ற வேண்டுமா? சோவியத் வெற்றிக்கு வழியாட்டியாக இருந்த மார்க்சியத்தை பின்பற்ற வேண்டுமா?

      முடிவு அவரவர்களின் கைகளில்தான் இருக்கிறது.

      கம்யூனிஸ்ட்டாக செயல்படுபவர்கள், விஞ்ஞான வழிப்பட்ட அரசியல்வாதியாக செயல்பட வேண்டும் என்றால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நன்றாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்சியத் தத்துவத்தை சுருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஸ்டாலின் எழுதிய, “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” என்ற இந்த நூல் போதுமானதாகும். இந்த நூலை பலமுறைப் படித்து தெளிவு பெற வேண்டும். ஏன் என்றால் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் சாரத்தை ஸ்டாலின் இந்த நூலில் மிகமிகச் சிறப்பாக கூறியுள்ளார். மேலும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களினுடைய கருத்தின் ஆதாரத்தோடு நிறுவியுள்ளார். மார்க்சிய மூலவர்களின் எந்த நூலை எடுத்துப் படித்தாலும் அதன் சாரமாகவே ஸ்டாலின் எழுதிய இந்த நூல் இருக்கும்.

முதன்முறையாக “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” என்ற இந்த நூலைப் படிப்பவர்களுக்கு, இன்றைய வகுப்பு துணைநிற்கும். ஒரு நூலின் சாரத்தையும் சுருக்கத்தையும் மட்டும் தெரிந்து கொள்வது அந்த நூலை படித்ததாகாது. அதனால் மூல நூல்களை எடுத்து படிக்க வேண்டும்.

      மார்க்சியத்தை, மார்க்சிய வழிபட்ட நூல்களில் படித்து மார்க்சிய வழியில் உழைக்கும் மக்களுக்கு நாம் வழிகாட்டுவோம்.

      மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்கிற கூற்றும், மார்க்சியத்தை இன்று அப்படியே பயன்படுத்த முடியாது என்கிற கூற்றும், இன்று நம் காதில் அதிகம் விழுகிறது. முதல் கூற்று மார்க்சிய எதிர்களிடம் இருந்து வருகிறது. இரண்டாவது கூற்று மார்க்சியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களிடம் இருந்து வருகிறது. இரண்டும் உண்மையில் ஓரே பொருள்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

மார்க்ஸ் கூறியதை மீண்டும் நினைவில் கொள்வோம்:-

 “மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வுநிலை அல்ல, அதற்கு மாறாக, மனிதர்களின் சமூக வாழ்நிலைதான் அவர்களின் உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு, முன்னுரை) 

      மார்க்ஸ் கூறிய இதுதான், மார்க்சிய அனைத்துக்கும் அடிப்படை.

      வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் மார்க்ஸ் தனது “மூலதனம்” நூலை எழுதியுள்ளார். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மறுத்தால் மார்க்சின் அனைத்து ஆய்வுகளையும் முடிவுகளையும் மறுக்க வேண்டிவரும்.

      மார்க்சுக்கு முன்புவரை, மனிதர்களின் உணர்வுநிலையே அவர்களது வாழ்நிலையை நிர்ணயிக்கிறது என்று கூறப்பட்டது. இது சமூகத்தைப் பற்றிய கருத்துமுதல்வாதப் பார்வை ஆகும். மார்க்சுக்கு முன்பான பொருள்முதல்வாதிகளிடமும் சமூகப் பற்றிய கண்ணோட்டம் கருத்துமுதல்வாதமாகவே இருந்தது. மார்க்ஸ் இதனை மறுத்து மனிதர்களின் வாழ்ந்லையே அவர்களதுஉணர்வு நிலையை நிர்ணயிக்கிறது என்று பொருள்முதல்வாத வழியில் நிறுவியுள்ளார்.

      தத்துவத்தில் இரண்டு போக்குதான் இருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம், மார்க்சின் கண்ணோட்டம் பொருள்முதல்வாதம் ஆகும். மார்க்சுக்கு மாறான போக்கு கருத்துமுதல்வாதம்.

      மார்க்சின் கண்ணோட்டம் காலாவதியாகிவிட்டது என்று கூறுபவர்கள், என்ன புதிய கண்ணோட்டத்தை இன்றைய தேவைக்கு உருவாக்கியுள்ளனர் என்று பார்த்தால், அது அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்வரம் வினைபுரிகிறது என்பதே ஆகும். இது இயக்கவியலுக்கு மாறான கதம்பவாதப் போக்காகும். இந்த கதம்பவாதக் கண்ணோட்டம் இறுதியில் கருத்துமுதல்வாதத்தையே சென்றடையும் என்றே மார்க்சியம் கூறுகிறது.

      மார்க்சியம், வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகம் வரை செல்லும். அதுவரை மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று கூறுபவர்கள் காலாவதியாகமல் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். கூறுபவர்கள் கூறட்டும், கம்யூனிஸ்டுகள் மார்க்சிய வழியில் மார்க்சியம் பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம், உலகை வெல்வோம்.

ஸ்டாலின் எழுதிய

“இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்”-1