Saturday 12 February 2022

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்”-1

 

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 49 வது வார வகுப்பு – 12-02-2022)

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” என்ற சிறு நூலைத்தான் இன்றைய வகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

      இந்நூல் சுமார் ஐம்பது பக்களை கொண்ட மிக சிறிய நூல் ஆகும். சிறியது என்றாலும் ஸ்டாலின் பல விஷயங்களை இதில் செறிவாக கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் இந்த நூலைப் படிக்க வேண்டும். பலமுறை படித்தாலன்றி இதில் உள்ள கருத்துக்களை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது.

இது ஒரு விரிவான நூல் இல்லை என்பதனால் பலமுறை படித்தலன்றி புரிந்து கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

      இந்த நூல் உருவான வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகும். ஸ்டாலின் காலத்தில், 1938 ஆம் ஆண்டிவரையிலான சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்) கட்சியின் வரலாறு தொகுக்கப்படும் போது அந்த நூலில் மார்க்சிய தத்துவம் சுருக்கமாக விளக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த தத்துவப் பகுதியை ஸ்டாலினே எழுதிக் கொடுத்தார். அந்தப் பகுதி ஸ்டாலின் பெயரால் தனியாக பதிப்பிக்கப்பட்டு பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

போல்ஷிவிக் கட்சியின் வரலாறு என்ற நூலின் நான்காவது அத்தியாயத்தின் ஒரு பகுதியை எடுத்து தனிநூலாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.

      இந்த “போல்ஷிவிக் கட்சியின் வரலாறு” என்ற நூல் ருஷ்யப் புரட்சியின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஸ்டாலின் எழுதிய மார்க்சிய தத்துவத்தை அறிமுகப்படுத்தும் போது அந்த நூலில் உள்ள வாசகத்தை அப்படியே பார்ப்போம்.

“கம்யூனிசத்திற்கு அடிப்படையாக இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் இருக்கின்றன, இவை மார்க்சியக் கட்சிக்கு தத்துவ அடிப்படையாக இருக்கின்றன. ஆகவே இந்தத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது கட்சியில் செயல்படும் உறுப்பினர் ஒவ்வொருவருடைய கடமையாகும். இவற்றைக் கவனித்துப் படிக்க வேண்டியது அவசியமாகும்”

      போல்ஷிவிக்குகளின் வெற்றி மார்க்சிய தத்துவத்தைப் புரிந்து செயல்பட்டதில் அடங்கியிருக்கிறது, அப்படிப்பட்ட மார்க்சியத் தத்துவத்தை நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் படித்துப் புரிந்து கொண்டுள்ளனரா? என்ற கேள்விக்கு எதிர்மறையான பதிலே அதிகம் கிடைக்கும்.

கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை உடையதாக இருக்க வேண்டுமானால் மார்க்சிய தத்துவமும் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் அறிந்திருக்க வேண்டும். இந்த இரண்டை அறிந்து கொள்வதில் உள்ள குறைபாடே, நம் நாட்டில் உள்ள கட்சிகளின் பின்தங்கிய நிலைமைக்கு, பல காரணங்களில் முக்கியமான காரணமாக இருக்கிறது.

      நூலுக்குள் செல்வோம்.

“இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும்” என்றே இந்த நூல் தொடங்குகிறது.

மார்க்சிய தத்துவம் இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் (இயற்கைவியல் பொருள்முதல்வாதம்) மற்றொன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

      இயற்கையை, இயக்கவியல் அடிப்படையில் அணுகுவதால் இதற்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனை இயற்கைவியல் பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கலாம். சமூகத்தின் தோற்றம், இருப்பு, மாற்றம் ஆகியவற்றை இயக்கவியல் அடிப்படையில் அணுகுவதால் இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் எனறு அழைக்கப்படுகிறது.

      மார்க்சும் எங்கெல்சும் தங்களது இயக்கவியலைப் பற்றி பேசும் போதெல்லாம் ஹெகலே இயக்கவியலை உருவாக்கினார் என்றே பொதுவாகக் கூறுவார்கள். மார்க்சின் இயக்கவியலும் ஹெகலின் இயக்கவியலும் ஒன்று என்று நாம் நினைத்துவிடக்கூடாது. ஹெகலின் இயக்கவியலானது கருத்துமுதல்வாதம் என்கிற மாயையில் சிக்கி கிடக்கிறது. மார்க்ஸ் அதன் கருத்துமுதல்வாத மயக்கத்தை நீக்கி பொருள்முதல்வாத அடிப்படையில் இயக்கவியலை வளர்தெடுத்தார்.

      தொடக்கக் கால கிரேக்க தத்துவத்தில் இயக்கவியல் அணுகுமுறை இயல்பாய் காணப்பட்டது. பின்பு இது கைவிடப்பட்டு ஹெகலால் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஹெகலின் மாணவன் என்று மார்க்ஸ் தம்மை அழைத்துக் கொள்வார்.

      அதே போல மார்க்சும் எங்கெல்சும் தங்களது பொருள்முதல்வாதத்தைக் குறிப்பிடும் போது ஃபாயர் பாக் என்கிற பொருள்முதல்வாத தத்துவ அறிஞரை குறிப்பிடுவர்கள். மார்க்சும் எங்கெல்சும் இளம் ஹெகல்வாதியாக இருந்ததில் இருந்து பொருள்முதல்வாதியாக மாறுவதற்கு ஃபாயர் பாக் காரணமாக இருந்தார். இருந்தாலும் ஃபாயர் பாகின் பொருள்முதல்வாதமும் மார்க்சின் பொருள்முதல்வாதமும் ஒன்று என்று கருதிடமுடியாது.

      இயற்கையை அணுகுவதில் ஃபாயர் பாக் பொருள்முதல்வாதியாக இருந்தார், ஆனால் சமூகம் பற்றிய விஷயத்தில் அவர் கருத்துமுதல்வாதியாகக் காணப்பட்டார். நல்ல மதக் கருத்தே நல்ல சமூகத்தைப் படைக்கும் என்று ஃபாயர்பாக் கருதினார், அவர் பொருள்முதல்வாதியாக இருந்தாலும் இயக்க மறுப்பியலை அணுகுமுறையாகக் கொண்டிருந்தார். இயக்கவியல் அற்ற அணுகுமுறையே ஃபாயர் பாக்கின் பெரும் குறையாக இருந்தது. இயக்கவியலை, நாம் சரியாகக் கற்று கையாளவில்லை என்றால் அனைத்து தவறுகளுக்கு இதுவே காரணமாகிவிடும்.

      இயக்கவியல் என்பது மாறாநிலைத் தத்துவத்துக்கு (metaphysics) எதிரான அணுகுமுறை ஆகும்.

ஸ்டாலின் இந்த நூலை மூன்று தலைப்புகளில் எழுதியுள்ளார்.

1) மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை.

2) மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்.

3)  வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இதில் உள்ள முதலிரண்டு தலைப்புகளை மட்டும் இன்றைய வகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். மூன்றாம் தலைப்பு அடுத்த வார வகுப்பில் பார்க்கலாம்.

இந்த நூலில், இயக்கவியலைப் பற்றி 11 பக்கமும், இயற்கையைப் பற்றி 13 பக்கமும் வரலாறு சமூகம் பற்றி 27 பக்கமும் விளக்கப்பட்டுள்ளது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றதைவிட சற்று விரிவாக விளக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இருந்தே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அவசியத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் தெளிவு பெற்றவர்காலால்தான் கம்யூனிச வழியிலான அரசியலில் சிறப்பாக செயல்பட முடியும்.

முதலில் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையைப் பார்ப்போம்.

மார்க்சிய இயங்கியல் முறையின் முக்கிய தன்மைகள் என ஸ்டாலின் நான்கைக் குறிப்பிடுகிறார்.

1) இயற்கை இணைக்கப்பட்டது மற்றும் தீர்மானிக்கப்பட்டது

2) இயற்கை என்பது தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றத்தின் நிலை

3) இயற்கையான அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது

4) இயற்கையில் உள்ளார்ந்த முரண்பாடுகள்

1) இயற்கை இணைக்கப்பட்டது மற்றும் தீர்மானிக்கப்பட்டது

      இயற்கையில் உள்ள பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றும் தனித்தனியாக பிரிந்தும் இருப்பதாக மாறாநிலைத் தத்துவம் (metaphysics) கருதுகிறது. ஆனால், ஒவ்வொரு பொருளும் பிற பொருட்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்தும் இணைந்து ஒரு முழுத்தன்மையாக ஒருமையாக – பொருளாதார ஒருமையாக – இருக்கிறது என்றும் இயக்கவியல் கருதுகிறது.

      ஒரு பொருளை மற்ற பொருளோடு இணைந்திருப்பதை மறுத்து தனித்து ஆராய்ந்தால் அந்த பொருளின் உண்மை தன்மையை அறிந்திட முடியாது.

எடுத்துக் காட்டை நாம் பார்ப்போம்

மழை என்பதை தனி நிகழ்வாக பார்த்தால் அதன் தன்மையை முழுமையாக அறிந்திட முடியாது. மழை என்பது பூமியில் உள்ள நீர் ஆவியானதாலும், அது மழைமேகமாக மாறியதாலும், மழை பெய்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாலும், மழை பெய்கிறது. மழை பொய்ப்பதும் தனித்த நிகழ்வல்ல, அதன் இணைந்த நிகழ்வில் ஏற்பட்ட சிக்கலே மழை பொய்கிறது.

பூமி என்பதும் ஒரு தனித்த பொருள் அல்ல, அது சூரியக் குடும்பத்தில் இணைந்தும் பிணைந்தும் காணப்படுகிறது. பூமியைப் பற்றி ஆராய வேண்டுமனால் அதனோடு தொடர்புடைய மற்றதையும் ஆராயந்து அறிந்தால் தான் பூமி பற்றிய சரியான முடிவுக்கு வரமுடியும்.

2) இயற்கை என்பது தொடர்ச்சியான இயக்கம் மற்றும் மாற்றத்தின் நிலை

      ஒரு பொருளானது தன்னுள்ளேயும் மற்ற பொருட்களோடு இணைந்தும் சேர்ந்தும் இயங்குகிறது. இயற்கை இடையறாது இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கிறது, தன்னைப் புதிப்பித்துக் கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது என்று இயக்கவியல் கூறுகிறது.

      ஒரு பொருளோ நிகழ்வோ நீண்ட நாள் நிலைத்து நீடித்துக் கொண்டிருப்பதாக பொதுவானப் பார்வைக்கு தோன்றுகிறது. அதனுள் ஏற்படுகிற மாற்றங்கள் நம் கண்ணுக்குத் தென்படாது போனாலும் அளவு மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

பழையது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, புதியது வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. அந்த வளர்ச்சியானது முதிர்ச்சி நிலையில் பழையப் பண்மை மறுத்து புதிய பண்பாக மாறுகிறது. தொடக்கத்தில் நமது கண்ணுக்குத் தெரியாமல் ஏற்பட்ட சின்னசின்ன மாற்றங்கள் குறிப்பிட்ட கட்டத்தை எட்டியவுடன் பழைய பண்பை இழந்து புதிய பண்பை பெறுகிறது. இறுதி கட்டத்தில்தான் அந்த மாற்றம் கண்ணுக்குப் புலப்படுகிறது.

இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக, எங்கெல்ஸ் எழுதிய “இயற்கையின் இயக்கவியல்”, “டூரிங்குக்கு மறுப்பு” ஆகிய நூல்களின் இருந்து மேற்கோள்களாக ஸ்டாலின் தருகிறார். இந்த மேற்கோள்களையும் இந்த மேற்கோள்கள் உள்ள எங்கெல்சின் நூல்களையும் நாம் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.

      ஒரு பொருள் அல்லது நிகழ்வில் காணப்படும் உள்முரண்பாட்டின் இயல்பை, அதாவது விதியை தெரிந்து கொள்ள முடியாதவர்கள், இன்றைக்கு இருப்பவையே என்றும் நிலைத்து நிற்கக்கூடியதாக கருதுகின்றனர். ஆனால் அதனுள், அழிவை நோக்கி செல்கிற அளவு மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் இன்றைய முதலாளித்துவத்தின் அதீத வளர்ச்சியையும் அதன் பலத்தையும் கண்டு முதலாளித்துவமே இறுதியானது என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இயக்கவியலானது முதலாளித்து உற்பத்தியில் காணப்படும் உள்முரண்பாடுகளைக் கணக்கில் கொண்டு அதன் அழிவை முன்னறிந்து அறிவிக்கிறது. இந்த முன் அறிவிப்பை அறிந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியே முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு உழைக்கும் மக்களைத் தயார்படுத்துகிறது.

3) இயற்கையான அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது

மாறாநிலைத் தத்துவம் மாற்றத்தை தொடர் நிகழ்ச்சியாகப் பார்க்கிறது. இப்படிப் பார்ப்பத்தினால் இந்த தத்துவப் போக்கினர் ஒரு பொருள் அல்லது நிகழ்வில் ஏற்படும் மாற்றங்கள், புதிய பண்பு மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இயக்கவியல் இதற்கு மாறாக, கண்ணுக்குத் தெரியாமல் ஏற்படும் சிறிய மாற்றங்கள் படிப்படியாக வளர்ந்து, பழைய பண்பை இழந்து, புதிய பண்பாக மாறுகிறது என்கிறது. படிப்படியாக ஏற்படும் அளவு மாற்றங்கள் இறுதியில் பழையதை முறித்து பாய்ச்சலாக புதியதைப் படைக்கிறது.

      பொருளிலோ நிகழ்விலோ ஏற்படும் பண்பு மாற்றங்கள் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அது ஒரு விதிக்குள் செயல்படுகிறது. அந்த விதியே இயக்கவியல் விதி.

      இயக்கவியல் தவறானது என்று பலபேர் சந்தேகத்தைக் கிளப்பிக் கொண்டிருப்பர். நம் நாட்டிலும் இது போன்ற பலரைக் காணலாம். எங்கெல்ஸ் எழுதிய “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலில் உள்ளதை ஸ்டாலின் மேற்கோள்காட்டுகிறார். அதில் இயக்கவியல் சரியா? தவறா? என்பதற்கு இயற்கையே சிறந்த உதாரணம் என்று கூறப்பட்டுள்ளது.

      சிலர் இயக்கவியலை மறுப்பதற்கு பெரும் காரணம் என்ன வென்றால், தற்கால சமூகம் அழிவுக்கு உள்ளாகும், அப்படி நேரும் போது இதைவிட சிறந்த புதிய சமூகம் தோன்றும் என்று இயக்கவியல் கூறுவதை, அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்றைய முதலாளித்துவ சமூகமே இறுதியானது, அதனுள் ஏற்படும் வளர்ச்சி முதலாளித்துவத்தை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு செல்லும், முதலாளித்துவ சமூகத்துக்கு அழிவு கிடையாது என்பதே அவர்களின் அடிப்படைக் கருத்து. இந்தக் கருத்தை இயக்கவியல் மறுக்கிறது.

நிலப்பிரபுத்துவம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து அழிந்து போய் முதலாளித்துவம் பிறந்ததோ அதேபோல முதலாளித்துவமும் அழிந்து சோஷலிசம் தோன்றும் என்பதை இயக்கவியல் உறுதியாகக் கூறுகிறது.

4) இயற்கையில் உள்ளார்ந்த முரண்பாடுகள்

      அனைத்துப் பொருட்களிக்கு உள்ளேயும், அனைத்து இயற்கைத் தோற்றங்களுக்கு உள்ளேயும் முரண்பாடுகள் காணப்படுகிறது. அனைத்திலும் ஒரு நேர் நிலையும் ஒரு எதிர் நிலையும் இருக்கிறது. அதில் ஒன்று மடிந்து கொண்டிருக்கிறது, மற்றொன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. மடிவது பழையது வளர்வது புதியது. பழைய பண்பு மறைகிறது புதிய பண்பு பிறக்கிறது.

பழைமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் புதுமையே வெல்கிறது, பழைமை அழிகிழிக்கப்படுகிறது.

      இந்த இடத்தில் ஸ்டாலின், லெனின் எழுதிய “தத்துவார்த்த குறிப்பேடு” என்கிற நூலில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். அதில் குறிப்பிடத் தக்கது, வளர்ச்சி என்பது எதிர்மறைகளிடையே நடைபெறும் போராட்டமே ஆகும். அதாவது எதிர் நிலைகளுக்கு இடையே நடைபெறும் முரண்பாடோ வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

      சுருக்கமாக கூறவேண்டுமானால், இவை தான் மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையின் முதன்மைத் தன்மை என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

சமூகத்தை அணுகுவதற்கு இயக்கவியலே கம்யூனிஸ்டுகளுக்கு உரிய வழிகாட்டியாகும். இதனை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியானது இயக்கவியல் என்னும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தமது நடைமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கம்யூனிஸ்டுகள் இயக்கவியலையும் பொருள்முதல்வாதத்தையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

      உலகில் நடப்பவை ஒவ்வொன்றும் தொடர்பில்லாது தனித்தனியாக செயல்படுவதில்லை, அனைத்தும் தொடர்போடும் சார்ந்தும் செயல்படுகிறது என்பதையே இயக்கவியல் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

      “நிரந்தர நீதி” என்ற பார்வையிலோ, முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்ட கருத்தினைக் கொண்டோ சமூகத்தை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்வதில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் உள்முரண்பாடுகளின் மூலமே அந்த சமூகத்தின் இயக்கத்தை புரிந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு சமூகமும் முந்தைய சமூகத்தைவிட முன்னேறிய நிலையில்தான் இருக்கிறது.

      இங்கே ஸ்டாலின், அன்றைய ரஷ்ய நிலைமையைக் கொண்டு இதனை விளக்கிறார். 1905ஆம் ஆண்டில் ஜாரிசமும் முதலாளித்துவ சமூகத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்ற கோரிக்கை ஒரு முன்னேற்றமானதும் புரட்சிகரமானதும் என்கிறார் ஸ்டாலின். அதே நேரத்தில் சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் அமைந்துள்ள நேரத்தில், ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்று கருதுவது பொருளற்றது, புரட்சிக்கு எதிரானது. ஏனென்றால் சோவியத் குடியரசுடன் ஒப்பிடும் போது முதலாளித்துவ குடியரசு எனப்படுவது ஒருபடி பின்னுக்கு இழுப்பதாகும், மேலும் இது ஒரு பிற்போக்கு கருத்தாகும் என்கிறார் ஸ்டாலின்.

      நிலைமை, காலம், இடம் ஆகியவற்றைச் சார்ந்துதான் அனைத்தும் இயங்குகிறது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நம் நாட்டில் உள்ள பலருக்கு சோஷலிசப் புரட்சியைத் தவிர எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படிப்படி மாற்றத்தில் ஏற்படும் காலகட்டம் இவர்களை சலிப்படையச் செய்கிறது. வரலாற்றை நாம் நினைக்கும்படி எல்லாம் உருவாக்கிவிட முடியாது. அதன் வளர்ச்சியை ஒட்டிதான் நமது செயல்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும்.

      சமூகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய வரலாற்று வழிபட்ட கண்ணோட்டத்தின் வழியில்தான் சமூகத்தை அணுக வேண்டும். இதுவே விஞ்ஞான வழிப்பட்ட பார்வை ஆகும். இதுவல்லாது வேறுவழியில் கம்யூனிஸ்டுகள் தங்களது குறிக்கோளை அடைய முடியாது.

      சமூக-பொருளாதார வளர்ச்சியில், எந்த வர்க்கம் சத்தி பெற்று போராடும் என்பதை, கம்யூனிஸ்ட் கட்சி கணித்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களின் இன்றைய நிலைமையினை புரிந்து அவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் பயிற்சி கொடுக்க வேண்டும். வர்க்கப்படுத்த வேண்டும்.

தொழிலாளியாக இருப்பதினால், தானாகவே புரட்சிகரமாக மாறிடுவதில்லை, தொழிலாளர்களை வர்க்க அரசியலுக்கு வழிகாட்டுவது கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் இதில்தான் அடங்கியிருக்கிறது.

      முதலாளித்துவ சுரண்டலில் இருந்து உழைப்பாளர்களை விடுவிக்கவும், முதலாளித்துவ அமைப்பு முறையில் இருந்து சோஷலிச அமைப்பு முறைக்கு மாறிச் செல்வதற்கு சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியப்படுத்த முடியாது. முதலாளித்துவ அமைப்பு முறையின் பண்பு வழியிலான மாற்றத்துக்கு சீர்திருத்தப் போராட்டத்தைக் கடந்து புரட்சியின் வழியில் செயல்பட்டால்தான் சாத்தியப்படும் என்கிறார் ஸ்டாலின்.

      கம்யூனிசக் கொள்கையில் தவறுசெய்யாமல் இருக்க வேண்டும் என்றால், நாம் சீர்திருத்தவாதியாக இருக்கக்கூடாது புரட்சியாளனாக மாறித்தீரவேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

      பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி சீர்திருத்தத்தினால் கிட்டப் போவதில்லை, பாட்டாளி வர்க்கம் நடத்தப் போகிற புரட்சிகரமான வர்க்கப் போராட்டத்தின் மூலமே வெற்றி கிடைக்கும்.

      ஆகவே முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளை மூடிமறைக்காமல், அந்த முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும். வர்க்கப் போராட்டத்தை தடைபடாமல் முடிவை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

      இந்த முதல் பிரிவின் இறுதியில் ஸ்டாலின் கூறியதை அப்படியே பார்ப்போம்.

 

“ஆகவே, கொள்கையில் தவறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பாட்டாளி வர்க்கக் கொள்கையினை சமரசம் இல்லாது நாம் பின்பற்ற வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களையும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணக்கமாகப் பிணைக்கும் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையைப் பின்பற்றக்கூடாது. “முதலாளித்துவம் வளர்ந்து தானாகவே சோஷலிசமாக மாறிவிடும்” என்கிற சமரசவாதிகளின் கொள்கையைப் பின்பற்றக் கூடாது.” என்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் கம்யூனிஸ்டுகள் புரட்சிகர இயக்கவியலைப் பின்பற்ற வேண்டும்.

இதுவரை மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறையைப் பற்றி ஸ்டாலின் கூறியதைப் பார்த்தோம், இதற்கு அடுத்து “மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்” என்ற தலைப்பில் கூறியதைப் பார்க்கலாம்.

மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதத்தின் பிரதான தன்மைகளாக ஸ்டாலின் மூன்றை குறிப்பிடுகிறார். 1) பொருள்முதல்வாதி 2) புறநிலை எதார்த்தம் 3) உலகமும் அதன் சட்டங்களும் அறியக்கூடியது.

1) பொருள்முதல்வாதி

      கருத்துமுதல்வாதி உலகை அதாவது பிரபஞ்சத்தை “அறுதியான கருத்து” “உலகலாவிய ஆத்மா” “உணர்வு” என்று கருதுகிறான். நம் நாட்டில் இதை பரம்பொருள், பரமாத்மா, பிரம்மம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தும் ஒன்றையே குறிப்பிடுகிறது.

பொருள்முதல்வாதி இதற்கு மாறாக, உலகமானது இயல்பிலேயே ஒரு பொருளாக அமைந்துள்ளது என்று கூறுகிறான்.

உலகில் காணும் பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்கிறது, ஒன்றையொன்று சார்ந்தும் இருக்கிறது. இதுவே இயங்கிக் கொண்டிருக்கிற பொருளினுடைய வளர்ச்சியின் விதி ஆகும்.

உலகில் உள்ள பொருட்களின் இயக்கம், இயக்கவியல் விதிகளின்படியே நிகழ்கிறது, இந்த நிகழ்வுக்கு “உலகலாவிய ஆத்மா” அதாவது பரமாத்மா தேவையில்லை என்பதையே இயக்கவியல் விளக்குகிறது.

இந்த இடத்தில் ஸ்டாலின், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் மேற்கோள்களைக் கொடுத்துள்ளார், இங்கே நாம் எங்கெல்ஸ் மேற்கோளை அப்படியே பார்ப்போம்.

"இயற்கையின் மீதான பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்பது, எந்த ஒரு வெளிப்பொருளையும் சேர்க்காமல், இயற்கையை, உள்ளது உள்ளபடியே உணர்ந்து கொள்வதைத் தவிர வேறில்லை."

(இயற்கையின் இயக்கவியல்)

அதாவது, உலகைப் புரிந்து கொள்வதற்கு இயல் உலகுக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் தேவையில்லை. உலகின் இருப்பை அதன் இயல்பில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

2) புறநிலை எதார்த்தம்

கருத்துமுதல்வாதம் “உணர்வுநிலை”யை மட்டுமே ஏற்கிறது. பொருளாயத உலகம், வாழ்நிலை, இயற்கை ஆகியவை மனிதனது மனதில் தான் இருக்கிறது என்று அது கருதுகிறது. மனதின் வெளிப்பாடுதான் இந்த புறவுலகம் என்பதே கருத்துமுதல்வாதத்தின் அடிப்படை.

மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பது இதற்கு நேரெதிரானது.

பொருள், இயற்கை, வாழ்நிலை என்பது புறநிலை உண்மையாகும், இவை மனிதர்களது உணர்வுக்கு அப்பால், அவர்களைச் சாராமல் புறநிலையில் சுதந்திரமாக இருக்கிறது, இயங்குகிறது. சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும், தத்துவங்களுக்கும் இதுவே ஆதாரம்.

புறநிலையே கருத்துகளின் தோற்றுவாய்.

புறநிலை முதன்மையானது, கருத்துக்கள் இரண்டாம் நிலையானது. இந்த முதன்மையானதில் இருந்தே இரண்டாம் நிலையானது தோன்றுகிறது. புறநிலையே கருத்துக்களைத் தீர்மானிக்கிறது. புறநிலையின் பிரதிபலிப்பே சிந்தனைகள் கருத்துக்கள்.

வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலை தீர்மானிக்கவில்லை என்பதே மார்க்சியத்தின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாகும்.

பருப்பொருளின் விளைபொருளே சிந்தனை ஆகும். பருப்பொருளின் மாற்றங்களும் வளர்ச்சிகளும் மூளையில் முழுமையாக பிரதிபலிக்கிறது. மூளைக்குக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டே மூளை முடிவெடுக்கிறது.

சிந்தனை என்பது பருப்பொருளின் படைப்பு, மூளைதான் சிந்தனையின் உறுப்பு. சிந்தனையை பருப்பொருளில் இருந்து பிரிக்க முடியாது. சிந்தனையைப் பருப்பொருளில் இருந்து பிரித்துப் பார்ப்பது பெரும் தவறு என்கிறது மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம்.

ஸ்டாலின் இந்தக் கருத்துகளுக்கு ஆதாரமாக, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். அதில் மார்க்சின் மேற்கோளை இங்கே பார்ப்போம்

பருப்பொருள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-

“சிந்தனை செய்கிற பருப்பொருளில் இருந்து சிந்தனையைப் பிரிப்பது என்பது அசாத்தியம். அனைத்து மாறுதல்களுக்கும் அடிப்படையாக இருப்பது பருப்பொருள்”

ஸ்டாலின் இந்தப் பகுதியை ஆதாரத்தோடு, மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார், இதற்கு மேல் வெளிப்படையாகக் கூறிடமுடியாது. ஆதாலால் பொருள்முதல்வாதிகளான கம்யூனிஸ்டுகள் சிந்தனை அதாவது மனிதனது கருத்துக்கள் புறிநிலையினால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நான்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்சின் “அடித்தளம் மேற்கட்டமைப்பு” என்கிற கோட்பாடு இதனையே வலியுறுத்துகிறது.

3) உலகமும் அதன் சட்டங்களும் அறியக்கூடியது.

புறவுலகை அறிய முடியாது என்று கருத்துமுதல்வாதம் கருதுகிறது. உலகையும் அதன் இயக்கத்தையும் உணர்ந்து கொள்வது சாதியமில்லை என்கிறது. அறிவின் உண்மைத் தன்மையை கருத்துமுதல்வாதம் ஏற்றுக் கொள்ளவில்லை. கருத்துமுதல்வாதத்தின் இந்தப் போக்கைத்தான் மார்க்சியம் அறிவொணாவாதம் என்கிறது. புறவுலகை அறிவியலால் எட்ட முடியாது. இதுவே கருத்துமுதல்வாதத்தின் இறுதி முடிவு.

அறிவியலுக்கு அப்பாற்பட்டவைகள் உலகில் நிறைந்துள்ளதாக கருத்துமுதல்வாதம் கருதுகிறது.

மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதத்துக்கு நேரெதிரானது. உலகையும், அதன் இயக்கத்தின் விதிகளையும் அறிந்து கொள்ள முடியும் என்கிறது பொருள்முதல்வாதம். இதுவரை அறிந்தவைகளை பரிசோதனைகளின் மூலம் சரியானது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது.

இதன் அடிப்படையில்தான், புறநிலை உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

அறிய முடியாதது என்று எதுவும் கிடையாது, ஆனால் அறியப்படாதது இன்னும் இருக்கிறது, அதுவும்கூட அறிவியலின் வளர்ச்சினாலும் மனிதனது முயற்சியினாலும் ஒவ்வொன்றாக அறிய முடியும் என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் உறுதியாகக் கூறுகிறது.

உலகில், அறிவுக்கு எட்டாத “தானே ஆகிய பொருட்கள்” ("Things-in-Themselves") இருக்கிறது என்று கான்ட் போன்ற கருத்துமுதல்வாதிகள் கூறுகின்றனர், இந்தியாவில் உள்ள கருத்துமுதல்வாதத் தத்துவம் தானேயானப் பொருளை “பிரம்மம்” என்கிறது. இதுபோன்ற போக்கை எங்கெல்ஸ், தமது “லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்” என்ற நூலில் விமர்சித்துள்ளார். மேலும் அதில் மனிதனது அறிவு என்பது உண்மையான அறிவுதான் என்று பொருள்முதல்வாத அடிப்படையில் நிறுவியுள்ளார்.

இதற்கு அடுத்து ஸ்டாலின், மாகிவாதிகளின் அறியமுடியாது என்ற கருத்தை மறுத்து இயற்கையைப் பற்றிய நமது அறிவு உண்மையானதுதான் என்று லெனின் கூறியுள்ள நூலான, “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

அறிவியலின் விதிகள் புறநிலை உண்மையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று லெனின் அந்த நூலில் கூறியுள்ளார்.

அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் வரும் போது மார்க்சியம் தன்னைப் புதிப்பித்துக் கொள்ளும் என்பதை லெனினது “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூல் நமக்கு வழிகாட்டுகிறது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பொருள்முதல்வாத வழியில் விளக்கம் கொடுப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு மார்க்சிய அடிப்படைப் புரிதல் அவசியமாகும். மார்க்சிய புரிதலில் தடுமாறுபவர்களால் இத்தகைய கடமைகளை செய்திட முடியாது.

சமூக வாழ்வையும், சமூக வரலாற்றையும் ஆராய்வதற்கு பொருள்முதல்வாதக் கோட்பாடுகளை, அதனோடு பொருத்திப் பார்ப்பதன் அளவிடற்கரிய முக்கியத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஸ்டாலின். மேலும் கூறுகிறார், சமூக வரலாற்றிலும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் நடைமுறை வேலைகளிலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கோட்பாடுகளைச் செயல்படுத்துவதன் அளவிடற்கரிய முக்கியத்துவத்தை இப்போது எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

நம் நாட்டில் உள்ளவர்கள் இதைப் புரிந்து கொண்டார்களா? என்ற கேள்விக்கு பதில் எதிர்மறையாகவே இருக்கிறது.

நம் நாட்டில் உள்ள இடதுசாரி கட்சிகளிடையே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் அதிகம் காணப்படுகிறது. அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பர வினைபுரிகிறது என்கிற இயக்கவியலுக்கு மாறான கதம்பப் போக்கையே அதிகமானவர்கள் பின்பற்றுகின்றனர். இந்தக் குழப்பம் அனைத்துக் குழப்பங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

ஸ்டாலின் நேரடியாகவே இந்த நூலில் கூறியதைப் பார்ப்போம்:-

“பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, தனது நடைமுறை வேலைகளைச் செய்வதற்கு மேம்போக்கான நோக்கங்களை வழி காட்டியாகக் கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக, சமூக வளர்ச்சியின் விதிகளையும், அந்த விதிகளைக் கொண்டு எடுக்கும் நடைமுறைக்கு உரிய முடிவுகளையும்தான் வழிகாடியாகக் கொள்ள வேண்டும்.

 

எனவே, மனித குலத்தின் இன்பமயமான எதிர்காலம், ஒரு கனவாக இருந்து வந்த சோஷலிசம், இப்பொழுது ஒரு அறிவியலாக மாற்றப்பட்டுள்ளது”

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புறக்கணித்து, அல்லது அதை சிதைத்து பின்பற்றப்படும் நடைமுறை விஞ்ஞான வழிப்பட்டதாக இருக்காது என்பதை நாம் நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஸ்டாலின் கூறுவதை அப்படியே பார்ப்போம்.

“ஒரு சமூகத்தின் நிலை எப்படியிருக்கிறதோ, ஒரு சமூகத்தின் பொருளாயத வாழ்வின் நிலைமைகள் எப்படியிருக்கிறதோ, அப்படித்தான் அந்த சமூகத்தின் கருத்துக்களும், அரசியல் நிறுவனங்களும் உள்ளன”

ஸ்டாலின் கூறுகிற இந்த கூற்றுதான் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் சாரமாகும். ஆனால் பலருக்கு இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் என்ன செய்வது இதுதான் மார்க்சியம்.

பாட்டாளி வர்க்க கட்சியின் செயல்பாடு கனவாக போகாமல் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டாலின் மிகத் தெளிவாக நம் முன்வைக்கிறார்.

“கொள்கையில் தவறாமல் இருக்க வேண்டுமானால் - வீண் கனவு காண்பவர்களைப் போல ஆகாமலிருக்க வேண்டுமானால்- பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்ன செய்ய வேண்டும்?.

 

புறநிலைக்கப்பால் நிற்கும் “மனிதப் பகுத்தறிவுக் கோட்பாடுகளை" ஆதாரமாகக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்யக் கூடாது.

 

சமூக வளர்ச்சியை நிர்ணயிக்கும் சக்தி எது?

 

சமூகத்தின் பொருளாயத வாழ்விலுள்ள பருண்மையான நிலைமைகள்தாம் அந்த சக்தி.

 

எனவே, அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.

 

''பெரிய மனிதர்களின்” நல்லெண்ணங்களை ஆதாரமாகக் கொள்ளவும் கூடாது. அதற்குப் பதிலாக, சமூகத்தின் பொருளாயத வாழ்வு வளர்வதற்கு வேண்டிய உண்மையான தேவைகளை ஆதாரமாகக் கொண்டுதான் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி தனது வேலைகளைச் செய்ய வேண்டும்.”

      ஸ்டாலின் இங்கே புறநிலை விதியினால் உருவாவதையே “தேவை” என்று குறிப்பிடுகிறார். புறநிலை விதிகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் நமக்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதப் புரிதல் அவசியமாகும்.

அடுத்த மூன்றாவதுப் பிரிவில் ஸ்டாலின் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” பற்றி விளக்குகிறார். இதனை அடுத்த வகுப்பில் பார்ப்போம்.

இன்னொன்றையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும், பொருளாயத நிலைமைகள்தான் தீர்மானிக்கும் சக்தி என்று கூறுவதால், அரசியல் கண்ணோட்டங்கள், அரசியல் நிறுவனங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு சமூகத்தில் ஒரு முக்கியப்பங்கு கிடையாதா? என்று கேட்பவர்கள் எதிரணியிலும் இருக்கின்றனர், கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருக்கின்றனர்.

இங்கே சிந்தனைகளை குறைத்து மதிப்பிடப்படவில்லை, நாம் பேசுவது சிந்தனைகளைத் தோற்றுவித்த சூழ்நிலைமைகள் எது? என்பது பற்றியே ஆகும்.

சிந்தனைகள், கருத்துக்கள் புறநிலைமைகளினால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், இதனை அனைவரலாலும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை. சிலரால்தான் மிகச் சிறப்பாக கண்டிறிய முடிகிறது. இந்தக் குறிப்பிட்டவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அவர்களின் தனித்திறமையை மார்க்சியம் மதிக்காமல் இல்லை. மதிக்கிறது, எங்கெல்சே மார்க்சை தனித்து சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இங்கே நாம் சொல்லவருவது என்வென்றால், சிறந்த கருத்துக்கள், சிந்தனைகள் என்பது அந்த தனி மனிதரின் சொந்தப் படைப்பல்ல, அதைத் தீர்மானித்தது புறநிலைமைகளே என்றுதான் மார்க்சியம் கூறுகிறது. அந்தப் புறநிலைமைகளை சரியாக அறிந்து கொண்டதே இந்த தனிநவர்களின் தனிச் சிறப்பாகும்.

மேற்கட்டுமானம் அடித்தளத்தின்மீது தாக்கம் செலுத்துவதை மார்க்சியம் மறுத்திடவில்லை.

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது மேற்கட்டமைப்பு தன்னளவில் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த தீர்மானிப்பதையும் தாக்கம் செலுத்துவதையும் சமப்படுத்தி அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானிக்கிறது என்று கூறப்படுகிற கதம்பப் போக்கைத்தான் மார்க்சியம் மறுக்கிறது.

அடித்தளத்தின் தீர்மானிக்கும் சக்தியையும் மேற்கட்டமைப்பின் தாக்கம் செலுத்தும் தன்மையையும் மார்க்சியம் ஏற்கிறது. இரண்டையும் சமப்படுத்தவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்றைய வகுப்பில், மார்க்சிய இயக்கவியல் அணுகுமுறை, மார்க்சிய தத்துவப் பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டைப் பற்றி பார்த்தோம். “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” பற்றி நாம் அடுத்த வகுப்பில் பார்க்கலாம்.

ஸ்டாலின் எழுதிய 

“இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்” -2

No comments:

Post a Comment