Friday 10 November 2017

லஷ்மி குறும்படம் - விமர்சனம்


 
ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால் அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத் தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டை ஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக் கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச் சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப் பயன்படும்.

தவறை நியாயப்படுத்துவது சமூகம் மேலும் சீரழிவிற்கே கொண்டு செல்லும். இந்தச் சமூகத்தில் ஒருவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதற்குச் சொல்லும் காரணத்தை, ஒரு பெண்ணைச் சொல்ல வைத்து அந்த ஆணின் தவறை நியாப்படுத்துவதுடன், தவறு செய்ய நினைக்கும்பெண்களுக்குத் தூண்டுதலையும் இந்தப் படம் தருகிறது. இந்தப் படத்தின் மீதான கடும் விமர்சனம் இங்கே தான் அடங்கி இருக்கிறது.

"தினமும் காலைல எந்திருச்சி ஆபிஸூக்கு போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.. ஆயிரம் முறை சுத்தற மாதிரி சுத்துற கிரைண்டர் மாதிரிஅலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு பண்ண தோணாது. எனக்கும் தோணுச்சு"

இந்த வசனம் தப்பை தூண்டும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தவறுக்கு பாரதியார் கவிதைகள் பயன்படுத்தியது வேதனைக்கு உரியவிஷயமாகும். இன்றைய சமூகத்திற்கு எது நீதியோ அதுவே நீதியாகும், நேற்றைய சமூகத்தின் நீதிகள் இன்றைய சமூகத்திற்கு ஒத்துவராது, அதே போல்நாளை சமூகத்தை யூகித்து இன்று அதனைக் கடைப்பிடிப்பதும் தவறாகும். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறு, அந்தக்குடும்பத்தை மிகவும் பாதிக்கும். குடும்ப உறவை கொண்டுள்ள இன்றைய சமூகத்தில் இது ஆபத்தான விளைவையே ஏற்படுத்தும்.

குடும்ப உறவை முன்வைத்து, செய்யப்படுகிற எந்தக் கொடுமையையும் எதிர்க்கக்கூடாது என்பதற்காக இவைகளைச் சொல்லவில்லை. அது வேறு இதுவேறு. அதே போல் பாலியல் சுதந்திரத்தைப் பற்றியும் இங்கே விவாதிக்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படம் பாலியல் சுதந்திரத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதா என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அது தனியொரு விவாதம்.இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். பாலின சுதந்திரம் என்றால் ஒருவன் அல்லது ஒருத்தி மற்றொரு ஒருத்தி அல்லது ஒருத்தனுடம் ஒன்றுபட்டுமுடிவெடுக்கும் சுதந்திரமாகக் குறுக்கிடக் கூடாது. சமுகக் கட்டுபபாடற்ற முறையில் தனித்தனியாக முடிவெடுப்பதை இந்தச் சுதந்திரம் குறிக்காது. ஒருஆண் தன் மனைவி இறந்துவிட்டால், மற்றொரு பெண்ணை மணந்து கொள்வதற்கு உள்ள பாலின உரிமை பெண்ணிற்கும் இருக்க வேண்டும் என்றுகூறுவதாக அமைய வேண்டும். அதுவே பாலின சுதந்திரமாகக் கொள்ள முடியும். அதே போல் குடும்பத்திற்குள் ஒரு பெண்ணையோ, ஆணையோகட்டாயப்படுத்திப் பிணைத்துவைக்கக்கூடாது, அவ்விருவர்களுக்குச் சமமான சுதந்திரமும் உரிமையும் இருக்க வேண்டும். சிலர் எனது விமசர்சனத்தைப்பத்தாம்பசலிதனம் என்று கூறக்கூடும். ஆனால் குடுப்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிணக்கு இருந்தாலும், அதனைப் பொருத்துக கொண்டு, இணைந்துவாழ வேண்டும் எனறு கூறுவதே பத்தாம்பசலிதனம் என்று கூறுவேன்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதயக் கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகைக் கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.


இவ்வாறு தான் பாரதியார் கூறியிருக்கிறார். வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதைப் பெண்கள் ஒழித்து, வெளியில் சென்று உழைத்திடும் வழிவகையையே பாரதி கூறியுள்ளார். இதற்கு மாறாக வெளியில் சென்று உழைக்கும் பெண்கள், தமது இயந்திர வாழ்க்கையின் அலுப்பைப் போக்கிக் கொள்ளத் தப்புச்செய்யப் பாரதியார் வழிவகைக் கூறிடவில்லை. இதற்குப் பாரதியாரைப் பயன்படுத்துவது அவர் கவிதைக்குச் செய்யும் துரோகமாகும்.

Wednesday 21 June 2017

பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் – லெனின் (சிறு அறிமுகம்)

புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் மார்க்சியம் பழைமைப்பட்டு காலாவதியாகிவிட்டதாக சிலர் பேசத் தொடங்கினர். இவர்களுக்கு லெனின் தமது பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற நூலில் பதிலடி கொடுத்தார். விஞ்ஞான வளர்ச்சியின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளும் அதற்கு மார்க்சியவாதிகள் கொடுக்க வேண்டிய பதில் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்நூல் தெளிவாகக் காட்டுகிறது.

       மின்னணு 1897ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1896ஆம் ஆண்டு இயற்கை கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டது, அணுக்கள் பிளவுபடக் கூடியவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்துப் பொருட்களின் அடிப்படை அணுக்கள் என்கிற கருத்து மறுக்கப்பட்டது. அணுக்களின் நிலைப்புத் தன்மை, பிரிபடாத தன்மை என்கிற இயற்பியல் வல்லுணர்களின் கருத்துக்கள் தகர்ந்து போயின. உடனே பொருள்முதல்வாதம் தகர்ந்து போய்விட்டதாக கூச்சல் இட்டனர். உண்மையில் பொருள்முதல்வாதம் தகர்ந்து போய்விடவில்லை, முந்தைய இயற்பியல் கருத்துக்கள்தான் தகர்ந்து போயின. பருப்பொருள் மறைந்து போயின என்பது தவறானது என்றும் பருப்பொருளைப் பற்றிய புரிதலின் எல்லை தான் தகர்ந்து போயின என்று லெனின் சரியாக விளக்கினார்.

“…பருப்பொருள் மறைந்து விடுதல், மின்சாசாரம் அதன் இடத்தை எடுத்துக் கொள்ளுதல், இதரவை ஆகிய கூற்று ஏராளமானவர்களைக் குழுப்பிக் கொண்டிருக்கிறது, ஆனால்,அதன் உண்மையான பொருள் இதுதான்.

“பருப்பொருள் மறைந்து விடுகிறது” என்றால் நாம் பருப்பொருளைப் பற்றி இதுவரை அறிந்திருக்கின்ற எல்லைகள் மறைந்து விடுகின்றன, நம் அறிவு மேலும் ஆழமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள், பருப்பொருளின் குணாம்சங்களும் (ஊடுருவ முடியாத் தன்மை, சடத்துவம், திண்மை, இதரவை) மறைந்து கொண்டிருக்கின்றன, முன்னர் அறுதியானவையாக, மாறாநிலை உடையவையாக, முதன்மையாகத் தோன்றியவை தற்பொழுது சார்பு நிலையானவையாக, பருப்பொருளின் சில நிலைகளுக்கு மட்டுமே குறியடையாளம் ஆனவையாக தம்மை வெளிப்படுத்துகின்றன. பருப்பொருளின் ஒற்றை “குணாம்சம்” புறநிலை யதார்த்தமாக இருத்தல், நம்முடைய உணர்வுக்கு வெளியே இருத்தல் என்ற குணாம்சமாகும், அதை அங்கீகரிப்பதுடன் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது”

பருப்பொருள் என்பது நம்முடைய உணர்வுநிலைக்கு வெளியே இருக்கிறது என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையாகும். புதிய கண்டுபிடிப்புகள் எந்த வகையிலும் பொருள்முதல்வாதத்தை அதன் இயக்கவியல் போக்கில் இருந்து மறுத்திடவில்லை.

புதிய கண்டுபிடிப்புகள் பழைய கண்டுபிடிப்புகளை காலாவதியாக்கக்கூடும், அணு மற்றும் எலெக்ட்ரானைப் பற்றி விஞ்ஞானத்தின் போதனைகளும் காலாவதியாகிப் போகலாம், ஆனால் புறநிலை உண்மை என்பது என்றும் காலாவதியாகாது.

“பொருளின் அமைப்பியலைப் பற்றி, உணவின் ரசாயனக் கலவையைப் பற்றி, அணு மற்றும் எலெக்ட்ரானைப் பற்றி விஞ்ஞானத்தின் போதனைகள் காலாவதியாகக்கூடும், அவை தொடர்ச்சியாகக் காலாவதியாகின்றன, ஆனால் மனிதன் கருத்துக்களை உண்டு உயிர்வாழ முடியாது. ஆத்மார்த்தமான அன்பினால் மட்டுமே குழந்தைகளைப் பெற முடியாது என்ற உண்மை ஒருபோதும் காலாவதியாவதில்லை. காலம் மற்றும் விசும்பின் புறநிலை யதார்த்தத்தை மறுக்கின்ற ஒரு தத்துவம் மேலே கூறப்பட்ட உண்மைகளை மறுப்பதைப் போலவே பொருளில்லாதது, உளுத்துப்போனது, போலியானது.”

இவ்வாறு விளக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்தப் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிராக திசை திருப்பி கருத்துமுதல்வாதப் பார்வையை நிலைநாட்ட முயற்சித்தனர். இவர்களில் மாஹ், அவெனாரியுசின் மற்றும் பக்தானவ் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகம் எப்படி உள்ளதோ அதனை அப்படியே மக்களால் அறிந்திட முடியாது.  ஏனென்றால் அறிதல் என்ற செயற்பாடு, பொருட்களை எதிர்கொள்வதில்லை, புலனுணர்ச்சிகளைத் தான் எதிர்கொள்கிறது. பொருள் என்று கூறப்படுவது உண்மையில் நமது புலனுணர்ச்சிகளின் முழுமையே அல்லாது வேறெதும் கிடையாது. இந்த புலனுணர்ச்சிகளுக்கு அப்பால் உலகம் இருக்கிறதா? என்பதை அறிந்திட முடியாது, ஏனென்றால் உலகைப் பற்றிய அறிவு புலனுணர்ச்சிகளில் இருந்து தான் பெறப்படுகிறது, என்பதாக இவர்களின் தத்துவம் விவரிக்கிறது.

மார்க்சியம் கூறுகிற புறநிலை உண்மை என்பதை, இந்த தத்துவப் போக்கு மறுதலிக்கிறது. இதன்விளைவாக சமூக நடைமுறையில் அகநிலை வழியிலான அணுமுறை வலியுறுத்தப்படுகிறது. புறநிலை உண்மை இல்லை என்றால், புறநிலையான விதிகளும் கிடையாது என்றாகிறது. சமூக நடைமுறை அரசியல் போன்ற எல்லாம் மனிதர்களின் கருத்துகளின் அடிப்படையில் அதன் திறமையின் வழியில் அமைகிறது என்று மாஹியினை ஆதரிப்பவர்கள் கூறினர்.

இந்த தவறானப் போக்கின் விளைவைப் பற்றி லெனின் கூறியதை சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷிவிக்) கட்சியின் வரலாறு என்னும் நூலில் தொகுத்துத்தரப்பட்டுள்ளது:-
1) “மார்க்சியத்தை மிகவும் நுணுக்கமாக பொய்யாக்குவது. மார்க்சியம் என்ற போர்வையில், பொருள்முதல்வாத முடிவுகளுக்கு விரோதமான முடிவுகளை மிகமிக நுணுக்கமான முறையில் வெளிப்படுத்துவது- இதுதான் அரசியல் பிரச்சினைகளிலும், செயற்தந்திரப் பிரச்சினைகளிலும், பொதுவாக தத்துவத்திலும் காணப்படும் நவீன திருத்தல்வாதத்தின் சிறப்பு அம்சங்கள்.”

2) “மாஹ், அவெனாரியுசின் ஆகியோர்களுடைய போதனைப்போக்கு முழுவதும் கருத்துமுதல்வாதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.”

3) “மாஹ் என்பவரின் கருத்துமுதல்வாதத்தில் எல்லோரும் சிக்கிவிட்டனர்.”

4) “”விஞ்ஞான ஆதாரமின்றி அனுபவத்தை”க் கொண்டு ஏட்டுப்புலமைத்தனமாக நுணுக்கமாகச் செய்யப்படும் கண்மூடித்தனமான விமர்சனத்தின் பின்னால், தத்துவத்தில் கட்சிகளுக்குகிடையே நடைபெறும் போராட்டங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது, இந்தப் போராட்டங்களை நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தால், நவீன சமூகத்தில் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் வர்க்கங்களின் போக்குகளையும், கருத்துமுதல்வாதத்தையும் காணலாம்.”

5)“விஞ்ஞானத்தைவிட தங்களின் மனதில் குடிகொண்டிருக்கின்ற குருட்டு நம்பிக்கையைப் பெரிதாகக்கருதும் பிற்போக்குப் பேர்வழிகள் பொதுவாக பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். விஞ்ஞானபூர்வமற்ற விமர்சனம் இந்தப் பேர்வழிகளுக்கு சேவை செய்கிறது. அந்த விமர்சனம் புரிகிற வர்க்கப்பணி, உண்மையான பணி, இதைத்தவிர, வேறு எதுவுமில்லை”

6) “தத்துவார்த்த கருத்துமுதல்வாதம்….. பிற்போக்குத் தனத்திற்கு பாதையாகும்”

       வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்தந்திரத்தை அமைத்துக் கொள்வதற்கு வழிகாட்டுகிறது. இதனை மறுத்து பிற்போக்கான கருத்துமுதல்வாதத்தின் பக்கம் சாய்வதென்பது வர்க்கப் போராட்டத்தில் பிற்போக்குத்தனத்திற்கே அதாவது எதிரிக்கே பாதை அமைத்திடும். அதனால் சித்தாந்தப் போராட்டம் என்பது கம்யூனிஸ்டுகளுக்கு அவசியமானதாகும்.

மாஹ், அவெனாரியுசின் ஆகியோருடையத் தத்துவம் எவ்வகையில் அகநிலை கருத்துமுதல்வாதம் லெனின் என்பதை விவரிக்கிறார்.

“எவ்விதமான உயிரினமும் எவ்விதமான புலனுணர்ச்சியும் அல்லது எவ்விதமான “மைய உறுப்பும்” உயிரோடு வசிக்க முடியாத காலத்தில் பூமி இருந்தது என்பதைக் கல்வியறிவுடைய அல்லது சிந்தனைத் தெளிவுடைய எவருமே சந்தேகிப்பதில்லை. ஆகவே பூமி புலனுணர்ச்சிகளின் தொகுதி (“பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள்”) அல்லது “மனோதத்துவ மற்றும் இயற்கைக்குரிய முற்றொருமை கொண்ட மூலக்கூறுகளின் தொகுதி”…

-என்ற மாஹ் மற்றும் அவெனாரியுசின் மொத்தத் தத்துவமுமே தத்துவஞான இருட்டுவாதமாகும், அது அகநிலையான கருத்துமுதல்வதத்தை அறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு நீட்டிச் செல்வதாகும்”

புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி இவர்கள் பழைய அறிவொண்ணாவாத கருத்துமுதல்வாதத்தையே மீட்டெடுக்கின்றனர்.
      
“நாம் புலனுணர்ச்சிகளை மட்டுமே அறிவதால் புலனுணர்ச்சிகளின் எல்லைகளுக்கு வெளியே ஏதாவதொன்றின் இருத்தலையும் அறிய முடியாது என்ற மாஹியவாதக் “கோட்பாடு” கருத்துமுதல்வாத, அறிவொணாவாதத் தத்துவத்தின் பழைய குதர்க்கத்தைப் புதிய சட்டினியோடு பரிமாறுவதே.”

       ருஷ்ய மாஹியவாதியான பக்தாவ், தம்மை மாஹியவாதியாக ஒத்துக்கொள்ளாமல், தத்துவத்தில் தம்மை ஒரு மார்க்சியவாதியாக கருத முனைகிறார். பொருள்முதல்வாதம் காலாவதியாகிவிட்டது என்பவர்களைவிட இவரே ஆபத்தானவர். இவர் பொருள்முதல்வாதத்தை திரித்துரைக்கிறார். இவரது தத்துவம் என்பது அறிவொணாவாத அகநிலை கருத்துமுதல்வாதமே.

“பின்னால் தரப்பட்ட கேள்விக்கு பக்தானவின் எதிர்மறையான பதில் தெளிவாக இருக்கிறது, உண்மை என்பது ஒரு சித்தாந்த வடிவம் மட்டுமே என்றால் அகப்பொருளில் இருந்து, மனித குலத்தில் இருந்து சுதந்திரமான உண்மை என்பது கிடையாது, ஏனென்றால் பக்தானவுக்கோ அல்லது நமக்கோ மனித சித்தாந்தத்தைத் தவிர வேறுவிதமான எந்தச் சிந்ததாந்தமும் தெரியாது. பக்தானவின் எதிர்மறையான பதில் அவருடைய கூற்றின் இரண்டாவது பாதியில் இன்னும் அதிகத் தெளிவாகப் புலப்படுகிறது, உண்மை என்பது மனித அனுபவத்தின் ஒரு வடிவம் என்றால் மனித குலத்தில் இருந்து சுதந்திரமான உண்மை என்பது கிடையாது, புறநிலையான உண்மை என்பதும் இருக்க முடியாது.

பக்தானவ் புறநிலையான உண்மையை மறுப்பது அறிவொணாவாதம் மற்றும் அகநிலைவாதமாகும்.”

பக்தானவ்வின் தலைகீழ் சிந்தனையை லெனின் அப்பட்டமாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். புறநிலையானது மனிதர்களின் அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத் திறனுக்கும் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார் பக்தானவ், இதனை மறுத்து உண்மை என்பது இதற்கு நேர்மாறானது என்கிறார் லெனின்.

“..பூமியின் கடந்த காலம் மற்றும் உலகத்தின் படைப்பு ஆகியவை பற்றிப் பொருந்துகின்ற புறநிலை யதார்த்தம் இல்லை. எந்தச் சமூகத்துக்கும் முன்பு, மனித குலத்துக்கு முன்பு, அங்ககப் பருப்பொருளுக்கு முன்பு பூமி இருந்தது, அது திட்டவட்டமான காலத்துக்கு மற்ற கிரகங்களைப் பொறுத்தவரை திட்டவட்டமான விசும்பில் இருந்து வந்திருக்கிறது என்ற விஞ்ஞான போதனைக்கு பொருந்துகின்ற புறநிலை யதார்த்தம் இருக்கிறது.

விசும்பு மற்றும் காலத்தின் பல்வேறு வடிவங்கள் மனிதர்களின் அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத் திறனுக்கும் தகவமைத்துக் கொள்கின்றன என்பார் பக்தானவ், ஆனால் இதற்கு நேர்மாறானதே உண்மையாகும், நம்முடைய “அனுபவமும்” நம்முடைய அறிவும் புறநிலையான விசும்புக்கும் காலத்துக்கும் மேன்மேலும் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றன, அவற்றை மேன்மேலும் சரியாகவும் ஆழமாகவும் பிரதிபலிக்கின்றன.”

       மனிதர்களின் அனுபவத்துக்கும் அவர்களுடைய புலனறிவுத் திறனுக்கும் புறநிலை தகவமைத்துக் கொள்கின்றன என்பது பக்தானவின் கூற்றாகும். சமூக உணர்வு சமூக வாழ்நிலையைச் சார்ந்திருக்கவில்லை, இரண்டும் முற்ற சரிசமமானது அதாவது பரஸ்பர வினைவுபுரிகிறது என்ற பக்தானவின் கருத்தானது கருத்துமுதல்வாதமும் இல்லாத பொருள்முதல்வாதமும் இல்லாத போக்கை முன்வைக்கிறது. இது மார்க்சிய தத்துவமுறைக்கு எதிரானதாகும்.

       செயற்பாட்டின் குறிக்கோள்களை புறநிலை உண்மையில் இருந்து பெறாமல் அகநிலையில் இருந்து தன்னிச்சையாக பக்தானவ்வின் கண்ணோட்டம் காணப்படுகிறது. சமூக வளர்ச்சி என்பது மக்களின் நலன்களில் இருந்தல்லாமல், பெரும் நிறுவனத் தலைவர்களின் தனித்திறனான சக்தியால் படைக்கப்படுவதாக கருதுகிறது.

       வரலாற்றியல் பொருள்முதல்வாதம் உழைக்கும் மக்களின் நலன்களை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் தொழிலாளர்களின் கோட்பாடாக மார்க்சியம் விளங்குகிறது.

“பொருள்முதல்வாதிக்கு மனித நடைமுறையின் “வெற்றி” நம்முடைய கருத்துக்களுக்கும் நாம் புலன்களால் அறிகின்ற பொருட்களின் புறநிலையான தன்மைக்கும் இடையே பொருத்தம் இருப்பதை நிரூபிக்கிறது.“


Sunday 23 April 2017

இளைஞர் கழகங்களின் பணிகள் – லெனின் (கட்டுரை அறிமுகம்)

எதிர்கால கம்யூனிச சமூகத்தை மனதில் கொண்டு, இளைஞர்களுக்கு அரசியல் போதனை அளிப்பதற்காக இளைஞர் கம்யூனிஸ்ட் கழகம் ஒன்றை லெனின் அமைத்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபரில் இளைஞர் கழகத்தின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது. 1920ஆம் ஆண்டு இளைஞர் கழகங்களின் மூன்றாவது காங்கிரசில் இளைஞர் கழகங்களின் பணிகள் என்ற தலைப்பில் லெனின் உரை நிகழ்த்தினார். இவ்வுரையில் லெனின் இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் அடிப்படைப் பணிகளை விவரித்தார்.

                பொதுவில் இளைஞர்களுக்கும் குறிப்பாக இளங் கம்யூனிஸ்ட் கழகங்களில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுள்ள பணிகளை ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமாயின் “கற்றறியுங்கள்” என்று லெனின் கூறினார். ஆனால் எதைக் கற்றறிவது, எப்படிக் கற்றறிவது என்ற அத்தியாவசியமான கேள்விக்கு இச்சொல் பதில் அளிக்கவில்லை என்பதைத் தெரிவித்து, எதைக் கற்க வேண்டும், எப்படிக் கற்க வேண்டும் என்பதை இச் சொற்பொழிவில் விரிவாக விளக்கினார்.

“.. இளைஞர்களுக்கு நாம் போதிக்க வேண்டியது என்ன, இளைஞர்கள், கம்யூனிச இளைஞர்கள் என்னும் பெயருக்கு உரியவராகும் தகுதி பெற உண்மையாகவே விரும்பினால், அவர்கள் கற்றறிந்து கொள்ள வேண்டியது என்ன, நாம் துவக்கியிருக்கும் பணியை நிறைவுறச் செய்து முடித்து வைக்கக் கூடியவர்களாகும் பொருட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என்கிற பிரச்சினை குறித்து நாம் விவரமாய்ப் பரிசீலிக்க வேண்டும்.

இளைஞர் கழகமும் பொதுவில் கம்யூனிசத்துக்கு முன்னேறிச் செல்ல விரும்பும் இளைஞர்கள் அனைவரும் கம்யூனிசத்தைக் கற்றறிந்தாக வேண்டும் என்பதே முதலாவதும் மிகவும் இயற்கையானதுமான பதிலாய்த் தோன்றுகிறது…..”

                கம்யூனிச நூல்களைப் படிக்க வேண்டும் ஆனால் அது மட்டும் போதாது, ஏனென்றால் வேலையில் ஈடுபடாமல், போராட்டம் இல்லாமல் போனால் அந்த ஏட்டறிவினால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தயாராய் வரையறுத்த முடிவுகளை தெரிந்து கொண்ட ஒரே காரணத்தால் தம்மை மெச்சிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் பரிதாபத்துக்கு உரியவரே என்கிறார் லெனின்.

“இந்த அறிவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது, விமர்சனக் கண்கொண்டு ஆய்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேண்டாத குப்பையை எல்லாம் மூளையில் அடைத்துக் கொள்ளாமல், கல்வியில் சிறந்த இக்கால மனிதர் எவருக்கும் அத்தியாவசியமான உண்மைகளைக் கொண்டு சிந்தனையை வளமாக்கிக் கொள்ள முடியும்.

கருத்து மிக்க கடும் முயற்சி இல்லாமலே, விமர்சனக் கண்கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்து கொள்ளாமலே ஒரு கம்யூனிஸ்டு, தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளைத் தெரிந்து கொண்டு விட்ட ஒரே காரணத்தால் தனது கம்யூனிசத்தை மெச்சிப் புகழ்ந்து கொள்ள நினைப்பாராயின் உண்மையில் அவர் பரிதாபத்துக்குரிய கம்யூனிஸ்டுதான். இத்தகைய நுனிப்புல் மேயும் போக்கு நிச்சயமாய் ஆபத்தையே உண்டாக்கும்.

அறிந்தது குறைவே என்பது எனக்குத் தெரிந்தால் மேலும் கற்க முயலுவேன். ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்டு, எதையும் தீர்க்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கூறும் ஒருவர் எந்நாளும் எவ்விதத்திலும் கம்யூனிஸ்டுக்கு ஒப்பானவராக முடியாவே முடியாது.”

-அப்படி என்றால் எப்போது கம்யூனிஸ்ட்டாக முடியும் என்பதை லெனின் கூறுகிறார். மார்க்சிய நூல்களில் காணப்படும் முடிவுகளை மட்டும் தெரிந்து கொள்வது மார்க்சியம் ஆகாது, மனிதகுலம் படைத்தளித்திருக்கும் அனைத்து அறிவையும் மார்க்சிய அணுகுமுறையில் அறிந்து கொண்டவரே மார்க்சியர் ஆவார். அப்படிப்பட்டவரே ஒரு நடைமுறை கம்யூனிஸ்ட்டாக முடியும்.

“மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டாக முடியும்.
கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.”

                மனிதன் படைத்துள்ள அறிவுக் கருவூலங்களைப் பெற்று சிந்தனையை வளப்படத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய லெனின் அந்த அறிவை எவ்வாறு கற்க வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

“பள்ளியின் செயற்பாடுகளில் ஒவ்வொரு படியையும், பயிற்சி, கல்வி, போதனை இவற்றில் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களுக்கு எதிராய் உழைப்பாளி மக்கள் அனைவரும் நடத்தும் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாதவாறு அதனுடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கற்றறிய வேண்டும்..”

                இதுகாறும் ஒழுக்கநெறி என்று கூறப்படுவதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இந்த உரையில் லெனின் விளக்கியிருக்கிறார். ஒழுக்க நெறியை நிராகரிப்பவர்கள் என்று முதலாளித்துவ வர்க்கத்தினர் கம்யூனிஸ்டுகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் இதனை லெனின் மறுத்துரைக்கின்றார்.

“..கம்யூனிச அறநெறி என்பதாய் ஒன்று இருக்கிறதா? கம்யூனிச ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நமக்கென ஒரு தனி அறநெறி கிடையாது என்பதாய் அடிக்கடி பேசப்படுகிறது, ஒழுக்கநெறி அனைத்தையுமே நிராகரிப்பவர்கள் என்பதாய்க் கம்யூனிஸ்டுகளாகிய நம்மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சினையைக் குழுப்புவதற்கான – தொழிலாளர், விவசாயிகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான – ஓர் உபாயமே இது.

எந்த பொருளில் நாம் அறநெறியை, ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம்?

முதலாளித்துவ வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் பொருளில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறிக்கு அடிப்படையாக்கிக் கொள்கிறார்கள். இவ்விவகாரம் குறித்துப் பேசுகையில், எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்குப் புறம்பான, வர்க்கத்துக்குப் புறம்பான கருத்தினங்களை அடிப்படையாய்க் கொண்ட எந்த ஒழுக்கநெறியையும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்றுவித்தை, மாய்மாலம், நிலப்பிரபுக்கள், முதலாளிகளது நலன்களை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கான உபாயம் என்கிறோம்.

எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கூறுகிறோம். எங்கள் ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தின் நலன்களில் இருந்துதான் தோன்றுகிறது”

ஒழுக்கநெறியை எவ்வாறு அணுக வேண்டும் என்று லெனின் வழிகாட்டியிருக்கிறாரோ அதன்படியே அனைத்தையும் அணுக வேண்டும்.


Monday 17 April 2017

சந்தையைப் பிடிக்கும் ஏகாதிபத்தியப் போரும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளும்

(முதல் உலகப் போரும் ருஷ்ய போல்ஷிவிக்குகளின் பார்வையும்)

(போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும், போரும் சோஷலிசமும், மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து- என்கிற லெனின் நூல்களில் இருந்து)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளித்துவ உலகம் சில நபர்களிடம் ஏகபோகமாக சுருங்கிய போது ஜெர்மனி தமது இயந்திர தொழில் வளர்ச்சியில் இங்கிலாந்தையும் பிரான்சையும் விட உயர்ந்துவிட்டது. ஜெர்மன் ஏகாதிபத்தியம் இங்கிலாந்திடமும் பிரான்சிடமும் உள்ள காலனிப்பகுதிகளை பறித்துக்கொள்ள முயன்றது. இதே நேரத்தில் ருஷ்ய முதலாளிகளுக்கும் புதிய சந்தைகள் தேவைப்பட்டன. கிழக்கு நாடுகளை சந்தைப்படுத்த நினைத்தது. ஜெர்மனியும் அந்தப் பகுதிகளை தமதாக்கிக்கொள்ள முயற்சித்தது. எனவே இவ்விரண்டு நாடுகளுக்கு இடையே போர் சூழல் ஏற்பட்டது. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சந்தைப் போட்டியின் வெளிப்பாடே இந்தப் போர்.

குறிப்பாக ஜெர்மனியும், இங்கிலாந்தும் தங்களது படைவலிமையை பெரும் அளவுக்கு அதிகப்படுத்தி வைத்திருந்தனர். இந்தப் போர் உலகப் போராக மாறக்கூடியதாக இருந்தது.

ருஷ்யாவின் மீது ஜெர்மன் 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போர் அறிவிப்பைச் செய்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஒருப்பக்கத்திலும் இங்கிலாந்து, பிரான்ஸ், ருஷ்யாவும் மறுபக்கத்தில் அணிவகுத்துக் கொண்டன. அமெரிக்காவும் ஜப்பானும் இதர நாடுகளும் போரில் இறங்கின. இந்தப் போர் ஒர் உலகப் போராக உருப்பெற்றது.

இரண்டாம் அகிலத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் போர் எதிர்ப்புத் தீர்மானங்கள் போடப்பட்டிருந்தன. இதுவரையில் அனைத்து நாடுகளின் கட்சிகளும் இதனை ஏற்றிருந்தன. ஆனால் ஏகாதிபத்தியப்போர் தொடங்கியவுடன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டன. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தமது அரசின் போர்க் கடனுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய அரசின் போர் செயலுக்கு துணைபோனது. பிரான்ஸ், பெல்ஜிய கம்யூனிஸ்டுகளும் இதே நிலையினை எடுத்தனர். இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான கட்சிகள், தங்களது முதலாளித்துவ தாய் நாட்டை காப்பதற்கு தொழிலாளர்களை அழைத்தன. இரண்டாம் அகிலத்தின் தீர்மானங்கள் தோல்வி கண்டன. அகிலம் நீர்த்துப் போயிற்று. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதத்துக்கு துரோகம் செய்து தாய்நாட்டை காப்போம் என்ற முழுக்கத்தோடு முதலாளித்துவ தேசியவெறிக்கு பலியாயினர். சொல் அளவில் கம்யூனிஸ்டுகள் செயலில் தேசியவெறியராகிப் போனார்கள்.

இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமும் இருந்தது. சொந்த நாட்டின் தொழிலாளர்களை சுரண்டிவந்த முதலாளித்துவம், காலனிகளை அமைத்து அங்கே உள்ள தொழிலாளர்களை கடுமையாகச் சுரண்டியது. குறிப்பாக இங்கிலாந்து பூர்ஷ்வாக்கள் தங்களது நாட்டு தொழிலாளர்களை சுரண்டி சேர்த்ததைவிட தங்களது காலனி நாடுகளில் அதிகமாக சுரண்டி லாபம் ஈட்டினர். இவ்வாறு ஈட்டப்பட்ட அதீத லாபத்தில் இருந்து, தங்களது நாட்டுத் தொழிலாளர்களில், நவீனத் தொழில்நுட்பத்தில் மேலடுக்கில் இருக்கின்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அதிகமான ஊதியத்தை வழங்கினர். இதன் மூலம் ஒருவித மேட்டுக்குடி தொழிலாளி (labour aristocracy) பகுதியினரை உருவாக்கினர்.

இந்தச் சலுகை பெற்ற தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளில் நுழைந்தனர். பிறகு இவர்கள் தொழிலாளர் சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவிபெற்றனர். முதலாளித்துவத்தின் செழுமையான காலப்பகுதியில் சட்டவழிப்பட்ட போராட்டத்தில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்தி வந்தமையால் அதற்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டனர். சட்டவழிப்பட்ட முறையில் செயற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அடுத்து புரட்சிகர நடவடிக்கைகளாக விரிவுபடுத்த வேண்டும் என்பதை முழுமையாக மறந்துபோயினர்.

கட்சியின் மேல்மட்டத்தினர் இந்த தொழிற்சங்க, நாடாளுமன்ற போக்கிற்கு ஏற்பவே செயற்பட்டு தாமும் சட்டவழியிலான போராட்டத்தில் கறைந்து போனதால், வர்க்கப் போராட்ட அரசியலை மறுதலித்துவிட்டு வர்க்க சமரசப் போக்கை பின்பற்றினர். இவர்கள் பாட்டாளி வர்க்க புரட்சிகர போராட்ட அரசியலை விட்டுவிட்டு, சட்டவழியாகவே (நாடாளுமன்றம் வாயிலாகவே) சோஷலிச சமூகத்தை அடைந்துவிடலாம் என்று கருதினர். மார்க்சியத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளை மறுதலித்துவிட்டு சந்தர்ப்பவாத கொள்கையைப் பின்பற்றினர்.

இவர்களைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த புறநிலைகள் சந்தர்ப்பவாதத்தை வெகுவாகத் தீவிரப்படுத்திற்று, பூர்ஷ்வா அமைப்பில் அனுமதிக்கப்படும் சட்டவழியிலான வாய்ப்பினை பயன்படுத்துவது என்பதற்கு மாறாக அந்த நிலைக்கு உட்பட்டு அடிபணிவது என்று மாற்றியது, தொழிலாளி வர்க்கத்தின் உயரினத்தையும், அதிகாரக்கும்பல் ஒன்றையும், அதன்மீது நிற்கும் ஒரு மெல்லிய மேலோடாக, பொருக்காக மாற்றியது, வழித்துணையர்களாக பல குட்டிபூர்ஷ்வா “வழித்துணை வழிப்போக்கர்களை” சமூக-ஜனநாயக் கட்சிகளின்பால் ஈர்த்தது”1

ஏகாதிபத்தியத்திடம் சலுகை பெற்ற இவ்வகையினர், போர்க் காலத்திலும் தங்களது சலுகைகள் கிடைத்திட வேண்டும் என்று ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து தாய் நாட்டைக் காப்போம் என்று புரட்சிகர பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகம் புரிந்தனர்.

“முதலாளிகளாக மாறிய இந்தத் தொழிலாளர்கள் அல்லது மேட்டுக்குடி உழைப்பாளர்கள்” தங்களது வாழ்க்கை முறையிலும், ஊதியத்தின் அளவிலும், தங்கள் கண்ணோட்டம் முழுவதிலும் குட்டிமுதலாளித்துவ மனப்பான்மை கொண்ட இவர்கள், இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்கள் ஆவர், தற்காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான சமூகத் தூண்கள் ஆவர். ஏனெனில், அவர்கள்தாம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதலாளித்துவ வர்க்கத்தின் மெய்யான கையாட்களாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் சேவகர்களாக, சீர்திருத்தவாதத்துக்கும் தேசியவெறிக்குமான மெய்யான வாகனங்களாக இருக்கின்றனர். பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், அவர்கள் தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்கின்றனர்,…..” 2

-இதுவே இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாத போக்கிற்கு பெரும் காரணமாக அமைந்தது.

போல்ஷிவிக் கட்சி மட்டுமே ஏகாதிபத்தியப் போரை எதிர்த்து உறுதிகுலையாமல் நின்றது. ஏகாதிபத்தியப் போரின் தன்மையைப் பற்றி லெனின் தொடர்ந்து எழுதினார். மற்றொரு போக்காக நடுநிலைவாதிகள் தோன்றினர். ஜெர்மனியில் காவுத்ஸ்கியின் தலைமையிலும், பிரான்சில் லோங்கேயின் தலைமையிலும், ருஷ்யாவில் டிராட்ஸ்கியின் தலைமையிலும் தங்களது தடுமாற்றத்தை நடுநிலை போக்காகக் கடைப்பிடித்தனர்.

தாய்நாட்டைக் காப்போம் என்ற சந்தர்ப்பவாத முழக்கத்திற்கு எதிராக லெனின் ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக, உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் எதேச்சதிகார அரசுக்கும் எதிராகத் திருப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதுவே தொழிலாளர்களின், விவசாயிகளின், மக்களின் நலன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது.

போர் தொடங்கியதில் இருந்தே தற்போதைய சூழலுக்கு ஏற்ப ஒரு புதிய அகிலத்தை (மூன்றாம் அகிலத்தை) தோற்றுவிக்க வேண்டும் என்று லெனின் திட்டமிட்டிருந்தார். அதற்கான சக்திகளை திரட்டவும் தொடங்கினார்.

1915ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சர்வதேசியவாதிகளின் முதல் மாநாடு ஜிம்மர்வால்ட் என்ற இடத்தில் நடைபெற்றது. போரை எதிர்த்து செயற்படுவதற்கு ஒரு சர்வதேச இயக்கத்தின் முதல்படி என்று லெனின் இதனை கருதினார். இந்த மாநாட்டில் ஜிம்மர்வால்ட் இடதுசாரி குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் போல்ஷிவிக்குகள் மட்டுமே போருக்கு எதிரான முரண்பாடு இல்லாத கொள்கைகளைக் கடைபிடித்தனர். அடுத்த ஆண்டு சுவிட்சர்லாந்தில்  சர்வதேசவாதிகளின் இரண்டாவது மாநாடு கூடியது.

இந்தக் கூட்டத்தின்போது எல்லா நாடுகளிலும் சர்வதேசியவாதிகளின் குழு உருவாகியிருந்தது. இந்தக் கூட்டத்தில் சர்வதேசியவாதிகளுக்கும், சமூக தேசிய வெறியர்களுக்கும் இடையே உள்ள பிளவு முன்பைவிட தெளிவாக வெளிப்பட்டது. மாநாட்டின் முடிவில் விவாதங்களின் அடிப்படையில் ஒர் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஜிம்மர்வால்ட் மாநாட்டினைவிட ஒருபடி முன்னேற்றம் கண்டிருந்தது. அனால், ஜிம்மர்வால்ட் மாநாடு போலவே இந்த மாநாடும் போல்ஷிவிக்குகளின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் இடதுசாரிப் பக்கத்திற்கு வந்துகொண்டிருந்தனர். போரினால் ஏற்பட்ட துன்பங்கள் அவர்களை இடதுசாரி பக்கம் சேர்த்தது.

ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றுதல், தன்னுடைய சொந்த அரசை தோற்கடிக்கச் செய்தல், மூன்றாவது அகிலத்தை அமைத்தல் ஆகியவை போல்ஷிவிக்குகளின் கருத்துக்களாக இருந்தன.

ஏகாதிபத்தியப் போரின் போது லெனின் பல்வேறு கட்டுரைகளில் போல்ஷிவிக்குகளின் பார்வையினை வெளிப்படுத்தும் விதமாக எழுதினார். அதில் குறிப்பிடத்தக்க நூல்கள். போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும், போரும் கட்சியின் கடமைகளும், போரும் சோஷலிசமும், மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து.

இதுபோன்ற கட்டுரைகளில் தற்போதையப் போரை எவ்வாறு சமூக-ஜனநாயகவாதிகள் அணுகுவது என்பதைப் பற்றி எழுதினார். “சமாதானம் நிலவவேண்டும்”, “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும்”. “ஏகாதிபத்தியப் போரில் தங்களுடைய சொந்த நாட்டை அந்தந்த நாட்டு மக்களே தோற்கடிக்கச் செய்ய வேண்டும்”, “பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெறவேண்டும்” என்பதாக இந்தப் படைப்புகளில் கருத்துரைக்கப்பட்டது.

ஏகாதிபத்திய உலகப் போர் தொடர்பாக, போல்ஷிவிக் கட்சியின் அணுகுமுறை பற்றிய ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் ஆவணமாக போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும் என்ற கட்டுரை அமைந்தது. இது இரண்டாம் அகிலத்தின் அனைத்து நாடுகளின் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டது. ருஷ்யாவிலும், வெளிநாடுகளிலும் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தொடக்கமே நடைபெற்றுவரும் ஏகாதிபத்தியப் போர் தொடங்கியதின் காரணத்தையும், அதன் நோக்கங்களையும் தொகுத்தளிக்கிறது.

“அனைத்து நாடுகளின் அரசுகளும் முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேற்றமடைந்த நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆக சமீப கட்டமான ஏகாதிபத்திய கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைதல் மற்றும் மிகவும் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசவம்ச நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும், அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன.

பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிற தேசங்களை அடிமைப்படுத்துதல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்களைச் சூறையாடுதல், ருஷ்யா, ஜெர்மனி, பிரட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்கள் திரளின் கவனத்தைத் திசைதிருப்புதல், தொழிலாளர்கள் ஒற்றுமையைக் குலைத்து, தேசியவாதம் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாகக்குதல், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்த அவர்களது முன்னணிப் படையினை அழித்தொழித்தல்- இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான உட்கிடை முக்கியத்துவம் மற்றும் குறிபொருளும் ஆகும்.” 3

       மேலும் கூறுகிறார், போரிடும் ஒரு பிரிவுக்கு ஜெர்மன் முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்குகிறது, இப்போர் தாயகத்தையும், சுதந்திரத்தையும், நாகரிகத்தையும் பாதுகாப்பதற்கும், ஜாரிசத்தை அழிப்பதற்கும் நடைபெறும் போராக பிரக்கடனப்படுத்துகிறது. மற்றொரு பிரிவுக்கு தலைமைத் தாங்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவர்க்கமும், தமது நாடுகளைப் பாதுகாப்பதற்கும் ஜெர்மன் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கும் போராடுவதாகக் கூறுகிறது. ஆனால் தொழிலாளி வர்க்கத்தையும், பாடுபடும் பெரும்பாலான மக்களையும் ஏமாற்றுவதற்கே இந்தப் போர் நடைபெறுவதாக லெனின் கூறுகிறார். போரின் உண்மையான நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்.

“பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் போராட்டம், ஜெர்மன் காலனிகளைக் கவர்ந்து பற்றுவதையும், அதிக விரைவான பொருளாதார வளாச்சி பெற்றிருந்த அந்தப் போட்டித் தேசத்தை நாசப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.” 4

       ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களைக் கூறிய லெனின், அடுத்து முதலாளித்துவ தேசியவெறியை, வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் எதிர்த்து, சர்வதேசியவாதத்தை பாதுகாப்பது உடனடி கடமையாகும் என்கிறார்.

“தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி அவர்களை ஒருவருக்கொருவர் எதிராகப் போரில் நிறுத்தவும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த முதலாளித்துவ வர்க்கம் எவ்வளவு அதிகக் கடுமையாக முயல்கிறதோ, இந்த உன்னத நோக்கத்திற்காக அது ராணுவச் சட்டத்தையும், ராணுவத் தணிக்கை முறையையும் எவ்வளவு அதிக மிருகத்தனமாக நடைமுறைப்படுத்துகிறதோ அந்தளவுக்கு அதிகமான வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் அதன் வர்க்க ஒருமைப்பாட்டையும் அதன் சர்வதேசியவாதத்தையும் அதன் சோஷலிஸ்டு துணிபுகளையும் எல்லா நாடுகளிலும் உள்ள “தேசபக்த” முதலாளித்துவக் கும்பல்களின் கட்டற்ற தேசியவெறியை எதிர்த்தும் பாதுகாத்துக் கொள்வதைத் தமது மிக அவசரக் கடமையாக கருத வேண்டும்.

வர்க்க உணர்வுடைய தொழிலாளர்கள் இந்த நோக்கத்தைக் கைவிடுவார்களானால் அவர்கள் தமது சோஷலிஸ்டு விருப்பங்களைக் கைவிடுவது ஒரு புறமிருக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான விருப்பங்களைக்கூடத் துறந்தவர்களாவார்கள்.” 5

       இந்தக் கடமையை ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் நிறைவேற்றிட தவறிவிட்டனர் என்பதை லெனின் ஏமாற்ற உணர்வுடன் பதிவு செய்கிறார். அகிலத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சோஷலிசத்திற்குப் பதில் தேசியவாதத்தை கைக்கொண்டனர். தமது சொந்த நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறிக்கு அடிபணிந்து போரை நியாயப்படுத்த முனைந்தனர். அகிலத்தின் தலைவர்கள் சோஷலிசத்திற்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர் என்று கடிந்துகொண்டார். ஒரு விஷயத்தில் அவர் மிகவும் வேதனைப்பட்டார்:-
“அனைத்துப் புரட்சிகரச் செயல்பாட்டையும் தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் அளவுக்கு ஜெர்மன் சமூக-ஜனநாயகம் பலவீனமாக இருந்தது என்று பாவித்துக் கொண்டாலும் கூட அது இந்த தேசியவெறி முகாமில் சேர்ந்திருக்கக் கூடாது” 6

       இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியை ஒட்டி பேசும்போது மிகவும் கோபம் கொப்பளிக்க எழுதியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்கள், சோஷலிசக் குறிக்கோளை நிராகரித்துவிட்டு அதனிடத்தில் முதலாளித்துவ சீர்திருத்தவாதத்தை வைத்தனர், வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து, ஒத்துழைப்பைப் பிரச்சாரம் செய்தனர், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைப்பாளர்களுக்கு தாயகம் என்பதில்லை என்ற அடிப்படையை நிராகரித்தது போன்ற செய்கைகளுக்கு அடிப்படையான தயாரிப்புகளை பலகாலமாக செய்தனர் என்று லெனின் கூறுகிறார். மேலும் சந்தர்ப்பவாதத்தோடு தீர்மானமாக முறித்துக் கொள்ளாமல், சோஷலிசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது என்பதையும் தெளிவாக முன்வைக்கிறார்.

“…முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும், முதலாளித்துவ சட்டவழித்தன்மையையும் அவசியமாகப் பயன்படுத்துவதை ஒரு குருட்டு வழிபாடாக்கியும், நெருக்கடிகள் நிறைந்த காலங்களில் சட்டவழியற்ற வடிவங்களிலான நிறுவனமும் பிரசாரமும் அவசர அவசியம் என்பதை மறந்தும்…. இவற்றை எல்லாம் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படையான தயாரிப்பாக சந்தர்ப்பவாதிகள் நீண்ட காலமாகச் செய்து வந்தார்கள். சந்தர்ப்பவாதத்திற்கு இயல்பான “துணைச் சேர்க்கையாக”- பாட்டாளி வர்க்க அதாவது மார்க்சியக் கருத்துக்கு எதிராக முதலாளித்துவக் கருத்துப் போன்று அதே அளவு பழமைமையான- அராஜக-சிண்டிகலிசப் போக்கையும், தற்போதைய நெருக்கடியின்போது தேசியவெறி முழக்கங்களையும் சற்றும் குறையாத வெட்கக் கேடான சுயமகிழ்வான முறையில் மீண்டும் வற்புறுத்திக் கூறுகின்றனர்.

சந்தர்ப்பவாதத்தோடு தீர்மானமாக முறித்துக் கொள்ளாமல், அதன் தவிர்க்க முடியாத படுதோல்வியை மக்கள்திரளுக்கு விளக்கிக் கூறாமல் இன்றைய கட்டத்தில் சோஷலிசத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாது, தொழிலாளர்களின் உண்மையான சர்வதேசிய ஒற்றுமையை அடையமுடியாது.” 7

வலதுதிரிபின் சந்தர்ப்பவாதம் சோஷலிசப் புரட்சிக்கு எதிராகத்தான் முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியாகிறது. ஏகாதிபத்தியப் போரின் தொடக்கத்தில் ருஷ்யப் புரட்சி ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாகவும், முன்னேறிய நாடுகளில் சோஷலிசப் புரட்சியாக இருக்கும் என்ற முடிவில்தான் லெனின் இருந்தார் என்பதை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது.

“ருஷ்யா மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாலும், அதன் முதலாளித்துவப் புரட்சியை இன்னும் முழுமை செய்யாததாலும், அந்த நாட்டிலுள்ள சமூக-ஜனநாயகவாதிகள் முன் நிலையுறுதியான ஜனநாயக சீர்திருத்தத்திற்கான பின்வரும் மூன்று அடிப்படையான நிலைமைகளைச் சாதனையாக்கும் பணி உள்ளது. ஒரு ஜனநாயகக் குடியரசு (அனைத்து தேசங்களுக்கும் முழுமையான சமத்துவம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடன்), நிலச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், எட்டு மணி நேர வேலை நாள். ஆனால் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் போல் சோஷலிசப் புரட்சி என்ற முழக்கத்தை நாள் நிகழ்ச்சிநிரலில் வைத்துவிட்டது” 8

       அகிலத்தில் சந்தர்ப்பவாதிகளின் வெற்றி அற்பாயுசானது. போர் எந்தளவுக்கு தியாகங்களைத் திணிக்கிறதோ அந்தளவுக்கு சந்தர்ப்பவாதிகள் தொழிலாளர் குறிக்கோளைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்பதை அதிகத் தெளிவாக்கிவிட்டது.

இந்நூலின் இறுதி இவ்வாறு முடிகிறது:-
“அனைத்து நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் தேசியவெறி மற்றும் தேசபக்தியை எதிர்த்த தொழிலாளர் சர்வதேச சகோதரத்துவம் நீடூழி வாழ்க!.

சந்தர்ப்பவாதத்தில் இருந்து விடுபட்ட பாட்டாளி வர்க்க அகிலம் நீடுழி வாழ்க!”9

போரும் சோஷலிசமும் என்ற நூல் ஜிம்மர்வால்ட் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்கு வழங்குவதற்காக ருஷ்ய, ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளில் எழுதப்பட்டது.

பாட்டாளி வர்க்கத்தின் சமாதானத்திற்கும், பூர்ஷ்வா வர்க்கத்தின் சமாதானத்திற்கும் உள்ள வேறுபாட்டை இந்நூலில் லெனின் கூறுகிறார். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு, சோஷலிசம் தோன்றிய பிறகுதான் போர்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற புரிதலின் அடிப்படையில், பூர்ஷ்வா சமாதான ஆர்வலர்களிடம் இருந்து பாட்டாளிகளின் சமாதானம் வேறுபடுவதை சுட்டிக்காட்டியுள்ளார். அதே போல் நியாயமான போர், அநியாயமான போர் என்று வகைப்படுத்துகிறது.

ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போர், நிலவுடைமையாளர்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான பண்ணை அடிமைகள் நடத்தும் போர், பூர்ஷ்வாக்களை எதிர்த்து சுரண்டலுக்கு ஆளான பாட்டாளிகள் நடத்தும் போர் முற்போக்கானது நியாயமானது. அடுத்த நாட்டை ஆக்ரமிக்கும் போர், தன்னாட்டு மக்கள் மீது தொடுக்கும் போர் போன்றவை அநியாயமானவை என்று வகைப்படுத்திவிட்டு இன்றைய போரை ஓர் ஏகாதிபத்தியப் போர் என்று லெனின் நிலைநிறுத்துகிறார்.

“இன்றையப் போர் ஒர் ஏகாபத்தியப் போர் என்பது பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
..
நிலப்பிரபுத்துவதை எதிர்த்த முதலாளித்துவம் தேசங்களின் விடுதலைக்கானதாக இருந்தது, இன்றைய முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக, தேசங்களை பெரிதும் ஒடுக்குகின்றவையாக மாறிவிட்டது. முன்பு முற்போக்காக இருந்த முதலாளித்துவம் பிற்போக்காக மாறிவிட்டது. மனிதகுலம் சோஷலிசத்தை ஏற்று அனுசரிக்க வேண்டும்….

…முதலாளித்துவத்தை செயற்கை முறையில் காத்து நீடிப்பதற்கென “பேரரசுகளிடையில்” ஆண்டாண்டுகளாக ஆயுதமேந்தி நடத்தப்படும் போராட்டத்தை அனுபவிக்க வேண்டும். இவ்விரண்டினில் ஒன்று தான் வழி என்ற வகையில் மனிதகுலத்தை நிறுத்தி வைத்துள்ள அளவுக்கு அதன் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி அடைந்துள்ளது.” 10

-சோஷலிசத்திற்கான புறநிலையின் வளர்ச்சியை லெனின் இங்கே தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்பு (1912ஆம் ஆண்டில்) போடப்பட்ட பாஸில் அறிக்கையை லெனின் நினைவுறுத்துகிறார்:-“ஒரு போர் ஏற்படுமானால், அந்தப் போர் விளைவிக்கக் கூடிய “பொருளாதார அரசியல் நெருக்கடியை”ப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். “முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்துவதற்கு”ப் பயன்படுத்த வேண்டும். அதாவது போர்க்காலத்தில் அரசுக்கு ஏற்படும் இன்னல்களையும், இடர்ப்பாடுகளையும் பொதுமக்களின் சினத்தையும் சோலிசப் புரட்சியாக்க வேண்டும்”11

ஏகாதிபத்தியப் போர் தொடங்கியபோது இந்தப் புரட்சிகர செயற்தந்திரத்திரத்திற்கு துரோகம் விளைவித்து, தாய் நாட்டைக் காப்போம் என்று சமூக-ஜனநாயகத்தினரில் பெரும்பான்மையினர் சந்தர்ப்பவாதியாயினர்.
      
       போல்ஷிவிக்கு கட்சியில் இந்த சந்தர்ப்பவாதப் போக்கு தலைதூக்காததற்கு, வெகுகாலத்திற்கு முன்பே இதுபோன்ற சந்தர்ப்பவாதிகளை முறித்துக் கொண்டதே காரணம் என்று லெனின் கூறுகிறார்.

தற்போதைய போரில் ஜார் அரசையும், முதலாளித்துவ வர்க்கத்தையும் எதிர்த்தவர்கள் பல கொடுமைகளுக்கு ஆளானார்கள். போர் தொடங்கிய போது பிராவ்தா பத்திரிகை நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டூமாவில் போல்ஷிவிக் உறுப்பினர்களின் புரட்சிகர செயற்பாட்டால் அவர்கள் சைபீரிய சிறைகுடியிருப்புக்கு அனுப்பினர். பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் பூர்ஷ்வா நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடத்துகொள்ள வேண்டும் என்பதற்கு சான்றாக போல்ஷிவிக்குகளினுடைய டூமா உறுப்பினர்களின் நடடிக்கை இருந்தது. கட்சி கமிட்டிகள் நசுக்கப்பட்டன. மேலை நாட்டு நாடாளுமன்ற சமூக-ஜனநாயக உறுப்பினர்கள் பூர்ஷ்வாக தேசியவாதத்தை ஆதரித்து சந்தர்ப்பவாதிகளாக மாறிப்போயினர். போல்ஷிவிக்குகளின் டூமா உறுப்பினர்கள் பாட்டாளி வர்க்க குறிக்கோளுக்காக பாடுபட்டு சிறை சென்றனர்.

சர்வதேச சிந்தனையைப் பேசுகிற பாட்டாளி வர்க்கத்துக்கும், அதன் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவர்களது நாட்டின் மீது பற்றுக்கிடையாது என்றும் அதனால் தான், இந்த போரில் தமது தாய்நாட்டிற்கு எதிராக போராட அழைக்கின்றனர் என்று கூறியவர்களுக்கு லெனின் சரியான பதில் அளித்தார்.

“வர்க்க உணர்வுகொண்ட மாருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தவர்களாகிய நமக்கு தேசியப் பெருமித உணர்ச்சி அந்நியமானதா, என்ன? இல்லவே இல்லை! நமது மொழியையும் நமது நாட்டையும் நேசிப்பவர்கள் நாம், இந்நாட்டின் உழைப்பாளிப் பெருந்திரளினரை (அதாவது இந்நாட்டு மக்களில் பத்தில் ஒன்பது பங்கானோரை) ஜனநாயக, சோஷலிச உணர்வு பெறும் நிலைக்கு உயர்த்துவதற்காக இயன்றது அனைத்தும் செய்துவருகிறவர்கள் நாம்.

ஜாரின் கொலைவெறியர்களாலும் பிரபுக்களாலும் முதலாளிகளாலும் நமது இன்னலும் தாயகத்துக்கு இழைக்கப்படும் அட்டூழியங்களையும் ஒடுக்குமுறையையும் இழிவையும் கண்டும் உணர்ந்தும் நெஞ்சு பொறுக்காது நாம் வேதனைப்படுகிறோம். இந்த அட்டூழியங்களுக்கு நம்மிடம் இருந்து, மாருஷ்யர்களிடம் இருந்து காட்டப்படும் எதிர்ப்பைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்.”12

              ஆதிக்க தேசியவெறிக்கும், சர்வதேசியவாதிகளின் தேசிய பெருமிதத்துக்கும் உள்ள வேறுபாட்டை இங்கே புரிந்து கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசியம் கிடையாது என்பதை குருட்டுத்தனமாக புரிந்து கொண்டவர்களுக்கு லெனின் பதிலளித்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் உழைக்கும் மக்களுக்கு என்றுஒரு தேசமும் கிடையாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சரியே. ஆனால் அதில் சொல்லப்பட்டிருப்பது இதுமட்டுமே அல்ல. தேசிய அரசுகள் உருவாக்கப்படுகின்ற பொழுது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேஷமானதாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் கருதுகோளை (உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் கிடையாது) மட்டும் எடுத்துக் கொள்வதும் இரண்டாவது கருதுகோளோடு (தேசிய வழியில் தொழிலாளர்கள் ஒரே வர்க்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றார்கள்- ஆனால் இது பூர்ஷ்வாக்களைப் போன்ற அர்த்தத்தில் அல்ல) அதற்குள்ள தொடர்பை மறந்து விடுவதும் மிகப் பெரிய தவறாகும்” 13

       மேலும் லெனின் பாட்டாளி வார்க்கத்தின் சர்வதேசியவாதத்தின் தன்மையை படம்பிடித்துக் காட்டுகிறார்.

“ஒரே ஒரு வகையான மெய்யான சர்வதேசியவாதமே உள்ளது. அதாவது, தமது சொந்த நாட்டில் ஒரு புரட்சிகர இயக்கத்தின், ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் முன்னேற்றத்திற்காக முழுமனதுடன் பாடுபடுவது மற்றும் விதிவிலக்கின்றி ஒவ்வொரு நாட்டிலும் (பரப்புரை, அனுதாபம், பொருளாதா உதவி மூலம்) இந்தப் போராட்டத்தை, இந்தக் கொள்கையை மட்டுமே ஆதரிப்பது.” 14

       இதற்கு மேல் விளக்கம் தேவைப்படாது.

       பாட்டாளி வர்க்கப் பார்வை சர்வதேசியத் தன்மையானது என்பதை மட்டு கூறிக்கொண்டு, தேசியஇனபிரச்சினையில் பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள், லெனின் இந்தக் கட்டுரையில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியிருப்பதையும் படித்தறிய வேண்டும்.

“பிரிந்து போகும் உரிமையின் நடைமுறை நிறைவேற்றத்துடன் இணைக்கப் படாத, பிரதேசக் கைப்பற்றல்களைக் கைவிடுவது பற்றிய எல்லா அறிவிப்புகளும் பிரகடனங்களும் அறிக்கைகளும் மக்கள் மீது முதலாளித்துவத் தன்மையான ஏய்ப்புகளே அல்லது குட்டிமுதலாளித்துவத் தன்மையான வெற்று விருப்பங்களே.

பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது, அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது, ஆனால் இந்த நோக்கத்தை வன்முறை மூலம் அடைவதற்கு அது விரும்பவில்லை மாறாக, அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒன்றியம் மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது.”15

பயன்படுத்திய நூல்கள்

1-போரும் சோஷலிசமும்- பக்கம் 30-31
2-ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்- தேர்வு நூல்கள் - 4 பக்கம்- 48
3-போரும் ருஷ்ய சமூக-ஜனநாயகமும் - தேர்வு நூல்கள் 4 பக்கம்- 7
4- மேற்கண்ட நூல் - பக்கம்- 9
5- மேற்கண்ட நூல் - பக்கம்- 10
6- மேற்கண்ட நூல் - பக்கம்- 12-13
7- மேற்கண்ட நூல் - பக்கம்- 15
8- மேற்கண்ட நூல் - பக்கம்- 17
9- மேற்கண்ட நூல் - பக்கம்- 18-19
10-போரும் சோஷலிசமும்- பக்கம்- 16,17-18
11-போரும் சோஷலிசமும்- பக்கம்-  27
12-மாருஷ்யர்களது தேசியப் பெருமித உணர்ச்சி குறித்து - தேர்வு நூல்கள் 4 பக்கம்- 21-22
13-இனேஸ்ஸா ஆர்மான்டுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து- 1916 நவம்பர் 30
 பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் -பக்கம் 240)
14-நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் தேர்வு நூல்கள் 5 - பக்கம் 74

15- மேற்கண்ட நூல் - பக்கம் 70