Friday 12 April 2024

MELS STUDY CIRCLE - என்பதில் "பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்" என்கிற எனது நூலைப் பற்றிய அறிமுகம்

 

அண்மையில் நான் எழுதி வெளிவந்த நூல் “பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்”. இந்த நூலை தமிழ் மரபு அறக்கட்டளை என்கிற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலில் இந்த நூலின் வடிவத்தைப் பார்ப்போம்.

இந்த நூல் மிகவும் சுருக்கமானதுதான், சுமார் 150 பங்களைக் கொண்ட சிறு நூல்தான் இது.

இந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது, முதல் பகுதியில் நான்கு அத்தியாயங்களும் இரண்டாம் பகுதி ஒரு அத்தியாயமும் காணப்படுகிறது.

முதல் பகுதியில் உள்ள நான்கு அத்தியாயங்களின் தலைப்பு என்னவென்று பார்ப்போம்.

1) ஆதிசங்கரரின் வாழ்க்கை,

2) ஆதிசங்கரரின் அத்வைதம்,

3) இயக்கவியல் பொருள்முதல்வாதம்,

4) பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்.

இந்த முதல் பகுதி இந்த நூலின் பாதியை எடுத்துக் கொண்டுள்ளது, மீதம் உள்ளது இரண்டாம் பகுதி. இந்த இரண்டாம் பகுதியில் ஆதிசங்கரரின் படைப்புகளில் காணப்படும் அத்வைதக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் அத்வைதமாக என்ன கூறப்பட்டுள்ளதோ, அதற்கான ஆதாரமாக இரண்டாம் பகுதி காணப்படுகிறது.

இன்றைய அறிமுகத்தில் நாம் அத்வைதத்தையும், பொருள்முதல்வாதப் பார்வையில் அத்வைதத்தின் மீதான விமர்சனத்தையும் பார்க்கப்போகிறோம்.

காலம்

ஆதிசங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இன்றைய கேரளாவில் உள்ள காலடி என்னும் ஊரில் பிறந்ததார். இந்த எட்டாம் நூற்றாண்டு என்பதையே ஆய்வாளர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்கின்றனர். காஞ்சி மடம் போன்ற சில மடங்கள் ஆதிசங்கரர் கி.மு 5ஆம் நூற்றாண்டில் பிறந்தாகக் கூறுகின்றனர். ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை.

சிருங்கேரி சங்கர மடம்தான் ஆதிசங்கரரின் காலத்தை கிபி 8 எட்டாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளது. ஆதிசங்கரர் சிருங்கேரி மடத்தை நிறுவிய போது இருந்த மடத் தலைவரையும் அவரை தொடர்ந்து வந்த தலைவர்களையும் கணக்கில் கொண்டு, ஆதிசங்கரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்று முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு மிகவும் பிற்காலத்தில்தான் எழுதப்பட்டது. சங்கர விஜயம் என்ற பெயரில் பல நூல்கள் இருக்கிறது, அனைத்தும் பிற்காலத்தில் தோன்றியது. அதனால் சங்கர விஜயத்தை பெரியதாக எடுத்துக் கொள்ள முடியாது.

படைப்புகள்

ஆதிசங்கரர் பல நூல்களை எழுதியிருக்கிறார், அதை மூன்று வகையாக பிரிக்கலாம் 1)தோத்திரப் பாடல்கள், 2)வேதாந்தப் பிரகரணங்கள், 3)பாஷியங்கள், தோத்திரப் பாடல்கள் என்பது கடவுள்களைப் பற்றி பாடியது ஆகும். எந்த கடவுளை எடுத்துக் கொண்டாலும் அந்த கடவுளே முழுமுதற்கடவுளாக கொண்டு அவரை சிறப்பித்து பாடப்பட்டுள்ளது. சிவன், விஷ்ணு, முருகள், அம்பாள் என்று யாரைப் பாடினாலும் அவர்களே முழுமுதற்கடளவுளாகக் கொண்டு அதாவது பிரம்மமாகக் கொண்டு பாடியிருப்பார். இரண்டாவது வேதாந்தப் பிரகரணங்கள், இது தத்துவ நூல்களாகும், பிரகரணத்தில் தமது தத்துவங்களை எழுதி இருக்கிறார். மூன்றாவது பாஷியங்கள், பாஷியம் என்றால் விரிவுரை. உபநிடதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றுக்கு விரிவுரை எழுதி உள்ளார்.

ஆதிசங்கரர் அத்வைதத்தை விளக்குவதற்கு சில நூல்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், மூன்று நூல்களை சுட்டிக்காட்டலாம். 1) தத்துவ போதம், 2) ஆத்ம போதம், 3) விவேக சூடாமணி.

விவேக சூடாமணி என்கிற ஒரே நூலை முழுதும் படித்தால்கூட ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். தத்துவபோதமும், ஆத்மபோதமும் சிறிய நூல் ஆனால் விவேகசூடாமணி சற்று பெரிய நூல் அதில் 580 பாடல்களைக் கொண்டுள்ளது.

தத்துவம்

தத்துவம் பற்றிய அடிப்படைக் கருத்துக்கள் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியும் என்றாலும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

தத்துவம் இரண்டு போக்குகளைக் கொண்டுள்ளது.

பிரபஞ்சம் படைக்கப்பட்டதா? அல்லது என்றும் உள்ளதா? என்கிற தத்துவத்தின் கேள்விக்கு அளிக்கப்படும் பதில் தத்துவத்தை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கிறது.

பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்று கூறுபவர்கள் கருத்துமுதல்வாதத் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள், பிரபஞ்சம் படைக்கப்படவில்லை அது என்றும் உள்ளது, மாறிக் கொண்டே இருக்கிறது, என்று கூறுபவர்கள் பொருள்முதல்வாதத் தத்துவத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரண்டு பிரிவுக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பிரிவோ, நடு பாதையோ எதுவும் கிடையாது, எந்த நாட்டு தத்துவங்களாக இருந்தாலும் எத்தனைத் தத்துவங்கள் இருந்தாலும் அனைத்தையும் இந்த இரண்டு பிரிவுக்குள் அடங்கிவிடும்.

கருத்துமுதல்வாதமும் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது, 1) புறநிலை கருத்துமுதல்வாதம் 2) அகநிலை கருத்துமுதல்வாதம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்றால் அந்தத் தத்துவம் கருத்துமுதல்வாதம் என்று கூறினோம் அல்லவா? அந்த படைக்கும் சக்தி உலகுக்கு அப்பால் இருக்கிறது என்று விளக்கம் கொடுப்பது புறநிலை கருத்துமுதல்வாதம்.

படைப்பு அகத்தின் பிரதிபலிப்பு என்று கூறுபவர்கள் அகநிலை கருத்துமுதல்வாதிகள்.

அத்வைதம் என்கிற தத்துவம் அகநிலை கருத்துமுதல்வாதப் பிரிவைச் சேர்ந்தது.

மனிதனர்களின் மனதைச் சார்ந்தே உலகம் இருப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:-

"உலகம் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன பொருள்? இந்த உலகம் இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதன் பொருள் என்ன? உலகத்திற்குத் தனியான இருப்பு இல்லை என்பதுதான். என் மனம். உங்கள் மனம் என்று எல்லோருடைய மனங்களையும் சார்ந்து தான் உலகம் இருக்கிறது."                                 (ஞான தீபம் 3 - பக்கம் 232)

“பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்”. என்கிற இந்த நூலில் ஆதிசங்கரரின் அத்வைதம்தான் விளக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரருக்கு முன்பே அத்வைதம் இருக்கிறது, உபநிடதக் காலத்திலேயே “தத்துவமசி” என்கிற அத்வைதக் கருத்துக்கள் காணப்படுகிறது. இந்த அடிப்படைக்களைக் கொண்டு அத்வைதத்தை தத்துவ நிறுவனமாக- அமைப்பாக நிலைநிறுத்தியவர் ஆதிசங்கரர்.

முதலில் ஆதிசங்கரரின் அத்வைதத்தைப் பார்த்துவிட்டு, அடுத்து பொருள்முதல்வாதப் பார்வையில் அத்வைதத்தை எப்படி புரிந்து கொள்வது என்பதைப் பார்ப்போம்.

முக்தி

அத்வைதத் தத்துவத்தின் இறுதிக் குறிக்கோள் முக்தி ஆகும். முக்தி என்றால் விடுதலை. எதிலிருந்து விடுதலை சம்சாரத்தில் இருந்து விடுதலை.

சம்சாரத்தில் இருந்து விடுதலை என்று அத்வைதம் கூறுவதினால், சம்சாரத்தை அவர்கள் என்ன பொருளில் விளக்குகிறார்கள் என்பதை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சம்சாரம் என்றால் சுருக்கமாக இல்வாழ்க்கை என்று கூறலாம், இதையே விரிந்த பொருளில் கூற வேண்டும் என்றால் உலக வாழ்க்கை.

இந்த உலகில் இரட்டைத் தன்மையை தவிர்க்க முடியாது.

இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது. குளிர்ச்சி-வெப்பம், விருப்பு-வெறுப்பு போன்ற இரட்டைத் தன்மைகளை இந்த உலகில் தவிர்க்க முடியாது. பல்வேறு இரட்டைத் தன்மைகளைக் கொண்ட பன்மையானதுதான் இந்த உலகம்.

மறுபிறப்பு

நல்லது செய்தால் நல்லது நடக்கும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்பதை பொதுவாக அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்கிறது.

இந்த உலகில் நல்லவர்களில் பலர் கஷ்டப்படுவதையும், தீயவர்களில் பலர் மகிழ்ச்சியாக வாழ்வதையும் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணமாக அத்வைதம் மறுபிறப்புக் கொள்கையைக் கூறுகிறது.

சம்சார சாகரம்

சம்சாரத்தை, சம்சார சாகரம் என்று கூறப்படுகிறது. பிறப்பின் தொடர்ச்சியின் காரணமாக சம்சாரத்தை சாகரம், அதாவது கடல் என்று கூறப்படுகிறது. சென்ற பிறவியின் பாவ-புன்னியங்கள் இந்தப் பிறவிக்குக் காரணமாகிறது, இந்த பிறவியில் செய்கிற பாவ-புன்னிய செயல்கள் அடுத்தப் பிறவிக்குக் காரணமாகிறது. இப்படி பிறவிகள் தொடர்வது பெரும் கடல் போல இருப்பதினால் சம்சாரத்தை சம்சார சாகரம்- சம்கார கடல் என்று கூறப்படுகிறது.

போன பிறவியில் நன்மை செய்வதர்கள் இந்த பிறவியில் தீயவர்களாக இருந்தாலும் மகிழ்ச்சி அடைகிறார்கள். நல்லவர்கள் இந்த உலகில் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அவர்கள் சென்ற பிறவில் பாவம் செய்தவராக இருப்பார்கள் என்பது மறுபிறப்பு கொள்கை கூறுகிறது.

எப்படிப் பார்த்தாலும் இந்த உலகம் துன்பமயமானது. இப்படிப்பட்ட உலகம் உண்மையானது இல்லை. மாயை என்கிறது அத்வைதம். மாயை என்றால் இல்லை என்ற பொருளில் அத்வைதம் கூறவில்லை.

இருக்கிறது என்று சொல்லலாம் அதே நேரத்தில் இல்லை என்றும் சொல்ல்லாம் இதுதான் மாயை.

கனவு-நனவு

கனவு என்பதை நாம் பொய் என்று கூறுவோம். அத்வைதம் கனவை ஒரு வகையில் மெய் என்று கூறுகிறது.

ஒரு மனிதனின் கனவில் சிங்கம் அவனைத் துரத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். கனவில் அவன் ஓடிக் கொண்டே இருக்கிறான். முழிப்பு வந்துவிடுகிறது, அப்போதும் அவனுக்கு பதற்றம் குறையவில்லை, தாகம் எடுக்கிறது, தண்ணீர் குடித்தப் பிறகே தாகம் அடங்குகிறது. இதைப் பார்க்கும் போது கனவு ஒரு வகையில் மெய்தான். இத்தோடு அத்வைதம் நிறுதிக் கொள்ளவில்லை.

 கனவு எப்படி மெய்யோ, அதே போல இந்த நனவு வாழ்க்கை பொய் என்கிறது அத்வைதம். அதனால்தான் இந்த நனவு உலகத்தை அத்வைதிகள் மாயை என்கின்றனர்.

இந்த உலக வாழ்வும் யாரோ ஒருவரின் கனவு வாழ்க்கைதான், இதனை அத்வைதிகள் நீண்ட கனவு என்கின்றனர். இந்த நீண்டக் கனவு வாழ்வில்தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“விருப்பும், வெறுப்பும் நிறைந்துள்ள பிரபஞ்சம் உண்மையில் கனவு போன்றதுதானே? கனவு தோன்றும் காலத்தில் மெய்யெனத் தோற்றமளிக்கிறது, விழித்து எழுந்தவுடன் பொய்யாகிவிடுகிறது”

(ஆத்ம போதம் - 6)

      இந்த ஆத்ம போதம் பாடலுக்கு Dr.V.S.நரசிம்மன் எழுதிய விளக்க உரையில் கனவும் நனவும் ஒன்று என்பதை தெளிவுபடுத்துகிறார்.

“'நனவு கனவு இரண்டும் சமானமானவை. நனவு இல்லாதபோது கனவு தோன்றுகிறது. அதில் பிரபஞ்சம், காலம், தேசம், காரண-காரியம் அதனுடன் இவற்றை யெல்லாம் 'தனது' என்று ஏற்கும் அஹங்காரம் என  நனவுலகில் காண்பன அனைத்தும் உள்ளன. எனவே கனவைப் போன்று நனவும் நிரந்தரமன்று; இதுவும் கனவு போன்றதுதான்' என்று சுலோகம் உரைக்கின்றது.”

அப்படி என்றால் கனவு-நனவு அல்லாத மெய் என்பது எது? என்று கேட்டால் அது பிரம்மம் என்கின்றனர் அத்வைதிகள்.

பிரம்மம் சத்தியம்  உலகம் மாயை என்பதே அத்வைததின் அடிப்படைக் கொள்கை.

மாறும் தன்மை உடைய இந்த உலகில் உள்ள பொருட்களினால் எந்த இன்பமும் கிடைக்காது. மாறாத நிலையில் உள்ள பிரம்ம இன்பமயமானது, பிரம்மம் சத்சித் ஆனந்தம், அதாவது இயல்பிலேயே ஆனந்தமயமானது. பிரம்மத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதுவது அறியாமை, மாயையை உண்மை என்று கருதுவதினால் உண்மையான பிரம்மம் அறியாது போகிறது என்கிறது அத்வைதம்.

மாறிக் கொண்டிருக்கும் அனைத்தும் மாயை, மாறாதது பிரமம் மட்டுமே.

பிரம்மம் நித்தியமானது பிரபஞ்சம் அநித்தியமானது. நித்தியம் என்றால் நிலையானது, அநித்தியம் என்றால் நிலையற்றது. இந்த நிலையற்ற உலகிப் பொருட்களினால் ஏற்படும் இன்பம் நிலையற்றது, நிலையான பொருளான பிரம்ம நிலையில் இருப்பதே நிலைத்த இன்பம்.

நித்திய, அநித்திய விவேகம்? நித்திய, அநித்திய ஆராய்ச்சி, அல்லது விசாரணை செய்து வருகிற முடிவுதான் நித்திய, அநித்திய அறிவு.

நித்திய என்றால் நிலையானது அநித்திய என்றால் நிலையற்றது. எது நிலையானது? எது நிலையற்றது? என்பதை அறிவதே முக்கியமானதாக அத்வைதம் கருதுகிறது.

இந்த நித்தியம், அநித்தியம் என்பதை ஆத்மா, ஆநாத்மா என்றும் அத்வைதிகள் கூறுவர். பிரம்மம் என்கிற பரமாத்மா நிலையானது, ஆத்மாவல்லாத உலகப் பொருட்கள் நிலையற்றது.

ஆத்மாவல்லாத, இந்த நிலையற்ற உலகப் பொருட்களின் தொடர்பால்தான் சம்பார பந்தம் ஏற்படுகிறது,

உலகில் காணப்படும் ஆத்மாவல்லாத நிலையற்ற வெளிப் பொருட்களின் மீதுள்ள ஆசையே சம்சார பந்தத்திற்குக் காரணம்.

இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால், இதுவரை சேர்த்து வைத்த வினைகளை போக்க வேண்டும். இதற்கு பிறப்பால் விதிக்கப்பட்ட கர்மங்களை பலன் எதிர்பார்க்காமல் செய்தால் கர்மங்கள் தொடராது என்கிறது அத்வைதம்.

பலனை எதிர்பார்க்காமல் செய்கின்ற கர்மத்தினால்தான், சேர்த்து வைத்துள்ள கர்மங்கள் அழிந்து முக்தி அடைய முடியும். 

முக்திக்கு வழியாக அத்வைதம் கூறுவதை பார்ப்போம்

வெளியுலகை ஒதுக்கியபின் மனதிற்குத் தெளிவு ஏற்படுகிறது. மனத்தெளிவு ஏற்பட்டால் பரமாத்ம தரிசனம் கிட்டுகிறது அவ்வாறு ஏற்பட்டதும் பிறவித்தளை அறுந்துவிடுகிறது. இவ்வாறு வெளியுலகை ஒதுக்குவது முக்திக்கு வழியாகிறது.”

(விவேக சூடாமணி 336)

இதுவே அத்வைதத்தின் சாரம் ஆகும்.

      இங்கே எங்கெல்ஸ் மரணமற்ற ஆத்மாவைப் பற்றிய ஆன்மிகவாதிகளின் சிந்தனை அன்றைய சமூகத்தில் ஓர் ஆறுதலுக்காக உருவாகவில்லை, எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்ற முடிவினால், தலைவிதியாக கருதப்பட்டதை நினைவு கூறலாம். 

“மிகப் பழங்காலம் தொட்டே, மனிதர்கள் தங்கள் சொந்த உடல்களின் கட்டமைப்பைப் பற்றி இன்னும் எதுவுமே அறிந்திராத நிலையில், கனவுத் தோற்றங்களின் காரணங்கள் புரியாத காரணத்தால், தங்களின் சிந்தனையும் புலனுணர்வும் தங்கள் உடம்பின் செயல்பாடுகள் அல்ல என்றும் உடம்பில் தங்கியிருந்து மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறுகிற ஒரு தனிவேறான ஆன்மாவின் செயல்கள் என்றும் நம்பத் தொடங்கினர். அன்றுதொட்டு, மனிதர்கள் இந்த ஆன்மாவுக்கும் வெளியுலகுக்கும் இடையே உள்ள உறவு பற்றிச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். மரணத்தின்போது உடம்பைவிட்டு வெளியேறி ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது எனில் அதற்கென ஒரு தனிவேறான மரணத்தைக் கண்டறிய வேண்டிய அவசியம் நேரவில்லை. இவ்வாறாக ஆன்மாவின் அழியாத் தன்மை குறித்த கருத்து உருவாயிற்று. வளர்ச்சியின் அன்றைய கட்டத்தில் இக்கருத்து ஓர் ஆறுதலாக உருவாகவில்லை, எதிர்த்துப் போராடுவதால் பயனில்லை என்று அமைந்த தலைவிதியாகவே உருவாகியது..”

(லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்)

இந்த அத்வைதத்தை கம்யூனிஸ்டுகள் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொள்வதற்கான அணுகுமுறையை மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் கொடுத்துள்ளது.

இந்த உலக வாழ்க்கையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்குக் காரணத்தை, அறியாததால், அத்வைதம் உலக வாழ்வை வெறுத்து முக்திக்கு அழைப்பு விடுக்கிறது.

உலகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்குக் காரணத்தை அறியாததால், அத்வைதத்தால் இதற்கான தீர்வை வைக்க முடியாமல் இருக்கிறது. சமூகத்தை மாற்ற முடியாது என்பதே அத்வைதிகளின் கண்ணோட்டமாக இருக்கிறது.

இதை சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள் கூறுகிறார்:-

“உலகத்தை நம்மால் மாற்ற முடியாது. உலகம் தானாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில் ஒவ்வொருவனும் அவனவனுக்குப் பொருத்தமான வழியில் சென்று கொண்டிருக்க வேண்டும். உலகத்தில் ஓரளவு பற்று வைத்திரப்பவனை நோக்கி வேதம், “நீ கர்மாவைச் சரிவர செய்து கொண்டுவா! உலகத்தையும் பார்த்துக்கொண்டுவா” என்று கூறுகிறது.”

(முத்தி நெறி-பக்-113)

இந்த ஜகத்குரு என்ன சொல்கிறார் என்றால், உலகத்தை நம்மால் மாற்ற முடியாது, அதனால் அவனவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தினை தொடர்ந்து செய்ய வேண்டும். இதையே அத்வைதம் விரும்புகிறது.

அத்வைதத்துக்கு இறுதிக் குறிக்கோள் முக்தி என்பதாகக் கூறப்படுகிறது. முக்திதான் நோக்கம் என்றால், உலகை வெறுத்து, உடனடியாக முக்திக்கான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அத்வைதம் அப்படி செய்யவில்லை.

முக்தி அடைவதற்கு சமூகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே அத்வைதத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்தில்தான் அத்வைதத்தின் வர்க்க சார்பை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

சமூகத்தில் காணப்படும் துன்பங்களுக்குத் இங்கே தீர்வில்லை என்று கூறுகிறது அத்வைதம். இப்படிக் கூறுவதின் மூலம், இருக்கும் சமூகத்தை அப்படியே ஏற்கும்படி உழைக்கும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. ஏற்றத்தாழ்வான நிலைமையை எதிர்த்துப் பயனில்லை என்று கூறுவதின் மூலம் இருக்கும் சுரண்டல் சமூகத்தை அப்படியே ஏற்கும்படி செய்கிறது.

இந்தத் தத்துவத்தின் போக்கு சுரண்டும் வர்க்கத்துக்கு சாதகமாக இருக்கிறது.

உழைக்கும் வர்க்கத்தின் தத்துவமான, இயக்கவியல் பொருள்முதல்வாதம் சமூகப் பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளியவில்லை. அதற்கான காரணத்தை கண்டிபிடித்துள்ளது, அதுதான் சொத்துடைமை.

சொத்துடைமையின் அடிப்படையினால் ஏற்படுகிற உற்பத்தியின் விளை பொருட்கள், சொத்துடைமையின் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகிறது.

சொத்துடைமையின் உற்பத்தி முறையினால்தான் வர்க்க வேறுபாடு காணப்படுகிறது. இந்த வர்க்க வேறுபாடு ஒழிய வேண்டுமானால், தனிச்சொத்துடைமை ஒழிய வேண்டும். தனிச்சொத்து ஒழிக்காதவரை வர்க்க வேறுபாட்டை ஒழிக்க முடியாது.

இதுவரை நாம் பார்த்ததை தொகுத்துப் பார்ப்போம்.

அத்வைதத்தால் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணத்தை அறிய முடியாததால், அது முக்திக்கு அழைப்பு விடுக்கிறது.

வர்க்க வேறுபாட்டுக்குக் காரணத்தை சொத்துடைமையின் அடிப்படையில் விளக்கும் பொருள்முதல்வாதம் உழைப்பாளர்களை சொத்துடைமையை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த கருத்தின் அடிப்படையில் தான் விளக்கத்துடனும், ஆதாரத்துடனும், “பொருள்முதல்வாதப் பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்”. என்கிற நூல் எழுதப்பட்டுள்ளது.