Monday 26 April 2021

1) லெனின் எழுதிய “சோஷலிசமும் மதமும்” என்ற கட்டுரையின் சுருக்கமும் சாரமும்

 

(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

29 வது வார வகுப்பு - 24-04-2021) வகுப்பு)

   “இயக்கவியல் பொருள்முதல்வாதம்”, “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்று தத்துவம் பற்றித் தனித்த நூல்களாக மார்க்சிய மூலவர்களால் எழுதவில்லை. அதை அவர்களின் பல நூல்களின் முன்னுரையிலும், பின்னுரையிலும், உள்ளுரையிலும் இருப்பதை எடுத்து தொகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் மதத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குப் போதுமான அளவுக்கு நேரடி நூல்கள் இருக்கின்றன. “மதத்தைப் பற்றி” என்ற தலைப்பில் மார்க்ஸ்- எங்கெல்ஸ் எழுதிய தொகுப்பு, அதே தலைப்பில் லெனின் எழுதிய தொகுப்பும் தற்போது கிடைக்கிறது.

அதில் உள்ள சில நூல்களின் தலைப்புகளைப் இப்போது பார்ப்போம். 

மார்க்ஸ் எழுதிய “ஹெகலின் உரிமைத் தத்துவம் பற்றிய விமர்சனத்துக்குப் பங்களிப்பு” என்ற நூலுக்கான முன்னுரை, எங்கெல்ஸ் எழுதிய “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞானச் சோஷலிசமும்” நூலுக்கான முன்னுரை, எங்கெல்ஸ் எழுதிய “தொடக்ககாலக் கிறிஸ்தவத்தின் வரலாறு” லெனின் எழுதிய, “சோஷலிசமும் மதமும்”, “மதத்தின்பால் தொழிலாளர் கட்சியின் மனப்பான்மை”, “போர்குணம் கொண்ட பொருள்முதல்வாதத்தின் முக்கியத்துவம் குறித்து”, என்பது போன்ற பல நூல்கள் இருக்கின்றன. எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலிலும் மதம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

ஆக மதத்தைப் பற்றி மார்க்சியப் பார்வையில் அறிந்து கொள்வதற்கு நமக்கு நிறையக் கட்டுரைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக வகுப்பெடுக்கலாம்.

லெனின் 1905ஆம் ஆண்டு எழுதிய “சோஷலிசமும் மதமும்” என்ற கட்டுரையை இன்றைய வகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய நவீன சமூகமானது, மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையாக உள்ள சுரண்டல் வர்க்கத்தினரால், மிகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

நவீனப் பாட்டாளி வர்க்கத்தைச் சுதந்திரமான தொழிலார்கள் என்று கூறுவது வழக்கம்.

உழைக்கும் கருவிகளில் இருந்து சுதந்திரப் பெற்றார்கள். எந்த முதலாளியிடமும் வேலை கேட்கும் சுதந்திரம் பெற்றுள்ளார்கள். இது போன்ற காரணத்தினால் தான் பாட்டாளிகள் சுதந்திரம் பெற்ற தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது

இப்படிப்பட்ட சுதந்திர தொழிலாளர்களான பாட்டாளிகள், முதலாளிகளுக்காகவே தமது வாழ்நாள் முழுதும் அடிமையாக வேலை செய்கின்றனர். முதலாளிக்கு லாபத்தை ஈட்டித் தருவதற்கு உரிய, “உரிமை” பெற்ற அடிமைகளே பாட்டாளிகளாவர்.

இந்த நவீன உழைக்கும் அடிமைகள் உயிர் வாழ்வதற்கும், முதலாளிக்கு லாபத்தை ஈட்டித் தருவதற்கும், முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், தங்களின் அவசியமான வாழ்கைச் சாதனங்களைப் பெறுவதற்கும் மட்டுமே “உரிமை” பெற்றவர்களாவர். இது முதலாளித்துவ அடிமை சமூகமாகும்.

பொருளாதார வகையில் தொழிலாளர்களை ஒடுக்கப்படுவது, தவிர்க்க முடியால் அனைத்துவித அரசியல் ஒடுக்கு முறைக்கும், சமூகத் தாழ்வு நிலைமைகளுக்கும் ஆளாகிறார்கள். அத்துடன் அறநெறிசார்ந்த வாழ்வு இழிவுபடுத்துவதாகவும், இரண்ட வாழ்வுக்கும் தள்ளப்படுகிறார்கள்.

தொழிலாளர்கள் பொருளாதார விடுதலைக்காகப் போராடி சில நேரங்களில் கூடுதலாகவோ-குறைதலாகவோ அரசியல் சுதந்திரம் பெற்றுவிடலாம். அந்தச் சுதந்திரம் எந்தளவுக்குப் பெற்றாலும் ஏழ்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும், ஒடுக்குமுறையும் தடுத்திடமுடியாது. மூலதனத்தின் சக்தியை தூக்கி எறியாதவரை உண்மையான விடுதலை உழைப்பவர்களுக்குக் கிடைக்காது.

இப்படிப்பட்ட சுரண்டும் சமூகத்தில் மதமானது அறிவுசார்ந்த ஒடுக்குமுறையின் வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார் லெனின்.

பிறருக்காகவே நிரந்தரமாக உழைப்பதிலும், வறுமையில் உழன்றும், தனிமையில் தவித்து நிற்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை, அனைத்து இடங்களிலும் மதமானது சுமையாக அழுத்துகிறது.

இதுவரை மதத்தின் வர்க்கத் தன்மையை லெனின் கூறினார். இதற்கு அடுத்து மதம் தோன்றியதற்கான காரணத்தைப் பற்றிக் கூறுகிறார்.

மதம் தோன்றுவதற்குக் காரணம் இருக்கிறதா? என்று சிலர் கேள்வி கேட்கலாம். இருக்கிறது என்றே மார்க்சியம் பதிலளிக்கிறது.

மதம் தோன்றுவதற்குக் காரணம் இரண்டை லெனின் கூறுகிறார்.

மனிதகுலம் காட்டுமிராண்டியாக வாழ்ந்த பழங்காலத்தில், இயற்கையை அறிந்து கொள்ள முடியாமல், அதனை எதிர்கொள்ள முடியாமல் இருந்த போது, கடவுள்கள், பிசாசுகள், தெய்வீக அற்புதங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை தோன்றின. இது மதம் தோன்றுவதற்கான முதல் காரணம்.

இயற்கையின் முன், தமது இயலாத தன்மையினால் கடவுள் போன்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை எப்படி ஏற்பட்டதோ, அதே போலச் சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து, சுரண்டலுக்கு ஆளான உழைக்கும் வர்க்கம் நடத்தும் போராட்டத்தில் தன் இயலாத் தன்மையானது மதம் தோன்றுவதற்கான இரண்டாவது காரணம் ஆகிறது என்கிறார் லெனின்.

இந்த இரண்டு காரணங்களை லெனின் வேறொரு இடத்தல், “மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும். இந்தத் தீங்குகளை நாம் எதிர்த்து நின்று சமாளித்தாக வேண்டும்” (உழைக்கும் மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை)

இயற்கை சீற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாத இயலாமையை “கல்லாமை” என்ற சொல்லின் மூலமும், இன்றைய வலுவான சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதில் பலவீனமாக உள்ள சுரண்டலுக்கு ஆளான தொழிலாளி வர்க்கத்தின் இயலாத் தன்மையை “இல்லாமை” என்ற சொல்லின் மூலமும் லெனின் விளக்குகிறார்.

கல்லாமை, இல்லாமை ஆகிய இரண்டு காரணங்களால் இவ்வுலக வாழ்வில் கிடைக்காத இன்பம், மறுவுலகில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை மக்களிடையே ஏற்படுகிறது. இதனை மதம் பல்வேறு விளக்கங்களைக் கூறி நிலைநிறுத்துகிறது. அவ்வாறு நிலைநிறுத்தும் போது மதத்தின் வர்க்க சார்பு இடம் பெறுகிறது.

மதத்தில் காணப்படும் சுரண்டும் வர்க்கத்தினரின் நலன்களைச் சுட்டிக்காட்டி அதன் சார்பை அறிவித்து, கம்யூனிஸ்டுகள் மதத்தை எதிர்க்கின்றனர்.

மதத்தை, வெறும் மூடநம்பிக்கையாகக் கம்யூனிசம் பார்க்கவில்லை, மதத்தை மூடநம்பிக்கையாகப் பார்ப்பது பகுத்தறிவுவாதப் பார்வையாகும்.

மத நம்பிக்கையை ஒழிப்பதற்கான வழியை மட்டுமே பகுத்தறிவுவாதம் கூறுகிறது. கம்யூனிசம், மதம் தோன்றுவதற்கான காரணத்தையும் அறிந்து அதனை வீழ்த்துவதற்கான சூழநிலைமைகளைச் சுட்டிக்காட்டுகிறது. பகுத்தறிவுவாதம் எதோ சில ஏமாற்றுக்காரர்களின் நலனுக்காக, மூடநம்பிக்கையால் மதம் தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதுகிறது. ஆனால் எங்கெல்ஸ் போன்ற கம்யூனிஸ்டுகள் அவ்வாறு கருதுவதில்லை.

பல நூறு ஆண்டுகளாக ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் மதத்தை மோசடிக்காரர்களின் முட்டாள்தனம் என்று வெறுமனே முழக்கம் இடுவதின் மூலம் மதத்தை ஒழித்துவிட முடியாது என்று எங்கெல்ஸ் மதத்தின் வரலாற்றை முன்வைத்துக் கூறியுள்ளார்.

"கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதங்களும் ஏமாற்றுக்காரர்களின் படைப்பு என்ற நோக்கே இடைக்காலத்தின் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிச் சிந்தனையாளர்கள் வரை எலோரிடமும் ஆதிக்கம் செலுத்தியது. இந்த நோக்கு, உலக வரலாற்றில் பகுத்தறிவுப் பூர்வமான படிமலர்ச்சியைக் காணும் பணி தத்துவதினுடையது என்று கூறிய ஹெகலுக்குப் பிறகு அவ்வளவாகப் போதுமானதில்லை என்று உணரப்பட்டது.

…..

தமக்கு ஒரு மதம் தேவை என்று தாமே உணரும் மக்களாலும், வெகுமக்களின் மதத் தேவையைப் பற்றிய உணர்வைப் பெற்றவர்களாலுமே மதங்கள் நிறுவப்படுகின்றன

….

ரோமானியப் பேரரசை அடிபணியச் செய்து, நாகரிகமெய்திய மனித குலத்தின் பெரும்பகுதியினர் மீது 1800 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு மதத்தை மோசடிக்காரர்கள் திரட்டிய முட்டாள்தனம் என்று வெறுமனே முழக்கமிடுவதன் மூலம் ஒழித்துவிட முடியாது. கிறிஸ்துவத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் அதாவது அது எத்தகைய வரலாற்று நிலைமைகளில் தோன்றியது. எவ்வாறு ஆதிக்க நிலையை எட்டிப்பிடித்தது என்பதைத் திறம்பட விளங்கிக் கொள்ளாமல், விளக்காமல் மதத்தை ஒழித்துவிடமுடியாது."

(புரூனோ பௌவரும் பழைய கிறிஸ்தவமும்)

எந்த ஒரு மதத்தையும் அது எத்தகைய வரலாற்று நிலைமைகளில் தோன்றியது, எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைத் திறம்பட விளங்கிக் கொண்டால்தான் மதத்தை வேரோடு ஒழித்திட முடியும்.

மதம் என்பது எந்தக் குறிப்பிட்ட நபர்களின் கண்டுபிடிப்பல்ல, அது எதார்த்த உலகின் தலைகீழான பிரதிபலிப்பு என்றே மார்க்சியம் கூறுகிறது. அதனால் மதத்தில் காணப்படும் வர்க்க சார்பையே மார்க்சியம் முதன்மைப்படுத்துகிறது.

உழைத்தும் ஓட்டாண்டியாக்கப்பட்ட உழைக்கிற மக்களுக்கும், மற்றவர்களின் உழைப்பில் வாழும் பணக்காரர்களுக்கும் மதம் புகட்டுகிற போதனைகளில் தான் மதத்தின் வர்க்க சார்பு அடங்கி இருக்கிறது.

உழைத்தும் வாழ்வெல்லாம் இல்லாமையினால் அவதிப்படும் உழைக்கும் மக்களுக்கு மதம் என்ன போதிக்கிறது?

பூமியில் உள்ளவரை அடக்கமாகவும், பொறுமையாகவும் சமூக நிலைமைக்குக் கட்டுப்பட்டும், கீழ்படிந்தும் வாழ்ந்து காட்டினால், அதற்கான வெகுமதி சொர்கத்தில் கிடைக்கும். அதாவது பரலோகத்தில் கிடைக்கும்.

அதே நேரத்தில், மற்றவர்களின் உழைப்பில் வாழும் பணக்காரர்களுக்கு மதம் போதிப்பது என்னவென்றால்?

பணக்காரர்கள், பூமியில் இருக்கும் போது, தான-தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் பணக்காரர்களின் சுரண்டலை நீடிக்க மதம் உதவிடுகிறது. மிதமான விலையில் பணக்காரர்களுக்கு டிக்கெட் விற்பதின் மூலம் பரலோக நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறது.

உழைத்தும் ஒட்டாண்டியான மக்களை, சமூக நிலைமைகளுக்குக் கட்டுப்பட்டுப் பொறுமையாக இருந்தால் சொர்கத்தில் வெகுமதி கிடைக்கும் என்கிறது மதம்.

பணக்காரர்களுக்கோ, இந்த உலகில் தான-தர்மங்களைச் செய்வதின் மூலம், அவர்களுக்குச் சொர்கத்தில் நல்வாழ்வு கிடைக்கும் என்கிறது மதம்.

இதன் மூலம் இந்தச் சுரண்டல் சமூகத்தை அப்படியே நீடித்து நிலைப்பதற்கு மதம் துணைபுரிகிறது.

மதம் என்பது ஒரு வகையான ஆன்மீக போதை, இதில் மூலதனத்தின் அடிமைகள், தங்கள் மனித உருவத்தையும், மனிதனுக்குத் தகுதியான வாழ்க்கைக்கான கோரிக்கையைம் மூழ்கடித்து விடுகிறார்கள்.

இதனால் தான் “மதம் மக்களுக்கு அபின்” என்று மார்க்ஸ் கூறினார். இதனை ஒட்டியே லெனின் இதற்கு இங்கே விளக்கம் அளித்துள்ளார்.

மார்க்ஸ் கூறியதற்கு மாறான விளக்கம் கொடுப்பவர்களும் இருக்கின்றனர். அதை மார்க்ஸ் எழுதிய “மதம் மக்களுக்கு அபின்” என்று குறிப்பிடுகிற முன்னுரையைப் படிக்கும் போது பார்ப்போம்.

ஓர் அடிமை, தான் அடிமையாக இருக்கிறோம் என்பதையும், அதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற புரிதலோடு போராடத்தையும் தொடங்கிவிட்டால், அந்த அடிமைத்தனத்தில் இருந்து பாதி அளவு விடுதலைப் பெற்றுவிட்டார் என்பதே பொருளாகும் என்கிறார். அதாவது “மதம் மக்களுக்கு அபின்” என்பதைப் புரிந்து கொண்டாலே மதத்தின் ஆன்மீக ஒடுக்குமுறையில் இருந்து பாதி அளவு விடுதலைப் பெற்றுவிட்டோம் என்பதே பொருள் ஆகும்.

மதம் மக்களின் அபின் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால், தொழிலாளர்களுக்குத் தலைமைத்தாங்குகின்ற கம்யூனிஸ்டுகள் முதலில் இந்தத் தெளிவைப் பெற்றாக வேண்டும். அதற்குக் கம்யூனிஸ்டுகள் இயக்கவியல் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றைப் படித்துப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களை விழிப்படையச் செய்ய வழிகாட்ட முடியும்.

அடுத்து, நவீனத் தொழிலாளர்களான பாட்டாளிகள் விழிப்படைந்ததை லெனின் இங்கே தொகுத்தளிக்கிறார். அந்த நிலையை நவீனத் தொழிலாளர்கள் அடைய வேண்டுமானால், நவீனத் தொழிலாளர்களை வழிகாட்டும் கம்யூனிஸ்டுகள் தெளிவோடு இருக்க வேண்டும்.

லெனின் கூறியதை அப்படியே பார்ப்போம்:-

“வர்க்க உணர்வுள்ள நவீன தொழிலாளி, பெரிய அளவிலான தொழிற்துறையால் வளர்க்கப்பட்டு, நகர்ப்புற வாழ்க்கையால் அறிவொளி பெற்றவர், மதத் தப்பெண்ணங்களை இழிவாக ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிரியார்கள் மற்றும் முதலாளித்துவ மதவெறியர்களுக்குச் சொர்க்கத்தை விட்டுவிட்டு, பூமியில் தனக்கென ஒரு சிறந்த வாழ்க்கையை வெல்ல முயற்சிக்கிறார்.”

இந்த நிலையை நவீனப் பாட்டாளி வர்க்கம் அடைய வேண்டும் என்றால், கம்யூனிசத்தைத் தமது கோட்பாடாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கம்யூனிசத்தின் துணையோடு இன்றைய நவீன அறிவியலின் துணை கொண்டு மதத்தின் மாயப் போக்கை எதிர்த்து போராட்ட வேண்டும். அப்போதுதான் இந்தப் பூமியிலேயே தமக்கென ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை நடத்த முடியும். இத்தகைய போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றாக இணைப்பத்தின் வாயிலாகத் தொழிலாளர்களை மரணத்திற்குப் பிறகான வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படாமல் தடுக்க முடியும். அப்போதுதான் சொர்கத்தில் மதம் காட்டும் வாழ்க்கையை இந்த உலகிலேயே படைத்துக் காட்ட முடியும்.

இதற்கான தயாரிப்பை கம்யூனிஸ்ட் கட்சியால் தான் செய்ய முடியும், அத்தகைய வழியிலேயே கம்யூனிஸ்டுகளைக் கட்சி வழிநடத்த வேண்டும்.

இதற்கான நடவடிக்கையாக மார்க்சியம் கூறுவதைப் பார்ப்போம்.

“மதம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விவகாரம்” என்று அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவாக மதம் குறித்த கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை ஆகும். இந்த அறிவிப்பு மிகவும் எளிமையாக இருப்பதனால், இதைத் திருத்தல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகத் திரித்துரைக்கின்றனர். அதனால் இந்த வார்த்தைகளின் பொருளை, எந்தத் தவறான புரிதலையும் ஏற்படுத்தாமல் தடுப்பதற்கு, துல்லியமாக வரையறுக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின்.

அரசைப் பொருத்தவரை மதத்தை ஒரு தனிநபர் விவகாரமாகக் கருத வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கோருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் எந்த வகையிலும் மதத்தை ஒரு தனிப்பட்ட விவகாரமாகக் கருத முடியாது.

மதம் அரசாங்கத்தின் சார்புடையதாக இருக்கக் கூடாது. மத நிறுவனங்கள் அரசு அதிகாரத்தின் தொடர்புடையதாக எவ்வகையிலும் இருக்கக் கூடாது.

அதே நேரத்தில், அனைத்து மனிதரும் எந்த மதத்தைத் தழுவுவதற்கான முழு உரிமை வேண்டும். எந்த மத்தையும் தழுவாமல் அதாவது நாத்திகனாக இருப்பதற்கும் உரிமை இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் பொதுவாக நாத்திகராகத் தான் இருக்கிறார் என்று லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

மதத்தைத் தழுவுவதின் காரணமாக எந்தக் குடிமகனிடமும் பாகுபாட்டைக் காட்டப்படுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படிப்பட்ட செய்கையைச் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது என்பதே கம்யூனிஸ்டுகள் கண்ணோட்டமாகும். அதனால் தான் அரசு ஆவணங்களில் எந்தக் குடிமகனின் மதத்தைப் பற்றிக் குறிப்பிடுவது, சந்தேகத்திற்கு இடமின்றி அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

மத நிறுவனங்களுக்கு அரசு மானியம் போன்று எதையும் வழங்கக்கூடாது. மத நிறுவனமானது முழுமையாகச் சுயேச்சை உடையதாக இருக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் ஏன் இத்தகைய கோரிக்கைகளை வைக்கின்றனர் என்றால், இத்தகைய கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதின் மூலமே, பழைய அவமானகரமான வெட்கக்கேடான, வெறுப்புக்குரிய கடந்த காலத்துக்கு ஒரு முடிவுகட்ட முடியும்.

அரசியல் சுதந்திரத்திற்கு, இவைகள் ஒரு அங்கப்பகுதியாகச் செயலில் கொண்டுவரவேண்டும். ரஷ்யப் புரட்சிக்கு இத்தகைய நிலைமைகள் குறிப்பிட்ட வகையில் சாதகமாக இருக்கிறது என்கிறார் லெனின்.

சர்ச்சுக்கும் அரசுக்கும், அதே போலக் கல்வி நிறுவனங்களுக்கும் சர்ச்சுக்கும் இடையே தொடர்பு இருக்கக் கூடாது, தனித்தனியாகச் சுயேட்சையாக இருக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள் உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார் லெனின்.

மதம் முழுமையாகவும் முற்றிலும் ஒரு தனிநபர் விவகாரம் என்னும் கொள்கையில் உறுதியாக நிற்பவரே நேர்மையானவராவர். இந்தக் கொள்கையை ஏற்காதவரானால், அப்படிப்பட்டவர்கள் இன்னும் பழைய, முரண்பட்ட மதக் கருத்துக்களைக் கொண்டவர்களைத் தண்டிக்கும் மரபுகளுக்கு அடிமைப்பட்டுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பது அம்பலமாகிறது. அதாவது மதக் கருத்துக்களில் மயங்கி அடிமைப்பட்டவர்களால், மதம் ஒரு தனிநபர் விவகாரம் என்ற கோட்பாட்டை உறுதியாக ஏற்க முடியாது. மேலும் அப்படிப்பட்டவர்கள் அரசாங்க சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

இப்படிப்பட்டவர்களைப் பற்றி லெனின் மேலும் கூறுகிறார், மதப் போதனை என்னும் ஆயுதத்தின் ஆன்மீக பலத்தில் நம்பிக்கை கொள்ளாமலும், உங்கள் மதத்தை நிலைநாட்டிக் கொள்ளச் சொந்த பலம் இன்றி அரசாங்கத்தை நம்பியும், அது கொடுக்கிற லஞ்சப் பணத்தை நம்பியும் வாழ்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.

இறுதியாக லெனின் இப்படிப்பட்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார், “அப்படியாயின் ரஷ்யா முழுவதிலும் உள்ள வர்க்க உணர்வு பெற்றுள்ள தொழிலாளி வர்க்கம் உங்களை எதிர்த்து ஓர் ஈவிரக்கம் அற்ற போரை அறிவிக்கும்”

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தளவில் மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்று கூறப்படுவதில்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான வர்க்க உணர்வுள்ள, மேம்பட்ட போராளிகளின் கூட்டமைப்பு ஆகும். இப்படிப்பட்ட நிறுவனம் மத நம்பிக்கைகளின் வடிவில் உள்ள வர்க்க போதாக்குறைவு, மடமை, அறிவுத்தெளிவின்மை, கண்மூடித்தனமான வெறி ஆகியவற்றின்பால் பாராமுகமாகவும் அலட்சியமாகவும் இருக்க முடியாது என்கிறார் லெனின்.

கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையானது, மத நிறுவனங்களை அரசாங்கத்தின் தொடர்பில் இருந்து முழுமையாக வேறுபடுத்தி விடவேண்டும் என்பதே ஆகும். அப்போதுதான் பிரச்சாரத்தின் மூலமாகவும், சித்தாந்த ஆயுதங்களின் மூலமாகவும் மத மாயைகளை எதிர்த்து போராட முடியும்.

தொழிலாளர்களை ஏமாற்றுகிற ஒவ்வொரு மத மோசடிகளை எதிர்த்து போராடுவதற்கே கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகளுக்குச் சித்தாந்தப் போராட்டம் என்பது தனிப்பட்ட விவகாரம் கிடையாது, அது அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தின் முழுக் கட்சியின் விவகாரம் ஆகும்.

இந்த இடத்தல் ஒரு கேள்வி எழுவது இயற்கையே. மத மாயைகளை எதிர்த்துக் கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும் என்றால், கட்சியின் வேலைத் திட்டத்தில், கம்யூனிஸ்டுகளை நாத்திகர்கள் என்று ஏன் அறிவிக்கவில்லை? மத நம்பிக்கை கொண்டுள்ளவர்களைக் கம்யூனிஸ்ட்டாகக் கட்சியில் சேருவதற்கு ஏன் தடை விதிக்கவில்லை?

இதற்கு அளிக்கும் விடையின் மூலம், மதம் பற்றிய பிரச்சினையில், முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே உள்ள, மதத்தின் மீதான அணுகுமுறை வேறுபாடு வெளிப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டமானது முற்றிலும் விஞ்ஞான வழிப்பட்டது, மேலும் பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தினை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, வேலைத்திட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறுவது என்பது மத மாயைகளின் உண்மையான வரலாறு மற்றும் பொருளாதார வேர்களைப் பற்றிய விளக்கங்களும் அவசியமாக அதில் அடங்கியுள்ளது.

கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கையில் நாத்திக பிரச்சாரம் என்பது அவசியமான ஒன்றாகும். இதற்குப் பொருத்தமான விஞ்ஞான இலக்கியங்களை வெளிட வேண்டும்.

ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு ஏங்கல்ஸ் கொடுத்த ஆலோசனையை முன்வைத்துப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிரெஞ்சு அறிவொளி மற்றும் நாத்திகர்களின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மிக விரிவாகப் பரப்ப வேண்டும் என்கிறார் லெனின்.

ஆனால் அதே நேரத்தில், எந்தச் சூழ்நிலையிலும் மதப் பிரச்சினையை ஒரு மறைபொருளான, சூக்குமமான கருத்துமுதல்வாத போக்கில் முன்வைக்கும் தவறை செய்திடக்கூடாது என்று லெனின் எச்சரிக்கை விடுக்கிறார்.

வர்க்கப் போராட்டத்துக்குத் தொடர்பற்ற முறையில் கம்யூனிஸ்டுகள் மதத்தை எதிர்ப்பது இல்லை. எதோ “அறிவாளிகளின்” பிரச்சினையாக மதத்தைப் பார்க்கவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தில் காணப்படும் தீவிர ஜனநாயகவாதிகள் மதத்தை வர்க்கப் போராட்டத்துக்கு அப்பாற்பட்ட போராட்டமாகவும், அறிவுப் பிரச்சினையாகவும், பகுத்தறிவுப் பிரச்சினையாகவும் பார்க்கிறார்கள். இந்த முதலாளித்துவ நாத்திகர்கள், மதக்கேடுகளை வெறும் பிரச்சாரத்தின் மூலம் ஒழித்திட முடியும் என்று மடத்தனமாகக் (stupid) கருதுகின்றனர் என்று லெனின் கூறுகிறார்.

உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து ஒடுக்குமுறை செய்துவரும் சமூகத்தில், வெறும் பிரச்சாரத்தால் மதத்தை ஒழித்திட முடியும் என்று முதலாளித்துவ ஜனநாயக நாத்திகர்கள் கருதுகின்றனர்.

மனிதகுலத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் மதம் என்னும் நுகத்தடியானது, சமூகத்தினுள்ளே காணப்படும் பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பும் அதன் விளைவும் ஆகும் என்பதை மறந்துவிடக்கூடாது என்கிறது கம்யூனிசம். அவ்வாறு மறந்துவிடுவது முதலாளித்துவக் குறுகிய மனப்பான்மையாகும் என்கிறார் லெனின்.

முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளுக்கு எதிராக நடத்தும் வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் விழிப்பை பெறாமல், எத்தகைய பிரசாரத்தினாலும், நூல்களினாலும் அறிவு பெறமுடியாது. அனுபவத்தால் கிடைக்கிற போதனையே பாட்டாளி வர்ககத்தை விழிப்படைய செய்யும்.

மதம் கூறுகிற பரலோக சொர்க்கம் குறித்த பாட்டாளி வர்க்க கருத்தின் ஒற்றுமையை விட, பூமியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்குவதற்கான ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை உண்மையான புரட்சிகரப் போராட்டத்தில் ஒன்றுபடுத்துவது மிகவும் முக்கியமானது ஆகும் என்கிறார் லெனின்.

கம்யூனிஸ்டுகள் தங்களது வேலைத்திட்டத்தில் நாத்திகத்தை ஏன் சேர்க்கவில்லை என்பது இப்போது ஓரளவுக்குப் புரிந்திருக்கும்.

பழைய தப்பெண்ணங்களின் எச்சசொச்சங்களைக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விழிப்புணர்வு பெறுவதற்கு வாய்ப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டத்தில் நாத்திகத்தைச் சேர்க்கப்படவில்லை.

அதனால் தான் கம்யூனிஸ்டுகள், விஞ்ஞான வழிப்பட்ட உலகக் கண்ணோட்டமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைத் தொழிலாளர்களிடம் போதிக்க வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். மதங்களின் நிலையற்ற தன்மைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டியதின் அவசியத்தையும் லெனின் சேர்த்துக்கூறுகிறார்.

இவ்வாறு கூறியவுடன், மதப் பிரச்சினைக்குக் கம்யூனிஸ்டுகள் முதலிடம் கொடுக்கின்றனர் என்று முடிவெடுத்திடக்கூடாது. மதப்பிரச்சினை கம்யூனிஸ்ட் கடசியில் எப்போதும் முதலிடம் பெறுவதில்லை. உண்மையான புரட்சிகரமான பொருளாதார அரசியல் போராட்டத்தில், அரசியல் முக்கியத்துவம் இல்லாத, பொருளாதார வளர்ச்சியின் போக்கிலே குப்பையென வேகமாகத் துடைத்து எறியக்கூடியதை முன்வைத்துப் பிளவு உண்டாக்கும் சக்திகளுக்கும் இடம் அளித்துவிடக்கூடாது என்கிறார் லெனின்.

சுரண்டும் வர்க்கம் மதச் சண்டைக்களைத் தூண்டி விடுவதற்கான, அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துவதற்காகக் காத்துக் கொடிருக்கிறது. மதப் பிரச்சினைகளைக் கிளப்புவதின் மூலம் மக்களின் பொருளாதார, அரசியல் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறது. இதனைப் புரிந்து கொண்டு கம்யூனிஸ்டுகள் எந்த வகையிலும் மிகவும் அமைதியான, விடாப்பிடியான பொறுமையாகப் பாட்டாளி வர்க்க ஒற்றுமையை, விஞ்ஞான வழிப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்கிற உழைக்கும் மக்களின் கண்ணோட்டத்தைப் போதிப்பதின் வழியாக இதனை எதிர்கொள்ள வேண்டும்.

இந்தச் சிறு கட்டுரையின் இறுதியில் கம்யூனிஸ்டுகளின் மதத்தின் மீதான அணுகுமுறையைத் தொகுத்து அளித்துள்ளார் லெனின்.

“புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அரசைப் பொருத்தவரை மதத்தை உண்மையிலேயே தனிநபர் விவகாரமாக மாற்றுவதில் வெற்றி பெறும். இந்த அரசியல் அமைப்பில், இடைக்காலப் பூஞ்சை காளான்களைத் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கம், மனிதகுலத்தை மதமோசடிக்கு உள்ளாக்குவதன் உண்மையான மூலாதாரமாக உள்ள பொருளாதார அடிமைத்தனத்தை நீக்குவதில் விரிவான, வெளிப்படையான போராட்டத்தை நடத்தும்”

மதத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு மதத்தை எதிர்க்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் கருத்தாகும்.

லெனின் எழுதிய “சோஷலிசமும் மதமும்” என்கிற இந்தச் சிறிய கட்டுரை மதத்தைப் பற்றி மார்க்சிய வழிப்பட்ட புரிதலுக்கு ஓர் அறிமுகமாகும். இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்வதற்கு லெனின் எழுதிய “மதத்தின் மீதான தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை” என்ற கட்டுரை அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.