(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் (19-12-2020) எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு)
லெனின் எழுதிய “மார்க்சியமும் திருத்தல்வாதமும்” என்ற இந்த சிறு கட்டுரையில் மார்க்சியம் தோன்றியது பற்றியும் அதைத் தொடர்ந்து மார்க்சியத்தைத் திருத்தம் செய்யும் திருத்தல்வாதிகளின் போக்கை அம்பலப்படுத்தியும் எழுதியுள்ளார். இது ஒரு சிறு கட்டுரை 14 பக்கத்திற்குள் தான் இருக்கிறது. இந்த கட்டுரையின் கருத்தை சுருக்மாகவும் சாராமாகவும் பார்ப்போம்.
வடிவகணித (Geometrical) கோட்பாடுகள் மனித நலன்களை பாதிக்குமானால் அதை மறுப்பதற்கு நிச்சயம் முயற்சி செய்வார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. மதக்கருத்துக்கு முரணாக இயற்கை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தோன்றும் போதெல்லாம் அதை மதக்ககாரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள், எதிர்ப்பார்கள். அதே போல மதக்கருத்துக்கும் - மதத்துக்கும் எதிரான கோட்பாடான மார்க்சியத்தை கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
மனிதக்குரங்கில் இருந்து தான் மனிதன் தோன்றினான் என்று டார்வின் கூறிய போது அந்த கண்டுபிடிப்பு, மதவாதிகளால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது தெரிந்ததே. அதே போல உலகம் உருண்டை வடிவானது என்பதை கண்டுபிடித்தப் போது, உலகம் தட்டையானது என்று கருதிய மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் மார்க்சியக் கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்கு மார்க்சிய கோட்டை உருவாக்கியவர்கள் கடும் போராட்டத்தை நடத்த வேண்டி வந்தது. போராடி போராடி தான் மார்க்சிய அடிப்படைகள் நிலைநிறுத்தப்பட்டது.
மார்க்சியம் தமது வாழ்வு முழுதும் போராடியே ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்துள்ளது. இந்த இடத்தில் மார்க்சியக் கோட்பாடு என்பது எது என்பதை சுமார் ஆறு வரிக்குள் லெனின் சுருக்கித் தந்துள்ளார்.
மார்க்சியம் என்றால் ஆட்சி மாற்றத்தையே பலர் நினைத்து வருகின்றனர். அந்த ஆட்சி மாற்றம் என்கிற புரட்சி நடத்துவதற்கு, முன்பு செய்ய வேண்டியது என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொண்டு அதனை செயற்படுத்தாமல், ஆட்சி மாற்றமோ புரட்சியோ நிறைவேற்ற முடியாது.
மார்க்சியம் பற்றி லெனின் கூறிய அந்த சுருக்கத்தைப் பார்ப்போம்.
முதலாளித்துவ சமூகத்தில் மிகவும் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவொளி ஊட்ட வேண்டும். பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். தற்போதுள்ள இந்த முதலாளித்துவ அமைப்பு, பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, தவிர்க்க முடியாமல் வீழ்த்தப்பட்டு, அந்த இடத்தில் புதிய சோஷலிச சமூக அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதை நிரூபிப்பதே மார்க்சிய கோட்பாடாகும்.
இதை நிரூபிக்கும் வகையில் மார்க்சிய கோட்பாட்டை புரிந்து கொண்டுள்ள கம்யூனிஸ்ட்டால் தான் லெனின் கூறுகிறபடி செயற்பட முடியும். அதனால் கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்பவர்கள் மார்க்சிய கோட்பாடான, தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இந்த மார்க்சியக் கோட்பாட்டை முதலாளித்துவ அறிவாளிகளும், பேராசிரியர்களும் எதிர்ப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் எப்படி மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள் என்றால்? மார்க்சியம் பொய்த்துவிட்டது, காலாவதியாகிவிட்டது.
உண்மையில் காலாவதியாகிவிட்ட பழைய அமைப்பினர் தான் நவீன கண்டுபிடிப்புகளான மார்க்சியத்தை பொய்த்துவிட்டது என்று கூவுகிறார்கள்.
இப்படி மார்க்சியத்தை அழித்து ஒழிக்க முயற்சிக்கிற போதெல்லாம் உண்மையில் மார்க்சியம் உறுதியுடனும் உயிர் துடிப்புடனும் ஓங்கி வளருகிறது என்று லெனின் செல்கிறார். இப்படி ஓங்கி வளர வேண்டும் என்றால் மார்க்சிய அடிப்படைகளைக் காப்பதிலும், அதற்கு எதிரான போக்கை விமர்சிப்பதிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்.
தொழிலாளர்களிடையே நிலவும் பழைய கோட்பாடுகளுடன், மார்க்சியம் நிகழ்த்திய போராட்டம் அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை. அதாவது, எடுத்த எடுப்பிலேயே தொழிலார்களிடம் மார்க்சியக் கோட்பாடு நிலைப்படுத்த முடியவில்லை.
குறிப்பாக இடது இளம் ஹெகல்வாதிகளுடன் தத்தவத்துறையிலும், புரூதோதனியத்துடன் பொருளாதாரத் துறையிலும், பக்கூனிடம் விஞ்ஞான சோஷலிசத்திலும் கணக்கு தீர்த்துதான் மார்க்சியம் தன்னை நிலைநிறுத்தியது.
இதற்கு அடுத்து வந்த டூரிங்கையும் எங்கெல்ஸ் கோட்பாட்டு வழியில் கடுமையாக எதிர்த்து தான் மார்க்சியம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த வரலாறு 1840 ஆண்டுகளில் தொடங்கி 1890 களில் முடிவடைகிறது. இந்தப் போராட்டம் மார்க்சியத்திற்கு எதிரான கோட்பாட்டுடனான போராட்டமாகும். அடுத்த அறை நூற்றாண்டு போராட்டம் என்பது வேறுவகைப்பட்டது என்று லெனின் கூறுகிறார். அது எப்படி என்றால், மார்க்சியத்திக்கு எதிரான கோட்பாளர்கள், மார்க்சியத்திற்குள் நுழைந்து மார்க்சியத்திற்கு விரோதமாய் - திருத்தல்வாதமாய் செயற்பட்டது.
இந்தப் போக்கு இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்று கூறலாம். ஆனால் அதற்கு எதிரானப் போராட்டம் தான் சரியாக நடத்தப்படவில்லை. சிதைப்பவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பதிலளிப்பது தான் மார்க்சிய அடிப்படைகளைக் காப்பதாகும். ஆனால் 1890 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இந்த உள்ளிருந்து மார்க்சியத்தை சிதைக்கும் போக்கை, அன்றைய மார்க்சியர்கள் குறிப்பாக பிளாகனவ், லெனின் போன்றோர்கள் சிறப்பாக எதிர் கொண்டனர்.
உள்ளிருந்து போராட ஏன் முனைந்தார்கள் என்பதை லெனின் மிகவும் சிறப்பாக கூறியுள்ளார்.
மார்க்சியத்திற்கு மாறான சோஷலிசம் மார்க்சியத்தால் விமர்சிக்கப்பட்டு மறுக்கப்பட்டவுடன், அது முன்பு போல தனது சொந்த அடிப்படையில் இருந்து மார்க்சியத்துடன் போராடுவதற்கு பதிலாக, மார்க்சியத்தின் பொது அடிப்படைகளை ஏற்றுக் கொண்டது போல், போக்கு காட்டிவிட்டு, மார்க்சிய அடிப்படைகளை திருத்துவதாக, தமது போராட்டத்தை மாற்றிக் கொண்டது. அதனால் திருத்தல்வாதத்தின் சித்தாந்தத்தை பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மார்க்சியத்தின் மூன்று பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றில் நடைபெற்ற திருத்தல் போக்கைப் பற்றி லெனின் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் கூறியுள்ளார்.
தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகியவற்றில் எவ்வாறு திருத்தல்வாதம் செயற்பட்டது என்பதையும், அது எவ்வாறு தவறானது என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்
தத்துவம்
திருத்தல்வாதிகளுக்குத் தேவைப்படுகிற சித்தாந்தத்தை முதலாளித்துவ அறிஞர்களே தருகின்றனர். மார்க்சியத்தைக் கண்டு மிரண்டு போன முதலாளித்துவ அறிஞர்கள் நவீன-கான்ட்டியத் தத்துவப் போக்குகளை மீண்டும் கொண்டுவந்தனர். மார்க்சின் பொருள்முதல்வாதத்தைவிட கான்டின் கருத்துமுதல்வாதமே சிறந்தது என்று கூறுவதுடன், இந்த முதலாளித்துவ அறிஞர்கள், “கான்டுக்குத் திரும்புவோம்” என்று முழுக்கமிட்டனர். உடனே திருத்தல்வாதம் இந்த முதலாளித்துவ அறிஞர்களின் முழக்கத்தை ஏற்று, மார்க்சிய அடிப்படைகளை அதற்கு ஏற்ப, திருத்த முனைந்தது.
பாதிரிமார்கள் முன்பு ஆயிரம் முறை கூறியதையே முதலாளித்துவ அறிஞர்களும், திருத்தல்வாதிகளும் திரும்பவும் கூறுகின்றனர். இதில் எதுவும் புதியது கிடையாது. பொருள்முதல்வாதம் நெடுங்காலத்துக்கு முன்பே தவறானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று காலங்காலமாக கூறிய அதே பொய்யை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர். இவர்கள் ஹெகலை செத்த நாய் என்று ஒதுக்கித் தள்ளினர், ஆனால் ஹெகலைவிட ஆயிரம் மடங்கு அற்பமானதும் படுமோசமானதும் ஆன கருத்துமுதல்வாதத்தை உபதேசம் செய்தனர். அது மட்டும் இல்லாது இயக்கவியலை புறக்கணித்தனர். இயக்கவியலுக்கு மாறாக பரிணாமவாததை கையாண்டனர்.
டார்வின் படைத்த பரிணாமம் வேறு இந்த பரிணாமவாதம் என்பது வேறு. டார்வினுடைய பரிணாமத்தில் நிலைமறுப்பு உண்டு. ஆனால் இந்த பரிணாமவாதத்தில் எந்த முறிவும் இல்லாது அதே வழியில் மாறிக் கொண்டும், வளர்ச்சிப் பெற்றக் கொண்டும் செல்லும். ஆனால் இயக்கவியலானது, இன்று நிலைத்து நிற்பது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழையதாய் போய், புதியதற்கு இடம் கொடுக்கும் என்று கூறுகிறது. மாற்றத்தை இயக்கவியல் விளக்குகிறது. வளர்ச்சியை மட்டும் பரிணாமவாதம் கூறுகிறது.
மதம் பற்றிய விஷயத்தில் இந்தத் திருத்தல்வாதிகள் படுமோசமான திருத்தத்தை வைத்தனர். அரசைப் பொருத்தளவில் மதம் தனிநபர்களின் விவகாரமாக பார்க்க சொன்னதை, கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கும் மதம் ஒரு தனிநபர்களின் விவகாரமாக திருத்தியது. அதாவது சமூகத்தில் ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றவதற்கும், பின்பற்றாமல் இருப்பதற்கும் அதாவது நாத்திகராக இருப்பதற்கும் உரிமை வேண்டும். இதில் அரசு தலையிடக்கூடாது. இவ்வாறு மார்க்சியம் கூறியதை கட்சிக்குள்ளும் மதம் என்பது தனிநபரின் சுதந்திரம் என்று திரித்துக்கூறப்பட்டது. இந்தத் திருத்தல் போக்கைத்தான் இங்கே லெனின் மறுக்கிறார்.
அரசியல் பொருளாதாரம்
அரசியல் பொருளாதாரத்தில் திருத்தல்வாதம் என்ன செய்தது என்று பார்ப்போம்.
திருத்தல்வாதிகள் உழைக்கும் மக்களிடம் தவறான கருத்துக்களைக்கூறி வசப்படுத்த முயன்றனர். பெரு அளவிலான உற்பத்தியே வளர்ச்சி அடையும், சிறு அளவிலான உற்பத்தி, பெரு அளவிலான உற்பத்தியின் வளர்ச்சியினால் அழிந்து போகும் என்று கூறிய மார்க்சியம் பொய்யாகிவிட்டது.
மார்க்சியம் கூறியது போல் எதுவும் நடைபெறவில்லை. அதே போல மார்க்சியம் கூறுய மிகை உற்பத்தியினால், உருவாகும் பொருளாதார நெருக்கடி தற்போது அரிதாகிவிட்டது. கார்டல்கள் டிரஸ்டுகள் ஆகியவற்றின் திட்டமிட்ட உற்பத்தியினால் பொருளாதார நெருக்கடி தவிர்க்கப்பட்டுவிட்டது, உழைப்பை பெறுபவர்களுக்கும் உழைப்பை செலுத்துபவர்களுக்கும் இடையே காணப்பட்ட வர்க்கப் பகைமையின் கடுமை குறைந்து தணிந்துவிட்டது, அதனால் முதலாளித்துவம் அழிந்து சோஷலிசம் வரும் என்கிற “அழிவுக் கோட்பாடு”க்கு ஆதாரம் இல்லாது போய்விட்டது என்று திருத்தல்வாதிகள் கூறினர். முடிவில் மதிப்புக் கோட்பாட்டிலும் திருத்தத்தைப் புகுத்தியது.
இதற்கு எதிரானப் போராட்டமானது, முன்பு எங்கெல்ஸ் டூரிங்குக்கு எதிராக நடத்திய போராட்டம் அளவுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று லெனின் கூறியுள்ளார்.
புள்ளிவிவரங்களும், சிறிய அளவு உற்பத்தி பற்றி கூறியதும் தவறானது, திருத்தல்வாதிகள் தமக்கு சாதகமாக சித்தரிக்கப்பட்டது, உண்மை நிலைமை இதற்கு மாறாக இருந்தது.
சிறிய அளவு உற்பத்தி என்கிற இயற்கைப் பொருளாதாரத்தின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உணவுத் தரத்தை மோசமாக்கியது, பட்டினியையும், உழைக்கும் வேலை நேரத்தை அதிகப்படுத்துவதும், கால்நடைகளின் தரத்தையும் பராமரிப்பையும் சீர்கேடு அடையச் செய்வது இந்த சிறிய அளவு உற்பத்தியே.
முதலாளித்துவ உற்பத்தி தோன்றிய போது, எப்படி கைத்தொழில் உற்பத்தி தன்னை நிலைநிறுத்துவதற்குப் போராடி தோற்றதோ அதே போலத் தான் முதலாளித்துவத்தின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிக்கு முன்னால், சிறிய அளவு உற்பத்தி அழிவுறவே செய்யும்.
திருத்தல்வாதிகளை எதிர்த்திடும் போதே விவசாயிகளுக்கு கம்யூனிஸ்டுகள் கூறிட வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது, அது என்னெவென்றால், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன், சிறிய உற்பத்தியாளர்கள் நிலைத்து நிற்க முடியாது, விவசாயத்தில் சிறு சாகுபடிக்கு வாய்ப்பு குறைந்து-மறைந்து போகும் என்கிற உண்மையை, விவசாயிகள் ஏற்கும்படி விளக்குவது, கம்யூனிச அரசியல் பொருளாதாரத்தின் கடமையாகும் என்று லெனின் கூறியுள்ளார்.
லெனின் எழுதிய வார்த்தைகளை அப்படியே அப்படியே பார்ப்போம்:-
“…முதலாளித்துவத்தில் சிறு உற்பத்தியாளர் அழியாது நிலைப்பது முடியாது என்பதையும் முதலாளித்துவத்தில் விவசாயியின் சிறு சாகுபடிக்குக் கதிமோட்சமில்லை என்பதையும் பாட்டாளியின் கண்ணோட்டத்தை விவசாயி ஏற்பது அவசியம் என்பதையும் தெளிவுபடுத்திக் காட்டுவதும் சோஷலிஸ்டு அரசியல் பொருளாதாரத்தின் கடமையாகும்.”
திருத்தல்வாதிகள், விஞ்ஞானப் புரிதல் இன்றி, பாட்டாளி வர்க்கப் பார்வைக்கு மாறான, சிறு உடைமையாளர்களின் போக்கை – அதாவது முதலாளி வர்க்கத்தினரின் போக்கை விவசாயிகள் ஏற்கும்படி செய்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியைப் பற்றிய திருத்தல்வாதிகளின் கருத்து படு மோசமாக இருக்கிறது.
பொருளாதார நெருக்கடிகள் காலாவதியாகிவிட வில்லை. வளமையான காலத்தைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகள் வரும் என்பதை 2008 ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் உறுதிப்படுத்தியது. இந்த எதார்த்த உண்மையை திருத்தல்வாதிகள் மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியின் கால வரிசையில் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது, முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவாக பொருளாதார நெருக்கடிகள் உருவாகும் என்பது, தவிர்க்க முடியாது என்பதை இன்றளவும் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
கார்டல்களும், டிரஸ்டுகளும் உண்மையில் பொருளாதார நெருக்கடியை தவிர்த்துவிடவில்லை, இதிலும் உற்பத்தியின் அராஜகம், அதாவது திட்டமிடாத உற்பத்தியின் விளைவாக பொருளாதார நெருக்கடி தோன்றவே செய்கின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையும், மூலதனத்தின் ஒடுக்கு முறையையும் தீவிரமாக தொடரவே செய்கிறது. முன்பைவிட வர்க்கப் பகைமை மேலோங்கியே காணப்படுகிறது, அதனால், முதலாளித்துத்தின் அழிவு தவிர்க்க முடியாது என்று கூறிய நிலைமைகள் உண்மையில் மாறவே இல்லை முன்பைவிட மோசமாகத்தான் காணப்படுகிறது.
தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகள், திருத்தல்வாதிகளின் போக்கை மறுத்துவருகிறது.
இந்த இடத்தில் லெனின் அந்தக் காலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிதி நெருக்கடிகள் அதிகரித்ததையும், அதன் காரணமாக தொழிலாளர்கள் வேலை இழந்ததையும் குறிப்பிட்டு, திருத்தல்வாதிகளின் போக்கை மறுத்துள்ளார். இந்த பொருளாதார நெருக்கடி அண்மைய காலத்திலும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எற்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம். இன்றுவரையில் திருத்தல்வாதிகளின் கூற்று பொய் என்பதை தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடிகள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனை தொழிலாளி வர்க்கம் மறந்திடக் கூடாது என்று லெனின் கூறுகிறார்.
திருத்தல்வாதப் போக்கு என்பது, ஒரு தொடர் போக்காகும், விளக்கங்கள் வேறுபட்டாலும் இந்தத் திருத்தல்வாதப் போக்கு எல்லாம் ஒரே வகையைச் சேர்ந்ததுதான். தொழிலாளர்கள் இத்தகைய திருத்தல்வாதப் போக்கு, மார்க்சிய விஞ்ஞானத் தன்மைக்கு மாறனது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை நாம் பார்த்தது, அரசியல் பொருளாதாரத் துறையில் திருத்தல்வாதிகளின் போக்கு. அடுத்து அரசியலில் அவர்களின் போக்கைப் பற்றிப் பார்ப்போம்.
அரசியல்
இங்கே அரசியல் என்று கூறுவது விஞ்ஞான சோஷலிசத்தைப் பற்றி தான்.
அரசியல் துறையில், மார்க்சிய அடிப்படையான வர்க்கப் போராட்டம் பற்றிய கருத்தில் திருத்தம் செய்தனர். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ சமூகத்தில் ஜனநாயகமும், அனைத்து மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடித்தளத்தையே அகற்றிவிட்டது என்று திருத்தல்வாதிகள் கூறினர். இதுகூட புதிய கருத்தல்ல, மிவாதிகள் பலகாலமாக கூறிய பழைய கருத்தே ஆகும். இன்றைய சமூகத்தில், பொருளாதார வேறுபாடு கூடிக் கொண்டு தான் செல்கிறது, குறையவே இல்லை என்பதே உண்மையாகும்.
மிகவும் ஜனநாயக குடியரசுகளிலும்கூட நாடாளுமன்றம் என்பது ஒடுக்குமுறை கருவியாகவே செயல்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். அனைவருக்கும் வாக்குரிமை என்பது எந்த வகையிலும் வர்க்க ஒடுக்கு முறையை அகற்றிடவில்லை.
சோஷலிச இயக்கத்தில் திருத்தல்வாதிகளின் வேலை இறுதி நோக்கம் பற்றியதில் காணப்பட்டது. அதாவது இயக்கமே அனைத்தும், இறுதி நோக்கம் ஒரு பொருட்டல்ல என்று இயக்கவியலைப் புறக்கணித்து, பரிணாமவாதத்தைக் கையாண்டு சோஷலிசப் புரட்சியை மறுதலித்தனர்.
திருத்தல்வாதம் மீண்டும் மீண்டும் எழுவதற்கு சமூகத்தில் அதன் வர்க்க வேர்கள் இருப்பதே காரணமாகும். அதனால் மார்க்சிய அடிப்படையைக் காப்பதற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இந்த நூலில் வலது திருத்தல்வாதத்தைப் பற்றியே லெனின் அதிகம் பேசியுள்ளார். இடதுதிரிபுகள் அன்றைய நிலையில் ஒரு சர்வதேசப் போக்கில் காணப்படவில்லை. அதனால் இந்தக் கட்டுரையில் லெனின் வலதுசாரி திருத்தல்வாத்தை பரிசீலிப்பதுடன் நிறுத்திக் கொண்டார்.
திருத்தல்வாதம் தொடர்ந்து கொண்டே இருப்பதற்குக் காரணம், புதிய சிறு உற்பத்தியாளர்கள் தவிர்க்க முடியாமல், பாட்டாளி வர்க்க அணிகளுக்குள் தள்ளப்படுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் மீண்டும் குட்டி முதலாளித்துக் கண்ணோட்டம் தோன்றுவதற்கு இதுவே காரணம். சமூக மாற்றம் ஏற்படும்வரை இந்த நிகழ்வுப் போக்கு நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும்.
அதனால், புரட்சியை நடத்துவதற்கு மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பாட்டாளி வர்க்கத்தவராக மாறுவது அவசியம் என்று கூறுவது மிகவும் பெரியத் தவறாகும். இந்தத் திருத்தல்வாதிகளுடன் நடத்தும் போராட்டம் நிறைவு பெற்றால் தான், புரட்சி நடத்த முடியும் என்று கருதுவதும் தவறாகும். இரண்டும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். திருத்தல்வாதிகளை வீழ்த்துவம், சமுக மாற்றத்திற்கான போராட்டமும் இணைந்தே நடத்தப்பட வேண்டும்.
புரட்சிக் கட்டத்தில் சர்ச்கைக்கு உரிய அனைத்துப் பிரச்சினைகளையும் கூர்மை அடையும், அப்போது எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒன்று குவியச் செய்யும், அந்த மும்முரமான போராட்டத்தின் போது நண்பர்களிடம் இருந்து பகைவர்களை இனங்கண்டு பதிலடி கொடுக்கப்படும். புரட்சிக்கட்டத்தில் இதுவரை நண்பர்கள் என்று கூறிய புதிய பகைவர்களுடனும் போர் நடைபெறும்.
திருத்தல்வாதத்தை எதிர்த்துப் புரட்சிகர மார்க்சியம் நடத்தும் சித்தாந்தப் போராட்டமானது, சிறு முதலாளித்துவப் பகுதியினரின் அனைத்து ஊசலாட்டங்களையும், பலவீனங்களையும் கடந்து, இறுதியில் தமது லட்சியத்தில் முழு வெற்றியை அடையும் என்று லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார்.
நமது செயற்பாடும் லெனின் வழிகாட்டுதலின்படி சென்று, நமது லட்சியத்தை வெற்றிபெற செய்வோம்.