முன்னுரை:-
அ.கா.ஈஸ்வரன்
9884092972
ak.eswarn@gmail.com
"கோட்பாடு
முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும்.
இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு
முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது."
- எங்கெல்ஸ்
ஒருவர் எந்தப் பிரச்சினையையும்,
தமது தத்துவக் கண்ணோட்டத்தின்படியே அணுகுகிறார். இதை அவர் அறிந்திருந்தாலும், அறியாவிட்டாலும்
இதுவே உண்மை. எதன் அடிப்படையில் மனிதர்கள் குறிக்கோள்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதிலே
தான், தத்துவங்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு அடங்கி உள்ளது.
குறிக்கோளில்லாமல் எவரும்
செயல்படுவதில்லை, இந்தக் குறிக்கோளை அவரவர் புரிந்து கொண்ட தத்துவத்தின் அடிப்படையிலேயே
அமைத்துக் கொள்கின்றனர்.
தத்துவக் கண்ணோட்டம் ஒருவகையில்
இயற்கையான திறன் தான். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தைப் படித்தாராய்வது தவிர வேறு வழியில்லை என்று
எங்கெல்ஸ் கூறியுள்ளார்.
கருத்துமுதல்வாதத் தத்துவத்தை
ஏன் ஒரு பொருள்முதல்வாதி படிக்க வேண்டும்? கருத்துமுதல்வாதி ஏன் பொருள்முதல்வாதத் தத்துவத்தைப்
படிக்கிறாரோ அதே காரணத்துக்குத் தான் பொருள்முதல்வாதியும் படிக்க வேண்டியுள்ளது. எதிர்
தத்துவத்தை எதிர் கொள்ள வேண்டுமானால் அதனை அறிந்திருக்க வேண்டும்.
மக்களிடம் கருத்துக்குழப்பங்கள்
ஏற்படுவதற்கும், போராட்ட குணம் குறைந்து காணப்படுவதற்கும் அவர்களிடம் உள்ள கருத்துமுதல்வாதச்
சிந்தனையே காரணமாகும். உழைக்கும் மக்களிடம் காணப்படும் கருத்துமுதல்வாதச் சிந்தனையை
புரிந்து கொள்வதற்கும், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கும், ஒரு பொருள்முதல்வாதி
கருத்துமுதல்வாதத்தை அறிந்திருக்க வேண்டும்.
பொருள்முதல்வாதம் சிறந்தது
என்பதை நிரூபிக்க வேண்டுமானால், கருத்துமுதல்வாதத்தைவிடப் பொருள்முதல்வாதம் எந்த வகையில்
சிறந்தது என்பதை விளக்க வேண்டும். அப்படி விளக்கம் கொடுப்பதற்குக் கருத்துமுதல்வாதம்
தெரிந்து இருக்க வேண்டும்.
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் பற்றி எங்கெல்ஸ்
கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். பழங்காலத்தில், சிந்தனைக்கும் பருப்பொருளுக்கும்
இடையிலான உறவைத் தெளிவுபடத்தக்கூடிய அளவுக்கு அன்றைய விஞ்ஞானமும், தத்துவமும் வளர்ச்சி
அடைந்திருக்கவில்லை. ஆனால், கருத்துமுதல்வாதம் ஆத்மா என்ற கருத்தைப் படைத்து அதனை விளக்கியது.
அன்றைய நிலையில் உள்ள தொடக்கநிலைப் பொருள்முதல்வாதத்தால் (Primitive
Materialism),
இதனை எதிர் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்றால், பழைய
பொருள்முதல்வாதம், பழைய கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியினாலும்
தத்துவ வளர்ச்சியினாலும் இன்றைய நிலையில் கருத்துமுதல்வாதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,
நவீன பொருள்முதல்வாதத்தால் இன்றைய கருத்துமுதல்வாதம் நிலைமறுக்கப்பட்டது.
எங்கெல்ஸ்:-
“தொன்மைக்
காலத் தத்துவவியல் பழைமையான, தன்னியல்பாக உருவான பொருள்முதல்வாதமே. எனவே அது சிந்தனைக்கும்
பருப்பொருளுக்கும் இடையிலான உறவைத் தெளிவு படுத்த இயலாததாக இருந்தது. ஆனால், இந்தப்
பிரச்சினை மீது தெளிவை அடைவதற்கான தேவை, உடலில் இருந்து ஆன்மா பிரிக்கப்படத்தக்கது
என்ற போதனைக்கும், பிறகு இந்த ஆன்மாவுக்கு இறவாத் தன்மையைத் துணிந்துரைப்பதற்கும்,
இறுதியாக ஒரு கடவுட் கோட்பாட்டிற்கும் இட்டுச் சென்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம்
கருத்துமுதல்வாதத்தால் நிலைமறுக்கப்பட்டது. ஆனால், தத்துவவியலின் மேலதிக வளர்ச்சிப்
போக்கில் கருத்துமுதல்வாதமும் செல்லுபடியாகாததாகிப்போய் நவீனப் பொருள்முதல்வாதத்தால்
நிலைமறுக்கப்பட்டது.”
(டூரிங்குக்கு
மறுப்பு - பக்கம் 241)
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம்
ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை விமர்சனக் கண்கொண்டு பார்ப்பதற்கு
இரு தத்துவங்களையும் படித்திருக்க வேண்டும். அவ்வாறு படித்துப் புரிந்து கொள்ளாமல்,
ஒரு கம்யூனிஸ்ட் நவீனப் பொருள்முதல்வாதியாக சிறக்க முடியாது.
கருத்துமுதல்வாதத்தை மார்க்சும் எங்கெல்சும்
படித்து விமர்சித்துவிட்டனர், நவீனப் பொருள்முதல்வாதத்தையும் படைதளித்துவிட்டனர். நாம்
பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டாலே போதும் என்கிற போக்கு இங்கே நிறைய பேரிடம் காணப்படுகிறது.
கடவுளை மறுப்பதோடு பொருள்முதல்வாதம் முடிந்துவிட்டதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் கடவுள் மறுப்போடு நின்றுவிடுவதில்லை, அது பல விஷயங்களைப்
பற்றி விளக்கி இருக்கிறது, சமூகம் பற்றியும் பொருள்முதல்வாதம் பேசுகிறது. இந்த விளக்கங்களைப்
புரிந்து கொள்வதற்கு நாத்திகம் மட்டும் போதுமானது அல்ல.
கம்யூனிச சிந்தனையினால்
ஈர்க்கப்பட்டு, பொருள்முதல்வாதத்தை ஒருவர் ஏற்றவுடனேயே, அவர் மனதில் தேங்கியுள்ள கருத்துமுதல்வாத
சிந்தனைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறிட முடியாது. அதை நீக்குவதற்குப் பெரும்
முயற்சி எடுக்க வேண்டும். கருத்துமுதல்வாதம் என்ன சொல்கிறது, அதற்கு பொருள்முதல்வாதம்
எப்படி பதிலளிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை அறியாது போனதினால்
தான், நம் நாட்டில் உள்ள இடதுசாரிகளிடம், கருத்துமுதல்வாத சிந்தனைப் போக்குகள் அவ்வப்போது
தலைகாட்டுகிறது. அது கருத்துமுதல்வாதக் கருத்து என்பதைக்கூட அறியாமல் இருக்கின்றனர்.
இது மிகவும் பலவீனமான சித்தாந்தப் போக்காகும். சித்தாந்த தெளிவில்லாமல் எதையும் சாதித்திட
முடியாது.
தத்துவத்தின் மீது இடதுசாரிகளிடம்
அக்கறையின்மை காணப்படுகிறது. “தத்துவம், அதிகம் தேவைப்படும் இந்தக் காலக்கட்டத்தில்
எந்தக் காலத்தைக் காட்டிலும் மிகுந்த உதாசீனத்திற்கு உள்ளாகி உள்ளது மிகவும் கவலை அளிப்பதாகும்”
என்று தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் போராட்டத்துக்கு தத்துவம், ஒரு துணை
சக்தி என்பதாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர், ஆனால் சமூகத்தில் காணப்படும் பொருளாதார
ஏற்றத்தாழ்வுக்காண காரணத்தை தத்துவ அடிப்படையிலேயே அறிந்து அதனை மாற்றுவதற்கு போராடுகிறோம்.
அதனால் தத்துவம் அனைத்துப் போராட்டத்துக்கும் அடிப்படையாகும்.
சோஷலிசத்தை, நம் நாட்டில் அமைப்பதற்கானப் போராட்டத்தில்
இந்திய தத்துவ மரபுகளுக்கு இடையேயான போராட்டம் தொடர்புடையதாக இருப்பதையும், அந்தப்
போராட்டத்துக்கு தத்துவம் ஓர் கூர்மையான ஆயுதமாக இருப்பதையும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
தமது நூலுக்கு எழுதிய முகவுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சோசலிசத்திற்கான
இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்கிற
புரிதலே இந்நூலின் அடிப்படை பின்னர்க் குறிப்பிடப்பட்டதில் முக்கியமான் இரு பணிகள்
அடங்கும்; முதலாவது, உண்மையில் இருந்த தத்துவ நூல்களைப் பற்றிய பாரபட்சமற்ற பகுப்பாய்வு
மூலம் அவற்றில் இன்று நிலைத்திருக்கிற மற்றும் மறைந்து போனவற்றைக் கண்டறிவது; இரண்டாவது,
உயிர்த்திருப்பனவற்றுக்கு ஊட்டம் ஏற்றுவதும் மறைந்தனவற்றை 'மண்ணில் புதைப்பதும்'; ஊட்டமேற்றுதல்
எனில் அவற்றின் ஆற்றலைச் சரியான திசையில் திருப்பி அது எங்கே செல்கிறது எனப் பார்ப்பது
எனப்பொருள் - அதாவது, அவற்றின் காலத்திற்குப் பின்னர் வரலாற்றின் போக்கில் திரண்டுள்ள
அறிவியல் தரவுகளைக் கொண்டு அவற்றைச் செழுமைப் படுத்துவது எனப் பொருள்.
இப்
பணியைச் செவ்வனே செய்தால் நாம் மார்க்சியத்தின் வேர்களை அங்கே காணலாம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை; இதனை இந்திய தத்துவ மரபில் மார்க்சியத்தைக் கண்டெடுப்பது எனக்
கொச்சைப்படுத்திடக்கூடாது; இவ்விடத்தே 'கண்டெடுப்பு' எனும் சொல்லைப் பயன்படுத்த முடியுமாயின்
இதன் பொருள் இந்திய தத்துவ மரபின் சில கூறுகளின் அடியொற்றிப் போகிற ஓர் இந்தியன் இறுதியில்
வந்து சேருமிடம் மார்க்சியமாகத்தான் இருக்க முடியும் என்பதே அது மட்டுமன்று; சோசலிசத்துக்கான
போராட்டத்திற்குத் தேவைப்படும் படைக்கலன்களில் வலுமிக்க, மிகவும் கூர்மையானதோர் ஆயுதமாக
இச் சித்தாந்தம் அமைவதுடன் அதற்கு அவனது தேசியப் பாரம்பரியத்தின் அங்கீகாரமும் உண்டு
என்கிற தெளிவு அவனை மேலும் உற்சாகப்படுத்தும்."
(இந்திய
நாத்திகம், பக்கம்-7)
இயற்கையை, பொருள்முதல்வாத
கண்ணோட்டத்தில் அணுகுவதைப் போல, சமூகம் பற்றிய விஷயத்தில் பொருள்முதல்வாதப் பார்வையில்
அணுகுவது அவ்வளவு எளிதல்ல. இருக்கும் சமூகத்தை விமர்சிக்கும் வழியில் தான் புதிய சமூகத்தைப்
படைக்க முடியும். இருக்கும் கருத்துமுதல்வாத தத்துவத்தை விமர்சிப்பதின் மூலம்தான் பொருள்முதல்வாத
தத்துவம் வளம்பெறும்.
“இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I” என்ற இந்த நூல் ஒரு தொடக்கம்தான். இதில் இந்து தத்துவத்தின்
அடிப்படைக்கான நூல்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவைகள் அடுத்த தொகுதியில்
இடம்பெறும்.
இந்தியத் தத்துவங்கள் வேதத்தை
ஒட்டியும் வெட்டியும் பேசப்பட்டுள்ளது. அதனால் வேதத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது
விமர்சனப் பார்வையில்லாமல்
எதையும் ஏற்கவோ, மறுக்கவோ முடியாது. விமர்சனம் இல்லாமல் எதையும் வெளிப்படுத்த முடியாது.
இந்த நூலில் பெரிய விவாதங்கள் எதுவும் நிகழ்த்தப்படவில்லை, கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை.
அறிமுகம் என்பதனால் விமர்சனங்கள் மேம்பட்ட நிலையில் (Advanced Level) செய்யப்படவில்லை. எதையும்
அறிந்தால் தான் அதனை விமர்சிக்க முடியும். அதனால் இந்த அறிமுகத்துக்குத் தேவைப்படுகிற
விமர்சனம் மட்டும் இந்நூலில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை வாசகர்களுக்குத் தேவைப்படுகிற
விமர்சனம் இதில் உள்ளது.
இந்த நூலுக்கு இந்தியத் தத்துவம் என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும்,
இந்த முதல் தொகுதியில் இந்துத் தத்துவத்தின் அடிப்படைகள் மட்டுமே விவரிக்கப்பட்டுள்ளது.
அதுவும் இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்கள் மூன்று (பிரஸ்தானத்திரயம்) மட்டுமே விளக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த நூலில், இந்து தத்துவத்தின் அடிப்படை நூல்களின் கருத்துக்கள் உள்ளது உள்ளபடி
(As it is) தொகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கள் இந்து
தத்துவ நூல்களின் கருத்தாகவே கொள்ள வேண்டும், எனது கருத்துக்கள் போகிற போக்கில் சில
இடங்களில் கூறப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ளவை இந்து தத்துவ நூலின் கருத்தாகவே
கொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்தத் தொகுதியில்தான், இந்துத் தத்துவத்தின்
போக்குகளான துவைதம், விசிட்டாத்வைதம், அத்வைதம் போன்ற தத்துவங்கள் விளக்கப்பட இருக்கின்றன.
மேலும் தொடக்கக் காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தத்துவ-மதக் கருத்துக்கள்
(பரிபாடல், திருமுருகாற்றுப்படை), மணிமேகலையில் காணப்படும் தத்துவங்கள், நீலகேசியில்
காணப்படும் தத்துவங்கள், சித்தர் தத்துவம், பக்தி இயக்கம், சைவ சித்தாந்தம், சிறு தெய்வ
வழிபாடு, ஆசீவகம் போன்றவை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியத் தத்துவத்தில் காணப்படும்
கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகிய இரு சிந்தனைப் போக்குகளை பிரித்து விளக்கம்
கொடுக்கப்பட இருக்கிறது.
தத்துவங்கள் வாழ்க்கைக்கு
வழியாட்டியா? வாழ்க்கையை விடுவதற்கு (முக்திக்கு) வழியாட்டியா? என்ற கேள்வி இந்திய
தத்துவங்களைப் பார்க்கும் போது ஏற்படுகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கருத்துமுதல்வாதத்
தத்துவங்கள் வாழ்க்கையை விளக்குகிறது, அல்லது வாழ்க்கையை விட்டு விலகி முக்திக்கு வழிகாட்டுகிறது.
ஆனால், பொருள்முதல்வாதம் வாழ்க்கையின் நிலைமையை அறிந்து கொள்வதோடு, அதனை மாற்றுவதற்கு
வழியையும் காட்டுகிறது.
சுவேதாஸ்வதர உபநிடதம்,
ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தத்துவங்கள் தோன்றுவதற்கு இந்த கேள்வியே அடிப்படையாகும். “சுகதுக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்? உலகின் நடைமுறை
எவ்வாறு அமைகிறது?”.
உபநிடதம் எழுப்பும் இந்தக்
கேள்விக்கு சரியான விடையை, இந்த உலகத்திலேயே கண்டடைந்தால், அப்போது இந்த உலகில் சிறப்பாக
வாழ்வதற்கு வழி பிறக்கும். அப்படிச் சிறப்பான வாழ்வு கிடைத்தால், ஏழு ஜென்மம் என்ன,
தொடர் பிறப்பு கிடைக்கும் என்றால், அதை மக்கள் விரும்பி வரவேற்பர். அதாவது வாழ்வதற்கு
விருப்பம் கொள்வர். மற்றவர்களை வாழ வைப்பதிலும் மகிழ்ச்சி கொள்வர். வாழ்க்கை வாழ்வதற்கே
என்பதை அறிந்து கொள்வர்.
சுக-துக்கங்களை ஏன் அனுபவிக்கிறோம்?
இதற்கு ஆன்மீக தத்துவங்கள்
கூறுவது என்ன?
கர்ம வினைகளால் ஏற்பட்டது
என்பதே அதன் பதில், மேலும் சுகதுக்கங்கள் உலகின் இயல்பு, சுகதுக்கங்களில் இருந்து விடுபட
வேண்டுமாயின், முக்தியை நாட வேண்டும். பிரச்சினைக்கானத் தீர்வை, பிரச்சினைத் தோன்றிய
இடத்தில் தேடாமல், அதனை விட்டு விலகுவதற்கு வழிகாட்டுகிறது ஆன்மீகம்.
சுக-துக்கங்கள் சமூகத்தில்
எப்போது ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, அதனைப் போக்கும் வழியினையும்
பொருள்முதல்வாதம் எடுத்துக் காட்டுகிறது.
உலகில் ஏற்றத் தாழ்வு காணப்படுவதற்கான
காரணத்தையும், அதனை மாற்றுவதற்கான வழியையும் பொருள்முதல்வாதம் காட்டுகிறது. இந்த நவீனப்
பொருள்முதல்வாதம் மார்க்சியத் தத்துவமாகும். இதனை அடுத்தத் தொகுதியில் காணலாம்.
இந்த நூலில் இடம் பெற்ற தொடக்கப்பகுதிகள் நீயூஸ்கடை
(https://www.newskadai.com) என்கிற இணையத் தளத்தில்
வெளிவந்தவையாகும், மற்றவைகள் அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டவையாகும். இந்த நேரத்தில்
நீயூஸ்கடை நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாகத் தோழர் மகிவர்மனுக்கு
மிக்க நன்றி.
இந்த நூல் இந்தளவுக்குச்
சிறப்பாக வந்துள்ளது என்றால், அதற்கு உழைத்த தோழர்கள் இரா.புருஷோத்தமன், த.ஜீவானந்தன், தா.சந்திரன்,
சுந்தரசோழன் ஆகியோர்களுக்கு நன்றி.
எனது எழுத்துக்களை ஊக்கப்படுத்திய
தோழர்கள் த.ந.தனராமன், ஆ.பத்மாவதி, மகேஷ் ராமநாதன், பழனி சின்னசாமி ஆகியோருக்கு நன்றி.
இதனைச் சிறப்பாக வெளியிட்ட பொன்னுலகம் புத்தக நிலையத் தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன். அட்டைப்பட ஓவியர் தோழர் மாணிக்கம் நூலின் சாரத்துக்கு ஏற்ப அட்டைப் படத்தை
வடிவமைத்துத் தந்துள்ளார் அவருக்கும் நன்றி.
இந்த நூல் எழுதும் போதும்
சரி, எழுதி முடிக்கும் போதும் சரி, ஏன் எப்போதும் எனது நினைவில் வாழும் தோழர் கோவை
ஈஸ்வரன் அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தியத்துவ மார்க்சியம் (அத்வைத மார்க்சியம்) என்ற பெயரில் கூறப்படும்
தோழர் காலன்துரை அவர்களின் கருத்தை இருபது ஆண்டுகளுக்கு முன் விமர்சித்து எழுதினேன்.
அந்த விமர்சனத்தை படியெடுத்து காலன்துரை நாடுமுழுதும் எடுத்துச் சென்று பல தோழர்களுக்கு
படிக்கக் கொடுத்தார். (இதற்குப் பதில் விமர்சனம் இதுவரை காலன்துரை அளிக்கவில்லை). அந்த
விமர்சனத்தைக் கோவை ஈஸ்வரன் அவர்களும் படித்தார், படித்தது முதல் என்னை இந்தியத் தத்துவத்தை
மார்க்சிய அணுகுமுறையில் எழுதும்படி கேட்டுக் கொண்டார். ஒவ்வொருமுறை நேரில் சந்திக்கும்
போதெல்லாம் இதையே வலியுறுத்தி வந்தார். அவர் நம்மோடு வாழ்கின்ற போதே எழுதி முடிக்கவில்லை
என்பது வருத்தத்தைத் தருகிறது. இருந்தாலும் இந்த அறிமுக நூலை எழுதுவதற்குக் கோவை ஈஸ்வரன்
அவர்கள் அன்று கொடுத்த ஊக்கமே பெரும் காரணம் ஆகும், அதனால் இந்த நேரத்தில் கோவை ஈஸ்வரன்
அவர்களின் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த நூலுக்கு மூன்று பேர் அணிந்துரை அளித்துள்ளனர்.
ஒவ்வொரு அணிந்துரையும் ஒவ்வொரு பார்வையில் எழுதப்பட்டுள்ளது. இந்த அணிந்துரைகள் இந்த
நூலைப் படிக்கு வாசகனை தயார்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
எனது தத்துவத் தேடல் சுமார்
பதினெட்டு வயதில் தொடங்கியது. அப்போதே உபநிடதங்களைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். பவுத்தம்,
சமணம் போன்ற தத்துவங்களையும் இளமைக் காலத்திலேயே படித்தேன். சைவ சித்தாந்தம் நான் பிறந்ததில்
இருந்தே எனது காதில் விழுந்து கொண்டிருந்தது. வைணவம் தேடிபிடித்துப் படித்தேன். தொடக்கக்
காலத்தில் இருந்தே அத்வைதம் படித்துவருகிறேன். ஆதி சங்கரரின் “விவேக சூடாமணி” என்ற நூலை இளமையிலேயே படித்தேன்.
அத்வைதத்தின் சாரம் விளக்கத்துடன் இந்நூலில் முழுமையாக உள்ளது.
எனது தத்துவத் தேடலின்
தொடர்ச்சியானது பொருள்முதல்வாதத்தில் நிறைவடைந்தது. அதன் பிறகு தேவிபிரசாத் சட்டோபாத்யாயா,
நா,வானமாமலை போன்றோர்களின் தத்துவ நூல்களைப் படித்தேன், அது என் தத்துவக் கண்ணோட்டத்தை
வளப்படுத்தியது.
என்னை ஒரு தத்துவ அறிஞராகவோ,
தத்துவ எழுத்தாளராகவோ என்றுமே கருதியதில்லை. தத்துவம் படிக்கும் மாணவன் அவ்வளவுதான்.
நான் படித்ததை உங்களோடு பகிர்கிறேன். எனக்குப் புரிந்த தத்துவத்தை மற்றவர்களுக்குப்
புரிய வைக்க முயல்கிறேன். சிரமப்பட்டுப் படித்ததை, மற்றவர்கள் குறைந்த சிரமத்திலேயே
படித்து புரிந்து கொள்வதற்கு உதவி செய்ய நினைக்கிறேன்.
தத்துவத்தைப் படிக்கின்ற
போதும் சரி, சமூகத்தை கவனிக்கும் போதும் சரி என்னுள் ஏற்படுகிற விமர்சனத்தை உங்கள்
முன் வைக்கிறேன். இது ஒரு தொடக்கப் புள்ளிதான். இடதுசாரிகள் தத்துவத்தில் எவ்வளவோ கடக்க
வேண்டியிருக்கிறது. தொடங்காமல் கடக்க முடியாது. யாராவது தொடங்கித்தானே ஆக வேண்டும்.
தொடக்கம் சரியாக இருந்தால், பயணம் விரைவாக செல்லும். தத்துவத்தில் விருப்பம் உள்ள அனைவரையும்
இணைத்துப் பயணத்தைத் தொடர்வோம்.
தத்துவத்தின் அடிப்படைகளைப்
புரிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற நூல்கள் தமிழிலேயே கிடைக்கின்றன. படித்தறிவதற்கு
நாம்தான் தயாராக வேண்டும். படித்ததை ஒழுங்குபடுத்த வேண்டும், அப்போதுதான் அது கண்ணோட்டமாக
மாறும். கண்ணோட்டத்தின் வழியே தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியும்.
ஒவ்வொரு தத்துவத்துக்கும்
ஒரு நோக்கம் இருக்கிறது. எதார்த்தத்தைப் விமர்சிப்பதிலேயே, வியாக்கியானம் செய்வதிலேயே
காலம் கடத்துகிற தத்துவம் இருக்கிறது, அந்தத் தத்துவம் கருத்துமுதல்வாதம். இந்தக் கருத்துமுதல்வாதத்
தத்துவம் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குகிறது.
எதார்த்தத்தைப் புரிந்து
சமூகத்தை மாற்றும் தத்துவமாக இருப்பது பொருள்முதல்வாதம் ஆகும். பொருள்முதல்வாதம் வாழ்ந்த
வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, வாழ்கின்ற வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. பொருள்முதல்வாதத்
தத்துவம் இந்த உலகை வெறுக்கவில்லை, உலகைப் புரிந்து மாற்றுகிறது. இதனை அடுத்த தொகுதியில்
பார்க்கப் போகிறோம். அதற்கு முன் இந்த முதல் தொகுதியை படிப்போம்.
படிப்படியாக புரிந்து கொள்வதற்கு மாறாக உடனடியாக
படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை மனதில் கொண்டு, இந்நூலின் இறுதியில் ஒரு பின்னிணைப்பு
சேர்க்கப்பட்டுள்ளது. “சுவாமி விவேகானந்தரின் “செயல்முறை வேதாந்தம்” என்கிற நூலுக்கு பொருள்முதல்வாதப்
பார்வையில் விமர்சனம்” இதுவே அந்தப் பின்னிணைப்பு. இதைப் படித்தால் கருத்துமுதல்வாதத்தை
பொருள்முதல்வாதம் எவ்வாறு விமர்சிக்கிறது என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த அடிப்படையில்தான் கருத்துமுதல்வாதத்தின் வர்க்க சார்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.