Wednesday 12 January 2022

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் தொகுதி – I - அணிந்துரை - தா.சந்தரன்

அணிந்துரை:-

தா.சந்தரன்

மார்க்சிய வகுப்பாசிரியர்


 

இந்தியத் தத்துவங்களை தொடர் அறிமுகம் செய்யும் நோக்கில் முதல் தொகுதியை வெளியிட்டுள்ளார் அ.கா.ஈஸ்வரன்.

    ஓரளவுக்கு படித்தவர் மத்தியில்கூட தத்துவம் என்று சொன்னவுடன் அது தமக்கு அந்நியமானது என்று நினைப்பவர்கள் இருக்கின்றனர். படிப்பு என்பதை படிநிலையாகப் பார்த்தால் அதன் உயர்ந்த இடத்தில் தத்துவத்தை வைத்து பார்க்கும் போக்கே நிலவுகிறது. மனிதனின் சிந்தனை என்பதைப் புகழ்கின்ற சமூகமாகவே இன்றுவரை நமது சமூகம் இருந்து வருகிறது.

   ஆயிரம் ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட புனித பிம்பமாக கருதப்படும் தத்துவங்களை, முடிந்தவரை எளிமையாகவும் சுருக்கமாகவும் அறிமுகப்படுத்த  உழைத்திருக்கிறார் இந்நூலாசிரியர். தனது கருத்துக்கான ஆதாரத்தை ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆகியோர்கள் எழுதிய பல்வேறு நூல்களில் இருந்து எடுத்துத் தந்துள்ளார்.

இந்தியா என்ற தேசம் உருவாவதற்கு முன்பு, பல்வேறு நாடுகளாக இருந்த நிலையில் உருவான தத்துவங்களை இந்தியா என்ற தேசத்துக்கான தத்துவமாக மாற்றியவர்கள், எதைத் தங்களுடைய அடிப்படையாக வைத்திருக்கிறார்களோ அதை முதல் தொகுதியில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் நாடு ஆங்கிலேயர்களிடம் பொருளாதாரரீதியாக அடிமைப்பட்டு கிடப்பதை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு, இந்த தேசத்தின் கலாச்சாரம் மிலேச்சர்களால் அழிந்து கொண்டிருப்பதை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. அன்றிலிருந்து இன்றைக்கு மதவாத வலதுசாரிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள காலம்வரை, இந்து மதத்தின்  தத்துவம் என்பதுதான் தேசத்தின் பிரதான தத்துவமாக கூறப்படுகிறது..

பொருள்முதல்வாத தத்துவவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்களால் இந்துத் தத்துவம் குறித்த குறைந்தபட்ச தெளிவின்றி எவ்வாறு வலதுசாரிகளை எதிர்கொள்ள முடியும் என்று யோசித்ததின் விளைவாக அ.கா.ஈஸ்வரன் இந்த நூலை வழங்கியுள்ளார்.

இந்து மதம் என்று கூறப்படுவது வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதைகள் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் இயங்குவதாகத்தான் பரவலாக அழுத்தமாக அதன் தத்துவவாதிகளால் கூறப்பட்டுவருகிறது வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றின் உண்மை தன்மையினை இந்த நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தத்துவம் என்பது மனிதனின் சிந்தனைத் தொகுப்பு என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், அந்தந்த காலக்கட்டத்தின் உற்பத்தி முறை என்ற அடித்தளத்தின் விளைவாக, உருவான மேற்கட்டுமான சிந்தனைகளின் தொகுப்பாக  நிலைபெறுவது எதுவோ, அதுவே தத்துவம் என்று குறிப்பாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தத்துவம் இரண்டு போக்குகளுக்குள் அடங்கிவிடுகிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். தத்துவம் எவ்வளவு வகைகளாகப் பிரித்துப்பிரித்து கூறப்பட்டாலும் அவை இந்த இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுவிடுகிறது.

   மார்க்சியத்துக்கு முன்பிருந்த இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவங்கள் முரண்களோடு கூடிய தொடக்கநிலை பொருள்முதல்வாத (Primitive Materialism)  தத்துவங்களே. அப்படிப்பட்ட சிலவற்றையும் அடுத்த தொகுதியில் அறிமுகம் செய்ய இருக்கிற இந்நூலாசிரியர், இந்த முதல் தொகுதியில் கருத்துமுதல்வாதத் தத்துவங்களின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துகிறார். குறிப்பாக இந்துத் தத்துவத்தின் ஆதார நூல்களின் அடிப்படைகளை விவரித்துள்ளார். அவ்வாறு அறிமுகம் செய்யும் போதே அதன்  போக்கையும், நோக்கத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பக்கால வேதங்கள் எனப்படுபவை இந்த தேசத்துக்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்களால் எழுதப்பட்டதாக உள்ளது. அதில் பெரும் பகுதி அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக, இந்தியாவுக்கு வெளியில்  எழுதப்பட்டவை என்ற தகவலையும் தருகிறார். ஆரம்பகால வேதங்கள் அன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளை பாடுவதாக அமைந்துள்ளது. அதன் இறுதிப்பகுதியில், மெல்லமெல்ல உற்பத்தி முறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, வேதங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மாற்றம் பெற்றுள்ளது.

முதலில், அக்கினி, இயற்கை, உணவு இதனுடனான உறவு கொண்டாட்டம் போன்றவற்றைக் கூறுகிற வேதங்கள் பிற்பாடு, ஓரிடத்தில்  (ஆரியர்கள்) நிலைபெற்று உற்பத்தியில் ஈடுபட்ட, தங்களது உற்பத்தியை பகிர்ந்து கொள்ளும் உறவுகளில் ஏற்படும் இணக்கம்-பிணக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான கருத்துக்களை பேசுகிறது. வர்க்கங்களாக வளரவளர உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்களை கையாள, ஆளும் வர்க்கத்திற்கு ஒரு கருத்தியல் தேவைப்படுகிறது. எனவே அதற்காக உருவாக்கப்படுகிற சிந்தனைகளின் தொகுப்பான தத்துவங்கள், ஆளும் வர்க்கத்தை காப்பாற்றும் கருத்தாயுதமாகிறது. அவ்வாறான தத்துவங்கள் தலைவிதி தத்துவத்தையே மக்களிடம் விதைக்கின்றன.

   வேதத்துக்கு பிறகான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்றவை முழுக்கமுழுக்க இந்தக் கருத்துமுதல்வாத தலைவிதி தத்துவத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இன்றுவரை இந்திய ஆளும் வர்க்க கருத்தியலின் அடிப்படை இவையே.

   ஆரியர்களுக்கு எதிராக மற்றவர்கள் என்ற போக்கு இந்தியாவில் வலுவாகக் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆரியத்துக்கு எதிராக திராவிடம் என்ற கருத்தியல் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பகுத்தறிவுவாதிகள் நடத்தும் போராட்டத்தில், இந்து மதம், ஆரியர்களின் முழுமையான படைப்பாக கருதப்படுகிறது. அதன் வழியில் சிலை வழிபாடு குறித்து கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. சிலையல்ல, கல் என்பது போன்ற விமர்சனங்கள். ஆனால், சிலைவழிபாடு ஆரம்பத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்ததையும் பிற்காலத்திலேயே ஆரியர்கள் அதை மேற்கொண்டதையும் அ.கா.ஈஸ்வரன் இந்த நூலில் குறிப்பிடுவதோடு, இதற்கு சான்றாக, அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆதாரப்படுத்துகிறார்.

   முக்கியமாக தமிழ் எதிர் சமஸ்கிரும் என்ற விவாதத்தில் ஆரியர்களின் மொழி சமஸ்கிருதம் என்று கூறி கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால், முதலில் ஆரியர்கள்  பேசிய மொழி சமஸ்கிருதம் அல்ல, வைதீக மொழி என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

உபநிடதம், பிரம்ம சூத்திரம், கீதை போன்றவற்றில் இல்லறம், இல்லறத்தில் இருந்து விடுபடும் துறவறம் என்ற இரண்டு போக்குகளை உலக வழக்காக கூறுகிறார்கள். இல்லறத்துக்கு எதிரான துறவறத்தையே ஆன்மீகம் என்கிறார்கள். ஆரம்ப கால வேதங்கள், உலக இன்பங்களை அனுபவிக்கும் பாடல்களாகவே உள்ளது.

    ஆரம்ப கால வேதம் உலக இன்பத்தையும், பிற்பாடுவந்த உபநிடதம், கீதை போன்றவை துறவறத்தையும் கூறுகிற இந்த முரண்களை கேள்விக்கு உட்படுத்தினால், முடிந்த அளவு பதில் தருவதும், பதில் தர முடியாத போது, தலை வெடித்துவிடும் என்றும் பயமுறுத்தி, விவாதத்தை முடிப்பதுமே, இந்து மதத்தின் தத்துவார்த்த நிலைபாடு என்பது பிருகதாரண்யக உபநிடதத்தை நோக்கும் போது தெரிந்துவிடுகிறது.

   ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளோடு உருவாகும் தத்துவங்களை, அவை தொடக்கநிலை பொருள்முதல்வாத தத்துவங்களாகவே இருந்தாலும் அவையும் இந்து மதத் தத்துவங்கள் தான் என்று நிறுவிடும் முயற்சியே காலம்காலமாக நடந்துவருகிறது. அதாவது கருத்துமுதல்வாதத்தை ஆதரிப்பது அதனோடு முரண்படுவது, அதை எதிர்ப்பது என அனைத்தையும் ஒரே கூட்டுக்குள் அடைக்கும் வேலையைத்தான் கீதை செய்கிறது.

நிலப்பிரபுத்துவம் மறைந்து முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த காலத்திலும் இந்தத் தத்துவங்கள் நீடித்து இருப்பதைக் காண்கிறோம். அவற்றைப் புரிந்து கொள்ளாமல் அதை ஆதரிக்கிற, சமூக சமத்துவத்திற்கு எதிரிகளாக இருக்கிறவர்களை புரிந்து கொள்ளாமல் எப்படி சமர்புரிய முடியும்?. பிரபுத்துவ காலத்தில் ஆளும் வர்க்கம் பெருக்கிக் கொண்ட செல்வங்கள், ஏதுமற்ற பஞ்சை பராரிகளை வெகுண்டு எழச்செய்யும் என்பது இயல்பு, அந்த எழுச்சியை மடைமாற்ற, கடவுளின் பெயரால் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே என்பதையே கடமையை செய் பலனை எதிர்பாராதே என்ற வாசகத்தின் மூலம் ஆளும் வர்க்க தத்துவமாக நிலைநிறுத்துகிறது கீதை. அவ்வாறு பலனை எதிர்பாக்காமல் உழைப்பதை கர்ம யோகம் என்கிறது.

யோகம் என்று ஏற்றுக் கொண்டு பிறப்பின் அடிப்படையிலான தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்கிறது. அதன்படி உழைத்தாலும், உழைப்பைவிட உழைப்பைத் தவிர்த்த சிந்தனையின் முலம் மட்டுமே பெறப்படும் ஞான யோகமே முக்தி என்கிறது. உழைப்பைக் கீழானதாக்கி அதாவது உடலுழைப்பைக் கீழானதாக்கி, மூளை உழைப்பை அல்லது சிந்திப்பதை உயர்வாக்குவதின் மூலம் மூளை உழைப்பாளிகளை மேலானவர்களாக ஆக்கும் தத்துவத்தையும் உள்ளடக்கியது கீதை. இது குறித்து விமர்சனம் செய்ய வேண்டும் என்றால், இதன் தத்துவங்களை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறிந்து கொள்வதற்காகவே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்துக்குத் தேவையான விமர்சனம் இந்நூலில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்கங்கள் படித்ததை, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு சுருக்கி இருநூறு பக்கங்களில் கொடுத்துள்ளார் இந்நூலாசிரியர்.

வேதங்கள் கீதைகள், உபநிடதங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் திரும்பதிரும்ப வருகிற மாதிரி எழுதியுள்ளார். அவ்வாறு அழுத்தமாக கூறும்போது தான் அவைகளுடைய முக்கியத்துவம் புரியும் என்பதற்காகவே அதை திரும்பதிரும்ப கொடுத்துள்ளார் என்பது எனது எண்ணம். அதனால், இதனை கூறியது கூறல் என்கிற வகையான குற்றமாக இதைப் பார்க்க முடியாது. மேலும் இதுவரை அதிகம் படித்திருக்காத ஒரு துறையாக தத்துவத்துறை இருப்பதால் சற்று நிதானித்து ஆழ்ந்து படிக்க வேண்டியுள்ளது. என்னைப் போன்ற சாதாரண வாசகரும் படித்திடும் வண்ணம் இந்நூலை உருவாக்கி இருக்கும் அ.கா.ஈஸ்வரன் பாராட்டுக்கு உரியவர். ஒரு வாசகனின் பார்வையில் இருந்து எழுதப்பட்டது இந்த அணிந்துரை.

முற்போக்கு முகாம்களில் இருக்கும் தத்துவார்த்த துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர் பெருமக்கள், இந்நூலைப் படித்து கருத்துரைக்கும் பட்சத்தில் இதுகுறித்து விவாதங்கள், இன்னும் அதிகமாக முன்னகரும் என்று கருதுகிறேன். இந்த முன்னுரை எழுதுவதற்கு வாய்ப்பளித்த பதிப்பகத்தாருக்கும், நூலாசியருக்கும் நன்றி.

   அ.கா.ஈஸ்வரனுடைய இத்தகைய தத்துவப் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். அடுத்த தொகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment