Thursday 30 December 2021

“ஸ்டாலின் அரசியல்” (அவதூறுகளுக்கு மறுப்பு) என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை

 - அ.கா.ஈஸ்வரன்

    (ஸ்டாலின் மீதான அவதூறுகள் தவறானது என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று இந்த நூல் )

ஸ்டாலின் அரசியல் (அவதூறுகளுக்கு மறுப்பு)
வெளியீடு: செஞ்சோலைப் பதிப்பகம்
ஓசூர்.

விலை : ரூ.80/-

மின்னஞ்சல் : sencholaipathippagam@gmail.com

பேச : 98948 35373

    ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்கும் போதும், அவர் உருவப் படத்தைப் பார்க்கும் போதும், பலருக்கு மிகப்பெரிய உற்சாகம் பிறக்கிறது. அதைவிட அதிகமாக ஸ்டாலினைப் பற்றிய அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது. உற்சாகம் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அதைவிட அவதூறுகள் அதிகமாக, அதை ஒட்டி பரப்பப்படுகிறது.

    ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் பலவகையினர். அதில் மார்க்சியத்தின் எதிரிகள் - அதாவது முதலாளித்துவ ஆதரவாளர்கள் பரப்பியதே அதிகம். அது மட்டுமல்லாது கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு இடையிலும், ஸ்டாலின் பற்றிய அவதூறுகளைப் பரப்புபவர்கள் இருக்கின்றனர்.

    பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் உள்ள, பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களில் ஒரு சில கம்யூனிஸ்டுகளும் அடங்குவர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்காதவர் கம்யூனிஸ்டாகவே இருக்க முடியாது. “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” கூறப்பட்டதைப் போல, பாட்டாளி வர்க்கம் அரசியல் மேலாதிக்கம் பெற்றாக வேண்டும். அரசியல் மேலாதிக்கம் கண்டிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்க முடியும் என்று மார்க்ஸ் கோத்தா வேலைதிட்டத்திற்கு எழுதிய விமர்சனத்தில் கூறியதை, மறுப்பவர்களால் மார்க்சிய வழியில் செயற்பட முடியாது.

“பாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் முன்னதாக, அரசியல் மேலாதிக்கம் பெற்றாக வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாக உயர்ந்தாக வேண்டும், தன்னையே தேசமாக அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்கம் தேசிய தன்மை கொண்டதாகவே இருக்கிறது, இந்தச் சொல்லுக்கான முதலாளித்துவப் பொருளில் அல்ல.”

                                        - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்

    ஸ்டாலினைப் பற்றிய நடுநிலையான ஆய்வு அவசியம் என்று பல தரப்புகளில் இருந்து குரல் வருகிறது. நாம் மார்க்ஸ் எழுதியதை படித்து ஏற்றுக் கொண்டு தான் பின்பற்றுகிறோம். மார்க்ஸ் எழுதியதை எல்லாம் அப்படியே புரியாமல் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி இருக்க ஸ்டாலினை அவ்வாறு ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சரியான பார்வையே. ஆனால் ஸ்டாலின் பற்றிய அவதூறு என்பதை, அவரைப் பற்றியதாக மட்டும் பார்க்க முடியவில்லை. ஸ்டாலினைப் பற்றிய அவதூறு மார்க்சியம் பற்றிய அவதூறாக மாற்றப்படுகிறது. அதற்காகவே அவரைப் பற்றிய அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அதனால் அனைத்தையும்விட ஸ்டாலின் அவதூறுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டியது அவசியமாகிறது.

    ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், குருச்சேவ் தலைமையிலான திருத்தல்வாதக் கூட்டம் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதை அடுத்து சர்வதேச அளவில் கம்யூனிச முகாம், சோவியத் யூனியன் மற்றும் சீனா தலைமையிலான முகாம்கள் என இரண்டாகப் பிளவுண்டது. அத்தகைய பிளவு இந்தியாவிலும் எதிரொலித்து. ஆனால் கெடுவாய்ப்பாக இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் எவையும் ஸ்டாலின் பற்றிய அவதூறுக்கு சரியான வகையில் முழுமையாகவும், உரிய வகையிலும் போதுமான அளவுக்கு பதிலளிக்கவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து கொண்டு ஸ்டாலினைப் பற்றி அவதூறை பரப்புவதும் இன்று வரை நடந்து வருகிறது.

    ரஷ்ய மயக்கங்களில் இருந்து இன்னும் நமது கட்சிகள் எழுந்திருக்கவில்லை. குருசேவ், பிரெஷ்னேவ், கோர்பசேவ் போன்ற திருத்தல்வாதிகளின் தவறான கண்ணோட்டத்தில் இருந்து, பல கட்சிகள் இன்னும் வெளிவர முடியாமல் தவிக்கின்றன. சுயவிமர்சனம் இல்லாமலும், சொந்தக் காலில் நிற்பதற்குப் பலம் இல்லாமலும் இருக்கின்றன. பிற்காலச் சோவியத் திருத்தல் போக்கின் தாக்கத்தில் இருந்து விடுபடாமல், இங்கே சரியான பாதையில் நடைபோட முடியாது என்பதே யதார்த்த உண்மையாகும்.

    இந்த நிலையில் ஸ்டாலின் பற்றிய அவதூறுகளுக்கு இத்தகைய கட்சிகள் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால், ஸ்டாலின் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலளிக்கும் நூல்கள் பலவற்றை மொழியாக்கம் செய்தும், தமிழில் நேரடியாக எழுதியும் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குத் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    சோவியத் வீழ்ச்சியைப் பற்றிய ஆய்வு அவசியமானதே, அதைவிட அல்லது அதைச் செய்வதற்கு முன்பாக ஸ்டாலின் பற்றிய கட்டுக்கதைகளுக்குப் பதிலளிக்க வேண்டும். இதுவரை ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல தமிழில் வெளிவந்துள்ளது. அதில் ஒரளவுக்கு ஸ்டாலின் பற்றிய அவதூறுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. அதே போல் குரோவர் ஃபர் எழுதிய “ஸ்டாலின் பற்றிக் குருசேவின் பொய்யுரைகள்” என்ற நூலைப் பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    நம் கையில் இருக்கும் “ஸ்டாலின் அரசியல்” (அவதூறுகளுக்கு மறுப்பு) என்கிற இந்த நூல் அமெரிக்காவின் மார்க்சிய-லெனினியக் கழகத்தினரின் காலாண்டு பத்திரிகையில் 1984ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது ஒரு சிறிய நூல் என்றாலும், ஸ்டாலின் குறித்த அவதூறுகள் மற்றும் கட்டுக்கதைகளுக்கு எவ்வளவு சிறப்பாக பதிலளிக்க முடியுமோ அதை முழுமையாக செய்துள்ளது.

    ஸ்டாலினுக்குப் பின்வந்த சோவியத் ஆட்சியாளர்கள், ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். பல்வேறு நூல்களில் இருந்து ஸ்டாலின் பெயரை மறுபதிப்புகளில் நீக்கினர், அவரது நினைவுச் சின்னங்களை அழித்தனர்.  1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சோவியத் கம்யூனிஸ்டு கட்சிப் பேராயம் நடந்து கொண்டிருந்த போதே, கிரெம்ளினில் லெனின் நினைவகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை அங்கிருந்து இரவோடு இரவாக அகற்றி, வளாகத்திற்கு வெளியில் புதைத்தனர்.

    ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு அவரை மட்டுமே குற்றவாளி ஆக்க முயற்சித்தனர். மேற்குலக கம்யூனிச எதிர்ப்பாளர்களும் டிராட்ஸ்கிய துரோகிகளும் கூறியது போல அவரை ஈவிரக்கமற்ற சர்வாதிகாரி ஆக சித்தரித்தனர்.   இதன் மூலம் ருஷ்ய மக்களின் மனங்களில் இருந்தும், உலக இடதுசாரிகளின் மனங்களில் இருந்தும் ஸ்டாலினை நீக்கிட முடியும் என்று கனவு கண்டனர். இதனால் ஒரு தற்காலிக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், பல்வேறு இடதுசாரி கட்சிகள் இன்றும் அதன் வழியில் செல்லலாம், ஆனால் பெரும்பாலான இடதுசாரிகளின் மனங்களில் இருந்தும், ஏன் கம்யூனிஸ்ட் அல்லாத மற்ற முற்போக்காளர்களின் மனங்களில் இருந்தும் ஸ்டாலினை நீக்கிட முடியவில்லை என்பதே உண்மை.

    ஸ்டாலின் குறித்த அத்தகைய அவதூறுகளின் அடிப்படை, அரசியல் காரணங்களே என்று இந்த நூல் சரியாகச் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த அவதூறுகளைத் தொடர்ந்து, மார்க்சிய அடிப்படைகள் திரிக்கப்பட்டன. ஸ்டாலின் எதிர்ப்பு என்பது மார்க்சிய எதிர்ப்பே என்பதை இந்த நூல் சரியாக விளக்கி இருக்கிறது.

    நான் எழுதிய “லெனின் வாழ்வும் படைப்பும்” என்ற நூலின் இறுதியில் ஸ்டாலினைப் பற்றிக் குறிப்பிடும் போது, சோவியத் வீழ்ச்சிக்குக் காரணமாக, குட்டி முதலாளித்துவ மென்ஷெவிக்குகளை நேரடியாகக் குறிப்பிடலாமா? வேண்டாமா? என்ற யோசித்து, வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் இந்த நூல் மென்ஷெவிக்குகளைக் குறிப்பிட்டு நேரடியாக விமர்சித்துள்ளது. இந்த நூலின் சிறப்பான பகுதியில் இதுவும் ஒன்றாகும் என்பது எனது கருத்து.

    ஸ்டாலின் வாழ்ந்த போது அவருடன் நெருங்கி இருந்தவர்கள், அவரது ஜனநாயக வழிப்பட்ட போக்கை ஒப்புக் கொள்கின்றனர், ஆனால் அவருடன் கூடவே இருந்து குழிபறிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த சதிகாரர்கள் மட்டுமே அவரைப் பற்றிய ஆதாரங்கள் இல்லாத அவதூறுகளைப் பரப்பினர்.

    ஸ்டாலின் எப்போதும் ஜனநாயக ரீதியாகவும், பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டார் என்பதை ஆதாரத்தோடு இந்த நூல் நிறுவியுள்ளது. அதே போல் ஸ்டாலின் சர்வாதிகாரியா? என்ற கேள்வியை எழுப்பி, அவர் எவ்வறு சர்வாதிகாரி அல்ல என்பதை விளக்கியுள்ளது.

    கூட்டுப்பண்ணை மயமாக்கல் காலத்தின் போது ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறைக்கு, குலாக்குகளும், வெளிநாட்டு முதலாளித்துவ நாசவேலைகளும் தான் காரணம் என்பதை இன்றைய அவதூறுவாதிகள் ஏற்பதில்லை. இன்றைய அவதூறுவாதிகள், அன்றைய அவதூறுகளையே கண்மூடித் தனமாகப் பின்பற்றுகிறார்கள் என்பதானால், இவர்கள் உண்மையை நாட மாட்டார்கள்.

    பழைய புரட்சியாளர்கள் புரட்சிகர அரசாங்கத்தைக் கவிழ்க்க முனைந்தது ஏன் என்பதை இந்த நூல் அரசியல் கண்ணோட்டத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இன்று நம்மிடையே, புரட்சி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று குருட்டாம் போக்கில் கூறுபவர்கள், புரட்சிக்குப் பின்பான நடிவடிக்கையின் யதார்த்தத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கவே செய்வார்கள் என்பதை இந்த இடத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறும், அவரது படைப்பும் இன்று கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவே இருக்கும். தமிழில் ஸ்டாலின் படைப்புகளைப் பதினைந்து தொகுதிகளாக “அலைகள் வெளியீட்டகம்” ஏற்கனவே வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் பற்றிய அவதூறுகளை மறுக்கும் முகமாக அந்த எழுத்துக்கள் நமக்குப் பயனளிக்கும். அவதூறுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ள ஸ்டாலின் வாழ்க்கை வரலாறும் அதே போல் நமக்கு வழிகாட்டும்.

    பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினர் ஒடுக்குகிற முதலாளித்துவ அரசை ஜனநாயக அரசாக கருதுபவர்கள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற பெரும்பான்மையினரின் சோவியத் ஜனநாயகத்தை, ஜனநாயகமாகப் புரிந்து கொள்ளாமல் போவர்கள். அவர்கள் மார்க்சிய அடிப்படைகளுக்கு எதிரானவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மார்க்சிய வழியில் விளக்கம் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.

      ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பல வழிகளில் பரப்பப்பட்டு வருகிறது. அதனை எதிர் கொள்ள நாமும் பல வழிகளில் முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியில் “ஸ்டாலின் அரசியல்” என்ற இந்த நூலை “செஞ்சோலை பதிப்பகம்” வெளியிட்டு இருப்பதை பாராட்டடாமல் இருக்க முடியாது. இந்த நூலை சுந்தர சோழன் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார். இது போன்ற பணிகளைப் பதிப்பகமும் மொழிபெயர்ப்பாளரும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நூலின் இறுதியில் கூறப்பட்டதை, நினைவு கூறுவதுடன் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

“போல்ஷிவிக்குகள், லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் 1917 மற்றும் 1953ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சாதித்தவை உலக வரலாற்றின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகும். இந்தச் சாதனையானது பொருளாயத முன்னேற்றம் என்பதைக் காட்டிலும், கலாச்சார முன்னேற்றம், மனித சுதந்திரம் மற்றும் வெகுஜன மக்களுக்கு உண்மையான அறிவு புகட்டுதல்ஆகியவற்றில் எட்டப்பட்ட முன்னேற்றம் ஆகும். இந்தக் கலாச்சார முன்னேற்றம் மனித வரலாற்றில் ஈடு இணையற்ற ஒன்றாகும், மேலும் ஸ்டாலினின் பெயர் எப்போதும் அதனுடன் தொடர்புடையதாக இருக்கும்.” (பக்.78-79)

ஆம், ஸ்டாலின் பெயர் மனித வரலாற்றில் ஈடு இணையற்ற ஒன்றாகவே மதிக்கப்படும்.

No comments:

Post a Comment