Sunday 10 August 2014

பின்நவீனத்துவம்- கம்யூனிச எதிப்பின் முற்போக்கு முகமூடி

(இந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரை)
ஆசிரியர்- திருப்பூர் குணா
வெளியீடு-
         பொன்னுலகம் பதிப்பகம்
      4/413 பாரதிநகர், 3வது வீதி 
      பிச்சம்பாளையம் (அஞ்சல்)
      திருப்பூர்- 641 603

மின்னஞ்சல்- gunarpf@gmail.com

அலைபேசி எண் - 94866 41586

விலை – ரூ.60/-

வர்க்கப் பிளவை ஏற்படுத்தும் பின்நவீனத்துவம் போன்ற  சித்தாந்தப் போக்கு தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சியத்தின் தேவையை வலியுறுத்துகிறது

ஒர் அரசியல் நிகழ்வு அல்லது அரசியல் கட்சியைப் பற்றி விமர்சிக்கும் போது அதன் அரசியல் நிலைப்பாட்டில் இருந்தே பொதுவாக விமர்சிக்கப்படுகிறது. சரியாக செய்வதானால் அந்த அரசியலின் பொருளாதார பின்னணி, அதற்கான தத்துவம் ஆகியவற்றையும் இணைத்து விமர்சிக்கப்பட வேண்டும். இந்த வகையில் இந்த சிறு நூல் ஒரு அரசியல் கட்சியின் செயற்பாட்டை, அந்த செயற்பாட்டிற்கு அடித்தளமாய் நிற்கின்ற தத்துவத்தை விமர்சிக்கிறது. அந்தத் தத்துவம் பின்நவினத்துவமாகும். பின்நவினத்துவம் முன்னிருத்துகின்ற அடையாள அரசியலின் விமர்சிப்போடே, அடையாள அரசியல் கட்சியாக செயல் படும் பாட்டாளி மக்கள் கட்சியை தோழர் திருப்பூர் குணா விமர்சித்துளளார்.

"வட தமிழகத்து மக்களை சாதிரீதியாக பிளவு படுத்துவதுதான் கம்யூனிச அபாயம் திரும்பவும் தலைதூக்காமல் செய்யும் வழி என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளம்தான் பின்நவீனத்துவ வாதிகள் பாமகவுக்கு கொடுத்த ஆதரவு." என்று தோழர் திருப்பூர் குணா பின்நவீனத்துவ சித்தாந்தத்தின் நோக்கத்தை வெளிக் கொணர்ந்துள்ளார். மேலும், வடதமிழகத்தில் இரு சமூகங்களும் மேல் கீழ் சாதிகளாக அறியப்பட்டாலும் மேல்சாதி எனக் கூறிக் கொள்ளும் வன்னியரில் பெரும்பாலானோர் ஏழைகளே. ஆகவே வர்க்க அடிப்படையில் எளிதாக ஒன்றுகூடும் வாய்ப்புடைய மக்களைக் கொண்ட, புரட்சித் தீயை பற்றவைத்து பரவச் செய்யும் வாய்ப்புடைய பகுதியை சிதைப்பதே இந்த தத்துவப் போக்கின் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

"கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையை நீட்டிக்க வைப்பதற்கும் கொள்ளையில் பெரும்பங்கை அபகரிப்பதற்கும் பதவி, அதிகாரம் மட்டுமே அவசியம். அத்தோடு பதவியையும் அதிகாரத்தையும் வழங்குகிற மக்கள் விழிப்படைந்து கொள்ளையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழக்கூடாது என்பது முக்கியமாகும். இவையெல்லாவற்றுக்கும் எளிதான வழியாக மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும், வீண்பெருமை பேசும் அடையாள அரசியல் இருக்கிறது." என்று தெளிவாக்கியுள்ளார். தோழர் மதம் என்ற அபீனியைப் போன்றே, இந்த அடையாள அரசியசியலின் மயக்கும் ஆபத்தை சுட்டிக்காடடியுள்ளார்.

"சாதிய அடையாள அரசியல் இயக்கத்தவர் தம் சொந்த சாதி மக்களுக்கு அறிவியலுக்குப் புறம்பானதையும், உண்மைக்கு மாறானதையும் சொல்லிக் கொடுத்து முட்டாளாக்குகின்றனர். மக்களின் அறிவைப் பறித்துக் கொண்டு தாங்கள் ஏவுகிற பக்கம் பாய்கிற முரடர்களாக்குகின்றனர்." என்று இந்த ஆபத்தை தோழர் நிகழ்கால அபாயம் என்று சொல்வது உண்மையே.

தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும், பின்நவீனத்துவ நோக்கத்தை தோழர் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார், "தலித்துகளுக்கு எந்த சாதி அடையாளமும் பெருமைக்குரியதாக இல்லை என்பதாலும், சாதி ஒழிப்பே ஒரே பெருமிதம் என்பதாலும் சாதி அடையாள அரசியல் என்பது மேல் சாதிக்களுக்கான அரசியலாக தெளிவோடு முன்னெடுத்தார்கள். ஆக மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க மேல் சாதி மக்களிடையே சாதியப் பெருமையெனும் திமிரைக் காப்பாற்றி நீடிக்க செய்கிற பணிதான் ஆண்ட பரம்பரை எனும் அரசியலின் ஆரம்பம் ஆகும்."

இந்த ஆபத்தை தோழர் பாசிசமாக விமர்சிப்பது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. பாசிசம் ஆட்சியைப் பிடிக்கும்வரை எதை சொல்லியதோ, அதனை ஆட்சியில் அமர்ந்தவுடன் அதிவேகமாக செயற்பாட்டில் காட்டத் தொடங்கும். ஆனால் இந்த அடையாள அரசியல் என்பது ஆட்சியைப் பிடிப்பதற்கு தேவைப்படுகிற முழுக்கத்தை மட்டும் முன்வைத்து, ஆட்சியில் அமர்ந்தவுடன் அதனை நிறைவேற்றாமல், சுரண்டல் வர்க்கத்துக்கு சேவை செய்திட தொடங்குகின்றது. அதன் முக்கியமான நோக்கம் அட்சியை பிடித்தல் என்பதே, அதற்காக வைக்கும் முழுக்கங்கள் ஆட்சியில் நிறைவேற்றப் படுவதற்கில்லை.

இந்த அடையான அரசியல் என்பது தோழர் குறிப்பிடுவது போல் ஆபத்தான ஒன்று தான், ஆனால் அதனை பாசிசமாக வர்ணிப்பது சரியா? என்பதே எனது கேள்வி. அதே போல் "பின்நவீனத்துவவாதிகள் என்பவர்கள் சமூக விரோதிகளாவர்" என்று கூறுவதை விட சமூகத்தை பிளவுபடுத்துபவர்கள் என்று கூறுவதே சரி. இந்த அடையாள அரசியலின் நோக்கமே தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதாக இருப்பதால், பின்நவீனத்துவவாதிகளை பாட்டாளி வர்க்க விரோதிகள் என்று கூறுவது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.

வர்க்கப் பிளவை ஏற்படுத்தும் இந்த பின்நவீனத்துவத்தைப் பற்றி தோழர் சற்று கூடுதலாக எழுதி இருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக அ.மார்க்சின் குழுவினர் வர்க்கப் போராட்டம், வர்க்க ஒற்றுமை, வர்க்க அரசியல் ஆகியவற்றின் மீது அவநம்பிக்கையை விதைத்து, வட தமிழ்நாட்டில் கம்யூனிச இயக்கங்களை சிதைக்கின்ற பணியினை செய்வதை எதிர்க்கும் நிலையோடு அவர்களின் கருத்துகளுக்கு மார்க்சிய வழிபட்ட பதிலையும் கொடுக்க வேண்டும்.

அ.மார்க்ஸ் மார்க்சிய அடிப்படைகளை அடிப்படைவாதமாகக் கூறுகிறார். இது மார்க்சியத்தை அதன் வழியில் அறிந்து கொள்ளாமையை வெளிப்படுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே அனைத்துக்கும் தீர்வு என்ற பெருங்கதையாடலாக மார்க்சியத்தை பின்நவீனத்துவம் பார்க்கிறது. மார்க்சியம் சமூகத்தில் காணப்படும் பன்மைத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமல் இல்லை.  பன்மைத் தன்மையின் தோற்றத்தை அறிந்து அதன் புறநிலைக்காரணங்களால் பாட்டாளி வர்க்கத்தினை முதனிலைப்படுத்துகிறது. அதே நேரத்தில் சமூகத்தில் காணப்படும் பன்மைத் தன்மைகளுக்கிடையே காணப்படும் ஒருமையை அது புரிந்திருக்கிறது. ஆனால் பின்நவினத்துவம் அந்த ஒருமையை மறுத்து பன்மைத் தன்மைகளை முதன்மைப்படுத்தி தனித்தனித் தீவாகப் பிளவுப்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அதனுள்ளும், அதனை சார்ந்துள்ள பிறவற்றோடும் சேர்ந்து தான் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு பிரச்சினைக்கான காரணங்கள் அதனுள்ளே மட்டும் காணப்படுவதில்லை. அதனால், அதனைத் தோற்றுவிக்கின்ற புறநிலைப் போக்கை அறிந்து கொள்ள வேண்டும்.

நிலப்பிரபுத்துவமே தலித்தியத்தை நிலைநிறுத்துகிறது. நிலப்பிரபுத்துவத்தை விடுத்து தலித்தியத்தை தனிமைப்படுத்தி பேசுவது காரியத்துக்கான காரணத்தை மறுப்பதாகும். பின்நவீனத்துவவாதிகளுக்கு தர்க்கம் இயக்கவியல் போன்றவை ஒவ்வாமையாகும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தீர்ப்பதைவிட அந்த பிரச்சினையை பிரச்சினைக்குள்ளாக்குவதே இந்த பின்நவீனத்துவத்தின் நோக்கமாகும். சமூகம் ஒரு விதிக்குள் இயங்குகிறது என்பதை பின்நவீனத்துவம் மறுத்து தான்தோன்றித் தனத்தையே முன்னிருத்துகிறது, சமூகப் புரட்சியை மறுதலித்து தன்னெழுச்சியை ஏற்கிறது. இந்த தன்னெழுச்சியை ஒழுங்குப்படுத்துகின்ற ஒருங்கிணைக்கின்ற கட்சியை மறுக்கிறது

அ.மார்க்ஸ் கூறுகிறார்:- பெருங்கதையாடல்களக்குப் பதிலாக சிறுகதையாடல்களே இனி சாத்தியம். பேரிலக்கியத் தேடல்களுக்குப் பதிலாக சிறிய திரள்களின் இலக்கியங்களேயே இனி ஊக்குவிக்க முடியும்.

மார்க்சியத்துக்கு எதிரான இந்த பின்நவீனத்துவவாதிகளை, "மாற்றுக் கருத்துக் கொண்ட ஜனநாயக சக்திகளாகவே கருதுகின்ற" இயக்கங்களை தோழர் விமர்சிக்கிறார்.
"கெடுவாய்ப்பாக சில இயக்கங்கள் இன்றுவரை பின்நவீனத்துவவாதிகளை மாற்றுக் கருத்துக் கொண்ட ஜனநாயக சக்திகளாகவே கருதுகின்றன. இதற்குக் காரணம் இயக்கங்களின் அரசு குறித்த கொள்கை பலவீனமேயாகும். அரசு என்பது ஓர் ஒடுக்குமுறைக் கருவி என எல்லா இயக்கங்களும் ஒப்புக்கொள்ளும். இதன்பொருள் துப்பாக்கி உள்ளிட்ட கருவிகளின் செயல்பாடு என்றே கொள்ளப்படுகிறது. ஆனால் அரசு துப்பாக்கியின் மூலம் ஒடுக்குவதற்கு முன்பு மக்களை கருத்தியல் அடிப்படையில் அணியப்படுத்தி வைத்திருக்கிறது என்பதை இயக்கங்கள் போதுமான அழுத்தத்தோடு பார்ப்பதில்லை. ஆதலால்தான் தத்தவார்த்த தளத்தில் அரசின் செயல்பாடுகளும், அதற்கான அரசின் தத்துவ அடியாட்களும் குறித்து கவலைப்படுவதில்லை. அந்த வகையில் பின்நவீனத்துவம் குறித்தும், அதன் கேடுகள் குறித்தும் இயக்கங்கள் போதுமான அளவு சிந்திக்கவில்லை."
தோழர் திருப்பூர் குணா அவர்களின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியமானதாகும். கருத்தியல் முறையில் ஒடுக்குவதை எதிர்க்கின்ற சித்தாந்த பலத்தை இயக்கங்கள் பெற்றாக வேண்டும். அதற்கு தேவைப்படுகிற மார்க்சிய அரசியல் பொருளாதாரம், மார்க்சிய தத்துவம் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
மார்க்சிய அடிப்படைகளை முன்வைத்து அதற்கான சித்தாந்தப் போராட்டத்தை முன்னிருத்துவது இன்றைய அவசியக் கடமையாகும்.