தமிழில்
மு.சிவலிங்கம்
விலை-ரூ.25/-
வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை
தொலை
பேசி- 044-24332424, 24356935 விற்பனை 044-24332924
(“மார்க்ஸ்-எங்கெல்ஸ்
வாழ்வும் படைப்பு” என்ற எனது நூல் அண்மையில் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்நூலில் எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்ற நூலைப் பற்றி எழுதியவைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
இந்நூலுக்கான அறிமுகமாகவும் படிக்க வேண்டியதின் அவசியத்தையும் இது வலியுறுத்தும்)
"நீதி கோருவோர் சங்க"த்தின் லண்டன் கிளை அதன் பிரதிநிதியான மோள் என்பவர், பிரஸ்ஸெல்சில்
இருந்த மார்க்சிடமும். பாரிசில் இருந்த எங்கெல்சிடமும் அனுப்பி
சங்கத்தில் சேரும்படி கேட்டுக் கொண்டது. இச்சங்கத்தில் இணைந்து
திருத்தியமைப்பதற்கும், அதன் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதிலும்
ஈடுபடுமாறு கோரியது. இருவரும் இதற்கு உடன்பட்டனர்.
இச்சங்கத்தின்
காங்கிரஸ் 1847ல் ஜூன் மாதம் லண்டனில்
நடைபெற்றது. பாரிஸ் கிளையின் சார்பாக எங்கெல்ஸ் லண்டன்
சென்றார். பொருளாதார நெருக்கடியால் மார்க்சால்
லண்டனுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் அவருடைய கருத்துக்கள் அங்கே பதியப்பட்டது. இதுவரை
இச்சங்கம் தனது நோக்கமாக "பூமியில் கடவுளின் ஆட்சியை" நிறுவுதல், "அருகில் உள்ளோர் மீது அன்பு செலுத்துதல்" நியாயம், சமத்துவம் போன்ற லட்சியங்களையே
கொண்டிருந்தது. இச்சங்கத்தின் பிரதான முழக்கமான "எல்லா மனிதர்களும் சகோதரர்கள்"
என்பது "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"
என்பதாய்
மாற்றப்பட்டது.
சங்கத்தின்
பழைய சிந்தனையான குறுங்குழுவாதம், சதியாலோசனை போன்ற போக்குகள் நீக்கப்பட்டு
பாட்டாளி வர்க்க நோக்கங்கள் நிலைநாட்டப்பட்டது. .
"நீதி கோருவோர்
சங்கம்" என்ற பெயர்,
ஏற்றுக்கொள்ளப்பட்ட
புதிய பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்துக்குப் பொருத்தமாக "கம்யூனிஸ்ட் கழகம்"
என்று பெயர்
மாற்றப்பட்டது.
1847ன் இறுதியில் "கம்யூனிஸ்ட் கழக"த்தின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. இதில்
மார்க்சும், எங்கெல்சும் கலந்து கொண்டனர். இச்
சங்கத்தின் விதிகள் முடிவு செய்யப்பட்டது. முதலாளி வர்க்கத்தை முறியடிப்பதும், பாட்டாளி
வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும். வர்க்கங்களிக்கிடைய உள்ள முரண்களைக் கொண்ட
முதலாளித்துவ சமூகத்தை அழித்து, வர்க்கங்களற்ற, தனிச்சொத்துடைமை
நீக்கப்பட்ட புதிய சமூகத்தை நிறுவுவதே லட்சியமாக,
விதிமுறையில் குறிப்பிடப்பட்டது.
"கம்யூனிஸ்ட் கழக"த்தின் வேலைத்திட்டத்தை எழுதித்தரும் பணி மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரிடம்
ஒப்படைக்கப்பட்டது. பாரிஸ் கிளையின் நெறிமுறைப்படி எங்கெல்ஸ் "கம்யூனிசத்தின் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் ஒரு வரைவு வேலைத்திட்டத்தை கேள்வி பதில் வடிவில் எழுதினார். ஆனால்
இது முழுமையாக்கப்படாமல் இருந்தது.
வேலைத்திட்டத்தை
கேள்வி பதில் வடிவில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதை எங்கெல்ஸ்
உணர்ந்தார். கேள்வி பதில் வடிவத்தில் எழுதியதை
கைவிட்டு அறிக்கை போல் எழுதுவதே சரியாக இருக்கும் என்று 1847 நவம்பர்
23-24 தேதியில் மார்க்சுக்கு கடிதம் எழுதினார். மேலும் இந்தக் கடிதத்தில் எங்கெல்ஸ் கூறுகிறார்:
"நேரில் பேசுவது போல எழுதப்பட்டுள்ளது இது, மிகவும் மோசமாகவும் அவசரமாக சரிபார்க்கப்பட்டதாகவும் இருக்கிறது. கம்யூனிசம் என்பது என்ன என்ற பிரச்சினையிலிருந்து தொடங்கி உடனே பாட்டாளி வர்க்கப் பிரச்சினைக்கு வந்துவிடுகிறேன் நான், இவ்வர்க்கம் தோன்றிய வரலாறு, பிந்திய உழைப்பாளர்களுக்கும் இவ்வர்க்கத்தினருக்கும் இடையில் உள்ள வேறுபாடு, முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வாக்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு வளர்ந்து வருவது, நெருக்கடிகள், முடிவுகள் என்று தொடர்கிறேன் நான், இடையில் பல்வேறு விதமான இரண்டாம் பட்சமான விசயங்கள் வருகின்றன."
வேலைத்திட்டத்துக்கு
அறிக்கை வடிவம் பொருத்தமாக இருக்கும் என்றாலும்,
இந்தக் கேள்வி
பதில் வடிவம் நமக்கு சுருக்கமான வடிவத்தில் பலவற்றை எளிதாகப் புரியவைத்திடுகிறது. "கம்யூனிஸ்ட் கோட்பாடுகளில்"
காணப்படும் பல
கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அறிக்கை வெளிப்படுத்தாத சில பிரச்சினைகளை "கம்யூனிஸ்ட் கோட்பாடுகள்" பேசுகின்றன.
குறிப்பாக தனியார்
சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?
என்ற கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலைச் சொல்லலாம்.
(1) கம்யூனிசம் என்றால் என்ன? என்ற
முதல் கேள்விக்கான பதில் மிகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சூத்திரம் போல்
வெளிப்படுகிறது. "கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின்
விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை."
இந்த
போதனை யாருக்கு உரியதோ அவர்களைப் பற்றித் தெளிவாக தொடர் கேள்வி பதில் வடிவத்தில்
எளிதாக புரிய வைக்கிறார் எங்கெல்ஸ்.
அடுத்து, பாட்டாளி
வர்க்கம் என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பி பதிலளிக்கிறார்.
பாட்டாளி
வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன்
மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான லாபத்தையும் மூலதனத்திடம்
இருந்து பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும்
சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின்
மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே
இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத
போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி
அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக்
குறிக்கிறது.
அடுத்து, பாட்டாளிகள்
என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்க வில்லையா?
இல்லை. ஏழை
மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும்
தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால்
இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை
மக்களும் எப்போதும் இருந்திருக்கவில்லை. வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய
சுதந்திரமான, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள்
எப்போதும் இருந்திருக்கவில்லை. அதுபோலவே இன்றைய பாட்டாளி வர்க்கத்தினர்
எப்போதும் இருந்திருக்கவில்லை.
அடுத்து, பாட்டாளி
வர்க்கம் எப்படி உதித்தது?
18-வது நூற்றாண்டின்
பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகியதும், அதன்பின்னர் உலகின் அனைத்து நாகரிக
நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்ததுமான தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி
வர்க்கம் உதித்தது.
நீராவி
எஞ்சின், பல்வேறு நூற்பு எந்திரங்கள், விசைத்தறி
மற்றும் இதர எந்திரக் கருவிகள் பலவற்றின் கண்டுபிடிப்பினால் இந்தத் தொழிற்புரட்சி
வலுப்பெற்றது. இந்த எந்திரங்கள் அதிக விலையுள்ளவை. எனவே
பெரிய முதலாளிகளால் மட்டுமே வாங்க இயலும். இவை, உற்பத்திமுறை முழுவதையும் மாற்றிவிட்டன. மேலும்
இதுவரை இருந்துவந்த தொழிலாளர்களை வெளியேற்றின. காரணம்,
தொழிலாளர்கள் தமது
திறனற்ற கைராட்டைகள், கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய
பண்டங்களை விட மலிவான, சிறப்பான பண்டங்களை எந்திரங்கள் உற்பத்தி
செய்தன. இவ்வாறாக, எந்திரங்கள்
தொழிற்துறையை முழுமையாகப் பெரும் முதலாளிகள் வசம் ஒப்படைத்துவிட்டன. மேலும், தொழிலாளர்களின்
அற்ப சொத்துக்களை (கருவிகள்,
கைத்தறிகள்
போன்றவற்றை) முற்றிலும் பயனற்றவை ஆக்கிவிட்டன.
இதன்
விளைவாக, முதலாளிகள் வெகுவிரைவில் எல்லாவற்றையும்
வசப்படுத்திக் கொண்டனர். தொழிலாளர்களுக்கென எதுவும் மிஞ்சவில்லை. துணி
உற்பத்தித் துறையில் ஆலை உற்பத்திமுறை புகுத்தப்பட்டது இதற்கு ஓர் அடையாளம் ஆகும்.
உழைப்பு, தனித்தனித்
தொழிலாளர்களுக்கிடையே மேலும் மேலும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. எனவே, முன்பெல்லாம்
ஒரு முழுப் பொருளையும் உருவாக்கிய ஒரு தொழிலாளி இப்போது அந்தப் பொருளின் ஒரு
பகுதியை மட்டுமே உற்பத்தி செய்தான். இந்த உழைப்புப் பிரிவினை, பொருட்களை
முன்பைவிட விரைவாகவும் மலிவாகவும் உற்பத்தி செய்வதைச் சாத்தியம் ஆக்கியது. இது
ஒவ்வொரு தொழிலாளியின் பணியையும், இடையறாது திரும்பத்திரும்ப நிகழும் எளிதான
எந்திர இயக்கமாகக் குறைத்தது.
தொழிலாளி செய்துவந்த வேலையை, ஓர்
எந்திரமானது அதே தரத்தில் மட்டுமின்றி, அதைவிட மேலும் சிறப்பாகவும் செய்ய
முடியும். இவ்வாறாக,
நூற்பு மற்றும்
நெசவுத் தொழில்களில் ஏற்கெனவே நிகழ்ந்தது போலவே,
அனைத்துத்
தொழிலற்துறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீராவி
எந்திரங்கள்
மற்றும் ஆலை முறையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
இந்தப்
பாட்டாளி என்கிற தொழிற்துறை உழைப்பாளிகள் மற்ற தொழிலார்களான அடிமைகளிடமிருந்தும், பண்ணை
அடிமைகளிடமிருந்தும், கைவினைப்
பணியாளரிடமிருந்தும் எப்படி வேறுபடுகின்றனர் என்பதற்கு அடுத்தடுத்த கேள்விகளில்
பதிலளிக்கிறார்.
இன்றைய
சமூகத்தில் பாட்டாளிகள் ஏன் புரட்சிகரமாக செயல்பட முடிகிறது என்பதை பதினோராம்
கேள்விக்கான பதிலில் அவர் கூறுகிறார்:-
எல்லா
நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தோடு கூடவே பாட்டாளி வர்க்கமும் படிப்படியாய்
வளர்ச்சி பெற்றது. முதலாளித்துவ வர்க்கம் செல்வத்தில்
வளர்ச்சி பெற்ற அதே அளவுக்குப் பாட்டாளிகள் எண்ணிக்கையில் அதிகரித்தனர். பாட்டாளிகளை
மூலதனம் மூலம் மட்டுமே வேலைக்கு அமர்த்த முடியும்,
உழைப்பை வேலைக்கு
அமர்த்துவதால் மட்டுமே மூலதனம் அதிகரிக்க முடியும்.
இந்தக்
காரணங்களினாலேயே மூலதன வளர்ச்சியுடன் கூடவே துல்லியமாக அதே வேகத்தில் பாட்டாளி
வர்க்கத்தின் வளர்ச்சியும் பின்தொடரும் என்பது புலனாகிறது.
இந்த
நிகழ்ச்சிப் போக்கு, ஏககாலத்தில் முதலாளித்துவ
வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்தினரையும் பெருநகரங்களில் ஒன்றாகக்
கொண்டுவந்து சேர்க்கிறது. இங்குதான் தொழில்களை மிகவும் லாபகரமான
முறையில் நடத்த முடியும். இவ்வாறு மிகப்பெரும் மக்கள் திரளை ஒரே
இடத்தில் ஒன்று குவிப்பதானது, பாட்டாளி வர்க்கத்தினர்க்கு அவர்களின்
சொந்த வலிமை குறித்த உணர்வினை நல்குகிறது.
மார்க்சின்
பொருளாதார நெருக்கடிப் பற்றிய கோட்ப்பாட்டை மிகவும் சுருக்கமான வடிவில் புரிந்து
கொள்வதற்கு 12-13ஆம் கேள்வி-பதிலில் காணலாம்.
"(12) தொழிற் புரட்சியின் இதற்கும் மேலான
விளைவுகள் எவை?
தொழிற்துறை உற்பத்தியை முடிவில்லாமல்
விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்தி
செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின் மற்றும் பிற
எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழிற்துறை உருவாக்கியது. இவ்வாறு
வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழிற்துறையிலிருந்து பிரிக்க
முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான
முதலாளிகள் தொழிலற்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும்
அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.
இதன்விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட
பண்டங்களை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும்
பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின்
உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும்
சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.
சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த
பொருட்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள்
உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும் விடச்
செழித்தோங்கியது.
ஆனால் மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே
அளவுக்கு அதிகமான பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
ஒரு புதிய
நெருக்கடி வெடித்தது. முந்திய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும்
சென்றது.
19-ஆம் நூற்றாண்டு
தொடங்கிய காலந்தொட்டே தொழிற்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும்
நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ
ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த
நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை
எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும்,
நிலவிவரும்
சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு
வந்தன.
(13) குறிப்பிட்ட
கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து
பெறக்கூடிய முடிவுகள் எவை?
முதலாவது:
பெருவீதத் தொழிற்துறை தனது வளர்ச்சியின்
மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது
[பெருவீதத் தொழிற்துறை] இப்போது
கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது.
இந்தப் போட்டி மற்றும் பொதுவாகத்
தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழிற்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத்
தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.
பெருவீதத் தொழிற்துறை இப்போதுள்ள
அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வொரு ஏழாண்டுகளிலும் [தொழிற்துறை
நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத்
தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.
அத்தகைய நெருக்கடி
நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத்
துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின்
பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.
எனவே, பெருவீதத் தொழிற்துறையையே கைவிட வேண்டும், இது
முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை
முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய
சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட
தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள்.
பதிலாக, ஒரு
வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், மக்கள் அனைவரின் தேவைகளையும் கணக்கில்
எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை
முறைப்படுத்தும்.
இரண்டாவது:
பெருவீதத் தொழிற்துறையும் அதனால்
சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையில்லா விரிவாக்கமும், ஒரு
புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டு வந்துள்ளது. அப்புதிய
அமைப்பு முறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும்
ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு
நிலையில் இருப்பர். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு
இருக்கும்.
இவ்வாறு,
நமது இன்றைய கால
சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத்
தொழிற்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ்
இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.
தெள்ளத்தெளிவாக
நாம் காண்பதாவது:
(1) இன்றைய
எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன இந்தச் சமூக
அமைப்புமுறை மட்டுமே மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம் என இப்போது முதற்கொண்டு
சாற்றிக் கூற முடியும்; மேலும்,
(2) ஒரு
புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்."
கம்யூனிஸ்டுகளை
வன்முறையாளர்கள் என்று தவறாக புரிந்து வைத்திருப்பதற்கு பதிலாக பதினாறாம்
கேள்விக்கான பதில் அமைந்துள்ளது.
"(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில்
ஒழிப்பது சாத்தியமா?
தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில்
ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே.
இதைக்
கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது
மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள்
திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக
அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த
வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற
நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ
எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக
அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள்
தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும்
கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில்
ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின்
நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்."
வன்முறையைக்
கையாள வேண்டும் என்று முன்கூட்டியே முடிவெடுத்துத் திரிபவர்களல்ல கம்யூனிஸ்டுகள். வன்முறையினால்
விளைகின்ற கேடுகளை கம்யூனிஸ்டுகள் அறிந்திருக்கின்றனர். வன்முறை
தன்னிச்சையாக புரட்சியின் போது கையாளப்படுவதில்லை.
அந்த நிலைமையினைத்
தீர்மானிப்பது புறநிலைமைகளே. அதேநேரத்தில் பாட்டாளி வர்க்கம் இறுதியில்
வன்முறையை நோக்கித் தள்ளப்படுமாயின், சொல் மூலம் கொடுக்கப்படும் பாதுகாப்பு, செயல் மூலமும் கொடுக்கப்படும் என்று
உறுதியாக எங்கெல்ஸ் கூறியுள்ளார்.