(“செங்கொடி மையம்” என்கிற
வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 42 வது வார வகுப்பு – 06-11-2021)
மார்க்சியத்தை சுருக்கமாக
அறிமுகப்படுத்தும் விதமாக மொத்தம் எட்டு வகுப்பைப் பார்க்க இருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
ஏழாவது எட்டாவது ஆகியவற்றை இணைத்து ஒரே வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதாவது இந்தத் தொடர்
ஏழு வகுப்புகளைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
தத்துவம், அரசியல் பொருளாதாரம்,
விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூன்றும் மார்க்சியத்தின் மூன்று உள்ளடக்கம் என்பது நமக்குத்
தெரிந்ததே. இந்த மூன்றாவதை விஞ்ஞான சோஷலிசம் என்று கூறினாலும் விஞ்ஞான கம்யூனிசம் என்று
கூறினாலும் இரண்டும் ஒன்றுதான். தத்துவத்தை நான்கு வகுப்பாகப் பார்த்தோம். அரசியல்
பொருளாதாரத்தை இரண்டு வகுப்புகளில் பார்த்தோம், விஞ்ஞான சோஷலிசமும் என்பதை இரண்டு வகுப்புக்கு
பதிலாக ஒரே வகுப்பில் பார்க்கப் போகிறோம்.
ஏழுத் தலைப்புகளையும் முதலில்
பார்ப்போம்
1) இயற்கைவியல் பொருள்முதல்வாதம் = (இயக்கவியல் பொருள்முதல்வாதம்)
2) இயக்கவியல், இயக்கவியல் வகையினங்கள்
3) வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
4) அடித்தளமும் மேற்கட்டமைப்பும்
5) அரசியல் பொருளாதாரம்
6) உபரி மதிப்பு
7) கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
இன்று நாம் பார்க்கப் போவது
எழாவது தலைப்பான கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான
சோஷலிசமும் என்பதை சுருக்கமாகப் பார்க்கப்
போகிறோம். இதே தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய
நூலினையே அடிப்பையாகக் கொண்டு பார்க்கப் போகிறோம்.
“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற எங்கெல்சின் நூல் “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலின் சிறு பகுதியாகும். “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலின் முகவுரையின் முதல் பகுதியும், மூன்றாவது அத்தியாயமான சோஷலிசப் பகுதியில் உள்ள முதல் இரண்டு பகுதியையும் சிறு மாறுதலுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைவிட அதிகம் விற்றதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் படிக்க வேண்டிய நூல் இது. இதைப் படித்துவிட்டு மார்க்சியத் தத்துத்தையும், அரசியல் பொருளாதாரத்தையும் படிக்கலாம்.
1.கற்பனா சோஷலிசம்
ஆதிபொதுவுடைமை சமூகம் சிதைந்தது முதல்
சமூகத்தில் காணப்படும் வர்க்க முரணை போக்குவதற்கு பல அறிஞர்கள் பல்வேறு
கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்துள்ளனர். இவைகளில் காணப்படும் கருத்துக்கள் சமூக
வளர்ச்சியின் நியதிகளுக்கு உட்பட்ட வகையில் விளக்காமல், தன்னுடைய
சித்தத்தினுடைய விருப்பத்தின்படி
வகுத்தளித்தனர். இந்த சித்தத்தின் முடிவுகள் நடைமுறைக்கு
வரலாமல் போனது. இதன் தொடர்ச்சியாக சில மேதைகளும் தோன்றினர்
அவர்களை கற்பனாவாத சோஷலிசவாதிகள் என்று மார்க்சியம் அழைக்கிறது. மேதைகள் என்று அழைத்தும் அவர்களின் சோஷலிசத்தை
ஏன் கற்பனாவாதம் என்று கூறப்படுகிறது என்றால், இந்த மேதைகளின் கருத்துக்களும் நடைமுறையில்
கொண்டுவர முடியவில்லை. கற்பனாவாத சோஷலிசம் என்பது தனிமனிதர்களின்
சித்தத்திலிருந்து தோன்றியது, விஞ்ஞான சோஷலிசம் என்றால் சமூக வளர்ச்சியின்
நியதிப்படி சோஷலிசத்தை அடைவதை குறிப்பிடுவது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மூன்று
மாமேதைகள் கற்பனாவத சோஷலிசவாதிகளாகத் திகழ்ந்தனர்.
அவர்கள் சான் சிமோன், ஃபூரியே, ஓவன் ஆகியோராவர். இதில் சான் சிமோன், ஃபூரியே ஆகிய
இருவரும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர்கள், ஓவன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுவரும் நாட்டில்
இம்மூவரும் தோன்றினர். இவர்கள் தமது கருத்துக்களை வழங்கிய காலத்தில்
முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான பகைமை அரைகுறை
வளர்ச்சியில் காணப்பட்டது. அதாவது
முதலாளித்துவ உற்பத்தியின் முரண் தொடக்க நிலையில் இருந்தது.
முதலாளித்துவ உற்பத்தியின் பெருக்கத்தைப் பார்க்கும் போது சமூக
தேவைகள் நிறைவு பெற்றுவிடும் என்றே முதலில் பொதுவாக நம்பப்பட்டது. ஆனால்
முதலாளித்துவ உற்பத்தி முறையிலான, தொழில் வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வறுமையையும், பெரும் துயரத்தையுமே வழங்கியது. மனிதனுக்கு
இடையேயான தொடர்பு வெறும் பணப்பட்டுவாடாக முதலாளித்துவ சமூகம் மாற்றிவிட்டது.
வணிகம் மேன்மேலும் மோசடியாக நடைபெற்றது, சமூகத்தில்
குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது.
ரகசியமாக நடைபெற்ற ஒழுக்கக்கேடுகள்
அப்பட்டமாக, வெளிப்படையாக செழித்தோங்கியது.
முதலாளித்துவ புரட்சி ஏற்பட்ட போது ஒலித்த
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற முழக்கங்கள் முதலாளிகளின்
போட்டா போட்டியின் சூழ்ச்சிகளிலும், சூதிலும், சண்டைச் சச்சரவுகளிலும் காணாமல் போனது.
இதனை கண்ணுற்ற கற்பனாவாத மேதைகள், நவீன
சமூக அமைப்புமுறையை கண்டித்தனர், அதன் மறைவைப் பற்றி கனவு கண்டனர், அதற்கு
மாற்றாக புதிய ஒரு சமூக அமைப்பை வடிவமைத்துக் கொண்டனர்.
சுரண்டல் என்பது அநியாயமானது என்பதை
ஆட்சியாளர்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் புரிய வைத்தால் போதும் சமூகத்தில்
அமைதியும் நல்வாழ்வும் கிட்டும் என்று அப்பாவித்தனமாக அவர்கள் நினைத்தனர்.
சமூக தர்மகர்த்தாக்களாக, அனைவருக்கும் பொது அதிகாரிகளாக முதலாளிகள் மாறவேண்டும்
என்று சான்சிமோன் விரும்பினார்.
இம்மேதைகள் முதலாளித்துவ சமூகத்தின்மீது வைத்த
விமர்சனம் மிகவும் கடுமையானது. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகங்கள் எப்படி
குறைபாடு உடையதாக இருந்ததோ அதைப்போலவே முதலாளித்துவ சமூகமும் குறைபாடு
உடைதாகக் காணப்படுகிறது. எப்படி
முந்திய சமூகம் தூக்கி எறியப்பட்டதோ அதேபோன்று இந்த நவீன சமூகமும் தூக்கி
எறியப்படும் என்று இவர்கள் கருத்துரைத்தனர்.
இந்தக் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சிந்தனை
தனிமுதலான உண்மை, அறிவு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் உருவானது. இந்த
உண்மையை யாராவது கண்டுபிடித்து சொன்னால் போதும் அது அனைத்து உலகத்தையும் மாற்றி,
வெற்றி கண்டுவிடும் என்று நினைத்தனர்.
ஒரு சிறந்த சமூக அமைப்பைப் பற்றிய சிந்தனை
செய்ய வேண்டும், அவ்வாறு கற்பனை செய்யப்பட்ட அமைப்பின்
சிறப்புகளைப் பற்றி அனைவரிடமும் கூறி நம்பவைக்க வேண்டும். அவ்வாறு
நம்ப வைத்தால் அந்த சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அமைப்பு பற்றிய கருத்தை, அனைவரும்
ஏற்றுச் செயல்படுவர் என்ற மாயையான கருத்தில் அம்மாமேதைகள் இருந்தனர்.
விஞ்ஞான சோஷலிசத்தின் வேர்கள் இவர்களிடம்
கருகொண்டிருந்ததால் கற்பனாவாதிகள் என்றாலும் இவர்கள் மாமேதைகளே. சான்சிமோன் அரசியல், பொருளுற்பத்தியைப்
பற்றிய விஞ்ஞானமாகும் என்று பறைசாற்றினர். அரசியல் முழு
அளவுக்குப் பொரளாதாரத்தால் உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறினார். பொருளாதார நிலைமைகள் அரசியல் நிறுவனங்களுக்கான
அடிப்படையாகும் என்ற அறிவு அதாவது பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களை
நிர்ணயிக்கிறது என்பதை இங்கு கருவடியில் காணமுடிகிறது.
அதே போல் ஃபூரியே நாகரிக கட்டத்தில் ஆதீத வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது என்று
கூறியுள்ளார். இது போன்ற கருத்துக்கள் விஞ்ஞான சோஷலிச
சித்தாந்தவாதிகளான மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே
நேரத்தில் எங்கெல்ஸ் இவர்களைப் பற்றி கூறும்போது எச்சரித்ததை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும், அது என்னவென்றால், இந்த
முன்னோடிகள் கற்பவனாவாதி என்ற காரணத்தை கூறி அவர்களை நாம் நிராகரிக்க முடியாது, ஆனால்
அவர்கள் செய்த தவறுகளை மறுபடியும் செய்வதையாவது நாம் குறைந்தபட்சமாகத் தவிர்க்க
முடியும், அப்படிப்பட்ட தவறுகளை நாம் செய்வது மன்னிக்க
முடியாததாகும்.
முதலாளித்துவம் வளரும் தறுவாயில் இருந்ததால் கற்பனாவாதிகளின் அறிவு எல்லைக்கு உட்பட்டதாகவும் வரம்பிடப்பட்டதாகவும் இருந்தது. இன்றைய வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் கற்பனாவாதம் என்பது மன்னிக்க
முடியாத தவறாகும் என்கிறார் எங்கெல்ஸ்.
மூலதனத்தின் ஆதிக்கம், முதலாளித்துவத்தின்
சுரண்டலின் ஊற்று ஆகியவற்றை அறிந்து கொள்ளாமை ஆகியவை கற்பனாவாத சோஷலிசத்தில் உள்ள
குறைபாடாக கருதினர்.
இதற்கான காரணத்தை எங்கெல்ஸ் முதிர்ச்சியற்ற முதலாளித்துவப்
பொருளுற்பத்தி நிலைமைகளுக்கும் முதிர்ச்சியற்ற வர்க்க நிலைமைகளுக்கும் இணைவாய்
முதிர்ச்சியற்ற கோட்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர் என்றார்.
அதாவது, கற்பனாவதிகளின் கோட்பாடு முதிர்ச்சி அற்று
இருப்பதற்குக் காரணம் அன்றைய முதலாளித்துவம் வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. முதலாளிகளுக்கும்
தொழிலாளிகளுக்கும் இடையேயான பகை முற்றவில்லை, அதனால் இந்த கற்பனாவாதிகளின் கோட்பாடு
இதற்கு ஏற்ப முதிர்ச்சியற்ற கோட்பாடாக இருந்தது.
சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வு வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் புதையுண்டு இன்னும் மறைந்தே கிடந்தது. முதலாளித்துவ
சமூகத்தில் இருந்து விடுதலையை
கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமூகத்தில்
எங்கும் கேடுகள் நிறைந்திருந்தன, இவற்றை நீக்குவது அறிவுக்குரிய பணியாகக் கருதினர்.
ஆகவே குறைபாடுகளின்றிச் சிறப்பான ஒரு புதிய
சமூக ஒழுங்கு அமைப்பைக் கண்டுபிடித்து பிரசாரத்தின் மூலமாகவும் சாத்தியமான
இடங்களில் எல்லாம், முன்மாதிரியான சோதனை முயற்சிகளின் மூலமாகவும் அதை
வெளியிலிருந்து சமூகத்தின் மீது இருத்துவது அவசியமாகும் என்று கருதினர்.
இந்தப் புதிய சமூக அமைப்புகள் கற்பனாவாத
அமைப்புகளாக இருக்கும்படி முன்கூட்டியே விதிக்கப்பட்டவை. எவ்வளவு
விவரமாக முழு வடிவில் வகுக்கப்பட்டனவோ, அவ்வளவு தவிர்க்க முடியாதவாறு அவை பரிசுத்தக்
கற்பனைப் புனைவுகளாய்த் தடம் புரண்டு சென்றன என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார்.
2. விஞ்ஞான சோஷலிசம்
1840களில்
முதலாளித்துவம் முதர்ச்சியடையத் தொடங்கியது. மார்க்சிய முதலாசிரியர்களால் முதலாளித்துவத்தை
ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில் வளர்ந்திருந்தது.
வரலாற்றியல் பொருள்முதல்வாதம், உபரிமதிப்பு
மூலம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ரகசியம் புலப்படுத்தப்படல் ஆகியவை
மார்க்சின் இருமாபெரும் கண்டுபிடிப்புகளாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞானத் தன்மை
பெற்றதற்கு இந்த இரண்டு அடிப்படையில் அமைக்கப்பட்டதே காரணமாகும்.
மேலும் எங்கெல்ஸ் எல்லாச் சமூக
மாறுதல்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான இறுதிக் காரணங்களைப் பொருளுற்பத்தி, வினியோக முறைகளின் மாறுதல்களில் கண்டறிய வேண்டமே தவிர மனித மூளையில் அல்ல. அந்தந்தச்
சகாப்தத்தின் பொருளாதாரத்தில் கண்டிறிய வேண்டுமே தவிர, தத்துவத்தில்
அல்ல என்று கூறியுள்ளார்.
மார்க்சிய விஞ்ஞான சோஷலிசமானது, வரலாற்று
வழியில் வளர்ச்சியுற்ற முதலாளிக்கும், பாட்டாளிக்கும் இடையே நடைபெறும் வர்க்கப்
போராட்டத்தில் இருந்து தோன்றிய அவசியமான விளைவே தவிர எந்த மேதாவிகளின் மூளையில் இருந்து உதித்தக் கருத்தல்ல.
கற்பனாவாதிகளைப் போல் சமூக விடுதலைக்கான கருத்தை மூளையில் இருந்தோ, வெற்று தத்துவத்தில் இருந்தோ மார்க்சியம் உருவாக்கவில்லை. சமூக பொருளாதார அமைப்புகளின் மாற்றத்தை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் கண்டார் மார்க்ஸ், அப்படி என்றால் மார்க்சிய தத்துவமும், விஞ்ஞான கம்யூனிசமும் அவ்வளவு முக்கியமானது இல்லையா என்ற கேள்வி எழுவது இயற்கையே. மார்க்சியத்தின் மூன்று உள்ளடத்தில் காணப்படும் உள்ளிணக்கத்தை அறிந்து கொள்ளும் போது இதற்கான பதில் கிடைக்கும்.
மார்க்சியம் என்பது காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின்
அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுவதையும் குறிப்பதாகும். இதில்
தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்றும் உள்ளிணைப்பைக்
கொண்ட உட்பிரிகளாகும்.
தத்துவம் என்பது இயற்கை, சமூகம்
பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய
விஞ்ஞானமாகும்.
அரசியல்
பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயதச் செல்வ
உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி
நிகழ்வின் போது மனிதர்களுக்கிடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித
சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள்,
மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை
போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.
விஞ்ஞான சோஷலிசம் என்பது அரசியல்
பொருளாதாரத்தையும், தத்துவத்தையும்,
ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக
நிலைமைகளையும், முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன்
தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது.
இம்மூன்றில் பொருளாதாரம் முதன்னிலை பெறுகிறது. ஏன்
என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த
அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும்
மார்க்சியம் கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும்,
இம்மூன்றினில் அடிப்படையானதாகவும்
இருக்கிறது.
மார்ச்சிய தத்துவமான வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் இன்றைய சமூகத்தில் முதலாளிக்கும் பாட்டாளிக்கும் இடையேயான
பகைமையில் காணப்படும் முரணில் உருவான வர்க்கப் போராட்டத்தை எடுத்துரைக்கிறது. மார்க்சும்
எங்கெல்சும் தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை கண்ணுற்றதால் அவர்களை
உணர்வுபூர்வமாக ஆதரித்து அதன் வழியில் தமது கோட்பாட்டை வகுத்துக் கொண்டார்கள்.
சோஷலிசத்தை கற்பனாவாத நிலையிலிருந்து விஞ்ஞான வகைப்பட்டதாக
மாற்றுவதற்கு தொழில்துறை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க நிலைமைகளை அடிப்படையாகக்
கொள்ள வேண்டும் என்பதை முழுமையாக உணர்ந்தனர்.
நவீனத் தொழில்துறை மேன்மேலும் முழு அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ள இன்றைய நிலையில், முதலாளித்துவம் தன்னை நெறியாண்மை செய்திட முடியாமல் திணறுவதை அவ்வப்போது சந்திக்கும் பொருளாதார நெருக்கடி நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சியடைந்துள்ள புதிய உற்பத்திச் சக்திகளை
பயன்படுத்திக் கொள்ளுவதற்கு முதலாளித்துவ அமைப்பானது, பொருந்தா வகையில் மிதமிஞ்சி வளர்ந்துவிட்டது. இதன்
அடிப்படையில் தான் இன்றைய வர்க்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த
வர்க்கப் போராட்டம் என்ற மோதல், மனிதனின் மனதில் உதித்தெழுந்தது அல்ல, நமக்கு
புறத்தே, புறநிலை உண்மையாக, எதார்த்த
நிலவரமாக, இதை மூண்டெழச் செய்தோரது சித்தத்தை சாராத
புறநிலையினால் உருவானது.
இந்தப் புறநிலைமைகள் நமக்கு தெரிவிப்பது
என்னவென்றால், சமூகமயமாகி விட்ட பொருளுற்பத்திக்கும், முதலாளித்துவச்
சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி
வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய், போராட்டமாய் வெளிபடுகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளிகள் நடத்தும்
வார்க்கப்போராட்டம் பொருளாதாரம், அரசியல், மற்றும் சித்தாந்தம் என்கிற மூன்று வழிகளில்
நடைபெறுகிறது.
முதலாளிகள், அதிக ஆதாயம் பெறுவதற்கும், அதனைத்
தக்க வைப்பதற்கும் தேவைப்படுகின்றவற்றில்
எதைவேண்டுமானாலும் செய்வதற்கு முனைப்பாக இருக்கிறார்கள். இந்நிலையில்,
பாட்டாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கைத்
தேவைகளுக்காக நடத்தப்படும் போராட்டம், பொருளியல் போராட்டமாகும். அதாவது
பாட்டாளிகளின் பொருளியல் நிலைமைகளை மேப்படுத்துவதற்கும், சுரண்டலிருந்து
தங்களை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் குறைத்துக் கொள்வதற்கும், இருப்பதைவிட
மேம்பட்ட உழைக்கும் சூழ்நிலைகளுக்கும், ஊதிய உயர்விற்கும், வேலைநேரக்
கட்டுப்பாடிற்கும் ஆன போராட்டமாகும். குறிப்பாக சொன்னால் பாட்டாளி தங்களது
நலவுரிமைக்கும், பாதுகாப்பிற்கும் நடத்தப்படும் போராட்டமாகும். பாட்டாளிகள்,
தங்களது உடனடி பொருளாதார நலன்களை
முன்னிருத்தி போராடுகின்றனர். இதற்கு அவர்கள் சங்கம் அமைத்துக் கொள்கின்றனர். இது
வர்க்கப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாகும்.
பொருளாதார அடிப்படையில் நடத்தப்பட்டு வரும்
போராட்டம், பாட்டாளிகளை,
சுரண்டலிருந்து முழுமையாக
விடுவிக்கவில்லை. ஏனென்றால் இந்தப் போராட்டங்களின் மூலம், கிடைத்திடும்
பலன் அவர்களது வாழ்க்கைச் சாதனங்கள் அனைத்திற்கும் வழியமைத்து தருவதில்லை, மற்றும்
தங்களது வாழ்வின் முழு பாதுகாப்பிற்கும் வழி கிடைக்கவில்லை. இதன் மூலம் முதலாளிகளிடமிருந்து சில சலுகைகளை
மட்டுமே பெறமுடிகிறது. தொழிலாளர்களது வாழ்க்கைத் துன்பங்களுக்கு, முழு
விடுதலை என்பது கிடைத்திடவில்லை. இந்தச் சலுகைகளை பெறுவதற்கே பெரும் போராட்டத்தை நடத்த
வேண்டியிருக்கிறது.
பொருளாதாரப் போராட்டத்தின் போது பாட்டாளிக்கள்
கூட்டம் கூடுவதற்கும், சங்கம் நடத்துவதற்கும், தமக்கான
பத்திரிகை நடத்துவதற்கும் ஆன உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு போராட வேண்டிவருகிறது. இவ்வாறு
பாட்டாளிகளின் போராட்டம் அரசியல் போராட்டமாக வடிவெடுக்கிறது.
போராடிப் பெற்ற சிறு சலுகைகளை தக்க
வைப்பதற்கும், இதனை சட்டமாக்குவதற்கும், அதாவது
அரசியல் போராட்டதிற்காக, தங்களது பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு
அனுப்ப வேண்டி வருகிறது, இதன் மூலம் பொருளாதாரப் போராட்டம் அவர்களை
அரசியல் போராட்டத்திற்கு இட்டுச்செல்கிறது.
தன்னியல்பான பொருளாதாரப் போராட்டத்துடன், அரசியல்
போராட்டமும் இணையும் போது, பாட்டாளிகளின் அரசியல் உணர்வு மேலோங்குகிறது. அரசியல்
கோரிக்கைகள் அவர்களின் கம்யூனிச உணர்வை வளர்த்துவிடுகிறது. முதலாளிக்கு எதிரான போராட்டத்தில், பாட்டாளிகள்
சங்கமாய் இணைந்து போராடும் போது, பாட்டாளிகள் ஒரு வர்க்கமாய் சேகரமாகிறார்கள். வர்க்கமாய்
தமது போராட்டத்தை நடத்தும் போது, முதலாளியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம், முதலாளித்துவ
வர்க்கத்தை நோக்கிய போராட்டமாக - வர்க்கப்போராட்டமாக - உருமாறுகிறது.
இந்தப் போராட்டத்தில் முதலாளித்துவம், பாட்டாளி
வர்க்கத்தை நோக்கி சட்டமுறைகளிலும், சட்டத்திற்கு எதிரான வழிகளிலும் ஒடுக்க
முற்படுகிறது. அப்போது முதலாளித்துவ அரசிற்கு எதிரான
போராட்டம், முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ
அமைப்பு முழுமைகு எதிரான போராட்டமாகவும் மாறுகிறது.
பொருளாதாரப் போராட்டத்தை, அரசியல்
போராட்டமாக தொடரச் செய்யும் போது, உருவான நோக்கங்கள், குறிக்கோள்கள், போராட்ட
முறைகள் ஆகியவை பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தமாக திரட்டப்படுகிறது.
முதலாளித்துவ சித்தாந்தத்தை எதிர்கொள்ளும்
வகையில், பாட்டாளிகள் தங்களது சித்தாந்ததை உருவாக்க
வேண்டியிருக்கிறது. சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவத்தை, சங்கம்
அமைத்து எதிர்க்கும் போது, சமூகத்தில் உள்ள அனைத்து துறைகளின் தொழிலாளர் சங்கங்களையும் இணைத்து வழிநடத்துவதற்கு, பாட்டாளிகளுக்கு
புரட்சிகரமான கட்சி தேவைப்படுகிறது.
அந்தந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் தமது
நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் நிலையினைப் புரிந்து, அதற்கு
ஏற்ற வகையில் போர்தந்திரங்களை அமைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்த்தின்
முன்னேற்றத்துக்கு உரிய முன்னணிப்படையாக செயற்படுகிறது.
இதனை ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஒர்
உண்மையான கட்சியாக விளங்க வேண்டும் என்றால், உற்பத்தியின் வளர்ச்சி விதிகளைப் பற்றியும், சமூகத்தின்
பொருளாதார வளர்ச்சி விதிகளைப் பற்றியும், அந்தக் கட்சி அறிவு பெற்றிருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும்
மேலாக இதில் அறிவு பெற்றிருத்தல் அவசியம். எனவே, தனது கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டும்
என்றால், பாட்டாளி வர்ககத்தின் கட்சி தனது வேலை திட்டத்தை வகுத்துக் கொள்வதிலும், நடைமுறை
வேலைகளைச் செய்வதிலும், முதன் முதலில் எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? உற்பத்தியின் வளர்ச்சியைப் பற்றிய
விதிகளிலிருந்துதான், சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய
விதிகளிலிருந்து தான் முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் கூறுவது போல் பாட்டாளி வர்க்கத்தின்
கட்சி தனது வேலை திட்டத்தில், கொள்கை முறையிலான தவறை செய்திடாமல் இருக்க
வேண்டும் என்றால் வெறும் மார்க்சிய கருத்துக்களை வெளிப்படுத்தும் முழக்கத்தினை
மட்டும் படித்துவிட்டு கட்சியில் ஈடுபடாமல், அரசியல் பொருளாதாரத்திலும், பொருள்முதல்வாதத்திலும்
திறம் பெற்றவர்களாக திகழவேண்டும்.
லெனின் “காரல் மார்க்ஸ்”
(வாழ்க்கைச் சுருக்கமும் மார்க்சிய போதனையின் விளக்கமும்) என்ற கட்டுரையில் மார்க்சியத்தின்
உள்ளடக்கமான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய மூனைறையும் சுருக்கமாக
எழுதியிருக்கிறார். அதில் விஞ்ஞான சோஷலிசம் பகுதியை இவ்வாறு தொடங்குகிறார்.
“மேற்கூறியவற்றில்
இருந்து, முதலாளித்துவ சமூகத்தை சோஷலிச சமுதாயமாக மாற்றுவதன் தவிர்க்க முடியாத தன்மையை
மார்க்ஸ் தற்கால சமூகத்தின் வளர்ச்சியின் பொருளாதார விதியிலிருந்து, முழுமையாகவும்
பிரத்தியேகமாகவும் கண்டறிகிறார் என்பது தெளிவாகிறது.”
முதலாளித்துவ சமூகம் சோஷலிச சமூகமாக மாறுவது
தவிர்க்க முடியாது என்று லெனின் கூறியுள்ளார். அவ்வாறு கூறத் தொடங்கும் போது மேற்கூறியவற்றில்
இருந்து என்று கூறியிருக்கிறார். அந்த மேற்கூறியது என்ன வென்றால், அரசியல் பொருளாதாரமும்
மார்க்சிய இயக்கியவியல் பொருள்முதல்வாதத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞான சோஷலிசத்தை மார்க்சியத்தின் சமூகவியல் கண்ணோட்டம் என்று கூறலாம். இந்த சமூகவியல் கண்ணோட்டத்தின் படியே கம்யூனிஸ்டுகளின் அரசியல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மார்க்சிய சமூகவியல் கண்ணோட்டம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகிவற்றின் அடிப்படையில் தான் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று நம் நாட்டில் உள்ள
கம்யூனிஸ்டுகளில் எத்தனை பேருக்கு மார்க்சிய தத்துவத்திலும், அரசியல் பொருளாதாரத்திலும்
அடிப்படைப் புரிதல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால், பெரும்பான்மையினரை வைத்துப்
பார்க்கும் போது பதில் எதிர் மறையாகத்தான் இருக்கிறது.
இன்றைய கம்யூனிஸ்டுகள்
அரசியலை தனித்து பேசுகின்றனர், அதற்கான தத்துவத்தையும் அரசியல் பொருளாதாரத்தையும் புரிந்து
கொள்ளாமலேயே பேசுகின்றனர். கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மையது என்று ஏன்
கூறப்படுகிறது. தத்துவம், பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படுவதினால் கம்யூனிஸ்டுகளின்
அரசியல் விஞ்ஞானத தன்மையுடைதாக கூறப்படுகிறது.
மார்க்சிய தத்துவத்தையும்,
பொருளாதாரத்தையும் அறிந்திடாது கம்யூனிஸ்டுகள் எப்படி தங்களது அரசியலை விஞ்ஞானத் தனமையில்
அமைத்துக் கொள்ள முடிவும்.
எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு
மறுப்பு” நூலில், மார்க்சிய அடிப்படைகளை மூன்று அத்தியாயங்களில் ஒரே நூலில் கூறப்பட்டுள்ளது.
அதில் மூன்றாவது அத்தியாயம் சோஷலிசம். அதில் ஐந்து உட்தலைப்புகள் இருக்கிறது. 1) வரலாற்றியல்
2) கோட்பாட்டியல் 3) பொருளுற்பத்தி 4) வினியோகம், 5) அரசு, குடும்பம், கல்வி.
இதில் உள்ள முதலிரண்டு
அத்தியாயங்களை இதுவரைப் பார்த்தோம். மீதமுள்ள மூன்று உட்தலைப்பில் பொருற்பத்தியும்
வினியோகமும் மிகவும் முக்கியமானதாகும். பொருளுற்பத்தியையோ, வினியோகத்தையோ அறிந்திடாமல்
ஒரு சமூகத்தை சரியாக புரிந்து கொள்ள முடியாது. பொருளுற்பத்தி, வினியோகம் என்கிற பொருளாதார
அடிப்படையில் தான் சமூகத்தை மார்க்சியம் புரிந்து கொண்டுள்ளது. இதையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம்
நமக்கு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒவ்வொருவரும் தத்துவத்திலும்,
பொருளாதாரத்திலும் ஒரு மேதையாக வேண்டும் என்று கூறிடவில்லை. அடிப்படை புரிதல் கொண்டவராக
இருக்க வேண்டும். இல்லை என்றால் கம்யூனிஸ்ட்டின் அரசியல் செயல்பாடு விஞ்ஞானத் தன்மையுடையதாக
இருக்காது.
விஞ்ஞான தன்மையற்ற சோஷலிசம்,
குறிப்பாக டூரிங்கு போன்றவர்களின் சோஷலிசம் ஆகும். முதலாளித்துவ உற்பத்தியில் ஏற்படும்
பொருளாதார நெருக்கடி என்பதை வெறும் மக்களின் குறைநுகவர்வுப் பிரச்சினையாக டூரிங் பார்க்கிறது.
அதாவது மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை என்கிற ஒன்றையே குறிப்பிடுகிறது. இந்தக் குறைநுகர்வு
என்கிற பிரச்சினை சுரண்டல் சமூகம் ஏற்பட்டது முதல் காணப்படுகிறது. குறைநுகர்வு என்கிற
பிரச்சினை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றில் தொடர்ந்து ஏற்படுகிறது.
மிகை உற்பத்தியால் சந்தையில்
சரக்குகள் தேங்குவது என்பது முதலாளித்துவ உற்பத்தி ஏற்பட்ட பிறகே உருவாகி உள்ளது. மிகை
உற்பத்தியால் ஏற்படுகிற இந்தப் புதியப் பிரச்சினைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்
உள்ள குறைநுகர்வு என்கிற கோட்பாடு பொருந்தாது என்கிறார் எங்கெல்ஸ்.
முதலாளித்துவ சமூத்தில்,
உற்பத்திச் சானங்களின் வளர்ச்சியே, மிகை உற்பத்தி, சந்தை சுருங்குதல் என்கிறப் பிரச்சினையை
தோற்றுவிக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தியில்
ஏற்படுகிற பொருளாதார நெருக்கடிக்கு, வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளினால் உருவான
மிகை உற்பத்தியே காரணமாகும். குறைநுகர்வு என்பது இதற்கு கீழ்மட்ட நிலையில் அதாவது இரண்டாம்
நிலை காரணமாகும் என்கிறார் “பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை” (Characterization
of Economic Romanticism) என்ற
நூலில் லெனின்.
பொருளாதார நெருக்கடி ஏற்படுகிற
காரணத்தை குறைநுகர்வு என்கிற கோட்பாடு, உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாக கருதுகிறது.
இந்தக் கோட்பாடு உற்பத்திக்கும் தொழிலாளியின் நுகர்வுக்கும் இடையே உள்ள முரண்பாடாகப்
பார்க்கிறது.
மார்க்சியக் கோட்பாடு பொருளாதார
நெருக்கடிக்குக் காரணமாக, முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகத் தன்மையினால் ஏற்படுவதாகக்
கூறுகிறது. மார்க்சியம் குறைநுகர்வை மறுக்கவில்லை என்று லெனின் கூறுகிறார். நெருக்கடிக்கான
காரணத்துக்கு கீழ்நிலையில் அதாவது இரண்டாம் நிலையினதாகக் குறிப்பிடுகிறார்.
முதலாளித்துவ சமூகத்தில்
திட்டமிடாமால் உற்பத்தி செய்யப்படுகிறது. முதலாளிகளுக்கு இடையேயானப் போட்டியினால்,
உற்பத்தியில் அராஜகத்தன்மை ஏற்படுகிறது. பொருட்கள் தேவைக்கு மேலாக மிகையாக உற்பத்தி
செய்யப்பட்டு சந்தையில் தேங்கிப்போகிறது.
சமூகத்தில் ஏற்பட்ட, முதல்
மாபெரும் உழைப்புப் பிரிவினை, நகரத்துக்கும் நாட்டுப்புறத்துக்கும் இடையிலுள்ள பிரிவினையே
ஆகும். வர்க்கத் தோற்றத்தின் போது மூளை உழைப்பும் உடல் உழைப்பும் பிரிந்தது போலவே,
முதலாளித்துவ உற்பத்தியில் நகரமும் கிராமமும் மாபெரும் உழைப்புப் பிரிவினையாகத் தோன்றியது.
நகரத்துக்கும் கிராமத்துக்கும்
இடையில் உள்ள பிரிவை ஒழிப்பது என்பது கற்பனையல்ல என்கிறார் எங்கெல்ஸ், நாடு முழுவதிலும்
தொழில்துறை சாத்தியமான அளவுக்கு மிகவும் சமமாகப் பங்கீடு செய்யப்படும் போது சாதியப்படும்.
முதலாளித்துவம் ஒழிந்தால்
மட்டுமே பல்வேறு முதலாளித்துவ நச்சுச் சூழலில் இருந்து விடுபட முடியும். முதலாளித்துவத்தில்
தொடர்ந்து நிகழும் மறுவுற்பத்தி என்பது முரண்பாடுகளையும் மறுவுற்பத்தி செய்கிறது.
முதலாளித்து உற்பத்தியில்
ஏற்படுகிற பொருளாதார நெருக்கடியே, சமூக மாற்றத்தைக் கோருகிறது. புரட்சியின் மூலம் ஏற்படுகிற
சமூக மாற்றத்தில் படிப்படியாக பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
“டூரிங்குக்கு மறுப்பு”
நூலின் இறுதியில் மதம் தோன்றியதற்கான காரணங்களையும், அந்தக் காரணங்கள் அழியும் போதே
மதம் மறையும் என்பதையும் எங்கெல்ஸ் கூறியுள்ளார். இவ்வாறு ஒவ்வொன்றையும் அணுகுவதே கம்யூனிஸ்டுகளின்
விஞ்ஞான பார்வையாகும்.
தங்களை கம்யூனிஸ்ட் என்று
சிலர் கூறிக்கொள்வதினால், தங்களது விருப்பப்படி கூறுகிற கருத்தெல்லாம் கம்யூனிசக் கருத்தாகாது.
கம்யூனிச அணுகுமுறையில் ஒவ்வொன்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி முடிவெடுப்பதே கம்யூனிசம்
ஆகும்.
அன்றாட வாழ்க்கையை கட்டுப்பத்துகிற
வெளிச் சக்திகள் பற்றிய மனிதர்களின் மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே மதம்
என்கிறார் எங்கெல்ஸ். மண்ணுலகச் சக்திகள் இயற்கையை மீறிய சக்திகளின் வடிவமாக பிரதிபலிக்கிறது.
இயற்கை பற்றிய அறிதல் இன்மையே மதம் தோன்றுவதற்கு முதல் காணரமாக இருக்கிறது. மிகவிரைவில்
மற்றொன்றும் மதம் தோன்றுவதற்கு காரணமாக ஆகியது. அது சமூக சக்தியாகும்.
இயற்கையைப் போன்றே இந்த
சமூக சக்தியும் வெளிச் சக்திகளாகும், இயற்கையைப் போன்றே சமூகமும் அதே அளவுக்கு புரிந்து
கொள்ளமுடியாத சக்தியாக இருக்கிறது. இது மதத்தின் தோற்றத்துக்கான இரண்டாவது காரணம்.
இந்த இரண்டு காரணங்களே
மதத்தின் இருப்புக்கு அடிப்படையாகும். ஆனால் டூரிங் தமது சமூக அமைப்பில் மதம் தடைசெய்யப்படும்
என்று கூறுகிறார். இதற்கு பதிலாகவே மதம் தோன்றுவதற்கும் இருப்பதற்கும் உள்ள காரணமாக
இரண்டை எங்கெல்ஸ் கூறியுள்ளார்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி
பெற்ற நிலையிலும் மதக்கருத்துக்கள் ஆதிக்க செலுத்துகிறது என்றால் அதற்கான புறநிலைக்
காரணங்கள் இருக்கின்றன. எங்கெல்ஸ் கூறுவதை அப்படியே பார்ப்போம்.
“மனிதர்கள் புறம்பான, இயற்கை மற்றும் சமூக சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் வரையில், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் இந்த சக்திகளுடனான மனிதர்களின் உறவின் நேரடியான அதாவது உணாச்சிபூர்வமான வடிவில் மதம் தொடர்ந்து நிலவும்”
(டூரிங்குக்கு
மறுப்பு – பக்-557)
இப்படிக் கூறுவதினால் மார்க்சியர்கள்
மதத்தை இன்றைய நிலையில் ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்
அவர்களிடம் மதப்பிடிப்பு இருக்காது. இருக்காது என்பது மட்டுமல்ல, மதத்துக்கும் மூலதனத்துக்கும்
உள்ள தொடர்பும், மதத்தின் வர்க்க சார்பையும் அறிந்தவர்கள். இதனடிப்படையில் மதத்தின்
வரலாற்றையும் அதன் வர்க்கத் தன்மையையும் உழைக்கும் மக்களிடம் விளக்கம் கொடுப்பர்.
அதே போலவே வர்க்கத்தையும்
நம் விருப்பத்தின் அடிப்படையில் ஒழித்திட முடியாது. இன்றைய வர்க்க வேறுபாட்டுக்குக் காரணமாக எங்கெல்ஸ்
கூறுவதைப் பார்பபோம்.
சமூகமயமாகிவிட்ட பொருள்
உற்பத்திக்கும், முதலாளித்துவ வர்க்கச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி
வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாய்த் தன்னை வெளிப்படுத்திக்
கொள்கிறது என்கிறார் எங்கெல்ஸ். இந்தப் பொருளாதார
நிலைமைகள் மாறாமலேயே வர்க்க வேறுபாட்டை வெறுக்கிறேன், அதனை ஒழிக்கப் போகிறேன் என்று
கூறுவதினால் வர்க்கத்தை ஒழித்திட முடியுமா. இறுதி குறிக்கோளை (Strategy) அடைவதற்கான இன்றைய செயல்பாட்டை
(Tactics) அமைத்து செயல்பட வேண்டும்.
மதத்தின் தோற்றத்துக்கான
காரணத்தை மாற்றுவதற்கான போராட்டத்தின் மூலம் மதத்தை ஒழிக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த,
வர்க்க மற்ற கம்யூனிச சமூகத்தில்,. அரசு உலர்ந்து போகிற அந்த கட்டத்தில் மதமும் தேவையில்லாத காரணத்தால் மறைந்து போகும்.
முதலாளித்துவத்தை வீழ்த்தும்
வரை அதனுடனான வர்க்கப் போராட்டத்தை தொழிலாளி வர்க்கம் எப்படி தொடர்ந்து நடத்துகிறதோ,
அதே போல மதம் மறையும்வரை அதனை எதிர்த்துப் போராடும். என்னத்தான் புறநிலைமை மாறியானலும்
விமர்சனம் இல்லாது, போராட்டம் இல்லாது ஒழித்திட முடியாது. புறமும் அகமும் இணையும் போதே
ஒழிக்க முடியும்.
புறமும் அகமும் இணைவதில்
தான் கம்யூனிசத்தின் விஞ்ஞானத் தன்மை முழுமை பெறுகிறது. 1895 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் மறைந்த
போது லெனின் ஒரு கட்டுரை எழுதினார். அதில் விஞ்ஞானக் கம்யூனிசத்தைப் பற்றி நிறைய எழுதியுள்ளார்.
சோஷலிசம் என்பது எதோ கனவு
காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின்
கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும். இந்த தவிர்க்க முடியாததை நிகழ்த்திக்
காட்டுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும்.
கம்யூனிஸ்ட் கட்சி செய்ய
வேண்டிது என்னவென்றால், சமூக சக்திகளில் பாட்டாளி வர்க்கமே சோஷலிசத்தை அடைவதற்கு போராடும்
புரட்சிகர சக்தி என்பதை மார்க்சிய வழியில்
அறிந்து, பாட்டாளிகளுக்கு தனது நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட
கடமையைப் பற்றி உணர்வையும் ஊட்டுவதே ஆகும் என்று லெனின் கூறியுள்ளார்.
இந்தத் தெளிவை முதலில்
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தலைவர்களும், பொறுப்பாளர்களும் முதலில் நன்றாகப் புரிந்துகொள்ள
வேண்டும். கம்யூனிசத்தின் மீதும், பாட்டாளிகள் மீதும் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்ற
பொறுப்பாளர்கள், பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் தகுதி இல்லாதவராவர். கம்யூனிஸ்டுகள்
முதலில் அதற்கான தகுதியை பெறும் வகையில் மார்க்சிய அடிப்படைகளை தெளிவாகப் புரிந்து
கொள்ள வேண்டும்.
தொழிலாளி வர்க்கமும், அதன்
கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையில் இருந்து விளைந்த அவசியமான விளைவு,
இந்தப் பொருளாதார அமைப்பு முறையும், முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத
வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன. இந்தப்
புறநிலையையே அகநிலையான கம்யூனிஸ்ட் கட்சி தமது கடமையை உணர்ந்து செயல்படுகிறது.
மார்க்சியத்தின் மூன்று
உள்ளடக்கத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாது இருப்பவர்களால் எத்தகைய தியாகத்தை
செய்தாலும் அது பயனற்றே போகும். வெறும் தியாகத்தால் தொழிலாளர்களின் நலனை பிரதிபலிக்க
முடியாது. தனது கடமையை உணர்ந்த அரசியலே விடுதலையைப் பெற்றுத் தரும்.
பலமுறை கூறியது போல, மார்க்சிய
அடிப்படைகளை படித்தல் என்றால், மூலவர்களின் நூலைப் படித்து, தேர்வு எழுதி வெற்றி பெறுவதாகக்
குறிக்கப்படவில்லை. அடிப்படைப் புரிதலைப் பற்றியே பேசுகிறோம், அடிப்படைப் புரிதல் தொடக்க
நிலைக்கு போதுமானது.
இன்றைய தொழிற்சங்கத் தலைவர்களில்,
எத்தனைப் போருக்கு மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படைப் புரிதல் இருக்கிறது என்ற
கேள்விக்கு, அதிகமாக எதிர்மறையான பதிலே கிடைக்கும். இந்த அவல நிலையே இடதுசாரிகளின்
பின்தங்கிய நிலைக்குக் காரணம் ஆகும். இதனை அறியாமல் இந்திய நிலைமைகளின் மீதும், தொழிலாளிகளின்
மீதும் குற்றம் சுமத்துவதினால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
இருக்கும் நிலைமைகளில்
இருந்துதான் வேலை செய்ய வேண்டும். தமக்கு சாதகமான நிலைமை இல்லை என்றால் செயல்பட முடியாது
என்பவரை, எந்த வகையிலும் அரசியல்வாதியாக கருத முடியாது. சமூக எதார்த்த நிலைமையை சரியாக
அறிந்து கொள்வதிலும், அதற்கு ஏற்ற வகையில் பாட்டாளிகளுக்கு அறிவூட்டுவதிலும் கம்யூனிஸ்டுகள்
திறம் பெறவில்லை என்றால், எத்தனை நூறாண்டுகள் கடந்தாலும் பின்னடைவில் இருந்து விடுபட
முடியாது.
மார்க்சிய தத்துவத்தின்
அடிப்படைகளைப் படித்தல் என்றால், அது வெறும் பொருள்முதல்வாதத்தைப் படித்தலோடு நின்றுவிடுவதில்லை.
நமது நாட்டுத் தத்துவங்களையும் மார்க்சிய வழியில் படிக்க வேண்டும். தொழிலாளர்களின்
மனநிலையை அப்போது தான், நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். நமது நாட்டின் கருத்துமுதல்வாதப்
போக்கில் தொழிலாளர்கள் மூழ்க்கி இருக்கும்வரை அவர்களது புரட்சிகர உணர்வுகளை தட்டு எழுப்பிட
முடியாது.
நம் நாட்டில் உள்ள அனைத்துப்
இடதுசாரிப் பிரிவுகளிலும் தியாக வரலாறு இருக்கிறது. புரட்சிகரமான போட்பாடு இல்லாமல்
புரட்சிகரமான போராட்டம் இல்லை. நம்நாட்டுக்கு இன்றையத் தேவையான செயல்தந்திரத்தை சரியாக
அமைத்துக் கொள்ளாமல், வெறும் தியாகத்தால் எதையும் சாதித்திட முடியாது.
அதற்கு மார்க்சிய அடிப்படைப்
புரிதலும், அதன் அடிப்படையில், நம் நாட்டு வர்க்க ஆய்வை செய்ய வேண்டும். நம் நாட்டு
வர்க்க ஆய்வை செய்வதற்கு இன்றைய சமூகத்தைப் பற்றிய புரிதல் மட்டும் போதாது, நமது நாட்டு
வரலாற்றையும் அறிந்து இருக்க வேண்டும்.
மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
நமது அணுகுமுறையை மட்டுமே அளிக்கிறது, அதனடிப்படையில் நமது நாட்டு பொருளாதாரத்தையும்,
நம் நாட்டுப் பழைய பொருளாதார வரலாற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான தொடக்க
முயற்சியை நம் நாட்டு கம்யூனிச அறிஞர்கள் செய்துள்ளனர், அதனை நாம் தொடர்ந்து செய்து
நிறைவேற்ற வேண்டும்.
முதலாளிகள் தங்களது நலன்களை
வெளிப்படுத்துவதற்கு தேவையான அறிவுத் தலைமையைப் பெற்றுள்ளனர். பாட்டாளிகள் தங்களுக்கு
வழிகாட்டுவதற்கு ஒரு அறிவுத் தலைமை வேண்டும். அத் தலைமையே கட்சியை நடத்திட வேண்டும்.
வலதுதிரிபான, சீர்திருத்தவாதத்தினாலோ
அதே போல இடதுதிரிபான அராஜகப் போக்காலோ பாட்டாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. சீர்திருத்தவாதிகளினால்
பாட்டாளிகளுக்கு வர்க்க அரசியலை ஊட்ட முடியவில்லை. அவர்களது அமைதிவாதம் அதற்குத் தடையாகப்
போகிறது. இடதுதிரிவுவாதிகளின் வன்முறையிலானப் போராட்ட உணர்வு, பாட்டாளிகளிடம் வேலை
செய்வதையே தடுத்துவிடுகிறது.
நம்நாட்டு இடதுசாரிகளிடம்
அமைதிப் போக்கும், வன்முறைப் போக்கும் தனித்தனியே கோலோச்சுகிறது. சூழ்நிலைமைக்கு ஏற்றப்
போராட்டத்தை நடத்துவதற்கான பக்கும் தேவைப்படுகிறது.
ஒரு கடிதத்தில் எங்கெல்ஸ்
எழுதினார், “ஒரு புரட்சிக்காரன் என்ற முறையில் லட்சியத்துக்கு இட்டுச்செல்கின்ற எந்த
வழியும் – மிகவும் வன்முறையானவை, மிகவும் சமாதானமானவை ஆகிய இரண்டுமே- எனக்கு பின்பற்றத்தக்கவையே”
(ஜெர்சன் டிரியருக்கு எழுதியது, 18/12/1889) ஆக இரண்டு போராட்டத்துக்கும் தயாராக இல்லாது,
ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பது வெற்றிக்கு வழியாக இருக்காது.
ஒரு கடிதத்தில் மார்க்ஸ்
கம்யூனிஸ்ட்டுகளின் குறிக்கோளைச் சுருக்கமாக கூறியுள்ளார்.
“நான் கம்யூனிஸ்ட்டுகளின் குறிக்கோள்களைப் பின்வருமாறு வரையறுத்தேன்.
1) முதலாளித்து வர்க்கத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்தல்,
2) தனியுடைமையை ஒழித்து அதனிடத்தில் பொருள்களின் பொதுவான உடைமையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்தல்.
3) இக்குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு பலாத்காரமான ஜனநாயகப் புரட்சியைத் தவிர வேறு எந்த வழியினையும் அங்கீகரிக்காது இருத்தல்”
(கம்யூனிஸ்ட் தொடர்புக் கமிட்டிக்கு எழுதியது, 23/08/1846)
ஆக, கம்யூனிஸ்ட்டின் செயற்பாடு
என்பது கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்று போவதில்லை. கூலி அமைப்பு முறை ஒழிக்கும் போராட்டம்வரை அது நீடிக்கிறது.
முதலாளித்துவ சமூகம், கூலி
அமைப்பு முறையால் உருவாக்கப்பட்டது. முதலாளித்து உற்பத்தி முறையினால் உருவான வர்க்க
முரணை, முதலாளித்துவத்தால் தீர்க்க முடியாது. கூலி அமைப்பு முறையின் நீக்கத்தோடே வர்க்கப்
போராட்டம் முடிவுக்கு வரும்.
முதலாளித்துவ அரசை தூக்கி
எறியப்பட்டு, அமைக்கப் போகும் அரசு எப்படிப்பட்டதாக இருக்கும். அது பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரமாகத்தான் இருக்கும். சர்வாதிகாரம் என்ற வார்த்தை இன்று பல அமைதிவாதிகளுக்கு
எரிச்சலை உருவாக்குகிறது. இதில் இடதுசாரிகள் என்று கூறிக் கொள்பவர்களும் அடங்குவர்.
இப்படிப்பட்டவர்களின் கூற்று அரசின் வர்க்கத் தன்மையை அறியாது பேசியதாகும்.
முதலாளித்துவ அரசு என்பது
முதலாளித்துவ சர்வாதிரக அரசாகும், இந்த அரசு தொழிலாளர்களின் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்கு
உருவான கருவியாகும். அதே போல பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார அரசு என்பது, பொதுவுடைமைக்கு
எதிராக செயல்படுபவர்களை ஒடுக்கும் அரசு ஆகும். முதலாளித்துவ அரசு சிறுபான்மையானர்களின்
நலல்களை முன்வைத்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது. பாட்டாளி வர்க்க
சர்வாதிகார அரசு பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் நலன்களை முன்வைத்து சிறுபான்மையினரின்,
சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் போக்கிற்கு எதிராக செயல்படுகிறது.
கம்யூனிஸ்டுகள் தங்களது
செயற்பாடுகளை ஒளிவுமறைவு இல்லாது ஒப்புக் கொள்கின்றனர். அதனால் பாட்டாளிகளின் அரசை
சிலர் இன்று கூறுவது போல் பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயக அரசு என்று பொய்யாகக் கூறிட
முடியாது.
இவற்றைக் காணும்போது கம்யூனிஸ்டுகளின்
அரசியல் செயற்பாடு என்பது சாதாரணது கிடையாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதனை “கம்யூனிஸ்ட் கட்சி
அறிக்கை” மிகமிகத் தெளிவாக நமக்கு முன்வைத்துள்ளது.
“ஒட்டுமொத்தப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள உறவு எத்தகையது?
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாக அமையவில்லை.
கம்யூனிஸ்டுகளுக்கு ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர வேறு தனிப்பட்ட நலன்கள் கிடையாது.
பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்:
(1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் எந்தவொரு தேசியத்தையும் சாராமல், பாட்டாளி வர்க்கம் முழுமைக்கும் உரிய பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டி, முன்னணிக்குக் கொண்டு வருகின்றனர்.
(2) முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டிய பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும், எங்கும் எப்போதும் கம்யூனிஸ்டுகள் ஒட்டுமொத்த இயக்கத்தின் நலன்களையே முன்வைக்கின்றனர்.
எனவே, கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் நடைமுறை ரீதியில், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தொழிலாளி வர்க்கக் கட்சிகளில், மிகவும் முன்னேறிய, மிகவும் உறுதி வாய்ந்த பிரிவாக, மற்றவர்கள் அனைவரையும் முன்னோக்கி உந்தித் தள்ளுகின்ற பிரிவாக உள்ளனர். மறுபுறம் தத்துவ ரீதியில், கம்யூனிஸ்டுகள் பாட்டாளி வர்க்கத்தின் பெருந்திரளினருக்கு இல்லாத ஓர் அனுகூலத்தை, அதாவது, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில் ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றுள்ளனர்.
கம்யூனிஸ்டுகளுடைய
உடனடி நோக்கம், மற்றெல்லாப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் உடனடி நோக்கம் எதுவோ அதுவேதான்.
பாட்டாளிகளை ஒரு வர்க்கமாகக் கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல்,
பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவைதாம்.”
அறிக்கையில் யார் கம்யூனிஸ்ட்
என்று கூறியுள்ளது. பாட்டாளி வர்க்க இயக்கத்தின் திசைவழியையும், நிலைமைகளையும், இறுதியில்
ஏற்படும் பொதுவான விளைவுகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தைப் பெற்றவர்தான்
கம்யூனிஸ்ட்.
இந்தத் தெளிவைப் பெறுவதற்கு
குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதமும், மார்க்சிய அரசியல் பொருளாதாரமும் தெரிந்து
இருக்க வேண்டும்.
மார்க்சின் “உபரி மதிப்புக்
கோட்பாட்டை” புரிந்து கொள்ளாத, தொழிற்சங்கத் தலைவர்களால் முதலாளித்துவ சுரண்டலை எவ்வாறு
புரிந்து போராட முடியும். வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கேள்விக் கேட்கும் தலைவர்கள்
எவ்வாறு கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருக்க முடியும்.
மார்க்சிய அடிப்படைப் புரிதல்
கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் மட்டப் பொறுப்பாளர்களுக்குப் போதுமானது, தலைவர்களுக்கு
மார்க்சியமும், அதன் வழியில் இன்றைய வர்க்க முரணையும் ஆய்வு செய்து தெளிவான முடிவில்
இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களின் தலைமைத்தான், சரியான திசைவழியைக் காட்டக் கூடியதாக
இருக்கும்.
மார்க்சிய தத்துவம் அறிந்து
கொள்வது எதற்கு?
மார்க்சிய தத்துவத்தின் வழியில், நம்நாட்டு கருத்துமுதல்வாதத் தத்துவங்களைப் புரிந்து கொண்டு, அதன் பாதிப்பில் உள்ள உழைக்கும் மக்களின் போராட்ட பலவீனத்தை போக்குவதற்காகும்.
மார்க்சிய
அரசியல் பொருளாதாரம் அறிந்து கொள்வது எதற்கு?
மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின்
வழியில் நம் நாட்டு பொருளாதார நிலைமைகளைப் புரிந்து, வர்க்க போக்கை அறிந்து, அதன் வழியில்
அரசியல் கொள்கைகளை அமைத்துப் போராடுவதற்காகும்.
மார்க்சியப் படிப்பு என்பது
செயற்பாட்டுக்குப் அப்பாற்பட்டது கிடையாது, செயற்பாடு என்பது படிப்புக்கு உட்படாததும்
கிடையாது.
மார்க்சிய வழியில் செயல்படுவோம்,
நம்நாட்டில் உள்ள சுரண்டலை முறியடிப்போம். தொழிலாளிர் அதிகாரத்தை வென்றெடுப்போம்.
நமது வெற்றிக்காக மார்க்சியம்
பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம்.