Sunday 30 July 2023

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (மூன்றாம் – இறுதிப் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 94- வது வார வகுப்பு  – 23-07-2023  )

 


3) பாட்டாளி வர்க்க சோஷலிசம்

இதுவரை மார்க்சின் இயக்கவியல் ஆய்வுமுறையையும் பொருள்முதல்வாதக் கோட்பாட்டையும் அறிந்து கொண்டோம்.

இதற்கு அடுத்து இங்கே நாம், மார்க்சின் கோட்பாட்டிலிருந்து என்ன நடைமுறை முடிவுகளை எடுக்க வேண்டும்? என்பதைப் பார்க்கப் போகிறோம்.

இந்த முடிவு எடுக்க வேண்டும் என்றால், இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கும் பாட்டாளி வர்க்க சோஷலிசத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்றாம் அத்தியாயத்தின் பெயர், பாட்டாளி வர்க்க சோஷலிசம். இதை ஏன் பாட்டாளி வர்க்க சோஷலிசம் என்று கூறுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமானால், பாட்டாளி என்பவன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த வர்க்கம் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறதோ, எந்த வர்க்கம் சமூகத்தில் எப்போதும் முன்னோக்கி நடைபோடுகிறதோ, எந்த வர்க்கம் எதிர்காலத்துக்காக இடைவிடாது போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த வர்க்கம்தான் இறுதிவரை முற்போக்கானதாக இருக்க முடியும். அப்படிப்பட்ட வர்க்கம் நவீன பாட்டாளி வர்க்கமே ஆகும். பாட்டாளி வர்க்கம்தான் அடிமைத்தனத்தை தகர்த்து எறியக்கூடிய உறுதி பெற்றதாக இருக்கிறது. இதனை இயக்கவியல் முறை உறுதிப்படுத்துகிறது.

தற்போது கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பாட்டாளிகள்தான் நவீன உற்பத்தி முறையோடு இணைந்து இருப்பதினால் அது வளர்ந்து கொண்டு இருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பாட்டாளி வர்க்கத்தின் மீது கம்யூனிஸ்டுகள் நம்பிக்கை கொள்ள வேண்டும், பாட்டாளிகளுக்கு உரிய வகையில் வழிகாட்ட வேண்டும்.

இதுவே மார்க்சினுடைய கோட்பாட்டுப் போதனையில் கம்யூனிஸ்டுகள் பெறக்கூடிய முதல் நடைமுறை முடிவு ஆகும்.

பாட்டாளி வர்க்கத்திற்கு, கம்யூனிஸ்டுகள் எவ்வாறு பணி செய்ய வேண்டும்?

பாட்டாளி வாக்கத்துக்கு பயனளிக்கும் வகையில் கம்யூனிஸ்டுகளின் பணி இருக்க வேண்டுமானால் நமது செயல்பாடுகள் எந்த வகையில் செய்ய வேண்டும்?

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிராக இயங்காமல், அந்த வளர்ச்சியின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வது மட்டுமே பாட்டாளி வர்க்கத்திற்கு நேரடி பணியாக இருக்கும் என்பதை பொருள்முதல்வாதக் கோட்பாடு அறுதியிட்டுச் கூறுகிறது.

தற்கால முதலாளித்துவ உற்பத்தி முறை மேலும் மேலும் சமூகமயத் தன்மை உடையதாக மாறுகிறது. இந்த சமூகத் தன்மையை முதலாளித்துவ முறைக்கு எதிராகத் திரும்புகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடாக வெளிப்படுகிறது.

இதன் விளைவாக, முதலாளித்துவ உடைமையை ஒழித்துக்கட்டவும், சோஷலிச உடைமையை நிலைநாட்டவும் உதவி செய்வதே கம்யூனிஸ்டுகளின் கடமையாக இருக்க வேண்டும். இதற்கு எதிரானப் போக்குகள் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு எதிராகவே மாறும்.

தற்போதைய உற்பத்தி நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டு இருப்பதையே முதலாளித்துவக் கட்டமைப்புனுடைய பொருளாதார வளர்ச்சி நமக்குக் காட்டுகிறது. இந்த வளர்ச்சியானது தனிப்பட்ட நகரங்களில் நின்றுவிடாமல் அனைத்து இடங்களுக்கும் விரிவடைகிறது. இப்படி விரிவடைந்து செல்வதை கம்யூனிஸ்டுகள் தவறாமல் வரவேற்க வேண்டும். இதை எதிர்க்கும் கோட்பாடுகள் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராகவே மாறும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி, பரந்து விரிந்த சோஷலிச வாழ்க்கைக்காக போராடுவதே ஆகும்..

மார்க்சினுடைய கோட்பாட்டுப் போதனையில் இருந்து கம்யூனிஸ்டுகள் பெறும் இரண்டாவது நடைமுறை முடிவு ஆகும்.

பாட்டாளி வர்க்க சோஷலிசம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தர்க்க வழியிலான முடிவாகும். அதாவது பாட்டாளி வர்க்க சோஷலிசம் என்பது எந்த தனிநபரின் விருப்பம் சார்ந்தது அல்ல, சமூக வளர்ச்சியின் வழியில் ஏற்படும் தவிர்க்க முடியாதது, சமூகப் புரட்சி ஆகும். இதனை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக ஸ்டாலின், பாட்டாளி வர்க்க சோஷலிசம் என்றால் என்ன? என்கிற கேள்வியைக் கேட்டு பதிலையும் தருகிறார்.

தற்போது நிலவுகின்ற நவீன அமைப்பு முதலாளித்துவ உற்பத்தி முறையாகும். இந்த முதலாளித்துவத்தில் மிகச்சிலர் முதலாளிகளாகவும் பெரும்பான்மையினர் பாட்டாளிகளாகவும் இருபெரும் பிரிவாகப் பிரிந்துள்ளனர். பாட்டாளிகள் ஒவ்வொரு நாளும் அதிக நேரம் உழைத்தும் வாழ்க்கைக்குத் தேவையானதை நிறைவு செய்து கொள்ள முடியாமல் பற்றாக்குறையாகவே வாழ்கின்றனர். நேரடி உழைப்பில் ஈடுபடாத முதலாளிகள் செல்வ செழிப்பில் மிதக்கின்றனர்.

இப்படி பற்றாக்குறையுடன் இருப்பதற்குக் காரணம் பாட்டாளிகள் எதோ முட்டாள்களாகளாகவும் முதலாளிகள் ஏதோ மேதைகளாகவும் இருப்பதினால் அல்ல. இதை வேறுவிதமாகவும் கூறலாம், பாட்டாளிகள் ஊதாரியாகவும் முதலாளிகள் சிக்கனமாகவும் இருந்ததால் இந்நிலைக்கு ஆளாகவில்லை. இதற்கு மாறாக பாட்டாளிகளின் உழைப்பை, முதலாளிகள் சுரண்டுவதினாலேயே கொழுத்துக் கிடக்கின்றனர்.

இதற்கு அடுத்து ஸ்டாலின் முக்கியமான கேள்விகளைக் கேட்டு பதிலையும் தருகிறார். இப்படி கேள்விகள் கேட்டு பதிலைத் தருவது புரிந்து, கொள்வதற்கு எளிதாக இருக்கிறது.

உழைப்பின் பலன்களை பாட்டாளிகள் தமதாக்கிக் கொள்ளாமல் அதை முதலாளிகள் ஏன் கைப்பற்றிக் கொள்கிறார்கள்?

பாட்டாளிகளை முதலாளிகள் சுரண்டுவதும், முதலாளிகளை பாட்டாளிகள் சுரண்ட முடியாமல் இருப்பதும் ஏன்?

ஏனென்றால் முதலாளித்துவ அமைப்பு சரக்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது, இங்கே எல்லாமே ஒரு சரக்கின் வடிவத்தை எடுத்துக்கொள்கிறது, எல்லா இடங்களிலும் வாங்குதல் மற்றும் விற்பது என்ற கொள்கை நிலவுகிறது.

நுகர்வுப் பொருளாக உணவு மட்டுமல்லாது, உழைப்பாளியின் உழைப்புச் சக்தியும் சரக்காக, நுகரும் பொருளாக முதலாளித்துவத்தில் மாறிவிடுகிறது.

பாட்டாளியை வேலைக்கு அமர்த்துவதற்காக, அவரது உழைப்புச் சக்தியை ஒரு முதலாளி விலைக்கு வாங்குகிறார். அந்த உழைப்பை நாள்முழுதும் பெறுவதற்கு உரிமை உள்ளவராக முதலாளி இருக்கிறார். ஆனால் பாட்டாளியோ தாம் விற்ற, தமது உழைப்புச் சக்தியைக் கட்டுப்படுத்தும் உரிமையை இழந்தவராக இருக்கிறார். அதாவது உற்பத்தியானதில் எதுவும் பாட்டாளிகளுக்கு சொந்தமாக இல்லை. முதலாளிக்கு மட்டுமே அது சொந்தமாகக் கொள்ளப்படுகிறது.

தொழிற்சாலையை உடைமையாகக் கொண்ட முதலாளி, பாட்டாளியின் உழைப்புச் சக்தியை விலை கொடுத்து வாங்கிக் கொண்டதால், அதன் பலன் முழுவதையும் முதலாளி தனதாக்கிக் கொள்கிறார். ஒரு நாளைக்கு எவ்வளவு அதிகம் உழைத்துக் கொடுத்தாலும் பாட்டாளிக்கு உழைப்புச் சக்திக்கு மட்டுமே கூலி கொடுக்கப்படுகிறது. தனிச் சொத்துடைய முதலாளியால் பாட்டாளியை சுரண்ட முடிகிறது, இதற்கு மாறாக பாட்டாளியால் முதலாளியை சுரண்ட முடியவில்லை.

உற்பத்திக் கருவிகளும், உற்பத்திச் சாதனங்களும் முதலாளிக்கு உடைமையாக இருக்கின்றன. தனிவுடைமை நிலவுகிற உற்பத்தி முறையில் சொத்துடைமை உள்ளவருக்கே அனைத்தும் சொந்தமாகிறது. பாட்டாளி உடைமை இழந்தவராக இருக்கிறார். அதனால் அவருக்கு உற்பத்தியில் ஈடுபட முடிகிறதே தவிர, உற்பத்தியின் பலன் கிடைப்பதில்லை.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பத்திச் சாதனங்கள் தனித்தனி முதலாளிகளுக்குச் சொந்தமானதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம், மக்களின் தேவையை நிறைவு செய்வதாக இல்லை, லாபத்தை பெருக்குவதே முதலாளித்துவத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு முதலாளியும் லாபத்தைப் பெருக்குவதற்கு உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டே செல்கிறார்கள்.

மக்களின் தேவையை அறியாமலும் திட்டமிட்டு உற்பத்தியை செய்யாததும் முதலாளித்துவத்தில் மிகை உற்பத்தி ஏற்படுகிறது. மிகை உற்பத்தியால் சரக்குகள் சந்தையில் குவிந்து, விற்பனையாகாமல் தேங்கிப் போகிறது. பொருளாதார நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து பொது நெருக்கடியும் ஏற்படுகிறது. நெருக்கடியின் போது உழைப்பாளர்கள் வேலை இழக்கின்றனர். அதிக துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். இது முதலாளித்துவ உற்பத்தியில் தவிர்க்க முடியாத அதன் நேரடி விளைவு ஆகும்.

அப்படி இருந்தும், இந்த ஒழுங்கமைப்பற்ற முதலாளித்துவ சமூகம் இன்னும் நீடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி என்னும் அடித்தளத்தை காப்பாற்றுவதற்கு அரசும், அரசு இயந்திரமும் மேற்கட்டமைப்பாக இருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை இத்தகையதாகத்தான் இருக்கிறது என்று கூறுவதோடு ஸ்டாலின் இந்த இடத்தில் நிறுத்திவிடுகிறார்.

இன்று பலம்பொருந்தியதாக இருக்கும் முதலாளித்துவம், பொருளாதார நெருக்கடிக்காலத்தில் பொது நெருக்கடியும் ஏற்பட்டு, அதாவது அனைத்துத் துறையிலும் நெருக்கடி ஏற்பட்டு பலவீனப்பட்டுப் போகும் அப்போது முதலாளித்துவத்தை எதனாலும் காப்பாற்ற முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் பாட்டாளி வர்க்கம் பலம்பெற்று புரட்சி செய்து முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்தி சோஷலிச சமூத்தை எழுப்பும்.

இதற்கு அடுத்தப் பகுதியில் ஸ்டாலின் சோஷலிச சமூகத்தைப் பற்றி பேசுகிறார்.

எதிர்கால சமூகம் முற்றிலும் முதலாளித்துவத்துக்கு மாறான அடிப்படையில் கட்டி அமைக்கப்படும்.

எதிர்கால சமூகம் சோஷலிச சமூகமாக இருக்கும். இந்த சமூகத்தில் வர்க்கங்கள் படிப்படியாக மறைந்து போகும். முதலாளிகளும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் அவ்வாறே மறைந்து போவார்கள். முதலாளி இல்லாததால் பாட்டாளி என்கிற வர்க்கமும் இல்லாது போகும். அப்படிப்பட்ட சோஷலிச சமூகத்தில் வர்க்கங்களற்றும் சுரண்டலற்றும் காணப்படும். அன்றைய தொழிலாளர்கள் கூட்டு உழைப்பில் ஈடுபடுவார்கள்.  உழைப்புக்கு இடையே காணப்படும் வேறுபாடுகள் களையப்பட்டிருக்கும்.

மேலும் சந்தை நோக்கிய லாபத்துக்கான சரக்கு உற்பத்தி முடிவுக்கு வந்துவிடும். மக்களின் தேவையை அறிந்து திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படும். அப்போது உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடையாக்கப்பட்டிருக்கும்.

இந்த இடத்தில் ஸ்டாலின் மார்க்ஸ் எழுதிய “தத்துவத்தின் வறுமை” எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” ஆகிய நூல்களில் இருந்து மேற்கோளைத் தந்துள்ளார்.

1846 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “தத்துவத்தின் வறுமை” என்ற நூலில் மார்க்ஸ், சோஷலிசத்தில் அமைக்கப்படும் அரசு என்பது இதுவரை கூறப்பட்ட பொருளில் அரசாக இருக்காது என்கிறார்.

1884ஆம் ஆம் ஆண்டு “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எங்கெல்ஸ், மனித சமூகம் தோன்றியது முதல், அரசு என்பது இருக்கவில்லை. அரசே இல்லாமல் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர், பழங்குடி சமூகத்தின் சிதைவின் போது ஏற்பட்ட வர்க்க சமூகம் தோன்றிய போதுதான் அரசு அவசியமான ஒன்றானது.

வர்க்க வேறுபாடு தோன்றிய போது ஏற்பட்ட அரசு, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் வர்க்கங்கள் வீழ்ச்சியுடன் அரசு என்கிற இயந்திரமும் தவிர்க்க முடியாத வகையில் வீழ்ச்சி அடையும். அதன் பிறகு ராட்டையும், வெண்கலக் கோடாரியும் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது போலவே அரசு ஒரு பாழைய காட்சிப் பொருளாக மாறும் என்று இந்த நூலில் எங்கெல்ஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

சமூகத்தில் வர்க்கங்கள் அழிவும் போது அரசும் அழிந்து போனால் கம்யூனிச சமூக நிர்வாகம் என்னவாகும் என்கிற கேள்வி பலருக்கு ஏற்படுகிறது. அரசு இல்லை என்றால் அராஜகம் வந்துவிடுமே என்கிற அச்சத்தை பலர் எழுப்பு கின்றனர். அங்கே வர்க்க சார்ப்பான அரசு அழிந்து போகும், தேவையான நிர்வாகம் கண்டிப்பா இருக்கும். அது எப்படி இருக்கும் என்பது பற்றி ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் நோக்கத்தில் அப்போது, அனைத்துத் தகவல்களையும் சேகரிப்பதற்கு உள்ளூர் அளவிலான அலுவலகங்கள் இருக்கும். அனைத்து உள்ளூர் அலுவலகங்களை இணைத்த நிர்வாக மையம் இருக்கும். முதலாளித்துவ சமூகத்தில் சந்தை நோக்கி பொருட்கள் உற்பத்தி செய்வது போல் இல்லாது, நாட்டில் உள்ள அனைவரின் தேவைகளின் புள்ளிவிவரத்தை சேகரித்து அதன் அடிப்படையில் திட்டமிட்டு அதற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும். முதலாளித்துவ சமூகம் போல் நுகர்வு கலாச்சாரமாக இல்லாமல் தேவைக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படும். உற்பத்தி செய்து அதற்கான சந்தையே தேடிக் கொண்டிக்கப் போவதில்லை. சந்தைக்கான உற்பத்தியின் போதுதான் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் உள்ள ஒவ்வொரும் தம்மால் இயன்ற அளவுக்கு வேலை செய்ய வேண்டும் என்று அந்தச் சமூகத்தின் சூழநிலை கோரும். ஒவ்வொரின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கு வழங்கப்படும். இந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிசத்தில் “சக்திக்கு ஏற்ற உழைப்பு தேவைக்கு ஏற்ற பங்கீடு” என்கிற அடிப்படையில் நிர்வாகம் பணிபுரியும். இது வளர்ச்சி அடைந்த கம்யூச சமூகத்தைப் பற்றியது.

இதற்கு அடுத்து முதலாளித்துவத்தை வீழ்த்திய பிறகு அமைக்கப்படும் முதல் கட்டத்தைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார்.

இந்த இடத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மார்க்ஸ் கோத்தா வேலைத் திட்டத்தில் கம்யூனிச உற்பத்தி முறை இரண்டு பகுதிகளாக இருக்கும் என்கிறார். முதல் பகுதி முதல் கட்டம், இரண்டாம் பகுதி உயர்ந்த கட்டம். இதை லெனின் வாழ்ந்த காலத்தில் உள்ள கம்யூனிஸ்டுகள் முதல் கட்டத்தை சோஷலிச சமூகம் என்றும் வளர்ச்சி அடைந்த இரண்டாவது உயர் கட்டத்தை கம்யூனிச சமூகம் என்றும் பெரிட்டனர். இது வெறும் பெயர் மாற்றமே தவிர கோட்பாடு மாற்றம் கிடையாது.

சோஷலிசத்தின் முதல் கட்டத்தில், இன்னும் உழைக்கப் பழகாத கூறுகள் புதிய வாழ்க்கை முறைக்கு இழுக்கப்படும். மேலும் ​​உற்பத்தி சக்திகள் இன்னும் போதுமான அளவு வளர்ச்சியடையாதக் காரணத்தால், வேலைகளுக்கு இடையே “உயர்வு”, “தாழ்வு” நீடிக்கவே செய்யும். முதலாளித்துவத்தின் மீதமிச்சங்கள் முற்றும் ஒழிக்கப்படாமல் இருக்கும். இது கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம்.

இதற்கு அடுத்துவரும் வளர்ச்சி அடைந்த உயர் கட்டத்தில் “ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப” என்கிறபடி பங்கீடு வழங்கப்படும்.

ஸ்டாலின் இந்த நூலை நவம்பர் புரட்சி நடைபெறுவதற்கு முன்பு எழுதியது ஆகும். அதனால் சோஷலிச புரட்சி நடைபெறுவது சாத்தியமா என்கிற கேள்வியை எழுப்பி பதிலும் தருகிறார்.

சோஷலிசப் புரட்சி வரும் என்று சொல்வது சரிதான். சோசலிசத்தின் சாதனை நினைத்துப் பார்க்கக் கூடியதா? மனிதன் தனது "காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களிலிருந்து" தன்னை விடுவித்துக் கொள்வான் என்று நாம் கருதலாமா? என்கிற கேள்வியைக் கேட்கிறார்.

கம்யூனிச சமூகத்தில் சக்திக்கு ஏற்ற உழைப்பு, தேவைக்கு ஏற்றப் பங்கீடு என்று கூறினால், பலருக்கு சந்தேகம் எழுகிறது. தேவைக்கு ஏற்றது கிடைக்கும் என்றால் உழைப்பதில் அன்றைய மக்களிடம் விரும்பம் குறையாதா, என்பது போன்ற கேள்வி கேட்கப்படுவதை இன்றும் நாம் பார்க்கிறோம்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் இன்றைய மனநிலையில் இருந்து வருகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ன கூறுகிறது, அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்ப அன்றைய சிந்தனைகள் இருக்கும். முதலாளித்துவத்தில் உள்ள உற்பத்திச் சக்திகளைவிட பத்து மடங்கு அங்கு அதிகரித்திருக்கும் என்கிறார் ஸ்டாலின்.

மேலும் அன்றைய சமூகத்தில் உழைப்பில் வேறுபாடு காணப்படாது. உடல் உழைப்பு, மூளை உழைப்பு ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாகக் கொள்ளப்படும் அனைவருக்கும் சமமாக சம்பளம் அளிக்கப்படும். அன்றை மக்கள் கம்யூனிச உற்பத்தி முறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். மக்களின் சிந்தனை அன்றைய சமூக நிலைமைக்கு ஏற்பவே மாறிவிடும். உழைப்பை விருப்பத்துடனும் தேவையானதை முறையாகவும் கேட்டுப் பெறுவார்கள்.

இதைக் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இது நடைபெறுவது சாத்தியமா?.

சோசலிச அமைப்பை நிறுவுவது தவிர்க்க முடியாதது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாமல் சோசலிசம் வருமா?

இதை ஸ்டாலின் வேறு வார்த்தைகளிலும் கேள்வி எழுப்புகிறார்.

மார்க்சின் பாட்டாளி வர்க்க சோசலிசம் வெறும் உணர்வுபூர்வமான கனவு, கற்பனை அல்ல என்பதை நாம் எப்படி அறிவது?

அது அப்படிப்பட்தல்ல என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் எங்கே?

கேள்விகளைத் தொடர்ந்து ஸ்டாலின் பதில்களையும் தருகிறார்.

இன்று இருப்பது போல உடைமை சமூகம் எப்போதும் இருந்ததில்லை, தொடக்கத்தில் ஆதி பொதுவுடைமை சமூகம் இருந்தது. அங்கே கிடைப்பது அனைத்தும் சமமாக அனைவருக்கும் பங்கிடப்பட்டது. இந்த சமூகம் சிதையும் போது காணப்பட்ட சொத்துடைமையே வர்க்க சமூகத்தை உருவாக்கியது.

இன்றைய நிலையில் முதலாளித்துவ வடிவிலான தனிச் சொத்துடைமை காணப்படுகிறது. இந்த உற்பத்தியில் முதலாளிகளுக்கு இடையே போட்டியின் காரணமாக புதிதுபுதிதாக உற்பத்திச் சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் ஏற்படும் மிகு உற்பத்தி, முதலாளித்துவ சமூகத்தை பொருளாதாரம் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தியில் உழைப்பு சமூகத் தன்மையாக வளர்ச்சி அடைகிறது, ஆனால் தனிச் சொத்துடைமையின் அடிப்படையில் வினியோகம் நடைபெறுகிறது. முற்றிய இந்த முரணுக்குத் தீர்வாகவே சோஷலிச புரட்சி ஏற்படுகிறது.

சோஷலிச சமூக மாற்றம் என்பது பாட்டாளிகளின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது அல்ல, முதலாளித்துவத்துத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்க்க முடியாததின் விளைவாகவே சோஷலிசப் புரட்சி ஏற்படுகிறது.

முதலாளித்துவம் நெருக்கடியில் சிதைந்து கொண்டிருப்பதால், சோசலிச அமைப்பை நாம் விரும்பும் எந்த நேரத்திலும் நிறுவ முடியும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அராஜகவாதிகளும் மற்ற குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் இப்படி நினைக்கிறார்கள்.

சோஷலிசம் அடைய வேண்டும் என்கிற குறிக்கோள் அனைத்து வர்க்கத்தினருக்கும் உரியது கிடையாது. இது பாட்டாளி வர்க்கத்தினுடைய குறிக்கோளாகும். சோஷலிச சமூகத்தை அடைவது பற்றிய ஆர்வம் பாட்டாளி வர்க்கத்துக்கு இருப்பது போல் அனைத்து வர்க்கங்களுக்கும் இருப்பதில்லை.

நெருக்கடி முற்றிவருகிற நேரத்தில் தான் மற்ற உழைக்கும் வர்க்கம் நிலைமையைப் புரிந்து பாட்டாளி வர்க்கத்தோடு இணைந்து புரட்சியில் ஈடுபடும்.

முதலாளித்தும், நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம், பாட்டாளி வர்க்கமும் இன்று சிறிய அளவிலானதாக இருக்கலாம், ஆனால் எதிர் காலத்தில் பல பேர்கள் பாட்டளிகாளாக ஆக்கப்படுவார்கள். அவர்கள் பெருகிய நிலையில் நெருக்கடி ஏற்படும் போது புரட்சியை நிகழ்த்துவார்கள்.

முதலாளித்துவ நெருக்கடியே புரட்சியை நிகழ்ந்திடாது. அதற்கான தயாரிப்பை முன்பே செய்திருக்க வேண்டும். பாட்டாளிகள் தன்னெழுச்சியாக போராட்டத்துக்கு வருவார்கள், கூலியுவர்வு போன்ற சீர்திருத்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவார்கள், தன்னெழுச்சிப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக கம்யூனிஸ்ட் கட்சி மாற்ற வேண்டும். அப்படி மாற்றும்போது பாட்டாளி வர்க்கம் ஒரே சிந்தனையில் ஒன்றுபடுவார்கள். பாட்டாளிகளின் ஒருங்கிணைப்பே அதன் பெரும் சக்தியாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி இந்த மார்க்சியக் கோட்பாடுகளைப் புரிந்து அதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இந்தப் பயிற்சி அளிப்பதற்கு தேவைப்படுவதை அடுத்து ஸ்டான் கூறுகிறார்.

இதை நம் நாட்டில் உள்ள அராஜகவாதிகளும் மறுத்துவருகின்றனர். ஸ்டாலின் கூற்றை அவரது சொற்களிலேயே பார்ப்போம். இல்லை என்றால் இது ஏதோ எனது விருப்பத்தை நுழைத்துவிட்தாக அராஜகவாதிகள் கருதக்கூடும்.

பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெறுவதைப் பற்றி ஸ்டாரின் கூறுவதை நேரடியாகப் பார்ப்போம்.

 

“பாட்டாளி வர்க்கம் இவற்றைப் பெறுவதற்கு, அரசியல் சுதந்திரம் அதற்குத் தேவைப்படுகிறது. பேச்சுரிமை, பத்திரிகை நடத்தும் சுதந்திரம், சங்கம் அமைக்கவும் வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை தேவைப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதனால், வர்க்கப் போராட்டம் நடத்துவதற்கான சுதந்திரம் தேவைப்படுகிறது. ஆனால், அரசியல் சுதந்திரமானது, அனைத்து நாடுகளிலும் ஒரேவிதமாக உறுதி செய்யப்டவில்லை. ஆகவே, அது வெவ்வேறான சூழ்நிலைமைகளின் கீழ் போராட்டத்தைத் தொடுக்க வேண்டியதாக இருக்கிறது.” (63-64)

      ஆம் ஸ்டாலின் இங்கே சொல்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்தந்த நாடுகளில் உள்ள சூழ்நிலைமைக்கு ஏற்ப போராட்டத்தை நடத்த வேண்டும். போராட்ட வடிவத்தை மற்ற நாடுகளில் இருந்து பெற முடியாது. அந்தந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், அந்தந்த நாடுகளில் உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து போராட்ட முறையை வகுக்க வேண்டும்.

இதற்கான மார்க்சியத் தெளிவை கம்யூனிஸ்ட் கட்சி பெற்று இருக்க வேண்டும், அதை நடைமுறைப்படுத்தும் திறத்தையும் பெற்று இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுக்க வேண்டும்.

      கிடைக்கும் ஜனநாயகத்தை திறம்பட கையாளத் தெரிந்து கம்யூனிஸ்ட் கட்சியே பாட்டாளி வர்க்கத்தை அரசியல்படுத்த முடியும், வர்க்கப் போராட்டத்துக்கு தயார்படுத்த முடியும்.

இதைப் பற்றி ஸ்டாலின் அடுத்து பேசுகிறார்.

முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கு தனது திட்டத்தை உணர்வு வழியில் நிறைவேற்ற பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?, எந்தப் பாதையில் செல்ல வேண்டும்?

      ஸ்டாலின் எழுப்புகிற இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானதாகும். இதற்கு பதிலாக அவர் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.

      இதற்கான பதில் மிகத் தெளிவாக இருக்கிறது என்று ஸ்டாரின் கூறியுள்ளார், ஆனால் நம் நாட்டில் அந்த தெளிவோடு இருக்கிறோமா என்பது கேள்வியாக இருக்கிறது. நமக்கு இது போன்ற நூல்களைப் படிப்பது நிச்சயமாக தெளிவு பெறுவதற்கு உதவும்.

ஸ்டாலின் பதிலுக்குச் செல்வோம்.

முதலாளித்துவத்துடன் சமாதானம் செய்து கொள்வதின் மூலம் பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைய முடியாது. இதற்கு மாறாக தவறாமல் போராட்டப் பாதையை மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்தப் போராட்டமானது சீர்திருத்தப் போராட்டமாக இல்லாது வர்க்கப் போராட்டமாக இருக்க வேண்டும். வர்க்கப் போராட்டம் என்பது, முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராகவும், பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாகவும் இருக்க வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

கூலிப்பிரச்சினை என்பது ஒரு தனி முதலாளியுடன் மட்டும் தொடர்பானது கிடையாது. அது நாட்டில் உள்ள முதலாளித்துவ உற்பத்தி முறையுடன் தொடர்புடையாது. அதனால் பாட்டாளிகளின் போராட்டம் தம்முடைய முதலாளியுடனான போராட்டமாகச் சுருக்கிக் கொள்ளக்கூடாது. அனைத்து முதலாளியுடனும் போராட வேண்டும், அதற்கு அனைத்து தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளையும் தொழிற்சங்கங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி இணைக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமானது கணக்கற்ற வடிவங்களில் நடத்தப்பட வேண்டியதாகும். வேலை நிறுத்தம், புறக்கணிப்பு, சீர்குலைத்தல் ஆகியவை அனைத்தும் வர்க்கப் போராட்டமே ஆகும்.

மேலும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பொது மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் செயல்படுவதும், வர்க்கப் போராட்ட நடவடிக்கையே ஆகும். அந்த அவைகள் தேசிய நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி மன்றங்களாக இருந்தாலும் (National Parliaments or Local Government) சரி அவைகளில் செயல்பட வேண்டும். இவை அனைத்தும் ஒரே வர்க்கப் போராட்த்தின் வெவ்வேறு வடிவங்களே ஒழிய வேறு அல்ல என்று ஸ்டாலின் கூறுகிறார்.

ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கத்திற்கு அதன் வர்க்க உணர்வு மற்றும் அமைப்பை வளர்ப்பதற்கு இன்றியமையாத வழிமுறையாகத் தேவைப்படுவதைக் கவனித்தாக வேண்டும். மனிதன் உயிரிவாழ்வதற்கு எப்படி ஆக்சிஜன் என்கிற காற்று தேவையோ அதே போல பாட்டாளி வர்க்கத்துக்கு, வர்க்க உணர்வும் அமைப்பும் தேவைப்படுகிறது.

இந்தப் போராட்டங்கள் என்னவாக இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தளவில் இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்தும் வெறும் தயாரிப்புக்கான போராட்ட வடிவங்களே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட எந்த போராட்ட வடிவமும், முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு வழிமுறையாக அமைவதில்லை. பொது வேலை நிறுத்தம் மட்டுமே முதலாளித்துவத்தை வீழ்த்திவிடாது. முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான சூழ்நிலைகளில் அவசியமான ஒரு சிலவற்றை வேண்டுமானால் பொது வேலை நிறுத்தம் உருவாக்க முடியும்.

அதே போல, பாட்டாளி வர்க்கமானது வெறும் பாராளுமன்ற செயற்பாட்டின் மூலம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது. முதலாளித்துவத்தை வீழ்த்த தேவையான சில நிபந்தனைகளை மட்டுமே பாராளுமன்றம் தயாரிக்க முடியும் என்கிறார் ஸ்டாலின்.

அப்படியானால், பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பைத் வீழ்த்துவதற்கு தீர்க்கமான வழிமுறை என்ன? என்கிற கேள்வி எழும் அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கிறார். சோசலிசப் புரட்சி என்பதே இதற்கு பதில்.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்பு, பாராளுமன்றம், கூட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை அனைத்தும் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்குத் தயார்படுத்துவதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் நல்ல போராட்ட வடிவங்கள் ஆகும். ஆனால் இந்த வழிமுறைகளில் ஒன்று கூட தற்போதுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கும் திறன் கொண்டதாக இல்லை.

அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை முழுவதையும் வீழ்த்தும் சக்தி கொண்டதாக அது இல்லை. இத்தகையப் போராட்டத்தால் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது.

இந்த அனைத்து வழிமுறைகளும் ஒரு முக்கிய மற்றும் தீர்க்கமான வழிமுறையில் குவிக்கப்பட வேண்டும், முதலாளித்துவத்தை அதன் அடித்தளத்தையே அழிப்பதற்காக பாட்டாளி வர்க்கம் எழுச்சி கொண்டு, முதலாளித்துவத்தின் மீது உறுதியான தாக்குதலை நடத்த வேண்டும். இதுவே சோஷலிசப் புரட்சிக்கு உரிய வழிமுறை ஆகும்.

புரட்சி பாதை என்று கூறினோம் அல்லவா அது எதில் இருந்து தொடங்குகிறது என்பதை அடுத்து ஸ்டாலின் கூறுகிறார். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதற்கு சோஷலிச புரட்சி கட்டாயம் தேவை ஆகும்.

சோஷலிசப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏன் தேவைப்படுகிறது?

புரட்சியை முடித்தக் கையோடு செய்ய வேண்டியது தனிச் சொத்துடைமை ஒழிப்பதாகும்.

முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து நிலம், காடுகள், தொழிற்சாலைகள், இயந்திரங்கள், ரயில்வேக்கள் போன்றவற்றை கைப்பற்ற வேண்டும். அதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு தேவைப்படுகிறது.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் 1847ஆம் ஆண்டு அறிக்கையில் கூறினர், தொழிலாளி வர்க்கத்தினுடைய புரட்சியின் முதல் நடவடிக்கை, பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்க நிலைக்கு உயர்த்துவதாக இருக்கும், பாட்டாளி வர்க்கம் அதன் அரசியல் மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, அனைத்து மூலதனத்தையும் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து கைப்பற்றும், அனைத்து உற்பத்திக் கருவிகளையும் பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒன்று குவிக்கும். – இதுவே பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக ஒழுங்கமைப்பதன் பொருளாகும்

பாட்டாளி வர்க்க சோஷலிசத்தை இந்த செல்வழியில்தான் அடைய முடியும். இதற்கான கோட்பாட்டில் இருந்தே தமது செயல்தந்திரத்தை கம்யூனிஸ்ட் கட்சி அமைத்துக் கொள்ள வேண்டும்.

வேலைநிறுத்தங்கள், புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் பாராளுமன்றம் போன்றவற்றில் செய்யும் நடடிவக்கையானது, சோசலிசப் புரட்சியை நிறைவேற்றுவதற்காகவும் பாட்டாளி வர்க்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வதற்காகவும், அதற்கான அமைப்புகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவும் வரை மட்டுமே முக்கியம் பெற்றதாகும்.

இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சோசலிசத்தைக் கொண்டுவருவதற்கு, சோசலிசப் புரட்சி தேவை, மற்றும் சோசலிசப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துடன் தொடங்க வேண்டும், அதாவது, பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்திடம் உள்ள உற்பத்திச் சக்திகளை பறிமுதல் செய்வதற்கு ஒரு வழிமுறையாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

முதலாளித்துவத்தை தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதற்கும், தம்மை ஆளும் வர்க்கமாக ஆக்கிக் கொள்வதற்கும் செய்ய வேண்டியது என்னவென்றால், பாட்டாளி வர்க்க அணிகள் நெருக்கமாக பிணைக்கப்பட வேண்டும், வலுவான பாட்டாளி வர்க்க கட்சிகள் உருவாக்கப்பட வேண்டும். வலுவான கட்சி இல்லாமல் பாட்டாளி வர்க்கம் இதை சாதிக்க முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வலுவான கட்சி வேண்டும் என்றால் பாட்டாளி வர்க்கக் கட்சி எந்தெந்த வடிவங்களை எடுக்க வேண்டும்.

கட்சி வலுபெறுவதற்கு மிகவும் பரவலான, மக்கள்திரள் அமைப்புகளை கட்ட வேண்டும். இங்கே ஸ்டாலின் மக்கள்திரள் அமைப்பாக இரண்டை மட்டும் குறிப்பிட்டுள்ளார். ஒன்று தொழிற்சங்கங்கள், மற்றொன்று கூட்டுறவு சங்கங்கள். உழைக்கும் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒன்றாக இணைந்து தங்களது தேவைகளுக்காகப் போராடுவது தொழிற்சங்கம். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் இணைந்தது கூட்டுறவுச் சங்கம்.

தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்குள், தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் தொழில்துறை மூலதனத்திற்கு எதிராக போராடுவதற்கும் தான், இதுபோன்ற மக்கள் திரள் அமைப்புகள் கட்டப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான வழிமுறையாக பாட்டாளி வர்க்கத்திற்கு தொழிற்சங்கங்கள் தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைப்பு எதற்கு என்றால் இறுதியில் முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கே ஆகும். இறுதிக் குறிக்கோளை அடைவதற்கே இத்தகைய மக்கள்திரள் அமைப்புகள் கட்டப்படுகிறது.

மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோரின் பாட்டாளி வர்க்க சோஷலிசக் கண்ணேடத்தின்படி இத்தகைய மக்கள்திரள் அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். ஸ்டாலின் இத்தகையப் போராட்டத்தையே பாட்டாளி வர்க்க சோஷலிசப் போராட்டமாக நமக்குக் காட்டுகிறார்.

நம் நாட்டு அராஜகவாதிகளுக்கு இதில் சந்தேகம் எழும் என்பதில் சந்தேகம் இல்லை அதனால் ஸ்டாலின் கூறியதை அவர் சொற்களிலேயே பார்ப்போம்.

 

“திரளான பரந்துபட்ட பாட்டாளிகளை அமைப்பாக்குவதற்கான, ஒரு வழிமுறைச் சாதனம் என்ற முறையில், தொழிற்சங்கங்களும் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி வர்க்கத்துக்கு சந்தேகத்துக்கு இடமின்றி தேவைப்படுகின்றன. எனவே, மார்க்ஸ் எங்கெல்சின் பாட்டாளி வர்க்க சோஷலிசக் கண்ணோட்டத்தின்படி இவ்விருவகையான அமைப்பு வடிவங்களையும், பாட்டாளி வர்க்கமானது தவறாமல் பயன்படுத்தி, தனது வலுவைக் கூட்டி தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைய அரசியல் சூழ்நிலைமைகளின் கீழ், எவ்வளவு சாத்தியமோ, அந்த அளவுக்குச் செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.” (69)

-ஆனால் தொழிற்சங்கங்கள் போன்றவை மட்டுமே போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பு வழிபட்ட தேவைகளை நிறைவு செய்ய முடியாது என்பதையும் ஸ்டாலின் இங்கே கூறிள்ளார். ஏன் என்றால் இந்த மக்கள்திரள் அமைப்புகளின் போராட்டங்கள் தற்போதுள்ள முதலாளித்துவ கட்டமைப்பின் எல்லைக்குள் மட்டுமே நடைபெறுகிறது. பாட்டாளிகளின் இறுதிக்குறிக்கோளை அடைய வேண்டுமானல் இத்தகையப் போராட்டம் மட்டும் போதாது.

தொழிற்சங்கங்களால் கூலி உயர்வு போன்ற சீர்திருத்தப் போராட்டத்தை மட்டுமே நடத்துவதற்கு இடம் இருக்கிறது. கூலி அமைப்பு முறையை தூக்கி எறிவதே பாட்டாளிகளின் இறுதிக்குறிக்கோள் ஆகும். இந்த இறுதிக்குறிக்கோளை அடைய வேண்டுமானால் கூடுதலாக ஒர் அமைப்பு தேவைப்படுகிறது.

அந்த அமைப்பினால்தான் அனைத்துத் தொழிற்பிரிவுகளிலும் உள்ள, வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்களை, தம்மைச் சுற்றிலும் அணிவகுத்துக் கொள்ள முடியும். அந்த அமைப்பானது பாட்டாளி வர்க்கத்தை வர்க்க உணர்வுமிக்கதாக மாற்ற முடியும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதை தலையாய குறிக்கோளாக கொண்டு சோஷலிசப் புரட்சிக்கு, பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்த அந்த அமைப்பினால் மட்டுமே முடியும்.

தொழிற்சங்கத்தைக் கடந்து ஒரு கூடுதல் இயக்கம் என்று கூறியது பாட்டாளி வர்க்கத்தினுடைய கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தை இப்படித் தயார்படுத்த வேண்டுமானால், இக் கட்சி பிற கட்சிகளிடம் இருந்து முற்றிலும் சுயேச்சையான தனித்தக் கட்சியாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்சி ஒரு புரட்சிகர கட்சியாக இருக்க வேண்டும். ஏன் புரட்சிகர கட்சியாக இருக்க வேண்டும் என்றால் புரட்சிகர வழிமுறையினால் மட்டுமே தொழிலாளர்களின் இறுதிக் குறிக்கோளுக்கு அடைய முடியும்.

இந்த அத்தியாயத்தின் இந்தப் பகுதியில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் காட்டுகிற பாட்டாளி வர்க்க சோஷலிசத்தினுடைய தனித்தன்மையான சிறப்பியல்புகள் ஆகும் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியை ஒரு மேற்கோளாகவே காட்ட விரும்புகிறேன். ஸ்டாலின் கூறியதற்கு எந்த விளக்கமும் தேவைப்படாது. தெளிவாகவும் துல்லியமாகவும் சுட்டிக்காட்டி உள்ளார் அதை அப்படியே பார்ப்போம்.

 

“எந்த அளவுக்கு அரசியல் நிலைமைகள் அல்லது பிற நிலைமைகள் குறுக்கிட்டுத் தடுக்காமல் இருக்கின்றனவோ, அதுவரையில், அந்த அளவுக்கு இந்த அமைப்புகள் அனைத்துமே, ஜனநாயகக் கோட்பாட்டு அடிப்படையில் கட்டியமைக்கப்பட வேண்டும்.

 

ஒரு பக்கத்தில் கட்சிக்கும், மற்றொரு பக்கத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உள்ள உறவுகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும்?

 

தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் கட்சி சார்பானவையாக இருக்க வேண்டுமா? அல்லது கட்சி சார்பற்றவையாக இருக்க வேண்டுமா?

 

எந்த இடத்தில், எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியுள்ளது என்பதைச் சார்ந்தே இந்தக் கேள்விக்கான பதில் இருக்கும். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் உள்ளது.

 

எந்த அளவுக்கு தொழிற்சங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் பாட்டாளி வர்க்கத்தினுடைய சோசலிஸ்டுக் கட்சியுடன் நட்புறவாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு, ஒரு பக்கத்தில் கட்சியும் இன்னொரு பக்கத்தில் தொழிற்சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும் கூடுதலாக முழு அளவில் வளர்ச்சியுற்று வலுப்பெறும். இதில் எந்தவித ஐயப்பாடும் இருக்க முடியாது.

 

இதை ஏன் சொல்கிறோம்? ஏனென்றால் தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் என்ற இரண்டுமே பொருளாதார அமைப்புகள்தான். ஒரு வலுவான சோசலிஸ்டுக் கட்சியுடன் நெருக்கமான தொடர்புகளை இவை கொண்டிராவிட்டால், என்ன நடக்கும்? அவற்றில் அற்ப விசயங்கள், குறுகிய தொழில் நலன்கள், கோரிக்கைகள் முன்னணிக்கு வரும்.

 

இவை பாட்டாளி வர்க்கத்தின் பொதுநலன்களைப் பின்னுக்குத் தள்ளி விடும். இதன் மூலம், பாட்டாளி வர்க்க நோக்கத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். ஆகவே எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா வழக்குகளிலும், தொழிற் சங்கங்களும் கூட்டுறவுச் சங்கங்களும், கட்சியின் சித்தாந்த அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியமானது ஆகும். இப்படிச் செய்யும்போது மட்டும்தான், நாம் குறிப்பிட்ட அமைப்புகள் சோசலிசப் பயிற்சிப் பள்ளியாக மாற்றப்படும். அப்போதுதான் இவை, இப்போது தனித்தனி குழுக்களாகப் பிளவுண்டு இருக்கும் பாட்டாளி வர்க்கத்தை, வர்க்க உணர்வுமிக்க வர்க்கமாக ஒழுங்கமைக்கும்.”

      இங்கே ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையையும் அதன் பணியையும் தெளிவாக கூறியுள்ளார். வலது-இடது திரிபற்ற மார்க்சியப் போக்கை விளக்கி உள்ளார்.

      நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றதா? இல்லையா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பாட்டாளி வர்க்கத்தைத் தலைமைத் தாங்கும் கட்சியாக, தொழிலாளர்களின் முன்னணிப் படை எனும் வகையான கட்சியாக செயல்பட முடியாது.

      வலது திரிபான நடைமுறை தவறுடனோ, இடது திரிபான எதிர்கால கனவுடனோ இருப்பது புரட்சியை சாதிக்காது. வலது-இடது திரிபுகள் உண்மையில் புரட்சிக்குத் தடையாகவே இருக்கும்.

திடிரென எதையும் சாதித்திட முடியாது. புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்றால் அதற்கான தயாரிப்பு செய்யதாக வேண்டும், அதற்கான பயிற்சி எடுத்தாக வேண்டும்.

அடுத்து, பாட்டாளி வர்க்க சோசலிசத்தை அராஜகவாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்? என்பது பற்றி ஸ்டாலின் விளக்குகிறார். இதை நாம் மிகமிக சுருக்கமாகவே பார்க்கப் போகிறோம், அதனால் ஸ்டாலின் நூலில் விரிவாகப் படிக்க வேண்டும். எப்போதும் சொல்லக்கூடியதுதான், இதுபோன்ற வகுப்புகள் நேரடி நூலைகளைப் படிப்பதற்கு தூண்டுகோலாகவும் வழிகாட்டியாகவும் மட்டுமே இருக்க முடியும். கற்றல் என்பது நேரடி நூலைப் படிப்பதாகவே இருக்க வேண்டும். தானே படித்து தெளிவு பெற வேண்டும். சொந்த தெளிவு பெற்றதால்தான் அதனை நடைமுறைப்படுத்த முடியும். கோட்பாட்டின் நோக்கமே நடைமுறைப்படுத்துவதற்கே ஆகும், நடைமுறையில் இருந்தே கோட்பாடு செழுமை பெறும்.

                பாட்டாளி வர்க்க சோஷலிசம் என்பது ஏதோ சாதாரணமான தத்துவக் கோட்பாடு அல்ல என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்டாலின். உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களின் கோட்பாடு இது. இந்தக்  கோட்பாடு அனைத்துலக உழைப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உயர்வாக மதிக்கப்படுகிறது.

மார்க்சும் ஏங்கெல்சும் வெறுமனே ஒரு தத்துவ "பள்ளி"யை நிறுவியவர்கள் அல்ல, உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி வர்க்க இயக்கத்தின் உயிர்த்துடிப்பான தலைவர்களாக விளங்கியவர்கள். இவ்வியக்கம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி பெற்றும் வலிமை அடைந்தும் வருகிறது.

இதை எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை, மார்க்சியத்தை எதிர்க்க துணியும் எவரும் மனதில் கொள்ள வேண்டும். இதை அறியாமல் சமமற்றப் போராட்டதில் இறங்கி தலையை உடைத்துக் கொள்ளாதீர்கள். இதைத் தவிர்ப்பதற்கு மார்க்சியத்தை நன்றாக அறிந்து கொண்டு வாருங்கள் என்று ஸ்டாலின் எச்சரிக்கிறார்.

அராஜகவாதிகளுக்கு இது தெரிந்திருக்கிறது, அதனால் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரை சமநிலையில் நின்று எதிர்த்துப் போராடாமல், வழக்கத்துக்கு மாறான ஆயுதத்தை ஏந்தி போராடுகின்றனர். மார்க்சும் எங்கெல்சும் “கருத்துத் திருட்டில்” ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதுதான் அவர்கள் கையாளும் ஆயுதம் ஆகும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது தொடக்கம் முதல் இறுதிவரை விக்டர் கன்சிடரண்ட் என்பவரின் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்பதே அராஜகவாதிகளின் குற்றச்சாட்டு.

அராஜகவாதியான விக்டர் கன்சிடரண்ட் என்பவர் கற்பனா சோஷலிசவாதியான ஃபூரியரின் சீடராவார். இவர் 1893ஆம் ஆண்டு இறந்தார். இறுதிவரையில் திருந்தாத கற்பனாவாதியாக அவர் இருந்தார். காரல் மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாதி, மேலும் கற்பனாவாதிகளின் எதிரியும் ஆவர், இவர் 1883ஆம் ஆண்டு இறந்தார். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமும் மனித குலத்தின் விடுதலைக்கான உத்தரவாதம் என்று அவர் கருதினார்.

மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள், இந்தத் தத்துவத்தின்படி சமூக வாழ்க்கையின் வளர்ச்சியானது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் முழுமையாக தீர்மானிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறினார்கள். மேலும் தற்போதைய முதலாளித்துவ சமூகம் தவிர்க்க முடியாதபடி வீழ்ச்சி அடைந்து சோஷலிச சமூகம் வரும் என்று கூறினார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடே இதற்கு காரணம் என்று விஞ்ஞான வழியில் நிறுவினார்கள்.

விக்டர் கன்சிடரண்ட் என்பவர் ஒரு பொருள்முதல்வாதி என்பதையோ, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் அடிப்படையில் சமூக வளர்கிறது என்பதையோ நிரூபிப்பதற்கான எந்த ஒரேயொரு கூற்றையும் ஆதாரமாக அராஜகவாதிகள் காட்டவில்லை. கற்பனாவாதியிடம் எப்படி இத்தகைய விஞ்ஞான ஆய்வை காணமுடியும் என்று அராஜகவாதிகள் கொஞ்சம்கூட சிந்திக்கவில்லை.

பாட்டாளி வர்க்கத்துக்கு உரிய வர்க்கப் போராட்டம் என்னும் ஆயுதத்தை விக்டர் கன்சிடரண்ட் கருதினரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்.

விக்டர் கன்சிடரண்ட் என்பவரின் அறிக்கையில் இதுபற்றி ஒரு சொல்கூட காணப்படவில்லை. ஆனால் அவரது அறிக்கையில் வர்க்கப் போராட்டம் வருந்தத்தக்க விசயமாகக் கூறப்பட்டுள்ளது. முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு வழிமுறையாக சமாதானமான வர்க்கப் போராட்டத்தையே குறிப்பிட்டுள்ளது. போர்குணமிக்க வர்க்கப் போராட்டத்துக்கு பதிலாக, “அனைத்து வர்க்கங்களும் ஒன்றுபடு” என்கிற பொது முழக்கமே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வர்க்க சமரத்துக்கும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் முன்வைக்கும் சமரமற்ற வர்க்கப் போராட்டத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மொத்தத்தில் அராஜகவாதிகள் எதோ மனநோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமக்கு எதிரான கோட்பாட்டை விமர்சிப்பதில் இன்பம் காண்கின்றனர் என்பது புரிகிறது. ஆனால் எதிரியின் கோட்பாட்டை தெரிந்து கொள்வதில் சிறிதும் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

அராஜகவாதிகள் உண்மையான மார்க்சியக் கருத்துக்களை எதிர்த்துப் போராடாமல், மார்க்சியமாக தங்களால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனையான கருத்துக்களை எதிர்த்துப் போராடுகின்றனர்.

இவ்வாறு மார்க்சியத்தின் மீதான அராஜகவாதிகளின் விமர்சனம் ஆதாதரமற்றது என்பதை ஸ்டாலின் இந்த நூலில் நிறுவியுள்ளார்.

இதற்கு அடுத்தப் பகுதிகள் பத்திரிகையில் வெளி வரவில்லை, அரசியல் காரணமாக ஸ்டாலின் கைதாகிறார். அதனால் இதன் தொடர்ச்சி நமக்குக் கிட்டாமல் போய்விட்டது. இருந்தாலும் கிடைக்கின்ற பகுதி இன்றும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

நான் எப்போதும் கூறுவது உண்டு, மார்க்சைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் எங்கெல்சைப் படிக்க வேண்டும். மார்க்சையும் எங்கெல்சையும் புரிந்து கொள்ள வேண்டுமானல் லெனினைப் படிக்க வேண்டும். மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின் ஆகியோரைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஸ்டானினைப் படிக்க வேண்டும். அந்த வகையில் மார்க்சிய அடிப்படைகளையும் அதனை நடைமுறைப்படுத்துவது பற்றியும் ஸ்டாலின் இந்த நூலில் சிறப்பாக விளக்கி உள்ளார்.

ஸ்டாலின் காட்டும் வழியில் செல்வோம், இறுதிக்குறிக்கோளை அடைவோம்.

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (முதல் பகுதி)

Monday 24 July 2023

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (இரண்டாம் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 93- வது வார வகுப்பு  – 23-07-2023  )

2. பொருள்முதல்வாதக் கோட்பாடு

                இயக்கவியல் முறையை பார்த்துவிட்டோம், அடுத்து பொருள்முதல்வாதக் கோட்பாட்டைப் பார்க்கப் போகிறோம்.

      இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஸ்டாலின் மார்க்சின் ஒரு புகழ்பெற்ற கருத்தை மேற்கோளாகக் கொடுத்துள்ளார்.

“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை, இதற்கு மாறாக, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது

(மார்க்ஸ்)

    இதுதான் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. வாழ்நிலை என்பது அடித்தளம் சிந்தனை என்பது மேற்கட்டமைப்பு. அடித்தளம்தான் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது. இந்த அத்தியாயத்தில் ஸ்டாலின் இந்தப் பொருள்முதல்வாதத்தைத் நமக்கு விளக்குகிறார்.

      இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் மாறிக் கொண்டே இருக்கிறது, வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் வளர்ச்சி அடைகிறது, இந்த மாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன?, எந்த வடிவத்தில் முன்னேறுகிறது? என்கிற கேள்விக்கு பொருள்முதல்வாதம் என்ன வகையில் பதிலளிக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

உலகம் ஒரு காலத்தில் ஒளிஉமிழும் நெருப்புக் கோளமாக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக குளிர்ச்சி அடைந்தது. குளிர்ச்சி அடைந்தப் பின்னர் தாவரங்களும் விலங்குகளும் தோன்றின. விலங்கினப் பெரும்பிரிவின் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து வாலில்லாக் குரங்குகள் தோன்றின. இதன் தொடர்ச்சியாகவே மனிதன் தோன்றினான் என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையினை அடைவதற்கு பல லட்சம் ஆண்கள் கடந்து வர வேண்டியிருந்தது.

இயற்கையில் இருந்து உயிரினம் தோன்றியது பற்றிய பொதுவான வளர்ச்சியின் வரலாறு இதுவே ஆகும்.

சமூக வரலாறும் அப்படியே தான் வளர்ச்சி அடைந்தது. இன்று பார்க்கிற வளர்ச்சி அடைந்த நிலையில் சமூகம் என்றும் இருக்கவில்லை. இது நமக்கு தெரிந்த வரலாறுதான். அதனை சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஆதி கம்யூனிச சமூகம் தான் முழுவளர்ச்சி அடைந்த முதல் சமூகம், இதற்கு அடுத்து அடிமை சமூகம், நிலப்பிரபுத்து சமூகம், முதலாளித்துவ சமூகம் என்று ஸ்டலின் 1905 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். 1917ஆம் ஆண்டுக்குப் பிறகு ருஷ்யாவில் சோஷலிச சமூகம் தோன்றியது. இதுதான் பொதுவான சமூக வளர்ச்சியின் செவ்வியல் வடிவம்.

இது அப்படியே அனைத்து நாடுகளிலும் நடை பெற்றாக வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. இதுவே பொது விதி. செவ்வியல் வடிவத்தையே பொதுவிதியாகக் கொள்ள முடியும்.

சமூகம் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த வளர்ச்சி எப்படி நடந்தேறியது என்பதை பொருள்முதல்வாத வழியில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் ஸ்டாலின் கேள்வியைக் கேட்டு பதிலையும் தருகிறார்.

சமூக வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?

மனிதனுடைய உணர்வுநிலையினால் இயற்கையும் சமூகமும் வளர்ச்சி அடைந்ததா?

அல்லது, இதற்கு நேரெதிராக, இயற்கை சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சியானது மனிதனுடைய உணர்வுநிலையை வளர்த்ததா?

இதற்கு பதிலளிக்கும் போதுதான் தத்துவம் இருபெரும் பிரிவாக பிரிகிறது. ஒரு பிரிவு கருத்துமுதல்வாதம் மற்றொரு பிரிவு பொருள்முதல்வாதம்.

இந்த இரண்டு தத்துவங்களும் இதற்கு என்ன பதில் அளிக்கிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

இயற்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் முன்னரே அனைத்தையும் தழுவிய “கருத்து” இருக்கிறது. இந்த அனைத்தையும் தழுவிய கருத்துதான், இயற்கை மற்றும் சமூக வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிறது என்பது கருத்துமுதல்வாதம். இதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கருத்துமுதல்வாதம் காணப்படுகிறது.

அடுத்து பொருள்முதல்வாதம் கூறுவதைப் பார்ப்போம்.

ஒன்றேயானதும் பிரிக்க முடியாததுமான இயற்கையானது, கருத்து பொருள் என்று இருவேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகிறது. அதாவது ஒன்றேயானதும் பிரிக்க முடியாததுமான சமூக வாழ்க்கையானது, கருத்து மற்றும் பொருள் என்ற இருவேறுபட்ட வடிவங்களில் காணப்படுகிறது. இவ்வாறுதான் இயற்கை மற்றும் சமூக வாழ்க்கையின் வளர்ச்சி இருக்கிறது. இதுவே பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் ஒருமைவாதம் ஆகும்.

இந்த அடிப்படையை ஏற்று விளக்குவதில் பரிவுபட்டு பொருள்முதல்வாதம் பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது.

மார்க்சிய பொருள்முதல்வாதமானது கருத்துமுதல்வாதத்தை நிராகரிக்கிறது. எவ்வாறு நிராகரிக்கப்படுகிறது என்பதை ஸ்டாலின் அடுத்து விளக்குகிறார்.

பொதுவாக உணர்வுநிலை என்பதும் கருத்து என்பதும் பொருளாயத வளர்ச்சிக்கு முந்தியது என்று கருத்துமுதல்வாதம் கருதுகிறது. சிந்தனையில் இருந்தே வாழ்நிலை வந்தது என்பது கருத்துமுதல்வாதம். அதாவது சிந்திக்கின்றபடியே வாழ்நிலை அமைகிறது. சிந்தனை முதலானது வாழ்நிலை இரண்டாவது என்பது கருத்துமுதல்வாதம். இது தவறு என்கிறார் ஸ்டாலின்.

உயிரனங்கள் தோன்றுவதற்கு முன்பே உலகம் இருக்கிறது, இயற்கை இருந்திருக்கிறது. உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகே உயிரினம் தோன்றியது. முதலில் தோன்றிய உயினத்துக்கு உணர்வுநிலை கிடையாது. வெகுகாலத்துக்குப் பிறகு புறத்தூண்டுதலிலான உயிர்ப்பியக்கமும் புலனுணர்வின் தொடக்கக் கூறுகளும் ஏற்பட்டது. இதற்கு பின்னரே விலங்குகள் புலனுணர்வுச் சக்திகளைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக புலனுணர்வு மெதுவாக உணர்நிலையாக வளர்ச்சி பெற்றது.

வாலில்லாக் குரங்குகானது நான்கு கால்களிலேயே நடந்து கொடிருந்தது. மரம் செடிகளில் காணப்படும் கனிகளை எட்டிப்பறிப்பதற்கு முயற்சிக்கும் போது இரண்டு கால்களில் நிற்கவும் நடக்கவும் தொடங்கியது. இரண்டு கால்களில் நிமிர்ந்து நிற்கும் போது அந்த வாலில்லா குருங்குகளின் நுரையீரல், குரல்வள நாளத்தையும் சரளமாகப் பயன்படுத்தியது. இதன் விளைவாகவே பேச முடிந்தது உணர்வும் வளர்ச்சி பெற்றது. இதைவிட முக்கியமானது என்னவென்றால் நிமிர்ந்து நடக்கும் போது மூளை வளர்ச்சி அடைந்தது. இவை அனைத்தினாலும் தான் உணர்வுநிலை பெறப்பட்டது.

இந்த வாலில்லாக் குரங்கு தனது மூளை வளர வேண்டும் உணர்வுநிலை பெற வேண்டும் என்று சிந்தித்து இதனை செய்திடவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. தேவையின் அடிப்படையில் செயல்படும்போது புறநிலைமைக்கு ஏற்ப உணர்வுநிலை தோன்றுகிறது.

“மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்” என்கிற எங்கெல்ஸ் எழுதிய நூலில் இதைப் பற்றிய விவரங்கள் இருக்கிறது. அதில் எங்கெல்ஸ் உழைப்பே ஒரு வகையில் மனிதனைப் படைத்தது என்று கூறுவார். பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு எங்கெல்சின் இந்த நூல் நமக்குப் பயன்படும்.

இயற்கையினுடைய வளர்ச்சியின் வரலாற்றை விவரிப்பதின் மூலம் ஸ்டாலின் கருத்துமுதல்வாதத்தை முற்றிலும் மறுப்பதைப் பார்த்தோம்.

இந்த இயற்கையின் வரலாறு எப்படி புறநிலைக்கு அடுத்தபடியாக அகநிலை மாறுகிறதோ அதைபோலவே மனித சமூகத்தினுடைய வளர்ச்சி பற்றிய வரலாறும் மாறுகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியும் என்கிறார் ஸ்டாலின்.

மனிதகுலம் தோன்றியது முதல், ஒரே கருத்தைக் கொண்டோ, ஒரே விருப்பத்தைக் கொண்டோ இருக்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கருத்துகளாலும் விருப்பங்களாலும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதை பொருள்முதல்வாதம் விளக்குகிறது. சமூக மாற்றத்தைக் காரண-காரிய அடிப்படையில் விளக்குவதினால்தான் பொருள்முதல்வாதம் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக கூறப்படுகிறது. சோஷலிச சமூக மாற்றம் தவிர்க்க முடியாது என்று விஞ்ஞான அடிப்படையில் கூறுவதற்கு இந்த பொருள்முதல்வாதப் பார்வையே காரணம் ஆகும். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது, சமூக மாற்றத்துக்குப் போராடும் ஒரு கம்யூனிஸ்ட் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை நன்றாகத் தெரிந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது செயற்பாடு விஞ்ஞானத் தன்மை கொண்டதாக இருக்க முடியும்.

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கருத்துக்களும் வெவ்வேறு  விருப்பங்களும் உருவாவதற்குக் காரணத்தை பொருள்முதல்வாதம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அடுத்துப் பார்ப்போம்.

எந்தெந்த உற்பத்தி முறையில் மனிதன் வாழ்கிறானோ, அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்பவே மனிதன், சிந்திக்கிறான் விரும்பம் கொள்கிறான் என்பதை அறிய முடிகிறது.

பழங்குடி சமூகம் என்று கூறப்படுகிற ஆதி பொதுவுடைமை சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இயற்கையை எதிர்த்து போராடினர். கையாளப்படுகிற கருவிகள் அனைவருக்கும் பொதுவுடைமையாக இருந்தது. அந்த சமூகத்தில் “எனது” “உனது” என்கிற வேறுபாடு தோன்றவில்லை. அனைவரும் சேர்ந்தே உணவு சேகரித்தனர், சேகரித்ததை அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அன்றைய சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொதுவுடைமை சிந்தனையிலேயே காணப்பட்டனர். அதாவது கூட்டாக உழைக்கும் போது கூட்டுச் சிந்தனையில் இருந்தனர்.

இதற்குப் பிறகு தனிவுடைமையும் வர்க்கமும் தோன்றியது. ஆதி பொதுவுடைமை சமூகம் சிதைந்து அடிமை உற்பத்தி முறை தோன்றியது. இந்த சமூகத்தில் மக்களிடையே தனிவுடைமை சிந்தனையினால் உந்தப்பட்டனர். இதே போலத்தான் நிலப்பிரப்புத்துவ சமூகத்திலும் முதலாளித்துவ சமூகத்திலும் அந்தந்த உற்பத்தி முறைக்கு ஏற்ப சிந்தனைகளும் கருத்துகளும் தோன்றின.

இதற்கு அடுத்து ஒரு எளிய எடுத்துக்காட்டை ஸ்டாலின் தருகிறார்.

செருப்பு தைக்கும் பட்டறை வைத்துள்ள உற்பத்தியாளர், பெரு உற்பத்தியாளரான முதலாளியுடன் போட்டி போடமுடியாமல் தனது பட்டறையை மூடிவிடுகிறார். பிறகு பெருமுதலாளி நடத்தும் செருப்பு தைக்கும் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார். பாட்டாளிகளுடன் வேலை செய்தாலும் இவர் சிந்தனை எவ்வாறு இருக்கிறது என்றால், இந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தைச் சேர்த்து திரும்பவும் பட்டறையைத் தொழிலைத் தொடங்க வேண்டும். இதுவே இவரது சிந்தனையாக, குறிக்கோளாக இருக்கிறது. இவர் ஏற்கெனவே பாட்டாளியாக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் இன்னும் குட்டி முதலாளித்துவ உணர்விலேயே காணப்படுகிறார். உண்மையில் தமது குட்டிமுதலாளித்துவ உற்பத்தையை இழந்துவிட்டார், தற்போது பாட்டாளியாகத் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் புதிய வாழ்நிலைமைக்கு இவரது சிந்தனை மாறாமல் பின்தங்கி உள்ளது.

இதில் இருந்து நமக்கும் என்ன தெரிகிறது.

மனிதர்களின் சூழ்நிலைமைகள் முதலில் மாறுகின்றன, அதன் பின்னரே, அதற்கு ஏற்ப அவர்களின் உணர்வுநிலை மாறுகின்றன.

காலம் செல்லசெல்ல இந்த பட்டறை உற்பத்தியாளர் தம்மால் பழையநிலைக்கு செல்ல முடியாத நிலையை உணர்ந்து கொள்கிறார். கிடைக்கும் கூலியே குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமானதாக இல்லை. முதலில் கூலி உயர்வைப் பெற வேண்டும். இதை தனித்து செய்திட முடியாது, உடன் உழைக்கும் தொழிலாளர்களிடம் பேசுகிறார். தொழிலாளர் சங்கத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார். கூட்டாக் கூலி உயர்வுக்காகப் போராடுகிறார், தனது குட்டி முதலாளித்துவ சிந்தனையில் இருந்து படிப்படியாக விடுபட்டு பாட்டாளி வர்க்க உணர்வை பெறுகிறார். பாட்டாளி வர்க்க உணர்வைப் பெற்றவுடன் சோஷலிசக் கருத்தால் ஈர்க்கப்படுகிறார்.

புறநிலை மாற்றம் முதலில் ஏற்படுகிறது இரண்டாவதாக சிந்தனையில் அது பிரதிபலிக்கிறது. ஆக இதன் மூலம் நமக்கு என்ன தெரிகிறது, சூழ்நிலையில் ஏற்படுகிற மாற்றமே சிந்தனையாக மாறுகிறது.

தனிமனித உணர்வு போலவே சமூக உணர்வும் ஏற்படுகிறது. இந்த இடத்தில் ஸ்டாலின் மார்க்சின் புகழ்பெற்ற கருத்தை மேற்கோளாகக் காட்டுகிறார்.

 

“மனிதர்களது சிந்தனை அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களுடைய சிந்தனையைத் தீர்மானிக்கிறது.”

பொருளாதார நிலைமைகளான புறச் சூழ்நிலைகள் “உள்ளடக்கம்” என்றும் கருத்து வழிப்பட்ட உணர்வுநிலைகள் “வடிவம்” என்றும் கூறப்படுகிறது.

மார்க்சின் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சிதான் சமூக வாழ்நிலையின் “பொருளாயத அடித்தளமாக” சமூகத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது, அதே நேரத்தில் சட்டம், அரசியல், மதம், தத்துவம் போன்ற சிந்தனைகள் அடித்தளத்தின் மேற்கட்டமைப்பாக இருக்கிறது. இதிலிருந்து மார்க்ஸ் வந்தடைந்த முடிவாக ஸ்டாலின் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

 

“பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றமானது ஒட்டுமொத்த மேற்கட்டமைப்பையும் கூடுதலாகவோ, குறைவாகவோ வேகமாகவோ மாற்றம் கொள்ள வைக்கிறது”

அராஜகவாதிகள் கற்பனை செய்வது போல வடிவம் இல்லாமலேயே உள்ளடக்கம் சாத்தியம் என்று மார்க்ஸ் கருதினார் என்பதல்ல. வடிவம் இல்லாமல் உள்ளடக்கம் சாத்தியமற்றது. உள்ளடக்கம் முதலில் மாற்றம் அடைகிறது அதற்கு ஏற்ப வடிவம் உடனே மாற்றம் பெறாமல் பின் தங்கி இருக்கி இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு கனப்பொருத்தமாக வடிவம் இருப்பதில்லை என்பதே உண்மையாகும்.

புதிய உள்ளடக்கத்துக்கு ஏற்ப வடிவம் மாறாது இருப்பது மட்டுமல்லாமல் முரணாகவும் போய்விடுகிறது. இந்த முரண் உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் மோதலை ஏற்படுத்துகிறது. முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சமூகத் தன்மை உடையதாக இருக்கிறது வினியோக முறை தனிச்சொத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. உற்பத்தியின் சமூகத் தன்மை என்பது உள்ளடக்கம், வினியோக முறை என்பது வடிவம். இந்த முரணே முதலாளித்துவ சமூகத்தில் மோதலுக்குக் காரணம். இந்த முரண் முற்றி இந்த உற்பத்தி முறையில் தீர்வு கிட்டாமல் சமூக மாற்றத்தைக் கோருவதே சோஷலிசப் புரட்சியாகும்.

உள்ளடக்கம் வடிவம் ஆகியவற்றை முன்வைத்து சமூக உணர்வு நிலையும் சிந்தனையும் சமநிலையில் இருக்கிறது என்று நினைப்பது கொச்சைப் பொருள்முதல்வாதம் என்கிறார் ஸ்டாலின்.

மார்க்சினுடையப் பொருள்முதல்வாதத்தின்படி, உணர்வுநிலையும் வாழ்நிலையும், கருத்தும் பொருளும், ஒரே நிகழ்ச்சிப் போக்கின் வெவ்வேறான இரு வடிவங்களாகும். இதன் காரணமாக இவ்விரு நிகழ்ச்சிப் போக்கும் ஒன்றை மற்றொன்று மறுப்பதில்லை, அவை இரண்டும் ஒரே நிகழ்ச்சிப் போக்காகவும் இல்லை. இப்படி கூறுவதினால், உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் இடையில் மோதல் இருக்கிறது என்ற கருத்துடன் முரண்படவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். உள்ளடக்கமும் வடிவமும் இருவடிவங்களாக இருப்பதினால்தான் மோதலே ஏற்படுகிறது. உள்ளடக்கம் முதலில் மாறுகிறது. வடிவம் அதற்கு பொருத்தமாக மாறவில்லை என்றால் பழைய வடிவம் தூக்கி எறியப்படுகிறது. இதுவே சமூகப் புரட்சிக்கான புறநிலை ஆகும்.

நமது மூளையில் உதிக்கும் உணர்வுநிலைக்கு முன்னரே இதற்குப் பொருத்தமான பொருளாயத வழியிலான மாறுதல் ஏற்பட்டு விடுகிறது என்பதை பொருள்முதல்வாத நமக்கு கூறுகிறது. ஒரு பொருளாயத மாற்றமானது விரைவிலோ அல்லது சிறிது காலம் கழித்தோ, அதற்குப் பொருத்தமான கருத்தியல் மாற்றத்தை தவிர்க்க இயலாதவாறு ஏற்படுகிறது.

இதுதான் மார்க்சினுடைய பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் சுருக்கமான அடிப்படை என்கிறார் ஸ்டாலின்.

பொருளாதார நிலைமைகள் முதலில் மாற்றம் ஏற்படுகிறது அதற்கு ஏற்றதான மாற்றம், மனித மூளைகளில் பின்னர் நடந்தேறுகிறது. இதன் மூலம் என்ன தெரிகிறது. மனிதர்களின் குறிக்கோள்கள் அவர்களின் மனத்தின் கற்பனைகிடையாது. புறத்தில் உள்ள பொருளாதார சூழ்நிலைமைகளின் வளர்ச்சி மனதில் பிரதிபலிக்கிறது

புறநிலையில் உள்ள பொருளாதார சூழ்நிலைகளை அலட்சியம் செய்து உருவாகும் குறிக்கோள்கள் பயனற்றவையும் ஏற்கத் தகாதவையும் ஆகும். புறநிலையில் உள்ள பொருளாதார சூழநிலைகளின் அடிப்படையில் எடுக்கின்ற குறிக்கோள்கள் சிறப்பானதும் ஏற்கக்கூடியதும் ஆகும்.

இது பொருள்முதல்வாதத்தின் முதல் முடிவு என்கிறார் ஸ்டாலின்.

மனிதர்களின் உணர்வுநிலைகளும், அவர்களுடைய பழக்க வழக்கங்களும் புறச்சூழ்நிமைகள் தீர்மானிக்கின்றன என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது. அப்படி என்றால், பொருளாதார உள்ளடக்கத்துக்கு பொருத்தமற்ற சட்டம், அரசியல் வடிவங்கள் அதன் மீது வலிந்து நிற்கின்றன என்றால் பொருள்முதல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார உறவுகளில் தீவிர மாற்றத்தைக் கொண்டு வரவும். அத்தகைய மாற்றத்துடன் மக்களின் பழக்க வழக்கங்களிலும் அவர்களுடைய அரசியல் கட்டமைப்பிலும், தீவிர மாற்றங்கள் கொண்டு வருவதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இது பொருளமுதல்வாதத்தின் இரண்டாவது முடிவு

      இதற்கு எடுத்துக்காட்டாக ஸ்டாலின், மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய “புனித குடும்பம்” என்கிற நூலில் இருந்து ஒரு மேற்கோளைத் தருகிறார்.

 

"பொருள்முதல்வாதமானது.... சோசலிசத்துடன் என்ன உள்ளார்ந்த தொடர்பைக் கொண்டிருக்கிறது என்பதை கண்டுணர்வதற்கு பேரளவிலான ஆழ்ந்த புலமை ஒன்றும் தேவையில்லை. மனிதன் தனது அறிவு, உணர்வு, இன்னும் மற்றவை அனைத்தையும் தனது புலன்களின் மூலம் பெறுகிறான் என்றால்..

 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

 

புற உலகைத் தக்கபடி மாற்றியமைப்பதனால்தான், மனிதன் புற உலகில் மனிதத் தன்மையைக் காணவும், தனது நேரடி உலக அனுபவத்திலேயே உண்மையான மனிதத்தன்மையை தானே உணரவும் முடியும்.... பொருளாயதரீதியில் மனிதன் சுதந்திரமற்றவனாக இருப்பானானால்; அவன் சுயேச்சைநிலையைப் பெறுவது என்பது வேண்டாதவற்றில் ஒன்று அல்லது மற்றொன்றை தவிர்ப்பதனால் அல்லாமல்; மாறாக, தனது தனித்தன்மையை நிலைநாட்டுவதற்கான ஆக்கபூர்வ சக்தியை பெறுவதனால்தான் என்றால்; தனிநபர்களின் குற்றங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல், அந்த சமூக விரோதக் குற்றங்கள் தோன்றுவதற்கான சூழ்நிலைமைகளை அழிக்க வேண்டும்....

 

மனிதன் சூழ்நிலைகளால்தான் வார்த் தெடுக்கப்படுகிறான் என்றால், அப்போது செய்ய வேண்டி யது என்னவென்றால், சூழ்நிலைகளையே மனிதத் தன்மை உள்ளவையாக மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான்"

(புனிதக் குடும்பம்)

      குற்றங்கள் நடைபெறுகின்றது என்றால் அதற்கான சூழ்நிலைமைகள் இருப்பதே காரணமாகும். குற்றங்கள் நிகழ்வதை தடுக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்களைப் போட்டால் மட்டும் போதாது, அதற்கான சூழ்நிலைகளை மாற்ற வேண்டும், அழிக்க வேண்டும். தனிநபவரை தண்டிப்பதினால் குற்றங்கள் மறைந்து போகாது. சூழ்நிலைமைகள் இருக்கும் வரை குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

      அண்மைய எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

      நம் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த தகவர். தற்கொலை என்பது சட்டத்துக்கு விரோதமானது என்று கடுமையான சட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்தத் தற்கொலைகளை தவிர்க்க முடியாது. விவாசாயிகள் வாழ்வாரத்துக்கான சூழ்நிலை மாற்றாமல் தற்கொலை என்பதைத் தடுக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையைத் தீர்த்தால்தான் விவசாயத் தற்கொலைகள் தடுக்கப்படும்.

மற்றொரு ருஷ்ய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்..

ருஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சி ஒரு சிறந்த எடுத்துககாட்டாகும். சோவியத் என்கிற சோஷலிச அரசு இருக்கிறது, ஆனால் சோஷலிச நிர்மானத்துக்கு உரிய உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை, இதற்கு லெனின் என்ன செய்கிறார், சோஷலிச உற்பத்தி முறைக்கு ஏற்ற வளர்ச்சியை எட்டுவதற்கு புதிய பொருளாதாரக் கொள்கையை அமைத்து சோஷலிச உற்பத்திக்கு தயார்படுத்தினார்.

இதற்கு அடுத்து ஸ்டாலின் மார்க்சிய பொருள்முதல்வாதம் பற்றிய அராஜகவாதிகளின் கண்ணோட்டத்தைப் பற்றிக் கூறுகிறார்.

இங்கே ஸ்டாலின் ஜார்ஜிவாவில் காணப்படும் அராஜகவாதிகளைப் பற்றியே பேசுகிறார். அவர்களை குறிப்பிட்டே பேசுகிறார்.

மார்க்சிய இயக்கவியல் என்பது ஹெகலின் இயக்கவியலில் இருந்தும், மார்க்சிய பொருள்முதல்வாதம் என்பது ஃபாயர் பாக்கின் பொருள்முதல்வாதத்திடம் இருந்தும் திருத்தம் பெற்று வளப்படுத்தியது என்பது நமக்குத் தெரியும். ஹெகல் பழைமைவாதி என்பதை விமர்சிப்பதாக அவரது இயக்கவியலையும் சேர்த்து அராஜகவாதிகள் விமர்சித்தனர். அதே போல ஃபாயர் பாக்கின் சில கருத்துகளை வைத்து விமர்சிக்கும் போது அவரது பொருள்முதல்வாததையும் சேர்ந்து அராஜகவாதிகள் விமர்சிக்கின்றனர்.

சமூக மாற்றம் என்பது சரியான மதங்களின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று ஃபாயர்பாக் கருதினார். மனிதனை தெய்வமாக்கவும் செய்தார். இதுபோன்ற ஃபயர்பாக்கின் தவற்றை மார்க்சும் எங்கெல்சும் தான், முதன்முறையாக வெளிப்படுத்தினர். ஏற்கெனவே திரைகிழித்துக் காட்டப்பட்ட தவறுகளை மீண்டும் திரைகிழ்த்துக் காட்டுவதில் அரஜகவாதிகளின் ஒரு நோக்கம் ஒளிந்திருக்கிறது. அது என்னவென்றால், மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிட்ட ஃபாயர்பாகின் தவறை கூறுவதின்மூலம் அவரது பொருள்முதல்வாதத்தையும் குறைகூற முற்படுகின்றனர். இத்தகைய தந்திரங்களின் மூலம் அராஜகவாதிகள் தங்களது அறியாமையையே வெளிப்படுத்துகின்றனர்.

மேலும் அராஜகவாதிகள் மார்க்சின் பொருள்முதல்வாததை “தொப்பை கோட்பாடு "Belly Theory" என்கிற பழையபாட்டை பாடுகின்றனர். அதாவது மார்க்சியப் பொருள்முதல்வாதம் வாழ்க்கை ஆதார உற்பத்தியைப் பற்றி பேசுவதை இவ்வாறு அவர்கள் திரிக்கின்றனர்.

அராஜகவாதிகள் எவ்வாறு திரித்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

சமூக வாழ்க்கையை சாதிப்பதற்கான ஒரே வழிமுறை தின்பதும் பொருள் உற்பத்தியும்தான் என்று சொல்வது தவறு. தின்பதினாலும் பொருளாதா சூழ்நிலைகளாலும் சித்தாந்தம் தீர்மானிக்கப்படுமானால், பெரும்தீனி தின்பவர்களே மேதைகளாவர். இது அராஜகவாதிகளின் குற்றச்சாட்டடு.

ஆ..கா.. எவ்வளவு எளிதாக மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் பொருள்முதல்வாதத் தத்துவத்தை அராஜகவாதிகள் நிராகரிக்க நினைத்துள்ளனர்.

ஸ்டாலின் அராஜகவாதிகளைப் பார்த்துக் கேட்கிறார், “தின்பதுதான் சித்தாந்தத்தை தீர்மானிக்கிறது என்று எங்கே, எப்போது, எவ்வுலகில், எந்த மார்க்ஸ் சொன்னார்? சொல்லுங்கள் கனவானகளே, சொல்லுங்கள்!!...   பொருளாதார நிலைமைகள்தான் மனிதர்களின் உணர்வுநிலையை, அவர்களின் சித்தாந்தத்தைத் தீர்மானிக்கிறது என்று மார்க்ஸ் சொன்னது உண்மைதான். ஆனால் தின்பது பொருளாதார சூழ்நிலைகளும் ஒன்றே என்று யார் சொன்னார்கள்.” 

-என்று ஸ்டாலின் கட்டமாகக் கேட்கிறார்.

தின்பது உடலியல் நிகழ்ச்சிப் போக்காகும், இது, மனிதர்களின் பொருளாதார நிலைமைகள் போன்ற சமூக வழியிலான நிகழ்ச்சிப் போக்கில் இருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது என்பது அராஜகவாதிகளுக்குத் தெரியாதா என்ன? வேண்டும் என்றே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

வாழ்வாதாரத்துக்காக தான் அம்பானியும் தொழில் புரிகிறார். அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு சேகரித்தாலும் பணத்தை உண்பதில்லையே, வாழுவதற்கு வீடு, உடுத்துவதற்கு உடைகள், உண்பதற்கு உணவு. இவைகள்தான் நமக்கும் தேவை அம்பானி போன்றோர்களுக்கும் தேவை. நாம் நான்கு பேர் வாழக்கூடிய வீட்டில் 8-10 பேர் வாழ்கிறோம். அம்பானி போன்றோர்கள் 500 - 800 பேர் வாழக்கூடிய இடத்தில் 5 பேர் வாழ்கிறார்கள்.

இந்த 5 பேருக்கு சமைப்பவர்களின் எண்ணிக்கை ஒரு ஓட்டலில் பணிபுரிவர்களின் எண்ணிக்கைத் தொடுகிறது. உணவும் ஓட்டலில் இருப்பது போல பலவிதங்களில் இருக்கிறது. இதை வைத்து அம்பானி போன்றேர்கள் தின்பதே பிரதானம் என்ற கொள்கை உடையவர்கள் என்று கூறப்படுகிறதா? இல்லையே உழைப்பாளர்களைப் பார்த்துதான் இப்படி கேட்கப்படுகிறது.

அராஜகவாதிகள் கருத்தின்படி மார்க்சின் பொருள்முதல்வாதம் இணைவு நிலைவாதமாக இருக்கிறது. பொருள்முதல்வாத ஒருமைவாதம் மாறுவேடம் போட்ட இருமைவாதமாகவும், இயக்கவியல் மறுப்பு வாதமாக இருக்கிறது. மார்க்ஸ் இருமைவாதத்தில் வீழ்கிறார். உற்பத்தி உறவுகளை பொருளாதார வழியிலானது என்கிறார்.

மனித முயற்சி விருப்பம் என்பதை மார்க்ஸ் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவில்லை. இதுவே அராஜகவாதிகள் மார்க்சின் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

ஸ்டாலின் ஒவ்வொன்றாக அராஜகவாதிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கிறார்.

அராஜகவாதிகள் கூறுகிற இணைவுநிலைவாதத்துக்கும் (Parallelism) மார்க்சியத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இணைவுநிலைவாதம் உண்மையில் மார்க்சியத்தை மறுக்கிறது. இணைவுநிலைவாதனது பொருளாயத வழிப்பட்டதோ கருத்து நிலையானதோ, இவை இரண்டும் எந்த ஒன்றும் முதலில் வருவதில்லை. அதாவது . இதில் முதலாவது இரண்டாவது என்று பிரிக்க முடியாது. அக்கம் பக்கமாக வளர்ச்சி அடைகிறது என்பதே இணைவுநிலைவாதம் உறுதியாகக் கூறுகிறது. ஆனால் பொருள்முதல்வாதம் பொருளாயத நிலைமை முதன்மையானது கருத்தியல் இரண்டாவதும் முதல் நிலையால் தீர்மானிக்கப்பட்டதும் என்கிறது. பொருளாயத நிலைமை உள்ளடக்கம் கருத்தியல் வடிவம். உள்ளடக்கமே வடிவத்தைத் தீர்மானிக்கிறது.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த முதல் பதில்.

“உற்பத்தி உறவுகள் பொருளாயத வழியிலானவை என்றும் மனித முயற்சியையும் விருப்பத்தையும் மாயையான கற்பனை” என்று மார்க்ஸ் கருதுவதாக அராஜகவாதிகள் கூறுகின்றனர். மார்க்ஸ் இப்படி கூறினா;h என்று பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் இந்தக் கூற்றின்படி அவர் எப்படி இருமைவாதியாக முடியும். இருமைவாதிகள் பொருளாயதத் தன்மை கருத்தியல் ஆகிய இரண்டையும் சம முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் இவ்விரண்டும் எதிரெதிரான போட்பாடுகளாகக் கருதுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அராஜகவாதிகள் கூறுகிறபடி மார்க்ஸ், பொருளாயதத் தன்மைக்கு முக்கியத்துவம் தருகிறார், கருத்தியல் தன்மையை கற்பனையானதாக இருப்பதினால் முக்கியத்துவம் தரவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் மார்க்ஸ் எப்படி இருமைவாதியாக கூற முடியும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த இரண்டாவது பதில்.

பொருளாயத ஒருமைக்கும் (Materialist Monism) இருமைவாதத்துக்கும் (Dualism) இடையில் என்ன தொடர்பு இருக்க முடியும். அராஜகவாதிகள் இருக்க முடியும் என்கின்றனர்.

      ஒருமைவாதமானது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஒரே கோட்பாட்டில் இருந்து எழுகிறது. பொருளாயத வடிவம் கருத்தியல் வடிவம் ஆகிய இரண்டும் இந்தக் கோட்பாட்டில் இருக்கிறது, ஆனால் இருமைவாதமானது பொருளாயத வடிவம் கருத்தியல் வடிவம் இரண்டும் தனித்தனியானது என்கிற இரு கோட்பாட்பாடுகளில் இருந்து எழுகிறது. கருத்தியல் தன்மை, பொருளாயத தன்மை ஆகிய இரண்டும் ஒன்றையொன்று இருமைவாதம் மறுக்கிறது. அப்படி இருக்க பொருளாயத ஒருமைவாதமும் இருமைவாதமும் அராஜகவாதிகள் கூறுவது போல எப்படி உறவு இருக்க முடியும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த மூன்றாவது பதில்.

“மனிதனின் முயற்சியும் விருப்பமும் மாயையானது என்றும் கற்பனையானது என்றும்” மார்க்ஸ் கூறியதாக அராஜகவாதிகள் கூறுகின்றனர். ஸ்டாலின் அவர்களைப் பார்த்து மார்க்ஸ் எந்த இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார் என்று கேள்வி கேட்கிறார்.

பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மனிதனின் முயற்சியும் விருப்பமும் இருக்கிறது என்று மார்க்ஸ் விவரித்துள்ளார் என்பது உண்மையே. சாய்வு நாற்காலியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு எதார்த்த உலகுக்குப் பொருந்தாத தத்துவங்களை பேசுவது தோல்வி அடையும், இந்தத் தத்துவங்களை கற்பனையானது என்று மார்க்ஸ் கூறியது உண்மை. பொதுவான மனித முயற்சியே கற்பனையானது என்று மார்க்ஸ் கூறியதாக எப்படி பொருள் கொள்ள முடியும்.

மனிதனின் முயற்சியைப் பற்றி, அரசியல் “பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு” என்கிற நூலுக்கு எழுதிய முன்னுரையில் மார்க்ஸ், “மனிதகுலம் தன்னால் சாதிக்கக் கூடியதான கடமைகளை மட்டுமே எப்போதும் மேற்கொள்ளுகிறது” என்கிற கருத்தை அராஜகவாதிகள் படித்ததில்லையா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்.

பொதுவாகக் கூறுவதானால் எதார்த்தத்துக்கு பொருத்தமற்ற குறிக்கோளையே நடைமுறைப்படுத்த முடியாது என்கிற பொருளில் மார்க்ஸ் கூறியுள்ளார். இந்த அராஜகவாதிகள் என்ன பேசுகிறோம் என்பதை அறியவில்லை அல்லது அவர் வேண்டுமென்றே உண்மையை திரித்தி வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

.இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த நான்காவது பதில்.

"மனிதனது முயற்சி, விருப்பம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் இல்லை” என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினார் என்று உங்களுக்கு யார் கூறினார்கள். எந்த இடத்தில் இப்படி எழுதியுள்ளனர் என்று நீங்கள் சுட்டிக்காட்டவில்லையே? என்று அராஜகவாதிகளைப் பார்த்து ஸ்டாலின் கேட்கிறார்.

“லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்”, “பிரான்சில் வர்க்கப் போராட்டம்”, “பிரான்சில் உள்நாட்டுப் போர்” போன்ற நூல்களில் மனிதனது முயற்சியையும் விருப்பத்தையும் பற்றி எழுதியிருக்கிறார்கள். பாட்டாளிகளின் முயற்சியையும் விருப்பத்தையும் சோஷலிச உணர்வில் வளர்ப்பது பற்றி மார்க்சும் எங்கெல்சும் பேசியிருக்கிறார்களே.

மார்க்ஸ் மனிதனது முயற்சியையும் விருப்பத்தையும் மறுக்கவில்லை, இவை இரண்டும் பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் தோன்றியது என்று கூறியது உண்மைதான். ஆனால் மனிதனது முயற்சியும் விருப்பமும் பொருளாதார நிலைமையின் மீது தாக்கம் செலுத்தவில்லை என்று கூறுவதாக பொருள்கொள்ள முடியுமா என்ன?

அராஜகவாதிகள் மற்றொரு குற்றச்சாட்டை மார்க்ஸ் மீது வைக்கின்றனர். உள்ளடக்கம் இல்லாமல் வடிவத்தைப் பற்றி நினைத்துப பார்க்க முடியாது, ஆகவே உள்ளடக்கத்துக்குப் பின்னரே வடிவம் தோன்றுகிறது என்று கூறமுடியாது. உள்ளடக்கமும் வடிவமும் இணைந்தே இருக்கின்றன. அப்படி இல்லை என்றால் ஒருமைவாதம் என்று பேசுவது அபத்தமானது என்கின்றனர் அராஜகவாதிகள்.

அராஜகவாத அதிமேதாவிகள் மீண்டும் மீண்டும் எப்படி குழப்பம் அடைந்திருக்கிறார்கள். வடிவம் இல்லாமல் உள்ளடக்கத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் நிலவுகின்ற வடிவம் நிலவுகின்ற உள்ளடக்கத்துக்கு அனைத்து நேரங்களிலும் முழுமையாக ஒத்திருப்பதில்லை என்பதும் உண்மைதானே. வடிவம் உள்ளடக்கத்துக்குப் பின்தங்கி இருக்கிறது. உள்ளடக்கமே முதலில் மாறுகிறது. புதிய உள்ளடக்கத்துக்கு பழைய வடிவம் பொருத்தமற்றுப் போவதே, இரண்டுக்கும் இடையே மோதலை ஏற்படுத்துகிறது. புதிய உள்ளக்கத்துக்குப் பொருத்தமற்ற பழைய வடிவம் தூக்கி எறியப்படுகிறது. இதுதானே உண்மை.

சமூகப் புரட்சி என்பது மனிதனது தனிப்பட்ட முயற்சி அல்லது விரும்பம் சார்ந்ததது அல்ல. அது உற்பத்தி முறையில் காணப்படும் புதிய உள்ளடக்கத்துக்கும் பழைய வடிவத்துக்கும் இடையே ஏற்படும் மோதலே சமூகப் புரட்சியாக வெடிக்ககிறது. இந்தப் புரிதலில்தான் மார்க்சிய பொருள்முதல்வாதத்தின் புரட்சிகர உணர்வு வெளிப்படுகிறது. புரட்சி என்பது தனிமனித விரும்பம் சார்ந்தது அல்ல மனிதனின் விருப்பம் முயற்சி என்பது புறநிலையின் தன்மைக்கு ஏற்பவே உருவாகிறது என்பதைத்தான் பொருள்முதல்வாதம் நிரூபிக்கிறது. அராஜகவாதிகளுக்கு இது புரியவில்லை என்றால் அது நிச்சயமாக பொருள்முதல்வாதத்தின் தவறு கிடையாது, அராஜகவதிகளின் தவறே ஆகும்.

இது அராஜகவாததிகளுக்கு ஸ்டாலின் அளித்த ஐந்தாவது பதில்.

ஸ்டாலின் இந்த அத்தியாயத்தில் மார்க்சின் பொருள்முதல்வாதத்தை அராஜகவாதிகள் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் பொருள்முதல்வாத ஒருமை என்ன கூறுகிறது என்பதையும் எளிமையாக விளக்கி உள்ளார்.

ஸ்டாலின் எழுதிய “அராஜகவாதமா? சோஷலிசமா?” (மூன்றாம் – இறுதிப் பகுதி)