Sunday 2 July 2023

லெனின் எழுதிய “எங்கிருந்து தொடங்குவது” என்கிற கட்டுரையின் சாரம்

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 90- வது வார வகுப்பு – 02-07-2023  )            


லெனினுடைய எழுத்துக்கள் இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.  லெனின் 1901ஆம் ஆண்டு எழுதிய “நமது வேலைத்திட்டம்” என்கிற சிறு கட்டுரையைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

 “இஸ்க்ரா” பத்திரிகையின் நான்காவது இதழில் தலையங்கமாக லெனின் வெளியிடப்பட்டதே “எங்கிருந்து தொடங்குவது என்கிற கட்டுரை ஆகும்.

       “எங்கிருந்து தொடங்குவது” என்ற கட்டுரையின் விரிவாக்கமே “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூல் ஆகும்..

       அன்றைய கட்டத்தில் கம்யூனிஸ்ட்டை சமூக-ஜனநாகவாதி என்றே அழைத்தனர். இந்தக் கட்டுரையில் லெனின் அவ்வாறே அழைக்கிறார். ஆனால் புரிதலுக்காக நாம் கம்யூனிஸ்ட் என்றே பெரிட்டுக் கொள்வோம். கட்சியை சமூக-ஜனநயாக கட்சி என்றே குறிப்பிட்டனர். இன்று நாம் அதை கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிடுகிறோம்.

       ருஷ்ய கம்யூனிஸ்ட்  எதிர்நோக்கும் மிக அவசரமான ஒரு கேள்வி இருக்கிறது என்கிறார் லெனின். அந்தக் கேள்வி என்னவென்றால், “என்ன செய்ய வேண்டும்.”

 இந்தக் கேள்வி எந்தத் திசை வழியை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி எழுப்படவில்லை. கம்யூனிச திசைவழியில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்ததினால்தான் இந்த கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் வைத்துள்ளது. இந்த முடிவில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதுமானது அல்ல. அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்று திட்டமிட வேண்டியது அமைப்பின் அடிப்படை பிரச்சினை ஆகும்.

 கம்யூனிஸ்ட் கட்சி கம்யூனிச திசை வழியை தேர்வு செய்தபின், அந்த திசைவழியில் செல்வதற்கு என்னனென்ன நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது அடுத்த முக்கிய கடமை ஆகும். இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று லெனின் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

 ஆக, கட்சியினுடைய போராட்டத்தின் தன்மையையும் வழிமுறைகளையும் அமைத்துக் கொள்வதுதான் முதல் வேலை என்பது நமக்கு நன்றாகத் தெரிகிறது.

 கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்வதால் மட்டும் ஒரு கட்சி தமது நடவடிக்கைகளை எளிதாக அமைத்துக் கொண்டுவிட முடியும் என்று கருதமுடியாது. சரியான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தவறான போக்குகள் தடையாக இருக்கிறது.

 முதல் தவறானப் போக்காக லெனின் குறிப்பிடுவது “பொருளாதாரவாதம்” ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யக் கம்யூனிசக் கட்சியில் ஒரு சந்தர்ப்பவாதப் போக்காக பொருளாதாரவாதம் காணப்பட்டது.

 பொருளாதாரவாதம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். கூலி உயர்வுக்காகவும், வேலை செய்கின்ற சூழ்நிலைமையின் மேம்பாட்டுக்காவும் மட்டும் போராடுவது பொருளாதாரவாதமாகும். தொழிலாளர்களின் அன்றாடத் தேவைகளில் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தை செலுத்தினால் போதாது. கட்சியின் நோக்கம் இதில் மட்டும் அடங்கிவிடவில்லை. அதன் முக்கியமான தலைமைப் பாத்திரம் என்னவென்றால், தொழிலாளர்களை வர்க்கப்படுத்த வேண்டும், அரசியல் தெளிவு பெறச் செய்ய வேண்டும்.

 கூலி உயர்வுக்காணப் போராட்டத்தின் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்கு கூலி அமைப்பு முறையின் சுரண்டலை புரிய வைக்க வேண்டும். கூலி உயர்வுக்கான போராட்டத்தை, கூலி அமைப்பு முறையைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக, வர்க்கப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். இதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி செய்யாது போனால் அந்த கட்சியின் அரசியல், முதலாளித்துவ அரசியலாக சுருங்கிப் போய்விடும்.

 இந்த ஆபத்தை உணர்ந்து பொருளாதாரவாதப் போக்கை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து ஒழிக்க வேண்டும். ஆனால் அன்று ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியில் இதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதை லெனின் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

 அடுத்து, கட்சியில் மற்றொரு போக்கும் காணப்படுவதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். கோட்பாட்டில் கறார் தன்மையில்லாத கதம்பப் போக்கு தலை தூக்கி நிற்கிறது. கட்சியின் இறுதிக் குறிக்கோளுக்கும் தற்கால அவசியங்களுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இருப்பதே இந்த கதம்பப் போக்கின் பிரச்சினை ஆகும்.

 “ரபோச்சியே தேலோ” என்கிற பத்திரிகை இந்தப் போக்கையே தேர்ந்தெடுத்துள்ளது. இந்தக் கதம்பவாதிகள் பிளெகானவ் கூறிய கருத்தின் ஆழத்தைக் குறைக்க முயல்கின்றனர். லீப்னெட் கூறியதை மேற்கோளாக காட்டுகின்றனர்.

 “சூழ்நிலைகள் 24 மணி நேரத்தில் மாறினால் செயல்தந்திரங்களும் 24 மணி நேரத்திற்குள் மாற வேண்டும்.” மேலும் எதேச்சாதிகாரத்தை நேரடியாகத் தாக்குவது பற்றியும் அழிப்பது பற்றியும் “ரபோச்சியே தேலோ” பேசுகின்றது.

       "ரபோச்சியே தேலோ" என்பதின் பொருள் "தொழிலாளர்களின் லட்சியம்" என்பதாகும்.  வெளிநாட்டு வாழ் ருஷ்ய கம்யூனிஸ்ட் சங்கத்தின் பத்திரிகையே "ரபோச்சியே தேலோ". இப்பத்திரிகை 1899ஆம் ஆண்டு ஜினீவாவில் இருந்து வெளியிடப்பட்டது. பொருளாதாரவாதிகளின் கருத்தை வெளிப்படுத்தும் பத்திரிகையாக இது இருந்தது. இரண்டாவது ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரசில் "ரபோச்சியே தேலோ" போக்குடையவர்கள் தீவிரமான வலதுசாரி சந்தர்ப்பவாதப் பிரிவைப் பிரதிநித்துவப்படுத்தியது.

 “இஸ்க்ரா” என்பது ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டவிரோதமான பத்திரிகை ஆகும். ருஷ்ய சூழ்நிலைமையில் கட்சி கட்டுவதில் இந்த பத்திரிகை பெரும்பங்கு ஆற்றியது. “இஸ்க்ரா” என்ற ருஷ்ய சொல்லுக்கானப் பொருள் தீப்பொறி என்பதே ஆகும்.

 “இஸ்க்ரா” போக்காக லெனின் இங்கே சொல்வது என்னவென்றால், தனித்தனியான சலுகைகளைப் போராடிப் பெறுவதோடு நின்றுவிடாமல், எதேச்சாதிகாரக் கோட்டையை முழுமையாக வன்மையுடன் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட வலுவான கட்சியை அமைக்க வேண்டும் என்பதாகும்.

       “இஸ்க்ரா”வின் முதல் இதழில் ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த வேலைத்திட்டத்தை “ரபோச்சியே தேலோ” இவ்வளவு விரைவாக ஏற்றுக் கொண்டதைக் கண்டு திருப்தி கொள்ளலாம், ஆனால் ஏற்றுக் கொண்டவர்களிடம் எவ்வித உறுதியான போக்கு இல்லாதது முழு திருப்தியை பாழ்படுத்திவிட்டது என்கிறார் லெனின்.

 “ரபோக்சியோ தேலோ” பத்திரிகை லீப்னெட் பெயரை வீணாகக் குறிப்பிட்டுள்ளது. சூழ்நிலை மாறிவிட்டது என்றும் காலம் மாறிவிட்டது என்றும் “ரபோச்சியோ தேலோ” வாதிப்பது கேலிக்குறியது என்கிறார் லெனின்.

       தொழிலாளர்களுக்கு போராடும் தன்மை வாய்ந்த கட்சியை உருவாக்குவதும் அரசியல் கிளர்ச்சியை நடத்துவதும் அனைத்துக் காலங்களிலும் அவசியமானதாகும். அதாவது “மந்தமான அமைதியான” நிலையிலும் “புரட்சிகரமான ஊக்கம் குன்றியத் தேயும்” காலத்திலும் போராடும் தன்மை உடைய கட்சி தேவையான ஒன்றாகும்.

       போராடும் தன்மை வாய்ந்த கட்சி அமைக்கப்பட்டிருப்பது என்றைக்கும் அவசியமான ஒன்றாகும். தீடீர் என்று புரட்சிக் கலகங்கள் ஏற்படும் போது அமைப்பை உருவாக்குவது என்பது காலம் கடந்த முயற்சியாக ஆகிவிடும். ஒரு நொடியில் நடவடிக்கையைத் தொடங்குவதற்குத் தயாராக கட்சி இருக்க வேண்டும்.

 லெனின் இங்கே கூறுவது மிகமிக முக்கியமான ஒன்றாகும். கட்சி என்பது இன்றையத் தேவையாக மட்டுமல்லாது உழைப்பாளர்களின் எதிர்காலத் தேவையை உணர்ந்து கொண்டதாக இருக்க வேண்டும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறம் பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும். அதற்கு தக்கவகையில் கட்சியை நிறுவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

 கட்சி என்பது தொழிலாளர்களின் முன்னணிப்படையாகும். முன்னணிப் படை என்றால் அதற்கு உரிய திறத்தை பெற்றதாக கட்சி இருக்க வேண்டும்.

 “ரபோக்சியோ தேலோ” 24 மணி நேரத்தில் செயல்தந்திரங்களை மாற்றிக் கொள்வதாக கூறிக் கொள்கிறது. ஆனால் செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முதலிலேயே செயற்தந்திரங்களை வகுத்திருக்க வேண்டுமே என்கிறார் லெனின்.

 அனைத்துவிதச் சூழ்நிலைகளிலும் அனைத்துக் காலங்களிலும் நடத்தப்பட்ட அரசியல் போராட்டத்தில் சோதிக்கப் பெற்ற வலுவான அமைப்பு இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உறுதியான கோட்பாடுகளால் ஓளியூட்டப்பட்டு, விடாப்பிடியான நிறைவேற்றப்பெறும் முறையான செயல் திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு இடமில்லை என்கிறார் லெனின்.

 “ரபோக்சியோ தேலோ” பயங்காவாதத்தை ( terror) புதியப் பிரச்சினையாக கருதுவது ஆதாரமற்றதாகும். இங்கே லெனின் பயங்கரம் அதாவது  terror என்கிற சொல்லையே பயன்படுத்தி உள்ளார். இதனை நாம் பலப்பிரயோகம் என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.

 லெனின் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதம் பற்றிய அதாவது பலப்பிரயோகக் கோட்பாட்டைப் பற்றிய கருத்தை தொகுத்தளித்துள்ளார்.

 லெனினது இந்தக் கருத்தை ஒரு நீண்ட மேற்கோளாக பார்ப்பதை தவிர்க்க முடியாது. முதலில் அதில் பேசப்பட்டுள்ளதை சுருக்கமாகப் பார்த்துவிட்டு அந்த மேற்கோளை முழுமையாகப் பார்க்கலாம். இந்த மேற்கோளில் உள்ள பகுதி கருத்தை மட்டும் பிடித்துக் கொண்டு மற்றக் கருத்துக்களை விட்டுவிடுவது பெரும் தவறாகும். லெனின் இங்கே கூறிய அனைத்தையும் உள்வாங்கி கோட்பாட்டைப்புரிந்து கொள்ள வேண்டும்.

 கோட்பாடு என்கிற வழியில் கம்யூனிஸ்டுகள் பயங்கரவாததை எப்போதும் நிராகரிக்கவில்லை. பயங்கரவாதம் என்பது போராட்ட முறையில் ஒரு நடவடிக்கை ஆகும். குறிப்பிட்ட சூழநிலையில் பயங்கரவாதம் பொருத்தமாக இருப்பதோடு இன்றியமையாததாகவும் இருக்கிறது.

 மைய அமைப்பு இல்லாத நிலையில், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில், முழுமையாக போர் புரிவதாக இல்லாமல் தனித்த தாக்குதலாகவே இருக்கும். அரசாங்க சக்திகளை இத்தகையப் போக்கு சீர்குலைக்காமல் உண்மையில் புரட்சிகரச் சக்திகளையே சீர்குலைக்கிறது.

 தனிப்பட்ட வீரச் செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. பயங்கரவாதத்தை முதன்மையான அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை கம்யூனிஸ்டுகள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

 சிறந்த முறையில் ஒரு தீர்க்கமான தாக்குதலில் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்றாக மட்டுமே பயங்கரவாதம் செயல்பட முடியும் என்கிறார் லெனின்.

 லெனின்:-

"கோட்பாடு ரீதியில் நாம் பயங்கரவாதத்தை ஒரு பொழுதும் நிராகரித்ததில்லை; நிராகரிக்கவும் முடியாது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கையில் ஒருவகையாகும். அது படைகளின் குறிப்பிட்ட நிலையையும், குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் பொறுத்து, போராட்டத்தின் குறிப்பிட்ட தருணத்தில் முற்றிலும் பொருத்தமாக இருப்பதுமட்டுமின்றி இன்றியமையாததாகவும்கூட இருக்கலாம். ஆனால் இவர்களது கூற்றின் சாரம் என்ன? போராட்டத்தின் முழு ஏற்பாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்த வகையில், களம் புகுந்து போர் புரியும் படையின் ஒரு நடவடிக்கையாக இவர்கள் இப்போது பயங்கரவாதத்தைக் கருதாமல், எந்தப் படையுடனும் தொடர்பற்ற விதத்தில், தனித்து நிற்கும் தாக்குச் செயலாகவே அதனைக் கருதிப் பேசுகிறார்கள்.

 

மைய அமைப்பு இல்லாத நிலையில், வட்டாரப் புரட்சி அமைப்புகள் பலவீனமாக இருக்கும் நிலையில், பயங்கரவாதம் இந்த வகையிலேதான் உருவாகும். எனவேதான், தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய போராட்ட முறை காலத்திற்கு ஒவ்வாததாயும் பொருத்தமற்றதாயும் உள்ளதென்று நாம் உறுதியாகச் சாதிக்கிறோம்.

 

மேலும் இப்போராட்ட முறை தீவிரமாகப் போராடும் வீரர்களின் கவனத்தை, முழு இயக்கத்தின் நலன்களைக் கருதுங்கால் மிகமிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உண்மைக் கடமையிலிருந்து அப்பால் திருப்புகிறது என்றும், அது அரசாங்கச் சக்திகளை அல்ல, புரட்சிகரச் சக்திகளையே சீர்குலைக்கிறது என்றும் நாம் உறுதியாகப் பிரகடனம் செய்து வருகிறோம்.

அண்மைகால நிகழ்ச்சிகளை நினைவூட்டிக் கொள்ளுங்கள்: நம் கண்ணெதிரே, மிகப்பரந்த அளவிலான நகரத் தொழிலாளரும் "சாமானியக் குடிகளும்' போராட்டத்தில் குதிக்கத் துடிதுடிக்கிறார்கள். ஆனால் புரட்சியாளர்களுக்குத் தலைவர்களையும் அமைப்பாளர்களையும் கொண்ட செயற்குழு எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலைகளில் ஆற்றல் மிக்க புரட்சியாளர்கள் பயங்கரவாதத்தைத் தழுவுவதால், நாம் எந்தப் போர்ப் படைகள் மீது உண்மையில் நம்பிக்கை வைக்கலாமோ அந்தப் போர்ப் படைகள் பலவீனமடையும் என்ற ஆபத்து ஏற்படாதா? அதிருப்தி அடைந்து, எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு, போராட்டத்துக்குச் சித்தமாயிருப்பவர்களும், சிதறியிருக்கும் காரணத்தால் மட்டுமே வலுக்குறைந்திருப்பவர்களுமான திரளான மக்களுக்கும் புரட்சி அமைப்புகளுக்கு மிடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பெறும் என்ற ஆபத்து ஏற்படாதா? அந்தத் தொடர்புதானே நமது வெற்றிக்கான ஒரே உத்தரவாதம்.

 

தனிப்பட்ட வீரச் செயல்களின் முக்கியத்துவத்தை மறுக்கும் நோக்கம் நமக்குச் சிறிதும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்தை மிக அதிகமாகப் பயன்படுத்துவதை எதிர்த்தும், அதை முதன்மையான, அடிப்படையான போராட்ட முறையாகக் கருதுவதை எதிர்த்தும் கடுமையாக எச்சரிப்பது நம் கடமை. மேற்சொன்ன கருத்து இப்போது மிகப் பலரை ஈர்த்திருக்கிறது. பயங்கரவாதம் என்பது போராட்ட நடவடிக்கைகளில் முறையானதொன்றாக ஒரு பொழுதும் இருக்க முடியாது. அதிகமாகச் சொல்லப்போனால், தீர்மான தாக்குதலின் வழிதுறைகளில் ஒன்றாக அது பயன்படலாம்" (63 - 65)

       லெனின் இங்கே கூறியதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். நம் நாட்டிலும் பலபேர் இப்போதே போர் தொடுக்கப் போவதைப் போல் பேசிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் இன்றைய அரசியல் வேலை எதையும் செய்யாது காலத்தை வீணடிப்பார்கள். வர்க்கப் போராட்டத்தின் இறுதி தான் ஆயுதப் போராட்டம். அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான தயாரிப்பு இல்லாது போனால் புரட்சி செய்ய வேண்டிய நேரத்தில் இயலாமையில் தாழ்ந்து போவோம் என்பதை மறந்திடக்கூடாது.

 “ரபோச்சி தேலோ” பத்திரிகை “தாக்கும் படையில் அணி திரளுங்கள்” என்று கூச்சல் இடுகிறது. உணர்ச்சியின் அடிப்படையிலேயே இத்தகைய கூச்சல் போடப்படுகிறது, உண்மையில் இது ஒரு அறிவான செயல் அல்ல. நிரந்தமான படைப்பிரிவுகள் மிகமிக குறைவாக இருக்கும் நிலையில், அதுவும் திரட்டப்படாத நிலையில் ஒவ்வொன்றையும் இணைக்கப்படாமலும்  பயிர்ச்சி பெறாமலும் இருக்கும் நிலையில் இது வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.

 தயாராகமல் போரில் இறங்கக் கூடாது. உண்மையில் இன்றை முழக்கம் “தாக்குவதற்கு முற்படு” என்பதற்கு பதிலாக “எதிரியின் கோட்டையை முறையாக முற்றுகை இடு” என்பதாகத்தான் இருக்க வேண்டும். முறைப்படுத்தாமல் போரில் இறங்குவது ஆபத்தையே ஏற்படுத்தும்.

 இன்றைய நிலையில் கட்சியின் உடனடிக் கடமை என்னவாக இருக்க வேண்டும் என்பதை அடுத்து லெனின் விளக்குகிறார்.

 அனைத்து சக்திகளையும் உடனே தாக்குதலுக்கு அழைப்பது இன்றை வேலை அல்ல. புரட்சிகரமான அமைப்புக்கு ஏற்பாடு செய்தவற்கு அழைப்பதுதான் உடடினடி பணியாகும். முதலில் இந்த அமைப்பிற்குள் அனைத்து சக்திகளையும் ஒன்று சேர்க்க வேண்டும். அமைப்பை பெயரளவுக்கு அல்லாது, சிறப்பாக நடைமுறையில் செயல்படுவதற்கான ஆற்றலை உருவாக்க வேண்டும்.

 அன்றாட அரசியல் செயற்பாட்டுடன், தீர்மானகரமான போருக்கு தயார்படுத்துவதாகவும் இயக்கத்தின் அணுகுமுறை இருக்க வேண்டும். இதை லெனின் கூறுவதை அப்படியே பார்ப்போம்.

 

“.. அந்த அமைப்பு ஒவ்வொரு கண்டன நடிவடிக்கையையும் திடீர் எழுச்சியையும் ஆதரிக்கவும், தீர்மானப் போருக்கு வேண்டிய ராணுவ பலத்தை அதிகப்படுத்தி வலுப்படுத்துவதற்கு அவற்றைப் பயன்படுத்தவும் எந்த நேரத்திலும் சித்தமாயிருக்க வேண்டும்” (65)

 கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதே இயக்கத்தின் பணியாகும். இதற்கு எந்த வகையில் அமைப்பை கட்டுவது என்று முடிவு செய்ய வேண்டும், அதற்கு அடுத்து செயல்படுத்துவதற்கு அமைப்புக்கு உரிய சரிநுட்பமான திட்டத்தை வகுக்க வேண்டும்.

 திட்டத்தின் வழியில்தான் அமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அதனால் திட்டத்தை வகுக்க வேண்டியது முதன்மையான செயலாகும். ஒரு திட்டத்தின் சுருக்கத்தை தோழர்கள் முன் சமர்ப்பிப்பதற்கான தயாரிப்பு நடைபெறுவதாக லெனின் இங்கே கூறுகிறார். அந்த தயாரிப்பே “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலாகும். “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூல் “நம் இயக்கத்தின் சூடேறிய பிரச்சினைகள்” என்ற உட் தலைப்புடன் வெளிவந்தது.

 நம் நாட்டில் நமது கம்யூனிஸ்ட் கட்சியை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு “எங்கிருந்து தொடங்குவது” “என்ன செய்ய வேண்டும்” என்கிற இரண்டு லெனினது எழுத்துக்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். லெனின் காட்டும் அமைப்பே இன்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அதன் வழியில் செயல்படும்போதே நாம் பல புதிய வழிகளை கண்டடைய முடியும்.

 ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் பத்திரிகைத் தேவைப்படும். அதாவது கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட பின்பே கட்சிக்கு பத்திரிகை தேவைப்படும். இதுவே பொதுவான இயல்பாகும். ஆனால் அன்றை ருஷ்யநிலைமை இதற்கு வழியில்லாமல் இருந்தது. அதனால் ஒரு பத்திரிகை நடத்தி அதன்மூலம் கட்சி கட்டப்பட்ட வரலாறு ருஷ்யாவில் நடந்தேறியது. ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகையை நிறுவதே முதல் கடமையாக ருஷ்யாவில் அன்று இருந்தது. அந்த பத்திரிகைதான் “இஸ்க்ரா”. “இஸ்கரா” பத்திரிகையே ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரே சீராக வளர்க்கவும் செழுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அடிப்படையாகப் பயன்பட்டது.

 தனிநபர்களின் செல்வாக்கினால் வட்டாரங்களில் சிதறலாக நடைபெறும் கிளர்ச்சியை முறையான பொதுக் கிளர்ச்சி மூலம் வலுப்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கிளர்ச்சியை பத்திரிகை மூலமே அனைத்தையும் இணைக்கப்பட்டு ருஷ்யாவில் அன்று முறையாக நடத்த முடிந்தது.  

 ருஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் அன்று வட்டார வேலைகளில் முழுமையாக மூழ்கி கிடந்தனர். இது ஒரு பெரிய குறைபாடாக லெனின் கருதினார். கட்சி ஊழியர்களின் செயற்பாட்டில் ஊசலாட்டம், நிலையில்லாத போக்கு ஆகியவற்றுக்குக் காரணம், கட்சி அமைப்புகள் சிதறுண்டு கிடப்பதே ஆகும். கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு அனைத்து ருஷ்யப் பத்திரிகை நடத்துவதின் மூலமே அனைத்தையும் ஒன்றிணைக்க முடியும் என்று லெனின் கருதினார்.

 இந்த அனைத்து ருஷ்யப் பத்திரிகை இல்லாது போனால், அரசியல் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஒன்றுசேரத் திரட்டி, அவற்றைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் இயக்கத்தை செழுமைப்படுத்துவது என்கிற கட்சியின் கடமையை செய்திட முடியாது என்பதை லெனின் சரியாகக் கணித்து செயல்பட்டார்.

 கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு கடமைகள் முக்கியமானது, ஒன்று கூலி உயர்வு போன்ற பொருளாதாரப் போராட்டத்தை முதலில் முன்னெடுப்பது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த ஒன்று இருக்கிறது, அதுதான் முக்கியமானது, அதுவே கம்யூனிஸ்டுகளின் தலையாயக் கடமையாகும். முதல் கடமையை தொழிலாளர்களே முயற்சித்தால் ஒன்றுகூடி செய்திட முடியும், ஆனால் இரண்டாவதை ஒர் இயக்கத்தால் மட்டுமே செய்திட முடியும்.

 பொருளாதாரப் போராட்டத்தின் மூலம் அரசியல் உணர்வு பெற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசியல் நோக்கில் அக்கிரமங்களை அம்பலப்படுத்த கற்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதே வர்க்க அரசியலாகும், அப்படி செய்யும் போதுதான் தொழிலாளர்கள் வர்க்க உணர்வைப் பெற்றவர்களாவார்கள். இதை லெனின் சொற்களில் காண்போம்.

 

“நாம் முதல் நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்; அதாவது, தொழிலாளி வர்க்கத்திடையே, "பொருளாதார நோக்கில்'' ஆலைகளில் நிகழும் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்துடிப்பை எழுப்பிவிட்டிருக்கிறோம். இப்பொழுது அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்: அதாவது கூடுதலாகவோ குறைவாகவோ அரசியல் உணர்வு பெற்றுள்ள எல்லா மக்கட் பகுதிகளிடமும் அரசியல் நோக்கில் அக்கிரமங்களை அம்பலப்படுத்த வேண்டுமென்ற மனவெழுச்சியை உண்டாக்குவது அவசியம்” (68)

       பொருளாதாரப் போராட்டம் என்பது அரசியல்தான் ஆனால் அது முதலாளித்துவ அரசியலாகும், அந்தப் பொருளாதாரப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அரசியல்படுத்துவதே கம்யூனிச அரசியலாகும். இதைப் பற்றி லெனின் “என்ன செய்ய வேண்டும்” என்கிற நூலில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார், அதை நாம் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.

       அன்றைய குறிப்பான ருஷ்ய நிலைமையைப் பற்றி லெனின் கூறுவதை அடுத்துப் பார்ப்போம்.

 அரசியல் வெளிப்பாட்டின் குரல் இன்று மிகவும் பலவீனமாகவும், பயமுறுத்துவதாகவும், இருப்பதை கண்டு நாம் சோர்வடையக்கூடாது. இதற்கு போலீஸ் அடக்குமுறைக்கு அஞ்சியே மக்கள் அடங்கி இருக்கிறார்கள் என்பது காரணம் அல்ல.

 இச்செயலில் ஈடுபடத் திறமையும் மனமும் உள்ளவர்கள் ஏறிப்பேசுவதற்கு உரிய மேடை இல்லை என்பதே காரணம் ஆகும். திறம்பெற்ற பேச்சாளர்களின் பேசை ஆவலுடன் கேட்டு அவர்களை ஊக்ககப்படுத்தும் கூட்டமும் இல்லை. மேலும், அனைத்து வல்லமைப் பொருந்திய ருஷ்ய ஜார் அரசை எதிக்கும் சக்திபடைத்த வர்க்கம் இதுவரை காணவில்லை. ஆனால் இன்றைக்கு நிலை மாறி இருக்கிறது என்கிறார் லெனின்.

 ஆவலுடன் கேட்பதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் உள்ள சக்தி ருஷ்யாவில் இப்போது வந்துவிட்டது, அதுதான் புரட்சிகரமான பாட்டாளி வர்க்கம் என்கிறார் லெனின்.   

  இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளிகளின் வர்க்க உணர்வு பெற்ற முன்னணிப்படை ஆகும். பாட்டாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் இருப்பவர்களை கம்யூனிஸ்ட் என்று கூறிடவே முடியாது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தையும் பாட்டளி வர்க்க உணர்வுக்கு உள்ளடக்கியே புரிந்து கொள்கிறது. அப்படி இருக்க பாட்டாளி என்கிற தொழிலாளர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்களாக மாற முடியும் என்கிற தெளிவு கம்யூனிஸ்ட்டுக்கு இல்லை என்றால், கம்யூனிஸ்ட் எப்படி தங்களுடைய கடமையை உணர்ந்து செயல்பட முடியும்.

 ஏற்கெனவே செங்கொடி மையத்தில் எங்கெல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்கிற கேள்வி-பதில் பகுதியைப் பார்த்தோம். அதில் உள்ளவைகளின் தெளிவு நமக்கு வேண்டும். அந்தத் தெளிவு அடிப்படையானது. அந்த அடிப்படை இருந்தால் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் மார்க்சிய விஞ்ஞான வழியில் செயல்பட முடியும்.

 அடுத்து, பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம். அரசியல் போராட்டத்திற்கான அழைப்பை கேட்டு ஆதரிப்பது மட்டுமல்லாமல், தைரியமாக போரில் ஈடுபடவும் தனது தயார்நிலையையும் பாட்டாளி வர்க்கம் நிரூபித்துள்ளது.

 ஜார் ஆட்சியை அம்பலப்படுத்தும் வகையில் நடத்த வேண்டிய பத்திரிகை அவசியத்தை லெனின் வலியுறுத்துகிறார்.

 ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நாட்டில் உள்ள மற்ற தொழிலாளர்களைவிட வேறுபட்டதாய் அரசியல் அறிவைப் பெறுவதில் அக்கறை உள்ளதாய் இருக்கிறது. பாட்டாளி வர்க்கத்திடையே சட்டவிரோதமான இலக்கியத்துக்கு எப்போதும் தேவை உள்ளதாக இருக்கிறது. அதிகக் கொந்தளிவு உள்ள காலங்களில் மட்டும் அல்லாது அனைத்து காலங்களிலும் இதுவே உண்மை ஆகும் என்கிறார் லெனின்.

 திரளான பாட்டாளிகளிடம் சட்டவிரோத இலக்கியம் மீது பெரிய அளவுக்கு தேவை ஏற்பட்டுள்ளது, அனுபவமுள்ள புரட்சிகரத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் தோன்றி இருக்கிறார்கள். ஆலை உற்பத்தியின் போக்கால் பாட்டாளிகள் ஓர் இடத்தில் குவிந்திருக்கச் செய்துள்ளது.

 ருஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவழியில் செயல்பட முடியாத நிலையில் ஒர் அரசியல் பத்திரிகையின் வாயிலாக செய்வது பற்றியே லெனின் பேசுகிறார்.

 இந்தக் கட்டுரையில் லெனின் ருஷ்ய நிலைமைக்கு பத்திரிகையின் அவசியத்தையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

       அன்றைய ருஷ்ய சூழ்நிலையில் அரசியல் பத்திரிகை செய்ய வேண்டிய பங்கு என்னவென்பதை அடுத்து லெனின் தொகுத்துத் தருகிறார்.

 அரசியல் பத்திரிகை செலுத்த வேண்டிய பங்கானது, கருத்துக்களைப் பரப்புதல், அரசியல் கல்வி அளித்தல், அரசியல் கூட்டாளிகளை ஈர்த்துக் கொள்ளுதல் ஆகிய நடிவடிக்கைகளில் மட்டும் அடங்கி இருக்கவில்லை என்கிறார் லெனின்.

 பத்திரிகை என்பது கூட்டுத்துவப் பரப்புரையாளனாகவும் கூட்டுத்துவக் கிளர்ச்சிக்காரனாகவும் இருப்பதோடு கூட்டுத்துவ ஒழுங்கமைப்பாளனாகவும் இருக்க வேண்டும்.

 இதன் மூலம் லெனின் என்ன நிகழும் என்பதை அடுத்துக் கூறுகிறார். பத்திரிகையின் உதவியாலும் தொடர்பினாலும் ஒரு நிரந்தர அமைப்பு தானாகவே அமையத் தொடங்கும். அந்த அமைப்பு வட்டார வேலைகளில் செயல்படுவதோடு நின்றுவிடாமல், முறையான பொது வேலையிலுங்கூட ஈடுபடும், அரசியல் நிகழ்ச்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கவும், மக்கள் பெருந்திரளின் பல்வேறு பகுதியினரின்மீது அவை செலுத்தும் செல்வாக்கையும் மதிப்பிடவும் வேண்டும். அதற்கான பயிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார்.

 வட்டார முகவர்கள் பத்திரிகையை வினியோகிப்பது என்பது, கட்சியின் வட்டார முகவராகவும் அனைத்து முகவரிகளின் இணைக்கும் பாலமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட வட்டாரக் கட்சியின் முகவர்கள், வட்டார நிலைமைகளுடன் நின்றுபோகாமல், மற்றவர்களுடனும் தொடர்பு கொள்ளும்போது பொதுநிலைமைகளை அறிந்து கொள்வார்கள். அனைத்து ருஷ்ய நிலைமைகளை புரிந்து கொள்வார்கள். அப்போது ஒவ்வொருவரும் நாடு முழுமையையும் தழுவி நிற்கக்கூடிய அளவுக்குப் பெரிய ஒர் அமைப்பாக உருவெடுக்கும்.

 லெனின் ருஷ்ய நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கையின் மூலம் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகளையும் இணைத்தார்.

 லெனின் இந்த சிறு கட்டுரையின் இறுதியில் கூறியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்தக் கட்டுரையாகவும் நூலாகவும் இருந்தாலும் அதன் உட்பொருளை அதன் எழுத்தாளர் கூறமுனைவதைவிடுத்து தங்களது போக்குக்கு ஏற்ப புரிந்து கொள்வது லெனின் காலத்திலும் காணப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அதனால் லெனின் தப்பெண்ணங்களைத் தவிர்க்கும் பொருட்டு அவரே இக் கட்டுரையில் காணப்படும் கருத்தைத் தொகுத்துத் தந்துள்ளார்.

 எதேச்சதிகாரத்தை, சரியான முற்றுகை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலால் மட்டுமே தூக்கியெறியப்பட முடியும் என்று பொருள் கொள்ளக்கூடாது என்கிறார் லெனின். அப்படி கருதுவது அபத்தமானதாகவும் வறட்டுவாதமாகவும் இருக்கும். இதற்கு மாறாக அனைத்துப் பக்கங்களில் இருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல்பாகத் தோன்றும் திடீர் வெடிப்புகளில் ஒன்றின் நிர்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின் நிர்ப்பந்தத்தாலோ எதேச்சாதிகாரத்தை தகர்த்து ஒழிக்க முடியும் என்பதற்கு வரலாற்றுப் போக்கில் நிறைய வாய்ப்புள்ளது என்கிறார் லெனின். நாம் நமது சொந்த வழியில் செல்ல வேண்டும், நமது வழக்கமான வேலையை உறுதியுடன் தொடர வேண்டும், மேலும் எதிர்பாராதவற்றின் மீது நமது நம்பிக்கை குறைவாக இருந்தால், எந்தவொரு "வரலாற்று திருப்பங்கள்" தம்மை திகைக்க வைக்க மாட்டாது என்பது உறுதி என்று கூறி லெனின் இந்தக் கட்டுரையை முடிக்கிறார்.

 

“இறுதியாக, வரக் கூடிய தப்பெண்ணத்தைத் தவிர்ப் பதற்காகச் சில சொற்கள் கூறுவோம். முறையான திட்டமிட்ட தயாரிப்பைப் பற்றியே எப்போதும் பேசி வருகிறோம்; ஆனால், சரியான முற்றுகை அல்லது நன்கு ஒழுங்க மைந்த தாக்குதல் மூலமே எதேச்சாதிகாரம் வீழ்ந்து ஒழியும் என்று உட்குறிப்பாக உணர்த்துவது நம்முடைய விருப்பமல்ல. அத்தகைய கருத்து முட்டாள்தனமாகவும் புத்தகப்புழுவுக்குரியதாகவும் இருக்கும். அதற்கு மாறாக, எல்லாப் பக்கங்களிலிருந்தும் இடைவிடாமல் அச்சுறுத்தும் தன்னியல் பாகத் தோன்றும் திடீர் வெடிப்புக்களில் ஒன்றின் நிர்ப்பந்தத்தாலோ, எதிர்பாராத அரசியல் சிக்கல்களின் நிர்ப்பந்தத்தாலோ எதேச்சாதிகாரம் தகர்ந்து ஒழியும் என்பது முற்றிலும் சாத்தியமானது; வரலாற்றுப் போக்கில் அதிக வாய்ப்புள்ளது. ஆனால் யோசனையற்ற முரட்டுத் துணிச்சலான செயல்களில் வழுக்கி விழுவதைத் தவிர்க்க விரும்பும் எந்த அரசியல் கட்சியும், மேற்சொன்ன திடீர் வெடிப்புக்களையும் சிக்கல்களையும் பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் தன் நடவடிக்கையை அமைத்துக் கொள்ள முடியாது. நம் வழியே நாம் போக வேண்டும்; நம்முடைய முறையான வேலையில் ஒரே விடாப்பிடியாக ஈடுபட வேண்டும்; எதிர் பாராத நிகழ்ச்சிகள் மீது எவ்வளவு குறைவாக நாம் நம்பிக்கை வைக்கிறோமோ, அவ்வளவுக்கு "வரலாற்றுத் திருப்பங்கள்" நம்மைத் திகைக்கச் செய்ய மாட்டா என்ற உறுதி அதிகமாகும்.” (72)

 ஆக லெனின் இங்கே சொல்ல முற்படுவது என்னவென்றால், கம்யுனிஸ்ட் கட்சி, தாம் வகுத்த வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும். தம்முடைய முறையான வேலையில் விடாப்பிடியாக ஈடுபட வேண்டும். எத்தகை சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் கட்சி இருக்க வேண்டும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தையும் எதிர்கொண்டு பயன்படுத்தும் வகையில் திறம் பெற்று இருக்க வேண்டும்.

 நம் நாட்டைப் பொறுத்தளவில் தொழிலாளர்களுக்கான பொருளாதாரப் போராட்டத்திலேயே பலவீனமாக இருக்கிறோம். இதில் இருந்து விடுபட்டு பாட்டாளியை வர்க்க அரசியலாக்குவது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் இந்த வரலாற்றுக் கடமையை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படும்போதுதான் நாளைய உலகம் தொழிலாளர்களுக்கானதாக மாறும் என்று கூறி இன்றைய சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.

 

No comments:

Post a Comment