Sunday 25 June 2023

04) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (நான்காம் - இறுதி பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட

  89- வது வார வகுப்பு – 25-06-2023  )


 

 ஐந்தாவது அத்தியாயம்

அரச உலர்ந்து உதிர்வதற்குரிய பொருளாதார அடிப்படை.

       பழங்குடி சிதைவின் போது ஏற்பட்ட வர்க்க சமூகத்தில் உபரியாய் கிடைத்தை பகிர்வதில் ஏற்பட்ட சிக்கல், கலகமாக வெடிக்காமல் தடுப்பதற்கு உருவானதே அரசு.

 அதாவது, சுரண்டும் வர்க்கம் சுரண்டலுக்கு ஆளான வர்க்கம் ஆகிய வர்க்கங்களின் இணக்கம் காண முடியாததின் விளைவே அரசு. இதை நாம் எந்தளவுக்குப் புரிந்து கொள்கிறோமோ அதே அளவுக்கு புரிந்து கொள்ள வேண்டியது, அரசு உலர்ந்து உதிர்வதற்கான பொருளாதார நிலைமை.

 குறிப்பிட்ட பொருளாதார நிலைமையின் காரணமாகவே அரசு தோன்றியது அது மறைவதற்கு உரிய பொருளாதார நிலைமை ஏற்படும் போதுதான் அரசு மறையும். இதைப் பற்றி மார்க்ஸ் “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” என்கிற கட்டுரையில் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த “கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனம்” மார்க்சால் 1875ஆண்டு மே மாதத்தில் எழுதப்பட்டது. முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசு உலர்ந்து உதிர்வதற்கான, கம்யூனிச சமூக வளர்ச்சிக்கு இடையில், ஒரு அரசு இருக்கிறது என்பது பற்றி இதில்தான் முதன்முறையாக மார்க்ஸ் எழுதியுள்ளார்

 ஐந்தாவது அத்தியாயத்தின், முதல் பிரிவு, பிரச்சினையை மார்க்ஸ் முன்வைத்தல்.

       முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்திற்கு இடையில் அரசு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இதை மார்க்ஸ் எப்படி முன்வைக்கிறார் என்பதை லெனின் இந்தப் பிரிவில் விவரிக்கிறார்

       மார்க்சையும் எங்கெல்சையும் முரண்படுத்தி பார்ப்பதில் பல பேருக்கு விருப்பம் அதிகம். அதே போல இளம் மார்க்ஸ் முது மார்க்ஸ் என்று பிளவு படுத்திவதிலும், மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் வேறுபாடு காட்டுவதிலும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் மற்றும் லெனின் ஆகியோர்களுக்கு இடையே முரண் படுத்தி காட்டுவதில் பலருக்கு விருப்பம் இருக்கிறது. இந்த விருப்பம் உடையவர்கள் ஐரோப்பாவில் அதிகம் இருக்கிறார்கள், நம் நாட்டிலும் இருக்கிறார்கள். நம் நாட்டில் இப்படிப்பட்டவர்களே மேலான மார்க்சியவாதிகளாக நம் நாட்டில் உலாவிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த முரண்களைக் காட்டி மார்க்சிய அடிப்படைகளை சிதைக்க முடியுமா என்று அவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இன்றுவரை இதை சாதிக்க முடியவில்லை. மார்க்சியம் அறியாவதவர்களிடையே குழப்பத்தை மட்டுமே அவர்களால் ஏற்படுத்த முடிகிறது.

 மார்க்சியத்துக்கும் லெனினியத்துக்கும் எந்த முரணும் கிடையாது. மார்க்சியத்தின் வளர்ச்சியே லெனினியம். ஸ்டாலின் எழுதிய “லெனினியத்தின் அடிப்படைகள்” என்கிற நூலில் தெளிவாக அறியலாம்.

 லெனினியம் மார்க்சியத்தின் தொடர்ச்சி என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால் முரணைத்தான் நிரூபிக்கப்பட முடியாத முரணாக நீடிக்கிறது. ஏன் இதை கூறுகிறேன் என்றால், லெனின் இங்கே எங்கெல்சுக்கும் மார்க்கும் உள்ள முரணாக கருதுவதை எவ்வாறு போக்குகிறார் என்பதைப் பார்ப்போம்.

 மார்க்ஸ் 1875ஆம் ஆண்டு மே மாதம் 5ல் பிராக்கேவுக்கு எழுதிய கடிதத்தையும், எங்கெல்ஸ் 1875ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ல் பெபெலுக்கு எழுதிய கடித்தையும் மேலெழுந்தவாரியாக ஒப்பிட்டுப் பார்த்தால் “அரசின் ஆதரவாளராய்” மார்க்ஸ் இருப்பதாக தெரியும்.

 எங்கெல்ஸ் அரசு பற்றிய அனைத்து பேச்சுகளையும் அறவே விட்டொழித்து அரசு என்னும் சொல்லை வேலைத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஜெர்மன் சொல்லான “மக்கட்சமூகம்” என்னும் சொல்லை பயன்படுத்தும்படி ஆலோசனை கூறுகிறார். ஆனால் மார்க்ஸ் “கம்யூனிச சமூதாயத்துக்கு உரிய வருங்கால அரசு” என்பதாய் பேசுகிறார். மார்க்சின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால், கம்யூனிச சமூகத்துக்கும் அரசு அவசியம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டதாக தோன்றக்கூடும்.

       இது போன்ற கருத்து அடிப்படையிலேயே தவறானது என்கிறார் லெனின். அரசு குறித்தும் அது உலர்ந்து உதிரும் நிகழ்ச்சி குறித்தும் மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

      மார்க்சும் எங்கெல்சும் வெவ்வேறு சூழ்நிலையில் கூறியதை கணக்கில் கொள்ளாமல் ஒப்பிட்டுப் பார்ப்பதே, வேறுபாடுக்கு காரணம் ஆகும். அரசு தொடர்பாக நிலவிய தப்பபெண்ணங்கள் எந்தளவுக்கு அபத்தம் என்பதை கூற முற்பட்ட இடத்தில் மக்கட்சமூகம் என்ற சொல்லைப் எங்கெல்ஸ் பயன்படுத்தினார். கோத்தா வேலைத்திட்டத்தில் மார்க்ஸ் கூறியது, முதலாளித்துவ சமூகத்தின் வீழ்ச்சிக்கும் கம்யூனிச சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலையில் தேவைப்படுகிற அரசைப் பற்றியதாகும்.

       லெனின் இங்கே கூறுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நம் நாட்டில் முதலாளித்துவத்துக்கு மாற்றாக கம்யூனிச சமூகத்தை கூறுகின்றனர். இது பெரும் தவறாகும். முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள முரணை தீர்ப்பதற்கு முளைத்ததே கம்யூனிசம். இதைப் புரிந்தால்தான் இங்கே நாம் பேசுகிற அரசு பற்றிய கருத்தில் தெளிவு பெற முடியும். லெனின் கூறியதை அப்படியே பார்ப்போம். ஏன் இது போன்ற கருத்துக்களை மேற்கோளாய் காண்கிறோம் என்றால், நாம் அதில் எந்தக் கருத்தையும் திணிக்க வில்லை என்பதை வாசகர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. நேரடியாக வாசகர்களே இங்கே படித்துவிட்டு அதன் மூலத்தை முழுமையாகப் படிக்கும் போது சுயமாகக் தெளிவு பெற முடியும். அதனால் இது போன்ற இடங்களில் மேற்கோளிடுவது தவிர்க்க முடியாததாகும்.

 

“கம்யூனிசமானது முதலாளித்துவத்தில் இருந்து தோன்றுவதாகும், வரலாற்று வழியில் முதலாளித்துவத்தில் இருந்து வளர்வதாகும், முதலாளித்துவம் பெற்றெடுத்த ஒரு சமுதாய சக்தியின் செயலால் விளைந்த பலனாகும் என்ற உண்மையை அடிப்படையாய்க் கொண்டுதான் இப்பிரச்சினையைப் பரிசீலிக்க முடியும்.” (329)

       கம்யூனிசம் என்பது ஒரு தொடர்ச்சியான ஒரு நிகழ்ச்சியே என்பதைப் புரிந்தால் தான் மார்க்ஸ் கூறுவதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

       அரசுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவு பற்றிய பிரச்சினையில் கோத்தா வேலைத்திட்டம் செய்திடும் குளறுபடியை மார்க்ஸ் விமர்சனம் மூலம் நீக்குகிறார்.

       பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவ சமூகம் ஏற்பட்டுள்ளது, அதனால் “இன்றைய சமூகம்” என்று கூறலாம். ஆனால் முதலாளித்துவமானது ஸ்விட்சர்லாந்தில் இருப்பதில் இருந்து பிரஷ்ய-ஜெர்மன் பெரிய அளவில் மாறுபட்டு இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதில் இருந்து இங்கிலாந்தில் மாறுபட்டதாய் உள்ளது. இதனால் இதை “இன்றைய அரசு” என்று சொல்வது கற்பனையாகத் தெரியும்.

       ஆனால் இந்த நாடுகளில் உள்ள அரசின் வடிவம் மாறியிருந்தாலும் இவை அனைத்தும் முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையாய் அமைந்த அரசே ஆகும். இதனடிப்படையில் “இன்றைய அரசு” என்று கூறுவது தவறானது கிடையாது.

       இதனடிப்படையில் கம்யூனிச சமூகத்தில் உள்ள அரசில் ஏற்படப் போகும் மாறுதல் என்ன? இதை வேறுவகையிலும் கேட்கலாம், தற்போதுள்ள அரசின் பணிக்கு ஒப்பான எந்தச் சமூகப் பணிகள் அப்பொழுத மீதமிருக்கும்?

       இந்தக் கேள்விக்கு விஞ்ஞான வழியில் மட்டுமே பதிலளிக்க முடியும் என்கிறார் மார்க்ஸ். “மக்கள்” என்னும் சொல்லை “அரசு” என்னும் சொல்லோடு ஆயிரம் வழியில் இணைப்பதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக ஒரடிகூட வைக்கவில்லை என்கிறார்.

 “மக்கள்” - “புரட்சிகர” என்கிற சொற்களை இணைப்பதினால் எந்த மாறுபட்ட கருத்தையும் கூறியதாகாது. நிலைமையையே சொல் விளக்குகிறது சொல்லை மாற்றுவதினால் நிலைமை மாறிவிடப் போவதில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

       கோத்தா வேலைத்திட்டத்தில் மார்க்ஸ் “மக்கள் அரசு” என்ற அனைத்துப் பேச்சுகளையும் எள்ளி நகையாடுகிறார். வளர்ச்சிக் கோட்பாட்டினாலும் விஞ்ஞானத்தினாலும் மிகவும் துல்லியமாய் நிலைநாட்டப்பட்டு இருக்கும் உண்மை என்னவென்றால், முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்வதைக் குறிக்கும் வரலாறு வழிப்பட்ட, ஒர் இடைக்கட்டம் நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதையே மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தில் கூறியுள்ளார். இந்த உண்மை கற்பனாவாதிகளால் புறக்கணிக்கப்பட்டதும், மற்றும் சோசலிசப் புரட்சிக்கு அஞ்சும் இன்றைய சந்தர்ப்பவாதிகளால் புறக்கணிக்கப்பட்டதும் ஆகும்.

       முதலாளித்துவ சமூகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகம் வளர வேண்டும் என்றால் இதற்கு இடைக் கட்டம் அதாவது மாறும் கட்டம் ஒன்று இருந்தாக வேண்டும். இதையே மார்க்ஸ் பேசுகிறார். எங்கெல்ஸ் மக்கட்சமூகம் என்று கம்யூனுக்கு இணையான ஜெர்மன் சொல்லை பயன்படுத்த நினைப்பதையும் மார்க்ஸ் கூறியதையும் இணைதுக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

       ஐந்தாவது அத்தியாயத்தின், இரண்டாவது பிரிவு, முதலாளித்துவத்தில் இருந்து கம்யுனிசத்துக்கு மாறிச் செல்லுதல்.

       இந்தப் பிரிவில் அந்த இடைக்கட்டத்தைப் பற்றிதான் பேசப்படுகிறது.

       கோத்தா வேலைத்திட்டத்தில் இருந்து ஒரு மேற்கோளை லெனின் தந்துள்ளார். அதில் தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி முதன்முறையாக மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுமிகவும் முக்கியமான கருத்தாகும், அதிகப் புகழ் பெற்ற மேற்கோளாகும். அதை நாம் அப்படியே பார்ப்போம்.

 

"....முதலாளித்துவ சமூகத்துக்கும் கம்யூனிச சமூகத்துக்கும் இடையில் ஒன்று மற்றொன்றாய்ப் புரட்சிகர மாற்றமடையும் கட்டம் உள்ளது. இதற்கு இணையாய் அரசியல் இடைக்கால கட்டமும் ஒன்று உள்ளது. இந்த இடைக்காலத்தில் அரசு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரமாகவே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது..."

 இதுவரை தொழிலாளர்களின் அரசைப் பற்றி பொதுவாகப் பேசப்பட்டதை இங்கே மார்க்ஸ் குறிப்பாக இடைக் கட்டம் என்று தெளிவாக பேசியுள்ளார்.

 இதுவரை, பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, அரசியல் அதிகாரத்தை வெற்றி கொண்டு தனது புரட்சிகரச் சர்வாதிகாரத்தை நிறுவும் என்று கூறப்பட்டது. ஆனால் கோத்தா வேலைத்திட்டத்தில். இந்த அரசு முதலாளித்துவ சமூகத்துக்கும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கும் இடையே உள்ள இடைக் கட்டத்துக்கு உரியதாக, இந்த பாட்டாளி வர்க்க வர்வாதிகார அரசு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு வளர்ச்சிக் கட்டத்தில் உலர்ந்து உதிரும் என்றும் தெளிவான விஞ்ஞான விளக்கம் மார்க்சால் கொடுக்கப்பட்டுள்ளது.

       சர்வாதிகாரம் ஜனநாயகத்திடம் கொண்டுள்ள உறவு என்ன? என்ற கேள்வியை லெனின் எழுப்பி பதிலும் தருகிறார்.

       “பாட்டாளி வர்க்கத்தை சர்வாதிகாரம் ஜனநாயகத்திடம் கொண்டுள்ள உறவு என்ன”, “ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது” இவ்வாறு கூறுவதோடு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நின்றுவிடுகிறது. முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசில் ஓரளவுக்கு முழுமையான ஜனநாயகம் இருப்பதாகக் கூறலாம். ஆனால் இந்த ஜனநாயகம் எப்போதும் முதலாளித்துவ ஆதிக்கவாதிகளால் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டிருக்கும். உண்மையான நடைமுறையில், சிறுபான்மையோருக்கான ஜனநாயகமாகத்தான் அது இருக்கும். அதாவது சிறுபான்மையோராக இருக்கிற செல்வந்தகர்களுக்கு மட்டுமேயான ஜனநாயகம். இதுதான் முதலாளித்துச் சமூகத்தில் நிலவும் ஜனநாயகம்.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில்தான், முதலாளி வர்க்கத்தாரின் எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிய சிந்தனைகள் மறைந்து போய், வர்க்கம் இல்லாத சமூகமாய் மாறியிருக்கும். ஜனநாயகம் முழுமை பெற்று இருக்கும். அப்போது ஜனநாயகம் உலர்ந்து உதிர்ந்துவிடும்.  அந்நிலையில் அரசு தேவையற்றுப் போய் மறைந்துவிடும். அந்த நேரத்தில் சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாக இருக்கும். அரசு உலர்ந்து உதிரும் என்ற சொல்லை மிகவும் நன்கு தேர்வு செய்துள்ளனர். அரசு படிப்படியாய் மறைவதை இந்த சொல் சிறப்பாக விளக்குகிறது.

       அந்த வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் பலவந்தம் இல்லாமல், பலாத்கார கருவிகள் இல்லாமல், பலவந்தப் படுத்தும் அரசு இல்லாமல் மக்களே சமூக விதிகளை பின்பற்றப் பழகிக் கொள்வார்கள்.

 இதை இன்றைய நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியாது. அந்த வளர்ச்சி அடைந்த கட்டத்தில் இருந்து பார்க்க வேண்டும். இன்றைய மனநிலையை வைத்துக் கொண்டு அன்றைய நிலைமையினை புரிந்து கொள்ள முடியாது.

       முதலாளித்துச் சமூகத்தில் இருந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு செல்வதற்கு இடையே ஒரு கட்டம் இருக்கிறது. அந்தக் கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு இருக்கும். கம்யூனிச சமூகத்தின் தொடக்கக் கட்டத்தில் ஒரு தனிவகைப் பொறியமைவான அரசு இன்னமும் தேவைப்படுகிறது. இது வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு மாறிச் செல்லும் கட்டத்துக்கு உரியதாக இருக்கிறது.

 அரசு என்ற சொல்லின் பழைய பொருளில் இனி அது அரசாய் இருக்காது. ஏன் என்றால் இதற்கு முந்திய அரசு சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை அடக்குவதாக இருந்தது. பாட்டாளிகளான பெரும்பான்மையினர், பழைய சிந்தனையில் உள்ள சிறுபான்மையினரின் செயலை தடுப்பதற்கு உரிய அரசாக இருக்கிறது.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் தான் அரசு அறவே தேவையற்ற சூழ்நிலை இருக்கும். வர்க்கத்தின் சார்பாக அடக்க வேண்டியவர்கள் அச் சமூகத்தில் எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் தனி நபர்கள் அடாச்செயல்களை செய்யக்கூடும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த அடாச்செயலை தடுப்பதற்கு ஒரு தனி பொறியமைவு தேவையில்லை. ஆயுதம் ஏந்திய மக்கள் தாமே இதனைச் செய்துவிடுவார்கள்.

 வர்க்க சமூகத்தில் காணப்பட்ட அடாச்செயல்கள் அன்றைய சமூகத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இது போன்ற அடாச்செயல்களும் வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் உலர்ந்து உதிரும். இவ்வாறு இது உதிரும் போது அரசும் உலர்ந்து உதிரும்.

       முதலாளித்துவ சமூகத்தில் இருந்து கம்யூனிச சமூகத்துக்கு மாறுவது குறித்து பொதுவானதையே லெனின் இந்தப் பிரிவில் பேசினார். அடுத்தப் பிரிவுகளில் கம்யூனிச சமூகத்தின் முதற் கட்டதையும் உயர் கட்டதையும் லெனின் விளக்குகிறார்.

       ஐந்தாவது அத்தியாயத்தின், மூன்றாவது பிரிவு, கம்யூனிச சமூகத்தின் முதல் கட்டம்

       நம் நாட்டில் உழைப்பை மட்டும் தனித்து அளவுக்குமீறி தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பர்கள் இருக்கிறார்கள். அனைத்தும் உழைப்பால் வந்து, அதனால் அனைத்தும் உழைப்பாளிக்கே உரியது என்பது போன்ற பேச்சுகளை நம் நாட்டில் அதிகம் கேட்க முடிகிறது.

       சோஷலிச் சமூகத்தில் உழைப்பாளிக்கு, அவன் உழைப்பின் முழுமையான பயன் கிடைக்கும் என்று லஸ்ஸால் கூறியதை, மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் விமர்சித்துள்ளார். உழைப்பாயின் உழைப்புக்கு உரிய அனைத்தையும் கொடுத்திட முடியாது. இயந்திரத்தின் தேய்மானத்துக்கு மாற்றீடு செய்வதற்கு ஒதுக்க வேண்டும், காப்பு நிதி போன்ற நிதிக்கு ஒதுக்க வேண்டும்.  பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் போன்ற பலவற்றுக்கு வேண்டிய நிதியை கழித்தப் பிறகே உழைப்பாளிக் கொடுக்கப்படும்

       கம்யூனிச சமூகத்தின் தொடக்கக் கட்டம் வளர்ச்சி அடைந்த கட்டதைப் போல இருக்காது. முதலாளித்துவச் சமூகத்தில் இருந்து தோன்றியதுதான் முதற்கட்டம். ஆகவே இதில் அந்தப் பழைய சமூகத்திடம் இருந்து பெறப்பட்ட பிறவிக்குறிகள் ஒவ்வொரு வழியிலும் பதிந்திருக்கும். அதாவது முதலாளித்துவ குறைபாடுகள் குறைந்தளவாக தொடரவே செய்யும். அதனால் இந்த தொடக்கக் கட்டம் வளர்ச்சி அடைந்த கட்டத்தைப் போல் இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

       முதலாளித்துவத்தை வீழ்த்தி கம்யூனிசத்தை அடைவது இரண்டு கட்டங்களா செயல்படும் என்று மார்க்ஸ் கோத்தா வேலைத்திட்டத்தை விமர்சிக்கும் போது கூறியுள்ளார்.

       முதலாளித்துச் சமூகத்தை வீழ்த்திய உடன் ஏற்படுவது கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்றும் அடுத்துவருவது உயர் கட்டம் என்றும் மார்க்ஸ் கூறியுள்ளார். மார்க்ஸ் முதல் கட்டம் என்று கூறியது லெனின் காலத்தில் சோஷலிசம் என்றும் உயர் கட்டத்தை கம்யூனிசம் என்றும் அழைக்கப்பட்டது.

       உற்பத்திச் சாதனங்களை சமூகம் அனைத்துக்கும் உரிய பொதுவுடைமையாய் மாற்றிவிட்டால் மட்டும் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளும் முதலாளித்துவ உரிமையின் சமத்துவமின்மையும் அகற்றப்பட்டுவிடுவதில்லை. செலுத்தப்படும் உழைப்புக்கு ஏற்ப உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும்வரை இவை தொடர்ந்து நிலவும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறர் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் குறைபாடுகள் தொடக்க நிலையில் முற்ற நீக்கப்பட முடியாது. இதைப் பற்றி மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம்.

 

 "...இந்தக் குறைபாடுகள் கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டத்தில் தவிர்க்கமுடியாதவை, ஏனெனில் இச்சமுதாயம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து வெளிவந்திருக்கிறது. உரிமையானது ஒருபோதும் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையும் இதனால் நெறிப்படுத்தப்பட்ட அதன் கலாசார வளர்ச்சி நிலையையும் காட்டிலும் உயர்வானதாகிவிட முடியாது..."

  இந்த முதற்கட்டத்தில் முதலாளித்துவ கூறுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிடுவதில்லை. பகுதி அளவுக்கு மட்டும்தான் மாறியிருக்கும். இதுவரை அடைந்த பொருளாதாரப் புரட்சியின் விகிதத்தில் மட்டுமே, அதாவது உற்பத்திச் சாதனங்கள் பொறுத்த மட்டில் ஒழிக்கப்பட்டிருக்கும். உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை ஒழித்து பொதுவுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது. அந்தளவுக்கு மட்டுமே முதலாளித்துவ உரிமைகள் ஒழிக்கப்பட்டிருக்கும். இது ஒரு தொடக்க நடவடிக்கை மட்டுமே ஆகும்.

       மீதமுள்ள முதலாளித்துவக் கூறுகளை களைவதற்க ஒரு அரசு வேண்டும். அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டதாக இருக்கும். மீதமுள்ள முதலாளித்துவ கூறுகள் களைந்த பிறகு உயர் நிலையான கம்யூனிச சமூகம் தோன்றும். அங்கே அரசு அறவே தேவையில்லாது உலர்ந்து உதிரும். இதைப் பற்றி அடுத்தப் பிரிவில் பார்க்கலாம்.

       ஐந்தாவது அத்தியாயத்தின், நான்காவது பிரிவு, கம்யூனிச சமூகத்தின் உயர் கட்டம்

       மார்க்ஸ் எழுதிய கோத்தா வேலைத்திட்டத்தின் விமர்சனத்தில் இருந்து ஒரு நீண்ட மேற்கோள் லெனின் கொடுத்துள்ளார். அது சுமார் 15 வரிகள் இருக்கிறது. அனைத்தும் ஒரே சொற்றொடராக இருக்கிறது. அதாவது அனைத்தும் ஒரே வாக்கியமாக முற்றுப் புள்ளி இல்லாமல் கமா போட்டு தொடர்கிறது. அதனால் நாம் அந்த மேற்கோளை அப்படியே பார்க்காமல், சொற்றொடர்களாகப் பிரித்துப் பார்ப்போம்.

 கம்யூனிச சமுதாயத்தின் உயர் கட்டத்தில், மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைகிறது. அதற்குப்பின் உழைப்பானது பிழைப்புக்கான சாதனமாய் மட்டுமின்றி வாழ்வின் முதற்பெரும் தேவையுமாகிறது. அதன்பின் தனிநபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடுகூட உற்பத்தி சக்திகளும் அதிகரிக்கிறது. பொதுச் சமுதாயச் செல்வத்தின் அருவிகள் எல்லாம் மேலும் அதிகமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில்தான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்படும். சமுதாயம் தன் பதாகைகளில் "ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்ப!" என்று பொறிக்கப்படும்.

       இந்த மார்க்சின் மேற்கோளைத் தொடந்து லெனின் விளக்குவதைப் பார்ப்போம். அரசு இருக்கும்வரை சுதந்திரம் இல்லை, சுதந்திரம் வந்ததும் அரசு இல்லாமல் போய்விடும். கம்யூனிச சமூகத்தின் மிக உயர்ந்த வளர்ச்சி அடைந்த கட்டத்தில்தான் அரசு முழுமையாய் உலர்ந்து உதிர்வதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டத்தில் மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள எதிர்நிலை மறையும். முதலாளித்துவத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசு தோன்றிய உடன் இந்த நிலையை அடைந்திட முடியாது. அதாவது உற்பத்திச் சாதனங்களை பொதுவுடைமையைக்கப்பட்டுவிட்டால் மட்டும் இத்தகைய வளர்ச்சியை எட்ட முடியாது. அதற்கு இடையே ஒரு கட்டம் இருக்கிறது.

       வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகம் பற்றிய மார்க்சியக் கூற்றை, விஞ்ஞானத் தன்மை உடையதாக இருந்தாலும், முதலாளித்துவ கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பவர்கள் இது வெறும் ஆகாயக் கோட்டை என்றும் எதார்த்ததுக்கு அப்பாற்பட்ட கனவு நிலையே என்றும் கூறுவர். மார்க்சியம் கூறுகிற முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. மார்க்சியம் விஞ்ஞானத் தன்மையுடையதே இருந்தாலும் இதில் வர்க்க சார்பு இருக்கிறது. மார்க்சிய விஞ்ஞானம் பாட்டாளி வர்க்க சார்பான விஞ்ஞானம்.

       மார்க்சியத்தின் விஞ்ஞானத் தன்மையை பாட்டாளி வர்க்க நலன்மட்டுமே ஏற்கிறது.

       கம்யூனிசத்தின் முதற் கட்டமான சோஷலிசத்தில் கணப்படும் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு என்பது, அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாக இருக்காது. இந்தக் கட்டத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு ஜனநாயகம் உடையதாக இருக்கிறதோ அந்தளவுக்கு அரசின் ஒவ்வொரு வடிவமும் வேகமாய் உலர்ந்து உதிரத் தொடங்கும்.

       சமூக வாழ்க்கையின் சாதாரண அடிப்படை விதிகளை பின்பற்றுவதற்கு, உயர் கட்டமான கம்யூனிச சமூகத்தில் பழக்கமாகிவிடும்.

       இனி கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டத்திலிருந்து அதன் உயர்நிலைக்கு மாறுவதற்கும், அதனுடன் அரசு முற்றிலும் உலர்ந்து உதிர்வதற்கு கதவு திறக்கப்படும் என்று கூறி லெனின் இந்தப் பிரிவை முடிக்கிறார்.

 ஆறாவது அத்தியாயம்

சந்தர்ப்பவாதிகள் மார்க்சியத்தைக் கொச்சையாக்குதல்.

       சமூகப் புரட்சிக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பு பற்றிய விஷயத்தில் இரண்டாம் அகிலத்தின் முன்னணிக் கோட்பாட்டாளர்களும் நூலாசிரியர்களும் மிக்கக் குறைந்த கவனத்தையே செலுத்தினர். அதனால் சந்தர்ப்பவாதம் படிப்படியாய் வளர்ந்தது, 1914ஆம் ஆண்டில் இரண்டாவது அகிலம் தகர்ந்து விழுவதற்கு சந்தர்ப்ப வாதமே காரணமாகும்.

 அரசுடன் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு பற்றிய  பிரச்சினையைத் தட்டிக் கழித்தன் விளைவாய் மார்க்சியம் திரிக்கப்பட்டது புரட்டப்பட்டது, கொச்சைய்க்கப்பட்டது.

       இந்த அவல நிகழ்ச்சிப் போக்கை சுருக்கமாக குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டு, மார்க்சியத்தின் மிகப் புகழ் பெற்ற கோட்பாட்டாளர்களான பிளெகானவ்வையும் காவுத்ஸ்கியையும் எடுத்துக் கொள்வோம் என்கிறார் லெனின்.

 ஆறாவது அத்தியாயத்தின் முதல் பிரிவு, அராஜகவாதிகளுடன் பிளெகானவின் வாக்குவாதம்.

       சோஷலிசத்தின் மீதான அராஜகவாதத்துக்குள்ள போக்கு குறித்து பிளெகானவ் “அராஜகவாதமும் சோஷலிசமும்” என்ற தலைப்பில் ஒரு தனி நூலை எழுதினார். இதில் பிளெகானவ் அராஜகவாத்தை எதிர்க்கும் போது அரசின்பால் புரட்சிக்கு உள்ள போக்கையும் குறிப்பாக அரசு பற்றிய பிரச்சினையையும் அறவே தட்டிக் கழித்ததில் வெற்றிக் கண்டார்!!.

       ருஷ்யாவில் புரட்சி தொடங்கும் தறுவாயிலும் புரட்சிக் காலத்தின் போதும் பிளெகானவ் செயற்பாடுகள் பகுதி அளவு வறட்டுச் சூத்திரவாதியாகவும் பகுதி அளவு குட்டி முதலாளித்துவ அற்பவாதியாகவும் இருந்து, அவரது அரசியல் முதலாளித்துவ வர்க்கத்துக்கு வால் பிடிக்கும்படியாக இருந்தது.

       “அராஜகவாதமும் சோஷலிசமும்” என்பது பற்றி பேசப்புகுந்த பிளெகானவ், அதே நேரத்தில் அரசு பற்றிய பிரச்சினையைத் தட்டிக் கழித்து, கம்யூனுக்கு முன்னதாகவும் அதற்குப் பிற்பாடும் மார்க்சியித்தின் வளர்ச்சி போக்கு அனைத்தையும் அவர் கவனிக்காதுவிட்டது தவிர்க்க முடியாத வகையில் சந்தர்ப்பவாதத்தினுள் சரிந்து சென்றது என்கிறார் லெனின்.

 ஆறாவது அத்தியாயத்தின் இரண்டாம் பிரிவு, சத்ர்ப்பவாதிகளுடன் காவுத்ஸ்கியின் வாக்குவாதம்.

       சந்தர்ப்பவாததை எதிர்த்துக் காவுஸ்கி முதலில் எழுதிய நூல் “பெர்ன்ஷ்டைனும் சமூக-ஜனநாக வேலைத்திட்டமும்.”

       1872ஆம் ஆண்டு மார்க்ஸ் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையில் “தொழிலாளி வர்க்கம் ஏற்கெனவே தயாராயிருக்கும் அரசுப் பொறியமைவை அப்படியே கைப்பற்றிக் கொண்டு அதனை தனது சொந்த செயல்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது” என்று எழுதினார். மார்க்ஸ் கூறிய இந்தக் கருத்தில் பெர்ன்ஷ்டைன் அதிகம் கவனம் செலுத்தனார். ஆனால் படுமோசமாய்த் திரித்துப் புரட்டிச் சந்தர்ப்பவாத வழியில் இதற்கு விளக்கம் கொடுத்தார்.

       பழைய அரசு பொறியமைவை நொறுக்க வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறியதை, பெர்ன்ஷ்டைன் தனது கருத்துக்கு ஏற்ப திரிக்கிறார். அதிகாரத்தைக் கைப்பற்றுகையில் மட்டுமீறி புரட்சி ஆர்வம் கொண்டுவிடுவதை எதிர்த்து இச் சொற்கள் மூலம் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கத்தை எச்சரிக்கை செய்தார் என்று அவர் திரித்துரைத்தார்.

       மார்க்சின் கருத்தை இதைக் காட்டிலும் படுமோசமாக திரித்துப் புரட்ட முடியாது. ஆகவே பெர்ன்ஷ்டைனியத்துக்கு மிகவும் விவரமாய் மறுப்புரை கூறும் நூலில் காவுத்ஸ்கி இது குறித்து என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பி பதிலளிக்கிறார் லெனின்.

       இந்த விவகாரம் குறித்து சந்தர்ப்பவாதமானது மார்க்சியத்தை அப்பட்டமாய்த் திரித்துப் புரட்டுவதை பெர்ன்ஷ்டைன் பகுத்தாராயமல் ஒதுங்கிவிட்டார். மேலும் மார்க்ஸ் கூறியதை திரித்துரைத்தது பற்றி காவுத்ஸ்கி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

       இதன் மூலம், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பணிகள் குறித்து மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் உள்ள மிகவும் அடிப்படையான வேறுபாடு காவுத்ஸ்கினால் மழுங்கடிக்கப்பட்டது. பெர்ன்ஷ்டைன் கருத்துக்கு காவுத்ஸ்கியின் மறுப்புரையாக இல்லாது சராம்சத்தில் அவருக்கு விட்டுக் கொடுப்பதாகவே இருந்தது. இது சர்ந்தர்ப்வாதத்துக்குச் சரணடைவதே ஆகும் என்கிறார் லெனின். பாரிஸ் கம்யூன் தொழிலாளர்களுக்குப் புதியதாய் போதித்தைப் பற்றி காவுத்ஸ்கி ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை.

       முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் உள்ள வேறுபாட்டை காவுத்ஸ்கியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

       புரட்சிகளின் சகாப்தம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்று வெளிப்படையாக காவுத்ஸ்கி அறிவித்தப் பின்னும், “அரசியல் புரட்சி” குறித்து ஆராய்வதற்கென எழுதப்பட்டதாய் அவரே கூறிக் கொண்ட இந்த நூலில் திரும்பவும் அரசு பற்றிய பிரச்சினையை அணுகாது தட்டிக்கழிப்பதானது தவிர்க்க முடியாமல் முழு அளவுக்கு சந்தர்ப்பவாதத்திடம் ஓடி விடுதில் முடிந்தது என்று லெனின் கூறுகிறார்.

 ஆறாவது அத்தியாயத்தின் மூன்றாம் பிரிவு, பெனெக்குடன் காவுத்ஸ்கியின் வாக்குவாதம்.

       பெனெக் என்பவர், டச்சு நாட்டு சமூக-ஜனநாயகவாதி, அதாவது கம்யூனிஸ்ட். ஏகாதிபத்திய உலக போரின் போது சந்தர்ப்பவாதி ஆனார். ஆதீத-இடதுசாரி, குறுங்குழுவாத நிலையில் நின்றார்.

       பெனெக் தமது கருத்துக்களை வகுத்தளிக்கும் வடிவத்தில் பெரிய குறைகள் இருக்கிறது. இதற்கு காவுத்ஸ்கி எப்படி மறுப்பு உரைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.

       காவுத்ஸ்கி பெனெக்குக்கு பதிலளிக்கும் போது, கோட்பாடு குறித்த அடிப்படையான விவகாரத்தில் அவர் மார்க்சிய நிலையில் அறவே துறந்துவிட்டு முற்றிலும் சந்தர்ப்பவாதத்திடம் ஓடிவிடுகிறார். கம்யூனிஸ்டுகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டுக்கு காவுத்ஸ்கி அளிக்கும் இலக்கணம் முழுக்க முழுக்க தவறானது, மார்க்சியத்தை அவர் கொச்சைப்படுத்தித் திரித்துப் புரட்டுகிறார் என்று லெனின் கூறுகிறார்.

 மார்க்சியவாதிகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்று லெனின் தொகுத்தளிக்கிறார். அதை அப்படியே பார்ப்போம்.

 

“(1) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்) அரசை அடியோடு ஒழிப்பதை நோக்கமாய்க் கொண்டுள்ள அதேபோது சோஷலிசப் புரட்சியால் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பிறகுதான், சோஷலிசம் நிலைநாட்டப்படுவதன் விளைவாய் மட்டுமே, இந்த நோக்கம் நிறைவேற முடியும். அரசு உலர்ந்து உதிர சோஷலிசம் வழி வகுக்கிறது என்பதை அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் (அராஜகவாதிகள்) அரசை ஒழிப்பதற்குரிய நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமலே எடுத்தயெடுப்பிலே அரசை அடியோடு ஒழிக்க விரும்புகிறார்கள்.

 

(2) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்), பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வென்று கொண்டதும் அது பழைய அரசுப் பொறியமைவை அடியோடு அழித்துவிட வேண்டுமென்பதையும், அதனிடத்தில் கம்யூன் வகைப்பட்ட ஆயுதமேந்திய தொழிலாளர்களது ஒழுங்கமைப்பாலான புதிய ஒன்றை நிறுவிக் கொள்வது அவசியமென்பதையும் அங்கீகரிக்கிறார்கள். பின்னவர்கள் (அராஜகவாதிகள்) அரசுப் பொறியமைவு அழிக்கப்பட வேண்டுமென்று வற்புறுத்துகையில் அதனிடத்தில் பாட்டாளி வர்க்கம் நிறுவப் போவது என்ன, பாட்டாளி வர்க்கம் எப்படி தனது புரட்சிகர அதிகாரத்தைப் பிரயோகிக்கப் போகிறது என்பது குறித்துத் தெளிவுடையோராயில்லை. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதைக் கூட அராஜகவாதிகள் மறுக்கிறார்கள்; அதன் புரட்சிகரச் சர்வாதிகாரத்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.

 

(3) முன்னவர்கள் (மார்க்சியவாதிகள்), தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்” ()

லெனின் இங்கே மார்க்சியத்துக்கும் அராஜகவாதத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவாகக் கூறியுள்ளார். இதற்கு மேல் விளக்கம் தேவைப்படாது.

       சந்தர்ப்பவாதிகள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அறவே புறக்கணிக்கின்றனர். இவர்களின் பார்வையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஜனநாயகம் என்பதில் உள்ள அரசியல் பார்வையில்லாது தூய ஜனநாயகம் பேசுகின்றனர். இவர்களுக்கும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கும் உண்மையில் வேறுபாடுகிடையாது. முன்பே நாம் பார்த்தது போல, வர்க்கப் போராட்டம் என்பதின் வெற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில்தான் அடங்கியிருக்கிறது. இதனைக் கடந்து வளர்ந்து வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்துக்கு செல்ல வேண்டும். அங்கே அரசு தேவையற்று உலர்ந்து உதிர்ந்துவிடும். இதை லெனின் இந்த “அரசும் புரட்சியும்” என்ற நூலில் பல வழிகளில் நமக்குப் புரியவைத்துள்ளார்.

      தற்போது நமது நாட்டிலும் தூய ஜனநாயக் கோரிக்கை அதிகம் காணப்படுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு என்று தூய ஜனநாயகவாதிகள் கூறுகின்றனர். அரசு என்பதே ஒரு வர்க்க சார்பானதுதான். முதலாளித்துவ அரசு என்றால் அது முதலாளித்துவ சர்வாதிகாரம்தான். பாட்டாளி வர்க்கம் என்றால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான். அடிப்படைப் புரிதலற்ற இத்தகைய சந்தர்ப்பவாதத்தை முறியடித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்.

      சந்தர்ப்பவாதத்துக்கு எதிராக லெனின் கூறிய கருத்தோடு தொடர் வகுப்பை முடித்துக் கொள்வோம்.

 

"நாங்கள் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து முறித்துக் கொள்வோம். வர்க்க உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் அனைத்தும் எங்களுடன் சேர்ந்த போராட்டத்தில் -"சக்திகளின் சமநிலையை மாற்றுவதற்கு" அல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்துவதற்காக, முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை அழிப்பதற்காக, கம்யூனை முன்மாதிரியாகக் கொண்ட ஜனநாயகக் குடியரசு அல்லது தொழிலாளர்கள், படையாட்களது பிரதிநிதிகளின் சோவியத்துகளுடைய குடியரசுக்காக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரச் சர்வாதிகாரத்துக்காகப் போராடும்."

       லெனின் கூறிய வழியில் நம் நாட்டு கம்யூனிஸ்டுகளும் சந்தர்ப்பவாததுடன் போராடி, முதலாளித்துவத்தை வெற்றி கொண்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை அமைப்போம்.

       ஏழாவது அத்தியாயத்தை லெனின் எழுதி முடிக்கவில்லை. அதன் தலைப்பு “1905,1917ஆம் ஆண்டுகளின் ருஷ்யப் புரட்சிகளின் அனுபவம்.”

       இந்த தலைப்பை எழுதியதற்குப் பிறகு லெனினது புரட்சிகர நடவடிக்கையினால் முடிக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு பதிலாய் லெனின் கூறியதைப் பார்ப்போம்

 

““புரட்சியின் அனுபவத்தை” எழுதுவதைக் காட்டிலும்நேரில் வாழ்ந்து காண்பது இனிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது”

       ஆம் எழுத்தைக் காட்டிலும் வாழ்ந்து அனுபவிப்பது இனிமையானதுதான், நாமும் மார்க்சிய வழியில் போராடுவோம், வெற்றி பெறுவோம். வாழ்ந்து காட்டு காட்டுவோம், என்று கூறி இன்றைய வகுப்பையும் தொடர் வகுப்பையும் முடித்துக் கொள்கிறேன்.

 

No comments:

Post a Comment