Sunday 11 June 2023

02) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (இரண்டாம் பகுதி)

 (“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 87- வது வார வகுப்பு – 12-06-2023  )


             சென்ற வகுப்பில் லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” நூலின் முதல் அத்தியாயமும் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பிரிவையும் பார்த்தோம்.

       இந்த இரண்டாவது அத்தியாயத்தில் 1848-1851 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சியின் அனுபவங்களை லெனின் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

 இரண்டாம் அதியாயத்தின் இரண்டாம் பிரிவு, புரட்சியில் இருந்து பெறப்பட்ட முடிகளின் தொகுப்பு.

 மார்க்ஸ் 1848-1851 நடைபெற்ற புரட்சிகளில் இருந்து அரசு பற்றிய முடிவுகளை “லுயீ போனபார்ட்டின் பதினெட்டாம் பூரூமேர் என்ற நூலில் கூறியதை லெனின் மேற்கோளாகக் காட்டுகிறார். அதில் காணப்படுவதைப் பார்ப்போம்.

       புரட்சி முற்றிலும் முறைபடி அனைத்தையும் செய்கிறது. கழித்து ஒழிக்கப்பட வேண்டியதை எரித்துச் சாம்பலாக்கியது, முதலில் அது நாடாளுமன்ற ஆட்சி முறையை வீழ்த்தியது. இறுதியில் நாடாளுமன்றக் குடியரசானது புரட்சிக்கு எதிரான தனது போராட்டத்தில், அடகுமுறை நடவடிக்கைகளுடன் கூடவே அரசாங்க அதிகாரத்தின் சாதனங்களை வலுப்படுத்த வேண்டியதாகியது. இதுவரை கண்ட புரட்சிகள் அனைத்தும் அரசு என்கிற பொறியமைவைத் தகர்ப்பதற்கு பதிலாக செம்மையாக்கியே வந்தன. ஒவ்வொரு புரட்சியும் அரசெனும் இந்த பிரம்மாண்டக் கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொள்வதே வெற்றியின் சின்னமாக கருதியது.

       இதுதான் அந்த மேற்கோளில் இருக்கும் சாரம். “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” அரசு பற்றி முன்வைத்தக் கருத்துக்களைவிட லுயீ போனபார்ட் நூலில் கூறிய கருத்துக்கள் மேம்பட்டதாக இருந்தது. அறிக்கையில் மிகப் பெருமளவுக்கு கருத்தியலான முறையில்தான் அரசு பற்றி பேசியிருந்தது. லுயீ போனபார்ட் நூலில் அரசு பற்றிய கருத்துக்கள் துல்லியமான, திட்டவட்டமான, நடைமுறை சார்ந்த கண்கூடான முடிவு காணப்படுகிறது. இதுவரை நடைபெற்ற புரட்சிகள் அரசு எனும் பொறியமைவை செம்மை செய்து வந்தது, ஆனால் இந்த பொறியமைவு தகர்த்து நொறுக்கப்பட்டாக வேண்டும். இந்த முடிவே அரசு பற்றிய மார்க்சியக் கோட்பாடாகும்.

       பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைப்பட்டால் அன்றி முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியாது என்று அறிக்கையில் கூறியபடி பாட்டாளி வர்க்க அரசை அமைக்காமல், அரசை ஒழிக்க முடியாது.

       முடியாட்சி வீழ்ச்சியுடன் முதலாளித்துவத்தின் குடியாட்சி ஏற்படுகிறது. இந்த முதலாளித்துவ அரசில் இரண்டு பெரும் உறுப்புகள் காணப்படுகிறது. ஒன்று அதிகார வர்க்கம், மற்றொன்று நிரந்த படை. முதலாளித்துவ அரசு இந்த இரண்டு உறுப்புகளுடம் ஆயிரமாயிரம் தொடர்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ அரசின் இந்த இணைப்பை தொழிலாளி வர்க்கம் தமக்கு ஏற்பட்ட கொடுமையான சொந்த அனுபவத்தால் அறிந்து கொண்டது.

 அதிகார வர்க்கமும் நிரந்தர படையும் முதலாளித்துவ சமூகத்தின் உடலில் புல்லுருவியாய் அமைந்துள்ளது. இதனை அறிந்து கொள்ளாமல் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது.

       அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாது போனால், முதலாளித்துவ அரசானது, தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்து கடுமையாக நடந்து கொள்வதைப் புரிந்து கொள்ள முடியாது.

       முதலாளித்துவத்தின் அரசுப் பொறியமைவை, பாட்டாளி வர்க்கம் ஒழித்தப் பின்பு அந்த இடத்தில் எப்படிப்பட்ட அரசை அமைக்கப் போகிறது என்பதை பாரிஸ் கம்யூன் அளித்திருக்கும் படிப்பினை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

       இரண்டாம் அத்தியாயத்தின், மூன்றாவது பிரிவு. 1852ல் இப்பிரச்சினையை மார்க்ஸ் எடுத்துரைத்தது.

       வர்க்கப் போராட்டம் நிகழ்வதை முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதனால் இதை முதலாளித்துவ அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர். அப்படி என்றால் வர்க்கப் போராட்டம் பற்றிய பிரச்சினையில் மார்க்சின் பங்களிப்பு என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். மார்க்ஸ் 1852ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதியில் வெய்டமையருக்கு எழுதிய கடிதத்தில் அவரே இதை வெளிப்படுத்தி உள்ளார். அந்தக் கடிதத்தைப் பார்ப்போம்.

 

“… என்னைப் பொருத்தவரையிலும், நவீன சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ அல்லது அவர்களுக்கு இடையே நடைபெறுகின்ற போராட்டத்தையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேர்ந்ததல்ல. எனக்கு வெகு காலத்துக்கு முன்பே முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள், இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுரீதியான வளர்ச்சியையும், முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்ளமைப்பையும் வர்ணித்திருக்கிறார்கள்.

நான் புதியதாக என்ன செய்தேன் என்றால், அது கீழ்க் கண்டவற்றை விளக்கியது தான்:

1) வர்க்கங்கள் இருப்பதென்பது உற்பத்தியினுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாக தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லும்.

3) இந்த சர்வாதிகாரம் என்பது எல்லா வர்க்கங்களையும் ஒழிப்பதற்கும், வர்க்கபேதமற்ற சமூகத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றமாக இருக்கிறது.”

(252-523)

                இந்த கடிதத்தில் காணப்படும் கருத்தை பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

      முதலாவதாக, தமது போட்பாட்டுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய சிந்தனையாளர்களின் கோட்பாட்டுக்கும் அடிப்படையாய் உள்ள வேறுபாட்டை மார்க்ஸ் காட்டியுள்ளார். இரண்டாவதாக, அரசு பற்றிய தமது கோட்பாட்டின் சாரத்தை மார்க்ஸ் இந்தச் சொற்களில் தெள்ளத் தெளிவாகக் எடுத்துரைத்துள்ளார். மேலும் லெனின் கூறுகிறார், இதை அவர் சொற்களிலேயே பார்த்துவிடலாம். இந்த லெனின் சொற்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கிறது.

 

 

“வர்க்கப் போராட்டமே மார்க்சின் கோட்பாட்டிலுள்ள முதன்மையான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டக் கோட்பாடு மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது.

 

பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய கோட்பாடே ஆகும். வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகளாகிவிடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும்.

 

மார்க்சியத்தை, வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுக்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல், இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார்.

 

மார்க்சியவாதிக்கும் சாதாரண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவவாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்கும் உரைகல்லாய் அமைவது இதுவே.” (253 -254)

 வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாக கொண்டு செல்பவரே மார்க்சியவாதிகளாவார் என்று லெனின் மிகமிகத் தெளிவாக கூறியுள்ளார்.

       தவிர்க்க முடியாமல் மார்க்சியப் பக்கம் வந்து, ஆனால் மார்க்சிய முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லைக் கேட்டவுடன் பதறுகிறார்கள். அரசின் தோற்றம் பற்றியும் அதன் வர்க்க சார்பு பற்றியும் தெரிந்தவர்களுக்கு திகைப்பு ஏற்படாது. அனைத்து அரசும் சர்வாதிகாரமே. அதே போல பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குப் பின் அமையும் அரசு என்பது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே ஆகும்.

       சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும், சீர்திருத்தத்துக்கும் மார்க்சியத்துக்கும் இடையே ஊசலாடும் காவுத்ஸ்கிவாதிகளும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை நிராகரிக்கின்றனர். இவர்கள் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாக தம்மை நிரூபித்துக் கொண்டது வியப்பேதுமில்லை.

       “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் இந்தப் பிரிவை இரண்டாம் பதிப்பில்தான் லெனின் சேர்த்தார். அப்படி சேர்த்ததினால் காவுத்ஸ்கி 1918ஆம் ஆண்டு எழுதிய “பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்” நூலை லெனின் இதில் விமர்சித்துள்ளார். மார்க்சியத்தைக் குட்டிமுதலாளித்துவ வழியில் திரித்துப் புரட்டுவதையும், வஞ்சகமாய் அதைச் சொல்லளவில் அங்கீகரித்துவிட்டு செயலில் கைவிட்டு ஓடியதையும் லெனின் கடுமையாக சாடுகிறார். இதைப் பற்றி லெனின் “பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும்” (The Proletarian Revolution and the Renegade Kautsky) என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

       பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்காத சந்தர்ப்பவாதமானது, வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை முதலாளித்துவ உறவுகளின் எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொள்கிறது. அதனால் பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்காதவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை ஒழிப்பதற்கு சக்தியற்றவர்களாகவே இருப்பர்.

 அரசு பற்றி மார்க்சியக் கோட்பாட்டை ஏற்று கடைப்பிடிப்பவர்களே முதலாளித்துவத்தை ஒழித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமைத்து, வர்க்கமற்ற சமூகத்தை நிறுவி அரசை உலர்ந்துவிடச் செய்வார்கள்.

       தனி நபர் சர்வாதிகாரத்தையும் அரசு சர்வாதிகரத்தையும் புரிந்து கொள்ள முடியாது தவிர்ப்பவர்களே பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர். முதலாளித்துவ அரசும் சர்வாதிகரம்தான், பாட்டாளி வர்க்க அரசும் சர்வாதிகாரம்தான், ஆனால் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

       முதலாளித்துவ அரசை ஒழித்தப் பின்பு, இடைக் காலகட்டத்தில் தவிர்க்க முடியாதபடி அரசு ஒரு புதிய வழியில் ஜனநாயகமான அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவில் சொத்தில்லாதவர்களுக்கும் ஜனநாயகமாகவும், ஒரு புதிய வழியில் சர்வாதிகரமாய் அதாவது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதரான சர்வாதிகார அரசாகவும் இருக்கும்.

       முதலாளித்துவ சர்வாதிகார அரசில் சிறுபான்மையான முதலாளிகளுக்கு சார்பாகவும், பெரும்பான்மையான உழைப்பாளர்களுக்கு பாதமானதாகவும் இருக்கும். பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசானது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், உழைக்கும் மக்கள் நலனை எதிர்க்கும் சிறுபான்மையான முதலாளித்துவ சிந்தனை உள்ளவர்களுக்கு எதிராகவும் இருக்கும்.

       இதை சிறிதும் புரிந்து கொள்ள முடியாத அமைதிவாதிகளுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லைக் கேட்டாலேயே பதறுகிறார்கள். இத்தகைய அறியாமையில் இருப்பவர்கள் உழைக்கும் மக்களுக்கு எந்த வகையிலும் உதவிடமாட்டார்கள், உண்மையாக அவர்களின் போக்கு உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கும்.

 அரசு என்பதே சர்வாதிகரம் தான் என்பதை லெனின் கூறுவதை அவர் சொற்களிலேயே பார்ப்போம்.

 

“தனியொரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தேவைப்படுவது பொதுவில் ஒவ்வொரு வர்க்கச் சமுதாயத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திவிட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்தை "வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து'', கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் கட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்வோர் மட்டுமே அரசு பற்றிய மார்க்சின் கோட்பாட்டின் சாரப்பொருளைக் கற்றுத் தேர்ந்தோர் ஆவர்.

 

முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை, ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றேதான்: வடிவம் எப்படியிருப்பினும் இந்த அரசுகள் எல்லாம், முடிவாய்ப் பார்க்குமிடத்து, தவிர்க்க முடியாத முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே ஆகும். முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய இடைக்காலம் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களையும் மிகவும் ஏராளமாய்த் தோன்றவே செய்யும், ஆனால் சாராம்சம் தவிர்க்க முடியாதபடி ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.” (255 - 256)

 

      இதில் லெனின் முதலாளித்துவ அரசாக இருந்தாலும்சரி பாட்டாளி வர்க்க அரசியலாக இருந்தாலும்சரி அது சர்வாதிகாரமே என்று தெளிவாக கூறியுள்ளார். அரசுகள் அந்தந்த நாட்டின் சூழ்நிலைமைக்கு ஏற்ற வடிவம் கொள்ளும் ஆனால் அனைத்தும் சர்வாதிகார அரசே என்று எளிமையாக புரியும் வகையில் கூறியுள்ளார்.

மூன்றாவது அத்தியாயம்

1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம். மார்க்சின் பகுப்பாய்வு.

       மூன்றாம் அதியாயத்தின் முதல் பிரிவு, கம்யூன்போராளிகளின் முயற்சியை வீரமாக்கியது எது?

       மார்க்சியம் புறநிலையின் அடிப்படையிலேயே அனைத்தையும் புரிந்து கொள்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்செயலாக ஏற்படுகிற புரட்சிகர சூழ்நிலைமைகளை மார்க்சியம் புரிந்து கொள்ளாமல் இல்லை. புறநிலையை புறக்கணித்து தற்செயலுக்குக் காத்துக் கொண்டிருப்பவர்களையே மார்க்சியம் எதிர்க்கிறது.

       1871ஆம் ஆண்டு பாரிசில் தொழிலாளர்கள் போராடும் போது மார்க்ஸ் முதலில் மறுத்தார். புரட்சிக்கான புறநிலை இல்லாத போது பாரிசில் தொழிலாளர்கள் புரட்சி செய்ய முனைந்தனர். அப்போது “அரசாங்கத்தை வீழ்த்துவதற்ககான எந்த முயற்சியும் நம்பிக்கை இழந்தோரின் அசட்டுத் துணிச்சலே ஆகும்” என்றார் மார்க்ஸ். ஆனால் 1871ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொழிலாளர்கள் தீர்மானகரமான போரில் இறங்கும்படியான நிர்பந்தம் ஏற்பட்ட போது, எழுச்சி எதார்த்த உண்மையாகிவிட்டது, பாதகமான அறிகுறிகள் தென்பட்ட போதும், பாரிஸ் தொழிலாளர்களின் வர்க்கப் புரட்சியை மார்க்ஸ் வரவேற்றார். “விண்ணைச் சாடியவர்கள்” என்று போராட்டத்தை போற்றினார், கம்யூன் புரட்சியாளர்களை பாராட்டினார்.

       இந்தத் தொழிலாளர்களின் புரட்சியானது தனது குறிக்கோளை எட்டவில்லை, என்றாலும் அது அளவுகடந்த வரலாற்று அனுபவமாக மார்க்ஸ் கருதினார். இந்தப் புரட்சியானது உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் குறிப்பிட்ட முன்னேற்றமாகும். நூற்றுக் கணக்கான வேலைத்திட்டங்கள், வாதங்களையும்விட முக்கியமான ஒரு நடைமுறையாகும்.

       பாரிஸ் கம்யூன் தோல்வி அடைந்தாலும், அந்தப் புரட்சியின் அனுவத்தை மார்க்ஸ் ஆராய்ந்தார். பாரிஸ் அனுபவத்தின் அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடுகளை வளர்த்தெடுத்தார்.

 பாரிஸ் கம்யூன் அனுபவத்தில் இருந்து அரசு பொறியமைவு பற்றிய புதிய முடிவுக்கு மார்க்ஸ் வந்தடைந்தார். 1872ஆம் ஆண்டு ஜீன் மாதம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின்” புதிய ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் அதை வெளிப்படுத்தினார். அதை அப்படியே பார்ப்போம்.

 

“…கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை, அதாவது ‘ஏற்கெனவே உள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டுவிட முடியாது’ என்பதை, நிரூபித்துக் காட்டிற்று….” (257)

  “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற நூலில் எழுதியதை அப்படியே அறிக்கையில் மார்க்ஸ் வெளிப்படுத்தி உள்ளார்.

       வெற்றிப் பெற்ற தொழிலாளர்களின் புரட்சி அரசானது, பழைய முதலாளித்துவ அதிகாரவர்க்கம், இராணுவம் ஆகியவற்றை அழித்தொழிக்க வேண்டியிருந்தது. இந்தப் பணியை பழைய அரசு பொறியமைவு வைத்துக் கொண்டு செய்திட முடியாது. பழைய அரசு நொறுக்கிவிட்டு தமக்கான புதிய அரசை அமைக்க வேண்டும்.

       மூன்றாம் அதியாயத்தின் இரண்டாவது பிரிவு, தகர்க்கப்படும் அரசுப் பொறியமைவுக்குப் பதிலாய் அமையப் போவது எது?

       தொழிலாளர்களால், தகர்த்தப்படும் முதலாளித்துவ அரசுக்கு பதிலாய் எப்படிப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்பது பற்றி “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” கருத்தியலானதாகவே காணப்பட்டது. ஏன் கருத்தியலாக இருக்கிறது என்றால் மார்க்ஸ் இதைப் பற்றி கற்பனையில் கூறிட விரும்பவில்லை. தொழிலாளர்களின் புரட்சிகர அனுபவம் பதிலளிக்கும் என்று மார்க்ஸ் எதிர்ப்பார்த்தார். பாரிஸ் கம்யூன் அனுபவம் கிடைத்தப் பின்னரே, இதைப் பற்றி, “பாரிசில் உள்நாட்டுப் போர்” என்ற நூலில் எழுதினார்.

       நிலையான படைக்குப் பதிலாக ஆயுதமேந்திய மக்கள் படையை அமைப்பது பற்றிய சட்டமே, கம்யூன் அரசு போட்ட முதல் அரசாணை ஆகும். அனைத்து மக்களது வாக்குரிமையின் அடிப்படையில் பாரிஸ் நகரின் பல்வேறு தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கபபட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு, கம்யூன் நிறுவப்பட்டது. இந்த உறுப்பினர்கள் பொறுப்புள்ளவர்களாகவும் எந்நேரத்திலும் நீக்கப்படக் கூடியவர்களுமாய் இருந்தனர்.

 வாக்களிக்கும் மக்களின் பிரதிநிதி தவறாக செயல்பட்டாலோ, மக்களுக்கு விரோதமாக செயல்பட்டாலோ அவர்களை நீக்கும் அதிகாரம் வாக்களிப்பவர்களுக்கு இருந்தது.

      இதுவரை அரசாங்கத்தின் கைக்கருவியாய் இருந்த போலீஸ் இப்போது எக்காலத்தில் நீக்கப்படக்கூடிய கம்யூனின் கைக்கருவியாய் மாற்றப்பட்டது. முதலாளித்துவ ஜனநாயகமாய் இருந்ததில் இருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமாய் மாற்றம் பெற்றது. அரசு இனி மெய்யான அரசு அல்லாத ஒன்றாய் மாற்றம் அடைந்துவிட்டது. அதாவது இதுவரை இருந்த அரசு போல் இல்லாது புதிய அரசாய் அது இருந்தது.

       அதிகாரிகளுக்கான அனைத்து தனிச் சலுகைகளையும் ஒழித்தல், அதிகாரிகளின் சம்பளம், தொழிலாளர்களின் சம்பளத்துக்கு இணையாகக் கொடுத்தல் போன்ற கம்யூனின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மார்க்ஸ் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

       முதலாளித்துவ வர்க்கத்தாரை அடக்குவதும் அவர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதும் இன்னும் அவசியமாகவே இருக்கிறது. பாரிஸ் கம்யூனுக்கு இது மிகமிக அவசியமாய் இருந்தது. இதை போதிய உறுதியோடு செய்யாதது கம்யூனுடைய தோல்விக்கு முதன்மைக் காரணங்களில் ஒன்றாகும் என்று மார்க்ஸ் கருதினார்.

      இரண்டாவது அத்தியாயத்தின், மூன்றாம் பிரிவு, நடாளுமன்ற முறையை ஒழித்தல்.

 கம்யூனானது, நடாளுமன்ற உறுப்பாய் இல்லாமல், செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிட்டப்பட்டது என்று மார்க்ஸ் எழுதியதை சுட்டிக்காட்டி லெனின் இந்தப் பிரிவைத் தொடங்குகிறார்.

 மக்களை அடக்கி ஒடுக்கி நசுக்க வேண்டும் என்பதை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவெடுப்பதுவே பாராளுமன்ற முடியாட்சிகளின் சாரமமாகும். முடியாட்சியளில் மட்டுமல்ல மிகவும் ஜனநாயக குடியரசுகளிலும் முதலாளித்துவ பாராளுமன்றவாதத்தின் உண்மையான சாராம்சமும் அதுவே ஆகும்.

 இங்கே லெனின் மிகவும் தெளிவாக முதலாளித்துவ பாராளுமன்றத்தின் சாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். பல இடதுசாரிகள் இத்துடன் நின்றுவிடுகின்றனர். நாடாளுமன்றத்திற்குள் செல்வதே தவறானது என்பதுபோல் கூறிவிடுகின்றனர். இவ்வாறு கருதுபவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல அராஜகவாதிகளே ஆவர்.

 நம் நாட்டில், நாடாளுமன்ற புறக்கணிப்பாளர்கள்தான் நாடாளுமன்றத்தை பன்றி தொழுவம் என்று அதிகம் கூறிவருகின்றனர். நாடாளுமன்றத்தையும் பன்றி தொழுவத்தையும் இணைத்து பேசியது லெனின்தான். ஆனால் இந்த புறக்கணிப்பாளர்களின் கருத்தில் லெனின் பேசவில்லை. நாடாளுமன்ற முறை பன்றித் தொழுவமே ஆயினும் அதனைப் பயன்படுத்த வேண்டும், அதுவும் நிலைமை புரட்சிகரமானதாக இல்லதபோது பயன்படுத்துவது தேவையான ஒன்றாக இருக்கிறது. நாடாளுமன்றத்தை புறக்கணிப்பது அல்லது ஏற்பதும் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் இறுதிநோக்கமாக இருக்க முடியாது அது ஒரு செயல்தந்திரமாக இருக்க வேண்டும். அதாவது நாடாளுமன்றத்தை ஏற்பதோ புறக்கணிப்பதோ strategy இருக்கக்கூடாது அது tacticsயாக இருக்க வேண்டும்.

 போல்ஷிவிக் கட்சியின் அனுபவம் நமக்குத் இதைத் தெளிவு படுத்தியுள்ளது. போல்ஷிவிக்குகள் சில நேரங்களில் டூமாவை புறக்கணித்தனர் சில நேரங்களில் டூமாவில் பங்பேற்றனர். நாடாளுமன்றத்தில் மூழ்கிப்போவது எந்தளவுக்குத் தவறோ அதே அளவுக்கு நாடாளுமன்றத்தை முற்றப் புறக்கணிப்பும் தவறாகும்.

 லெனின் மார்க்சை முன்வைத்து கூறியதை அவரது மொழியிலேயே பார்ப்போம். என்னுடைய சொற்கள் எதையும் பயன்படுத்தாது இங்கே லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

 

“மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது, பிளெஹானவும் காவுத்ஸ்கியும் ஏனையோரும் ஆக்கிக் கொண்டு விட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகிலுப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை. முதலாளித்துவ நாடாளுமன்ற முறை "பன்றித் தொழுவமே" ஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமை புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.” (270 -271)

       இங்கே லெனின் கூறியது போல நாடாளுமன்றத்தை புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையில் இருந்து விமர்சிக்கவும் வேண்டும், அதே நேரத்தில் நாடாளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி முற்றப் புறக்கணிக்காமல் பயன்படுத்தத் தெரிந்திருக்கவும் வேண்டும்.

 அராஜகவாதிகளின் கோட்பாட்டை விமர்சித்தே மார்க்சியம் நிலைபெற்றது.

       நாடாளுமன்றத்தை பன்றி தொழுவம் என்று இந்த நூலில் கூறியது போலவே மற்றொர் இடதிலும் கூறியுள்ளார்.

 

"…. மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றி தொழுவத்தின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷிவிக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை வரலாறு நிரூபித்துள்ளது."

(சமரசங்கள் குறித்து)

      நம் நாட்டில் லெனின் கூறிய பன்றி தொழுவம் என்பது நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதற்குப் பயன்பட்டது. ஆனால் லெனின் பன்றி தொழுவத்தில் இருந்து வேலை செய்வது, புரட்சி போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியாக தயாரிப்பு செய்வதற்கு என்று கூறியுள்ளார். புரட்சிக்கான புறநிலை இல்லாத போது புரட்சிக்கான தயாரிப்பு வேலையை செய்ய வேண்டும். அத்தகைய தயாரிப்பு இல்லாது போனால் புரட்சிக்கான புறநிலை ஏற்படும் போது தயாரிப்பு இல்லாதக் காரணத்தால் புரட்சியை தவறவிடும் சூழ்நிலையே ஏற்படும் என்பதை அராஜகவாதிகள் அறிந்திடாது இருக்கின்றனர்.

      புரட்சிகரமான பாட்டாளி வர்க்கப் பார்வையில் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? நாடாளுமன்ற முறையைத் தவிர்ப்பது எப்படி?

இதற்கு பதிலளிக்கும் முன் லெனின் கம்யூனை முன்வைத்து என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். “கம்யூனை ஆராய்ந்து மார்க்ஸ் எடுத்துரைத்த படிப்பினைகள் அப்படியே அடியோடு மறக்கப்பட்டுவிட்டதால், இன்றைய “சமூக-ஜனநாயகவாதிகள்” அதாவது சோஷலிசத்தின் இன்றை துரோகியால், நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாத அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத் தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும் உண்மையில் புரிந்து கொள்ள முடியவதில்லை”

இவ்வாறு கூறிய பின்பே, புரட்சிகரமான பாட்டாளி வர்க்கப் பார்வையில் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும் வழி என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார்

லெனின் பதிலாகத் தருவதை அப்படியே பார்ப்போம்.

“நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநிதித்துவ உறுப்புகளையும் தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது. பிரதிநிதித்துவ உறுப்புகள் வெறும் வாய்ப் பேச்சுக் கூடங்களாய் இருப்பதை மாற்றி அவற்றை “செயலாற்றும்” உறுப்புகளாக்க வேண்டுமென்பதே இதன் பொருள்.”

   பொதுவாக நாடாளுமன்ற செல்லப்பிள்ளைகளான இடதுசாரிகளுக்கு, இது தெரிவதில்லை.

      19ஆம் நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் வேடிக்கையாக ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதி ஒருவர் அஞ்சல் பணித் துறையை சோஷலிசப் பொருளாதார அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டார். இது  ஒரு வகையில் உண்மையே. தற்போது தபால் சேவை என்பது அரசு-முதலாளித்துவ ஏகபோகத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட வணிகமாகும். ஏகாதிபத்தியம் படிப்படியாக அனைத்து அறக்கட்டளைகளையும் ஒரே மாதிரியான அமைப்புகளாக மாற்றுகிறது.

கம்யூனின் அனுபத்தில் லெனின் கூறுகிறார், தொழில் நுட்ப வல்லுநர்கள், ஃபோர்மேன்கள், கணக்காளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் "ஒரு தொழிலாளியின் ஊதியத்தை" விட அதிகமாக ஊதியம் பெறாத வகையில் இருக்க வேண்டும். அனைத்துப் பொருளாதாரத்தையும் அஞ்சல் சேவையின் வழியில் ஒழுங்கமைக்க வேண்டும். ஆயுதமேந்திய பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலும் தலைமையிலும் இதை செய்ய வேண்டும். இதுவே நமது உடனடி நோக்கம். இதுவே நாடாளுமன்றவாதத்தை ஒழித்து பிரதிநிதித்துவ அமைப்புகளைப் பாதுகாக்கும். இதுவே இந்த உறுப்புகளை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்த்திய இழிநிலையில் இருந்து தொழிலாளர் வர்க்கங்களை விடுவிக்கும்.

      மூன்றாம் அத்தியாயத்தின் நான்காவது பிரிவு, தேசிய ஒற்றுமையின் நிறுவன ஒழுங்கமைப்பு.

      இந்தப் பிரிவை நாம் மிகமிக சுருக்கமாகவே பார்க்கப் போகிறோம், விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு மூல நூலை எடுத்துப் படிக்க வேண்டும்.

      பாட்டாளி வர்க்க சர்வாதிகரம் என்பது மத்தியத்துவ அதிகாரம்தான். இதை அராஜகவாதிகள் ஏற்பதில்லை. கூட்டாட்சிக் கோட்பாடு பற்றிய பிரச்சினையில் புருத்தோன், பக்கூன் போன்ற அராஜகவாதிகளிடம் இருந்து மார்க்ஸ் வேறுபடுகிறார். கூட்டாட்சிக் கோட்பாடானது, அராஜகவாதத்தின் குட்டி முதலாளித்துவக் கருத்துக்களில் இருந்து தர்க்க வழியில் பெறப்பட்ட ஒன்று.

மார்க்ஸ் மத்தியத்துவவாதி. மார்க்ஸ் கூறிய கருத்துக்களில் எங்கேயும் மத்தியத்துவத்தில் இருந்து எந்த இடத்திலும் விலகியதே இல்லை. அரசு பற்றிய அற்பத்தனமான மூடபக்தியில் மூழ்கிக் கிடப்போரே முதலாளித்துவ அரசு பொறியமைவை அழிப்பது மத்தியத்துவத்தை அழிப்பதாகும் என்று நினைக்க முடியும். இது தவறானதாகும் என்கிறார் லெனின்.

   முதலாளித்துவ அரசை வீழ்த்தி அமைக்கும் தொழிலாளர்களின் அரசானது மத்தியத்துவம் அடிப்படையில்தானே இருக்கும்.

பாட்டாளி, விவசாயி ஆகிய தொழிலாளர்களின் அரசு அதிகாரம் என்பது மத்தியத்துவம் இல்லாது எப்படி இருக்க முடியும். முதலாளிகளின் எதிர்ப்பை அடக்குவது, தனியார் உடைமையாய் இருக்கும் ரயில் துறையை சமூகம் முழுமையின் உடைமையாய் மாற்றுவது, இதுபோன்ற அனைத்தையும் கம்யூன்களுடைய செயலையும் ஒன்றுபடுத்திக் கொண்டால், அது மத்தியத்துவம் அன்றி வேறு என்ன? சிறிதும் முரணில்லாத ஜனநாய மத்தியத்துவத்தோடு பாட்டாளி வர்க்க மத்தியத்துவமும் இல்லாமல் பிறகு என்ன? என்று கேள்வி கேட்டு லெனின் மத்தியத்துவத்தை வலியுறுத்தி பேசியுள்ளார்.

       மூன்றாம் அத்தியாயத்தின் ஐந்தாவது பிரிவு, புல்லுருவி அரசை ஒழித்தல்.

      உழைப்பை வாங்குபவர் உழைப்பைச் செலுத்துபவர் என்கிற இரண்டு வர்க்கத்தின் இணக்கம் காண முடியாத பகைமையின் வெளிப்பாடே அரசு என்று மார்க்சியம் கூறுகிறது.

       அராஜகவாதிகள் அரசியல் நடவடிக்கைகளை முற்றப் புறக்கணிக்கின்றனர். தற்கால சமூக-ஜனநாயகத்தின் சந்தர்ப்பவாதிகள் நாடாளுமன்ற ஜனநாயக அரசுக்குரிய முதலாளித்துவ அரசியல் வடிவமானது இறுதி வரம்பென்றும் இதற்கு அப்பால் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று கருதினர். ஒரு அரசே அனைத்துத் தீங்கக்கும் காரணம் என்று கருதியது அரஜாகவாதத்தின் முக்கியமான ஒரு தவறாகும், மற்றொன்று முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனமாநாயக அரசே இறுதி வடிவம் என்று கருதியது அவர்களின் பெரும் தவறாகும்.

       இந்த இரண்டு போக்குக்கும் மாறாக மார்க்ஸ் அரசு மறைந்தே தீரும். மறைவுக்கான இடைக் காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார இருக்கும் என்றார். இந்த முடிவு பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு மார்க்ஸ் வலியுறுதிக் கூறியுள்ளார். மார்க்ஸ் கற்பனையில் தனது கோட்பாட்டை உருவாக்கவில்லை. பாரிஸ் கம்யூன் குறுகிய காலத்திலேயே தோல்வி அடைந்திருத்தாலும் இதன் அனுபவங்களை மார்க்ஸ் கணக்கில் கொண்டு தமது கோட்பாட்டை செழுமைப்படுத்தினார்.

 மூன்றாம் அத்தியாத்துடன் இன்றைய வகுப்பு முடிவடைந்தது.

No comments:

Post a Comment