Sunday 18 June 2023

03) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (மூன்றாம் பகுதி)

(“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில்  

                     எடுக்கப்பட்ட 88- வது வார வகுப்பு – 18-06-2023  )


 இதுவரை லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் உள்ள மூன்று அத்தியாயங்களை இரண்டு வகுப்புகளில் பார்த்துவிட்டோம். இன்னும் மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. இன்றைய வகுப்பில் நான்காம் அத்தியாயம் முழுமையாகப் பார்க்கப் போகிறோம். இந்த நான்காம் அத்தியாயம் 50 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. பிற அத்தியாயத்தைவிட இந்த அத்தியாயமே அதிக பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதனால் இதனை இன்றைய வகுப்பில் தனித்துப் பார்க்கலாம். 5,6 ஆகிய இரண்டு அத்தியாயங்களையும் அடுத்த வகுப்பில் பார்க்கலாம். அடுத்த வகுப்புடன் இந்த தொடர் வகுப்பு நிறைவடையும்.

 பாரிஸ் கம்யூன் அனுபவத்தின் முக்கியத்துவத்தை மார்க்ஸ் எழுதினார். எங்கெல்ஸ் பலமுறை இதே பொருளைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதினார். மேலும் மார்க்ஸின் பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை விளக்கினார். சில நேரங்களில் இப்பிரச்சினையின் பிற கூறுகளை வலிமையோடு தெட்டத் தெளிவாக எங்கெல்ஸ் விளக்கினார். அதனால் கம்யூனைப் பற்றி எங்கெல்ஸ் விளக்கியதை லெனின் இந்த தனி அத்தியாயத்தில் பேசுகிறார். எங்கெல்சை இவ்வாறு லெனின் சிறப்பிக்கும்போது ஒன்றைப் பற்றி பேச வேண்டும்.

       மார்க்சியம் என்கிற சித்தாந்தத்திற்கு எங்கெல்ஸ் சிறந்த பங்களித்திருக்கிறார். அப்படியிருக்க மார்க்ஸ் பெயரோடு எங்கெல்ஸ் பெயரையும் இணைத்திருக்க வேண்டும் என்று பலர் கருதக்கூடும். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு இதற்கு எங்கெல்சே பதிலளித்துள்ளார். லுத்விக் ஃபாயர்பாக் என்கிற நூலின் அடிக்குறிப்பில் கூறியதை இங்கே பார்ப்போம்.

 

“அண்மைக் காலமாக, இந்தக் கோட்பாட்டில் என்னுடைய பங்கைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டுவர நான் இங்கே சில விவரங்களைச் சொல்லாமலிருக்க முடியாது. மார்க்சுடன் எனக்கிருந்த நாற்பது ஆண்டுகால ஒத்துழைப்பின் போதும், அதற்கு முன்னரும், இந்தக் கோட்பாட்டுக்கான அடித்தளத்தை உருவாக்குவதிலும், மேலும் குறிப்பாக, அக்கோட்பாட்டை விரித்துரைப்பதிலும் சற்றே சுதந்திரமான பங்கு எனக்கிருந்தது என்பதை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் முதன்மையான அடிப்படைக் கொள்கைகளில், சிறப்பாகப் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத் துறைகளில் மிகப் பெரும்பகுதியும், மேலும் அனைத்துக்கும் மேலாக, அவற்றின் முடிவான, துல்லியமான வரையறுப்பும் மார்க்சின் பங்களிப்பாகும்.

 

ஒரு சில தனிச்சிறப்பான துறைகளில் என்னுடைய பணியைத் தவிர்த்து, என்னுடைய பங்களிப்பினைத் தாராளமாக மார்க்ஸ் என் உதவியின்றியே செய்திருக்க முடியும். ஆனால் மார்க்ஸ் செய்து முடித்ததை நான் ஒருபோதும் சாதித்திருக்க முடியாது. எங்களுள் மற்ற எல்லோரைக் காட்டிலும் மார்க்ஸ் உயாந்து நின்றார், தொலைநோக்குடன் பார்த்தார், பரந்த விரைவான பார்வையைக் கொண்டிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதையாக (Genius) விளங்கினார். மற்றவர்களாகிய நாங்கள், அதிகமாகச் சொல்லிக் கொள்வதென்றால், சிறந்த திறமைசாலிகளாக (Best Talented) இருந்தோம். அவர்மட்டும் இல்லையென்றால், இந்தக் கோட்பாடு இன்று உள்ளதுபோல் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, இக்கோட்பாடு அவருடைய பெயரைத் தாங்கி நிற்பது பொருத்தமே.”

      மூலதனம் தொகுதிகளில் 2-3 ஆகியவற்றை மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் பதிப்பித்தார். அதுவும் எங்கெல்சின் சிறந்த பங்களிப்பு ஆகும். மார்க்சின் கையெழுத்தை எங்கெல்சைத் தவிர மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. எங்கெல்ஸ் இல்லையேல் மார்க்சியம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரின் பங்களிப்பு இருக்கிறது.

       நான் ஒன்றை எப்போதும் சொல்வது வழக்கம். மார்க்சைப் படிக்க வேண்டுமானால் எங்கெல்சை படிக்க வேண்டும். மார்க்சையும் எங்கெல்சையும் படிக்க வேண்டுமானால் லெனினை படிக்க வேண்டும். ஏன் என்றால் மார்க்சியத்தை திரிபுயில்லாமல் படிப்பதற்கு இவர்களின் நேரடிப் பங்களிப்பு நமக்குப் பயன்படுகிறது.

       இந்த நான்காவது அத்தியாயத்தில் லெனின், அரசு பற்றி எங்கெல்ஸ் விளக்குவதைத் தொகுத்துத் தந்துள்ளார். அரசும் புரட்சியும் நூலில் உள்ள அத்தியாயங்களில் எங்கெல்சைப் பற்றி எழுதிய அத்தியாயமே அதிக பக்கங்களைக் கொண்டதாக இருக்கிறது. எங்கெல்சை படிக்காமல் மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மார்க்சியத்தை அறிவதற்கு எங்கெல்ஸ் எழுதிய நூல்களை பட்டியலிடுவோம்.

1) டூரிங்குக்கு மறுப்பு,

2) லுத்விக் ஃபாயர்பாகும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்,

3) குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்,

4) இயற்கையின் இயக்கவியல்.

இந்த நான்கு நூல்களின் வழியே தான் மார்க்சிய அடிப்படைகளை நாம் கற்க முடியும். மார்க்சியத்தின் உள்ளடக்கக் கூறுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்று பிரிப்பது ருஷ்ய மார்க்சியம். லெனின் தான் இப்படி பிரித்தார் என்று கூறுபவர்களை ஐரோப்பாவில் மட்டுமல்ல நமது நாட்டிலும் பார்க்க முடிகிறது. ஆனால் எங்கெல்ஸ் டூரிங்கை விமர்சித்து எழுதிய டூரிங்கு மறுப்பு என்கிற நூலில் மார்க்சியத்தை தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்று மூன்றாகப் பிரித்தே பதிலளித்துள்ளார். மூன்று உள்ளக்கமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளதே, ஆனால் ஒவ்வொன்றும் தனித்தப்  போக்குடையதாகும். எதையும் மார்க்சிய வழியில் அணுகுவதற்கு இந்த மூன்றையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

நான்காவது அத்தியாயம்

எங்கெல்ஸ் அளித்த கூடுதல் விளக்கங்கள்.

      நான்காம் அத்தியாயத்தின் முதலாவது பிரிவு, “குடியிருப்புப் பிரச்சினை”

       1972ஆம் ஆண்டு எங்கெல்ஸ் “குடியிருப்புப் பிரச்சினை” என்கிற கட்டுரையை எழுதுயுள்ளார். இதில் பாரிஸ் கம்யூனுடைய அனுபவத்தின் அடிப்படையில் அரசு தொடர்பாக புரட்சியின் பணிகளைப் பற்றி இதில் பலயிடங்களில் எழுதியுள்ளார். அப்படி பேசும் போது, பாட்டாளி வர்க்க அரசுக்கும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

       மேற்கோள் மூலம் எங்கெல்சின் கருத்துக்களை நமக்கு லெனின் காட்டுகிறார். குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எப்படி? இதற்கு பதிலாக எங்கெல்ஸ், கூறுவது என்னவென்றால், இன்றைய சமூகத்தில் ஏனைய சமூகப் பிரச்சினையைப் போலவே இதுவும் தீர்க்கப்படுகிறது. தேவையும் அளிப்பையும் பொருளாதார வழியில் படிப்படியாய் சமன் செய்வதின் மூலம் தீர்வாக வைக்கிறது. ஆனால் இதை தேவை – அளிப்பு என்கிற வழியில் தீர்வை காணமுடியவில்லை.

 சமூகப் புரட்சிக்குப் பிறகு இதற்கு தீர்வு காணும் என்பது குறிப்பிட்ட அந்தந்த சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழ்நிலையைமச் சார்ந்தது. மேலும் பன்மடங்கு ஆழமான பிரச்சினைகளுடன் இணைந்தும் இருக்கும். புரட்சியின் அடிப்படையான பிரச்சினையில் ஒன்று நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையே உள்ள முரணை ஒழித்தல்.

       பெரிய நகரங்களில்  போதிய அளவுக்கு வீடுகள் இருக்கின்றன. நல்லறிவுக்கு உகந்த நேரிய வழியில் இவை பயன்படுத்தப்பட்டால் குடியிருப்புப் பற்றாக்குறையை உண்மையாகவே உடனடியாக தீர்க்கப்படலாம். ஆனால் தற்போதுள்ள உடைமையார்களிடம் இருந்து வீடுகளைப் பறிமுதல் செய்து  அதில் வீடில்லாத தொழிலாளர்களுக்கு இடம் கொடுக்கலாம்.

       எங்கெல்ஸ் இங்கே அரசு அதிகாரத்தின் வடிவடித்தில் உள்ள வேறுபாடுகளை பரிசீலிக்கவில்லை. அதன் செயற்பாட்டின் உள்ளடக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளது. அரசு உலர்ந்து உதிர்வதைப் பற்றி எங்கெல்ஸ் பேசியுள்ளார், அதை அடுத்த அத்தியாயத்தில் தனித்துப் பார்க்கலாம் என்று லெனின் கூறியுள்ளார்.

       வர்க்கங்கள் ஒழியும் போது அரசும் ஒழிக்கப்படும் என்பதே மார்சியக் கோட்பாடு. அதாவது அரசு ஒழிவதற்கான பொருளாதார நிலைமைகள் தோன்றிய பிறகு அரசு ஒழிக்கப்படுகிறது. ஆனால் அராஜகவாதிகள் அரசை உடனே ஒரே நாளில் ஒழித்துவிடலாம் என்கிறனர் இது மார்க்சிய கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

 அராஜகவாதியின் மீதான மார்க்சியத்தின் விமர்சனம் அரசை ஒழிக்க விரும்புகிறார்கள் என்பதில் அல்ல, ஒழிப்புக்கான பொருளாதாரக் காரணங்களை கணக்கில் கொள்ளாமல் உடனடியாக ஒழிப்பைப் பற்றி பேசுவதையே மார்க்சியம் விமர்சிக்கிறது.

       அரசு ஒழிப்பு பற்றிய அராஜகவாதிகளை மார்க்சியம் எந்த வகையில் விமர்சிக்கிறது என்பதைப் பற்றி அடுத்த பிரிவில் லெனின் பேசுகிறார்.

       நான்காம் அத்தியாயத்தின் இரண்டாவது பிரிவு, அராஜகவாதிகளுடன் வாக்குவாதம்.

       இத்தாலிய சோஷலிஸ்டு ஆண்டு வெளியீடு ஒன்றில் மார்க்சும் எங்கெல்சும் எழுதியதை லெனின் இங்கே மேற்கோளாகத் தருகிறார். அதில் உள்ள ஒரு பகுதியைப் பார்ப்போம்.

 

"அரசியலை நிராகரிப்பதற்காக அராஜகவாதிகளைக் கேலி செய்து மார்க்ஸ் எழுதினார்: "தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டம் புரட்சிகர வடிவங்களை ஏற்குமாயின், முதலாளித்துவ வர்க்கத்தாரின் சர்வாதிகாரத்துக்குப் பதிலாக, தொழிலாளர்கள் தமது புரட்சிகர சர்வாதிகாரத்தை நிறுவிக் கொண்டார்களாயின் அவர்கள் கோட்பாடுகளை இழிவுபடுத்திப் பயங்கரக் குற்றமிழைப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள்.""

 அராஜகவாதிகள் அரசு ஒழிபுப்புக்கான பொருளாதார வளர்ச்சி நிலையைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருப்பதையே இதில் மார்க்ஸ் விமர்சித்துள்ளார்.  வர்க்கம் மறையும் போது அரசு மறையும் என்பதை மார்க்ஸ் விமர்சிக்கவில்லை.

 முதலாளித்துவ வர்க்கத்தாரது எதிர்ப்பை எதிர்கொள்வதற்கான  பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசினை, அராஜகவாதிகள் கைவிட்டுவிட வேண்டும் என்று கூறுவதையே மார்க்ஸ் விமர்சிக்கிறார். அராஜகவாதத்துக்கு எதிரான தமது போராட்டத்தின் உண்மைப் பொருளை திரித்துப் புரட்டுவதைத் தடுக்கும் வகையில் பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் அரசு புரட்சிகரமான இடைக்கால வடிவம் கொண்டது என்பதை மார்க்ஸ் தெளிவாகவே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

       எங்கெல்ஸ் இன்னும்கூட விவரமாகவும் எளிமையாகவும் விளக்கிறார். புரூதோனியவாதிகள் “அதிகார- எதிப்பளார்களாய்” தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதாவது அனைத்து அதிகாரத்தையும் கீழ்ப்படிதலையும், ஆட்சியையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். இதை மறுத்து எங்கெல்ஸ், ஓர் ஆலை நிர்வாகத்தையோ, ரயில்வே துறையையோ, விரிகடலில் செல்லும் கப்பலையோ இயக்குவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தலைமை எனும் அதிகாரம் இல்லாமல் எப்படி நடைபெறும் என்கிறு கேட்கிறார். அதாவது ஒரு கப்பல் கடலில் செல்கிறது என்றால், அதிகாரம் பொருந்திய தலைமைக் கேப்டன் இருக்க வேண்டும். தலைமை இல்லாமல் கப்பலை கடலில் வெற்றிகரமாக இயக்க முடியுமா? முடியாது என்பதே உண்மையாகும்.

       எங்கெல்ஸ் எழுதிய “அதிகாரம் குறித்து” (On Authority) என்கிற கட்டுரையில் இருந்து ஒரு பெரிய மேற்கோளை லெனின் கொடுத்துள்ளார். அதில் ஒரு பகுதியை அப்படியே பார்ப்போம். அராஜகவாதிகளைப் பார்த்து எங்கெல்ஸ் கேள்வி எழுப்பி பதிலும் கொடுக்கிறார். அராஜகவாதிகள் இதுவரை புரட்சியை எதிர்கொள்ளாமலேயே ஆனால் அதிக நேரம் புரட்சியை மட்டும் பேசிக் கொண்டிருப்பவர்கள். புரட்சிக்கான தயாரிப்பில் கவனம் செலுத்தாமல் இன்றை நடைமுறை அரசியலைப் புறக்கணித்துவிட்டு புரட்சியை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

 

"இந்தக் கனவான்கள் எப்பொழுதாவது ஒரு புரட்சியைப் பார்த்திருக்கிறார்களா?

 

புரட்சியைப் போல, அதிகார ஆதிக்கம் செலுத்தும் எதுவுமே இருக்க முடியாது. துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குத்தீட்டிகளும் பீரங்கிகளும் கொண்டு, இவையாவுமே மிகக் கடுமையான அதிகார, ஆதிக்கச் சாதனங்கள் ஆகும். ஒரு பகுதி மக்கள் எஞ்சிய பகுதியின்மீது தமது சித்தத்தைத் திணிக்கும் செயலே புரட்சி. வெற்றி பெறும் தரப்பு தனது படைபலம் பிற்போக்குவாதிகளிடத்தே உண்டாக்கும் குலைநடுக்க பயங்கரத்தின் மூலமாய்த் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும்.

 

முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராய் ஆயுதமேந்திய மக்களுடைய அதிகாரத்தை பாரிஸ் கம்யூன் செலுத்தாமல் இருந்தால், அதனால் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்க முடியுமா? அதிகாரத்தை செலுத்தியதற்காக கண்டிப்பதற்குப் பதில் இந்த அதிகாரத்தை மிகச் சொற்பமாகவே செலுத்தியது என்றல்லவா அதன்மீது குற்றம் சாட்ட வேண்டும்? ஆகவே இரண்டில் ஒன்றுதான் உண்மை: ஒன்று அதிகார-எதிர்ப்பாளர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள்- அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை; அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும், அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்''

      அரசு உலர்ந்து உதிருவதற்கான அரசியலுக்கும் பொரளாதாரத்துக்கும் இடையே உள்ள உறவுநிலையை மார்க்சியம் சிறப்பாகப் பேசுகிறது. இதை பற்றி அடுத்த அதியாயத்தில் காணலாம்.

 அரசு உலர்ந்து உதிருவதற்கான பொருளாதார நிலைமைகளைப் பற்றி சிறிதும் கருத்திக் கொள்ளாமல், அரசு ஒழிக்கப்பட வேண்டியது பற்றி அரஜகவாதிகள் பேசுவது குழப்பமானது, புரட்சிகரமில்லாதது என்பதே எங்கெல்சின் வாதம் என்கிறார் லெனின்.

       4வது அத்தியாயத்தின் மூன்றாவது பிரிவு, பெபெலுக்கு எழுதிய கடிதம்

 அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் மிகச் சிறப்பானவற்றுள் ஒன்று எனக் கொள்ளத்தக்க கருத்துரை என்றால் அது 1875ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-28 தேதியிட்ட பெபெலுக்கு அவர் எழுதிய கடிதத்தை இங்கே லெனின் குறிப்பிடுகிறார்.

       கம்யூன் போராளிகள் அமைத்த அரசு கம்யூனாகும். இந்தக் கம்யூன் அரசு எனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்காது என்பதனால் அரசு என்ற சொல்லையே விட்டுவிட வேண்டும். அராஜகவாதிகள் “மக்கள் அரசு” என்று குறிப்பிட்டு சலிப்பும் அருவருப்பும் ஏற்படும் அளவுக்கு ஓயாது அதனை நம் முகத்திலேயே எறிந்து வருகின்றனர் என்று லெனின் கூறுகிறார்.

      மார்க்சியத்தைப் பொறுத்தளவில் பாட்டாளிகளின் சர்வாதிகார அரசு என்பது ஒர் இடைக்காலத்துக்கு மட்டுமே தேவைப்படுகிறது. அதன் பிறகு அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும்.

 தம்மை எதிர்க்கும் வர்க்கம் இருக்கும்வரையில்தான் பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுகிறது. இதற்கு மாறாக சுதந்திரத்தின் நலன்களுக்காக அரசு வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் அராஜகவாதிகள் “மக்கள் அரசு” என்று தொடர்ந்து பேசுகின்றனர். மேலும் எங்கெல்ஸ் அந்தக் கடிதத்தில் அனைத்து இடங்களிலும் அரசு என்ற சொல்லுக்குப் பதில் கம்யூன் என்கிற பிரெஞ்சு சொல்லுக்கு ஈடாக அமைந்துள்ள “மக்கட்சமூகம்” (Gemeinwesen) என்ற நல்லதொரு ஜெர்மன் சொல்லை பயன்படுத்தாலாம் என்று மார்க்சையும் சேர்த்து நாங்கள் ஆலோசிக்க விரும்புகிறோம் என்கிறார் எங்கெல்ஸ்.

       இங்கே எங்கெல்ஸ் “மக்கட்சமூகம்” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆலோசனை ஏற்கப்பட்டால் எங்கெல்சின் இந்த செயல் “அராஜகவாதம்” என்பதாய் ஒரே கூச்சல் அல்லவா போடுவார்கள் என்கிறார் லெனின். மேலும், அவர்கள் கூச்சல் எழுப்பட்டும். அது அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் இருந்து புகழ்மாலைகள் பெற்றுத் தரும் என்கிறார்.

       “கம்யூனானது அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்கவில்லை” என்பது எங்கெல்ஸ் கூறியது கோட்பாட்டு வழியில் சரியான நிர்ணயிப்பு. கம்யூனானது பழைய பொருளில் அரசு என்பதற்கு மாறன ஒன்று. எங்கெல்சின் கருத்துக்கள் இதனை தெளிவாக விளக்கியிருக்கிறது. இருந்தாலும் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகள் அதாவது கம்யூனிஸ்டுகளிடம் அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள் பீடித்து உள்ளது. பெபெல் எழுதுகிறார், 


“அரசானது… வர்க்க ஆதிக்கத்தை அடிப்படையாய்க் கொண்ட நிலை, நீக்கப்பட்டு மக்கள் அரசாய் மாற்றப்பட வேண்டும்”

 இதில் அரசு உலர்ந்து உதிரும் என்கிற மார்க்சியக் கோட்பாடு முற்றப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை நுட்பமாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் இது போன்ற சந்தர்பவாதமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

   மார்க்சியத்தின் புரட்சிகர விளக்கங்களை மூலையில் போடப்பட்டால் சந்தர்ப்பவாதத்தில் அகப்படுவது நிச்சயம் என்பதை, லெனின் இந்தப் பிரிவின் இறுதியில் கூறியதைப் பார்ப்போம்.

 

"…..விடாப்பிடியாய்த் திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வந்த அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள், ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளைப் பீடித்துக் கொண்டுவிட்டதில், முக்கியமாய் எங்கெல்சின் புரட்சிகர விளக்கங்கள் கவனமாய் மூலையில் முடக்கப் பட்டுவிட்டதாலும், வாழ்க்கை நிலைமைகள் அனைத்தும் அவர்களை நெடுங்காலத்துக்குப் புரட்சியிலிருந்து "விலக்கிவைத்து'' இருந்ததாலும் இக்கருத்துக்கள் அவர்களைப் பீடித்துக் கொண்டுவிட்டதில் வியப்பில்லை."

 4வது அத்தியாயத்தின் நான்காவது பிரிவு, எர்ஃபுர்ட் நகல் வேலைத்திட்டத்தின் விமர்சனம்.

       ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியின் எரிஃபுர்ட் வேலைத்திட்டம் 1891ஆம் ஆண்டு எர்ஃபுர்ட் நகரில் நடைபெற்ற காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது. கோத்தா வேலைத்திட்டத்தைவிட இத் திட்டம் ஓரடி முன்னேற்றம்தான். முதலாளித்துவ உற்பத்திமுறை அழிவுற்று சோஷலிச உற்பத்தி முறை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்னும் மார்க்சியக் கோட்பாட்டை இந்தத் திட்டம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருந்தாலும் இந்தத் திட்டத்தில் சந்தர்ப்பவாத்திற்கு சில மோசமான சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது அதனால் எங்கெல்ஸ் இத் திட்டத்தை விமர்சித்துள்ளார்.

       நவீன முதலாளித்துவம் ஏகாதிபத்தியக் கோட்பாட்டினுடைய மதிப்பீட்டின் மிக முக்கிய சாராம்சத்தை இந்த விமர்சனத்தில் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். அதாவது முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறிவிட்டிருந்ததை எங்கெல்ஸ் இங்கே குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனத்தில் அவர், கூட்டுப் பங்குக் கம்பெனிகள் வளர்ச்சி உற்றபோது திட்டமிடாமைக்கு முடிவுவந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

       ஏகபோக முதலாளித்துவம் அதாவது அரசு-ஏகபோக முதலாளித்துவமானது முதலாளித்துவமாக இருக்கவில்லை, இப்போது இதை “அரசு சோஷலிசம்” என்பதாய் அழைக்கலாம் என்று கூறுவது தவறான முதலாளித்துவ சீர்திருத்தவாதக் கூற்று என்று லெனின் விமர்சிக்கிறார்.

       இந்த ஏகபோக முதலாளித்துவம், எவ்வளவு திட்டமிட்ட போதிலும், எவ்வளவுதான் மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும், ஏன் சர்வதேசிய அளவுலுங்கூட பொருளுற்பத்திப் பரிமாணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு கொண்ட போதிலும் இன்னமும் இந்தப் போக்கு முதலாளித்துவமே. புதிய கட்டத்தை பெற்றுவிட்ட முதலாளித்துவம் என்று கூறலாமே தவிர, இதை சோஷலிசமாகக் கருதமுடியாது. ஆனால் இதை வேறுவிதமாகக் கூறலாம். இத்தகைய முதலாளித்துவம், சோஷலிசத்துக்கு நெருங்கியது, பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான பிரதிநிதிகளுக்கு சோஷலிசப் புரட்சி அண்மையானதும், எளியதும், நடைமுறை சாத்தியமானதும், அவசரஅவசியமானதும் ஆகிவிட்டதை இது நிரூபிக்கிறது. இடதுசாரிகள் இந்த வழியில் வாதிக்கலாமே தவிர, இதை சோஷலிசப் புரட்சியை புறக்கணிப்பதற்கும் வகையில் முதலாளித்துவத்தை கவர்ச்சி மிக்கதாக காட்டுவதற்கும் உரியதாக ஆகிவிடக்கூடாது.

       தொடக்கக் காலத்தில் மார்க்சிய மூலவர்கள் சோஷலிசப் புரட்சியை சமாதான வழியில் சாதிக்க முடியும் என்று நினைத்தனர். இந்த இடத்தில்  நினைக்க மட்டும்தான் என்று லெனின் அழுத்திக் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த சமாதான வழிமுறை ஜெர்மனுக்கு சரிபட்டுவராது என்று எங்கெல்ஸ் கருதினார். ஜெர்மனியில் குடியரசும் இல்லை, சுதந்திரமும் இல்லை. ஆதலால் சமாதான வழி பற்றிய கனவுகள் முற்றிலும் அபத்தமாகும் என்று கூறி உள்ளார்.

       ஜெர்மனியில் உள்ள கட்சியும் தொழிலாளி வர்க்கமும் ஜனநாயக் குடியரசின் வடிவிலேதான் அதிகாரத்துக்கு வர முடியும் என்பது அறுதியிட்டு நிச்சயமாகச் சொல்ல முடியும். பிரெஞ்சுப் புரட்சி ஏற்கனவே காட்டியது போல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு உரிய பிரத்தியேக வடிவமும் இதுவே தான் என்று எங்கெல்ஸ் கூறியுள்ளார். மார்க்சின் நூல்களில் அனைத்திலும் இழையோடி இருக்கும் அடிப்படைக் கருத்தினையே எங்கெல்ஸ் மிகவும் எடுப்பான முறையில் திரும்பக் கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு மிக அருகாமையில் இட்டுச்செல்வது ஜனநாயகக் குடியரசுதான் என்பதே இந்த அடிப்படை கருத்து.

       கூட்டாட்சிக் குடியரசை ஆதரிக்கவில்லை, ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட குடியரசையே மார்க்சைப் போல எங்கெல்சும் ஆதரித்தார் என்று லெனின் கூறுகிறார்.

 எங்கெல்ஸ் கூட்டாட்சிக் குடியரசை விதிவிலக்காகவும் வளர்ச்சிக்கு இடையூறாகவும் கருதினார், அல்லது முடியரசில் இருந்து மத்தியத்துவக் குடியரசுக்கான சில தனி நிலைமைகளில் ஒரு முன்னேற்றப் படியாயாகக் கருதினார். இந்தத் தனி நிலைமைகளில் எங்கெல்ஸ் தேசியப் பிரச்சினையை முதலிடத்துக்கு உரியதாய்க் குறிப்பிட்டுள்ளார். சின்னஞ் சிறு அரசுகளின் பிற்போக்குத் தன்மையையும், குறிப்பிட்ட சில உதாரணங்களில் தேசிய பிரச்சினையால் இவற்றின் பிற்போக்குத் தன்மை மூடிமறைக்கப்படுவதையும் தயவுதாட்சண்யமின்றிக் கண்டித்து விமர்சத்தார். இருந்தாலும் மார்க்சைப் போலவே எங்கெல்சும் தேசியப் பிரச்சினையை ஒதுக்கித் தள்ளிவிடுகிற ஆபத்துக்கு இடமளிக்கவில்லை.

 4வது அத்தியாயத்தின் ஐந்தாவது பிரிவு, “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்னும் மார்க்ஸ் நூலுக்கு 1891ல் எழுதப் பெற்ற முன்னுரை.

       மார்க்சின் மறைவுக்குப் பிறகு எங்கெல்ஸ் மார்க்சின் முக்கியமான நூல்களை மறுபதிப்பு செய்தார். அப்படி செய்யும் போது அதற்கு ஒரு ஆய்வுரையை முன்னுரையாக எழுதினார், அனைத்து முன்னுரையையும் நாம் பல முறை படிக்க வேண்டும். தொழிலாளர்களின் பாரிஸ் புரட்சியின் அனுபவத்தை மார்க்ஸ் பகுத்தாய்ந்து “பிரான்சில் உள்நாட்டுப் போர்” என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். இந்த நூலுக்கான எங்கெல்சின் முன்னுரையையே லெனின் இந்தப் பிரிவில் விவரிக்கிறார்.

       இந்த முன்னுரையைப் பற்றிய கருத்தை முதலிலேயே லெனின் வெளிப்படுத்தி உள்ளார். அதை முதலில் பார்ப்போம்.

       அரசு குறித்து பின்பற்ற வேண்டிய போக்கு தொடர்பான பிரச்சினைகள் பற்றிச் சுவையான சில கருத்துரைகளை இடைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார், கம்யூன் படிப்பினைகள் பற்றிய தேர்ந்த தெளிவுடைய சுருக்கவுரையையும் அளிக்கிறார். கம்யூனுக்கு அடுத்த இருபது ஆண்டுகளின் அனுபவம் அனைத்தையும் எடுத்து கொண்டு இந்த முன்னுரையில் எங்கெல்ஸ் செழுமைப்படுத்தி உள்ளார் என்பதை லெனின் கூறியுள்ளார். மேலும் இந்த முன்னுரையில், அன்று ஜெர்மனியில் அதிகமாகப் பரவிய அரசின் மீதான மூடநம்பிக்கையை நேரடியாய் எங்கெல்ஸ் எதிர்த்துள்ளார்.

       மதம் தனிநபரின் விவகாரமாய் மார்க்சியம் கூறுகிறது. ஆனால் சந்தர்ப்பவாதிகளாய் போன ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் அதாவது கம்யூனிஸ்டுகள், இதன் கருத்தை திரித்துரைத்தனர். புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்குங்கூட மதம் தனிநபரின் விவகாரம் என்பதாய் பொருள்மாற்றி விளக்கம் கொடுத்தனர். இதை மறுக்கும் விதமாக எங்கெல்ஸ் இந்த முன்னுரையில் அரசைப் பொறுத்த மட்டில் மதம் முற்றிலும் தனிநபரின் விவகாரமாகும் என்று எழுதினார். மதத்தைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரம் என்று ஜெர்மன் சந்தர்ப்பவாதத்தை நேரடியாக சாடும் பொருட்டே அழுத்தம் கொடுத்து கூறியுள்ளார். கட்சியைப் பொறுத்த மட்டில் மதம் தனிநபரின் விவகாரமாகக் கொள்ள முடியாது.

 ஜெர்மன் சந்தர்ப்பவாதமானது புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியைச் மதச் சார்பற்ற நிலைக்கு இடமளித்துவிட்டது. இந்தப் போக்கு மக்களை மதிமயங்கச் செய்யும். மதமெனும் அபினியை எதிர்த்துக் கட்சி நடத்த வேண்டிய போராட்டத்தை கைவிட்டுவிடும் மிகக் கொடுமையான போக்காகும்.

 இந்தப் போக்கு ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சியை குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் இழிநிலைக்குச் சீரழியும்படிச் செய்துவிட்டது என்று லெனின்  மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

       இந்த முன்னுரையில்,  பாரிஸ் கம்யூன் குறிப்பிடத்தக்க இரண்டு வழிகளை செய்தது என்று கூறியுள்ளார். முதலாவது, அனைத்துப் பதிவிகளும் மக்கள் வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களை அமர்த்தியது. அத்தோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்நேரத்திலும் திரும்பியழைக்கப்படக் கூடியவர்களாக்கியது. இரண்டாவது, அதிகாரிகள் அனைவருக்கும் மற்ற தொழிலாளர்களுக்கு அளிக்கின்ற சம்பளமே கொடுக்கப்பட்டது.

       தேசிய சுயநிர்ணய உரிமை குறித்து சில மார்க்சியவாதிகள் கருதியதைப் போல் எங்கெல்ஸ் கருதவிலை என்று லெனின் குறிப்பட்டுள்ளார். அதாவது, சுயநிர்ணய உரிமையானது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை, சோஷலிசத்தில் அதற்குத் தேவையில்லை என்று வாதாடுவதைப் போன்ற பிழையை எங்கெல்ஸ் செய்யவில்லை என்று லெனின் குறிப்பிடுகிறார்.

       இந்தப் பரிவின் இறுதியில் லெனின் கூறுகிறார், முடியரசில் மட்டுமல்லாமல் ஜனநாயகக் குடியரசிலும் அரசு ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான இயந்திமாகவே இருக்கிறது. எங்கெல்சின் இந்தக் கூற்றை அராஜகவாதிகள் ஒடுக்குமுறையின் வடிவம் எதுவாயினும் பாட்டாளி வர்க்கத்துக்கு ஒன்றே என்று இதற்கு தவறாகப் பொருள்கொள்கின்றனர். அரசு எனும் வேண்டாத பிண்டம் இதை குப்பைக் குழியிலே போடும் நிலை ஒரு புதிய தலைமுறையால்தான் முடியும். இதை  லெனின் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

 4வது அத்தியாயத்தின் ஆறாவது பிரிவு, ஜனநாயகத்தை விஞ்சுவது குறித்து எங்கெல்ஸ்.

       அன்று கம்யூனிஸ்டுகளை, சமூக-ஜனநாயகவாதி என்று சொல்லால்தான் அழைக்கப்பட்டது. இந்த சொல் விஞ்ஞான வழியில் தவறானது என்று எங்கெல்ஸ் கருதினார். 1894ஆம் ஆண்டு சனவரி 3ஆம் நாளிட்ட முன்னுரையில் இது குறித்து எழுதினார். இன்றைய மாறிவிட்ட சூழ்நிலையில் பொதுவில் சோஷலிஸ்டாய் இருப்பதோடு அல்லாமல் முழக்க முழுக்க கம்யூனிஸ்டாக பொருளாதார வேலைத் திட்டத்தையும் கொண்டுள்ள ஒரு கட்சிக்கு, அரசு அனைத்தையும், இதன் விளைவாய் ஜனநாயத்தையும்கூட விஞ்சுவதை இறுதி அரசியல் குறிக்கோளாய் கொண்ட ஒரு கட்சிக்கு சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயர் பொருத்தமானதாக இல்லை. ஆனால் இதை ஏற்க்கத்தக்கதாய் கொள்ளலாம். உண்மையான அரசியல் கட்சிகளுடையப் பெயர்கள் ஒருபோதும் முழு அளவுக்கும் பொருத்தமானதாக இல்லை. கட்சி வளர்ச்சி அடைந்து செல்கிறது அனால் கட்சியின் பெயர் அப்படியே இருந்தபடியே இருக்கிறது.

       அரசின் ஒழிப்போடு ஜனநாயகத்தின் ஒழிப்பும் அடங்கியிருக்கிறது. அரசு உலர்ந்து உதிர்வது போல ஜனநாயகமும் உலர்ந்து உதிர்ந்து போகும்.

       ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலும் ஒன்றல்ல, சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கீழ்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படும். ஒரு வர்க்கம் பிறிதொரு வர்க்கத்தின் மீது முறைப்படி செலுத்தும் பலாத்கார ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.

       அரசை ஒழிப்பதே கம்யூனிஸ்டுகளின் இறுதி குறிக்கோள். கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தின் முதற்கட்டமான சோஷலிசத்துக்காக பாடுபடும் போது கம்யூனிசமாய் வளர்ச்சி அடையும். வளர்ச்சி அடைந்த் கம்யூனிச சமூகத்தில் மக்களின் ஒரு பரிவினர் மற்றொரு பிரிவினரை கீழ்ப்படியும்படி செய்திட வேண்டிய தேவை அறவே மறைந்து போய்விடும். ஏன் என்றால் யாரையும் கீழ்ப்படையும்படிக்கூறத் தேவையில்லாமல், மக்கள் சமூக வாழ்வின் சர்வ சாதாரண நெறிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டுவிடுவார்கள் என்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு சந்தேகம் இல்லை.

       நான்காவது அத்தியாயம் இத்துடன் நிறைவடைகிறது.

       அரசு உலர்ந்து உதிர்வதற்கான பொருளாதார அடிப்படையைப் பகுத்தாய்வது அசியமான ஒன்றாகும். அடுத்த வகுப்பில் அதைப் பார்ப்போம்.

 

 

 

 

No comments:

Post a Comment