Sunday, 4 June 2023

01) லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” சுருக்கமும் சாரமும் (முதல் பகுதி)

 (“செங்கொடி மையம்என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 86- வது வார வகுப்பு – 04-06-2023  )

 “அரசும் புரட்சியும்” என்கிற இந்த நூலை லெனின் 1917ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எழுதினார். அதாவது ருஷ்யப் புரட்சி நெருங்கும் போது எழுதப்பட்டது. இந்த நூலுக்கு முன் “அரசு குறித்து மார்க்சியம்” என்ற தலைப்பில், நீல அட்டைபோட்ட குறிப்பேட்டில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் அரசு பற்றி கூறியதை லெனின் தொகுத்தார். 1916 ஆம் ஆண்டு தொடங்கி 1917ஆம் ஆண்டு வரை இதை எழுதினார். அப்படி தொகுக்கின்ற போதே, காவுத்ஸ்கி, பெனெகக், பெர்ன்ஷ்டைன் ஆகியோர்களின் நூல்களைப் படித்து சில கருத்துக்களை எடுத்து விமர்சித்திருந்தார். இந்த குறிப்புகளின் அடிப்படையில்தான் “அரசும் புரட்சியும்” என்கிற நூல் எழுதப்பட்டது.

 லெனின் படைத்தளித்த முதன்மையான நூல்களில் “அரசும் புரட்சியும்” ஒன்று. இந்த நூலில் லெனின் ஒரு பெரிய வேலையைச் செய்திருக்கிறார், மார்க்சும் எங்கெல்சும் அரசு குறித்து பேசியதை நேரடியாக இந்த நூலில் மேற்கோளிட்டுள்ளார். இதைப் படிப்பதின் மூலம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் ஆகியோர்களின் அரசு பற்றிய கருத்துக்களை ஒரே நூலில் தொகுப்பாக நமக்கு கிடைத்திருக்கிறது. இது பற்றியும் “அரசும் புரட்சியும்” நூல் எழுதப்பட்டதின் நோக்கத்தையும் லெனின் கூறியதை அப்படியே பார்ப்போம்.

 

மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிலைமையில், மெய்யாகவே மார்க்ஸ், அரசு என்னும் பொருள் குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவதே நமது தலையாய கடமை. இதற்கு, நேரடியாக மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் இருந்து நீண்ட பல மேற்கோள்கள் தருவது இன்றியமையாதது. நீண்ட மேற்கோள்கள் வாசகத்தைக் கடினமாக்கிவிடும், சுவையாகவும் எளிதாகவும் பலரும் படிக்கத்தக்க வாசகமாக்குவதற்குத் தடையாகிவிடும் என்பது மெய்தான்.

 மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களில் அரசு என்னும் பொருள் குறித்து காணப்படும் எல்லாப் பகுதிகளையும், அல்லது அத்தியாவசியமான எல்லாப் பகுதிகளையும் கூடுமான வரை முழு அளவில் எப்படியும் மேற்கோளாய்க் கொடுத்தாக வேண்டும். அப்பொழுதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் மூலவர்களுடைய கருத்துக்களின் முழுப் பரிமாணத்தையும், அவற்றின் வளர்ச்சியையும் பற்றி வாசகர் சுயேச்சையான ஓர் கருத்தை வந்தடைய முடியும், இக்கருததுக்கள் தற்போது மேலோங்கிவிட்டகாவுத்ஸ்கிவாதத்தால்திரித்துப் புரட்டப்பட்டிருப்பதை ஆவண ஆதாரத்தால் நிரூபித்து, கண்கூடாய்ப் புலப்படுத்த முடியும்.” (211)

                 மார்க்சியத்தை திருத்துபவர்களுக்கு எதிராக, மார்க்சியத்தை நிறுவுகிற நூலில் மேற்கோளிட்டு எழுதுவதை தவிர்க்க முடியாது. ஒரு கருத்தை ஆதாரபூர்வமாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தக் கடினத்தை சந்தித்துதான் ஆக வேண்டும்.

       சுரண்டும் வர்க்கம், தங்களது சுரண்டலைக் காப்பாற்றுவதற்கு அரசையே மிகுந்த அளவுக்கு பயன்படுத்துகிறது. ராணுவம், காவல்துறை, நீதித்துறை போன்றவை அரசின் துணை சாதனமே ஆகும். அதனால் கம்யூனிஸ்டுகள் அரசு பற்றி மார்க்சிய வழியில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகிறது. மேலும் அரசு பற்றி மார்க்சியத்துக்கு எதிரான தவறானக் கருத்துக்கள் நிறைய இருக்கின்றன அதை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது. மேலும் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்து தொழிலாளர்கள் விடுபடுவதற்கும் அரசு பற்றிய தெளிவு வேண்டும்.

       நான் எழுதும் நூல்களில் அதிகமான மேகோள்களைப் பயன்படுத்துவேன், ஆனால் வகுப்பில் தேவையின் பொருட்டு சில மட்டுமே எடுத்துக்காட்டுவேன். இந்த வகுப்பில் மேற்கோள்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

       முன்னுரையில் லெனின் கூறியதை பார்ப்போம்.

 “"அரசு" குறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கில் இருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.

 

முதற்கண், அரசு பற்றிய மார்க்ஸ், எங்கெல்ஸ் போதனையைப் பரிசீலிக்கிறோம். இந்தப் போதனையில் கவனியாது புறக்கணிக்கப்பட்டிருக்கும் அல்லது சந்தர்ப்பவாத முறையில் திரித்துப் புரட்டப்பட்டிருக்கும் கூறுகளை மிகவும் முக்கியமாய் விளக்குகிறோம். அடுத்து, இந்தப் புரட்டல்களுக்குப் பிரதான காரணகர்தாவாகிய கார்ல் காவுத்ஸ்கி குறித்து தனிப்பட விவாதிக்கிறோம்.” (208)

      லெனின், இந்த நூலில் அரசு குறித்த மார்க்சியக் கருத்துகளை தொகுக்கவும் அதனைப் புரட்டுகிற கருத்துக்களை விமர்சிக்கவும் செய்துள்ளார். இன்று நம்நாட்டிலும் அரசு பற்றிய புரட்டல் கருத்துக்கள் நிறைய இருக்கின்றன. அரசின் வர்க்க சார்பை மறந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிற அமைதிவாதிகளின் குரல் நிறைய கேட்கிறது. அதனால் இன்றைய நிலையில் நாமும், அரசு பற்றிய மார்க்சியக் காண்ணோட்டத்தை அறிந்த கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். அதனால் இன்று லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்ற நூலை எடுத்துப் படிப்பது பொருத்தமாகவே இருக்கிறது.

       ருஷ்யப் புரட்சி நெருங்கிய நேரத்தில் இந்த நூலை லெனின் எழுதியுள்ளார். அப்படி என்றால் நடைமுறைக்கு அரசு பற்றிய மார்க்சியப் புரிதல் எந்தளவுக்கு அவசியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால், “அரசும் புரட்சியும்” என்கிற லெனினது நூலை நாம் கவனமாகப் படிக்க வேண்டும்.

முதல் அத்தியாயம்

வர்க்கச் சமூகமும் அரசும்

           “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் ஆறு அத்தியாயங்கள் இருக்கின்றன. இதில் வர்க்கச் சமூகமும் அரசும் என்கிற முதல் அத்தியாயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் உள்ள உட்பிரிவின் தலைப்புகளைப் பார்த்தாலேயே எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

 1) வர்க்கப் பமைமைகள் இணக்கம் காண முடியாது போனதின்   

   விளைவாய்த் தோன்றியதே அரசு

2) ஆயுதமேந்தியவர்களைக் கொண்ட தனிவகைப் படைகளும்,

   சிறைக்கூடங்களும் இன்ன பிறவும்.

3) ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவியே அரசு.

4) அரசு “உலர்ந்து உதிர்வதும்” வன்முறையிலான புரட்சியும்.

 முதல் அத்தியாயத்தின் முதல் பிரிவு, வர்க்கப் பமைமைகள் இணக்கம் காண முடியாது போனதின் விளைவாய்த் தோன்றியதே அரசு. இந்த உட்பிரிவின் தலைப்பே அரசின் தோற்றத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

       மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்நாளில், ஒடுக்கும் வர்க்கத்தினர் அவர்களைத் தொடர்ந்து வேட்டையாடியது. அவர்களின் கோட்பாடுகளை மிகவும் காட்டுமிராண்டித்தனமான வெறித்தனத்துடனும், மிகவும் ஆவேசமான வெறுப்புடனும், பொய்களையும் அவதூறுகளையும் நேர்மையற்ற பரப்புரையும் செய்தனர். ஆனால் மறைந்த பிறகு அவர்களை அபாயமற்ற வழிபாட்டு சின்னமாக மாற்றுகின்றனர். இந்த வழிபாட்டின் நோக்கம், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை திருப்தி செய்து ஏமாற்றுவதற்கே ஆகும். புரட்சியாளர்களை வழிபாட்டுப் பொருளாக ஆக்குவதின் நோக்கம், அவர்களின் கோட்பாட்டில் உள்ள புரட்சிகர போக்கை மழுங்கடிப்பதற்கே ஆகும். இதை முதலாளித்துவ வர்க்கத்தார் மட்டும் செய்யவில்லை, தொழிலாளர் இயக்கத்தில் உள்ள சந்தர்ப்பவாதிகளும் மார்க்சியத்தை மழுங்கடிக்கவே செய்கின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தாரும் சந்தர்ப்பவாதிகளும் இந்தப் போக்கில் ஒன்றுபடுகின்றனர். முதலாளித்துவ வர்க்கத்தாரும் சந்தர்ப்பவாதிகளும் மார்க்சிய விரோதிகளே ஆவர்.

 மார்க்சை வழிபாட்டுப் பொருளாக ஆக்குவதை முதலாளித்துவம் செய்தால் பரவாயில்லை அதை ஓரளவுக்கு புரிந்து எதிர்க்க முடியும், ஆனால் தொழிலாளர் இயக்கத்தில் இத்தகைய போக்கு இருந்தால் அதை எதிர்ப்பது மிகவும் கடினமாகும். ஏன் என்றால் மார்க்சிய அடிப்படைப் புரிதலற்ற தொழிலாளர்களை சந்தர்ப்ப வாதிகள் தங்களது நோக்கத்திற்கு ஏற்ப மாற்றி இருப்பார்கள். அப்படிப்பட்ட தொழிலாளர்களை மிகவும் போராடி தெளிவு பெறச் செய்ய வேண்டும்.

       மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்தவர்களிடம் இந்த ஏமாற்று வேலை நடக்காது. அதனால் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய அடிப்படைக் கோட்பாட்டை நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்துவதை இனம் கண்டு எதிர்க்க முடியும். தொழிலாளர்களுக்கு மார்க்சிய அடிப்படையில் வழிகாட்டியாக கம்யூனிஸ்டுகள் செயல்படவும் முடியும்.

       மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு, அவர் எழுதிய மூலதனம் நூல்களின், இரண்டாம் மூன்றாம் தொகுதிக்கான தயாரிப்பில் எங்கெல்ஸ் ஈடுபட்டார். அதனால் அவரது “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலை முழுதாக முடிக்காமல் போய்விட்டது. அப்படி இருந்தும், மூலதனம் நூல்களின் வெளியீட்டுக்கு இடையில் குறிப்பிடத்தக்க இரண்டு நூலை எங்கெல்ஸ் எழுதினார், அது “லுத்விக் ஃபாயர்பாகும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்”, “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்”. லெனின் இந்த “அரசும் புரட்சியும்” என்கிற நூலில் “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற இந்த நூலில் இருந்து அதிகமான மேற்கோள்களைக் கொடுத்துள்ளார். நமக்கு பெரும் ஆதார நூல் இதுவே ஆகும்.

       ஆதி கம்யூனிச சமூகமான பழங்குடி சமூகத்தில் வர்க்க வேறுபாடு கிடையாது. அவர்கள் கூட்டாக வேலை செய்தனர், கிடைத்தை தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர். அதனால் அங்கே வர்க்க பிரிவு ஏற்படவில்லை. பழங்குடிகள் புதியதாக கருவிகளைப் பயன்படுத்திய போதும், வேலைப் பிரிவினை ஏற்பட்ட போதும் வழக்கமாக கிடைத்த வாழ்வாதாரப் பொருட்களைவிட சற்று கூடுதலாகக் கிடைத்தது. அதாவது உபரியாகக் கிடைத்து. இந்த உபரியை அபகரிப்பதற்குதான் அரசு தேவைப்பட்டது. ஏன் என்றால் இந்த உபரியை சிலர் மட்டும் அபகரிப்பதை தொடர்ந்து மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உழைப்பர்கள் தங்களது பங்கைக் கேட்கவே செய்வார்கள்.

 வேலை வாங்குபவன் வேலை செய்பவன், பணக்காரன் ஏழை என்கிற பிரிவு உபரியாய் கிடைத்ததின் விளைவேயாகும். பழங்குடி சமூகத்தில் அவர்கள் பயன்படுத்திய எளிய கருவிகளை, பொதுவாக வைத்தனர், பிற்காலத்தில் அதாவது உபரி தோன்றிய காலத்தில் கருவிகள் பொதுவில் இல்லாது சிலர் உடைமையாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் பணம் படைத்தவன், ஏழை ஆகிய இருவர்களிடையே ஏற்பட்ட இணக்கம் காண முடியாத பகைமை காரணமாக ஏற்படும் கலகத்தை தடுப்பதற்கு ஏற்பட்டதே அரசு. என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அதை மார்க்சிய மூலவர்கள் கூறிய சொற்களிலேயே படித்தாலேயே தெளிவு கிட்டும்.

 லெனின் காட்டும் எங்கெல்ஸ் எழுத்தின் மேற்கோளைப் பார்ப்போம்.

 "சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமூகம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டுவிட்டது. இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய் பிளவுண்டு விட்டது, இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டுவிடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலைத் தணித்து 'ஒழுங்கின்' வரம்புகளுக்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை, வெளிப்பார்வைக்குச் சமூகத்துக்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்தது ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது'' (212)

       எங்கெல்சின் இந்த சொற்றொடர்கள், அரசின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அரசு குறித்த மார்க்சிய அடிப்படைக் கருத்தையும் தெளிவாய் சுட்டிக்காட்டி உள்ளாது.

     மேலே கூறப்பட்ட கருத்தை எதிர் மறையில் கூற வேண்டும் என்றால் இப்படி கூறலாம். அரசு என்ற ஒன்று இருக்கிறது என்றால் அங்கே இணக்கம் காண முடியாத வர்க்கப் பமைமை இருக்கிறது.

       திருத்தல்வாதிகள் இந்த இடத்தில் இருந்தே தமது வேலையைத் தொடங்ககின்றனர். வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் எங்கு இருக்கிறதோ அங்கே அரசு இருக்கிறது என்பதை, திருத்தல்வாதிகளால் மறுக்க முடியவில்லை. அதனால் வர்க்க வேறுபாட்டை ஒப்புக் கொண்டு அரசின் வர்க்க சார்பை மறைக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சமூகத்தில் வர்க்க வேறுபாடு இருக்கிறது என்பது உண்மைதான், இந்த வேறுபாட்டை போக்கி இரு வர்க்கத்துக்கும் இணக்கம் ஏற்படுவதற்கு அரசு தோன்றியது என்று மார்க்சியக் கருத்தை திரிக்கின்றனர். மார்க்சிய திருத்தல்வாதிகள் எப்போதும் மார்ச்சிய சொற்களைப் பயன்படுத்தியே தமது வேலையை செய்கின்றனர்.

        ஆதிக்க வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு. வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை நிதானப்படுத்துவற்கும், இந்த ஒடுக்குமுறையை சட்டப்பூர்வமாக்குவதற்கும், இந்த சுரண்டல் சமூகத்தை நிலைநிறுத்துவதற்கும் உருவானதே அரசு. மேலே குறிப்பிட்ட எங்கெல்சின் கருத்தில் இரட்டை மேற்கோளிட்டு “ஒழுங்கு” என்று கூறியிருப்பார். இந்த இரட்டை மேற்கோள் போட்டதை சுட்டிக்காட்டாமல், திருத்தல்வாதிகள் ஒழுங்கு என்றால் வர்க்கங்களுக்கு இடையே இணக்கம் உருவாக்குகிற ஒழுங்கு என்று திரிக்கின்றனர்.

       ஓரளவுக்கு சோஷலிச சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய திருத்தல் போக்கை திருத்தல்வாதிகள் செய்கின்றனர்.

 முதல் அத்தியாத்தின், இரண்டாவது பிரிவு, ஆயுதமேந்தியவர்களைக் கொண்ட தனிவகைப் படைகளும், சிறைக்கூடங்களும் இன்ன பிறவும்.

 அரசின் சிறப்பு உறுப்புகளான ஆயுதமேந்திய படையான ராணுவம், காவல்துறை, சிறைகூடம் பற்றி இந்தப் பிரிவில் லெனின் பேசுகிறார்.

 பழங்குடி சமூத்தில் வேட்டை ஆடுவதற்கும் தங்கள் குடியை காப்பாற்றுவதற்கும் ஆயுதம் ஏந்தியிருந்தனர். இந்த பழங்குடியில் அனைவரும் ஆயுதம் ஏந்தியவராக காணப்படுகின்றனர். வர்க்க வேறுபாடு ஏற்பட்டப் பிறகு அரசின் கட்டுப்பாட்டிற்குள் சமூகம் வந்த பிறகு, பழங்குடியின் மக்கள் ராணுவம் சாத்தியமற்றதாகிவிடுகிறது. இதுவரை சமூகம் கண்டிராத சிறைச்சாலை, நிரந்திர காவல் நிலையம், ராணுவம் போன்ற துணைச் சாதனங்கள் தோன்றியது.

 வர்க்க சமூகத்தில் மக்கள் ஆயுதம் ஏந்துபவராக இருந்தால், வர்க்கப் பகை காரணமாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்குவர். அதன் காரணமாகவே வர்க்க சார்பான அரசில், ஆயுதம் தாங்குபவர்கள் என்கிற தனி இராணுவத்தை படைத்துள்ளது. அரசு தனது கட்டுப்பாட்டில் ராணுத்தை வைத்துள்ளது.

    முதல் அத்தியாயத்தின், மூன்றாவது பிரிவு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவியே அரசு.

 இந்த பிரிவின் தலைப்பே அரசின் வர்க்கத் தன்மையை மார்க்சிய வழியில் வெளிப்படுத்தி உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இருக்கின்றனர். அப்படி ஏற்றுக் கொள்ள முடியாத காவுத்ஸ்கியைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

       மார்க்சிய அடிப்படைகளை ஏற்றுக் கொண்டது போல் தொடங்கிவிட்டு, இறுதியில் மார்க்சியத்தை காவுத்ஸ்கி மறுத்துவிடுவார். இதே பாணியில் எழுதுபவர்களை நம் நாட்டில் பலரைக் காணலாம். ஆனால் அவர்கள் யார் என்பதை இங்கே சொல்லப் போவதில்லை. அவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் போது அறிந்து கொள்ளுங்கள். இங்கே இப்படிப்பட்ட தலைவர்கள் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர் என்கிற தகவலே வகுப்புக்குப் போதுமானது.

       காவுத்ஸ்கியின் எழுத்துப் பாணியை அறிவதற்கு அவரது எழுத்தையே பார்ப்போம்.

 

"...வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு உதித்தது என்பதனாலும், அதே போதில் இந்த வர்க்கங்களுக்கிடையிலான மோதல்களில் இருந்தே அது உதித்தது என்பதனாலும், பொதுவாக அது மிகப் பெரும் பலம்படைத்த, பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகி விடுகிறது. அரசின் உதவியால் இவ்வர்க்கம் அரசியல் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கும், சுரண்டு வதற்கும் இவ்வாறு புதிய சாதனங்களைப் பெற்றுக் கொள்கிறது...

....

நவீன காலப் பிரதிநிதித்துவ அரசு, கூலி உழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கான கருவியாய் இருக்கிறது. ஆனால் விதிவிலக்காய்ச் சில காலகட்டங்கள் ஏற்படுவது உண்டு. ஒன்றோடொன்று போரிடும் வர்க்கங்கள் ஒன்றுக்கொன்று ஏறத்தாழ சமநிலை பெறும் இக்கட்டங்களில் அரசு அதிகாரம் வெளித்தோற்றத்துக்கு நடுவர் போலாகி, சொற்ப காலத்துக்கு இரு தரப்பாரிடமிருந்தும் ஓரளவு சுயேச்சையுடையதாகிறது..." (221 -222)

       - என்று காவுத்ஸ்கி கூறியுள்ளார்.  முதலில் தெளிவாக மார்க்சிய பார்வையில் பேசிவிட்டு, இறுதியில் அரசு என்பது சில நேரங்களில் வர்க்க சார்ப்பற்றதாய் நடுநிலையில் செயல்படும் என்று மார்க்சியத்துக்கு விரோதமான கருத்தை அவர் கூறியுள்ளார்.

       லெனின் இதற்கு மறுப்பாக எங்கெல்சின் கருத்தை மேற்கோளிடுகிறார். வர்க்க வேறுபாட்டில் தோன்றிய அரசு, வர்க்க இருக்கும்வரை வர்க்க சார்புடையதாகவே செயல்படும். வர்க்கம் மறைவும் போது அரசும் மறைந்து போகும்.

 

 "… அரசு அனாதிக் காலம் முதலாய் இருந்துள்ள ஒன்றல்ல. அரசின்றியே நிலவிய சமூகங்கள். அரசையும் அரசு அதிகாரத்தையும் அறியாத சமூகங்கள் இருந்திருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் -சமுதாயம் வர்க்கங்களாய்ப் பிளவுண்டதுடன் இணைந்த ஒரு கட்டத்தில் அரசு இந்தப் பிளவின் காரணமாய் இன்றியமையாததாகியது. இந்த வர்க்கங்கள் பொருளுற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாய் இருப்பது மறைவதோடு, நேரடியாகவே இடையூறுமாகிவிடும் ஒரு கட்டத்தைப் பொருளுற்பத்தி வளர்ச்சியில் இப்பொழுது நாம் விரைவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். முந்திய ஒரு கட்டத்தில் வர்க்கங்கள் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழுந்தது போலவே தவிர்க்க முடியாதவாறு அவை மறைந்தொழியும். அவற்றுடன்கூடவே அரசும் தவிர்க்க முடியாதவாறு மறைந்தொழியும்." (225)

      அரசு எதன் காரணமாக தோன்றியதோ அந்தக் காரணங்கள் மறையாதவரை அரசு வர்க்க சார்பாகவே செயல்படும்.

முதல் அத்தியாயத்தின், நான்காவது பிரிவு, அரசு “உலர்ந்து உதிர்வதும்” வன்முறையிலான புரட்சியும்.

இந்த இடத்தில் எனது அனுபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நான் சிறியவனாக இருக்கும் போதே மார்க்சிய நூல்களை வாங்கத் தொடங்கினேன். பொதுவாக நூல்களை அதிகம் வாங்கி படிப்பேன். அந்த படிப்பு பழக்கம் என்னை மார்க்சியத்தை நோக்கி அழைத்துச் சென்றது. மார்க்சிய நூல்கள் அன்று மிகவும் குறைந்த விலையில் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதனால், காசு கிடைக்கும் போதெல்லாம், பல தலைப்புகளைக் கொண்ட நூல்களை வாங்கி வைத்துக் கொண்டேன். தொடக்கத்தில் மார்க்சியத்தை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் படிக்காமல் அதில் உள்ள கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொண்டேன். பொதுவுடைமை ஆக்கினால் அனைத்தும் சரியாகிவிடும் என்று கருதிக் கொண்டிருந்தேன். 

லெனின் எழுதிய “அரசும் புரட்சியும்” என்கிற நூலைப் படித்தவுடன், அரசு உலர்ந்து உதிர்வதற்கான பொருளாதார வளர்ச்சி நிலைமைகளை இந்த நூல் சுட்டிக் காட்டியதைப் படித்தவுடன்தான் தெரிந்தது, நான் படித்த முறையே தவறு, மார்க்சியத்தை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும். “அரசும் புரட்சியும்” என்கிற இந்த நூலைப் படித்தப் பிறகுதான் என்னுடைய படிப்பு முறையே விஞ்ஞானத் தன்மை உடையதாக மாறியது. தத்துவம், அரசியல் நூல்களையே அதிகம் படித்தேன். அதுவும் சோஷலிசம் பற்றிய நூல்களை தேடித்தேடிப் படித்தேன். “அரசும் புரட்சியும்” என்கிற இந்த நூலைப் படித்தவுடன் மார்க்சிய அரசியல் பொருளாதார நூல்களைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். பொருளாதார நூல்களைப் படிக்கத் தொடங்கியப் பிறகே மார்க்சிய விஞ்ஞானப் பார்வை எனக்குக் கிட்டியது.

எங்கெல்ஸ் எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” என்கிற நூலில் இருந்து ஒரு நீண்ட மேற்கோளை லெனின் தருகிறார். அதில் எங்கெல்ஸ் என்ன கூறுகிறார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

பாட்டாளி வர்க்கம் சோஷலிசப் புரட்சியை நிகழ்த்திய உடன், முதலாவதாக உற்பத்தி சாதனங்களை அரசுச் சொத்தாக்கும். இதன் மூலம் பாட்டாளி வர்க்கம் என்கிற தன்னிலையை நீக்கிக் கொள்ளும். படிப்படியாக அனைத்து வர்க்க வேறுபாடுகளையும் முடிவுகட்டும். இந்த பாட்டாளி வர்க்க அரசு, இதுவரை அரசாய் இந்ததற்கு முடிவுகட்டும். இறுதியில் அரசு அனைவருமான பிரதிநிதியாகும் போது அரசு என்கிற ஒன்று தேவையற்றுப் போகும். வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் அடக்குவதற்கு என்ற எந்த வர்க்கமும் இல்லாது போனதால் அரசு உலர்ந்து உதிர்ந்து விடும்.

எங்கெல்சின் இந்தக் கருத்து மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். அதை நாம் அப்படியே பார்ப்போம்.

 

“பாட்டாளி வர்க்கம் அரசு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி சாதனங்களை முதலாவதாக அரசுச் சொத்தாய் மாற்றுகிறது. ஆனால் இதைச் செய்வதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக்கொள்கிறது, எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்கப் பகைமைகளுக்கும் முடிவு கட்டுகிறது, அரசு அரசாய் இருப்பதற்கும் முடிவு கட்டுகிறது. இது வரை சமுதாயம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு, அரசு தேவைப்பட்டது. அதாவது அந்தந்தக் காலத்தில் சுரண்டும் வர்க்கமாய் இருக்கும் குறிப்பிட்ட வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது; அதன் பொருளுற்பத்தியின் புற நிலைமைகளைப் பராமரிக்கவும், இன்னும் முக்கியமாய் சுரண்டப்படும் வர்க்கங்களை அந்தந்தப் பொருளுற்பத்தி அமைப்புக்கு பொருத்தமான ஒடுக்கு முறை நிலையில் பலவந்தமாக வைத்திருப்பதற்கும் ஓர் ஒழுங்கமைப்பு தேவைப்பட்டது.

 

இந்த அரசு, சமுதாயம் முழுவதன் அதிகார பூர்வமான பிரதிநிதியாக, கண்கூடான அதன் உருவகத் திரட்சியாக விளங்கிற்று. ஆனால் எந்த வர்க்கம் தன்னுடைய காலத்தில் சமுதாயம் முழுவதற்கும் தானே பிரதிநிதியாக இருந்ததோ, இருந்த அளவுக்குத்தான், அந்த வர்க்கத்தின் அரசாய், அதாவது புராதன காலத்தில் அடிமையுடைமைக் குடிகளின் அரசாகவும், மத்திய காலத்தில் பிரபுக்களின் அரசாகவும், நாம் வாழும் இக்காலத்தில் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாகவும் இருந்த அளவுக்குத் தான், அரசால் இவ்வாறு விளங்க முடிந்தது.

 

இறுதியில் அரசானது சமுதாயம் முழுமைக்கும் மெய்யான பிரதிநிதியாகும் போது, அது தன்னைத் தானே அவசியமற்றதாக்கிக் கொள்கிறது. இனி கீழ்ப்படுத்தி வைக்க வேண்டிய சமூக வர்க்கம் எதுவும் இல்லாமற் போனதும், வர்க்க ஆதிக்கமும், பொருளுற்பத்தியில் தற்போதுள்ள அராஜகத்தின் அடிப்படையில் நடைபெறும் தனியார் வாழ்வுப் போராட்டமும், இந்தப் போராட்டம் காரணமாய் எழும் மோதல்களும், மட்டுமீறிய செயல்களும் நீக்கப்பட்டதும், அடக்கி வைப்பதற்கு எதுவும் இல்லாமற் போகிறது, ஆதலால் தனிவகை அடக்குமுறை சக்தியான அரசு, இனிமேல் அவசியமில்லை என்றாகிறது.

 

அரசானது மெய்யாகவே சமுதாயம் முழுதுக்கும் பிரதிநிதியாய் முன்வந்து புரிந்திடும் முதலாவது செயல் …….. அரசு என்ற முறையில் சுயேச்சையாய் அது புரிந்திடும் இறுதிச் செயலாகவும் அமைந்து விடுகிறது. சமூக உறவுகளில் அரசின் தலையீடு ஒரு துறைக்குப்பின் இன்னொன்றாகத் தேவையற்றதாகிப் பிறகு தானாகவே தணிந்து அணைந்து விடுகிறது. ஆட்களின் ஆளுகை காரியங்களின் நிர்வாகமாய், பொருளுற்பத்தி வேலைகளது செயலாட்சியாய் மாறி விடுகிறது. அரசு “ஒழிக்கப்படவில்லை, அது உலர்ந்து உதிர்ந்து விடுகிறது.” (226-228)

       இதைத் தொடர்ந்து எங்கெல்ஸ் கூறிய கருத்து நமக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. “சுதந்திர மக்கள் அரசு” என்பது விஞ்ஞான வழியில் குறைபாடான கருத்து என்கிறார் எங்கெல்ஸ். “மக்கள் அரசு” என்று கூறுவதினால் அரசின் வர்க்கத் தன்மை மறைந்துவிடாது. அராஜகவாதிகள் அனைத்துப் பிரச்சினைக்கும் அரசே காரணம் என்று கருதுகின்றனர். அதனால் அரசை ஒழித்தலைப் பற்றி பேசுகின்றனர். அரசு ஒழிய வேண்டுமானால் அதற்கு பல கட்டங்களை நாம் கடக்க வேண்டியிருக்கிறது. நாம் நினைத்ததுபடி எல்லாம் அனைத்தையும் செய்திட முடியாது. உற்பத்திச் சக்திகளின் குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகே அரசு உலர்ந்து உதிரும்.

       எங்கெல்ஸ் கருத்தை முன்வைத்து லெனின் கூறுவது மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டியதாகும்.

       முதலாளித்துவ அரசு உலர்ந்து உதிர்வதில்லை, புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கத்தால் ஒழிக்கப்படுகிறது, வளர்ச்சி அடைந்த கம்யூனிச சமூகத்தில் பாட்டாளி வர்க்க அரசு உலர்ந்து உதிர்கிறது. அதாவது உலர்ந்து உதிரப்போவது முதலாளித்துவ அரசு அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் அரசே உலர்ந்து உதிர்கிறது.

       அரசு உலர்ந்து உதிரும் என்று கூறியவுடன் இந்தக் கூற்று போர்குணத்தை மழுங்கடிக்கும் என்று அதிதீவிர புரட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த போக்கு பலாத்கார புரட்சியை மறுதலிப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனால் உலர்ந்து உதிர்வது பற்றி எழுதிய “டூரிங்குக்கு மறுப்பு” நூலில் எங்கெல்ஸ் பலப்பிரயோகக் கோட்பாடு பற்றி மூன்று அத்தியாயம் எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை லெனின் பலாத்காரப் புரட்சியைப் போற்றும் மெய்யான புகழுரை என்று புகழ்ந்துள்ளார்.

 லெனின் சுட்டிக்காட்டுகிற “டூரிங்குக்கு மறுப்பு” என்ற நூலில் இருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.

 

" ... வரலாற்றில், பலாத்காரம் இன்னொரு பாத்திரமும் ஆற்றுகிறது, புரட்சிப் பாத்திரமும் ஆற்றுகிறது. மார்க்சின் சொற்களில் கூறுவதெனில், புதிய சமுதாயத்தைக் கருக் கொண்டுள்ள ஒவ்வொரு பழைய சமூகத்துக்கும் அந்தப் பலாத்காரம் மருத்துவத் தாதியாய்ச் செயல்படுகிறது. சமூக இயக்கமானது செத்து மடிந்து இறுகிப்போய் விட்ட, அரசியல் வடிவங்களைத் தகர்த்துக் கொண்டு பலவந்தமாய்த் தனக்குப் பாதை வகுத்துக் கொள்ள உதவும் கருவியாய்ச் செயல்படுகிறது." (233)

       இந்த பலப்பிரயோகப் புரட்சி தவிர்க்க முடியாது என்று மார்க்சும், எங்கெல்சும் கூறப்படுவது முதலாளித்துவ அரசைக் குறித்தே ஆகும். பலப்பிரயோகம் செய்திடாமல் முதலாளித்துவ அரசை, பாட்டாளி வர்க்கத்தால் வீழ்த்த முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற அரசு தான் “உலர்ந்து உதிரும்” என்று கூறப்பட்டுள்ளது. உலர்ந்து உதிர்வதற்கு பலப்பிரயோகம் செய்யத் தேவையில்லை, அதற்கான பொருளாதார வளர்ச்சியே போதுமானது.

       நான் எழுதிய “லெனின் வாழ்வும் படைப்பும்” என்கிற நூலில் இரண்டு நூல்களைப் பற்றி மிகவும் குறைவாகவே எழுதினேன். அது எந்த நூல் என்றால் “அரசும் புரட்சியும்” “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” இந்த இரு நூலையும் மொத்தமாகக் கூறும் இடத்தில் வைத்து பேசாது தனித்து பேச வேண்டும் என்று நினைத்தேன். “அரசும் புரட்சியும்” என்கிற நூலைப் பற்றிய தொடர் வகுப்பு முடித்தப் பிறகு நேரம் ஒதுக்கி “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலை வகுப்பெடுக்க முயற்சி செய்வேன்.

 இரண்டாம் அத்தியாயம்

அரசும் புரட்சியும்

1848-51ஆம் ஆண்டுகளின் அனுபவம்

       இரண்டாம் அத்தியாயத்தின் முதலாவது பிரிவு, புரட்சி தொடங்கும் தறுவாயில்.

 மார்க்சியம் வளர்ச்சி அடைந்த போது வெளிவந்த நூல்கள் “தத்துவத்தின் வறுமை”, “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”. இந்த இரு நூல்களும் 1848ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து எழுதுப்பட்டவை. அந்த நேரத்தில் அரசு குறித்து மார்க்ஸ் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த அத்தியாயத்தில் லெனின் எடுத்துக் காட்டுகிறார்.

       மார்க்ஸ் எழுதிய “தத்துவத்தின் வறுமை” என்கிற நூலில் காணப்படும் பகுதியை பார்ப்போம்.

 

."….தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமூகத்துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக் கூடிய அரசியல் அதிகாரம் இனி இராது, ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப் பகைமையின் அதிகாரபூர்வமான வெளிப்பாடாகும்" (237)

       இங்கே மார்க்ஸ் வர்க்கம் ஒழிக்கப்பட்டவுடன் அரசு மறைந்துவிடும் என்று பொதுவான விளக்கத்தையே இந்த நூலில் தந்துள்ளார். இந்த விளக்கத்தை, மார்க்சும்-எங்கெல்சும் 1847 ஆம் ஆண்டு எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” என்கிற ஆவணத்தில் எழுதியதுடன் லெனின் ஒப்பிட்டுப் பார்க்க சொல்கிறார்.

 மார்க்சிய கருத்துக்கள் படிப்படியாக பரிணமிப்பதை லெனின் எடுத்துக் காட்டுகிறார்.

 

"...பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவது படி….

.

பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்த அளவைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்" (237)

 புரட்சிக்குப் பின் பாட்டாளி வர்க்க அரசின் செயற்பாட்டைப் பற்றி, இந்த இரு நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு பாட்டாளி வர்க்க அரசை “பாட்டாளி வர்க்கச் சார்வாதிகாரம்” என்று மார்க்சும்-எங்கெல்சும் அழைத்தனர். இந்த வார்த்தையை எங்கெல்ஸ் தனத நூலில் பயன்படுத்தாவிட்டாலும் அரசு சர்வாதிகாரமாக செயற்படுவதையே குறிப்பிட்டுள்ளது.

 அற்பவாதக் குட்டி முதலாளித்துவ பிரம்மையில் உள்ளவர்கள், ஜனநாயகத்தின் சமாதான வழிப்பட்ட வளர்ச்சியைப் பற்றி பேசுகின்றனர். இது மார்க்சியம் கூறுகிற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கோட்பாட்டுக்கு எதிரானதாகும்.

       நம் நாட்டிலும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்ற சொல்லைக் கேட்டாலேயே பலர் பதறுகின்றனர். இவர்களுக்கு தனிநபர் சர்வாதிகாரத்துக்கும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை.

       பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்திய பிறகும், அதன் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், சிந்தனை அளவில் தொடரத்தான் செய்யும். பெரும்பான்மையான தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சிறுபான்மையான முதலாளித்துவ போக்குடையவர்களை ஒடுக்குவதற்கு “பாட்டாளி வர்க்க சர்வாதிகார” அரசு தேவைப்படுகிறது.  அரசு என்றாலேயே ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்கும் கருவிதான்.

       குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் வர்க்கப் போராட்டத்துக்கு பதிலாக, வர்க்க இசைவு பற்றி பகற்கனவு காண்கின்றனர். இவர்களின் போக்கு போலி சோஷலிசமாகும். பாட்டாளி வர்க்கத்தைப் போல, சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்துவதைப் பற்றி பேசாமல், பெரும்பான்மையினர் இன்றைய நிலைமையைப் புரிந்து கொண்டுவிடுவார்கள் என்றும் சிறுபான்மையினர் சமாதானமாகவே அவர்களுக்குக் கீழ்ப்படிந்து விடுவர் என்று கருதுகின்றனர். இந்த குட்டி முதலாளித்துவ சிந்தனை என்பது அரசு பற்றிய வர்க்க சார்பை அறியாததில் இருந்து வருகிறது. இந்தக் போக்கு நடைமுறையில் உழைக்கும் வர்க்கங்களுடைய நலனுக்கு துரோகம் இழைக்கிறது.

       அரசின் வர்க்கத் தன்மையையும், பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையையும் அறிந்து கொள்ளாதவரை குட்டி முதலாளித்துவ பகற்கனவில் வீழவேண்டியதுதான். மார்க்சியம் அரசின் வர்க்கத் தன்மையையும், பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையும் நமக்கு போதிக்கிறது. பாட்டாளிகளைப் பற்றி லெனின் இங்கே கூறியதைப் பார்ப்போம்.

 

"முதலாளித்துவ ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்தப் பணிக்குத் தயார் செய்யப்படுகிறது, இந்தப் பணியைச் செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்பாடும், சக்தியும் அளிக்கப்படுகிறது.

 

முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லாக் குட்டிமுதலாளித்துவப் பகுதிகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது; ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒரு சேர இணைத்து ஒன்றுபடுத்துகிறது, நிறுவன வழியில் ஒழுங்கமையச் செய்கிறது.

 

பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் பெருவீதப் பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது.

 

ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்குகிறது.  பாட்டாளி வர்க்கத்தினரைக் காட்டிலும் அதிகமாகவே நசுக்குகிறது, பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கிய போதிலும், இவர்கள் தமது விடுதலைக்காக சுயேச்சையாய்ப் போராடும் வல்லமை இல்லாதவர்கள்." (240-241)

 லெனின் இங்கே பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போக்குகின் காரணத்தை கூறியுள்ளார். இதைப் படிக்கும் போது அல்லது கேட்கும் போது எவருக்கு பாட்டாளி வர்க்கத்தின் மீது நம்பிக்கை வரவில்லையோ, அவர்கள் மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் அகியவற்றின் அடிப்படைப் புரிதல் இல்லாதவர்கள் என்பதே பொருளாகும். வரலாற்றியல் பொருள்முதல்வாதம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றிய புரிதல் இல்லை என்றால் நாம் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக செயல்பட முடியாது.

       அடுத்து லெனினது முதன்மையான கருதொன்றை காணப்படுகிறது. இதில் மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டை கூறியுள்ளார். தொழிலாளர் கட்சிக்கும் அதன் முன்னணிப் படையான கட்சிக்கும் மார்க்சியம் கல்வி அளிக்கிறது. மார்க்சியம், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அதன் முன்னணிப் படையான கட்சிக்கும் கல்வி அளிக்கிறது. இதற்கு மாறாக சந்தர்ப்பவாதமான சமூகத்தில் உயர்ந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் நலனை மட்டும் முன்னிருத்தி செயல்படுவதினால் பொதுமக்களுடன் தொடர்வு இழந்து விடுகிறது. முதலாளித்துவம் அளிக்கிற எச்சித் துண்டைக்கு தனது கடமையை விற்றுவிடுகிறது. இதன் விளைவாக முதலாளித்துவத்தை எதிர்த்து தொழிலாளர்களின் விடுதலைக்காக போராட வேண்டிய கடமையைத் துறந்துவிடுகிறது. இவ்வாறு லெனின் மார்க்சியத்துக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டி உள்ளார்.

 லெனினது அந்தக் கருத்தை அப்படியே பார்ப்போம்.

 

“மார்க்சியமானது, தொழிலாளர் கட்சிக்குப் கல்வி புகட்டுவதின் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைக்குப் கல்வி அளிக்கிறது.

 

அதிகாரத்தை ஏற்று, முழு மக்களையும் சோசலிசத்திற்கு இட்டுச் செல்லும் திறன், புதிய அமைப்பை வழிநடத்துதல் மற்றும் ஒழுங்கமைத்தல், உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவரும் முதலாளித்துவம் இல்லாமல் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக, தமது சமூக வாழ்வினை ஒழுங்கமைத்துக் கொள்வதில் அவர்களுக்குப் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் தலைவனாகவும் செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணிப் படைக்கு அது போதமளிக்கிறது.

 

தற்போது ஆதிக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதமானது, இதற்கு மாறாய். தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை, உயர்த்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுவதற்கு, பொதுமக்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு "நல்லபடியாகவே" இருந்து, எச்சித் துண்டுக்காகத் தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகரத் தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தைத் துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய்ச் செயல்படுவதற்கு சந்தர்ப்பவாதம் பயிற்றுவிக்கிறது.

 

"அரசு, அதாவது, ஆளும் வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்டது" என்ற மார்க்சின் கோட்பாடு, வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் பற்றிய அவரது முழுக் கோட்பாட்டுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. இந்த ஆட்சியின் இறுதி நிலையே பாட்டாளி வர்க்க அரசியல் ஆட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஆகும்.” (241-242)

 -என்று லெனின் கூறியுள்ளார்.

 இப்போது நம்முன்னுள்ள கேள்வி, மார்க்சிய வழியில் கல்வி பெற்று பாட்டாளி வர்க்க ஆட்சியை அமைக்கப் போகிறோமா? சந்தர்ப்பவாத வழியில் சென்று மார்க்சியத்துக்கு துரோகம் செய்யப் போகிறோமா?

       “செங்கொடி மையம்” என்கிற இந்த படிப்பு வட்டம், மார்க்சிய வழியில் கல்வி போதித்து, பாட்டளி வர்க்க ஆட்சியை அமைக்கப் பாடுபடுவர்களுடன் இணைந்து செயல்படும். மார்க்சியம் பயில்வோம் புரட்சிகர நடைமுறையில் இணைவோம்  என்று கூறி இன்றைய வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment