Thursday 14 March 2019

மார்க்சிய தத்துவம் - நூல் அறிமுகம்- நிர்மலா கொற்றவை



மார்க்சியத் தத்துவம் 
ஆசிரியர்:  .. ஈஸ்வரன்
வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர்.
விலை: ரூ. 100/-
தொடர்பிற்கு: 94866 41586


மார்க்சியக் கல்வியளித்தலுக்காக பல தோழர்கள் தனிநபர்களாக, அமைப்புகளாக, பதிப்பகங்களாக தம்மையே அர்பணித்துள்ளனர். அந்த மாபெரும் கல்விக் கடலில் சமீபத்தில் நான் கண்டெடுத்த  இரு முத்துகள்: . கா. ஈஸ்வரன் எழுதிய மார்க்சியத் தத்துவம் எனும் நூலும், தோழர் . ஜீவானந்தம் அவர்கள் எழுதிய மார்க்ஸின் மூலதனம் - வாசிப்பிற்கு ஒரு திறவுகோல் எனும் நூலுமாகும். பிந்தைய நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பை நான் ஏற்கனவே புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுதிவிட்டதால் மார்க்சியத் தத்துவம் பற்றிய தோழர் ஈஸ்வரனின் நூலுக்கு ஒரு அறிமுகம் எழுத விழைகிறேன்

இணையத்தில் மார்க்சிய உரையாடலை நிகழ்த்துவோர் .கா. ஈஸ்வரனை அறியாமல் இருக்க முடியாது. இவர் இதற்கு முன்னரேசமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும்என்ற நூலினையும்மதத்தைப் பற்றி மார்க்சியம்என்ற நூலையும் எழுதியுள்ளார். மார்க்சிய அறிவூட்டலுக்கான அவரது மூன்றாவது பங்களிப்புமார்க்சியத் தத்துவம்எனும் நூலாகும். மார்க்சியம் அறியாதோருக்கு அதனை அறிந்திடவும், மார்க்சியம் அறிந்தோருக்கு மீண்டும் ஒருமுறை அதனை தத்துவார்த்தமாகத் தொகுத்துகொள்ளவும் இந்நூல் வகை செய்யும்.  

மனித சமூகத்தைப் பற்றிய விளக்கமும், அச்சமூகத்தை ஓர் உயர்நிலையிலான சமூகமாக மாற்றவும் வழிகாட்டும் சமூக விஞ்ஞானத்தை சுருக்கமாகத் தொகுத்துக் கொடுப்பதென்பது சவாலுக்குறியதாகும். அதிலும் குறிப்பாக நிறைய வாசிப்பவர்களுக்கு அது பெரும் சவாலாகும். அதிகம் படிக்கப் படிக்க அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லிவிட வேண்டும் எனும் ஒரு உத்வேகம் எழும். அதனை மட்டுப்படுத்தி சுருக்கமாகக் கொடுக்கும்போது பாடப்பொருளின் உள்ளடக்கத்தை கணிதவியல் சூத்திரம் போன்று கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். ஈஸ்வரன் அப்பணியை சிறப்பாக செய்துள்ளார்

மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை மட்டுமே பேசுவதாக விமர்சிப்பவர்களுக்கு அதன் தத்துவார்த்த சிறப்பையும் நுட்பமாக விளக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது. தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி அதன் பொருள்முதல்வாதத் தன்மையை வரலாற்றுபூர்வமாக விளக்கிச் செல்கிறது இந்நூல். மற்ற தத்துவங்களிலிருந்து மார்க்சியம் எவ்வகையில் வேறுபடுகிறது என்பதை அறியாதவர்களுக்கு, அல்லது அறிந்தும் அதனை திரிப்பவர்களுக்கு கராரான பதிலளிக்கக்கூடியதாக இந்நூல் இருக்கிறது.

உயிரற்ற சடப்பொருள்களின் வளர்ச்சியே வளர்ச்சி என்று நம் மூளைகளைச் சலவை செய்திருக்கும் இந்த பொருளாதார அமைப்பானது மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கு வகை செய்யும் உலக கண்ணோட்டத்தின் மீது ஆர்வமோ, கவனமோ செலுத்த முடியாத அளவுக்கு நம்மை திசை திருப்புகிறது; அல்லது அப்பொருளாதார அமைப்பிற்கு ஏற்றதொரு உலகக் கண்ணோட்டத்தை கருத்துமுதல்வாத அடிப்படையில் பிரச்சாரம் செய்கிறது. இதிலுள்ள பிரச்சினை என்னவெனில், எல்லா பிரச்சினைகளையும் தனித்ததொரு பிரச்சினையாக, தனிநபர்களின் நடவடிக்களிலிருந்து எழுபவையாக அது சித்தரிக்கிறது. நல்லெண்ண அடிப்படையிலான சில சீர்திருத்தங்கள் மூலமோ அல்லது அமைப்புரீதியான சில சட்டதிட்டங்கள் மூலமாகவோ எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் எனும் ஒரு பொய்யான நம்பிக்கையை அது விதைக்கிறது

நடப்பு பொருளாதார அமைப்பான முதலாளித்துவத்தாலோ அல்லது அதற்கு முந்தைய தனியுடைமை பொருளாதார அமைப்புகளின் விளைவாகவோ மேற்சொன்ன கட்டமைப்புகளை எப்படியெல்லாம் உருவாகின்றன, உருவாகி வந்திருக்கின்றன என்பதை வரலாற்றுபூர்வமாகவும், தத்துவார்த்தபூர்வமாகவும் புரிந்துகொள்ள ஈஸ்வரனின் மார்க்சியத் தத்துவம் எனும் நூல் நமக்கு உதவுகிறது.

தத்துவம், அரசியல், பொருளாதாரம், புரட்சி ஆகியவற்றை இனியும் நாம் தனித்துக் காணமுடியாது மனிதர்களின் பொருளாயத நடவடிக்கைகளில் ஒவ்வொன்றும் ஊடறுக்கும் விஷயமே. அவ்வகையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் எனும் மூன்றாவது பிரிவு விளக்கும் கண்ணோட்டங்கள் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் குறிப்பாக, அறிவு, படைப்பாக்கம், பண்பாடு பற்றிய தன்னிலை அகங்காரமும், அடையாளச் சிக்கல்களும் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில்  மேற்கட்டமைப்புசமூக உணர்வுநிலையின் வடிவங்கள் எனும் பகுதியில் பண்பாடு, கலைகள், அறநெறி பற்றிய மார்க்சியக் கண்ணோட்டமானது அனைவரும் கற்றறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது.  

உள்ளடக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள தலைப்புகள் நம்மை இவ்வுலகக் கண்ணோட்டத்திற்குத் தயார்படுத்துகின்றன, அக்கண்ணோட்டத்தைக் கொண்டு மனித வாழ்வை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதை அதன் இறுதிப் பக்கங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. அது ஒரு புரட்சிகர மாற்றமாகவே இருக்கும் என்பதையும், இந்த நிகழ்முறையில் புரட்சிகர அமைப்புக்கான தேவை என்ன என்பதையும் அப்போது நாம் புரிந்துகொள்வோம்.

அப்புரிதலை ஏற்படுத்த மிகச் சிறந்தவகையில் தங்களது எழுத்தின் மூலம் பங்களிக்கும் .கா. ஈஸ்வரன் மற்றும் தோழர் . ஜீவானந்தம் போன்றோரும், அவர்களது நூல்களை பதிப்பிக்கும் பதிப்பாளர்களும் பாராட்டுக்குறியவர்கள்