ரங்கநாயகம்மா எழுதிய “சாதியப்
பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியம் தேவை!”
என்ற நூல் பொருளமுதல்வாத முறையில் எழுதப்படவில்லை என்று ஒரு பக்கமும், பொருள்முதல்வாத
முறையில் தான் எழுதப்பட்டுள்ளது என்று மற்றொரு பக்கமும் பேசப்படுகிறது. நமது நாட்டில்
கம்யூனிசம் அறிமுகமாகி நூறு ஆண்டுகள் நெருங்கப் போகிறது. பொருள்முதல்வாதம் என்பது என்ன?
என்பதிலேயே இன்னும் குழப்பம் நீடிக்கிறது என்பது மிகவும் பரிதாபத்துக்குரியது.
மார்க்சிய பொருள்முதல்வாதத்தைப்
பகுத்தறிவுவாதமாகவும், தொடுபொருட்களை அல்லது புலனறிபொருள்களை மட்டுமே பொருள்முதல்வாதமாகக்
கருதுகின்ற போக்கு நீடிக்கிறது. மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சியைப்
புரியாதவர்கள் அதிகமாக இன்றும் இருக்கிறார்கள் என்பது மிகுந்த கவலைக்குரியதே.
மார்க்சிய தத்துவம் இரண்டு
உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது இயக்கவியல்
பொருள்முதல்வாதம் இது முதலாவது, சமூகம் வரலாறு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது வரலாற்றியல்
பொருள்முதல்வாதம் இது இரண்டாவது.
கடவுள் உலகத்தைப் படைத்தாரா
அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா? இதுவே தத்துவத்தின் அடிப்படைக்
கேள்வி. இதற்கு ஆன்மா தான் படைத்தது என்கிறவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள்.
இயற்கை தான் முதன்மையானதாகக் கொண்டவர்கள் பொருள்முதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த
இரு முகாமிலும் பல உட்பிரிவுகள் உண்டு. மார்க்சியம் பொருள்முதல்வாத முகாமை சேர்ந்தது.
பொருள்முதல்வாதிகள் தமது கண்ணோட்டத்திற்கு வெளிச்சேர்க்கை எதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை.
கருத்துமுதல்வாதிகள் தமது கண்ணோட்டத்தை உலகத்திற்கு அப்பால்
உள்ளவற்றிலிருந்து அமைத்துக்கொள்கிறார்கள்
மதம் பற்றிய பகுத்தறிவுவாதத்தின் கண்ணோட்டம்
ஆன்மீகவாதத்திற்கு எதிரானது, ஆனால் அதன் விளக்கம் கருத்துமுதல்வாத அடிப்படையிலானது.
இந்த விளக்கம் பலருக்கு ஆச்சரியத்தையே தருகிறது. இந்த ஆச்சரியத்திற்குக் காரணம், மார்க்சிய
விளக்கங்கள் இவர்களிடம் சென்றடையவில்லை என்பதேயாகும்.
மதம் என்பது மூட நம்பிக்கை, இதிலிருந்து விடுபட
வேண்டும் என்றால் இதன் மீதான நம்பிக்கைவிடப் பகுத்தறிவு வேண்டும். நம்பிக்கை ஊட்டியவகளின்
கருத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதாவது மக்களிடம் காணப்படும்
ஆன்மீக நம்பிக்கைகள் ஊட்டப்பட்டதாகவே பகுத்தறிவுவாதம் கருதுகிறது.
இயற்கை, சமூகம் ஆகிய இரண்டும் மனிதயினத்திற்கு முன் பேரழிவாற்றல் பெற்றதாக இருப்பது
மதயிருப்பிற்கான காரணங்களாக மார்க்சியம் கருதுகிறது. இதனை மிகச் சுருக்கமாக லெனின்
“மதக்கேடுகளின் மிக ஆழமான மூலாதாரம், இல்லாமையும் கல்லாமையும் ஆகும்.” (உழைக்கும்
மாதர்களின் முதலாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை)
இதனையே சற்று விரிவாக எங்கெல்ஸ் கூறுகிறார்:-
"எல்லாச் சமயங்களுமே, மனிதர்களின் அன்றாட
வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிற அந்தப் புறம்பான சக்திகள் பற்றி மனிதர்களின்
மனங்களில் ஏற்படும் கற்பனையின் பிரதிபலிப்பே தவிர வேறு எதுவுமில்லை, இந்தப் பிரதிபலிப்பில் மண்ணுலக சக்திகள், இயற்கையை
மீறியதான சக்திகளின் வடிவத்தை மேற்கொள்கின்றன. வரலாற்றின் துவக்கத்தில் இயற்கையின்
சக்திகளே அவ்வாறு பிரதிபலிக்கப்பட்டன, மேலும் ஏற்பட்ட
பரிணாமப் போக்கில் இவை பல்வேறு மக்களிடையே மிகவும் பன்முகமான பல்வகையான உருவகத்
தோற்றங்களை மேற்கொண்டன...
ஆனால்
விரைவிலேயே இயற்கையின் சக்திகளுடன் அக்கம்பக்கமாகச் சமுதாய சக்திகளும்
செயலூக்கமடையத் தொடங்குகின்றன. இந்தச் சக்திகள்
மனிதனைச் சம அளவில் புறம்பாகவும் முதலில் சம அளவில் விளக்கமுடியாத வகையிலும்
எதிரிடுகின்றன, இயற்கை சக்திகளைப் போலவே காணப்படுகின்ற
அதே இயற்கை அவசியத்துடன் அவன்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் இயற்கையின்
விந்தையான சக்திகளை மட்டுமே பிரதிபலித்து வந்த கற்பனை உருவங்கள் இந்தக் கட்டத்தில்
சமுதாய இயல்புகளைப் பெற்று வரலாற்று சக்திகளின் பிரதிநிதிகளாகின்றன. (டூரிங்குக்கு மறுப்பு)
ரங்கநாயகம்மா நூலின் முதல் அத்தியாத்தின் தொடக்கத்திலேயே கடவுளைப்
படைத்தது யார்? என்கிற ஒற்றைக் கேள்வின் மூலம் அந்தக் கடவுளும் மத நூல்களும் தகர்ந்து
நொறுங்கிவிடும் என்கிறார். இது அப்பட்டமான பகுத்தறிவுவாதமாகும். மார்க்சிய பொருள்முதல்வாதம்
இதற்கு நேரெதிரானது. இது பற்றி “மதத்தைப் பற்றித் தொழிலாளர்
கட்சியின் அணுகுமுறை” என்ற கட்டுரையில் லெனின் கூறுகிறார். மதத்தை எதிர்ப்பது
பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும், மார்க்சியம் அரிச்சுவடியோடு நின்றுவிடுவதில்லை.
மதத்தை எப்படி எதிர்க்க வேண்டும் என்று பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது. மதத்தின்
தோற்றுவாயை பொருள்முதல்வாத முறையில் விளக்க வேண்டும்.
பெருந்திரளான மக்களிடம், மதம் தம்பிடிப்பை வைத்திருப்பதற்கு
மக்களின் அறியாமை காரணம் என்று முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி
கருதுகிறார். “மதம் ஒழிக, நாத்திகம்
நீடூழி வாழ்க” என்று நாத்திகத்தைப் பரப்புவதே தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளார்.
மதத்தின் மீதான எதிர்ப்பை சித்தாந்த போதனையாகச் சுருக்குவது, குறுகிய
முதலாளித்துவ மேம்படுத்துவோரின் கருத்தாகும். மதத்தின் மூலவேர்களைப் போதுமான தெளிவுடன்
விளக்கிக் கூறவில்லை. பொருள்முதல்வாத வழியில் அல்லாது கருத்துமுதல்வாத வழியில் விளக்குகிறது
என்று லெனின் கூறுகிறார்.
லெனின் ;-
“நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் அனைத்துப்
பொருள்முதல்வாதத்தின் அரிச்சுவடியாகும். ஆனால் மார்க்சியம் அரிச்சுவடியோடு
நின்றுவிட்ட பொருள்முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது.
மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும், அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின்
தோற்றுவாயைப் பொருள்முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
மதத்தை
எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை
அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப்போராட்டம்
இணைக்கப்பட வேண்டும். நகரப் பாட்டாளி வர்க்கத்தின் பின்தங்கிய பகுதியினரிடமும்
அரைப் பாட்டாளி வர்க்கத்தின் விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான
விவசாயிகளிடமும் மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்குக்
காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளி வர்க்க முற்போக்காளர்,
தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே,
மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க,
நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாயக் கடமை. இது உண்மை
அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய கருத்து என்று மார்க்சியவாதி
கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை.
அவற்றைப் பொருள்முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத
முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாகச்
சமூகத் தன்மையானவை.” (மதத்தைப் பற்றித் தொழிலாளர்
கட்சியின் அணுகுமுறை)
மதம்
பற்றிய ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் பொருள்முதல்வாத வழிப்பட்டதல்ல என்பதைப் பார்த்தோம்,
அடுத்து அம்பேத்கரின் மார்க்சியத்தின் மீதான் விமர்சனத்தை எந்தக் அவர் கண்ணோட்டத்தில்
அணுகுகிறார் என்பதைப் பார்ப்போம். 1. சோஷலிசம் தவிர்க்கவியலாதது 2. மார்க்சியம் வன்முறையானது,
3. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், 4. அரசு உலர்ந்து உதிரும் இவைகளே விமசர்னத்தின் முதன்மையானதாகக்
கொள்ளலாம். இதற்குப் பதிலாக ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் எவ்வகையில் அமைந்துள்ளது என்பதைப்
பார்ப்போம்.
1. சோஷலிசம் தவிர்க்கவியலாதது
சோஷலிசம் தவிர்க்கவியலாதது
என்பதை அம்பேத்கர் மனித நடவடிக்கை இல்லாமல் தானே நடந்துவிடுவதைப் போல் புரிந்துள்ளார்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண் தவிர்க்கவியலாமல் சோஷலிசத்தை நோக்கி
செல்லும் என்பதே இதன் பொருள். ரங்கநாயகம்மா இதற்குப் பதிலாக, கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குகள்,
வர்க்கப் போராட்டத்தை நடத்துங்கள் என்று மார்க்ஸ் கூறியதாகக் கூறுகிறார்.
சுரண்டல் சமூகத்தை மார்க்சுக்குப்
பிடிக்காமல், கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, வர்க்கப் போராட்டத்தை நடத்துவது என்பது
கருத்தியல் கண்ணோட்டமே ஆகும். சுரண்டல் சமூகத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாமல் சோஷலிச
சமூகத்தை நோக்கி பயணிப்பதையே மார்க்ஸ் கூறியுள்ளார்.
சோஷலிசம்
என்பது கற்பனையான ஒரு கனவு அல்ல, நவீன முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சியின் தவிர்க்க
முடியாத விளைவாகும் என்று மார்க்ஸ் எங்கெல்ஸ்
தங்களது விஞ்ஞான நூல்களில் விளக்கியதாக லெனின் கூறுகிறார்:-
“தொழிலாளி வர்க்கமும்
அதன் கோரிக்கைகளும் இன்றைய பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே
என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க
முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன
என்றும் முதன் முதலாக எடுத்துக்காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று
மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக்
கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த
சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும்
எடுத்துக்காட்டினார்கள்.
சோஷலிசம் என்பது
ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமூகத்தின் உற்பத்தி சக்திகளுடைய
வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் என்று தங்கள்
விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்.” (பிடெரிக் எங்கெல்ஸ்
மறைவின் போது)
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால்
வரையறுக்கப்படுகிற பொருளாயத காரணங்களின் அடிப்படையில் விளக்குவதனால் தான் மார்க்சின்
கருத்து விஞ்ஞான வகைப்பட்டதாக, லெனின் கூறுகிறார்:-
“வாழ்வின் உண்மைகளை
ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு
மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையில் இருந்துதான், பருப்பொருளில் இருந்துதான்
பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்… ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும்
போல் அல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும்
அவர்கள் பொருள்முதல்வாத நிலையில் இருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம்
அடிப்படையாகப் பொருளாயத காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமூகத்தின்
வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது
என்று அறிந்து கொண்டனர்.
மனிதத் தேவைகளை
நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக்
கொள்ளும் உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமூக வாழ்வின்
எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும்
உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது.
உற்பத்தி சக்திகளின்
வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமூக உறவுகளைப் படைக்கிறது, ஆனால்
உற்பத்தி சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான
சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம். நவீன
காலத்திய சமூக அமைப்புமுறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது, சோஷலிஸ்டுகள்
தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே குறிக்கோளை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது.”
(பிரடெரிக் எங்கெல்ஸ் மறைவின் போது)
ரங்கநாயகம்மாவிடம் இந்த
விஞ்ஞானப் பார்வை கிடையாது. சுரண்டல் முறைக்கு மாற்றாக மார்க்ஸ் இவ்வாறு கூறுவதாகவே
இவரது கருத்து இருக்கிறது. “சுரண்டல் மீது
எழுப்பப்பட்ட சமுதாயம் என்பதால் அதைமாற்றவேண்டும் என்கிறார் மார்க்ஸ்”.(300) சுரண்டலுக்கு
எதிரான வர்க்கப் போர் என்பது எந்த வகையிலும் மார்க்சின் மனவிருப்பத்தைச் சார்ந்ததல்ல,
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் ஏற்படுகிற முரண்பாட்டு என்கிற புறநிலையைச் சார்ந்தது.
அம்பேத்கருக்கு விஞ்ஞான
வழியில் அல்லாமல், ரங்கநாயகம்மா கம்யூனிஸ்ட் கட்சி தொடங்குகள், வர்க்கப் போராட்டத்தை
நடத்துங்கள் என்று மார்க்ஸ் கூறியதாகக் கருத்தியல் முறையில் பதிலளித்துள்ளார்.
2. வன்முறை
கம்யூனிசத்தை
வன்முறையானதாகக் கருதும் அம்பேத்கருக்கு, ரங்கநாயகம்மா அளிக்கும் பதில், “வன்முறையை
எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் வன்முறையாகாது! அது உழைக்கும் வர்க்கத்தின்
தற்காப்பு நடவடிக்கை!....” என்று கருத்தியல் விளக்கமாகத் தான் இருக்கிறது. தனிப்பட்ட
கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும்
சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே வன்முறை என்பது தான் விஞ்ஞான வழிப்பட்ட
பதிலாகும்.
இதனை எங்கெல்ஸ் விளக்குகிறார்:-
“தனியார்
சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே.
இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை
என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள்.
புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை
எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது
கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும்
அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால்,
அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி
பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின்
முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள்
காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால்,
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல்
செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.” (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்)
3. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
அம்பேத்கர் பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் முழுமையான ஜனாயகத்திற்கு விரோதமானதாகப் பார்க்கிறார். இதற்குப் பதிலாக
ரங்கநாயகம்மா கூறுகிறார்:-“தொழிலாளர் வாக்கம் போராட்டத்தின மூலம் “அரசு அதிகாரத்தை”
எடுத்துக் கொள்ளும் போதும்கூடச் சமூகம் பழைய நிலைமையிலேயே இருக்கும். அதாவது முதலாளி-தொழிலாளர்
உறவுகள்“ என்னும் அதே நிலைமையே நீடிக்கும். தொழிலாளர் வர்க்கம் அத்தகையதொரு சமூகத்தை
ஒரு “புதிய” சமூகமாக மாற்ற வேண்டும். நிலவும்
உற்பத்தி உறவுகள் மீது புரட்சிகரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும. நிலம் மற்றும் மூலதனம்
மீதான தனியுடைமை படிப்படியாக ஒழிக்கப்படும். ஒவ்வொரு நபரும் கட்டாயமாக உழைத்தாக வேண்டும்.
மூளை உழைப்பு மட்டுமலல, மிகமிகக் கீழான கடைக்கோடி உடல் உழைப்பு வரை அவர்களுடைய கடமையாக
மாறும்.” (பக்கம் -318)
உற்பத்தி சக்திகளோடு ஏற்படுகிற
மாற்றங்களாக உற்பத்தி உறவை காணாமல், “புதிய”
சமூகம், உற்பத்தி உறவுகள் மீது புரட்சிகரக் கட்டுப்பாடுகள் என்று கருத்தியல்
முறையிலேயே அணுகுகிறார். புதிய சிந்தனை, புரட்சிகர உறவு என்று கருத்தியில் ரீதியாகவே
சிந்திக்கிறார். “தொழிலாளர் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய சிந்தனைகளைக் கைக்கொள்ள
வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத் தனது போராட்டத்தின் மூலம் மாற்ற வேண்டும்.”(325),
“புரட்சிகர உறவுகளை”(343) அதே போல் “சமத்துவ உறவு” என்று கூறுகிறார். அந்தச் சமத்துவ
உறவுகளுக்குத் தேவைப்படுகிற பொருளாயத (material) நிலைமைகளைச் சுட்டிக்காட்டவே இல்லை,
“ஏற்றத்தாழ்வு மிக்க உறவுகள் தகர்க்கப்பட்டு, வாழ்வின் எல்லா மட்டத்திலும் சமத்துவ
உறவுகள் நிலைநாட்டப்பட வேண்டும்”(318) என்று கருத்தியில் முறையில் உறவுகளைப் படைக்கிறார்.
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே உற்பத்தி
உறவை மார்க்ஸ் காண்கிறார், இந்தப் பொருளாயத கண்ணோட்டம் ரங்கநாயகம்மாவிற்குக் கிடையாது.
மார்க்ஸ்:-
“சமுதாய
உறவுகள் உற்பத்தி சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்தி சக்திகளைப்
பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும்
தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய
உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு
நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை
முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.
…
உற்பத்தி
சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளின் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே
ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.” (தத்துவத்தின் வறுமை)
“புதிய
உற்பத்தி சக்திகள் கைவரப் பெற்றதும் மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள்,
மற்றும் உற்பத்தி முறையுடன் அந்தக் குறிப்பிட்ட உற்பத்தி முறைக்கு அவசியகரமான உறவுகளாக
மட்டுமே இருக்கிற எல்லாப் பொருளாதார உறவுகளையும் மாற்றிக் கொள்கிறார்கள்” (மார்க்ஸ்
பா.வ.ஆன்னென்கவுக்கு எழுதிய கடிதம் 28/12/1846)
மேற்கட்டமைப்பை மாற்றுகின்ற
உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலே தான் அமைந்துள்ளது என்பதை மார்க்ஸ்
தெளிவாகவே எழுதியுள்ளார். உற்பத்தி உறவுகளை நிலைநிறுத்துவதில் கருவிகளே பெரும்பங்காற்றுகிறது.
சுரண்டலை ஒரு அறநெறிக் கண்ணோட்டத்தில் தான் ரங்கநாயகம்மா அணுகியிருக்கிறார் இது மார்க்சிய
பார்வைக்கு மாறானதாகும்.
“மாக்ஸியப்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஓட்டுமொத்த இலாபமும் உழைப்பாளர்களிடமிருந்தே வருகிறது.
முதலாளிகள் மூலதனத்தை 1) உற்பத்தி சாதனங்கள் மீதும் 2) தொழிலாளர்களின் கூலி மீதும்
முதலீடு செய்கின்றனர். இந்த இரண்டில், உற்பத்தி சாதனங்கள் அதற்குரிய மதிப்பைக் காட்டிலும்
கூடுதலாக எதையும் திரும்பத் தரப்போவதில்லை. “கூலி”க்கு அவர்கள் ஒதுககும் பணமே மேலும
மதிப்பை திருமபத்தருகிறது. உழைப்பாளிகள் தங்கள் உழைப்பிற்கு ஈடாகக் கூலி பெறுகிறார்கள்
என்பது உண்மையே, ஆனால், கூலி மட்டுமே உழைப்பின் மதிப்பில்லை. அது உழைப்பு மதிப்பின்
ஒரு பகுதி மட்டுமே. மீதமிருக்கும் பகுதி இலாபம் (உபரிமதிப்பு). அதில் தொழிலாளர்களுக்கு
மட்டுமே பங்கிருக்கிதே ஒழிய, தொடக்கத்தில் முதலீடு செய்த மூலதனத்தின் மதிப்பிலிருந்து
மேலும மதிப்பை உயர்த்த உற்பத்தி சாதனம் எந்தப் பங்கையும் ஆற்றுவதில்லை. இது தான் மார்க்ஸி
விளக்கம்.” (சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: 345-346)
ரிக்கார்டோவைப் போலவே ரங்கநாயகம்மா
தொழிலாளர்களுக்கே விளைபொருள் முழுவதும் சொந்தம் என்கிறார். இத்தகைய கருத்தாக்கத்தை
“தத்துவத்தின் வறுமை” என்கிற நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் மறுத்துரைக்கிறார்:-
“சமுதாய
விளைபொருள் முழுவதும் தமது விளைபொருள் என்கிற முறையில் தொழிலாளர்களுக்குச் சொந்தாகும்.
ஏனெனில் அவர்கள் மட்டுமே உண்மையான உற்பத்தியாளர்கள், என்னும்படியான ரிக்காடோ தத்துவத்தின்
மேற்கூறி செயற்பாடு நேராகக் கம்யூனிசத்துக்குக் கொண்டு செல்கிறது. ஆனால் மேலே மேற்கோள்
காட்டிய பகுதியில் மார்க்சும் குறித்துக் காட்டுகிறபடி, புறவடிவு வகையிலே அது பொருளாதார
ரீதியிலே தவறாகும். ஏனெனில் அது வெறுமே நீதிநெறி முறைமையை அரசியல் பொருளாதாரத்தில்
செயல்படுத்துவதாகும்.
முதலாளித்துவப்
பொருளாதாரத்தின் விதிகளின்படி, விளைபொருளின் மிகப் பெரும் பகுதி அதை உற்பத்தி செய்த
தொழிலாளர்களுக்குச் சொந்தமாக இல்லை. அது அநியாம், அப்படி இருக்கக் கூடாது என்று இப்போது
சொல்வோமானால் அதற்கும் அரசியல் பொருளாதாரத்துக்கும் உடனடிச் சம்பந்தம் ஒன்றும் கிடையாது.
இந்தப் பொருளாதார உண்மை நமது நீதிநெறி உணர்ச்சிக்கு முரண்படாக இருக்கிறது என்று மட்டுமே
சொல்லிக் கொள்கிறோம். எனவே தான், இதனை எப்போதும் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளுக்கு
ஆதாரமாகக் கொள்ளவில்லை முதலாளித்துவ உற்பத்தி முறையின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை
ஆதாரமாகக் கொண்டார்- அவ்வீழ்ச்சி நம் கண்ணெதிரே மேன்மேலும் அதிகரித்த அளவிலே தினந்தோறும்
நிகழ்ந்து வருகிறது, கூலி கொடுபடாத உழைப்பு அடங்கியதே உபரி மதிப்பு ஆகும் என்று மட்டுமே
அவர் சொல்கிறார். அது ஒரு எளிய உண்மையாகும். ஆனால், புறவடிவு வகையிலே பொருளாதாரீதியிலே
தவறாயிருக்கக் கூடியது உலக வரலாற்றின் பார்வை நிலையிலே சரியாயிருக்கக்கூடும்.”
அறநெறிமுறையிலேயே உற்பத்தி
உறவை ராங்கநாயகம்மா கணிக்கிறார். வர்க்கப் போராட்டத்தை அறநெறி வழியிலேயே முன்வைக்கிறார்.
“எங்கெல்லாம்
சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும். உழைப்பு பிரிவினையை
மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்புப்
பிரிவினை, ஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்புப் பிரிவினை- இவையாவுமே இதன்
கீழ் வருகின்றன. சமூகத்தில் நிலவும் “தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்)
மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராகச் சரியான
கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் போராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும்.” (சாதியப்
பிரச்சினைக்குத் தீர்வு:பக்கம் 410)
ரங்கநாயகம்மாவின் அணுகுமுறையில்
அறநெறிக் கண்ணோட்டம் மேலோங்கிக் கிடக்கிறது.
லெனின் கூறுகிறார்:-
“மிகச் சொற்பமான
சிறுபான்மையோருக்கு ஜனநாயகம், செல்வந்தர்களுக்கு ஜனநாயம் (இதுதான் முதலாளித்துவச் சமூத்தில்
நிலவும் ஜனநாயகம். முதலாளித்துவ ஜனநாயகத்தின் கட்டமைவை மேலும் நெருங்கிச் சென்று பார்த்தோமாயின்,
வாக்குரிமையின் “அற்ப”- அற்பமானவை என்று சொல்லப்படுகிற) விவரங்களிலும், பிரதிநிதித்துவ
உறுப்புகளின் செயல்முறையிலும், கூட்ட உரிமைக்கு நடைமுறையில் இருந்துவரும் தடங்கல்களிலும்,
நாளேடுகளின் முற்றிலும் முதலாளித்துவ முறையிலான ஏற்பாட்டிலும், இன்ன பிறவற்றிலும் எங்கும்
ஜனநாயகத்துக்குக் கட்டுக்குமேல் கட்டுப்போடப்பட்டிருப்பதைத் தான் காண்கிறோம். ஏழைகளுக்கு
இடப்பட்டுள்ள இந்தக் கட்டுகளும் விலக்குகளும் ஒதுக்கல்களும் தடங்கல்களும் அற்பசொற்பமாகவே
தோன்றும்,
முக்கியமாய்
இல்லாமையை நேரில் அறிந்திராதோருக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் அவற்றின் வெகுமக்கள்
வாழ்வில் என்றுமே நெருங்கிய தொடர்பு கொண்டிராதோருக்கும் இப்படித்தான் அற்பசொற்பமாகவே
தோன்றும். ஆனால் ஒட்டுமொத்தத்தில் இந்தக் கட்டுகள் ஏழைகள் அரசியலில் இருந்து, ஜனநாயகத்தில்
நேரடியாய் பங்கு கொள்வதில் இருந்து ஒதுக்கி வெளியே தள்ளிவிடுகின்றன.
முதலாளித்துவ
ஜனநாயகத்தின் இந்தச் சாரத்தை மார்க்ஸ் மிக நன்றாய் உணர்ந்திருந்தார். கம்யூனுடைய அனுபவத்தை
ஆராய்கையில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கும் வர்க்கத்தின் எந்தப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில்
நமது பிரதிநிதிகளாய் அமர்ந்து தம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு
ஒருமுறை தீர்மானிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று கூறினார்.” (அரசும் புரட்சியும்)
லெனின் பாட்டாளி வர்க்க
சர்வாதிகரத்தில், ஜனநாயகம் பெருவாரியான மக்களுக்கு விரிவாக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது மக்களின் மீதான சர்வாதிகாரம் கிடையாது. மக்கள்
அரசின் மீது எதிர்ப்பை செலுத்துகிற எதிராளிகளின் மீதான சர்வாதிகாரம்:-
“பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரமானது, அதாவது ஒடுக்குமுறையாளர்களை அடக்குவதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய
முன்னணிப்படை ஆளும் வர்க்கமாய் அமையும் ஒருங்கமைப்பானது ஜனநாயகத்தை விரிவாக்குவதோடு
மட்டும் நின்றுவிடக் கூடியதல்ல. ஜனநாயகத்தைப் பிரம்மாண்டமான அளவில் விரிவாக்குவதுடன்,
பணமூட்டைகளுக்கான ஜனநாயகமாய் இராது. முதன்முதலாய் ஏழைகளுக்கான ஜனநாயகமாய், மக்களுக்கான
ஜனநாயகமாய் ஆக்குவதுடன் கூடவே ஒடுக்குமுறையாளர்களும் சுரண்டலாளர்களும் முதலாளிகளுமானோரின்
சுதந்திரத்துக்குப் பட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வரிசையாகப் பல கட்டுகளை விதித்திடுகிறது.
மனிதகுலத்தைக்
கூலி அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இவைகளை நாம் அடக்கியாக வேண்டும்.
இவர்களுடைய எதிர்ப்பை வன்முறை கொண்டு நசுக்கியாக வேண்டும். அடக்கியாளுதல் இருக்கும்வரை,
பலாத்காரம் இருக்கும்வரை சுதந்திரத்துக்கோ ஜனநாயகத்துக்கோ இடமில்லை என்பது தெளிவு.
பெபெலுக்கு
எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸ் இதனை மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். “பாட்டாளி
வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுவது தனது எதிராளிகளை அடக்கி இருத்துவதற்காகவே அன்றிச்
சுதந்திரத்தின் நலன்களுக்காக அல்ல, சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமாகியதும்
அரசு அரசாய் இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது” என்று இக்கடிதத்தில் எங்கெல்ஸ் கூறியது
வாசகர்களுக்கு நினைவிருக்கும். . (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)
4. அரசு உலர்ந்து
உதிரும்
அரசு உலர்ந்து விழும் என்பது பற்றிய அம்பேத்கரின்
கேள்விக்கு ரங்கநாகம்மா அறித்த பதில், “உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றத்தையே அது
சார்ந்து இருக்கிறது. தொழிலார் வர்க்கம் தன்னுடைய விடுதலைக்குப் புதிய சிந்தனைகளைக் கைக்கொள்ள வேண்டும். சமத்துவமற்ற உறவுகளைத்
தனது போராட்டத்தின் மூலும் மாற்ற வேண்டும். மாற்றம் நடந்தவுடன் அரசு உலர்ந்து உதிரும்”.
(பக்கம் - 325). இந்த மாற்றத்திற்குத் தேவையான பொருளாயத காரணங்களைச் சுட்டிக்காட்டாமல்,
அதன் விளைவுகளான புதிய சிந்தனை, உற்பத்தி உறவு என்பதாக மட்டுமே பேசுகிறார்.
அரசு உலர்ந்து உதிர்வதற்கான காரணங்களாக உற்பத்திச்
சாதனங்களுடன் உற்பத்தி உறவுகளை இணைத்து லெனின் விளக்குகிறார்.
“கம்யூனிச சமூகத்தில்தான்
– முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்து போய், வர்க்கங்கள்
இல்லாமற் போய்விடும் (அதாவது, சமூகத்தின் உறுப்பினர்களிடையே சமூக உற்பத்திச் சாதனங்களுடன்
அவர்களுக்குள்ள உறவு சம்பந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமற் போய்விடும்) அப்பொழுது
மட்டும் தான் “அரசு… இல்லாமற் முடிவு ஏற்படுகிறது”, “சுதந்திரம் குறித்துப் பேசுவது
சாத்தியமாகிறது.”
அப்பொழுதுதான்
மெய்யாகவே முழுநிறைவான ஜனநாயகம், விதிவிலக்கு எதுவுமில்லாத ஜனநாயகம் சாத்தியமாகிக்
கைவரப் பெறுகிறது. அப்பொழுதுதான் ஜனநாயகம் உலர்ந்து உதிரத் தொடங்கும். “முதலாளித்துவ
அடிமை வாழ்வில் இருந்தும் முதலாளித்துவச் சுரண்டலின் சகிக்கமுடியாத கொடுமைகளில் இருந்தும்
மிருகத்தனத்தில் இருந்தும் அபத்தங்களில் இருந்தும் இழுக்குகளில் இருந்தும் விடுபட்டு
மக்கள் பலநூறு ஆண்டுகளாய் அறியப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அரிச்சுவடி நீதிவிளக்கங்களில்
எல்லாம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்துள்ள சமூக ஒட்டுறவின் சர்வசாதாரண விதிகளைப்
பற்றியொழுகச் சிறிதுசிறிதாய் பழகிக் கொள்வார்கள். பலாத்காரம் இல்லாமலே, பலவந்தம் இல்லாமலே.
கீழ்ப்படிதல் இல்லாமலே, பலவந்தத்துக்கான அரசு எனப்படும் தனிவகை இயந்திரம் இல்லாமலே
அவர்கள் இவ்விதிகளைப் பற்றியொழுகப் பழகிக் கொள்வார்கள்.” (அரசும் புரட்சியும் – பக்கம்-118-119)
கம்யூனிச சமூகத்தில் இருப்பவர்கள்
இன்றைய முதலாளித்துவச் சமூக மக்களின் மனோநிலையில் இருந்து விடுபட்டவர்களாவர்.
அதனால் அரசு உலர்ந்து உதிர்ந்த பின்பு அங்கே அராஜகம் எழுவதில்லை, அதற்கான சூழல் அந்தச்
சமூகத்தில் காணப்படுவதும் இல்லை. ரங்கநாயகம்மாவின் கண்ணோட்டம் பொருள்முதல்வாத வழிப்பட்டதல்ல
என்பதற்கு இவைகளே போதுமானது.