(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 96- வது வார வகுப்பு – 27-08-2023 )
இன்றைய வகுப்பில் இருந்து மாவோவின் படைப்புகளின்
வழியில் மார்க்சியத்தைக் கற்கப்போகிறோம். இது ஒரு தொடர் வகுப்பாகும். பத்து அல்லது
பதினைந்து வகுப்புகள் மாவோவின் படைப்புகளைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறோம்.
இன்றைய முதல் வகுப்பில் மாவோவின் இரண்டு சிறியக்
கட்டுரைகளைப் பார்க்கப் போகிறோம். முதல் கட்டுரை “சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” இரண்டாவது கட்டுரை “இயக்கவியல் பொருள்முதல்வாதம்”.
விடியல் பதிப்பகம், அலைகள்
வெயீட்டகம் ஆகியவை இரண்டும் இணைந்து மாவோ தேர்ந்துடுக்கப்பட்ட படைப்புகளை 9 தொகுதிகளாக
வெளியிட்டுள்ளது. இன்றைய வகுப்பின் முதல் கட்டுரை ஒன்பதாவது தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
இரண்டாம் கட்டுரை ஆறாம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த வகுப்பை முடித்து மாவோ நூல்களை
நேரடியாக படிக்க முயலும் தோழர்களுக்கு உதவும் வகையில் இந்தத் தகவல் கொடுக்கப்படுகிறது.
மனிதன் தமக்கான குறிக்கோளை அமைத்துக் கொண்டே
செயல்படுகிறான். தமது தேவைகளை அடைவதற்கு சிந்திக்கிறான், அதற்கான குறிக்கோளை உருவாக்கிக்
கொள்கிறான். அதனால் தான் உணர்வுநிலை, சிந்தனை, குறிக்கோள் ஆகியவை அடிப்படையாகக் கொண்டே
அனைத்து தத்துவங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்தனைப் பற்றிய கருத்தில்
கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் வேறுபடுகின்றன. மாவோ பொருள்முதல்வாத வழியில்
இதனை விளக்கி உள்ளார் அதனேயே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம்.
“சரியான சிந்தனைகள் எங்கிருந்து தோன்றுகின்றன?” என்கிற தலைப்பில் மாவோ
1963-ஆம் ஆண்டு மே மாதம் எழுதினார். இந்தத் தலைப்பே மிகவும் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது.
சிந்தனை எங்கிருந்து தோன்றுகின்றன என்று கேள்வி கேட்கவில்லை, சரியான சிந்தனை எங்கிருந்து
தோன்றுகின்றன என்றே மாவோ கேள்வி எழுப்பி உள்ளார். இந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது.
தவறான சிந்தனைகள் எங்கிருந்து வருகிறதோ, அங்கிருந்து சரியான சிந்தனைகள் தோன்றவில்லை
என்று கேள்வியில் இருந்தே நமக்கு பதில் எதிர்மறையாகக் கிடைக்கிறது. இந்த பதில் சரியானதுதான்
ஆனால் விளக்கம் இல்லை. மாவோ விளக்குவதை பார்ப்போம்.
சரியான சிந்தனைகள் எங்கிருந்து
தோன்றுகின்றன?
அவை வானத்தில் இருந்து
விழுகின்றதா? இல்லை என்கிறார் மாவோ.
மூளையில் உள்ளார்ந்து உள்ளதா?
இதற்கும் இல்லை என்றே மாவோ பதில் கூறுகிறார்.
கேள்விக்கு பதிலாக மாவோ
கூறுகிறார், சமூக நடைமுறையில் இருந்தே சிந்தனை
தோன்றுகிறது, இதிலிருந்து அல்லாமல் வேறெதுவில் இருந்தும் தோன்றவில்லை.
அதாவது மனிதன் சமூகத்தில்
தொடர்ந்து இயங்குவதில் இருந்தே சிந்தனை உருவாகிறது. மனிதன் தனித்து சிந்திப்பதில்லை.
ஒரு மனிதனை காட்டில் தனியே விடப்பட்டால் அவன் உண்பது உறங்குவது - உண்பது உறங்குவது
என்கிற தொடர் இயக்கதிலேயே இருப்பான். அவனது சிந்தனை இதற்குள் அடங்கியே இருக்கும். மனித
சமூகம் பற்றிய கருத்து எதுவும் அவனிடம் இருக்காது. மனிதன் சமூகத்தில் இயங்கும்போதே
பல்வேறு சிந்தனைகள் தோன்றுகிறது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
சமூகம் இயங்குகிறது என்று
பார்த்தோம், அந்த சமூக இயக்கம் மூன்று வகைப்படும் என்கிறார் மாவோ. உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம்,
அறிவியல் போராட்டம். மார்க்சியம் கூறுகிற வாழ்வாதாரப் போராட்டத்தையே மூன்று சமூக
இயக்கங்களாக மாவோ பிரித்துக் கூறுகிறார்.
மனிதனின் சமூக பொருளாதார
வாழ்நிலையே சிந்தனையைத் தீர்மானிக்கிறது.
ஒரு முன்னேறிய வர்க்கத்தின்
சரியான சிந்தனை வெகுமக்களைப் பற்றிக் கொண்டவுடன், அந்த சிந்தனை பொருளாயத சச்கியாக மாறி,
சமூகத்தை மாற்றுகிறது. அந்த முன்னேறிய வர்க்கத்தின் சிந்தனை உலகத்தையும் மாற்றுகிறது.
சமூக நடைமுறையின் போது
மனிதன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகிறான், அதில் பல்வேறு அனுபவங்களை பெறுகிறான்.
சமூகப் போராட்டங்களில் வெற்றிகளும் தோல்விகளும் கிட்டுகிறது. இதன் மூலம் மனிதன் அனுபவப்
பாடங்களைப் பெறுகிறான்.
புறநிலை உலகில் நடைபெறும்
எண்ணற்ற நிகழ்வுகள், மனிதனின் ஐந்து புலன்களின் மூலம் அவனது மூளையில் பிரதிபலிக்கின்றன.
தொடக்கத்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றனது. புலக்காட்சி அறிவு போதிய அளவு தொகுக்கப்பட்டதும்,
கருத்தியல் அறிவாக பாய்ச்சல் அடைகிறது. கருத்துக்கள் இவ்வாறு தோன்றுகிறது. இது அறிவுத்தோற்றவியலின்
முதல் கட்டம்.
புறநிலைப் பொருளில் மட்டுமே
உணர்ந்திருந்த கட்டத்தில் இருந்து, அகநிலை உணர்வு நிலைக்கு உயர்ந்தப்படுகிறது. அதாவது
வெறும் புலன்வழி உணர்வுநிலையில் இருந்து முன்னேறிய சிந்தனை செய்யும் நிலைக்கு உயர்த்தப்படுகிறது.
இந்த முதல் கட்டத்தில் ஒருவனது புரிதலினால் உருவான சிந்தனை புறநிலை உலகின் எதார்த்த
விதிகளைச் சரியாக பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதியாகக் கூறமுடியாது. இது சரியா? அல்லது
தவறா? என்று அறிவது அடுத்தக்கட்டம் ஆகும்.
புறநிலையில் இருந்து உணரப்பட்டதைத்
தொகுத்து, அகநிலையில் தோன்றிய சிந்தனையை சரிபார்க்க வேண்டியது இரண்டாம் கட்டம். புறநிலைப்
பிரதிபலிப்பால் அகநிலையில் தோன்றிய கொள்கைகள், திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவம்
போது ஏற்படும் அனுபவங்களைக் கொண்டு, சரியானதா? தவறானதா? என்பதை மனிதன் அறிகிறான். வகுத்தக்
கொள்கைகள் வெற்றி பெற்றால் அது சரியானது, தோல்வி கண்டால் அது தவறானது என்று பொதுவாக
முடிவெடுக்கலாம்.
ஏன் இங்கே பொதுவானது என்று
கூறப்படுகிறது என்றால், சில நேரங்களில் கோட்பாடுகள் சரியாக இருந்தாலும் போராட்டத்தில்
தோல்வி ஏற்படலாம். இதற்குக் காரணம் கோட்பாட்டில் இல்லை, போராட்டத்தில் அதன் பலவீனத்தில்
இருக்கிறது. பிற்கோக்கு சக்திகள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றது உண்மை தான்,
ஆனால் இது நிரந்தர வெற்றியாக இருக்காது. இது முற்போக்கு சக்திகளின் தற்காலிகமான தோல்வியே
ஆகும். இறுதியில் முற்போக்கு சக்தி வெல்லும் என்பது உறுதி. தோல்வி கற்றுத் தந்தப் பாடம்,
அறிவுத்திறனை மேலும் உயர்த்தும், அந்த திறன் வெற்றியை தேடித்தரும்.
பாட்டாளி வர்க்கம், உலகை
அறிவதற்கான நோக்கம் அதை மாற்றுவதற்கே ஆகும். பொருளில் இருந்து உணர்வுநிலைக்கும், உணர்வுநிலையில்
இருந்து பொருளுக்கும் கொண்டு செல்லும்போதே மனிதனின் அறிவு திறன் வளம் பெறுகிறது. இதுவே
மார்க்சியம் கூறும் அறிவுக் கோட்பாடாகும். இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக்
கோட்பாடாகும்.
நமது தோழர்களில் பலருக்கு
இந்த மார்க்சியம் கூறும் அறிவுக் கோட்பாடு (theory of knowledge) இன்னும் புரிந்து
கொள்ளாது இருக்கின்றனர். புரிந்து கொள்ளாத தோழர்களிடம், “உங்களது கொள்கைகள், கோட்பாடுகள்,
சிந்தனைகள், செயல்முறைகள், திட்டங்கள், மதிப்பீடுகள். நீண்ட சொற்பொழிவுகள், நீண்ட கட்டுரைகள்
ஆகியவற்றை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? அவற்றின் ஆதாரத்தைக் கூற முடியுமா?” என்று
கேட்டால், இந்தக் கேள்வியை அவர்கள் விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஆனால் அவர்களால்
பதில் அளிக்க முடியாது.
அப்படிப்பட்ட தோழர்களுக்கு
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அறிவுக் கோட்பாட்டைப் பயிற்றுவிப்பது கம்யூனிஸ்ட்
கட்சியின் முக்கிய கடமை ஆகும்.
நமது தோழர்களின் சிந்தனை
மட்டம் உயர வேண்டும் என்றால், பகுத்தராய்வதிலும், படிப்பதிலும், அனுபவங்களைத் தொகுப்பதிலும்
தேர்ச்சி பெற்று சிரமங்களைச் சமாளிப்பதிலும், தவறுகளைக் குறைத்தும், பணிகளை சிறப்பாக
செய்யவும் மார்க்சியக் கல்வி அவசியமாகிறது. மேலும் சீனாவை வலிமையான சோஷலிச நாடாக கட்டியெழுப்பும்
கடமைக்காப் போராடவும், உலகெங்கும் உள்ள ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளான பரந்துபட்ட
மக்களுக்கு உதவுவதும் நமது சர்வதேசிய கடமை ஆகும்.
இவைகளை நிறைவேற்ற நமது
தோழர்களுக்கு இயக்கவியல் பொருள்முதல்வாததின் அறிவு பற்றி கோட்பாட்டை பயிற்றுவிப்பது
அவசியமாகிறது.
இத்துடன் இந்த சிறு கட்டுரை
முடிவடைகிறது. இதனை ஒட்டி மாவோ 1938-ஆம் ஆண்டில் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதம்” என்பதையும் பார்ப்போம்.
ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த
செயல்பாட்டாளராக இருக்க வேண்டும் என்றால் அந்தத் தோழர் மார்க்சியத் தத்துவத்தையும்
பொருளாதாரத்தையும் கற்க வேண்டும். இங்கே மாவோ விளக்கும் மார்க்சியத் தத்துவத்தைப் பார்ப்போம்.
இது இரண்டு அத்தியாயங்களைக் கொண்ட சிறியக் கட்டுரையே ஆகும். முதல் அத்தியாயம் கருத்துமுதல்வாதமும்
பொருள்முதல்வாதமும், இரண்டாவது அத்தியாயம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்.
I. கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்
கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்
என்கிற முதல் அத்தியாயத்தை மாவோ நான்கு உட்தலைப்புகளில்
விளக்குகிறார்.
1. தத்துவத்தில்
இரண்டு படைகளுக்கு இடையேயான போராட்டம்
பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம்
என்கிற இரண்டு எதிரெதிரான தத்துவ சிந்தனைப் பள்ளிக்களின் வளர்ச்சியும் போராட்டமே தத்துவங்களின்
முழு வரலாறாகும். உலகில் உள்ள அனைத்து தத்துவப் போக்குகளும் இந்த இரண்டு தத்துவத்தின்
வெளிப்பாடுகளே ஆகும்.
இந்த இரண்டு தத்துவங்களும்
குறிப்பிட்ட சமூக வர்க்கங்களைச் சேர்ந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். தத்துவங்கள்
குறிப்பிட்ட சமூக வர்க்கத்தின் தேவையை வெளிப்படுத்துகிறது. பொருள்முதல்வாதம் தொழிலாளி
வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கிறது, கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்கமான முதலாளித்துவ
வர்க்க நலனை பிரதிபலிக்கிறது. வர்க்க முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே தத்துவங்கள்
கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று இரு பெரும் பிரிவாகப் பிரிந்து காணப்படுகிறது.
ஆதிகால மனிதனிடம் காணப்பட்ட
அறியாமை மூடநம்பிக்கை ஆகியவற்றின் விளைவாகவே கருத்துமுதல்வாதம் தோற்றம் பெற்றது. பின்பு,
விஞ்ஞான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஆகியவற்றால் கருத்துமுதல்வாதம் வீழ்த்தப்பட்டு
பொருள்முதல்வாதம் மாற்றீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பண்டைய காலங்களில் இருந்து,
இன்றுவரை கருத்துமுதல்வாதம் வீழ்ச்சி அடையவில்லை என்பது மட்டுமல்லாது பொருள்முதல்வாதத்தை
எதிர்த்து அதிகமாகவே போராடுகிறது. சமூகம் வர்க்கங்களாக இன்னும் பிளவுபட்டிருப்பதே இதற்குக்
காரணம் ஆகும்.
ஒரு பக்கம் சுரண்டும் வர்க்கம்,
தமது வர்க்க நலனுக்காக கருத்துமுதல்வாதத்தை வளர்க்கவும் வலுப்படுத்தவும் போராடுகிறது
மறு பக்கம் ஒடுக்கத்துக்கு ஆளான வர்க்கம் தமது நலன்களை வளர்க்கவும் வலுப்படுத்துவும்
போராடுகிறது. வர்க்கப் போராட்டத்தின் கருத்தாயுதங்களாக பொருள்முதல்வாதமும் கருத்துமுதல்வாதமும்
திகழ்கிறது. சமூகத்தில் வர்க்க முரண்பாடு ஒழியும் வரை இந்த இரு தத்துவங்களுக்கு இடையேயானப்
போராட்டம் மறைந்துவிடாது. வர்க்கங்கள் மறைவின் போதே முழுமையாக மறைவடையும்,
கருத்துமுதல்வாதம் சுரண்டும்
வர்க்க நலன்களை பிரதிநிதிப்படுத்திக் கொண்டு பிற்போக்கான நோக்கங்களுக்கு பணிசெய்கிறது.
பொருள்முதல்வதம் பிற்போக்கான கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து இடைவிடாமல் போராடுகிறது.
உழைக்கும் மக்களின் நலன்களை பொருள்முதல்வாதம் நிறைவேற்றுகிறது. அதனால் உழைக்கும் மக்களின்
சித்தாந்த ஆயுதமாக பொருளமுதல்வாதம் விளங்குகிறது.
தத்துவங்களின் நோக்கம்
என்பது வர்க்கங்களின் நலன்களை பாதுகாப்பதே ஆகும். இதுதான் அதன் முதன்மையான நோக்கமாகும்.
முதலாளித்துவ வர்க்கத்தை
தூக்கி எறிவது, பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை கட்டமைப்பது, சோஷலிச சமூகத்தை உருவாக்குவது
என்கிற பொதுவான தொழிலாளர்களின் கடமைக்கு மார்க்சியத் தத்துவமானது குறிப்பான சிறப்பான
வழிகாட்டியாக இருக்கிறது.
2. கருத்துமுதல்வாதத்துக்கும்
பொருள்முதல்வாதத்துக்கும் இடையிலான வேறுபாடு
சிந்தனைக்கும் பொருளுக்கும்
இடையிலான உறவு குறித்த, அதாவது உணர்வுநிலைக்கும் வாழ்நிலைக்கும் இடையிலான உறவு குறித்த,
தத்துவத்தின் அடிப்படையான இத்தகையக் கேள்விக்கு அளிக்கும் பதில்களால் இந்த இரண்டு தத்துவ
முகாம்கள் தோன்றியது. கருத்துமுதல்வாதமானது, உலகில் உள்ள அனைத்துத் தோற்றுவாய்களுக்கு
அடிப்படைக் காரணமாக சிந்தனையை வைக்கிறது. கருத்தே முதன்மையானது பொருள், சமூகம், இயற்கை
போன்றவை இரண்டாம் நிலையானது என்பதே கருத்துமுதல்வாதத்தின் அடிப்படைக் கருத்தாகும்.
பொருள்முதல்வாதமானது இதற்கு
மாறாக சிந்தனையில் இருந்து பிரிக்கப்பட்ட
சுயேச்சையான பொருளை முதன்மைப்படுத்துகிறது, சிந்தனையை இரண்டாம் நிலையினதாகவும் பொருளுக்கு
கீழ்ப்பட்டதாகவும் கருதுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்படி வாழ்நிலையே சிந்தனைப்
படைக்கிறது சிந்தனை வாழ்நிலையைப் படைக்கவில்லை. கருத்துமுதல்வாதத்தின்படி சிந்தனையே
வாழ்நிலையைப் படைக்கிறது.
3. கருத்துமுதல்வாதத்தின்
வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம்
சிந்தனையின் விளைவே பொருள்
என்கிறது கருத்துமுதல்வாதம். இந்தத் தத்துவம் எதார்த்தத்தை தலைகீழாகப் பார்க்கிறது.
இந்தத் தத்துவத்தின் ஆதாரம் எங்குள்ளது என்பதைப் பார்ப்போம்.
முன்பே கூறியது போல கருத்துமுதல்வாதத்தின்
தொடக்கம் பண்டைய மனிதனின் அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியது.
சொத்துடைமையும் அதனைத் தொடர்ந்து வர்க்கங்களும் தோன்றிய போது உழைப்பை செலுத்துபவர்,
உழைப்பை வாங்குபவர் என்கிற பிரிவு ஏற்பட்டது. அதுமுதல் மூளை உழைப்பு உயர்ந்ததாகவும்
உடல் உழைப்பு தாழ்ந்ததாகவும் கருதப்பட்டது. இது கருத்துமுதல்வாதத்தின் கண்ணோட்டம் ஆகும்.
கருத்துமுதல்வாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் உடல் உழைப்புக்கும், மூளை
உழைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு ஒழிக்கப்படுவது முன்நிபந்தனை இருக்கிறது என்கிறார்
மாவோ.
சமூகத்தில் வர்க்கங்கள்
மறையும் போதே கருத்துமுதல்வாதம் இறுதியாக முழுமையாக வீழ்ச்சி அடையும். அதுவரை அதை எதிர்த்து
பொருள்முதல்வாதம் போராட வேண்டும். போராட்டம் தொடர்ந்தால்தான அதை இறுதியில் வீழ்த்த
முடியும், எதுவும் தானே நிகழ்ந்திடாது.
அனைத்துக் கருத்துமுதல்வாதிகளும்
மனித உணர்வுக்கு அப்பால் சுதந்திரமாக இருக்கும் புறநிலை எதார்த்தத்தின் இடத்தில்; உணர்வுநிலை,
சிந்தனை, கருத்து ஆகிவற்றை வைக்கிறார்கள். உணர்வுநிலை என்பது பருப்பொருளால் வரம்பிடப்பட்டது
என்கிற பொருள்முதல்வாதம் சுட்டிக்காட்டும் உண்மையை கருத்துமுதல்வாதிகளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை. அவர்கள் உணர்வுநிலையே செயல்துடிப்பு வாய்ந்ததாக நம்புகிறார்கள். இந்த
நம்பிக்கையின் அடிப்படையில் உணர்வுநிலையின் செயல்பாட்டை மிகைப்படுத்தி ஊதிப் பெருக்குகிறார்கள்.
அதனால் மாவீரர்களே வரலாற்றை படைப்பதாக கருதுகிறார்கள்.
கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக்
கொண்டுள்ள அரசியல்வாதிகள், அரசியலை சர்வ வல்லமை கொண்டதாகக் கருதுகிறார்கள். கருத்துமுதல்வாதத்தை
அடிப்படையாகக் கொண்டுள்ள ராணுவத் தளபதிகள் மூர்க்கமான சண்டை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
கருத்துமுதல்வாதப் புரட்சியாளர்கள் அராஜகவாத்தை ஆதரிக்கிறார்கள். அனைத்துக் கருத்துமுதல்வாதிகளும்
அகநிலைக் காரணிகளை மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள்.
மார்க்சியத்துக்கு முன்பான
பொருள்முதல்வாதம் எந்திரவியல் பொருள்முதல்வாதமாக இருந்தது. அறிவு வளர்ச்சியில், சிந்தனையின்
செயல்பாட்டை பழைய பொருள்முதல்வாதம் கணக்கில் கொள்ளவில்லை.
மார்க்சின் இயக்கவியல்
பொருள்முதல்வாதம் சிந்தனையின் செயல்துடிப்பான பாத்திரத்தை கவனத்தில் கொள்கிறது. அதே
நேரத்தில் சிந்தனையானது பருப்பொருளின் வரம்பிடப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறது.
கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் உணர்வுநிலையை
முக்கியத்துவப்படுத்துகிறது. கருத்துமுதல்வாதம் உணர்வுநிலையை முதன்மைப்படுத்துகிறது.
பொருள்முதல்வாதம் புறநிலையை முதன்மைப்படுத்துகிறது உணர்வுநிலையை இரண்டாம் நிலையானதாகக்
கூறுகிறது. உணர்வுநிலை என்பது புறநிலைமைகளால் உருவாகிறது என்று பொருள்முதல்வாதம் கூறுகிறது.
4. பொருள்முதல்வாதத்தின்
தோற்றம் மற்றும் வளர்ச்சியின் மூலம்
உணர்வுநிலைக்கு அப்பால்,
வெளியுலகில் சுதந்திரமாக பருப்பொருள் இருக்கிறது என்பதை ஏற்பதே பொருள்முதல்வாதத்தின்
அடிப்படை. நடைமுறை அனுபவத்தின் வாயிலாக இந்தக் கருத்தை மனிதன் உருவாக்கினான்.
பண்டைக்கால மனிதன் எளியக்
கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கை எதிர் கொண்டான். இயற்கை சக்திக்கு முன் அவனது
கருவி மிகவும் சாதாரணமானது அதனைக் கொண்டு, இயற்கை அறிய முடியாத நிலையில் அதனிடம் அடிபணிந்தான்.
இயற்கையின் போக்கிற்குக் காரணத்தை அறிய முடியாத நிலையே மதம், கருத்துமுதல்வாதம் தோன்றுவதற்கு
தொடக்கக் காரணம் ஆகும்.
கருத்துமுதல்வாதத்தின்
பயனற்றத் தன்மையை மனிதன் உணர்ந்து கொள்ளவும், பொருள்முதல்வாத முடிவுகளை ஏற்கவும் விஞ்ஞான
வளர்ச்சி மனிதனுக்கு உதவுகிறது. உலகம் விஞ்ஞான விதிகளால் ஆளப்படுவதை பொருள்முதல்வாதத்
தத்துவம் மனிதனுக்கு நிரூபித்தது. வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான முன்னேற்றமே இயற்கையின்
புரியாத் தன்மையை நீக்குவதுடன் பொருள்முதல்வாதத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக
இருக்கிறது.
பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்
அடிப்படையில் மனிதன் இயற்கை, சமூகம் ஆகிய இரண்டு ஒடுக்கு முறையில் இருந்தும் படிப்படியாக
விடுபடுகிறான்.
II. இயக்கவியல் பொருள்முதல்வாதம்
இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதம்
என்கிற இரண்டாம் அத்தியாயத்தை மாவோ ஆறு உட்தலைப்புகளில் விளக்குகிறார்.
1. இயக்கவியல்
பொருள்முதல்வாதமே பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர ஆயுதம்.
முதலாளித்துவ ஜனநாயகப்
புரட்சியின் வரலாற்றுப் பணியை ஏற்றுக்கொண்டுள்ள சீனப் பாட்டாளி வர்க்கம் தனது சிந்தனைக்
கருவியாக இயங்கியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்த
வேண்டும் என்று மாவோ கூறிகிறார். இதன்காரணமாக புரட்சிகர இயக்கத்தை வழிநடத்தும் ஊழியர்கள்
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கற்பது இன்றியமையாதது என்பதை அறிய முடிகிறது.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை
ஏன்? கற்க வேண்டும். ஏனென்றால் இயக்க செயற்பாட்டில் தவறுகளை தவிர்ப்பதற்கும், குறைபாடுகளை
களைவதற்கும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை கற்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக
அகநிலைவாதம், எந்திரவியல்வாதம் போன்றவற்றை தவிர்ப்பதற்கு மார்க்சியத் தத்துவத்தைப்
படிக்க வேண்டும்.
2. இயக்கவியல்
பொருள்முதல்வாதத்துக்கும் பழைய மரபுவழி தத்துவமுறைக்கும் இடையேயான உறவு
1919ஆம் ஆண்டு மே-4 இயக்கத்துக்குப்
பிறகு அரசியல் அரங்கில் உணர்வுவழிபட்ட பாட்டாளி வர்க்கம் தோன்றியதன் காணரமாகவும், அறிவியல்
மட்டம் உயர்ந்தன் காரணமாகவும் மார்க்சிய தத்துவ இயக்கமானது சீன நாட்டில் தோன்றி வளர்ந்தது.
ஆனால் தொடக்கநிலையில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கு பெற்ற எந்திரவியல் பொருள்முதல்வாதம்,
அகநிலைவாதம் போன்ற போக்கின் காரணமாக இயக்கவியல் பொருள்முதல்வாதப் புரிதல் பலவீனமாக
காணப்படுகிறது. 1927-ஆம் ஆண்டு புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்து மார்க்சிய-லெனினிய
புரிதல் மட்டம் முன்னேற்றம் கண்டது.
சீனாவில் அன்றைய பின்தங்கிய
வளர்ச்சி காரணமாக, தமது சொந்த தத்துவ மரபினை சீர்திருத்துவதன் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்
வளரக்கமுடியவில்லை. மார்க்சிய-லெனினியத்தை கற்பதின் மூலமே வளர்ச்சி பெற்றது. இருந்தாலும்
சீனாவில் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவம் வேரூன்றி வளர வேண்டுமானால், சீனப் புரட்சிக்கு
உறுதியான செல்வழியை அளித்து, எதிர்காலத்தில் இறுதி வெற்றிக்கு அழைத்துச் செல்ல விரும்பினால்,
சீனாவில் தற்போது காணப்படும் அனைத்து பழமையான தத்துவக் கோட்பாடுகளை எதிர்த்து விமர்சிக்க
வேண்டும். பழைய தத்துவ மரபுகளை பொருள்முதல்வாத அணுகுமுறையில் முறியடிப்பதின் மூலமே
புரட்சியில் வெல்ல முடியும் என்கிறார் மாவோ.
மாவோ கூறுகிறது மிகவும்
முக்கியமான ஒன்றாகும், நாட்டில் உள்ள பொருள்முதல்வாதத்துக்கு எதிரான பழைய தத்துவப்
போக்குகளை படித்து விமர்சிக்காவிட்டால் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை உறுதியாகப் பின்பற்ற
முடியாது.
பழைய தத்துவங்களை தான்
ஏற்றுக் கொள்ளவில்லை, அதனைப் படித்ததில்லை என்று கூறிவிடுவதால் மட்டும் அந்த பழைய தத்துவப்
போக்கில் இருந்து விடுபட முடியாது. தம்மை அறியாமலேயே நாட்டில் காணப்படும் தத்துவங்களின்
தாக்கம் இருக்கவே செய்யும், அதனால் அதை நீக்குவதன் மூலமே பொருள்முதல்வாத்தில் சிறப்பாக
செயல்பட முடியும்.
நம் நாட்டைப் பொறுத்தளவில்
இயக்கவியல் பொருள்முதல்வாதத்துக்கு நெருக்கமான பழைய பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்ட
தத்துவங்கள் நிறைய இருக்கிறது, அதனை நாம் மேம்படுத்துவதன் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை
அடைய முடியும்.
3. இயக்கவியல்
பொருள்முதல்வாதத்தில் உலகக் கண்ணோட்டம் மற்றும் ஆய்வு முறைமை ஆகியவற்றுக்கான ஒற்றுமை
இயக்கவியல் பொருள்முதல்வாதமானது
பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இந்தக் கண்ணோட்டம் சுற்றியுள்ள உலகத்தை
அறிந்து கொள்வதற்கு உரிய ஆய்வு முறையும் ஆகும். இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது
வறட்டுத் தத்துவம் கிடையாது, அது புதிய நிலைமைகளை புரிந்து கொள்வதற்கு வழிகாட்டியாகவும்
இருக்கிறது.
4. பொருள்முதல்வாத
இயக்கவியலின் நோக்கம் பற்றிய கேள்வி – எதை கற்பதற்குப் பொருள்முதல்வாத இயக்கவியல் உதவுகிறது?
பொருள்முதல்வாத இயக்கவியல்
ஒன்றுமட்டுமே சிந்தனை, அறிவு ஆகியவற்றின் தோற்றத்தை அறிவியல் வழியில் காரண காரியத்தோடு
நிரூவியுள்ளது. மனிதனது மூளையில், இயற்கையும் சமூகமும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை
அறிவியல் வழியில் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது.
இதனால் வாழ்நிலைக்கும்
சிந்தனைக்கும் இடையிலான உறவுகளை சரியாகப் புரிந்து கொண்டு, சமூகத்தை மாற்றுவதற்கான
சூழ்நிலைமைகளை புரிய வைக்கிறது.
5. பருப்பொருள்
பற்றி
மனித சிந்தனைக்கு வெளியே
சுயேச்சையாக உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதே பொருள்முதல்வாத தத்துவ முகாமில்
ஒருவர் இருப்பதற்கான முக்கியமான முன்நிபந்தனை ஆகும். புற உலகம் மனிதனைச் சாராமல் இருக்கிறது
என்பதே அறிவியல் ஆய்வு முறைக்கு அடிப்படை ஆகும். மனிதனின் அறிதல் அறிவியல் அடிப்படையில்
இருக்க வேண்டுமானால், அகநிலைவாதத்தால் முடிவெடுக்காமல் புறத்தில் இருக்கும் எதார்த்த
நிலையின் மெய்விவரங்களில் இருந்து ஆராய வேண்டும். இதற்கு இயக்கவியல் பொருள்முதல்வாதம்
வழிகாட்டுகிறது.
உணர்வுநிலை என்பதை பொருள்முதல்வாத
ஒளியில் நோக்கினால் அது ஒரு பொருளினுடைய இயக்கத்தின் வெளிப்பாடு என்பதை தவிர வேறொன்றும்
இல்லை என்பதை அறிய முடிகிறது. உணர்வுநிலை என்பது மூளையில் இருந்து தோன்றுவதில்லை, ஆனால்
மூளையில் பிரதிபலிக்கப்பட்டத்தில் இருந்து தோன்றுகிறது. மூளை சிந்திக்கும் திறன் பெற்றதுதான்,
ஆனால் அதை வைத்து சிந்தனைகளைக் கருத்துக்களை தத்துவங்களை உருவாக்க முடியாது.
இது ஒரு முதலாளித்துவ சமூகம்
என்று மூளையே முடிவெடுக்கிறது, ஆனால் அது தாமே எடுப்பதில்லை சமூகத்தில் உள்ள நிலைமைகளை
தொகுத்துப் பார்த்து இந்த முடிவுக்கு வருகிறது.
இதற்கு ஒரு எளிய உதாரணத்தைப்
பார்ப்போம்.
இன்று சாப்பிட்ட சாம்பார்
சாதம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால், பாத்திரத்தில் இருந்து வந்தது என்று கூறுவது,
சரியா? ஒரு வகையில் இது சரிதான். ஆனால் பாத்திம் வைத்திருப்பவர் அனைவரும் சாம்பார்
செய்திட முடியுமா? அடுப்பும் பாத்திரமும் மட்டும் வைத்து சாம்பாரை செய்திட முடியுமா?
எல்லோர் வீட்டிலும் பாத்திரம் இருக்கிறது, அடுப்பும் இருக்கிறது. சாம்பார் செய்ய வேண்டும்
என்றால் சாம்பார் செய்வதற்கான தேவைப்படும் பொருட்கள் வேண்டும். அந்தப் பொருட்கள் பாத்திரத்துக்கு
புறத்தில் இருக்கிறது. சுதந்திரமாக இருக்கிறது, பாத்திரமே இல்லை என்றாலும் புறத்தில்
அதற்கான பொருட்கள் இருக்கும்.
அதே போல பாத்திரத்தில்
இருந்தே ரசம் செய்யப்படுகிறது, காரக்குழம்பு செய்யப்படுகிறது, மீன் குழம்பு செய்யப்படுகிறது,
மோர் குழம்பு செய்யப்படுகிறது. அனைத்தும் பாத்திரத்தில் தான் செய்யப்படுகிறது. அற்காக
பாத்திரத்தில் இருந்து குழம்பு வருகிறது என்று கூறிட முயுமா? முடியாது.
மூளை பல முடிவுகள் எடுக்கிறது
அனால் அது மூளையின் கண்டுபிடிப்புபல்ல, புறத்தில் உள்ள மெய்விவரங்களை சேகரித்து, தொகுத்து
எடுக்கப்பட்ட முடிவு ஆகும். கருத்து உருவாவதற்கு புறநிலையே முதன்மையானது மூளையின் செயற்பாடு
இரண்டாம் நிலையானது. இவ்வளவு எளிதாக விளக்கியப் பிறகும் மூளையில்லை என்றால் எப்படி
முடிவு எடுக்கமுடியும். மூளை முக்கியமானது முதன்மையானது என்று கூறுபவர்கள் நிறைய பேர்கள்
இருக்கிறார்கள்.
காரக் குழம்பு செய்யக்கூடியப்
பொருட்களை வைத்து, மீன் குழம்பை செய்ய முடியாது, மீன் குழம்பு செய்யக்கூடியப் பொருட்களை
வைத்துக் கொண்டு, மோர் குழம்பை செய்ய முடியாது. குழம்பு செய்யக்கூடிய பொருட்கள் தான்
முதன்மையானது பாத்திரம் இரண்டாம் நிலையானது என்று கூறுவது தவறு இல்லை தானே.
ஒரு மனிதன் சமூகத்தில்
இருந்து விலகி காட்டில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டாதாக வைத்துக் கொள்வோம். அவன்
ஒரு ஐந்து ஆண்டுகள் காட்டில் தனித்து வாழ்கிறான், இப்போது அவனை ஒரு மனிதக் கூட்டம்
எதேச்சையாக சந்திக்கிறது என்றால் அந்தக் கூட்டத்தைப் பார்த்து அந்த மனிதன் பயப்படவே
செய்வான். காட்டில் இருந்து அவனை விடுவிக்க முயற்சித்தால், அவன் அதை தடுக்கவே செய்வான்.
ஆக சூழ்நிலைமைகளால் தான் அறிவைப் பெறுகிறோம் அறிவின் எல்லை புறச்சூழ்நிலையைச் சார்ந்தே
இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்படி கூறியவுடன் மார்க்சியம்
தனிநவர்களின் சிறப்பை அறிந்து கொள்ளவில்லை, பொருட்களை மதிக்கத் தெரிந்த மார்க்சியம்,
மனிதனை மதிக்கத் தெரியவில்லை என்கிற குற்றச்சாட்டை நாம் இன்றும் கேட்டுக் கொண்டுதான்
இருக்கிறோம். ஆனால் இதில் உண்மை இல்லை. மனிதனின் தனிச் சிறப்பை மார்க்சியம் மதிக்காமல்
இல்லை. மார்க்சே இதை நான்தான் கண்டு பிடித்தேன் என்று நேரடியாக எழுதி உள்ளார். குறிப்பாக
உபரி மதிப்பைக் கூறலாம். அதே போல மார்க்சுக்கு இணையான அறிவு பெற்ற எங்கெல்ஸ் மார்க்சை
மேதை என்றும் தான் ஒரு சிறந்த அறிவாளி மட்டுமே என்று கூறுவது தனிநபரை சிறப்பிப்பதுதானே.
மார்க்ஸ் பிறக்காது போய்
இருந்தால் உபரி மதிப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மார்க்சியம் கூறவில்லை.
இதுதான் வேறுபாடு. புறநிலையை சரியாக பிரதிபலிப்பவரையும், முதலாவதாகப் பிரதிபலிப்பவரையும்
மார்க்சியம் சிறப்பிக்கிறது. ஆனால அவரால் மட்டுமே அதை பிரதிபலிக்க முடியும் என்று கூறுவதை
மறுக்கிறல்.
இதுபோன்ற உதாரணத்தை அனைத்துக்கும்
எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நாமே முயற்சிக்க வேண்டும், அப்போதுதான் பிறர் உதவியின்றி
மார்க்சிய அணுகுமுறையில் சிறப்பாக செயல்பட முடியும்.
6. இயக்கம்
பற்றி (வளர்ச்சி பற்றி)
பொருளின் மீதான பார்வையே
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முதல் அடிப்படைக் கோட்பாடாகும். பருப்பொருளின் முதன்மைத்
தன்மையை அறிவதே முதல் அடிப்படை.
இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்
இரண்டாவது அடிப்படை பொருளின் இயக்கம், வளர்ச்சி பற்றிய கோட்பாடாகும்.
இயக்கம் என்பது பொருளின்
இருப்பின் வடிவம், பொருளின் உள்ளார்ந்த பண்பு, மேலும் பொருளின் பன்மைத் தன்மையின் வெளிப்பாடாகும்.
இதுவே உலக வளர்ச்சியின் கோட்பாடு.
உலகில் காணும் பொருட்களின்
சேர்க்கையின் ஒருமை பற்றிய கோட்பாட்டை, உலகின் வளர்ச்சியின் கோட்பாடுடன் இணைந்து இயக்கவியல்
பொருள்முதல்வாதத்தின் முழு உலகக் கண்ணோட்டத்தையும் உருவாக்குகிறது. உலகம் என்பது வரம்பற்ற
வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ள பொருளாயத உலகத்தைத் தவிர வேறில்லை என்கிறது மார்க்சியத்
தத்துவம்.
மாவோ இங்கே மிகவும் சுருக்கமாகவே
எழுதி உள்ளார், விளக்கம் கொடுக்கவில்லை. மற்ற நூல்களில் இதன் விளக்கத்தை நாம் படித்தறிய
வேண்டும்.
மார்க்சிய பொருளாயத ஒருமையைப்
பற்றி மட்டும் இங்கே சிறிது விளக்கத்தைப் பார்ப்போம். உலகில் பலப் பொருட்கள் நிறைந்து
காணப்படுகிறது, ஆனால் அதில் எவையும், எதனோடும் தொடர்பற்று தனித்து இருக்கதில்லை.
உலகில் மரம் இருக்கிறது,
காற்று இருக்கிறது, மண் இருக்கிறது இவைகள் அனைத்தும் தனித்தன்மையோடு இருக்கிறது, ஆனால்
தனித்து இருக்கவில்லை தன் சிறப்புத் தன்மையை பெற்றதுடன் மற்றவற்றோடு தொடர்பிலும் இருக்கிறது.
மற்றவற்றுடன் இணைந்து காணப்படுவதினால் தனது சிறப்புத் தன்மையை இழந்துவிடவில்லை. குறிப்பாகச்
சொல்ல வேண்டும் என்றால் தனது சிறப்புத் தன்மையை தன்னிடம் இருந்தே பெற்றுக் கொள்வதில்லை
பிறவற்றிடம் இருந்தும் பெற்றுள்ளது. மார்க்சியத் தத்துவம் பன்மையை ஏற்கிறது அதனுள்
உள்ள ஒற்றுமையையும் உணர்ந்துள்ளது. அதனால் தான் உலகை, மார்க்சியம் பன்மையில் ஒருமை
என்று கூறுகிறது.
இவைகளை விரிவாக வேறு நூல்களில்
படிக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொண்டு மாவோவிடம் செல்வோம்.
இயங்கியல் பொருள்முதல்வாதத்தின்,
இயக்கம் பற்றியக் கோட்பாடு, முதலில் கருத்துமுதல்வாதத் தத்துவத்துவங்களுக்கும், மதத்தின்
இறையியல் கருத்துக்களுக்கும் எதிராக உள்ளது. கருத்துமுதல்வாதத் தத்துவங்களும் மதங்களும்
உலகப்பொருட்களின் ஒருமையையும், உலகில் காணும்
பொருள்வகைப்பட்ட இயல்பையும் மறுக்கிறது. இதனால் தான் கருத்துமுதல்வாதத்தை பொருள்முதல்வாதம்
எதிர்க்கிறது.
இயக்கவியல் பொருள்முதல்வாதமானது
உலகில் உள்ள பொருட்களின் பன்மையைத் தன்மையையும் ஒவ்வொருப் பொருளின் தனித்தன்மைகளையும்
ஏற்றுக் கொள்கிறது. மேலும் உலகின் இயக்கத்தையும் வளர்ச்சியையும் பருப்பொருளின் அடிப்படையில்
விளக்குகிறது. ஆனால் கருத்துமுதல்வாதங்களும் மதங்களும் உலகின் இயக்கமும் வளர்ச்சியும்
பருப்பொருளில் இருந்து தனித்து இருப்பதாக கற்பனை செய்கிறது. மேலும் கடவுள், பரமாத்மா,
ஆத்மசக்தி போன்றவற்றின் நடவடிக்கையினால் உலகம் இயங்குவதாக கற்பனை செய்கிறது.
இங்கே மாவோ புத்த மதத்தை
மற்ற மதங்களுக்கு இணையான ஒரு மதாகவே பார்க்கிறார். நம்நாட்டில் உள்ள சில இடதுசாரிகளிடம்
புத்த மதத்தின் மீது இருக்கும் சார்பு மாவோவிடம் இல்லை. புத்தரின் கருத்து பின்னுக்கு
போய் புத்தம் மதமாகிவிட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.
சீனாவில் உள்ள புத்த மதம்,
உருவ வழிபாட்டைக் கொண்ட மதம் ஆகிய அனைத்தும் உலகுக்கு அப்பால் உள்ள சக்தியால் அனைத்தும்
இயக்கப்படுவதாக கருதுகிறது. பருப்பொருளில் இருந்து இயக்கத்தை பிரித்துப் பார்க்கும்
இத்தகைய கருத்துமுதல்வாதத் தத்துவங்கள் அனைத்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்துடன்
ஒத்துப்போகவில்லை. அதனால் கருத்துமுதல்வாத தத்துவங்களையும் மதங்களையும் மார்க்சியத்
தத்துவம் விமர்சிக்கிறது.
சீன இயக்கமறுப்பியல் சிந்தனையாளர்கள்
பிரபஞ்சம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் அசைவற்று இருப்பதாக கருதுகிறது. இயற்கை சமூகம் இரண்டுக்குமான அடிப்படை இயல்பு மாறாமல் இருப்பதாக
இந்த சிந்தனைகள் கூறுகிறது. இந்த சிந்தனைகளுக்கு அவர்களது வர்க்க பின்னணியே காரணம்
ஆகும். இயற்கை, சமூகம் ஆகிவற்றின் இயல்பு இயக்கத்துக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டது
என்று சுரண்டும் ஆதிக்க வர்க்கமான முதலாளித்துவம் எப்படி ஒப்புக் கொள்ளும், அப்படி
ஒப்புக் கொண்டது என்றால், அது தனது வர்க்கத்தின் அழிவை ஒப்புக் கொண்டது என்றாகிவிடும்.
இதனால் தான் சுரண்டும் பிற்போக்கு வர்க்கத்தின் கோட்பாடாக இயக்கமறுப்பில் இருக்கிறது.
புரட்சிகர உழைக்கும் வர்க்கமானது
உலகின் வளர்ச்சிக் கோட்பாடான இயக்கவியலை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறது. அதன் அடிப்படையில்
உலகையும் சமூகத்தையும் மாற்றுவதற்குப் போராடுகிறது. இதன் காரணமாகவே தத்துவம் வர்க்கத்
தன்மை உடையதாக மார்க்சியம் கூறுகிறது.
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகிறது, கருத்துமுதல்வாதம் சுரண்டும் வர்க்த்தின்
நலன்களை வெளிப்படுத்துகிறது.
ஒரு பொருளாக இருந்தாலும்சரி
சமூகமாக இருந்தாலும்சரி அதன் வளர்ச்சியும் மாற்றமும் அதன் உள்முரண்பாட்டில் அடங்கி
இருக்கிறது. இந்த உள்முரண்பாட்டை அறிந்து அதனை விரைவுபடுத்த இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்
அடிப்படை உழைக்கும் வர்க்கத்துக்கு உதவுகிறது.
பாட்டாளி வர்க்கமும், அனைத்துப்
புரட்சியாளர்களும் இந்த அறிவியல் வழிப்பட்ட ஆயுதத்தைக் கையில் எடுத்தால், அவர்களால்
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளவும், புரிந்து கொண்டதின் அடிப்படையில் உலகை மாற்றவும்
முடியும்.
இந்த சிறு கட்டுரையில்
மாவோ இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பவற்றுக்குள்ளேயே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின்
அடிப்படையை சுருக்கமாக சேர்த்து விளக்கி உள்ளார்.
சரியான சிந்தனையைப் பின்பற்றினால்தான் தவறு ஏற்படாமல்
சரியாக செயல்பட முடியும். இதற்கு மார்க்சியக் கல்வியை நடைமுறையோடு இணைத்துப் படிக்க
வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தோடு
இணைந்து, இயக்கவியல் பொருள்முதல்வாத வழிகாட்டுதலின் படி, கம்யூனிஸ்ட் கட்சி சென்று,
உழைக்கும் மக்களுக்கான சமூகத்தைப் படைக்கும் என்கிற உறுதியோடும், மாவோ கூறிய கருத்துகளோடும்
முதல் வகுப்பு நிறைவு பெறுகிறது.