(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட 95- வது வார வகுப்பு – 06-08-2023 )
எல்லாவற்றிலும் ஏற்றமும்
இறக்கமும் இருப்பது போல, கட்சிக்கும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் முன்னேற்றம்
காண்பது போலவே பின்னடைவும் சந்திக்கிறது. பின்னடைவைப் புரிந்து கட்சியை கட்டி எழுப்ப
வேண்டிய பணி கட்சித் தலைமைக்கும் கட்சி ஊழியர்களுக்கும் இருக்கிறது.
போல்ஷிவிக் கட்சியான ருஷ்ய
கம்யுனிஸ்ட் கட்சியும் பின்னடைவை சந்தித்தது.
ருஷ்யாவில் 1905-1907வரை
நடைபெற்ற புரட்சி தோல்வி கண்டது. தோல்வியைத் தொடர்ந்து ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் 1909 ஆண்டில் “கட்சியின் நெருக்கடியும் நமது கடமையும்” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை
எழுதினார்.
பின்னடைவு ஏற்பட்ட கட்சி,
மறுசீரமைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிறிய கட்டுரையில் ஸ்டாலின் விளக்கி
இருக்கிறார்.
கட்சி பின்னடைந்திருப்பது
கட்சியில் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக தெரிந்துவிடும். அதனால்தான் ருஷ்யக் கட்யூனிஸ்ட்
கட்சி நெருக்கடியில் இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை என்று இந்தக் கட்டுரையைத்
தொடங்குகிறார். அடுத்து எப்படிப்பட்ட விசயங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துச்
சொல்கிறார்.
கட்சியின் உறுப்பினர்கள்
குறைந்து வருகின்றனர், அமைப்புகள் சுருங்கிவிட்டது. சுருங்கியது மட்டுமில்லாது மற்ற
பகுதியில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பிழந்து தனித்தனியாக இருக்கிறது. ஒருங்கிணைந்த கட்சிப்
பணிகள் இல்லாததே கட்சியைப் பிடித்துள்ள நோயாகும்.
பரந்துபட்ட மக்களிடம் இருந்து
கட்சி தனிமைப்பட்டிருப்பதே பெரும் மனச்சோர்வை ஏற்படுதும் முதல் விசயமாக இருக்கிறது.
முன்பு கட்சியில் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர், அவர்கள் லட்சிக்கணக்கான மக்களை
வழிநடத்தினர். இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் என்பதற்கு பதிலாக பத்துபேர் இருக்கின்றனர்,
அதிகபட்சமாக நூறுபேர் கட்சியில் தொடர்ந்து நீடிக்கின்றனர். இவ்வளவு குறைவானவர்களைக்
கொண்டு, மக்களை வழிநடத்த முடியாது என்பது தெரிந்ததே ஆகும்.
ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி
விரிவான அளவில் மக்களிடம் சித்தாந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மையே.
மக்களும் கட்சியை மதிக்கின்றனர். புரட்சிக்கு முந்தைய நிலையை வைத்துப் பார்க்கும் போது
புரட்சிக்கு பிந்தைய நிலைமை மாறி உள்ளது என்பது உண்மையே ஆனால் கட்சியின் நடைமுறை செயற்பாட்டுக்கு
இது போதாது.
புரட்சி தோல்வி அடைந்தாலும்
புரட்சி மக்களுக்கு பாடம் கற்பித்துள்ளது, ஒரு வகையில் 1917ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்கு
இந்தப் புரட்சி காரணமாக இருந்தது என்று கூறலாம்.
கட்சியைப் பற்றி மக்களிடையே
மதிப்பு இருப்பது உண்மையே ஆனால் இது மட்டும் போதாது. மக்களை எந்தளவுக்கு அணிதிரட்டப்
படுகிறார்களோ அதுவே நடைமுறைக்கு தேவையானது.
1907 ஆம் ஆண்டு செயிண்ட்
பீட்டர்ஸ்பர்க் நகரில் கட்சிக்கு 8,000 உறுப்பினர் இருந்தனர், தற்போது அது 200 -ஆகக்
குறைந்துள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த நகரத்திலேயே இந்த நிலைமை என்றால் நெருக்கடியின்
தீவிரத்தை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
மக்களிடம் இருந்து கட்சி
பிளவுப்பட்டுள்ளது என்பது ஒரு பிரச்சினை என்றால், ஒர் ஊரில் என்ன நடக்கிறது என்பது
பற்றி, மற்ற ஊர்களில் உள்ள அமைப்புகளுக்கு தெரிவதில்லை என்பது மற்றொரு பிரச்சினையாக
இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அமைப்பு தனிமைப்பட்டுள்ளது. முன்பு இருந்த ஒருங்கிணைந்த
கட்சி அமைப்பு இப்போது இல்லை.
தற்போது உள்ள ப்ராலிடெரி, கோலோஸ், சோஷியல் டெமாக்ரட் போன்ற
பத்திரிகைகளைக் கொண்டு அனைத்து ருஷ்யாவையும் இணைக்க முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்து
வெளிவரும் பத்திரிகை ருஷ்யாவின் எதார்த்த நிலையில் இருந்து வேறுபட்டு இருக்கிறது.
அமைப்புகள் சிதறிக்கிடந்தாலும்
சித்தாந்த இணைப்பு இருக்கிறது, பொதுவான திட்டம் இருக்கிறது. புரட்சியின் போது ஏற்றுக்
கொள்ளப்பட்ட பொதுவான நடைமுறைக் குறிக்கோள்களும் இருக்கிறது. கட்சி அமைப்புகளின் சித்தாந்த ஒற்றுமை மட்டும் தனித்திருக்கும் அமைப்புகளை
ஒருங்கிணைத்திடாது.
ஆக, திரளான மக்களிடம் இருந்து
கட்சி பிளவுபட்டு நிற்பது, அதன் அமைப்புகள் ஒன்றிலிருந்து மற்றொன்று தனிமைப்பட்டு நிற்பது
ஆகிய இவ்விரண்டும்தான், கட்சியானது கடந்து வரவேண்டிய நெருக்கடியின் சாரமாகும்.
புரட்சியின் நெருக்கடி,
எதிர்ப்புரட்சியின் தற்காலிக வெற்றி, அதன்விளையாக உருவான மந்தநிலை, மேலும் கட்சி
1905-1906ஆம் ஆண்டுகளில் அனுபவித்த அரைகுறையான சுதந்திரமும் இழந்தது போன்றவையே தற்போதைய
நெருக்கடிக்குக் காரணம் என்பது எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
அரைகுறையான சுதந்திரமாக
இருந்தாலும் அப்போது கட்சி விரிவடைந்தது, வலுபெற்றது. புரட்சிக்கு முன் கிடைத்த சுதந்திரம்
காணாமல் போயிற்று, கட்சி சுணக்கம் கண்டது. புரட்சி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து, பல
அறிவுத்துறையினர் கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களுடன் ஊசலாட்டத்தில் இருந்த
தொழிலாளர்களும் கட்சியை விட்டு விலகினர்.
தற்போதைய சுதந்திர இழப்பினால்
ஏற்பட்ட நெருக்கடியானது சுதந்திரம் கிட்டும்வரை இந்த நெருக்கடியிலேயே கிடக்கும் என்று
சிலர் தவறாக நினைக்கின்றனர். முதலில் இந்த நெருக்கடியில் இருந்து கட்சி, புத்துயிர்
பெற்று செயல்படும்போதுதான் சுதந்திரம் பெறமுடியும். நெருக்கடியில் துவண்டுகிடந்தால்
சுதந்திரத்தை பெற முடியாது.
முதலாளித்துவத்தின் அமைப்பு
சீராக வளர்ந்து வரும் நிலையில், பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பும் தவிர்க்க முடியாமல்
ஏற்படும் என்று உலகம் முழுவதும் அறிந்த வர்க்கப் போராட்டத்தின் விதிகள் தெரிவிக்கின்றன.
பாட்டாளி வர்க்கத்தின் அமைப்பை ஒரு வர்க்கமாக வளர்ப்பதற்கு, ஒரே ஒரு தொழிலாளர் கட்சி
என்ற வகையில் நமது கட்சியை புதுப்பித்தல் அவசியமான ஒரு முன்நிபந்தனை என்பதை கம்யூனிஸ்டுகள்
அனைவரும் அறிந்ததே ஆகும்.
இதன் விளைவாக, நமக்குத்
தெரிவது என்னவென்றால், சுதந்திரம் கிட்டுவதற்கு முன்பே கட்சியானது நெருக்கடியில் இருந்து
மீளவேண்டும், இது சாத்தியமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் ஆகும்.
கட்சியை மீட்டெடுப்பதற்கான
வழிகள் என்னவென்றால், முதலாவது மக்களுடன் இணையும் வழிகளைக் கண்டுபிடிப்பது, இரண்டாவது
ஒன்றுடன் ஒன்று சேராமல் தனித்து நிற்கும் அமைப்புகளை ஒரே அமைப்பாக இணைப்பது. இந்த இரண்டையும்
மனதில் கொண்டு செயல்பட்டால்தான் இந்த நெருக்கடியில் இருந்து விடுபடமுடியும்.
அடுத்து ஸ்டாலின் கேள்வியை
தொடுத்து அதற்கு பதிலும் தருகிறார்.
நெருக்கடியில் இருந்து கட்சி எவ்வாறு தன்னை விடுவித்துக் கொள்ள
முடியும்; இதை அடைய என்ன செய்ய வேண்டும்?
கட்சியை முடிந்தவரை சட்டவழிமுறையாக்க
வேண்டும். டூமாவில் உள்ள சட்டவழியிலான
குழுவை ஒன்றிணைப்பதின் மூலம் இதை செய்ய வேண்டும் என்று சிலர் கருத்துரைக்கின்றனர்.
இதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று ஸ்டாலின் அன்றைய நிலையை விளக்குகிறார்.
பண்பாட்டு கழகம் போன்ற
சாதாரண சட்ட அமைப்புகளே கடுமையான துன்பங்களுக்கு ஆளாகும் இன்றையநிலையில், கட்சியை சட்டவழியில்
செயல்படுத்த எப்படி முடியும். இப்போது சட்டவழியில் செல்வது என்பது கட்சியின் புரட்சிகரமான
கோரிக்கைகளை கைவிடுவதற்கு சமம். அப்படி செய்வது கட்சியை புதுப்பிப்பதற்கு பதில் புதைப்பதற்கு
சமம். டூமாவில் உள்ள குழுவே மக்களிடம் இருந்து மட்டுமல்லாது கட்சி அமைப்புகளிடம் இருந்தும்
தனிமைப்பட்டிருக்கும் நிலையில் அது எப்படி கட்சியை மக்களுடன் இணைக்க முடியும் என்று
ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார்.
நெருக்கடியில் இருந்து
விடுபட சிலர் வேறொரு ஆலோசணையைக் கூறுகின்றனர். அது என்னவென்றால், நிலையற்ற அறிவுத்துறையினரை
கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சி செயல்பாடுகளின் பெரும்பகுதியை கூடுமானவரை தொழிலாளர்களிடம்
கொடுத்துவிட வேண்டும்.
பயனற்ற விருந்தாளிகளை கட்சியிலிருந்து
விடுவித்து, தொழிலாளர்களின் கைகளில் செயல்பாடுகளை குவிப்பது கட்சியின் மறுசீரமைப்பிற்கு
பெரும் பங்களிப்பை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பழைய அமைப்பு முறையின்
கீழ், பழைய கட்சிப் பணி முறைகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் "தலைமை"
ஆகியவற்றுடன் வெறும் "பொறுப்பு மாற்றம்"
மட்டும் கட்சியை மக்கள்திரளுடன் இணைத்து கொள்வதற்கு போதுமானதாக இருக்காது என்கிறார்
ஸ்டாலின்.
நோய்வாய்ப்பட்டுள்ள கட்சிக்கு
இதுபோன்ற அரைகுறையான நடவடிக்கைகளால் எதையும் செய்திட முடியாது. கட்சி சந்தித்துள்ள தீவிரமான நெருக்கடிக்கு தீவிரமான
வழிமுறைகளையே கையாளவேண்டும்.
தற்போதைய நிலைமைகளைக் கொண்டு,
பரந்துபட்ட மக்களை எழுச்சியுறச் செய்யும் கேள்விகளை எழுப்புவதின் மூலம் தான் செய்திட
முடியும்.
தொழிற்சாலைகள் முடல், உற்பத்தியின்
அளவைக் குறைத்தல், அதற்கு ஏற்ப தொழிலாளர்களை நீக்குதல், சம்பளம் குறைத்தல், வேலை நேரத்தை
நீட்டித்தல் போன்ற நிலைமைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கான கிளர்ச்சியில் உழைக்கும் மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
இந்த கிளர்ச்சியின் போது,
இது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, இது மூலதனத்தின் ஆதிக்கத்தால் ஏற்படுவது என்பதை உழைக்கும்
மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். உயிரோட்டமான உண்மைகளின் மூலம், நமது கட்சியின் மாபெரும்
குறிக்கோள்களை எடுத்துச் சொல்ல வேண்டும். அசைவற்று கிடக்கும் நிலையை கடப்பதற்கு இதைவிட
சிறந்த வழி எதுவும் கிடையாது. அவ்வாறு செய்யும் போதுதான் உழைப்பாளர்களை கட்சியை சுற்றி
அணிதிரட்ட முடியும்.
தொழிற்சாலைகள் மற்றும்
வேலைசெய்யும் இடங்களில் உள்ள கட்சிக் குழுக்கள்தான் இத்தகைய நடவடிக்கையை செய்திட முடியும்.
பாட்டாளிகள் புரட்சிகரமானவர்கள் என்பதனால் அனைத்து பாட்டாளிகளும் எளிதில் கட்சி செயல்பாட்டில்
ஈடுபடுவர்கள் என்று எதிர்பார்க்க முடியாது. முன்னேறிய பாட்டாளிகள்தான் உடனடியாக கட்சிப்
பணியைப் புரிந்து இணைந்து கொள்வார்கள்.
தொழிலாளர்களின் அனைத்து
விசயங்களிலும் கட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு, அவர்களின் அன்றாட நலன்களுக்குக்
குரல் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் அடிப்படையான நலன்களுடன் கட்சியின் குறிக்கோளை
இணைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு போதிக்க வேண்டும். இதுவே கட்சி ஊழியர்களின் கடமை ஆகும்.
இந்தக் கடமையை உணர்ந்து செய்வதின் மூலமே உழைக்கும் மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த
முடியும்.
இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு,
கட்சி அமைப்பு சரியாக கட்டப்பட வேண்டும். தொழிலாளர்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும்
செல்வாக்கு மிக்கவர்களை, அனைத்து உள்ளூர் அமைப்புகளில் இணைத்துக் கொள்ள வேண்டும். அமைப்பின்
முக்கியமான பொறுப்புகளில் இப்படிப்பட்டவர்களை அமர்த்த வேண்டும்.
புதிய கட்சி ஊழியர்களை
பணிக்கு அமர்த்தும் போது, போதிய அனுபவம் இல்லாத காரணத்தால் தொடக்கத்தில் தடுமாற்றம்
அடைவார்கள், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அனுபவம் கண்டிப்பாக
அவர்களுக்கு பயிற்சியைக் கொடுக்கும். கட்சிக்குத் தேவையான ஊழியர்கள் தயாராக வானத்தில்
இருந்து வருவதில்லை, பயிற்சியின் மூலமே கிடைக்கின்றனர்.
இத்தகைய நிலையில் அமைப்பின்
முழக்கம், “கட்சி நடவடிக்கையின் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய தொழிலாளர்களுக்கான
பாதையை விரிவுபடுத்துங்கள்,” “அதிகமான வாய்ப்புகளை அவர்களுக்குக் கொடுங்கள்” என்ற வகையில்
இருக்க வேண்டும். கட்சியின் முழக்கங்கள் கட்சியின் அப்போதைய போக்குகளுக்கு ஏற்ப அமைத்துக்
கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற்ற ஊழியர்களை
நம்பியே கட்சியின் செயற்பாடு இருக்கிறது. தலைமைப் பொறுப்பில் உள்ள முன்னேறிய தொழிலாளர்கள்
அதிக அளவில் அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அனுபவம் உள்ள செயற்துடிப்புள்ள
அறிவுத்துறையினரின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்.
உயர்மட்டங்களில் முன்னேறிய
தொழிலாளர்களுக்கு என விவாதக் குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும். அவர்களுக்கு
மார்க்சியக் கோட்பாடுகளையும் மார்க்சிய நடைமுறையையும் கற்பிக்க வேண்டும். இப்படி பயிற்றுவிக்கும்போது
முன்னேறிய தொழிலாளர்களின் அறிவுத்திறன் மேம்பாடு அடையும். இத்தகைய பயிற்சி அவர்களை
எதிர்காலத்தில் விரிவுரையாளர்களாகவும் கருத்தியல் தலைவர்களாகவும் ஆவதற்கு உதவும்.
இன்று பயிற்சி பெறாத தொழிலாளர்கள்
முதலில் மேடைக் கூச்சம் போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள், அதைப் பற்றி கவலைப்படத்
தேவையில்லை. பயிற்சியும் அனுபவமும் அவர்களை கண்டிப்பாக முன்னேற்றும்.
இதுவரை கூறியதை ஸ்டாலின் தொகுத்துத் தருகிறார்.
1) பாட்டாளி வர்க்கத்தின் அன்றாடத் தேவைகளுடன் பொதுவான வர்க்க தேவையையும் இணைந்த வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும்.
2) கட்சியின் மிக முக்கியமான மாவட்ட மையங்கள் என்ற வகையில் தொழிற்சாலைகளில் குழுக்களை, ஒழுங்கமைக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும்.
3)
முன்னேறிய தொழிலாளர்களை கட்சியின் மிக முக்கியப் பணிகளில் பங்குபெறச் செய்ய வேண்டும்.
4)
முன்னேறிய தொழிலாளர்களுக்கான "கலந்துரையாடல் குழுக்கள்" அமைக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையின்
வழியில் செயற்பட்டால் பரந்துபட்ட மக்களை கட்சியுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும்.
கட்சிக்கும் மக்களுக்கும் இடையே காணப்படும் இடைவெளி குறையும்.
மக்களிடம் இருந்து கட்சி
தனிமைப்பட்டதால் மட்டும் பாதிக்கப்படவில்லை, அதன் அமைப்புகள் ஒன்றில் இருந்து மற்றொன்று
தனிமைப்பட்டு நிற்பதாலும் பாதிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான
வழியை ஸ்டாலின் அடுத்து கூறுகிறார். வழக்கம் போல கேள்வி எழுப்பி பதிலையும் தருகிறார்.
தனிமைப்பட்டுக் கிடக்கும் உள்ளூர் அமைப்புகளை மற்ற அமைப்புகளுடன்
எப்படி இணைப்பது?
அனைத்துக்குமான பொதுவானதொரு வாழ்க்கையை ஏற்படுத்தும் வகையில்
தனித்திருக்கும் பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த கட்சியாக இணைப்பது எப்படி?
அவ்வப்போது நடைபெறும் பொதுவான
கட்சி மாநாடுகள் இத்தகையப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அமைப்புகளை இணைக்கும். வெளிநாடுகளில்
இருந்து வரும் பத்திரிகைகள், பிரிந்து கிடக்கும் பகுதிகளை இணைக்கும் என்பது உண்மைதான்.
ஆனால் இதுமட்டும் போதாது. மாநாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே கட்சி அமைப்புகளை
ஒன்றிணைத்து வைத்திருக்க முடியும். அதே போல ஒருங்கிணைக்கும் வேலையை பத்திரிகை முழுமையாக
செய்திடாது.
இதையும் கடந்து தீவிரமானதொரு
நடவடிக்கை தேவை என்பது நன்றாகத் தெரிகிறது.
அனைத்து ருஷ்ய பத்திரிகை ஒன்றே தீவிரமான நடவடிக்கையாக இருக்க
முடியும். இதுவே கட்சியின் நடவடிக்கையாக செயல்படும்.
பொதுவான கட்சி நடவடிக்கைகளின்
அடிப்படையில் மட்டுமே ரஷ்யாவில் சிதறிக் கிடக்கும் அமைப்புகளை ஒன்றிணைக்க முடியும்.
உள்ளூர் அமைப்புகளின் அனுபவங்கள் அனைத்தையும் பொதுவான மையத்தில் சேகரிக்க வேண்டும்.
அப்படி சேகரித்ததின் அடிப்படையில், பொதுவான
கட்சி அனுபவத்தை, உள்ளூர் அமைப்புகள் அனைத்துக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். இப்படி
செய்வதின் மூலமே பொதுவான கட்சியின் செயல்பாடு சாத்தியப்படும்.
அனைத்து ருஷ்யப் பத்திரிகையானது
உள்ளூர் அமைப்புகளுடன் மிக நெருக்கமாவும் நீடித்த உறவுகளையும் கொண்டதாகவும் இருக்க
வேண்டும்.
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுத்தவில்லை
என்றால் கட்சிப் பணியில் தலைமை என்ற ஒன்று இருக்காது, கட்சிப் பணியில் தலைமை இல்லை
என்றால் அமைப்புகளை நிரந்தரமாக இணைக்க முடியாது.
அனைத்து ருஷ்யப் பத்திரிகையானது
கட்சியின் மத்தியக் கமிட்டியால் நடத்தப்பட வேண்டும். கட்சியின் அனைத்துப் பகுதிக்கும்
வழிகாட்ட வேண்டிய கடமையும் மத்தியக் கமிட்டிக்கே உள்ளது.
எனவே, அனைத்து ருஷ்ய பத்திரிகையே,
கட்சியை அதன் மத்தியக் கமிட்டியைச் சுற்றி ஒன்றிணைத்து அணிதிரட்டும். இதுவே கட்சியில்
காணப்படும் நெருக்கடியை சமாளிப்பதற்கான வழியாக இருக்கும்.
இதுவரை கூறியதை ஸ்டாலின்
இறுதியில் தொகுத்து தந்துள்ளார்.
புரட்சி தோல்வி அடைந்ததின்
காரணமாக, கட்சியில் ஒரு நெருக்கடி உருவாகியுள்ளது. கட்சியின் அமைப்புகள் மக்களுடனான
தொடர்வுகளை இழந்து நிற்கிறது, பல பகுதிகளில் கட்சி தனித்தனியான அமைப்புகளாகச் சிதறிக்
கிடக்கிறது.
இதை போக்குவதற்கு கட்சி அமைப்புகள் மக்களுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது உள்ளூர் அளவிலான கடமை ஆகும்.
கட்சி அமைப்புகள் ஒன்றுடன்
மற்றொன்று இணைத்துக் கொள்வதோடு, கட்சியின் மத்தியக் கமிட்டியைச் சுற்றி அணிதிரள வேண்டும்.
இது மத்திய அமைப்பு அளவிலான கடமை ஆகும்.
உள்ளூர் அளவிலான கடமையை
நிறைவேற்றுவதற்கு, பொதுவான அரசியல் கிளர்ச்சிகளுடன் கூடவே தொழிலாளர்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும்
தீவிரமான பொருளாதாரப் போராட்டங்களும் சேர்த்து நடத்தப்பட வேண்டும். முன்னேறிய தொழிலாளர்களிடம்
கட்சிப் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். முன்னேறிய தொழிலாளர்களுக்கு கட்சியின் தலைவர்கள்
போதுமான அறிவுத்திறன் பெறும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும்.
மைய அளவிலான கடமையை நிறைவேற்றுவதற்கு,
உள்ளூர் அமைப்புகளை கட்சியின் மத்தியக் குழுவுடன் இணைத்து, அவர்களை ஒருங்கிணைக்கும்
ஒரு அனைத்து ருஷ்ய பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும்.
இவைகளை செய்வதின் மூலமே
கட்சியின் நெருக்கடியில் இருந்து விடுபட முடியும். இதனை சிறப்பாக செய்வதின் மூலமே பாட்டாளி
வர்க்கத்தின் தகுதியான, முன்னணிப் படையின் பொறுப்பான பாத்திரத்தை கட்சி வகிக்க முடியும்.
டூமாவிலிருந்து, தொழிற்சங்கங்களிருந்து,
கூட்டுறவு சங்கங்கள், சவ அடக்கத்துக்கான நிதிகள் வரையில் தன்னைச் சுற்றியுள்ள சட்ட
வாய்ப்புகளை கட்சி எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு சீக்கிரம் நெருக்கடியைச்
சமாளிக்கும். இந்த நெருக்கடியை எவ்வளவு விரைவில் வெற்றி கொள்கிறோமோ, அந்தளவுக்கு கட்சியின்
மீட்சியும் சீரமைப்பும் நிறைவேற்ற முடியும்.
இது ஒரு சிறிய கட்டுரை
என்றாலும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் கட்சி எப்படி வெளிவருவது என்பது பற்றி ஸ்டாலின்
இதில் சிறப்பாகக் கூறியுள்ளார். நமது நாட்டுக்கும் ஸ்டாலினது வழிகாட்டுதல் பயனுள்ளதாக
இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுவரை நாம் பார்த்த ஸ்டாலினது
“கட்சியின் நெருக்கடியும் நமது கடமையும்”
என்கிற கட்டுரை 1909 ஆண்டில் எழுதப்பட்டது. இதன் கூடவே ஸ்டாலின் 1912ஆம் ஆண்டு எழுதப்பட்ட
“கட்சிக்காக” என்கிற சிறிய கட்டுரையையும்
சேர்த்துப் பார்ப்பது பொறுத்தமாக இருக்கும். இந்த இரண்டு கட்டுரைகளும் அலைகள் வெளியீட்டகம்
வெளியிட்டுள்ள ஜே.வி.ஸ்டாலின் படைப்புகளின் இரண்டாவது தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
கட்சி நெருக்கடியில் உள்ளது
என்று ஸ்டாலின் குறிப்பிட்டதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து “கட்சிக்காக” என்கிற இந்தக்
கட்டுரையை எழுதியுள்ளார் என்பதை நினைவில் கொண்டு, இதன் தொடக்க வரிகளை ஸ்டாலின் சொற்களிலேயே
பார்ப்போம்.
"அரசியல் வாழ்க்கையில் ஆர்வம் என்பது நாட்டில் மீண்டும் துளிர்விடத் தொடங்கி உள்ளது, அதனோடு கூடவே நமது கட்சிக்குள் இருந்து வந்த நெருக்கடியும் கூட முடிவுக்கு வந்துள்ளது. செயலற்ற நிலை என்பது கடந்த காலமாகப் போனதோடு, கட்சிக்குள் நிலவி வந்த மந்தநிலையும் மெதுவாக மறையத் தொடங்கி உள்ளது."
(241)
ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி
சந்தித்து வந்த நெருக்கடி குறைந்து வருகிறது என்கிற தகவலுடன் இந்தக் கட்டுரை தொடங்குகிறது.
அதாவது குறைப்பதற்கான செயல் தொடங்கிவிட்டது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
புரட்சி தோல்வி அடைந்த
நேரத்தில் கட்சி உடைந்து போனது, இதனைக் கடந்து மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கும்
நேரத்தில் கட்சியும் எழுந்து நிற்கிறது. ருஷ்யப் புரட்சியின் வளர்ச்சின் போது கட்சி
வலுபெறுகிறது. இதுதான் எதார்த்த உண்மையாக இருக்கிறது.
தொழில்துறையில் உள்ள முக்கியப்
பிரிவுகள் புத்துயிர்ப் பெற்று வளர்கிறது, அதே நேரத்தில் தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள்
குறைந்து செல்கிறது, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரம், அரசியல் ஆகிய அமைப்புகள்
சுதந்திரமாக வளர்ந்து வருகிறது, ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் சட்டவழிப்பட்ட, சட்டவழியற்ற
அமைப்புகள் இரண்டையும் வலிந்து நசுக்கப்படுகிறது. விவசாயிகளின் நிலைமையும் சீரழிந்து
கொண்டே செல்கிறது.
இத்தகைய நிலைமைகள் உழைக்கும்
மக்களை நேரடியாக பாதிக்கிறது. இந்த பாதிப்பு, உழைக்கும் மக்களை அரசியல் வாழ்க்கை மீதான
ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி விழிப்புற்ற மனங்களை அப்படியே மூடி
வைத்திருக்க முடியாது. இந்த விழிப்புணர்வை தவிர்க்க முடியாமல் வெளிப்படையான மக்கள்திரள்
நடவடிக்கையாக உருவாக்க வேண்டும்.
இதை எப்படி செய்வது, எதன்
வழியில் செய்வது என்பதைப் பற்றி ஸ்டாலின் அடுத்துக் கூறுகிறார். அதை நாம் மேற்கோளாகவே
பார்க்கலாம்.
"முதலாளிகளுக்கு
எதிராக சுதந்திரமாகப் போராடுவதற்கான, வேலைநிறுத்தம் செய்வதற்கான, ஒன்றுகூடுவதற்கான,
சங்கம் அமைப்பதற்கான, பேசுவதற்கான, எழுதுவதற்கான உரிமைகள் அனைத்தையும் நாம் வென்றெடுத்தாக
வேண்டும். இல்லையெனில், தங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான தொழிலாளர்களின்
போராட்டம் மிக மோசமான வகையில் பாதிப்பிற்கு உள்ளாகும். எனினும் ஆர்ப்பாட்டங்கள், அரசியல்
வழியிலான வேலைநிறுத்தங்கள் போன்ற வெளிப்படையான அரசியல் வழியிலான நடவடிக்கைகள் மூலமாக
அல்லாமல் வேறெப்படி இந்த உரிமைகள் அனைத்தையும் நம்மால் வென்றெடுக்க முடியும்?"
ஸ்டாலின் இங்கே குறிப்பிடுகிற
உரிமைகள், முதலாளித்துவ சமூகத்துக்கு முன்பு உழைப்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை. முதலாளித்தும்
வழங்குகிற குறைந்தபட்ச உரிமையையும் பயன்படுத்திக் கொள்ளாமல், தொழிலாளர்களின் மேம்பாட்டையோ,
கம்யூனிஸ்ட் கடசியின் வளர்ச்சியோ காணமுடியாது.
இத்தகைய உரிமைகள் உழைக்கும்
மக்களுக்கு முழுமையான விடுதலைக்கு உதாவது, ஆனால் இதைப் பயன்படுத்தால் முழுமையான விடுதலைக்கான
போராட்டத்தை வளர்த்துக் கொள்ள முடியாது.
1912ஆம் ஆண்டுகளில் ருஷ்யா இருந்த நிலைமைகளை
ஸ்டாலின் கூறுகிறார். நாடு இப்போது பட்டினியால் பீடிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் பஞ்சத்தின்
பிடியில் அகப்பட்டுள்ளனர். அவநம்பிக்கையிலும் பிச்சைக்காரத்தனத்திலும் உள்ள ருஷ்யாவை
மீட்டெடுக்க வேண்டும். ஜாராட்சியை அடிமுதல்முடிவரை வேரோடு தூக்கி எறியாமல் இவைகளை செய்திடமுடியாது.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விரிவான பரந்துபட்ட மக்களின்
புரட்சிகரமான இயக்கத்தின் மூலமாக அல்லாமல் வேறு எந்த வகையிலும் ஜார் ஆட்சியையும் அதனோடு
ஒட்டிப் பிழைத்துக் கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ தன்மைகளையும் தூக்கி எறிய முடியாது.
இதற்கு, மக்களின் விரிவான
பகுதியினரிடையே புரட்சிகர உணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரே பொதுமான முயற்சியின் மூலம்,
உள்ளூர் அமைப்புகளின் தன்னித்தனியான முயற்சிகளை ஒன்றிணைக்கும், திறமை உள்ள வலுவான,
செயலூக்கமான பாட்டாளி வர்க்கக் கட்சி அவசியமாகும்.
இதை உணர்ந்து ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியை சீரமைக்க வேண்டும். புரட்சிகர நடவடிக்கைகளை
சிறப்பாக செய்திடுவதற்கு பாட்டாளி வர்க்கத்தைத் தயார்ப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு
தொழிற்துறை மையத்திலும் உள்ள ருஷ்யக் கம்யுனிஸ்ட் கட்சி தொழிலாளர்கள், குழு வேறுபாடின்றி,
சட்டவிரோத ருஷ்ய கம்யூனிச தொழிலாளர் கட்சி தேவை என்று நம்பும் அனைவரும், உள்ளூர் கட்சி
அமைப்புகளில் ஒன்று சேர வேண்டும்.
இதற்கு, அதிகமானவரை உறுப்பினர்களாகச்
சேர்க்க வேண்டும் என்பது பொருள் அல்ல, இன்றைய வேலை நிலைமைகளில் அதிகமானவரை சேர்த்தல்
என்பது மேலும் அபாயகரமானதாக மாற்றிவிடும். உறுப்பினர்களின்
எண்ணிக்கை அதிகரிக்க தேவையில்லை, இருக்கின்றன
உறுப்பினர்களின் தரத்தை உயர்த்தினாலேயே போதுமானது ஆகும். கட்சியில் செல்வாக்கு
மிக்க தோழர்கள் தங்களது செயற்பாட்டின் நோக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டாலேயே
போதும். மேலும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வழிமுறைகளின்படி தங்களது புரட்சிகர
நடவடிக்கைகளை அவர்கள் உறுதியோடு மேற்கொள்ள வேண்டும்.
உள்ளூர் அமைப்புகள் தங்களைத்
தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துடன் தொடர்புடைய அனைத்து
விவகாரங்களிலும், மிக சிறிய சாதாரண விவகாரங்கள் முதல் மிகப்பெரிய அசாதாரண விவகாரங்கள்
வரை தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
உழைப்புக்கும் மூலதனத்துக்கும்
இடையே நடைபெறும் சின்னஞ்சிறு சண்டைகளையும் விட்டுவிடக்கூடாது. அரசுக்கு எதிராக தொழிலாளர்கள்
மேற்கொள்ளும் ஒவ்வொரு எதிர்ப்பு நடவடிக்கைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்குத் தேவைப்படுகிற
அறிவுத்துறையினர் போதுமான அளவுக்கு இல்லை என்பது உண்மையான நிலவரம். இதைக் கண்டு தொழிலாளர்கள்
அச்சப்படத் தேவையில்லை. முற்றிலும் தேவையற்ற அடக்கத்தையும், பழக்கமில்லாத வேலை செய்கிறோம்
என்கிற நினைப்புகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, துணிவுடன் கட்சி வேலைகளை செய்ய வேண்டும்.
அப்படி செய்கின்ற போது தவறுகள் ஏற்பட்டாலும் அதனால் எந்தவித இழப்பும் இல்லை என்றே ஸ்டாலின்
கூறுகிறார்.
உள்ளூர் அமைப்புகள் வலிமையோடும் செல்வாக்கோடும் இருந்தாலும்
அதுவே கட்சியாகி விடாது. அது கட்சியாக உருவாக வேண்டுமானால் உள்ளூர் அமைப்புகள் அனைத்தும்
ஒன்று திரட்டப்பட்டு, பொதுவானதொரு வாழ்க்கையை மேற்கொள்ளும், ஒருங்கிணைந்த அமைப்பாக
செயல்பட வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தின்
பொதுவான நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விசயங்களிலும் தொடர்ந்து ஈடுபடும் விதத்தில்,
மத்திய குழு செயல்பட வேண்டும். பரந்துபட்ட அரசியல் கிளர்ச்சியை தொடர்ந்து நடத்தும்
விதமாக ஒரு சட்டவிரோதமான பத்திரிகையை, மத்தியக் குழு நடத்த வேண்டும். இத்தகைய வழியில்
செல்லும்போதே கட்சியின் மறுசீரமைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை செய்திட முடியும்.
இந்த கடினமான பணியை யாருடைய
உதவியின்றி, தனியாக மத்தியக் குழுவினால் சமாளிக்க முடியாது என்பது தெரிந்ததே. உள்ளூர்ப்
பகுதியில் இருந்து முறையான ஆதரவு கிடைக்காது போனால் மத்தியக் குழு தவிர்க்க முடியாத
வகையில் ஒரு மறைக்குறியீடாக மாற்றப்படும். மேலும் கட்சியானது வெறும் கற்பனை கதையாக
போய்விடும். ஆகவே மத்தியக் குழுவும் உள்ளூர் அமைப்புகளும் கூட்டாக பணிசெய்ய வேண்டும்.
இதுவே கட்சியை புதுப்பிப்பதற்கான இன்றியமையாத நிபந்தனை ஆகும். இதைப் புரிந்து கொண்டு
கட்சித் தோழர்கள் செயற்பட வேண்டும்.
இன்று நாம் பார்த்த இரண்டு
கட்டுரைகளிலும் உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தையும் அதன் போக்கையும்
பற்றி ஸ்டாலின் மிகச் சிற்பாக விளக்கி உள்ளார்.
ருஷ்யாவில் அன்றைய நிலைமையில்
கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாகவே செயல்பட முடிந்தது. இருந்தாலும் சட்டவழியிலான போராட்டத்துக்கு
கட்சி வழிகாட்டியது. போல்ஷிவிக் கட்சியின் வெற்றி சட்டவழியற்ற போராட்டத்துடன் சட்டவழியிலான
போராட்டத்தை இணைந்ததில் இருக்கிறது என்று லெனின் கூறியதை இங்கே நினைவில் கொள்வோம்.
பொதுவாக ஸ்டாலின் நூல்களுக்கு
தனியான வகுப்பு எடுக்கத் தேவையில்லை, அவரது எழுத்துக்கள் மிகமிக எளிமையாகவே இருக்கும்,
இருந்தாலும் அவர் எழுதியதை அறிமுகப்படுத்த வேண்டி இருப்பதினாலேயே வகுப்பு எடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment