லெனின்
“சோவியத் அரசாங்கத்தின் உடடினப் பணிகள்”
என்ற நூலை 1918ஆம் ஆண்டு ஏப்ரல் 13க்கும் 26க்கும் இடையே எழுதினார். கையெழுத்துப்படிகளில்
இன்றைய நிலைமையில் சோவியத் அரசாங்கத்தின் பணிகள் மீதான ஆராய்ச்சியுரைகள் என்று
தலைப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுரைகள் கட்சியின் மையக் கமிட்டிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு,
அங்கீகரித்து பிராவ்தா, இஸ்வோஸ்தியா பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
சோஷலிசப் புரட்சியை ருஷ்ய
மக்கள் திடமான நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டுவிட்டனர், சுரண்டுவோரை ஆயுத பலத்தால் நசுக்கியாகிவிட்டது,
அடுத்து நிர்வாகம் என்கிற மேலான பணியினை செய்திட வேண்டும் என்ற நிலை அடைந்துவிட்டதை,
லெனின் தமது சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“மனித
வரலாற்றிலேயே முதன்முதலாய் ஒரு சோஷலிஸ்டுக் கட்சி ஆட்சியதிகாரத்தை வெற்றி கொள்வதும்,
சுரண்டுவோரை நசுக்குவதுமாகிய பணியினைப் பிரதானமாய் நிறைவேற்றி முடித்துவிட்டு, நிர்வாகம்
எனும் பணியினை நேரடியாக அணுக முற்பட்டிருக்கிறது. சோஷலிசப் புரட்சியின் இந்த
மெத்தக் கடினமான (மிகவும் மனநிறைவு தருவதான) பணியினை நாம் சிறப்புடன் நிறைவேற்றி
முடிப்பவர்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். வெற்றிகரமாய் நிர்வகிக்கும் பொருட்டு
நாம் மக்களுக்கு திடநம்பிக்கை அளிக்க வல்லோராய் இருப்பதோடு அன்னியில், உள்நாட்டுப்
போரில் வெற்றி பெற வல்லோராய் இருப்பதோடு அன்னியில், நடைமுறை
ஒழுங்கமைப்பு வேலையைச் செய்ய வல்லோராயும் இருக்க வேண்டும் என்பதை நாம் முழுமையாய்
உணர்ந்து கொண்டாக வேண்டும். இது மிகமிகக் கடினமான பணி, ஏனெனில் கோடானுகோடி மக்களது
வாழ்க்கையின் மிகமிக ஆழ வேரூன்றியுள்ள அடிப்படைகளை, பொருளாதார அடிப்படைகளை ஒரு புதிய
வழியில் ஒழுங்கமைத்திடும் பணியிது. அதேபோது இது மிகவும் மனநிறைவுதரும் பணி, ஏனெனில்
இந்தப் பணி (முதன்மையான, பிரதான உருவரைகளில்) நிறைவேற்றி முடிக்கப் பெற்றதன்
பிறகுதான் ருஷ்யாவானது ஒரு சோவியத் குடியரசு மட்டுமின்றி, ஒரு சோஷலிசக் குடியரசும்
ஆகிவிட்டது என்று கூற முடியும்.”1
சோஷலிசத்தை நிலைநாட்ட இருக்கும் ருஷ்ய நிலைமையினை தெளிவாக படம்பிடித்துக்காட்டுகிறார்
லெனின்:-
“முழுக்க
முழுக்க பாட்டாளி வர்க்கத்தவராய் இருப்போரைக் காட்டிலும் சிறு உடைமையாளராய் இருப்போர்
வெகுவாய் மிகுதியாயுள்ள நாட்டில், பாட்டாளி வர்க்கப் புரட்சியாளருக்கும், குட்டி முதலாளித்துவப்
புரட்சியாளருக்கும் இடையிலுள்ள வேறுபாடு தவிர்க்க ஒண்ணாதவாறு தன்னை வெளிப்படுத்திக்
கொள்கிறது, அவ்வப்போது மிகவும் கடுமையாகவே வெளிப்படுத்திக் கொள்கிறது”2
மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ
நாடுகளை ஒப்பிடும் போதும் ருஷ்யா பின்தங்கிய நிலையில் இருக்கிறது. அதனால் ருஷ்யா மேலைநாடுகளில்
முதிர்ச்சியுற்று வரும் புரட்சியினை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய நிலைமையில் தமது
சோஷலிசத்தை நிர்மாணிக்கிறது.
“மேற்கில்
சோஷலிசப் புரட்சியானது மிகப் பல காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு விட்டது. நம்மை எதிர்
நோக்கும் ஒழுங்கமைப்புப் பணியினை எந்த அளவுக்கு நாம் நிறைவேற்றுகிறோமோ, அந்த அளவுக்குத்தான்
மேற்கில் சோஷலிசப் புரட்சிக்கு நாம் பயனுள்ள உதவி அளிக்கக் கூடியோராய் இருக்க முடியும்
என்பது கூறாமலே விளங்கும்.”2
“சர்வதேச
விவகாரங்களில் அசாதாரணமாய்க் கடினமான, சிக்கலான, அபாயகரமான நிலைமை, சாமர்த்திய உபாயங்களும்
பின்வாங்குதலும் இன்றியமையாதன ஆகிவிடுதல், வேதனை வாய்ந்த மந்த கதியில் மேலைய நாடுகளில்
முதிர்ச்சியுற்று வரும் புரட்சியின் புதிய திடீர் வெடிப்புக்களுக்காக காத்திருக்க
வேண்டியுள்ள ஒரு காலகட்டம், உள்நாட்டில் மந்தகதியிலான கட்டுமானத்துக்கும்- குட்டிமுதலாளித்துவக்
கண்டிப்பின்மையும் அராஜகமுமாகிய அபாயகரமான கூறினை எதிர்த்து கடுமையான பாட்டாளி வர்க்கக்
கட்டுப்பாடு புரிந்திடும் விடாப்பிடியான போராட்டத்தை தயவு தாட்சண்யமின்றி இறுக்கமாக்குவதற்குமான
காலகட்டம்- சுருக்கமாய்ச் சொல்லுமிடத்து,
இவைதான் சோஷலிசப் புரட்சியில் இப்போது நாம் இருந்து வரும் இந்த விசேஷக் கட்டத்தின்
சிறப்பியல்புகள்.
வரலாற்று
நிகழ்ச்சிகளின் சங்கிலியில் இந்த இணைப்பைத்தான் தற்போது நமது முழு பலத்தையும் கொண்டு
பற்றிக் கொள்ள வேண்டும், அப்போதுதான் அடுத்த இணைப்புக்கு மாறிச் செல்லுமுன் நம்மை எதிர்நோக்கும்
பணிகளைச் செய்து முடிக்கும் ஆற்றலுடையோராக நாம் இருக்க முடியும், தனிப்பெரும் சுடரொளியால்,
சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிகளது சுடரொளியால் நாம் இந்த அடுத்த
இணைப்பை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகிறோம்.”3
இந்தவகையிலான சிக்கல்
மிகுந்த சூழ்நிலைமைகளைப் புரிந்துகொள்ளாத சில புரட்சியாளார்கள் பின்வாங்குதல் என்பதை முன்வைத்து அக்டோபர் புரட்சியின்
பாரம்பரியங்களை மறந்து விட்டதாக, புனித ஆவேசத்துடன் சீற்றம் கொண்டு போல்ஷிவிக்கட்சிக்கு
எதிராக செயல்பட்டனர்.
“பரிதாபத்துக்குரிய
இந்த “புரட்சியாளர்களது” துரதிருஷ்ட நிலை என்னவெனில், இவர்கள் உலகிலேயே உன்னதமான அடிநோக்கங்களால்
உந்தப்படுவோராகவும் சோஷலிச குறிக்கோளுக்கு முழு விசுவாசம் செலுத்துவோராகவும் இருப்போருங்கூட,
தனி நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள்- பெரு நாசம் விளைவித்த பிற்போக்கு
போரினால் குதறிக் குலைக்கப்பட்டிருப்பதும் அதிகமாய் முன்னேறிய நாடுகளைக் காட்டிலும்
நெடுங் காலம் முன்னதாகவே சோஷலிசப் புரட்சியை ஆரம்பித்துவிட்டதுமாகிய, ஒரு பிற்பட்ட
நாடு தவிர்க்க முடியாதவாறு கடக்க வேண்டியிருக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் “கசப்பான”
நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறார்கள், கடினமான ஒரு மாற்றத்தின் கடினமான தருணங்களில்
தக்க மனவுரம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இயற்கையாகவே இடதுசாரி சோஷலிஸ்டுப் புரட்சியாளர்கள்தான்
நமது கட்சிக்கு எதிரான இந்த வகைப்பட்ட “அதிகாரபூர்வ” எதிர்தரப்பினராகச் செயல்படுகிறார்கள்.”4
இச்சிக்கல்களை இளம் சோவியத்தும்,
இதுவரை ஒடுக்கத்துக்கு ஆளான தொழிலாளி விவசாயி வர்க்கம் இந்தப் புதிய நிலைமைகளை பழகிக்
கொண்டும், சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டும் செயற்பட வேண்டும்.
“ஒரு
புதிய சமூக வர்க்கமானது, அதுவும் இதுகாறும் ஒடுக்கப்பட்டும், வறுமையாலும் அறியாமையாலும்
நசுக்கப்பட்டு வந்திருக்கும் ஒரு வர்க்கமானது, தனது
புதிய நிலையில் பழக்கம் பெற்று, சூழ்நிலையைப் புரிந்து
கொண்டு, தனது வேலையை ஒழுங்கமைக்கவும், தனது சொந்த ஒழுங்கமைப்பாளர்களை வளர்த்து
முன்கொண்டு வரவும், வராங்களல்ல நீண்ட பல மாதங்களும் ஆண்டுகளும் தேவைப்படவே செய்யும்.
புரட்சிகரப்
பாட்டாளி வர்க்கத்துக்குத் தலைமை தாங்கும் கட்சியானது, பத்து லட்சக் கணக்கிலும், கோடிக்
கணக்கிலுமான குடிமக்களைக் கொண்ட பெரிய நிறுவன ஒழுங்கமைப்பும் முயற்சிகளுக்கு வேண்டிய
அனுபவத்தையும் பழக்கங்களையும் பெறாதிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே, அனேகமாய் முற்றிலும்
கிளர்ச்சியாளர்களுக்கு உரித்தான பழைய பழக்கங்களை உருமாற்றித் திருத்தியமைத்துக் கொள்வது
மிக நீண்டதொரு நிகழ்ச்சிப் போக்கு. ஆனால் இது முடியாத காரியமன்று, மாறுதல் அவசியமென்று
தெளிவாக உணர்ந்து ஏற்கப்பட்டதும், மாறுதலை உண்டாக்க வேண்டுமென்ற உறுதியான வைராக்கியமும்
கடினமான பெரியதொரு குறிக்கோளுக்காகப் பாடுபடுவதில் விடாமுயற்சியும் பெறப்பட்டதும் நாம்
நிச்சயம் இந்த காரியத்தைச் செய்யத்தான் போகிறோம்.”5
சோஷலிசப்
புரட்சியின் வெற்றி என்பது தொழிலாளர்களின் வர்க்க உணர்விலும், கோட்பாட்டு பற்றுறுதியிலும்
அடங்கியிருக்கிறது.
“மக்களில்
பெருவாரியானோரும், யாவருக்கும் முதலாய் உழைப்பாளி மக்களில் பெருவாரியானோரும், வரலாற்றின்
படைப்பாளர்களாய் சுயேச்சையான ஆக்க வேலையில் ஈடுபடும் போது மட்டும்தான் இத்தகைய ஒரு
புரட்சி வெற்றிகரமாக நடத்தப்பட முடியும். பாட்டாளி வர்க்கத்தினரும் ஏழை விவசாயிகளும்
போதிய அளவில் வர்க்க உணர்வும், கோட்பாட்டில் பற்றுறுதியும், தன்னலங்கருதாத் தியாக உணர்ச்சியும்,
விடா முயற்சியும் வெளிப்படுத்தும் போது மட்டும்தான் சோஷலிசப் புரட்சியின் வெற்றி திண்ணமாக
முடியும்.”6
சோவியத்
அரசின் உடனடிப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை பொருளாதாரத் துறையில் அடங்கியிருக்கிறது.
“சோவியத்
வடிவிலான ஒரு புது வகை அரசை உருவாக்கியதன் மூலம் நாம் இந்த கடினமான பிரச்சினையில் ஒரு
பகுதிக்கு மட்டுமே தீர்வு கண்டுள்ளோம். பிரதான இடர்ப்பாடு பொருளாதாரத் துறையில் அடங்கியிருக்கிறது,
அதாவது பண்டங்களது உற்பத்தியிலும் விநியோகத்திலும் மிகவும் கண்டிப்பான, சர்வவியாபகமான
கணக்குப் பதிவையும் கண்காணிப்பையும் புகுத்தி, உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதிலும்
பொருளுற்பத்தியை நடைமுறையில் சமூகமயமாக்குவதிலும் அடங்கியிருக்கிறது.”12
லெனின்
மேலும் கூறுகிறார்:- “தொழிலாளர்கள் கண்காணிப்பு நடைமுறை உண்மையாகும் வரை, முன்னேறிய
தொழிலார்கள் இந்தக் கண்காணிப்பை மீறுவோருக்கும், கண்காணிப்பு விவகாரங்களில் கருத்தில்லாதோருக்கும்
எதிராய் வெற்றிகரமான, ஈவிரக்கமில்லாத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து இதனை நடத்திமுடிக்கும்
வரை, சோஷலிசத்தை நோக்கி முதலாவது படியிலிருந்து (தொழிலாளர்கள் கண்காணிப்பிலிருந்து)
இரண்டாவது படிக்குச் செல்வது, அதாவது உற்பத்தியைத் தொழிலாளர்கள் ஒழுங்கமைத்திடுவதற்குச்
செல்வது, முடியாத காரியம்.”7
சோஷலிசப் புரட்சியை நிலைநிறுத்துவதற்கு
தேவைப்படுகிறவைகளை புறநிலைகளில் இருந்தே லெனின் வகுத்துக்கொள்கிறார். உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்திக் கொள்வதற்கு
சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதையும், அதற்கான பெருவீதத் தொழில் துறையின் பொருளாயத அடிப்படைகள்
உறுதியாக்கப்பட வேண்டும் என்பதையும், பின்தங்கிய மக்களின் உற்பத்தித் திறனை முன்னேற்றுவதற்கு
கல்வி, கலாச்சார நிலைமைகளை உயர்த்திட வேண்டும் என்பதையும் லெனின் வலியுறுத்துகிறார்.
“மைய
அரசு அதிகாரத்தை சில நாட்களில் எடுத்துக் கொண்டு விடுவதும், சுரண்டுவோரது ராணுவ எதிர்ப்பை
(மற்றும் நாசவேலை) ஒரு பெரிய நாட்டின் பற்பல பகுதிகளிலுங்கூட சில வாரங்களில்
நசுக்குவதும் சாத்தியமாய் இருக்கையில், உழைப்பின் உற்பத்தித் திறனை உணர்த்தும் பிரச்சினைக்குத்
தலையாய தீர்வு காண்பதற்கு எப்படியும் (முக்கியமாய் மிகவும் கொடூரமான படு நாசப் போருக்குப்
பிற்பாடு) சில ஆண்டுகள் தேவையாய் இருக்குமென்பது உடனே இப்போது தெளிவாகத் தெரிகின்றது.
இந்தப் பணி நீடித்து நடைபெற வேண்டிய ஒன்றாய் இருப்பதற்கு நிச்சயமாய் எதார்த்தப்
புறநிலைமைகளே காரணம்.
உழைப்பின்
உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு யாவற்றுக்கும் முதலாய் தேவைப்படுவது என்னவெனில், பெருவீதத்
தொழில்துறையின் பொருளாயத அடிப்படை உறுதியாக்கப்பட வேண்டும் என்பதுதான், அதாவது எரிபொருள்,
இரும்பு, பொறியியல், வேதியல் தொழில்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான்.
…
உழைப்பின்
உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு அவசியமான இன்னொரு நிபந்தனை, முதலாவதாக மக்கட் பெருந்திரளினரது
கல்வி, கலாச்சார நிலையை உயர்த்துவதாகும். தற்போது இது மிகவும் விரைவாய் நடந்தேறி வருகிறது.
முதலாளித்துவ மாறா நடைமுறையால் கண்ணவிந்து போனவர்களால் இந்த உண்மையைப் பார்க்க முடியவில்லை,
சோவியத் ஒழுங்கமைப்பு வடிவத்தின் விளைவாய் மக்களது “கீழ் மட்டங்களில்” அறிவொளிக்கும்
முன்முயற்சிக்குமான ஊக்கம் தற்போது எப்படி ஓங்கி வருகிறதென்பதை இவர்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக உழைப்பாளி மக்களது கட்டுப்பாட்டையும் அவர்களது தேர்ச்சித்
திறனையும், உழைப்பின் பயன் திறனையும், வேகத்தையும் அதன் சிறந்த ஒழுங்கமைப்பையும் உயர்த்துவது
பொருளாதாரத்தைப் புத்துயிர் பெற்றெழச் செய்வதற்குரிய ஒரு நிபந்தனையாகும்”8
ருஷ்யாவின் பின்தங்கிய
நிலைமையினை கணக்கில் கொண்டு, முதலாளித்துத்திலிருந்து சோஷலிசத்துக்கு மாறுகின்ற போது
இடையேயுள்ள இடைக்காலத்தின் பிரத்யேக இயல்புகளை புரிந்து செயற்பட வேண்டும். இந்த இடைக்கட்டத்தை கடப்பதற்கு, சோஷலிஸ்டு சோவியத்
அரசாட்சி ஒரடி பின்னோக்கி எடுத்து வைக்கிறது என்பது தெளிவான ஒன்றாகும். இந்த பின்னோக்கிய
பயணம் என்பதைக் கண்டு சோஷலிசப் புரட்சியின் எதிர்ப்பாளர்கள் கொக்கரிப்பார்கள் என்பது
உண்மையே.
“முதலாளித்துவ
வர்க்கத்தின் அடிவருடிகள், முக்கியமாய் மென்ஷிவிக்குகளையும், நோவா ஷீஸ்ன் ஆட்களையும்,
வலதுசாரி சோஷலிஸ்டுப் புரட்சியார்களையும் போன்ற சில்லரைப் பேர்வழிகள், ஓரடி பின்னோக்கி
எடுத்து வைக்கிறோம் என்ற நமது குறை ஏற்புக் குறித்தக் கொக்கரிப்புப் பற்றி நாம் கவலைப்படத்
தேவையில்லை.
நமது
தவறுகளையும் பலவீனங்களையும் மூடிமறைக்காமல் நாம் சோஷலிசத்தை அடைவதற்கான மிகமிகக் கடினமான
புதிய பாதையின் பிரத்தியேக இயல்புகளை ஆராய்ந்தாக வேண்டும். செய்யாமல்விட்டு வைக்கப்பட்டவற்றைத்
தாமதமின்றி செய்து முடிக்க முயல வேண்டும். மிதமிஞ்சிய உயர்ந்த சம்பளங்கள் மூலம் முதலாளித்துவ
நிபுணர்களை ஈடுபடுத்திக் கொள்வது பாரிஸ் கம்யூனின் கோட்பாடுகளிலிருந்து பின்வாங்கிச்
செல்லுதலாகும் என்பதை மக்களிடம் இருந்து மூடிமறைப்பது, முதலாளித்துவ அரசியலாளர்களது
இழிநிலைக்குச் சரிந்துவிடுவதும் மக்களை ஏமாற்றுவதுமே ஆகும்.
எதற்காக,
ஏன் நாம் ஓரடி பின்னோக்கி எடுத்து வைக்கிறோம் என்பதை ஒளிவுமறைவின்றி விளக்கிச் சொல்லி,
இழந்த நேரத்தைச் சரிசெய்வதற்கு கிடைக்கக் கூடிய வழிமுறைகள் என்னவென்று இதன் பிறகு பகிரங்கமாய்
விவாதிப்போமாயின், அதன் பொருள் மக்களுக்குப் போதனையளிக்கிறோம், அனுபவத்திலிருந்து கற்றறிந்து
கொள்கிறோம், சோஷலிசத்தை எப்படிக் கட்டியமைப்பதென்று மக்களுடன் சேர்ந்து பயின்று கொள்கிறோம்
என்பதாகும்.”9
இந்த பின்வாங்குதல்,
தடுமாற்றம், ஊசலாட்டம் என்ற தற்போதைய நிலை விபரீதமானதாய் இடதுசாரி சோஷலிசவாதிகளுக்குத்
தோன்றுவதற்கு காரணம் இருக்கிறது. அவர்கள் கருத்தியலாகவே முதலாளித்துவத்தை சோஷலிசத்திடம்
இருந்து வேறுபடுத்திப் பார்த்திருக்க பழக்கப்பட்டுவிட்டனர். இந்த இடைக்காலத்தின் பாய்ச்சலை
மனதிற்கொண்டு அவக்கேடுற்ற அறிவுத்துறையினர்
இவ்வாறு பேசுகின்றனர்.
“சோஷலிஸ்டுகள்
எனப்படுவோரான இவர்களில் பெரும்பான்மையோர் சோஷலிசத்தைப் பற்றி “புத்தகங்களில் படித்திருக்கிறார்கள்”,
ஆனால் இது குறித்து கருத்தாழமுள்ள முறையில் சிந்தித்தவர்கள் அல்ல. சோஷலிசத்தின் போதனாசிரியர்கள்
“பாய்ச்சல்” என்று கூறியபோது உலக வரலாற்று அளவிலான திருப்பங்களையே, பத்தாண்டுகளுக்கும்
அதற்கும் அதிகமான காலங்களுக்கும் நீடிப்பவை என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவக்கேடுற்ற “அறிவுத்துறையினர்” மத்தியிலிருந்து ஒப்பாரி பாடுவோர் இயற்கையாகவே இக்காலங்களில்
எண்ணற்றவர்கள் தோன்றுகின்றனர்.”10
இந்தப் பின்னோக்கிய பயணத்தில்,
முதலாளித்துவ வல்லுனர்களின் சேவையை உயர்ந்த விலை கொடுத்து வாங்க உடன்படுவது, விஞ்ஞானிகள்,
தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோருக்கு உயர் ஊதியம் வழங்குதல் ஆகியவை அடங்கும். மேலும்
முன்னேறிய நாடுகளில் காணப்படுவது போல் ருஷ்யாவில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லை, அதனால்
இன்னமும் முதலாளித்துவக் கண்ணோட்டத்தை அனுசரித்து வரும் தொழிலாளர்களது கூட்டுறவுச்
சங்கங்களோடு செய்து கொண்ட சமசர உடன்பாடு, முன்னேற்றம் ஏற்படுவதற்கான நிலைமைகள் தோற்றுவிப்பதற்காக
முதலாளித்துவ நபர்களுக்கு சிற்சில வழிகளில் ஒரளவு சலுகைகள் தருவது போன்றவை அடங்கும்.
இது மட்டுமல்லாது, ருஷ்ய
தொழிலாளர்களின் நிலைமைகள், முன்னேறிய நாடுகளில் காணப்படும் தொழிலாளர்களைக் காட்டிலும்
மோசமாக இருப்பதையும் லெனின் சுட்டிக் காட்டுகிறார். மேலும் முதலாளித்துவத்தின் மிக
நவீன சாதனைகளுடன் விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சோவியத் அரசு பெற்றாக வேண்டும்.
“முன்னேறிய
நாடுகளைச் சேர்ந்தோருடன் ஒப்பிடுகையில் ருஷ்யத் தொழிலாளி மோசமான தொழிலாளி. ஜார் ஆட்சியின்
கீழ், பண்ணையடிமை முறையின் எச்சங்கள் விடாப்பிடியாக இருந்த நிலையில் இது வேறு எவ்வாறும்
இருப்பதற்கில்லை. வேலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்- இதுதான், இதன் முழு வீச்சிலும்,
சோவியத் அரசாங்கம் மக்களுக்கு வகுத்து முன்வைக்க வேண்டிய பணி.
…
..
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கண்டிருக்கும் சாதனைகளின் மதிப்பு வாய்ந்தவை யாவற்றையும்
சோவியத் குடியரசு எப்பாடுபட்டேனும் தெரிந்தெடுத்துக் கையாண்டாக வேண்டும். சோஷலிசத்தைக்
கட்டியமைப்பதற்கான சாத்தியப்பாடு, சோவியத் ஆட்சியதிகாரத்தையும், சோவியத் நிர்வாக ஒழுங்கமைப்பையும்,
முதலாளித்துவத்தின் மிக நவீன சாதனைகளுடன் சேர்த்து இணைத்துக் கொள்வதில் நாம் காணும்
வெற்றியையே பொறுத்திருக்கிறது.”11
இந்நூலில் லெனின், ருஷ்யாவில்
சோஷலிச மாற்றத்துக்குத் தேவைப்படுகிற பொருளாதாரத்தின் அடிப்படைகளை வகுத்தளித்தார்.
எந்த ஒரு நாடும் சோஷலிச மாற்றத்தின்போது அதன் பொருளாதார நிலைமைக்கு எற்றபடி அதாவது
அந்நாட்டில் வளர்ச்சியடைந்துள்ள முதலாளித்துவ நிலைமைகளின் அடிப்படையில்தான் சோஷலிச
மாற்றத்தை கொண்டுவரமுடியும். அதன்படி ருஷ்யாவில் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்துக்கு
மாறுகிறபோது தேவைப்படுகிற இடைக்கட்டத்தை கணக்கில் கொண்டு லெனின் திட்டமிட்டார். இந்தத்
திட்டம் பின்தங்கிய பொருளாதார நிலைமைகளைக் கொண்ட ருஷ்யாவை, சோஷலிச மாற்றத்துக்கு இட்டுச்
செல்வதற்கான பாதையாகும்.
1.சோவியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள் - தேர்வு நூல்கள்
8 - பக்கம்- 55-56
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 52
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 111
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 112
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 88-89
6. மேற்கண்ட நூல் - பக்கம்- 53
7. மேற்கண்ட நூல் - பக்கம்- 53
8. மேற்கண்ட நூல் - பக்கம்- 76
9. மேற்கண்ட நூல் – பக்கம் 80
& 81
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 67
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 108
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 83