Wednesday 25 April 2018

கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது- அறிமுகம்


நூல் :- “கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது”
ஆசிரியர்: தோழர் தியாகு

விலை- ரூ.30/-

வெளியீடு – தமிழ்த் தேசம்
            எண்:13, வாசவி முத்தகம்,
            கந்தன்சாவடி பெருங்குடி,
சென்னை- 600096


தோழர் தியாகு எழுதிய “கார்ல் மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது” என்ற சிறு நூல், மார்க்சையும் மூலதன நூலையும் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள “மூலதனம்” நூலைப் பற்றிய செய்திகளை தொகுத்துத் தந்துள்ளார். “மூலமுதல்” என்ற பெயரில் “ஆங்கிலக் கலப்போ வடமொழிக் கலப்போ இல்லாமல் இயன்ற வரை தூய நற்றமிழில் எதிர்காலத் தலைமுறைக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம்” என்று தோழர் தெரிவித்துள்ளார்.

ஒரு மொழியாக்கத்திற்கு மற்றொரு மொழியாக்க வேண்டுமா? என்றால் மொழியாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வேண்டும் என்பதே பதிலாக இருக்கும். அதனை தோழர் தியாகுவே எடுத்து செய்வதில் மகிழ்ச்சி. ஆனால் தூய நற்றமிழில் மொழிபெயர்ப்பு என்னும் போது அது தனித்தமிழ் போல் தெரிகிறது.

மார்க்சின் “மூலதனம்” இன்னும் பலரால் படிக்க முடியாததாகவே இருக்கிறது. பொருளாதாரப் புரிதல் காரணமாக இந்நூல் படித்தறிவதில் சிக்கல் இருக்கிறது.  ஆனால் இன்று படிக்கத் துடிக்கும் இளைஞர்களை பலரைப் பார்க்க முடிகிறது. அவர்கள் படிக்கும் வகையில் பழகுதமிழில் செய்தால் நான்றாக இருக்கும்.

புதிய மொழியாக்கத்தின் தலைப்பு ”மூலமுதல்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மூலம் என்பது தமிழ் சொல்லா? இல்லையே. அவ்வாறு இருக்க தூய தமிழ் சொல்லையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமா? என்பது சிந்திக்க வேண்டியதே?. தமிழ்த் தேசியம் என்பதில் தேசம் என்பதும் தமிழ் கிடையாது.

தேவையற்ற மொழிக்கலப்பு என்பது எதிர்க்கப்பட வேண்டியதே, ஆனால் பிற மொழி கலப்பு என்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு பயன்பட்டுள்ளது என்பதே வரலாறு. மொழித் தூய்மையின் மேன்மையினால் தான் சம்ஸ்கிருதம் அழிந்தது.

மார்க்ஸ் “மூலதனம்” நூலை எழுதி முடிப்பதற்கு எங்கெல்சின் உதவியும் தியாகத்தையும் மார்க்சின் (16-8-1867) கடிதத்தின் வாயிலாக தோழர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலதனம் இரண்டாம் மூன்றாம் பகுதியை எங்கெல்ஸ் வெளியிட்டதின் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பர் மார்சுக்கு நினைவுச் சின்னத்தை நிறுவியதாக கூறியுள்ளார்.

மூலதனம் முதல் பகுதி மார்க்சின் தனிப்படைப்பாகவும், இரண்டாம், மூன்றாம் பகுதி மார்க்ஸ் எங்கெல்ஸ் கூட்டுப்படைப்பாக, லெனினை முன்வைத்து தோழர் குறிப்பிடுகிறார். ஆனால் எங்கெல்ஸ் எழுதிய பின்னுரை இவ்வாறு கூறவில்லை.

“இந்நூலை வெளியிட்டதில் எனக்கிருந்த தலையான அக்கறை முடிந்தவரை நம்பகத்தக்க ஒரு வாசகத்தை உருவாக்க வேண்டும், மார்க்ஸ் அடைந்த புதிய முடிவுகளை முடிந்தவரை மார்க்சின் சொற்களிலேயே வெளிப்படுத்த வேண்டும், வேறுவழியே இல்லாதவிடத்து மடடுமே என்னை இடையில் நுழைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுகூட வாசகருக்கு அவரிடம் பேசுவது யார் என்பதில் சந்தேகமே இருக்கக் கூடாது என்பதுதான்” (மூலதனம் மூன்றாம் பகுதி பக்கம்1267)

மூலதனம் நூலின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதே எனது விரும்பம்.

மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை சுருக்கமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். மார்க்சின் கோட்பாடு எவ்வகையில் அறிவியல் தன்மையானது என்பதையும், மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளையும் சுட்டிக்காட்டி அதில் ஒன்றான மிகை மதிப்பைப் (உபரி மதிப்பைப்) சற்று விரிவாகவே தோழர் விளக்கியிருக்கிறார். சில பகுதிகளை புதிய மொழியாத்தில் மேற்கோளாக படைத்துள்ளார். இது மூலதனம் நூலுக்கு ஒரு சிறந்த அறிமுகமா இருக்கிறது. கண்டிப்பாக இடது சிந்தனை உள்ள இளைஞர்கள் படிக்க வேண்டும்.

மூலதனத்தின் முதல், இரண்டாம், மூன்றாம் பகுதிகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அதில் விளக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இறுதியில் தோழர் முத்தாய்ப்பாக கூறியது கவனத்திற்கு உரியதாகும். மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் பெரிதும் மாறியிருக்கிறது, ஆனாலும் அது முதலாயித்துவமாகவே நீடிக்கிறது, மார்க்ஸ் முதலாளித்துவத்தின் விதிகள் என்று கூறப்பட்டதை, முதலாளித்துவத்தின் பின்னடைவுகள் பொய்யாக்கி விடவில்லை என்று தோழர் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் ஆயுதத்தத்தின் தயாரிப்பிற்கான, அறிவியல் வகைப்பட்ட அரசியல் பொருளாதாரத்தை, தோழரின் புதிய கைவண்ணத்தில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.


Friday 6 April 2018

ஆதிசங்கரர் எழுதிய “விவேக சூடாமணி”- நூல் அறிமுகம்


(அத்வைதம் குறித்து நான் எழுதிவரும் நூலின் ஒரு பகுதி இங்கே பதிவிடப்படுகிறது. இது நூல் அறிமுகம் தான் இதனைப் பற்றிய விமர்சனம் பின்பு வெயிடப்படும். அத்வைத தத்துவத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த அறிமுகம் பயன்படும். அத்வைதத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொண்டால் தான் அதன் விமர்சனத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்)

1. விவேக சூடாமணி- விளக்கவுரை : ஸ்வாமி சின்மயானந்தர்,
வெளியீடு : சென்ரல் சின்மயா மிஷன் ட்டிரஸ்ட்
2. விகே சூடாமணி- உரை ஆசிரியர் : அண்ணா,
வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்.
3. ஸ்ரீ ஜகத்குரு க்ரந்தமாலா, பாகம்- 3 விவேக சூடாமணி
வெளியீடு : ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜீ சாஸ்த்ரப்பிரதிஷ்ட்டா டிரஸ்ட்.
4. விவேக சூடாமணி- சங்கரதாசன் விளக்க உரையுடன்,
வெளியீடு : வானதி பதிப்பகம்
              5. விவேக சூடாமணி – என்.சிவராமன், வெளியீடு : ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்



விவேக சூடாமணிஎன்ற பிரகரணம் 580 பாடல்களைக் கொண்டுள்ளது. சில பதிப்புகளில் வரிசை எண்கள் மாறிவருகின்றன. அதனால் எண்கள் எல்லாப் பதிப்புகளுக்கும் பொருந்தும்படியாக இருக்காது.  அதேபோல் உட்தலைப்புகளின் எண்ணிக்கையும் மாறுபடுகிறது.

விவேகம் என்பது பகுத்துப் பார்க்கின்ற அறிவு. தலையில் அணியும் ரத்தினம் சூடாமணி என்ற பெயர் பெரும். அனைத்து அணிகலன்களில் சூடாமணி தலைமையானது. விவேகத்தை சுட்டும் நூல்களில் இது தலைசிறந்து விளங்குவதால் விவேக சூடாமணி என்று இந்நூலுக்கு பெயர் பெற்றுள்ளதாக கருதுகின்றனர்.

ஆதிசங்கரர் என்றவுடன் முதலில்பஜகோவிந்தம்நூலே பலருக்கு நினைவு வரும். அதற்கு அடுத்தப்படியாகவிவேக சூடாமணியே நினைவுக்கு வரும். அத்வைத சிந்தாத்தைப் படிப்பவர்களிடையேவிவேக சூடாமணிபிரகரணமே முதலில் நினைவுக்கு வரும்.

அத்வைத சித்தாந்தத்தின் அறிமுகம் ஓரளவுக்குப் பெற்றவர்கள் இந்தவிவேக சூடாமணிநூலை இரண்டு அல்லது மூன்று முறைப் படித்தாலே அத்வைதத்தை முழுமையாக சுயமாகப் புரிந்து கொள்ள முடியும். அதனால் இந்த நூலை நன்றாக அறிந்துகொள்வது அவசியம்.

முதல் பாடல் ஆதிசங்கரர் தமது சத்குருவான் கோவிந்தரை வணங்கி நூலைத் தொடங்குகிறார். குருவை பிரம்மமாகவே நினைது பாடியுள்ளார்.

வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவரும், அனைத்து வேதங்களின் முடிவான சித்தாந்த வாக்கியங்களில் இருந்து தெளிந்த புத்தியால் அறியக்கூடியவரும், பரமானந்தமானவரும், சத்குருவுமான கோவிந்தரை நான் வணங்குகிறேன்.” (1)

அத்வைதம் மனிதப் பிறவியை முக்குக்கு உரியதாக கருதுகிறது. அதனால் அதனை சிறப்பித்துக் கூறும் இரண்டாம் பாடல் அத்வைத வழிமுறைகளையும் இணைத்துப் பாடப்பட்டுள்ளது.

ஜீவராசிகளுக்கு மானிடப் பிறவி அடைதற்கரியது, அதிலும் ஆண் பிறவி, அதைக்காட்டிலும் பிராம்மண பிறவி, அதற்கும் மேலாக வைதீக தர்மவழியைப் பின்பற்றி நடத்தல், அதற்கு மேம்பட்டது தேவதத்தின் உட்பொருளை உணர்தல். ஆத்மாவையும் அல்லாததையும் பிரித்தறியும் விவேகம் சிறந்த அனுபவம், ஆத்மா பிரம்மமாக நிலை பெற்றிருத்தலாகிய முக்தி ஆகிய இவற்றை, பலகோடிப் பிறவிகளில் செய்த புண்ணியம் இல்லாமல் அடைய இயலாது.” (2)


கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவியைப் பெற்றும், வேதத்தின் உட்கருத்தின் அறிவையும் அடைந்து, தன்னுடைய முக்தி அடைவதற்கு முயற்சி செய்யாதன் ஒரு மூடன் என்றும், அந்த மூடன் தற்கொலை செய்து கொண்டவனாகிறான் என்று நான்காவது பாடலில் ஆதிசங்கரர் மிகவும் கடுமையாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கிடைப்பதற்கு அரிய மனிதப் பிறவி கிடைத்ததுடன் ஆண்மையையும், அத்துடன் வேதத்தின் உட்கருத்தின் அறிவையும் அடைந்தும், ஆத்ம முக்திக்கு அடைவதற்கு முயற்சி செய்யாத மூட மனிதனும் உண்டோ? உண்டென்றால் அவன் தற்கொலை செய்துகொண்டவனாகிறான். உண்மை அல்லாத வெளி உலகப் பொருட்களை நாடுவதன் காரணமாக அவன் தன்னை தானே அழித்துக் கொள்கிறான்.” (4)

ஆதிசங்கரர் எந்தவித மறைப்பும் இல்லாமல் தமது கருத்தை முன்வைகிறார். மனிதப் பிறவியின் நோக்க மூக்தியே. அதனை அறிவாயதவன் மூடனே. வெளி விஷங்கள் என்ற உலகப் பொருட்களினால் விடுதலைகிடைக்கும் என்று ஆசைப்படாதே அது சாத்தியமன்று. கர்மா அதாவது வெளிப்பொருட்களுடம் ஈடுபடுகின்ற செயல் விடுதலைக்கு (முக்திக்கு) வழிவகுக்காது என்பது தான் அத்வைதத்தின் கூற்று.

சாஸ்திரம் படிக்கட்டும், அவைகளை மேற்கோள்காட்டி பேசட்டும், தேவர்களைக் குறித்து வேள்விகளைச் செய்யட்டும், வைதீக கர்மங்களை கடைபிடிக்கட்டும், இஷ்ட தேவதைகளை வழிபடட்டும், இவையெல்லாம் செய்தாலும்ஆத்மாவே நான்என்ற அறிவின் விழிப்பில்லாமல் பிரம்மாவின் நூறு வயது முடிவிலும் முக்தியானது சித்திக்காது.

வெளிப்பொருட்களைக் கொண்டு விடுதலையை அடைய ஆசைப்படவேண்டாம். அது சாத்தியமல்ல, என்றே வேதாந்தம் கூறுகிறது. இக்காரணத்தால் விடுதலைக்கு கர்மா (வெளிப் பொருட்களுடன் செய்திடும் செயல்) காரணமாகாது என்று தெளிவாகிறது.” (6-7)

வேதாந்த முடிவுக்கு விரோதமான, கர்மாக்களால் முக்தியை அடையலாம் என்ற தவறான முடிவில் இருந்து விடுபடவேண்டும். அதற்கு அத்வைத சத்குருவை நாட வேண்டும். அவரிடம் உபதேசம் பெறவேண்டும்.

ஆகையால், வெளிப்பொருட்களில் உள்ள சுகத்தில் பற்றைத் துறந்தவனாய். சாதுவும் மகாத்மாவுமான குருவை முறைப்படி அடைந்து உபதேசிக்கப்பட்டப் பொருளில் சித்தத்தை நிலைநிறுத்தியவனாய், அறிவாளி முக்திக்காக நன்முயற்சி செய்ய வேண்டும்.” (8)

சாஸ்திரத்தில் காணப்படும் உபதேசப் பொருளைப் பற்றி இந்நூல் நெடுகிலும் ஆதிசங்கரர் எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

கர்மா என்பது மனதின் சுத்தியின் பொருட்டே செய்யப்படுகிறது. உண்மை வஸ்துவை அறிவதற்கு பயன்படாது.  உண்மைப் பொருளை அறிவதற்கு விசாரத்தினால் மட்டுமே அறியப்படக்கூடியது. கோடிக்ககணக்கான கர்மங்களைச் செய்வதால் சிறிதும் ஏற்படாது.” (11)


உலகப்பொருளின் மீதான கவனத்தில் இருந்து விடுபட்டு, ஆத்மாவைப் பற்றிய விசாரணையில் இறங்க வேண்டும். உலகப்பொருளானது, அநித்திய வஸ்து என்பதை அறிந்து நித்திய வஸ்துவான ஆத்ம நிலையை அராய்ந்து அறியவேண்டும். அநித்திய வஸ்துவுடனான தொடர்பை விடுத்து, நித்திய வஸ்துவான ஆத்மாவில் நிலைக்க வேண்டும். இதற்கு பிரம்மம் உண்மைப் பொருளா? உலகம் உண்மைப் பொருளா? என்ற விசாரணை அவசியம்.

வேதாந்த சாஸ்திரமும், வேதாந்த குருவும் பிரம்மமே சத்தியம், உலகம் மித் (பொய்த்தோற்றம்) என்று கூறியதை சுயமாக புரிந்துணர வேண்டும்.

பிரம்மம் சத்தியம் உலகம் பொய்த்தோற்றம் (பிரம்ம சத்தியம் ஜகத் மித்யை) என்ற நிச்சய புத்திதான் நித்ய வஸ்து, அநித்திய வஸ்து என்பதை அறிவதே விவேகம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.” (20)

சத்குருவானவர் இதனை விளக்குவதற்கும், சம்சாரத்தல் இருந்து விடுபட்டு முக்தி அடைவதற்கும் உதவிபுரிகிறார்.

அஞ்ஞானத்துடனான (அறியாமையுடனான) சேர்க்கையால்தான் பரமாத்வான உனக்கு அநாத்ம வஸ்துகளின் தொடர்பு ஏற்பட்டது. அதனிடம் இருந்தே பிறவிச்சூழல், ஆத்மா அநாத்மாவாகிய இவ்விரண்டையும் பற்றிய விவேகத்தினால் எழுந்த ஞானத் தீ அஞ்ஞானத்தின் செயலை அடியோடு எரித்துவிடும்” (47)

இவைகளை கேட்டவுடன் சீடனுக்கு ஏழுகேள்விகள் எழுகின்றன.

பந்தம் என்பது என்ன?
அது எவ்வாறு ஏற்பட்டது?
அதன் நிலைப்பாடு எப்படிப்பட்டது?
அதிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது எங்ஙனம்?
அந்த ஆத்மாவல்லாதது என்பது எது?
பரமாத்மா என்பது எது?
ஆத்மா, அநாத்மா என்பதை எவ்வாறு பிரிதிதறிவது எப்படி?
இவைகளைப் பற்றி உபதேசிக்க வேண்டும்.” (49)


சீடன் கேட்டக் கேள்விக்கு ஒவ்வொன்றாக சத்குரு பதில் அளிக்கிறார். தனக்குத் தானே அனுபவத்தில், குருவால் அளிக்கப்பட்ட பதிலைக் காண வேண்டும். பிரம்மம் என்ற சப்தங்களினால் முக்தி கிடைக்காது.

மருந்தை உண்ணாமல் அதன் பெயரை உருப்போடுவதால் மட்டும் நோய் நீங்காது. அதேபோல் பிறர் கண்கொண்டு பாராமல் தனக்குத்தானே அனுபவம் ஏற்பட்டால் அன்றி பிரம்மத்தைப் பற்றிய சப்தங்களால் முக்தி கிட்டாது” (63)

வீரியமிக்க மருந்தாக இருந்தாலும் அதன் பெயரை அறிந்தால் மட்டும் நோய் நீங்கிடாது. சாஸ்திர உபதேசத்தை குருவால் உபதேசிக்கப்பட்டாலும் அதன் பொருளை அனுபவழியில் அறிந்திட வேண்டும். அப்போது தான் அறியாமையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

இதனை அனுபவப்பூர்வமாக அறிய வேண்டுமானால், நான் கர்த்தா (நான் செய்கிறேன்) நான் போக்தா (நான் அனுபவிக்கின்றேன்) என்ற விருப்பத்தை விட்டுவிட வேண்டும். இந்த விருப்பங்கள் அகங்காரத்தை ஏற்படுத்துகிறது. இந்த அகங்காரத்தை விடுத்து அத்மாதான் தான் என்பதை சொந்த அனுபவத்தோடு நேரடியாக அறிய வேண்டும்.

வசப்பட்ட மனதால் உன்னிடத்திலேயே நீ உன்னுடைய ஆத்மாவை இதுதான் நான் என்று அறிவின் தெளிவால் நேரடியாக அறிந்து கொள்வாயாக. பிறப்பு, இறப்பு ஆகிய அலையுடன்கூடிய கடக்க முடியாத பிறவுக்கடலைக் கடப்பாயாக. பிரம்ம சொரூபத்துடன் நிலைபெற்றவனாய் செய்ய வேண்டியதைச் செய்தவனாக ஆவாயாக.” (137)

சம்சார உலகிற்கு மனமே காரணமாகும். மனமே ஆசையைத் தோற்றுவிகிறது, ஆசையால் அடைந்தது நீடித்து நிலைக்காமல் போய்விடுமோ என்று அவதிப்படுகிறது. கிடைக்காதப் போது நிராசையால் அவதிகொள்கிறது. அதனால் மனமே அவித்தை என்கிறார் ஆதிசங்கரர். மனம் அடங்கினால் வெளி விஷயங்கள் அனைத்தும் அடங்கிவிடும்.

மனதைக்காட்டிலும் வேறான அவித்தை (அஞ்ஞானம் - அறியாமை) என்பது இல்லவே இல்லை, மனமே பிறவித்தளைகளுக்குக் காரணமான அவித்தை, அது அழிவடைந்தால் அனைத்தும் அழிவடையும், அது கிளம்புனால் அனைத்தும் கிளம்பும்.

வெளி உலகத் தொடர்பு எதுவுமில்லாத கனவு நிலையில், கனவு உலகத்தையும் அதை அனுபவிப்பவனையும் மனதே படைக்கிறது. அவ்வாறே  விழிப்பு நிலையிலும் இதில் வேறுபாடு இல்லை, அந்நிலையில் உள்ள இதுவெல்லாம் மனதின் விளையாட்டே.” (169-170)

திடமான விவேகமும், தீவிரமான வைராக்கியமும் கொண்ட பரிசுத்தமான மனம் மோட்சத்திற்கு தகுதி பெறுகிறது. புத்திமானாகிய முமுட்சுவின் முதலாவதும் முக்கியமானதுமான செயல் இவ்விரண்டையும் திடப்படுத்துவதே ஆகும்.” (175)

விவேகம் என்பது ஆத்மாவையும், அநாத்மாவையும் வேறுபடுத்தி அறியும் அறிவு. வைராக்கியம் என்பது அநாத்ம பொருட்களை விட்டுவிடுகிற மனத்திண்மை. இவையிருண்டும் மனத்தூய்மைக்கு அவசியமாகும்.  அடுத்தப்பாடலில் ஆதிசங்கரர், வெளி விஷயங்களை காடாக வர்ணிக்கிறார், மனதை புலியோடு ஒப்பிடுகிறார். முக்தியை விரும்புகிற முமுட்சு வெளி விஷங்களான காட்டை நாடக்கூடாது என்கிறார்.

வெளி விஷயங்கள் என்கிற காட்டுப்பிரதேசத்தில் மனம் என்ற கொடிய புலி உலவுகிறது.  விடுதலையை விரும்பும் முமுட்சுவான சாதுக்கள் அக்காட்டு வழியில் செல்லலாகாது.” (176)

இந்த வெளி விஷயங்களான காட்டுப்பிரதேசத்தின் உண்மைத் தன்மையை அறிய வேண்டுமாயின் அத்தைவதம் கூறுகிற மாயைஅறிந்து கொள்ள வேண்டும். பிரம்மம் சத்தியம் ஜகத் மித் (மாயை) என்பதே அத்வைதக் கண்ணோட்டம். உலகத்தின் பொய்த் தோற்றத்திற்கு இந்த மாயையே காரணமாகும். இந்த மாயை வார்த்தைகளால் விளக்க முடியாது. அதனை உள்ளது என்றோ இல்லது என்றோ இரண்டும சேர்ந்தது என்றோ கூறமுடியாது.

அவ்யக்தம் என்ற பெயருள்ளதும், முக்குண வடிவமானதும் அநாதியும் ஆன அவித்தை பரமேஸ்வரனுடைய சக்தியாகும். இதை மாயை என்றும் கூறுவர். இதிலிருந்து உண்டாகின்ற காரியங்களில் இருந்து விவேகிகளுக்கு இதை அனுமானிக்க முடியும். உலகம் முழுதும் இதிலிருந்தே தோன்றுகின்றன.

மாயை இருப்புடையதன்று (சத்துமல்ல) இருப்பில்லாததுமன்று (அசத்துமல்ல) இருவகைப் பட்டதுமன்று, பகுக்கப்பட்டதாகவோ, பகுக்கப்படாததாகவோ இருவகைப்பட்டதாகவோ அது இல்லை. அங்கங்களை உடையதாகவோ, அங்கங்கள் இல்லாததாகவோ இல்லை. மிகவும் ஆச்சரியமானது இப்படிப்பட்டதென்று கூறமுடியாத அநிர்வசநீயமாகும்” (108 -109)

மாயையால் ஏற்பட்ட பன்மையால் பயம் ஏற்படுகிறது. தான் அல்லாததை தான் என்று நினைப்பே இந்த பயத்திற்குக் காரணம். தான் அல்லாத இந்த உடலைவிடுத்து, உண்மையான தான்னை (ஆத்மாவை) விசாரித்து அறியவேண்டும். இந்தப் பிரபஞ்சம் மாயை என்பதை அறிந்த பின்பு, சாரமற்ற சம்சாரத்தில் இருந்து விடுபட்டு துறவை மேற்கொள்ள வேண்டும். அந்நிலையில் நான் இந்த உடல் என்ற தவறான புரிதலில் இருந்துவிடுபட்டு, “நான் இந்த ஆத்மா என்ற எண்ணத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டும். அந்நிலையில் எல்லாத் துன்பங்களில் இருந்து விலகியவனாய் ஆனந்த அனுபூதியில் ஒன்றுகிறான். முக்தி பெறுகிறான்.

விவேகியானவன் எப்பொழுதாவது எல்லையற்ற பிரம்மத்திடம் அணுவளவேணும் வேறுபாட்டை பார்ப்பானாகில் அதன்பிறகு அதுவே அவனுக்கு பயத்தை உண்டுபண்ணுகிறது. கவனக்குறைவால் வேறானதாக எது பார்க்கப்பட்டதோ, அதுவே பயத்தைக் கொடுக்கிறது.” (331)

சத்தியமான பிரம்ம தியானத்தில் ஆழ்ந்து அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டவன் நிலையாக மிக உயர்ந்ததான ஆத்மாவை அடைகிறான். பொய்யான  பிரபஞ்சத்தில் ஆழ்ந்திருப்பவன் அழிவுறுகிறான். குற்றமற்றவனுக்கும் குற்றவாளிக்கும் உள்ள வேறுபாடு போல் இவைகள் அறிந்து கொள்ள வேண்டும்.” (333)

வெளியுலகை ஒதுக்கியபின் மனதிற்குத் தெளிவு ஏற்படுகிறது. மனத்தெளிவு ஏற்பட்டால் பரமாத்ம தரிசனம் கிட்டுகிறது அவ்வாறு ஏற்பட்டதும் பிறவித்தளை அறுந்துவிடுகிறது. இவ்வாறு வெளியுலகை ஒதுக்குவது முக்திக்கு வழியாகிறது.” (336)

அத்வைத சித்தாந்தத்தை தவிர பிற சித்தாந்தங்கள் முக்தி என்பதை இறப்பிற்கு பிறகானதாக கூறுகிறது. அத்வைதம் சம்சார சிந்தனையில் இருந்துவிடுபட்டவன் ஆத்ம சிந்தனையில் ஒருமுகப்பட்டவன் ஜீவமுக்தியடைகிறான் என்கிறது.


முக்தியடைவதற்கான வாயிலும், ஜீவன் முக்தியைப் பற்றியும் ஆதிசங்கரர் கூறுகிறார்:-
தன்னைக் கட்டுப்படுத்தியவனுக்கு ஆனந்தத்தை உருவாக்கக்கூடியதும் வைராக்கியத்தைக் காட்டிலும் வேறொன்று இருப்பதாகத் தெரியவில்லை. அது பரிசுத்தமான ஆத்ம அனுபவத்துடன் கூடியதாக இருக்குமேயனால் முழுசுதந்திர சாம்ராஜ்யத்தை அருளக்கூடியதாக இருக்கும். நிலையான முக்தியை அடைவதற்கு இதுவே வாயில். ஆகையால் நீ இனி மேல் எல்லாவற்றின் மேலும் பற்றைவிட்டு உயர்ந்த நிலையான முக்திக்காக சத்ரூபமான பரமாத்மாவிடம் எப்பொழுதும் புத்தியை நிலைநிறுத்து.” (377)

தீயசெயல்களின் அழிவால் தீயஎண்ணங்களின் அழிவு ஏற்படுகிறது. அதன் விளைவாய் தீயவாசனைகள் நீங்குகின்றன. தீய வாசனைகளின் அழிவே மோட்சம். அதுவே ஜீவன்முக்தி எனவும் சொல்லப்படுகிறது.” (317)

முக்தியடைந்த ஞானிக்கு உடலால் எந்த மகிழ்ச்சியும், துக்கமும் ஏற்படாது. அவர் உடல் என்ற உணர்வில் வாழவில்லை. பிரம்ம சொரூபத்தில் ஐக்கியமானவருக்கு உடலால் எந்தவித விருப்பு- வெறுப்பு அதே போன்று நன்மையும் தீமையும் அண்டுவதில்லை.

ஸ்தூலமான உடல் முதலியவற்றுடன் தொடர்புடைவனுக்கும் நான் எனது என்ற பற்று உடையவனுக்குமே சுகமும் துக்கமும், பந்தங்களை எல்லாம் விட்டவனுக்கு, எப்பொழுதும் ஆத்மாவாய் விளங்கும் ஞானிக்கு நன்மை-தீமை பலன்கள் எப்படி ஏற்படும்?” (547)

உடலை நினையாமல் எப்பொழுதும் இருக்கும் இந்த பரம்ம ஞானியை ஒருபொழுதும் விருப்பு-வெறுப்பு தொடுவதில்லை. அவ்வாறே நன்மை தீமைகளும் தொடுவதில்லை” (546)

பரமாத்ம சொரூபத்தில் ஒன்றியதால், ஜீவன்முக்தனுக்கு செயல் என்பது என்பது கிடையாது. இரண்டற்றதான நிலையில் பன்மையின் இருப்பு இல்லாததால் செயல் என்பதே அங்கே இல்லை.

பிரம்ம சத்-சித்-ஆனந்த வடிவானது. நித்தியமானது. செயல் என்பது அங்கு இல்லை. அது ஒன்றேயாக இருப்பது. இரண்டற்றது எனவே இங்கு பன்மையின் இருப்பு என்பது சிறிதும் இல்லை” (466)

செயல்கள் அற்ற ஜீவன் முக்தனின் உணர்வுநிலையை ஆதிசங்கரர் கூறுகிறார்:-
பிரம்மமும் ஆத்மாவும் ஒன்றேயாக ஆகிவிட்டபோது புத்தி மறைந்துவிட்டது. செயல் முனைப்பு இல்லை. இதுதான் என்பதையோ, இதுவல்ல என்பதையோ நான் அறியவில்லை. அது என்னவென்றோ எப்படிப்பட்டதென்றோ அறியவில்லை. அளவுகடந்த ஆனந்த நிலையில் இருந்ததை மட்டும் உணர்கிறேன்.” (482)

சம்சாரத்தில் இருப்பவர்களில் அளவுகடந்த செல்வம் இருப்பவர்களும் நிறைவு இல்லாமல் மனநிம்மதியற்று இருக்கிறார்கள். ஜீவன்முக்தர் ஏதுமற்றும் திருப்தியாக இருக்கிறார்கள். உடலோடு உலகில் நடமாடினாலும் ஜீவன்முக்தர்கள் விருப்பு-வெறுப்பு, சுதும்-துக்கம், செல்வம் உள்ளவன்- செல்வம் இல்லாதவன் என்ற வேறுபாடுகளற்று, எல்லாவற்றையும் சமமாக பார்க்கிறார்கள்.

செல்வம் அற்றவனாக இருப்பினும் எப்பொழுதும் திருப்தியாக இருப்பான். துணையில்லாதவனாக இருந்தாலும் மிகவும் பலம் பொருந்தியவன். போகங்கள் அனுபவிக்காதவனாயினும் எப்பொழுதும் திருப்தி அடைந்தவன். ஒப்பற்றவனாயினும் எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பவன் ஞானி.” (544)

49ஆம் பாடலில் குருவிடன் கேள்விகேட்ட சீடன், குருவின் உபதேசத்தால் ஏற்பட்ட தெளிவை கூறுகிறார்:-
குருவே, இந்த நீண்டகனவு போன்ற உலகில் மாயையால் தோற்றுவிக்கப்பட்ட பிறப்பு-மூப்பு-இறப்பு முதலியவை நிறைந்த காட்டில் வழி தெரியாமல் சுற்றிவருபவனும், நாள்தோறும் பலவிதமான துக்கங்களால் வருந்துபவனும் அகங்காரம் என்னும் புலியால் துன்புறுத்தப்படுபவனும் ஆகிய இந்த என்னை அளவற்ற கருணையால் விழிப்படையச்செய்து மிகச் சிறந்த முறையில் காத்தருளி இருக்கிறீர்கள்.” (519)

இறுதியில் நூலில் நோக்கத்தை ஆதிசங்கரர் கூறுயுள்ளார்:-
இவ்வாறு குருவுக்கும், சீடனுக்கும் நடந்த உரையாடலால் ஆத்ம லட்சணம், மோட்சத்தல் விருப்பமுள்ளவர்களுக்காக எளிதில் ஞான விழிப்பு ஏற்படுவதற்காக விளக்கப்பட்டது.” (579)

மோட்சத்தை விரும்புகிற முக்தனுக்கு வழிகாட்டுவதற்கு இந்நூல் எழுதப்பட்டதாக ஆதிசங்கரர் கூறிமுடிக்கிறார்.