நூல் :- “கார்ல் மார்க்சின்
மூலமுதல் அகவை நூற்றைம்பது”
ஆசிரியர்: தோழர் தியாகு
விலை- ரூ.30/-
வெளியீடு – தமிழ்த் தேசம்
எண்:13, வாசவி முத்தகம்,
கந்தன்சாவடி பெருங்குடி,
சென்னை- 600096
தோழர் தியாகு எழுதிய “கார்ல்
மார்க்சின் மூலமுதல் அகவை நூற்றைம்பது” என்ற சிறு நூல், மார்க்சையும் மூலதன நூலையும்
சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது.
இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள
“மூலதனம்” நூலைப் பற்றிய செய்திகளை தொகுத்துத் தந்துள்ளார். “மூலமுதல்” என்ற பெயரில்
“ஆங்கிலக் கலப்போ வடமொழிக் கலப்போ இல்லாமல் இயன்ற வரை தூய நற்றமிழில் எதிர்காலத் தலைமுறைக்குக்
கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே நோக்கம்” என்று தோழர் தெரிவித்துள்ளார்.
ஒரு மொழியாக்கத்திற்கு
மற்றொரு மொழியாக்க வேண்டுமா? என்றால் மொழியாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வேண்டும்
என்பதே பதிலாக இருக்கும். அதனை தோழர் தியாகுவே எடுத்து செய்வதில் மகிழ்ச்சி. ஆனால்
தூய நற்றமிழில் மொழிபெயர்ப்பு என்னும் போது அது தனித்தமிழ் போல் தெரிகிறது.
மார்க்சின் “மூலதனம்” இன்னும்
பலரால் படிக்க முடியாததாகவே இருக்கிறது. பொருளாதாரப் புரிதல் காரணமாக இந்நூல் படித்தறிவதில்
சிக்கல் இருக்கிறது. ஆனால் இன்று படிக்கத்
துடிக்கும் இளைஞர்களை பலரைப் பார்க்க முடிகிறது. அவர்கள் படிக்கும் வகையில் பழகுதமிழில்
செய்தால் நான்றாக இருக்கும்.
புதிய மொழியாக்கத்தின்
தலைப்பு ”மூலமுதல்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மூலம் என்பது தமிழ் சொல்லா? இல்லையே.
அவ்வாறு இருக்க தூய தமிழ் சொல்லையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமா? என்பது சிந்திக்க
வேண்டியதே?. தமிழ்த் தேசியம் என்பதில் தேசம் என்பதும் தமிழ் கிடையாது.
தேவையற்ற மொழிக்கலப்பு
என்பது எதிர்க்கப்பட வேண்டியதே, ஆனால் பிற மொழி கலப்பு என்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு
பயன்பட்டுள்ளது என்பதே வரலாறு. மொழித் தூய்மையின் மேன்மையினால் தான் சம்ஸ்கிருதம் அழிந்தது.
மார்க்ஸ் “மூலதனம்” நூலை
எழுதி முடிப்பதற்கு எங்கெல்சின் உதவியும் தியாகத்தையும் மார்க்சின் (16-8-1867) கடிதத்தின்
வாயிலாக தோழர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலதனம் இரண்டாம் மூன்றாம் பகுதியை எங்கெல்ஸ்
வெளியிட்டதின் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பர் மார்சுக்கு நினைவுச் சின்னத்தை நிறுவியதாக
கூறியுள்ளார்.
மூலதனம் முதல் பகுதி மார்க்சின்
தனிப்படைப்பாகவும், இரண்டாம், மூன்றாம் பகுதி மார்க்ஸ் எங்கெல்ஸ் கூட்டுப்படைப்பாக,
லெனினை முன்வைத்து தோழர் குறிப்பிடுகிறார். ஆனால் எங்கெல்ஸ் எழுதிய பின்னுரை இவ்வாறு
கூறவில்லை.
“இந்நூலை
வெளியிட்டதில் எனக்கிருந்த தலையான அக்கறை முடிந்தவரை நம்பகத்தக்க ஒரு வாசகத்தை உருவாக்க
வேண்டும், மார்க்ஸ் அடைந்த புதிய முடிவுகளை முடிந்தவரை மார்க்சின் சொற்களிலேயே வெளிப்படுத்த
வேண்டும், வேறுவழியே இல்லாதவிடத்து மடடுமே என்னை இடையில் நுழைத்துக் கொள்ள வேண்டும்,
அப்போதுகூட வாசகருக்கு அவரிடம் பேசுவது யார் என்பதில் சந்தேகமே இருக்கக் கூடாது என்பதுதான்”
(மூலதனம் மூன்றாம் பகுதி பக்கம்1267)
மூலதனம் நூலின் நம்பகத்
தன்மையை கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதே எனது விரும்பம்.
மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ்
ஆகியோரின் வாழ்க்கையை சுருக்கமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். மார்க்சின் கோட்பாடு
எவ்வகையில் அறிவியல் தன்மையானது என்பதையும், மார்க்சின் இரு கண்டுபிடிப்புகளையும் சுட்டிக்காட்டி
அதில் ஒன்றான மிகை மதிப்பைப் (உபரி மதிப்பைப்) சற்று விரிவாகவே தோழர் விளக்கியிருக்கிறார்.
சில பகுதிகளை புதிய மொழியாத்தில் மேற்கோளாக படைத்துள்ளார். இது மூலதனம் நூலுக்கு ஒரு
சிறந்த அறிமுகமா இருக்கிறது. கண்டிப்பாக இடது சிந்தனை உள்ள இளைஞர்கள் படிக்க வேண்டும்.
மூலதனத்தின் முதல், இரண்டாம்,
மூன்றாம் பகுதிகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அதில் விளக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியில் தோழர் முத்தாய்ப்பாக
கூறியது கவனத்திற்கு உரியதாகும். மார்க்ஸ் காலத்து முதலாளித்துவம் பெரிதும் மாறியிருக்கிறது,
ஆனாலும் அது முதலாயித்துவமாகவே நீடிக்கிறது, மார்க்ஸ் முதலாளித்துவத்தின் விதிகள் என்று
கூறப்பட்டதை, முதலாளித்துவத்தின் பின்னடைவுகள் பொய்யாக்கி விடவில்லை என்று தோழர் தெளிவாக
வெளிப்படுத்தியுள்ளார்.
தொழிலாளி வர்க்கத்தின்
அரசியல் ஆயுதத்தத்தின் தயாரிப்பிற்கான, அறிவியல் வகைப்பட்ட அரசியல் பொருளாதாரத்தை,
தோழரின் புதிய கைவண்ணத்தில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment