Thursday, 29 January 2015

“மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்” என்ற எனது நூலுக்கு எழுதிய முகவுரை

மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும்
-
.கா.ஈஸ்வரன்
விடியல் பதிப்பகம். கோவை.4
விலை-175/-

முகவுரை


“மார்க்சையும் எங்கெல்சையும் நான் தொடர்ந்து “நேசிக்கிறேன்” அவர்களைப் பற்றிய எத்தகைய தவறானதையும் (any abuse) என்னால் அமைதியாகப் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் உண்மையான மனிதர்கள். நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலிருந்து நாம் விலகக் கூடாது….”- லெனின்
(லெனின் தொகுப்பு நூல் (ஆங்கிலம்) 35 பக்கம் 281)

கடந்த 1000 ஆண்டுகளின் மிகப் பெரிய சிந்தனையாளர் யார்? என்று பிபிசி செய்தி நிறுவனத்தால் பொதுமக்களிடம் கேட்கப்பட்டதில், முதலிடம் பிடித்தவர் காரல் மார்க்ஸ். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனையாளரான காரல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றையும், அவரின் கூட்டுப் படைப்பாளியும் நண்பருமான பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களது வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து  இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் வாழ்க்கையும் சேவையும், மிகவும் நெருங்கிய உறவுடையது. அவர்களைத் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்று மார்க்சின் இளைய மகள் எலியனோர் கூறுவது மிகைப்படுத்தாத உண்மையாகும். மேலும் அவர் கூறுகிறார், "இந்த இரு மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுத வேண்டும் என்றால் "கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானம் வரை" சோஷலிசத்தின் வளர்ச்சி வரலாற்றை மட்டுமின்றி, அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிவர்க்க இயக்கம் முழுவதன் வரலாற்றையும் எழுதியாக வேண்டும்." இந்நூலை எழுதும் போது இந்த உண்மையை முழுமையாக உணரமுடிந்தது.

இந்த வாழ்க்கை வரலாறு நூல் சாதாரண வாசகர்களை மனதில் கொண்டு எழுதப்பட்டது. மார்க்சும் எங்கெல்சும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்துக்கும், விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் எவ்வாறு வந்தடைந்தனர் என்பதை இவர்களது வாழ்வோடும், இவர்களது படைபோடும் அளித்திடும் போது புதிய வாசகர்களுக்கு மார்க்சியத்தை புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.


மார்க்சின் குடும்பம் வறுமைத் துயரங்களுக்கு உள்ளானது என்பது, பொதுவாக அறியப்பட்டது தான். குழந்தைக்கு தொட்டில் வாங்கவும், இறந்த குழந்தையை இடுவதற்கு சவப்பெட்டி வாங்கவும் பணமில்லா நிலையில் குடும்பம் தவித்தது உண்மைதான். இந்த வறுமைத் துயரத்தை பற்றி அதிகம் பேசுவதைவிட, இந்த துயரத்தை அவர்கள் சுமந்து எதனை சாதிக்க நினைத்தார்களோ அதற்கு போராடுவதே மார்க்சுக்கு நாம் செய்யும் கைமாறு என்று நான் கூறுவது வழக்கம். இருந்தாலும், இந்நூல் எழுதும் போது சிலஇடங்களில் எனது கண்களில் நீர் தழும்பியதை தவிர்க்க முடியவில்லை.

மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிச கோட்பாட்டை உருவாக்கினார்கள், லெனின் அதனை கட்சி அமைத்து நடைமுறைப்படுத்தினார் என்று மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வகையில் புரிந்து கொள்பவர்களை இன்றும் நம்மிடையே காணமுடிகிறது. மார்க்சும் எங்கெல்ஸ்சும் சர்வதேச இயக்கத்தை அமைத்து பாட்டாளி வர்க்கத்துக்கான புரட்சிகர கட்சியினை தோற்றுவிக்கப் பாடுபட்டார்கள் என்பதை இவர்களின் வாழ்கையை படிக்கும் போது அறிந்து கொள்ளலாம்.

ஏடேறிய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே என்று இருவரும் கூறினார்கள். இந்த வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய ஒரு விஞ்ஞானப் பார்வையினை நமக்களித்தனர். இவ்விருவருக்கு முன்பே, முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களும், முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் வர்க்கப் போராட்டத்தினை விரித்துரைத்துள்ளனர். மார்க்ஸ், வர்க்கங்களின் இருத்தல் என்பது பொருளுற்பத்தியின் வளர்ச்சியிலான குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் தொடர்புடையவை என்பதையும், வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது என்பதையும், இந்த சர்வாதிகாரம் மட்டுமே சகலவித வர்க்கங்களின் ஒழிப்பு மற்றும் வர்க்கங்களற்ற சமுதாயத்திற்கான மாறுதல் கட்டமாக அமையும் என்பதையும் விஞ்ஞான வழிமுறையில் நிரூபித்துக் காட்டினார். மார்க்சும் எங்கெல்சும் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் அவர்கள் படைத்தளித்த எழுத்துக்களின் அடிப்படையில் இந்த விஞ்ஞான முடிவிற்கு எவ்வாறு வந்தடைந்தனர் என்பதை இந்நூல் விவரிக்கிறது.

இந்த விஞ்ஞானக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவர்கள், பல்வேறு சோஷலிச கோட்பாடுகளை எதிர்க்க வேண்டியவந்தது. குட்டிமுதலாளித்துவ சோஷலிசம், முதலாளித்துவ சோஷலிசம், கற்பனாவாத சோஷலிசம் போன்றவற்றுடன் இணக்கம்காணாமல் போராட்டத்தை மார்க்சும் எங்கெல்சும் நடத்தியே தங்களை கோட்பாட்டை  நிறுவினர். அவர்கள் வாழ்வில் சந்தித்த இத்தகைய சோஷலிசம் இன்றும் புதுப்புது வடிவெடுத்து மார்க்சியத்தை விமர்சிக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு, மார்க்சும் எங்கெல்சும் எவ்வாறு அன்று போராடினர் என்பதை அறிவதற்கு இந்த மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும் படைப்பும் என்ற நூல் உதவிடுகிறது.

இருவரது வரலாறு என்பது தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்ட வாழ்க்கையாகவே இருந்ததையும், அதற்கான கோட்பாட்டை வகுத்தளித்ததையும் இந்நூலைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

இந்நூல் மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்வும், அவர்கள் வகுத்தளித்த கோட்பாடான மார்க்சியத்தையும் அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஓர் அறிமுகமாக அமையும். இருவரின் படைப்புகள் எந்த சூழ்நிலையில் ஏன்? எழுதப்பட்டது, அதில் காணப்படும் கோட்பாடுகள் எவை? என்பதை இந்த சிறுநூல் விளக்குகிறது. இந்த சுருக்கமான வாழ்க்கை வரலாற்று நூலில் வாழ்க்கைச் சுருக்கத்துடன், அவர்களது நூல்களின் அறிமுகமும் சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளது.

மார்க்சியத்தை அதன் வேரில் இருந்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக அமையும். இந்த நூலில் கொடுக்கப்பட்ட இருவர்களது நூல்களின் அறிமுகம், மூல நூலை வாசிப்பதற்கு துணைவனாக (Study Guide) அமையும்.

முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடிக்கு; பாட்டாளி வர்க்க அரசும், கம்யூனிச உற்பத்தி முறையும் தான் தீர்வு என்பதை மார்க்சும் எங்கெல்சும் தங்களது படைப்புகளின் வாயிலாக நமக்களித்துள்ளனர்.

2007 முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடியின் சூழல் காரணமாக, மார்க்சைப் பற்றியும், அவரது பொருளாதார நெருக்கடி பற்றிய கோட்பாட்டையும் அறிந்து கொள்வதற்கு உலகு தழுவிய ஆர்வம் தோன்றியுள்ளது. மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" நூல் தற்போது அதிகமாக விற்கப்பட்டு படிக்கப்படுகிறது.
தமிழ் வாசகர்களை மனதில் கொண்டு தமிழில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதி அத்தியாயமாக, மார்க்சின் பொருளாதார நெருக்கடிக் கோட்பாடு பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் நேரடி வார்த்தைகளின் அடிப்படையில் சிறு அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது
.
இந்நூலை விடியல் பதிப்பகம் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இதுவரை மார்க்ஸ் எங்கெல்ஸ் வாழ்க்கைப் பற்றி எவ்வளவே நூல் வெளிவந்திருந்தும், இந்நூலை வெளியிடுவதற்கும் அதனை சிறப்பாக படங்களுடன் வெளியிட விரும்பியதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.கா.ஈஸ்வரன்                           மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                அலைபேசி எண்: 9283275513


Sunday, 11 January 2015

"மார்க்சிய தத்துவம்" நூலுக்கு எழுதிய - முன்னுரை

மார்க்சிய தத்துவம்- அ.கா.ஈஸ்வரன்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர் - 641 603
செல்- 94866 41586
வீலை ரூ.100/-


"தத்துவ முறையிலான சிந்தனை என்பது இயற்கையான திறன் என்ற அளவில் மட்டுமே ஓர் உள்ளார்ந்த பண்பாகும். இந்த இயற்கையான திறன் வளர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். அதன் மேம்பாட்டுக்கு முந்தைய தத்துவத்தை படித்தாராய்வது தவிர வேறு வழிகள் கிடையாது"
                                                 - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம்- 462)
     
மார்க்சும் எங்கெல்சும் நமக்கு அளித்த அடிப்படைக் கருத்துக்களே மார்க்சியம். இந்த மார்க்சியம் என்னும் கோட்பாட்டை சுமார் பத்துவரிகளுக்குள் லெனின் தொகுத்துக்காட்டியுள்ளார்.

தற்காலச் சமுதாயத்தின்  மிகவும் முனனேறிய வர்க்கத்துக்கு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்கமைப்பதற்கு நேரடியாய் உதவுவதும், இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவதும், தற்போதுள்ள அமைப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாய், தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றும் என்பதை நிரூபிப்பதே மார்க்சியம் என்று லெனின் மிகச்சுருக்கமாக கூறியிருக்கிறார்.

இதனை விரித்து புரிந்து கொண்டால் மார்க்சியத்தின் உட்பிரிவுகளான தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் என்ற துறைகளின் முதன்மைத்துவத்தையும், அதன் உட்பிணைப்பையும் அறிந்து கொள்ளலாம். லெனின் கூறியவற்றில் தற்காலச் சமுதாயத்தின்  மிகவும் முனனேறிய வர்க்கத்துககு அறிவொளி ஊட்டி அதை ஒழுங்குமைக்க நேரடியாய் உதவிட வேண்டும் என்ற பகுதி விஞ்ஞான கம்யூனிசத்தையும். இந்த வர்க்கத்தின் முன்னுள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டுவது என்ற பகுதி அறிவொளி ஊட்ட வேண்டிய பாட்டாளி வர்க்கத்தின் தத்துவக் கண்ணோட்டத்தின் கடமையும்.

தற்போதுள்ள அமைப்பு, பொருளாதார வளர்ச்சி காரணமாய், தவிர்க்க முடியாதபடி வீழ்த்தப்பட்டு அதனிடத்தில் ஒரு புதிய அமைப்பு தோன்றுமென்பதை நிரூபிக்கிறது, என்ற பகுதி தத்துவம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியற்றின் தோற்றத்துக்கு அடித்தளமான பொருளாயதப் பின்புலத்தை அறிவுறுத்தும் அரசியல் பொருளாதாரத்தின் போக்கையும் நமக்கு லெனின் வகுத்து, தொகுத்து, சுருக்கி தந்துள்ளார்.

இந்த மூன்று தோற்றுவாய்களும் அதன் உள்ளடக்கக் கூறுகளையும் புரிந்து கொண்டால் மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்துகொள்ள ஏதுவாய் இருக்கும்.

மூன்று கோட்பாடுகளும் மூன்று நாடுகளில் தோன்றின. ஜெர்மனியில் செம்மை ஜெர்மன் தத்துவம், இங்கிலாந்தில் அரசியல் பொருளாதாரம், பிரான்சில் பிரெஞ்சு சோஷலிம் இந்த மூன்று கோட்பாடுகளையும் மார்க்ஸ் தொடர்ந்து ஆராய்ந்து அவற்றை முழுநிறைவாக்கினார்.

முரண்பட்ட சமூகத்தை மாற்றுவதற்கு மார்க்ஸ் எந்தவித குறுங்குழுவாத கோட்பாட்டையும் உருவாக்கிக்கொள்ளவில்லை.  மனித சமூகத்திலுள்ள முன்னணிச் சிந்தனையாளர்கள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அவர் விஞ்ஞான வழிப்பட்ட விடையினை அளித்தார். அந்த விடையும் உலக சிந்தனையாளர்களிடம் இருந்து விலகி தனித்த போக்கில் படைத்திடவில்லை, அந்த சிந்தனையாளர்களின் நாகரீக வளர்ச்சியின் தொடர்ச்சியில் வந்தடைந்தார்.

இந்நூல் மார்க்சியத் தத்துவம் பற்றியது. மற்ற இரண்டும் தனிநூலாய் விரைவில் வெளிவரும். 

தத்துவத்தை தெளிவோடும், அதன் வழியில் அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொண்டவர்களே, அரசியலில் சிறப்பாய் செயற்பட முடியும். மார்க்சிய அரசியலை, விஞ்ஞானமாய் செயற்படுவதற்கு உதவிடும் மார்க்சியத் தத்துவத்தை சுருக்கமாத் தொகுத்தளிப்பதே இந்நூலின் நோக்கமாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகளுக்கு மார்க்சியத் தத்துவமே வழிகாட்டும். சமூகத்தில் காணப்படும் இன்றைய நிலைக்கு காரணம் என்ன?, சமூகத்தின் மாற்றம் எதில் அடங்கி இருக்கிறது?, அந்த மாற்றங்கள் எந்த சமூகத்தை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிவதற்கு மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதம் நமக்கு வழிகாட்டும்.

மார்க்சிய தத்துவம் என்பது இரண்டு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. பிரபஞ்சத்தின் இருப்பு, மாற்றம், வளர்ச்சி போன்றவற்றை விவரிப்பது இயக்கவியல் பொருள்முதல்வாதம். சமூகத்தின் இருப்பையும், அடைந்துவரும் மாற்றத்தையும், இறுதியில் இந்த சமூக அமைப்பிலிருந்து எந்த சமூக அமைப்புக்கு மாறுகிறது என்பதையும் வலியுறுத்துவது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் செயற்படுவதால், மார்க்சியத் தத்துவத்தை படித்தறிந்து தெளிவடைய வேண்டியது அவசியமாகிறது. சமூகம் பற்றி விஞ்ஞான வழிப்பட்ட தொலைவானப் பார்வையைப் பெறுவதற்கும், அரசியல், பொருளாதார வளர்ச்சியின் விதிகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கும்  மார்க்சிய தத்துவம் கம்யூனிஸ்டுகளுக்குத் துணைபுரிகிறது.

மார்க்சிய தத்துவத்தை அறியவிரும்புபவர்கள் எதை அறிந்திட வேண்டும் என்பதை தொகுத்துப் பார்க்கவும், அறிந்தவர்கள் தொகுப்பாய் காண்பதற்கும் இந்நூல் எழுதப்பட்டது. மார்க்சியத் தத்துவம் எதைப்பற்றி பேசுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்தச் சுருக்கம் போதுமானது. இந்நூலின் சுருக்கம் தருகிற சிரமத்தை பொருத்துக்கொண்டு படிக்கும்போது, தேவைப்படுபவைகளை அறிந்து மேலும் படித்தறிய வழிகாட்டும். 

மார்க்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று இன்று பல எழுத்தாளர்களும், கவிஞர்களும் மற்றும் பலவேறு துறைப் படைப்பாளிகளும் விரும்புகின்றனர். இவ்வகை விருப்பத்தை நிறைவேற்றுவதும் இந்நூலின் நோக்கமாகும்.

ஸ்டாலின் எழுதிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்” என்ற நூல் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும், நா.வானமாமலை எழுதிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பற்றி   “இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும்”, வரலாற்றியல் பொருள்முதல்வாதம் பற்றி  “மார்க்சிய சமூகவியல் கொள்கை” என்ற நூல்கள் அலைகள் வெளியீட்டகத்திலும். விக்டர் ஆஃபேன் ஸீப் எழுதிய “மார்க்சிய லெனினிய தத்துவம்” பிளெஹானவ் எழுதிய “வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்” என்ற நூல்கள் பாரதி புத்தகாலயத்திலும், ஒ.யாக்கோத் எழுதிய “முரண் தர்க்கப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?”, வி.கெல்லி, எம்.கவல்ஸோன் ஆகியோர் எழுதிய “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற நூல்கள் என்சிபிஎச் (NCBH) நிறுவனத்திலும் கிடைக்கிறது.

 எனது முதல் நூலான "சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்"  விற்பனையாகிவிட்டது. அதன் மறு அச்சு வெளியிடப்போவதில்லை என்ற முடிவெடுத்தன்படி, அவற்றில் எழுதியவைகளில் சிலபகுதிகள் இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

மார்க்சிய அடிப்படைகளை நூல்களாக வெளியிடுதல் என்ற பொன்னுலகம் பதிப்பகத்தின் நோக்கோடு, இந்நூலின் நோக்கமும் ஒன்றுபடுவதால், இப்பதிப்பகத்தால் இந்நூல் வெளியிடப்படுகிறது. பதிப்பகத்தாருக்கும், இந்நூல் நல்லமுறையில் வெளிவர ஒத்துழைத்த தோழர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூலுக்கு சிறந்த அணிந்துரை வழங்கிய தோழர் வே.மீனாட்சிசுந்தரம், தோழர்.கோவை.ஈஸ்வரன் தோழர்.சி.மகேந்திரன் ஆகியோருக்கு மிக்க நன்றியினைத் தெரிவித்துகொள்ளுக்கிறேன்.

அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலில் மார்க்ஸ் எழுதிய முன்னுரையில், தாம் உருவாக்கிய பொது முடிவை எட்டியவுடன் அந்த முடிவையே (வரலாற்றியல் பொருள்முதல்வாதம்) தன்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கோட்பாடாகவும் அதனையே பின்பற்றியதாக கூறியிருக்கிறார். இந்த பொதுவான முடிவே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பான நமது நாட்டில், மார்க்சின் பொதுவான வழிகாட்டுதலின்படி செயற்படும் கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் பொதுவான சமூக வளர்ச்சியின் கோட்பாட்டை நமக்களித்துள்ளது. இதனை நமது நாட்டின் இன்றைய சூழ்நிலையை புரிந்தும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கு மார்க்சியம் துணைபுரிகிறது. 

லெனின் இதனை “சோசியத் அரசாங்கத்தின் உடனடிப் பணிகள்” என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்:- “புரட்சியாளராகவோ, சோஷலிச ஆதரவாளராகவோ, கம்யூனிஸ்ட்டாகவோ பொதுபட இருந்தால் மட்டும் போதாது. குறிப்பிட்ட ஒவ்வொரு தருணத்திலும் சங்கலியில் எந்த இணைப்பை உங்கள் முழு பலத்தையும் கொண்டு பற்றிக் கொள்ளவும், அடுத்த இணைப்புக்கு மாறிச் செல்வதற்குத் திடமான முறையில் தயாரிப்பு செய்யவும் முடியும் என்பதை நீங்கள் கண்டு கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிகளின் சங்கிலியில் இணைப்புக்களின் வரிசையும் அவற்றின் வடிவமும் அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் முறையும், ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற முறை ஆகியவை கொல்லுப் பட்டறையாளரால் செய்யப்படுகின்ற சாதாரணச் சங்சிலியில் இருப்பதைப் போன்று எளிதானவையாகவும் அர்த்தமற்றவையாகவும் இருப்பதில்லை” மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் லெனின் குறிப்பிடுகின்ற இற்த ஆற்றலைப் பெறமுடியாது.

மார்க்சியம், செயலுக்கு வழிகாட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல என்று மார்க்சும், எங்கெல்சும், லெனினும் கூறுவர். ஆனால் மார்க்சியத்தின் அடிப்படையில் நிற்பதை வறட்டுச் சூத்திரமாக, மண்ணிற்கேற்ற மார்க்சியம் பேசுபவர்கள் கூறிவருகின்றனர். இதற்கு பதிலாக லெனின் கருத்தை முன்வைப்போம்.

“பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமல் இருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினால் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை”  (மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சிலஇயல்வுகள்) மேலும் லெனின் கூறுகிறார், “நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்” (We take our stand entirely on the Marxist theoretical position) -(நமது வேலைத்திட்டம்). ஆக, மார்க்சியக் கோட்பாட்டில் நிற்பரே மார்க்சியவாதி. அப்படி மார்க்சியத்தில் நிற்பவருக்கு உதவிடும் வகையில் எழுதப்பட்டது இந்நூல்.

மார்க்சியத்தின் பொதுக்கோட்பாட்டை மண்ணிற்கேற்ப மாற்றுவது மார்க்சியத்திரிபாகும். நமது மண்ணை மார்க்சிய வழியில் விளங்கிக்கொள்வதும் மாற்றுவதுமே மார்க்சியமாகும்.

மார்க்சியம் என்பது சர்வரோக நிவாரணியாகப் புரிந்து கொள்வதை தவிர்ப்பதற்கே “மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல” எனறு கம்யூனிஸடுகள் கூறுகின்றனர். அனைத்துப் புதுப்புது பிரச்சினைகளுக்கும் தீர்வை மார்க்சியம் தயாராக கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை, மாறிக் கொண்டே இருக்கும் உலகின் நிலைமைகளைப் பார்த்து அலசி ஆராய்ந்து தீர்வை நோக்கி செயற்படுவதற்கு ஒரு வழிகாட்டியாகவே மார்க்சியம் நமக்குப் பயன்படுகிறது. அதனால் மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டவர்களால் தான், அதனை வழிகாட்டியாகக் கொண்டு அனைத்துப் பிரச்சினைகளுக்கும், மார்க்சிய வழிப்பட்ட தீர்வை முன்வைத்து தமது செயற்பாட்டை வகுத்துக் கொள்ளமுடியும்.

“மார்க்சியத் தத்துவம்” என்ற நூலைத் தொடர்ந்து “மார்க்சிய அரசியல் பொருளாதாரம்”, “விஞ்ஞான கம்யூனிசம்” என்ற நூல்களும் விரைவில் வெளிவரும். இந்தத் தொடர் நூல்கள் ஒரு கம்யூனிஸ்ட்டை மார்க்சியவாதியாய் முழுமைப்படுத்தும்.


அ.கா.ஈஸ்வரன் மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                                    அலைபேசி எண்: 9283275513