(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் நான்காம் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.)
இந்த வகுப்பின் காணொளியைக் காண:-
இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் நான்காம் அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம்.
போன வகுப்பில் மூன்றாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம்.
மூன்றாவது அத்தியாயத்தின் தலைப்பு, “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.”
கூலி உயர்வுக்காகப் போராடுகிற தொழிற்சங்க போராட்டம், ஓர் அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் போராட்டம் அல்ல. அதே நேரத்தில் லெனின், பொருளாதாரப் போராட்டத்தை மறுக்கவில்லை, அந்தப் போராட்டத்தைக் கம்யூனிசம் பரப்புவதற்கான தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார்.
கூலி உயர்வுக்கான போராட்டத்தையே மேலோங்கிய போராட்டமாக, பொருளாதாரப் போராட்டத்தையே சோஷலிசத்திற்கானப் போரட்டமாகக் கருதுகிற போக்கைத் தான் லெனின் மறுகிறார்.
பொருளாதாரப் போராட்டம் மட்டுமே, மக்களை அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார்.
மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறானதாகும்.
ஒரு பெண், தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலில் ஈடுபடலாம். அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் பெண் தனக்கும், தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம், அப்படி வந்த பிறகு, தான் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் மட்டுமல்ல, வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின் அடிப்படையில் தான் ஒடுக்க முறை நிகழ்கிறது. அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்.
கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல், அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
லெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார்.
அது என்வென்று பார்ப்போம்.
லஞ்சல், ஊழல், பாதிக்கப்பட்ட மக்களையே போலீஸ் தாக்குவது, அதிகமான வரிப்போட்டு மக்களை வாட்டுவது, மதப் பிரிவினரை அடக்கி ஒடுக்குவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளையும் ஒடுக்குவது போன்ற பிரச்சினைகளும், மக்களை அரசியலில் ஈடுபட வைக்கும்.
பொருளாதாரப் போராட்டத்திற்குக் காத்துக் கொண்டிருக்காமல், மக்களிடம் ஏற்படுகிற அனைத்து அதிருப்தியையும், அரசியலாக்கத் தெரிந்தவர்களே சிறந்த கம்யூனிஸ்ட் ஆவர்கள்.
புரட்சிகரமான கம்யூனிசமானது, பொருளாதாரம் போன்ற சீர்திருத்த போராட்டத்தை, தமது நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால், சீர்திருத்த போராட்டத்தையே சோஷலிசப் போராட்டமாகக் கருதுவதை மறுக்கிறது.
தொழிலாளர்கள் தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்கு வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர், இதனை அவர்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளனர். அவர்கள் அறிய வேண்டியது சோஷலிசம் தான். அதாவது கம்யூனிசம். அதனைத் தான் கம்யூனிஸ்டுகளிடம் தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.
இடதுசாரிகளிடம் காணப்படும் வலது-இடது திரிபுகளைப் பற்றி லெனின் கூறுகிறார்.
பொருளாதாரவாதிகளிடமும் பயங்கரவாதிகளிடமும் வெவ்வேறு வடிவகத்தில் தன்னியல்பு வழிபாடு காணப்படுகிறது.
அவ்விருவரும் வேறுவேறு வகையான தன்னியல்பை வழிபடுகின்றனர்.
பொருளாதாரவாதிகள் தொழிற்சங்க
இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.
இதனைத் தான் நாம் இந்த நூலின் பெரும் பகுதியில் பார்க்கிறோம். ஆனால் பயங்கரவாதிகளின் தன்னியல்பு பற்றி லெனின் மிகவும் சில இடங்களில் தான் சுட்டியுள்ளார்.
பயங்கரவாதிகள், புரட்சிகர இயக்கத்தையும் - தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்குத் திறமையில்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர்.
இந்த மூன்றாம் அத்தியாயத்தில் புரிந்து கொள்ள வேண்டியதில் முக்கியமானது என்னவென்றால், கம்யூனிச வர்க்க உணர்வையும், கம்யூனிச அரசியலையும் தொழிலாளர்கள், தங்கள் பொருளாதாரப் போராட்டத்தின் மூலம் மட்டும் அறிந்து கொள்ள முடியாது.
பொருளாதாரப் போராட்டத்திற்கு அப்பால் வெளியில் இருந்து தான் வரவேண்டும்.
ஏன்னென்றால், தொழிலாளர்கள், அவர்களின் தொழிற்சாலைப் பிரசினைகளை மட்டும் அல்லது அவர்களின் தொழில்துறையைச் சார்ந்த பிரிச்சினைகளை மட்டுமே புரிந்து கொள்வதற்கு வாய்பு அதிகம் உள்ளது.
இது ஒரு முழுமையின் பகுதியே, முழுமையாகப் பார்ப்பதற்கு, வரலாற்றியல் பொருள்முதல்வாதம், மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் பற்றிய புரிதலும், அதன் அடிப்படையில் அன்றைய பொருளாதார உற்பத்தி முறை அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடி அறிவும் திறமையும் தேவைப்படுகிறது. அதனால் தான் அத்தகைய அறிவு வெளியில் இருந்து வரவேண்டியதாக லெனின் கூறுகிறார்.
இது தான் மூன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம்.
இப்போது நான்காம் அத்தியாயத்திற்குச் செல்வோம்.
நான்காம் அத்தியாயத்தின் தலைப்பு “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”
இந்த அத்தியாயம் 80 பக்கத்திற்கு மேல் காணப்படுகிறது. வழக்கம் போல் நாம் அதன் சுருக்கத்தையும் - சாரத்தையும் தான் பார்க்கப் போகிறோம்.
முதலில் பக்குவமின்மை என்றால் என்ன வென்பதைப் பார்ப்போம்.
தன்னியல்பாய் தோன்றிய பொருளாதாரப் போராட்டத்துக்கும், தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் ஒன்றாக இணைவது போன்ற வடிவங்களுக்கும் அடிபணிவதே பகுக்குவமின்மையாகும்.
அதாவது, தொழிற்சங்க அரசியலையும், கருவடிவிலான் வர்க்கப் போராட்டத்தையும் முடிவான அரசியலாகக் கருதுவது பக்குமின்மையாகும்.
இந்தப் பக்குவமின்மை, நடைமுறை செயற்பாட்டில் பயிற்சியின்மையை மட்டும் சார்ந்திருத்தால் வேறு விஷயம், இதில் கோட்பாட்டுப் பிரச்சினையும் இருக்கிறது.
பயிற்சி இன்மை என்கிற குறைபாட்டைப் பயிற்சி கொடுப்பதின் மூலம் நீக்கிவிடலாம். ஆனால் இந்தப் பக்குவமின்மை என்கிற குறைபாடு கோட்பபாட்டுப் பிரச்சினையுடன் இணைந்துள்ளது.
பக்குவமின்மை, பொதுவாகப் புரட்சிப் பணியின் குறுகியக் கண்ணோட்டத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அது மட்டுமல்லாது, இந்தக் குறுகிய தன்மையை நியாயப்படுத்தி அது ஒரு கோட்பாடாக (theory) உயர்த்திப் பிடிக்கிற முயற்சியும் அதில் காணப்படுகிறது. அதன் ஆபத்து இதில் தான் அடங்கி இருக்கிறது. இறுதியில் அது தன்னியல்பை அடிபணிவதில் போய் முடிகிறது.
மார்க்சிய சித்தாந்தம், கம்யூனிசத்தின் பாத்திரம், அதன் அரசியல் பணி ஆகியவை பற்றிய குறுகிய கருத்தோட்டத்தைப் போக்கிக் கொள்ளாதவரை இந்தத் தன்னியல்பு வழிவாட்டில் இருந்து விடுபட முடியாது.
இந்தப் பிரச்சினை, தூய தொழிலாளர் இயக்கத்திற்கும் முழுநேரப் புரட்சியாளர்களின் அமைப்புக்கும் உள்ள உறவின் அவசியத்தை வலியுறுத்துவதில் போய் நம்மைச் சேர்க்கிறது.
இந்தக் கூற்றின் மூலம், தொழிலாளர்களின் இயக்கம், தொழிற்சங்கவாத போக்கினரிடம் இருந்து விடுபட்டு, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் இருக்க வேண்டிய தேவை அறிந்து கொள்ள முடிகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமாயின், வலது–இடது திரிபுகள் அற்ற மார்க்சியத்தின் புரட்சிகரத் தன்மையைப் புரிந்து கொண்ட அல்லது புரட்சிகரத் தன்மையை இழக்காத கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை இங்கே வலியுறுத்தப்படுகிறது.
தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தைப் பரவவிடாமல் தடுப்பதற்கு, அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கிறது. இந்தப் பகுதிப் போராட்டமான தொழிற்சங்கப் போராட்டத்தை முழுமையானதுடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஆளும் வர்க்கம் பல்வேறு வகையில் தடைகளை ஏற்படுத்துகிறது.
மேலும் லெனின் ஒன்றைக் கூறுகிறார்,
காலங் கடத்தி, தொழிலாளிகளைக் காத்தருக்கும்படி, புத்திமதி அளிக்கும் எண்ணம் மட்டும், கம்யூனிஸ்டுகளான நமக்கு வராமல் இருந்தால், தன்னியல்பாக விழித்து எழுந்துவரும் உழைக்கும் மக்களின் மத்தியில் இருந்தே முழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் அதிகமாகத் தோன்றுவார்கள்.
முழுநேரப் புரட்சியாளர்களான கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்களிடையே உருவாகும் போது, இயக்கத்தின் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
பொருளாதாரவாதிகளின் பிரச்சினை, கம்யூனிசத்தை விடுத்து தொழிற்சங்கவாதத்துக்கு எப்போதும் நழுவிச் செல்வதில் அடங்கி இருக்கிறது.
முதலாளிகளுக்கும் - அரசாங்கத்திற்கும் எதிராகத் தொழிலாளர்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டத்தை விட, கம்யூனிச அரசியல் போராட்டம் என்பது பல்வேறுபட்ட இணைப்புகளுடன் நடத்தும் விரிவானப் போராட்டமாகும்.
இதன் காரணமாகவே, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தவிர்க்க முடியாத வகையில் தொழிலாளர்களின் அமைப்பில் இருந்து வேறுபட்ட வகையைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகிறது.
லெனின் இங்கே தெளிவாகக் கூறுவது என்னவென்றால், தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துகிற அமைப்பைக் காட்டிலும் வேறுபட்டதான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு, கண்டிப்பாகத் தொழிலாளர் இயக்கத்திற்குத் தேவையானது என்பதே ஆகும்.
தொழிற்சங்க இயக்கத்திற்கும் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியிக்கும் உள்ள வேறுபாடும் - இணைப்பையும் புரிந்து கொள்ளாதவரை, தொழிலாளர்களும் கம்யூனிஸ்டுகளும் நினைக்கிற வெற்றி கிட்டாது.
சுதந்திரம் பெற்றுள்ள நாடுகளில். தொழிற்சங்க அமைப்பும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஓன்றுகூடுதலில் பிரச்சினை இல்லை என்று லெனின் கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டில் கிடைக்கின்ற சுதந்திரத்தைப் பயன்படுத்திச் செய்ய வேண்டியதை செய்துமுடித்துள்ளோமா? என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது?
செய்ய வேண்டியதை செய்யாமல், காலம் சென்று கொண்டிருக்கிறது, 100 ஆண்டுகள் கடந்துவிட்டது என்று வருத்தப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான பணிகளை முனைப்போடு செய்திடல் வேண்டும்.
லெனின் மற்றொன்றையும் வலியுறுத்துகிறார்.
பொருளாதாரப் போராட்டத்திற்கு உதவிடும் தொழிலாளர்களின் அமைப்புத் தொழிற் சங்கங்களாகத்தான் இருக்க முடியும்.
ஒவ்வொரு கம்யூனிசத் தொழிலாளியும் முடிந்தவரை இச்சங்கங்களுக்கு உதவிவர வேண்டும், அதற்குத் தீவிரமாக வேலை செய்ய வேண்டும். இது உண்மை தான், என்றாலும், கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்தத் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி பெற்றவர்கள் என்று கூறுவது நிச்சயமாக நம் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று லெனின் கூறுகிறார்.
முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சங்கத்தில் உறுப்பினராவதற்குத் தகுதிப் பெற்றவர்களே ஆவர்.
போன அத்தியாயங்களில் கூறியது போல் தொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால் இருந்துதான் வரமுடியும். அப்படி இருக்கையில் தொழிலாளர்கள் இயல்பாகவே கம்யுனிச உணர்வை பெற்றிவிடுவர் என்று எதிர் பார்க்க முடியாது. அதற்கான பயிற்சியினை, புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர உறுப்பினர்களால் தான் கொடுக்க முடியும். பயிற்சியின் மூலம் தான் தொழிலாளர்கள் கம்யூனிச அரசியல் உணர்வைப் பெறுவர்.
பக்குவமின்மை ஏற்படுவதற்குக் காரணம், கோட்பாட்டு (theory) தொடர்பான பிரச்சினையில் உறுதியின்மை, குறுகியப் பார்வை, தன் சொந்தச் சோம்பலுக்கு மக்களின் தன்னியல்புத் தன்மையைச் சாக்காக்குவது, மக்களின் தலைவராய் இருப்பதைவிட, தொழிற்சங்கச் செயலாளர் போலத் தோன்றுவது.
எதிரிகளுங்கூட மதிக்கத்தக்க விரிவான, தைரியமான திட்டம் உருவாக்குவதில் திறமின்மை, எதிர்படும் எதிர்ப்பை சந்திப்பதில் அனுபவமின்மை - ஆகியவை ஆகும். இப்படிப்பட்டவர் கண்டிப்பாகப் புரட்சியாளனாக இல்லாது படுமோசமான கற்றுக்குட்டித் தன்மையிலேயே தங்கிவிட்டவராவர்.
இப்படி லெனின் கூறுவிட்டு தொடர்கிறார்..
வெளிப்படையாக இப்படிக் கூறுவதால், தீவிர கட்சி ஊழியர் எவரும் வருத்தப்படத் தேவையில்லை.
எனென்றால் பயிற்சி போதாமை என்கிற விஷயத்தில் தன்னையே குறை கூறிக் கொள்வதாக லெனின் கூறுகிறார். அதற்குக் காரணம் தானும் ஒரு பயிற்சியாளன் என்பதனால் தன்னையும் குறை கூறிக் கொள்கிறார்.
இப்படித் தன்னைச் சுயமதிப்பீடு செய்யாமல் எந்தக் கம்யூனிஸ்டும் தமது செயற்பாட்டில் திறமையை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.
தொழிலாளிகளைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவது கம்யூனிஸ்டுகள் முதன்மையாகக் கடமை ஆகும்.
தொழிலாளர்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய இலக்கியம் வேண்டும், குறிப்பாக, பிற்பட்ட தொழிலாளர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியக்கூடிய ஆனால் கொச்சைப் படுத்தப்படாத இலக்கியம் வேண்டும்.
தொழிலாளியும்-புரட்சியாளனும் தன் பணியைச் செய்தவற்கு முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு ஒரு முழுநேரப் புரட்சியாளாராக ஆகியே தீர வேண்டும் என்கிறார் லெனின்.
இதனைப் புரிந்து கொள்ளாது, பொருளாதாரப் போராட்டத்தோடு முடங்கிப்போயுள்ள கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்களால் தூக்கி எறியக்கூடிய காலம் வராமல் போகாது.
இந்த அத்தியாயத்தின் ஐந்தாவது உட்தலைப்பு, “சதிவேலைக்கான” அமைப்பும் “ஜனநாயகமும்”. இதன் தொடக்கத்தில் லெனின் குறிப்பிடப்படுவதைக் கவனத்தில் கொள்ளாதவரை இந்த நூலைப் படித்து எந்தப் பயனில்லை.
“தொழிலாளி வாக்கத்தின் தன்னியல்பான போராட்டத்தைப் புரட்சியாளர்களின் பலமான அமைப்பு, தலைமை வகித்து நடத்திச் செல்லாதவரை, அந்தத் தன்னியல்பான போராட்டம் அதன் உண்மையான “வர்க்கப் போராட்டமாக” ஆகாது.”
அடுத்த உட்தலைப்பு, “உள்ளூர் வேலையும் அனைத்து ருஷ்ய வேலையும்”
இந்த உட்தலைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உள்ளூர் வேலைக்கும். அனைத்து ருஷ்ய வேலைக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றிப் பரிசீலிக்கிறது இந்த உட்தலைப்பு.
உள்ளூர் ஊழியர்கள், உள்ளூர் வேலையிலேயே மிதமிஞ்சி ஈடுபடுவதினால் இயக்கம் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தை. லெனின் இதில் கூறியுள்ளார்.
ஈர்ப்பு மையம். ஓரளவுக்கு அனைத்து ருஷ்ய வேலையாக மாற்றுவது மிகவும் அவசியமானது என்கிறார். இப்படி மாற்றுவது பொருளாதாரப் போராட்டத் துறைக்குப் பொருந்தாது என்று முதல் பார்வைக்குத் தென்படும். ஆனால் இது தவறானது ஆகும்.
குறிப்பிட்ட பொருளாதாரப் போராட்டத்தின் எதிரிகள், தனித்தனி முதலாளிகளோ அல்லது முதலாளிகளின் குழுவோ ஆவர். ஆனால், பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற் சம்பந்தப்பட்ட போராட்டம் ஆகும்.
ஆகவே வேலை செய்யும் இடத்தில் மட்டும் இல்லாது தொழில் வரியாகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.
முதலாளிகள் அனைவரும் எப்படி ஒன்றுபட்டு வருகிறார்களோ, அதற்கு இணையாகத் தொழில் வாரியாக, தொழிலாளர்களுடைய அமைப்புகளின் ஒற்றுமை அவசியமானதாகும். இத்தகைய ஒன்றுபட்ட அமைப்பு வேலைக்குத் தேர்ச்சிநயமின்மை பெரும் தடையாக இருக்கிறது. அதாவது திறமின்மை என்று சொல்லாம்.
பகுதிப் போராட்டத்தை முழுமைப் போராட்டத்துடன் இணைக்க முடியாமைக்குக் காரணம் தேர்ச்சியின்மையே.
அனைத்து ருஷ்யத் தொழிற்சங்கங்களுக்கு, தலைமை வகித்துச் செல்லும் திறமையுள்ள புரட்சியாளர்களைக் கொண்ட, ஒரேயொரு அனைத்து ருஷ்ய அமைப்பு இருப்பது தேவையாகிறது என்கிறார் லெனின்.
மற்ற ஊர்களில் உள்ள அமைப்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட உள்ளூர் அமைப்பு ஒரு சரியான தகவுப்பொருத்த உணர்ச்சியை நீடித்து வைத்திருப்பது மிகவும் கஷ்டமானதாகும். ஆனால் வழி பிறழாது மார்க்சிய அடித்தளத்தின் மீதுநிற்கும், முழு அரசியல் போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும், முழுநேரக் கிளர்ச்சியாளர் பணிக் குழுவைப் பெற்று இருக்கும் புரட்சிகர ஓர் அனைத்து ருஷ்ய அமைப்பிற்கு இது போன்ற கஷ்டங்கள் இருக்காது.
இந்த அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகக் கூறிவிடலாம். அது என்னவென்றால், பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையைப் போக்குவதற்குத் தேவையான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியமே அது.
இவைகள் தான் இந்த அத்தியாயத்தின் சாரம்.
இத்துடன் இந்த அத்தியாயத்தின் சுருக்கம் முடிந்தது.
இந்தச் சாரத்தின் அடிப்படையில்
கேள்விகள் கேட்கலாம், கலந்துரையாடலின் மூலம் விளக்கம் பெறலாம்.