Friday 18 September 2020

என்ன செய்ய வேண்டும்? – லெனின் (மூன்றாம் அத்தியாயம்)

                                                          (சுருக்கமான வகுப்பு) 

(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின்  எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் மூன்றாம் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு எழுதப்பட்ட குறிப்பு.) 

இந்த வகுப்பின் காணொளியைக் காண:-

https://www.youtube.com/watch?v=dGLYfif6srE&t=174s

அனைத்து காணொளியைக் காண:-

https://www.youtube.com/channel/UCN4ahSJzeZcpsRtuh0myX5g

 


இன்று லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் மூன்றாவது அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறோம். 

போன வகுப்பில் இரண்டாவது அத்தியாயம் பார்த்தோம். அதனைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, மூன்றாம் அத்தியாயத்திற்குச் செல்வோம். 

இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு, “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வும்.” இரண்டாம் அத்தியாயத்தில் மூன்று விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. மக்களின் தன்னியல்பு, தன்னியல்பு வழிபாடு, கம்யூனிச உணர்வு. 

உழைக்கும் மக்கள், தாம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது தன்னியல்பு, இந்தத் தன்னியல்பு, அந்தப் பிரச்சினை ஏன் வந்தது, அதனை எப்படி முழுமையாக நீக்குவது என்பது பற்றி எல்லாம் சிந்திக்காது, அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பார்த்து அதனைப் போக்குவதற்காகப் போராடுகிறது. அதனால் தான் அதற்குத் தன்னியல்பு போராட்டம் என்று பெயர். 

இந்தத் தன்னியல்பு போராட்டம் ஒரு அரசியல் போராட்டம் தான், கருவடிவிலான வர்க்கப் போராட்டம் தான். ஆனால் இது கம்யூனிச அரசியல் போராட்டம் கிடையாது, முழுமையான வர்க்கப் போராட்டம் கிடையாது. 

தன்னியல்பான போராட்டம், பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாது, வடிவத்துடன் போராடுகிறது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சினை, எதனடிப்படையில் தோன்றியது என்பதை அது அறியாது. தொடர்ந்து வருகிற இந்தப் பிரச்சினையை நிரந்திரமாகத் தீர்ப்பதற்கு அது முயலாது. 

உண்மையில் இந்தப் பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது. இந்தப் பிரச்சினை, திரும்பத்திரும்ப வராமல் முழுமையாக நீக்க வேண்டும் என்றால், இந்த உற்பத்தி முறையையே போக்க வேண்டும். 

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப் பார்க்கக்கூடாது. அன்றைய உற்பத்தி உறவுகளில் இருந்து தான் அனைத்துப் பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்கிற புரிதல் வேண்டும். 

அந்தப் புரிதல் ஏற்பட்டால் தான் கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்பதற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும். கருவடிவிலான வர்க்கப் போராட்டம், முழுமையான வர்க்கப் போராட்டமாக, சமூகத்தையே மாற்றுகிற, புரட்சிகரப் போராட்டமாக மாற்றமுடியும். 

இந்தப் புரிதலை விஞ்ஞானக் கம்யூனிசம் தருகிறது. 

கம்யூனிசத்தை அறிந்த கம்யூனிஸ்டுகளால் தான், இதனைத் தொழிலாளர்களுக்குப் புரிய வைக்க முடியும். இத்தகைய புரிதலுக்குத் தடையாக இருப்பது தன்னியல்பு வழிபாடு. 

கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்றிபோவது, தொழிற் சங்க அரசியலுடன் நின்று போவது இவைகள் அனைத்தும், தன்னியல்பு வழிபாடாகும். 

தொழிற்சங்கத்தில் இணைந்து போராடுவது ஒரு அரசியல் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் அல்ல, அரு ஒரு முதலாளித்துவ அரசியல். ஏன் என்றால், கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நின்று கொண்டு போராடுவதாகும். இந்தப் போராட்டம், பழைய உற்பத்தி முறையை வீழ்த்தி, புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தாது. 

அதனால் தான் இதை ஒரு முதலாளித்துவ அரசியல் போராட்டம் என்று கூறப்படுகிறது, இதனைக் கடந்து கூலி உயர்வுக்கான போராட்டத்தை, “கூலி முறை” ஒழிப்புக்கான போராட்டமாக வளர்ப்பது தான் கம்யூனிச அரசியல். 

இந்த இரண்டாம் அத்தியாயம், கம்யூனிஸ்டுகளின் அரசியலை தெளிவுபடுத்துகிறது. இதனைப் படித்து, தொழிற்சங்கவாத அரசியலைக் கடந்து, கம்யூனிச அரசியலுக்கு, தொழிலாளர்களை அழைத்துவருவது, கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை உணர வேண்டும். 

இந்தக் கடமையை உணரவில்லை என்றால், இத்தகைய கம்யூனிஸ்டுகளின் போராட்டம், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாதகமாக மாறிவிடும். 

இன்றைய வகுப்புக்குப் போவோம்:- 

மூன்றாம் அத்தியாயத்தின் தலைப்பு, “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.” 

போன தலைப்பில், தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை, உணர்வுநிலையில் இருந்து விளக்கப்பட்டது. இந்த அத்தியாயம் தொழிற்சங்கவாதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியலைக் கொண்டு விளக்குகிறது. 

இந்த மூன்றாம் அத்தியாயம் அத்தியாயம் 60 பக்கத்திற்கு மேல் செல்கிறது. வழக்கமாகச் சொன்னதையே, இன்றும் நினைவு படுத்துகிறேன். இந்த அத்தியாயத்தை, வரிக்கு வரி படித்து, விளக்காமல், இதில் உள்ள கருத்தின் சுருக்கத்தையும், சாரத்தையும் மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம். 

இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே ஒன்றை லெனின் வலியுறுத்துகிறார், அது என்னவென்றால். 

பொருளாதாரவாதிகள், அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக் கொள்பவர்கள், அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை. அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள். 

தொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல் போராட்டம் தான். ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது. 

பொருளாதாரப் போராட்டத்தை லெனின் மறுக்கவே இல்லை. அந்தப் போராட்டத்தை, கம்யூனிசம் பரப்புவதற்கான, தொடக்கமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்துகிறார். 

கம்யூனிச கருத்துக்களைப் பரப்புவதற்கான தொடக்கப் புள்ளியாகப் பொருளாதாரப் போராட்டத்தை லெனின் கருதுகிறார். இந்தக் கருவடிவில் காணப்படும் வர்க்கப் போரட்டமான, பொருளாதாரப் போராட்டத்தை, முழுமையான - கம்யூனிச வழிப்பட்ட, வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும். இதுதான் கம்யுனிச அரசியல். 

கம்யூனிசக் கருத்துக்கள், அந்தரத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளில் இருந்தும் தான் கண்டு அறியப்பட்டது. அதாவது. கம்யூனிசக் கருத்து, சமூகத்திற்கு அப்பால் இருந்து உருவாக்கப்படவில்லை. இந்த முதலாளித்துவச் சமூகத்தின். வளர்ச்சியின் விளைவாக உருவாகியது. 

இந்தக் கம்யூனிச சித்தாந்தத்தை, கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அத்தகைய பணியை, கட்சிகளுக்கு உள்ளே இருக்கின்ற படிப்பு வட்டங்களும், வெளியில் இருக்கிற, “மார்க்சியர் மேடை” போன்ற படிப்பு வட்டங்களும், செய்து வருகின்றன. 

கம்யூனிசத்தை, அறிந்து கொண்டிருந்தால் தான், தொழிற் சங்கத்தில் ஈடுபடுகிற கம்யூனிஸ்டுகள், பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிலாளர்கள் நின்றுவிடாமல், அவர்களைக் கம்யூனிச வழிபட்ட அரசியல் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். 

லெனின்:- 

“கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல, பொருளாதார அம்பலப்படுத்தல்களை முறையாகத் திரட்டிச் செய்வதை, அவர்களின் நடவடிக்கையின் மிக மேலோங்கிய பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின் அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்” 

இந்தக் கருத்தைத்தான் லெனின் இந்த நூல் முழுதும் விளக்குகிறார். 

பொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார். 

அரசியல் போராட்டங்களில் மக்களை ஈடுபடுவதற்கு, பொருளாதாரப் போராட்டம் மட்டுமே காரணமாகிறதா? என்ற, கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும். 

அதிகாரிகளின் லஞ்சம், ஊழல், நகர்புறத்து பொது மக்களைப் போலீஸ் நடத்தும் முறை, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத் தாக்குவது, வரிப் போட்டு மக்களைப் பிழிவது, மதப் பிரிவினரை அடக்கித் துன்புறுத்துவது, படையாட்களை மானக் குறைவாக நடத்துவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளை ஒடுக்குவது ஆகியவையும், மக்களை அரசியலை நாடச் செய்யும். 

இவைகள் பொருளாதாரப் போராட்டத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளும் மக்களை அரசியலில் ஈடுபட வைக்கிறது. 

புரட்சிகரமான கம்யூனிசம், சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதைத் தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறது, ஆனால் சீர்திருத்த போராட்டத்தை, விடுதலைக்காகவும், சோஷலிசத்துக்காவும் நடக்கும் புரட்சிகரமானப் போராட்டமாகச் சுருக்கிக் கொள்வதையே மறுக்கிறது. பகுதியை முழுமைக்குக் கீழ்ப்படுத்துவதையே மறுக்கிறது. முழுமை நோக்கிச் செல்லாத பகுதிப் போராட்டம், முழுமையானப் போராட்டமாக ஆகாது. 

இதுவரை மூன்றாம் அத்தியாயத்தின், முதல் பிரிவைப் பார்த்தோம். அந்தப் பிரிவின் தலைப்பு, “அரசியல் கிளர்ச்சியும் அதைப் பொருளாதாரவாதிகள் கட்டுப்படுத்துவதும்” 

அதாவது அரசியல் கிளர்ச்சியைப் பொருளாவாதிகள் மட்டுப்படுத்துகின்றனர். இந்தப் பொருளாதாரப் போராட்டத்தோடு நிற்கிற அரசிலை, கம்யூனிச அரசியலாக வளர்த்து எடுக்க வேண்டும். இந்த உட்பிரிவின் இறுதியில், லெனின் தெளிவாக ஒன்றைக் கூறுகிறார், அதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதாரப் போராட்டம் என்பது தொழிற்சங்கவாத அரசியலாகும், இதற்கும் கம்யூனிச அரசியலுக்கும் எவ்வளவோ தூரம் இருக்கிறது. 

 இப்படி தான் இந்த முதல் பிரிவை லெனின் முடிக்கிறார். 

நம் நாட்டில் நடைபெறுகிற தொழிற் சங்கப் போராட்டம், லெனின் குறிப்பிடுகிற கம்யூனிச அரசியல் போராட்டமாக வளர்க்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு, இதை நிறுத்திக் கொள்கிறேன். இங்கே விவாதம் தொடர வேண்டாம். 

அடுத்து 

மூன்றாம் அத்தியாயத்தின் இரண்டாம் பிரிவு, குறிப்பான ருஷ்ய நிலைமைகளைப் பற்றிப் பேசுகிறது, இதுவும் அறிந்து கொள்ள வேண்டியவையே, என்றாலும், சுருக்கமான பார்வைக்குத் தேவையில்லை என்று அடுத்தப் பிரிவுக்குச் செல்வோம். 

அடுத்தப் பிரிவின் தலைப்பு “அரசியல் அம்பலப்படுத்தல்களும் “புரட்சிகரமான நடவடிக்கைக்கான பயிற்சியும்”” இந்தத் தலைப்பே, இதில் என்ன பேசப்படுகிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறது. 

தொழிலாளி வர்க்கத்திடம் இயல்பாய் தோன்றும் தன்னியல்பான உணர்வு, உண்மையான கம்யூனிச அரசியல் உணர்வாக இருக்க முடியாது. கம்யூனிச அரசியல் உணர்வை, தொழிலாளர்களுக்கு, கம்யூனிஸ்டுகள் தான் ஊட்டப்பட வேண்டும். 

கம்யூனிச அரசியல் உணர்வு பெறுவதற்கு, பொருளாதாரவாதிகளைப் போல், தொழிற் சங்கப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளாக்கூடாது. தொழிலாளர்கள் மற்ற மக்களின் நடவடிக்கைகளையும், வர்க்க சக்திகளின் அணிச் சேர்க்கையையும் பார்ப்பதற்குத் தொழிலாளர் திறமை பெற வேண்டும் இதற்குக் கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும். 

கம்யூனிச “திறமை” பெறுவதற்கு லெனின் வழிகாட்டுகிறார். அதைப் பார்ப்போம். 

சிறந்த கம்யூனிஸ்ட் ஆவதற்கு, நிலப்பிரபு, புரோகிதன், உயர்நிலை அரசாங்க அதிகாரி, விவசாயி, மாணவன், நாடோடி, ஆகியோர்களின் பொருளாதார இயல்பு பற்றியும், தம் மனத்தில் ஒரு தெளிவான சித்திரத்தை தொழிலாளிகள் பெற வேண்டும். 

இந்த “தெளிவான சித்திரத்தை” எந்தப் புத்தகங்களில் இருந்து பெற முடியாது என்று லெனின் கூறுகிறார். சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி சென்று பார்க்க வேண்டும். 

அப்போது தான், தொழிலாளி, தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார். அப்படி அறியும் போது தான், ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும் என்கிற, அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார். 

கம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட் பலவற்றை அலசி ஆராய வேண்டி இருக்கிறது. இந்தப் பொருளாதாரவாதிகள், அதாவது தொழிற் சங்கவாதிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால், அது தொழிலாளர்களின் உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்து கொண்டது தான். அதாவது தொழிலாளர்களின் சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான். 

இத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச சிந்தனை உள்ளவராக மாற்றுகிற முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத் தக்க பலன்களை மட்டும் கோருகிற கோரிக்கைகளை, சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான். 

இத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள் விரும்புவர்கள். அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும். 

தங்களது உடனடிப் பிரச்சினைகளுக்குத் தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் போன்ற போராட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்வர். இதனை அவர்களின் அனுபவத்தில் இருந்தே கற்றுள்ளனர். அவர்கள் கற்க வேண்டியது சோஷலிசம் தான். அதனைத் தான் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளிடம் எதிர் பார்க்கின்றனர். 

பொருளாதாரவாதிகளான கம்யூனிஸ்டுகளைப் பார்த்து, அதாவது தொழிற்சங்கவாதத்தில் அகப்பட்டுள்ள, கம்யூனிஸ்டுகளைப் பார்த்துத் தொழிலாளர்கள் கூறுவதை, லெனின் படிம்பிடித்துக் காட்டியுள்ளார்.


லெனின்:- “தொட்டறியத்தக்க விளைவுகளை அளிக்கக்கூடியதாயுள்ள ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தொழிலாளிகளாகிய எங்களிடையே நீங்கள் தூண்டிவிட விரும்பும் “நடவடிக்கையை'' நாங்கள் ஏற்கெனவே செயலில்காட்டி வருகிறோம்; மிக அடிக்கடி அறிவுஜீவிகளின் எந்த உதவியும் இல்லாமலே எங்களுடைய அன்றாட, வரம்புக்குறுக்கமுள்ள தொழிற்சங்க வேலையில் இந்த ஸ்தூலமான கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, ''பொருளாதார வகைப்பட்ட” அரசியல் எனும் நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டப்பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல; மற்றவர்கள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்;

 

அரசியல் வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் விபரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம், ஒவ்வொரு அரசியல் நிகழ்ச்சியிலும் தீவிரமாகக் கலந்து கொள்ள விரும்புகிறோம். இதை நாங்கள் செய்வதற்கு, அறிவுஜீவிகள் எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக்கொண்டு எங்களுக்கு இன்னமும் தெரியாமலே இருக்கும் - எங்கள் தொழிற்சாலை அனுபவத்திலிருந்தோ, ''பொருளாதார வகைப்பட்ட" அனுபவத்திலிருந்தோ நாங்கள் என்றைக்கும் தெரிந்து கொள்ளமுடியாததாக இருக்கும் - விஷயத்தைப்பற்றி, அதாவது அரசியல் அறிவு பற்றி எங்களிடம் அதிகமாகப் பேசவேண்டும்.


அறிவுஜீவிகளாகிய நீங்கள் இவ்வறிவைப் பெறமுடியும்; இதுவரை செய்ததை விட நூறு மடங்காக, ஆயிரம் மடங்காக அவ்வறிவை எங்களிடம் கொணர்வது உங்கள் கடமையாகும்; விவாதங்கள், குறு நூல்கள், கட்டுரைகள் (அவை மிக அடிக்கடி சலிப்பூட்டுவதாயுள்ளன, உடைத்துச் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்) வடிவத்தில் அதை எங்களுக்குக் கொணர்வது மட்டுமின்றி நமது அரசாங்கமும் நமது ஆளும் வர்க்கங்களும் இந்த வினாடியில் எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிய எடுப்பான அம்பலப்படுத்தல்கள் வடிவத்திலே தான் கொண்டுவரவேண்டும்.


இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், “உழைக்கும் மக்களின் நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது" பற்றிய பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதை விட எவ்வளவோ துடிப்புடன் செயலாற்றி வருகிறோம், “தொட்டறியத்தக்க பலன்கள்" எதையும் அளிக்கிறதாயில்லாத கோரிக்கைகளையுங்கூடப் பகிரங்கமான தெருப்போர் மூலமாக நாங்கள் ஆதரிக்க முடியும்!


எங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில், நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.


கனவான்களே, தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்!”

தொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.


தொட்டறியத்தக்க பலன்களை, பெறுவதற்கான கோரிக்கைகளை, முன்வைப்பதற்கு எங்களுக்குத் தெரியும்.


அதை நாங்கள் ஏற்கெனவே செயலில் காட்டி வருகிறோம். இதற்குக் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் தேவைப்படவில்லை.


இப்படிப்பட்ட நடவடிக்கை எங்களுக்குப் போதாது, பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற, நீர்த்துப்போன கஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,


அறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும். இதையே நாங்கள் விரும்புகிறோம்.


அதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு, எங்களுக்கு இன்னமும் தெரியாமல் இருக்கும், எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும், பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத, கம்யூனிச அரசியலை அதிகமாகப் பேச வேண்டும்.


கம்யூனிஸ்ட்டான, நீங்கள் இவ்வறிவை பெற முடியும், இதுவரை செய்ததைக் காட்டிலும், நூறு மடங்காக, ஆயிரம் மடங்காகக் கம்யூனிச அறிவை எங்களிடம் கொண்டுவர வேண்டியது உங்களது கடமை.


இக்கடமையைச் செய்வதில் மேலும் ஆர்வம் காட்டுங்கள், உழைக்கும் மக்களின் நடவடிக்கைகளை உயர்த்துவது என்கிற பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைக்கிறதைவிட நாங்கள் சிறப்பாக, தொழிற் சங்கத்தில் செயலாற்றி வருகிறோம்.


தொட்டறியத்தக்க பலன்களைக் கடந்து, தொழிலாளர்களது நடவடிக்கையை “உயர்த்தும்” தகுதி உங்களுக்கு இல்லை. ஏன் என்றால் நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் அறவே இல்லை. 

லெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில் இருக்கிறது. மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது. 

இதன் முக்கியத்துவத்தைக் கருதியே கடுமையான வார்த்தைகளை லெனின் பயன்படுத்தி உள்ளார். இதனைப் படித்துக் கம்யூனிஸ்டுகள் தெளிவு பெறவில்லை என்றால், அவர்கள் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் நிலையில் இருந்து விலகிவிடுவர். தொழிலாளர்களுக்குப் பயன்பாடாது போய்விடுவர். மொத்தத்தில் அவர்கள், கம்யூனிச அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவர். 

அடுத்தப் உட்பிரிவின் தலைப்பு, “பொருளாதாரவாதத்துக்கும் பயங்காவாதத்துக்கும் பொதுவாக இருப்பது என்ன?” 

இடதுசாரிகளிடையே காணப்படும் வலது திரிபு - இடது விலகல் ஆகிய இரண்டையும் பற்றி லெனின் பேசுகிறார். 

பொருளாதாரவாதிகளுக்கும் பயங்காவாதிகளுக்கும் - தன்னியல்புக்கு அடிபணிவது எனும் பொதுவான வேர் இருப்பதாக லெனின் குறிப்பிடுகிறார். 

பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் தன்னியல்பின் வெவ்வேறு கோடிகளை வழிபடுகின்றனர். 

பொருளாதாரவாதிகள் தொழிற்சங்க இயக்கத்தின் தன்னியல்பை வழிபடுகின்றனர். 

அடுத்து பயங்கரவாதிகளைப் பற்றி லெனின்:- 

“புரட்சி இயக்கத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைப்பதற்கு - சக்தியோ, வாய்ப்போ, திறமையோ இல்லாத அறிவுஜீவிகளின் ஆவேசமான வெஞ்சினத்தின் “தன்னியல்பை” பயங்கரவாதிகள் வழிபடுகின்றனர். புரட்சிகர இயக்கத்தையும் - தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் இணைத்திட முடியும் என்கிற நம்பிக்கை இழந்துவிட்டவர்களுக்கு அல்லது நம்பிக்கை இல்லாதவர்களுக்குப் பயங்கரவாதத்தைத் தவிர வேறு பாதை தேடிக் கொள்வதில் கஷ்டமாக இருக்கிறது.” 

இங்கே லெனின் கூறுவது என்னவென்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் என்று கூறிக் கொள்கிற, சாகசவாத கண்ணோட்டம் கொண்ட கம்யூனிஸ்டுகள், சட்ட வழியிலான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, திறமை இல்லாது இருப்பதையே லெனின் குறிப்பிடுகின்றார். இது இடது விலகல், மற்றொன்று புரட்சிகரப் போராட்டத்தை மறந்துவிட்ட வலது திரிபு. இந்த இரண்டையும் லெனின் இங்கே விமர்சிக்கிறார். இந்த இரண்டு தன்னியல்புகளுக்கு மாறானது கம்யூனிச அரசியல் உணர்வு. 

தன்னியல்பைக் கடந்து அனைத்தையும் - அரசியலாக்கத் தெரிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். தன்னியல்பியல் முடங்கிப் போகாமல், தன்னியல்பை முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்த்தெடுக்கும் அரசியலை பின்பவற்றுபவர்கள் கம்யூனிஸ்டுகள். 

பயங்கரவாதிகளும், பொருளாதாரவாதிகளும் மக்களின் புரட்சி நடவடிக்கையைக் குறைந்து மதிப்பிடுகின்றனர். 

அரசியல் கிளர்ச்சியிலும், அரசியல் அம்பலப்படுத்தல்களை ஒழுங்கமைப்பதிலும் தம் சொந்த நடவடிக்கையை வளர்த்துக் கொள்வதிலும் பொருளாதாரவாதிகளும் சரி, பயங்பகரவாதிகளும் சரி கவனம் செலுத்துவதில் தவறுசெய்கின்றனர். 

சரியான கம்யூனிச அரசியலுக்கு, இந்தப் பொருளாதாரவாதமும், பயங்கரவாதமும் மாறானது மட்டுமல்ல எதிரானதும் கூட. 

அடுத்தப் பிரிவின் தலைப்பு “ஜனநாயகத்துக்கு முன்னணிப் போராளி தொழிலாளி வர்க்கம்.” 

தொழிலாளி வர்க்கமே புரட்சிக்கு முன்னணிப் போராளியாகும். 

அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கிற, கம்யூனிஸ்டுகள் எப்படிப்பட்ட பயிற்சி பெற்று இருக்க வேண்டும் என்ற புரிதல் அவசியமானது. 

நமது நாட்டின், இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டால், தொழிலாளர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வுகூடப் பல கம்யூனிஸ்டுகளிடம் காணப்படவில்லை என்பதே உண்மையாகும். இந்த நூலின் முந்திய அத்தியாயத்தில், லெனின் கூறியதை மீண்டும் கவனத்தில் கொள்வோம். 

தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்புணர்வில் அடங்கி இருக்கிறது. இயக்கத்தின் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும், முன்முயற்சி இன்மையிலும் அடங்கி இருக்கிறது. 

இதை யாரும் இதுவரை சந்தேகித்தது இல்லை என்று லெனின் ருஷ்ய நிலைமையை மனதில் கொண்டு கூறியுள்ளார். ஆனால் இங்கே நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள், எதையும் சந்தேகப் படவில்லை என்கிற மோசமான நிலையில் தான் நாம் இருக்கிறோம். 

சுய விமர்சனத்தின் மூலம் இந்த இக்கடான நிலைமைகளைக் கடந்து செல்வோம். சுய விமர்சனமே நமக்குச் சிறந்த வழிகாட்டி. 

தொழிலாளர்களுக்கு, கம்யூனிச வர்க்க அரசியல், பொருளாதாரப் போராட்டத்திற்கு வெளியில் இருந்துதான், தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகியோர்களுக்கு இடையேயுள்ள உறவுகளுக்கு அப்பால், வெளியில் இருந்துதான் வரவேண்டும் என்று லெனின் இந்த நூலில் கூறியுள்ளார். 

ஏன் அப்படி லெனின் கூறுகிறார் என்றால், முழுமையான கம்யூனிச வர்க்க அரசியலைப் பெற வேண்டுமானால், தனிப்பட்ட முதலாளி – தொழிலாளி பிரச்சினையைத் தாண்டி, முதலாளித்துவ உற்பத்தி முறையை அறிந்திருக்க வேண்டும். 

ஆனால் இன்றைய நிலையில், தொழிலாளர்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர், அதனால் தொழிலாளர்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் குடும்பத்தில் இருந்தும், தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் கம்யூனிச அறிவாளிகள் தோன்ற முடியும். 

“கம்யூனிஸ்ட்” என்று கூறிவிடுவதினாலேயே சிறந்த அரசியல்வாதி என்று கூறிட முடியாது. சமூகத்தில் காணப்படும் அனைத்து அதிப்தியின் வெளிப்பாட்டையும் பயன்படுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு கண்டன ஆர்ப்பாட்டத்தையும், மிகச் சிறிதே ஆயினும் சரி, அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது நம் பணி, என்பதை உணரத் தவறினால், அப்படிப்பட்டவர்களை அரசியல்வாதிகள் என்றோ, கம்யூனிஸ்டுகள் என்றோ கூறிவிட முடியாது என்று லெனின் கூறுகிறார். 

இந்த மூன்றாம் அத்தியாயத்தின், இறுதிப் பிரிவுக்கு வந்துள்ளோம், இந்தப் பிரிவின் தலைப்பு, “மீண்டும் “தூற்றுவோர்” மீண்டும் “மருட்டுவோர்”” 

தொழிலாளி வர்க்க இயக்கத்தை - முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருவியாக மாற்றுவதற்கு, மறைமுகமாக வேலை செய்பவர்களை,- லெனின் குற்றஞ்சாட்டும் போது, பொருளாதாரவாதிகள், “மீண்டும் “தூற்றுவோர்” மீண்டும் “மருட்டுவோர்”” என்று பதிலளித்துள்ளனர். 

தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க அரசியல் என்பது முதலாளித்துவப் போக்கான அரசியலே ஆகும். 

அரசியல் போராட்டத்தில், ஏன் அரசியல் புரட்சியிலுங்கூட, தொழிலாளி வர்க்கம் கலந்து கொள்கிறது என்பதனால் மட்டும், தன்னளவில் அதன் அரசியல், கம்யூனிச அரசியலாக ஆகிவிடாது. 

இதை மறுக்கத் தைரியம் உண்டா? என்று பொருளாதாரவாதிகளைப் பார்த்து லெனின் கேட்கிறார். 

நாமும் நமது நாட்டு பொருளாதாரவாதிகளை - தொழிற்சங்கவாதிகளைப் பார்த்து லெனினைப் போலக் கேட்போம். அவர்களுக்கு மறுக்கிற தைரியம் இருக்கிறதா? என்று பார்ப்போம். 

இந்த வகுப்பு ஒரு சுருக்கமே, இதனை முழுமையாக “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை எடுத்துப் படிக்க வேண்டும். அப்போது தான், லெனின் நேரடியாக என்ன கூறியுள்ளார், எப்படி எல்லாம் கூறியுள்ளார், என்பதை அறிய முடியும். எந்த அறிமுகமும், சாரமும் அந்த நூலை முழுமையாகப் படிப்பதற்கு உதவுவதற்கே, இந்தச் சுருக்கமே நூலாகாது. சுருக்கம் என்பது நூலை முழுமையாகப் படிக்கத் தூண்டுவதற்கே. 

லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை நேரடியாகப் படிக்க வேண்டும். அப்போதுதான், நான் சுருக்கமாகக் கூறியது, எந்த வகையில் சரியானது என்பது நேரடியாக அறிய முடியும்.

 லெனின் வழிகாட்டுதல்படி செல்வோம், வெல்வோம்.

 

No comments:

Post a Comment