Sunday 26 March 2017

ஆதிசங்கரர் எழுதிய மநீஷா பஞ்சகம்

ஆசிரியர் = ஆதிசங்கரர்
விலை = ரூ.3/-
விளக்கவுரை = ஸ்வாமி சின்மயானந்தர்
தமிழாக்கம் = ஸ்ரீமதி. காயத்ரீ பாலசுப்ரமணியன், பிர.ப்ரணிபாத சைதன்ய
வெளியீடு = சென்ட்ரல் சின்மயா மிஷன் ட்ரஸ்ட்
            2, 13வது அவென்யூ ஹரிங்கடன் சாலை,
சேத்துப்பட்டு,
சென்னை 600031.


“மநீஷா பஞ்சகம்” என்ற நூலையொட்டி மரபுவழிக் கதை இருக்கிறது. ஆதிசங்கரர் வடஇந்தியாவிற்குச் சென்றிருந்தபோது காசி நகரில் இது நடந்தாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் தம் சீடர்களுடன் கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதரை வணங்குவதற்குக் கோவிலை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் அழுக்கடைந்த தோற்றத்துடன் ஒரு சண்டாலன், தன்பிழைப்பிற்காக இசைக்கருவியை வைத்துகொண்டு இசைத்த வண்ணம் வந்தார். அப்போது ஆதிசங்கரர் எதிரில் வந்த அவரை “விலகு, விலகு” என்று கூறினார். அதற்கு அந்தச் சண்டாலன் கூறினார்.

“சிறந்த சந்யாசியே, உணவால் உண்டான சரீரத்திலிருந்து, உணவாலான சரீரத்தையா? அல்லது சைதன்யத்தில் இருந்து சைதன்யத்தைத்தானா? எதை விலகுவிலகு என்று தூரத்தில் விலக்குவதற்கு விரும்புகிறாய் சொல்.” (1)

அந்தச் சண்டாலன் ஞானம் பெற்ற சந்யாசியான ஆதிசங்கரரைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார். ஒரு சரீரத்திலிருந்து மற்றோர் சரீரத்தை விலகிப் போகச் சொல்கிறாயா? அல்லது ஆத்மாவிலிருந்து ஆத்மாவை விலகச்சொல்கிறாயா?. இருவருக்கும் உணவால் உண்டான சரீரமே இருக்கிறது. எங்கும் நிறைந்த ஆத்மாவே இருவரிடமும் இருக்கிறபடியால் விலகு என்று சொன்னது எதனை என்று கேட்கிறார்.

இதற்கு அடுத்தப்பாடல், இதனையே நேரடியாகத் தெளிவாகக் கேள்வி வைக்கப்படுகிறது.

“கங்கை நீரில் மற்றும் சேரியில் காணப்படும் குட்டையில் உள்ள நீரில் பிரதிபலிக்கும் சூரியனிடம் வேறுபாடு உண்டா? மேலும் பொற்குடத்தில் மற்றும் மண்குடத்தில் உள்ளேயுள்ள ஆகாயத்திடம் வேறுபாடு உண்டா? எண்ண அலைகளற்ற தன்னிலைபெற்ற ஆனந்தமயமான ஞானக் கடலில் ஆத்மவிஷயத்தில், இவன் பண்டிதன், இவன் புலயன் என்ற இந்த மாபெரும் விபரீத மனமயக்கம் ஏன்?” (2)

சரீர தொடர்புள்ள சம்சாரிக்கே வேறுபாடுகள் உண்டு, ஞானம் பெற்ற சன்யாசிக்கு இந்த வேறுபாடு கிடையாது, அப்படியிருக்க இந்த மாபெரும் விபரீர மனமயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்படுகிறது.

சந்யாசிக்கு, பண்டிதன் என்றோ? புலையன் என்றோ? வேறுபாடு இருக்கிறதா? என்ற கேள்விக்கு ஐந்து பாடல்களால் பதிலளிக்கப்படுகிறது.

“நனவு, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளில் தெளிவாக எந்த ஒரு ஞானம் உண்டாகிறதோ, பிரம்மா முதல் எறும்பு வரையிலானவற்றின் உடலில் நெருங்கி உலகத்தின் சாட்சியாக எந்த ஞானம் உள்ளதோ அதுதான் நான், “காணும் பொருளல்ல” என்று உறுதியான ஞானம் எவனுக்கு உள்ளதோ அவன் சண்டாளராக இருந்தாலென்ன பிராமணராக இருந்தாலென்ன அவனே குரு என்பதே என்னுடைய எண்ணம்.” (1)

இந்த நூலை வைத்து, ஆதிசங்கரர் வர்ணாசிரமத்தை ஆதிரிக்கவில்லை, இதனை மதவாதிகள் மறைத்துவிட்டனர் என்பதாகக் கருத்து தெவிக்கின்றனர். ஆனால் இது தவறாகும். வர்ணசிரம தர்மம் தேவையில்லை என்று எந்த இடத்திலும் அவர் கூறவில்லை. ஞானம் ஏற்படும்வரை உலகத்தில் வேறுபாடுகள் இருக்கும். சம்சாரத்தில் ஈடுபட்டுள்ள கிரகஸ்தன், சுயதர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றே எழுதியிருக்கிறார். “உபதேச பஞ்சகம்” என்ற பிரகரணத்தில், வேதமானது தினந்தோறும் அத்யயனம் செய்யப்பட வேண்டும். அதில் கூறப்பட்ட நித்யநைமித்திக கர்மாவானது நன்கு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று கிரகஸ்தனுக்கு உரியதை வலியுறுத்தப்பட்டுள்ளது.

“விவேக சூடாமணி”யின் 94வது பாடலில் (சில பதிப்பில் 91) பிறப்பு, இறப்பு முதலிய இயல்புகளும், பருமன் முதலிய பல மாறுதல்களும், குழந்தை முதலான நிலைகளும் வர்ணாச்ரமாதி நியமங்களும் எல்லாம் ஸ்தூல சரீரத்துடையவையே, என்று சரீரத்தைக் கொண்டு செயற்படுகிற சம்சாரத்தில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் ஞானம் பெறுவதற்கு முதலில் சித்தசுத்தி (மனத்தூய்மை) பெற வேண்டும். அதற்குச் சுயதர்மத்தை (பிறப்பால் உருவாகும் தர்மம்- சாதிய தர்மம்) கடைப்பிடிக்கும்படி ஆதிசங்கரர் கூறியுள்ளார்.

“வேதாந்த பிரமாணத்தில் சஞ்சலமற்ற திடநம்பிக்கை உள்ளவனுக்குச் சுயதர்மத்தை கடைப்பிடிப்பதும் அதனால் அந்தக்கரணச் சுத்தியும் ஏற்படுகின்றது. மனத்தூய்மை பெற்ற அவனுக்கு இறை அனுபூதி கிடைக்கிறது. அதுவே சம்சாரத்தை நாசயடையச் செய்கிறது.” (148 சில பதிப்பில் 150)

சாம்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பிறப்பால் உருவான் சாதிய தர்மம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே அத்வைத சித்தாந்தியான ஆதிசங்கரரின் கருத்தாகும்.


Thursday 16 March 2017

மார்க்சியம் என்றால் என்ன?

நூலின் தலைப்பு : மார்க்சியம் என்றால் என்ன?  (கேள்வி - பதில்)

ஆசிரியர் : அ.கா.ஈஸ்வரன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2016

பக்கங்கள்: 64

விலை : ரூ.50/-

வெளியீடுபரிசல் புத்தக நிலையம்,
71-A, ராமகிருஷ்ணா மடம் சாலை,
மயிலாப்பூர்,
 சென்னை 600 004
தொடர்புக்கு : 93828 53646 | parisalbooks@gmail.com


மார்க்சியம் என்றால் என்ன?  நூலில் உள்ள முன்னுரை

“மார்க்சியம் ஏற்கெனவே பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்ற கூக்குரல் மார்க்சியம் தோன்றியது முதலாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தனிச்சொத்துடைமையின் அழிவுவரை இந்தக் கூக்குரல் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். தனிச்சொத்து முழுமையும் அழிந்து, மறைந்து போவதற்கு மார்க்சியம் வழிகாட்டியாக இருக்கும். தனிச்சொத்தின் உடைமையாளர்களும், அதன் அடிவருடியான அறிவுத்துறையினர்களும் கூக்குரலை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருப்பர். தனிச்சொத்துடைமையின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மார்க்சியம் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டும். அவ்வழியில் சென்று சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகே இந்தக் கூக்குரல் முழுமையாக முடிவுக்கு வரும்.

மார்க்சியம் நமக்கு எந்த வகையில் வழிகாட்டுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இந்த நூல் தொடக்கமாக இருக்கும். எதனையும் முழுமையாக அறிவதற்கு ஒரு தொடக்கம் தேவை. தொடக்கம் எளிமையாக இருக்க வேண்டும், இந்த எளிமையில் இருந்து தான் மேலானவற்றை முழுமையாக அறிந்திட முடியும். இந்த நூல், மார்க்சியம் என்றால் என்ன? என்பதை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. எளிமைக்காகவே கேள்வி பதில் (135) வடிவம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் மார்க்சியம் பேசுகின்ற தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞானக் கம்யூனிசம் ஆகியவைகளை அறிந்து கொள்வதற்கான கலைச்சொற்களை அறிமுகம் செய்து விளக்குகிறது. இந்த விளக்கத்தின் தெளிவு, மார்க்சிய நூல்களைப் படித்தறிவதில் உள்ள சிரமத்தைக் குறைக்கும். இந்த நூல் கேள்வி பதில் வடிவில் இருப்பதால் மிகமிக எளிமையானது என்று நினைத்திடக் கூடாது, திரும்பத்திரும்பப் படித்தறிய வேண்டும். படிக்கும் போது ஏற்படுகிற சந்தேகங்களைப் பிற தோழர்களின் உதவியை நாட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கிற வகுப்புகள் புரிதலை முழுமைப்படுத்தும்.

மார்க்சிய அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோர்களின் நூல்கள் பெரும் பயனளிக்கும். அவ்வகையான அறிமுக நூல்களை ஒவ்வொரு பிரிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்று விரிவாக இறுதியில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இதனைப் படித்துவிட்டு அவர்களின் விரிவான நூல்களைப் படிக்கத் தொடங்கலாம். இதற்கு இணையாக இந்த ஐவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தறிவது அவசியமானதாகும். ஏன் என்றால் அவர்களின் வாழ்க்கையின் மூலம், ஒரு கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கையை அறிவதோடு, அவர்கள் எழுதிய நூல்கள் எப்போது, எதற்காக எழுதப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. ஒரு நூலைப் படிப்பதற்கு அந்நூல் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதை அறிந்து படிக்கத் தொடங்கும் போது அந்த நூலில் காணப்படும் பொருள் எளிதில் பிடிபடுகிறது.

தத்துவப் பகுதியில் கேள்விக்கு பதிலாக, நான் எழுதிய “மார்க்சிய தத்துவம்” என்ற நூலில் இருப்பவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மார்க்சிய அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கான நூல்களையே, தற்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். மார்க்சிய நூல்களை சுமார் 30 ஆண்டுகளாக படித்ததின் அடிப்படையில் எழுதப்படுகிறது. இதுவெறும் நூலறிவாகக் கொள்ள முடியாது. ஏன் என்றால் மார்க்சியம் என்பது வெறும் படிப்பறிவு கிடையாது. மார்க்சியப் படிப்பறிவு என்பதே எதார்த்த உலகோடு ஒப்பிட்டு அறிவதாகும். இதனை லெனின் தமது “இளைஞர் கழகங்களின் பணிகள்” என்ற கட்டுரையில் தெளிவாக்குகிறார்.

கம்யூனிசமானது குருட்டு மனப்பாடமாய்க் கற்க வேண்டிய ஒன்றாய் அமையாது, நேரடியாய் நீங்களே சிந்தித்துப் பார்த்த ஒன்றாய், தற்காலக் கல்வியின் கண்ணோட்டத்தில் இருந்து  எழும் தவிர்க்க முடியாத முடிவுகள் உள்ளடங்கிய ஒன்றாய் அமையும்படி, இந்த ஒட்டுமொத்த மனித குல அறிவைப் பெற வேண்டும்.
வளர்ந்து வரும் இளந் தலைமுறையினர் எப்படிக் கம்யூனிசம் கற்றறிய வேண்டும் என்கிற கேள்விக்கு இதுவே பதில்.

இவர்கள் தமது படிப்பு, பயிற்சி, கல்வி இவற்றின் ஒவ்வொரு படியையும், சுரண்டலாளர்களது பழைய சமுதாயத்தை எதிர்த்துப் பாட்டாளிகளும் உழைப்பாளி மக்களும் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதன் மூலமே கம்யூனிசத்தைக் கற்றறிய முடிவும்.

       மார்க்சிய நூல்களைக் குருட்டு மனப்பாடமாகக் கொள்ளாமல், அதனை நடைமுறையோடு இணைத்து, படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் படித்தறிந்த மார்க்சியத்தின் அடிப்படைகள், நடைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும்.

ருஷ்ய நவம்பர் புரட்சியின் நூற்றாண்டான இந்த ஆண்டு முற்போக்கு இளைஞர்களை மார்க்சியத்தின் பக்கம் ஈர்ப்போம். அவ்விளைஞர்கள் மார்க்சிய அடிப்படைகளைப் படித்தறிந்து சிறந்த கம்யூனிஸ்ட்டாகச் செயற்பட உதவுவோம். கம்யூனிஸ்ட் கட்சி என்பது உழைக்கும் தொழிலாளர்களின் முன்னணிப் படையாகும், அப்படைக்கு மார்க்சியம் வழியாட்டியாகும். சிறந்த கம்யூனிஸ்டாகச் செயற்பட இந்த நூல் அவர்களுக்குத் தொடக்க வழிகாட்டியாக அமையும்.

       இந்நூலை பதிப்பதற்குப் பரிசல் சிவ.செந்தில்நாதனை அணுகிய போது, உடனே பதிப்பிக்க எடுத்துக் கொண்டு, தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களின் அணிந்துரையையும் பெற்றுக் கொள்வோம் என்று கூறி பதிப்பு வேலையைத் தொடங்கிவிட்டார். அவருக்கும், அருமையான அணிந்துரை வழங்கிய தோழர் வே.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


.கா.ஈஸ்வரன்                             மின்னஞ்சல்: marxistwriter@gmail.com
சென்னை                                  அலைபேசி எண்: 9283275513-9884092972