"ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள்" இந்த குறிப்பை மார்க்ஸ் 1845ஆம் ஆண்டு பிரஸ்ஸல்சில் வசந்த காலத்தில் எழுதினார். ஃபாயர்பாக் மற்றும்
அவர்களின் முன்னோடிகளின் பொருள்முதல்வாதத்தில் காணப்படும் செயலற்ற சிந்திப்புத் தன்மையிலான
அணுகுமுறையில் காணப்படும் குறைபாட்டை சுட்டிக்காட்டினார். உலகை
அறிவதற்கும் அதனை மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற புரட்சிகர நடைமுறையின் பாத்திரத்தை
வலியுறுத்தினார். பின்னால் விரிவாக எழுதுவதற்காக அவசரகதியில்
எழுதிவைத்த குறிப்பே இந்த ஆய்வுரை. இது பதிப்பிக்கும் நோக்கத்திலான வடிவத்தில்
இல்லை. 1844-1846 வரையிலான மார்க்சின் கையெழுத்துப்படியில் எழுதிவைக்கப்பட்டிருந்தது.
இவ்வாய்வுரை
ஃபாயர்பாக்கைப் பற்றி விரித்து எழுதுவதற்காக மார்க்சால் எழுதப்பட்ட பதினோரு கருத்துக்
குறிப்பாகும். இதனை மார்க்ஸ் தமது காலத்தில் எழுதி முடிக்கவில்லை. எங்கெல்ஸ்
“லூத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின்
முடிவும்” என்ற நூலின் முன்னுரையில் எழுதினார் ".. புதிய உலகப் பார்வையில் ஒளிமயமான கருவிதையைத் தாங்கி நிற்கும் முதல் ஆவணம்
என்ற வகையில் அவை அளப்பரிய மதிப்பு உள்ளவையாகும்"
உண்மை
நிலைமைகளை மாற்றுவதற்கு தத்துவ விமர்சனம் மட்டும் போதாது என்பதை மார்க்ஸ் வலியுறுத்தினார். சிந்தனையை
மாற்றுவதற்கு இருத்தலை மாற்றுவது அவசியமாகும். புரட்சிகரமான செயற்பாட்டினால்தான், மனிதன் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் அறிந்து கொள்கிறான், வளர்ச்சியின்
தன்மையை உணர்ந்து அதனோடு மாறுகிறான், சமூகத்தை மாற்றுகிறான்.
இந்த
ஆய்வுரைகள் இதனையே வெளிப்படுத்துகிறது.
ஃபாயர்பாக்கின் பொருள்முதல்வாதம் உட்பட இதுவரை இருந்து
வந்திருக்கும் எல்லாப் பொருள்முதல்வாதத்தின் பிரதானமான குறைபாட்டை முதல் கருத்துரையில் கூறுகிறார் மார்க்ஸ். புலனுணர்வு என்பது புறநிலையின் வடிவமாக மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மனிதப் புலனுணர்வுள்ள நடிவடிக்கை என்பதை நடைமுறையாகக் கொள்ளவில்லை. அதாவது அகநிலையில் செயற்படுகின்ற நடவடிக்கையைக் கணக்கில் கொள்ளவில்லை. பழைய பொருள்முதல்வாதம் இதனைத் தவறவிட்டதனால் இந்தப் பொருள்முதல்வாதத்தின் செயலாக்கமுள்ள பகுதியைக் கருத்துமுதல்வாதம் வளர்க்க நேரிட்டது.
உண்மையில் கருத்துமுதல்வாதம் எதார்த்தமான புலனுணர்வுள்ள செயல்பாட்டினை உள்ளபடியே அறியாமல் அருவமாக (abstractly) விளக்கியது.
ஃபாயர்பாக் மனிதனது செயல்பாட்டை புறநிலைச் செயல்பாடாக கருத்தில் கொள்ளவில்லை. "கிறிஸ்துவ மதத்தின் சாரம்" என்னும் நூலில்,
கோட்பாட்டு மனப்போக்கை (theoritical attitude) மட்டுமே மெய்யான மனித மனப்போக்காகக் (human attitude) கருதுகிறார். நடைமுறை என்பது அதன் அசிங்கமான–யூதத் தோற்றவடிவத்தில்
(dirty-judaical
manifestation) மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. எனவே, “புரட்சிகரமான” செயல்பாடு,
“நடைமுறை–முக்கியத்துவச்” செயல்பாடு என்பனவற்றின் முக்கியத்துவத்தை அவர் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
இந்த ஆய்வுரைகளில் மனிதனின் நடைமுறை செயற்பாடான, அகநிலைப் போக்கின்
முக்கியத்துவத்தை மார்க்ஸ் விளக்குகிறார். இரண்டாவது கருத்துரையில், நடைமுறையில் மனிதன் தன்னுடைய சிந்தனையின் உண்மையை
நிரூபிக்க வேண்டும்.
நடைமுறையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிந்தனையின் எதார்த்தத் தன்மை அல்லது எதார்த்தமற்ற தன்மை பற்றிய விவாதம் முற்றிலும் ஓர் ஏட்டறிவுவாதப் பிரச்சினை (scholastic question) ஆகும் என்கிறார் மார்க்ஸ்.
மூன்றாம் கருத்துரையில் கூறியதை புரிந்து கொள்வதற்கு "ஜெர்மன் சித்தாந்தம்" நூல் உதவுகிறது.
அதில் மார்க்ஸ் கூறுகிறார், "எந்தளவுக்கு மனிதர்கள் புறநிகழ்வுகளை உருவாக்குகிறார்களோ அதே அளவுக்குப் புறநிகழ்வுகள் மனிதர்களை உருவாக்குகின்றன.." இங்கு புறநிலைக்கும் அகநிலைக்குமான இடைத்தொடர்பை குறிப்பிடுகிறார். புறநிலையை விட சிந்தனையே மேம்பட்டதாகக்
கருதுவது ஓவன் போன்றோர்களின் கருத்தாகும். ஆனால், சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நடைபெறுகின்ற புரட்சிகரமான நிகழ்வு என்பதே பகுத்தறிவானதாகும். இப்படி இணைத்துப் புரிந்து கொண்டால் தான் இந்த சிறுகுறிப்பு நமக்கு விளங்கும்.
மூன்றாம் கருத்துரை:-
"மனிதர்கள்தாம் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள் என்பதையும், கற்பிக்கிறவனுக்கே கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் மறக்கிறது. எனவே, இப்போதனை சமுதாயத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதில் தவிர்க்க முடியாதவாறு வந்து சேர்கிறது. அவ்விரண்டு பகுதிகளில் ஒன்று சமுதாயத்துக்கு மேம்பட்டதாக உள்ளது. (எடுத்துக்காட்டாக, ராபர்ட் ஓவன் நூல்).சூழ்நிலைமைகளின் மாற்றமும் மனிதச் செயல்பாடும் சேர்ந்தே நிகழ்வதை (coincidence), நடைமுறையைப் புரட்சிகரமயமாக்கல் என்பதாக மட்டுமே கருதிக் கொள்ள முடியும், பகுத்தறிவு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்."
இந்தப் பகுத்தறிவானதைப் புரிந்து கொள்ளாமையினாலும், புலனுணர்வை நடைமுறை ரீதியான, மனிதப்–புலனுணர்வுச்
செயல்பாடாக ஃபாயர்பாக் கருதாமையினாலும், அவர் அருவமான சிந்தனையுடன் (abstract thinking) திருப்தி பெறாமல் புலனுணர்வுள்ள ஆழ்சிந்தனைக்கு
(sensuous contemplation) வேண்டுகோள் விடுக்கிறார். (ஐந்தாம் கருத்துரை).
மனித சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட நபரிலும் உள்ளார்ந்து இருக்கின்ற அருவமான விஷயம் அல்ல. அதன் எதார்த்த நிலையில் அது சமுதாய உறவுகளின் கூட்டுத் தொகுப்பே ஆகும். (ஆறாம் கருத்துரை)
நடைமுறை என்பதை சமூக உறவுகளின் கூட்டுத் தொகுப்பாய் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே நவீனப் பொருள்முதல்வாதமாகும். இது சமுதாய வாழ்க்கை என்பது சாராம்சமாக நடைமுறை ரீதியானதாக கொள்கிறது.
தம்முடைய பகுத்தறிவு பூர்வமான தீர்வினை, மனித நடைமுறையிலும், இந்த நடைமுறையின் போது
ஏற்படுகின்ற புரிதலிலும் காண்கின்றன. (எட்டாம் கருத்துரை)
பழைய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை “குடிமைச்” சமுதாயம் (“civil” society) ஆவதையும், புதிய பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலை மனிதச்
சமுதாயம் (human society) அல்லது சமுதாய மயமாக்கப்பட்ட மனிதகுலம் (socialised humanity) ஆவதையும். இங்கு குறிக்கிறது சமூகமயமாதல் வலியுறுத்துகிறது. குடிமைச் சமூகம் என்பது
சமூக மேற்கட்டமைப்பை மாற்றி அமைப்பதையும், மனிதச் சமுதாயம் என்பது அடித்தளத்திலும் மேற்கட்டமைப்பிலும்
ஏற்படுத்தும் மாற்றங்களையும் குறிப்பிடுகிறது. (பத்தாம் கருத்துரை)
மேலே
காணும் கருத்துரைகளின் அடிப்படையில்தான் இறுதியில் கூறப்பட்ட பதினோராம் கருத்துரையைப்
புரிந்துகொள்ள வேண்டும்.
"தத்துவவாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி (interpreted) மட்டுமே உள்ளனர், ஆனாலும், விஷயம் என்னவோ அதை மாற்றி (change) அமைப்பதாகும்."
இதுவரையிலான தத்துவப் போக்குகள் உலகத்தைப் பற்றி கருத்துரைப்பதிலும், கருத்துரைக்கப்பட்ட நிலையிலிருந்து தம்மால் உருவாக்கப்பட்ட கருத்துரையின்படி மாற்றவும் முயற்சித்தது. ஆனால் மார்க்ஸ் உலகத்தை மாற்றுவதே தத்துவத்தின் பணியாகும் என்பதை வலியுறுத்துகிறார்.
ஆனால் இதனை பொருள்முதல்வாதப் பார்வையில் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த பதினொன்றாம் கருத்துரையை மட்டும் படித்துவிட்டு "உலகத்தை மாற்றி அமைக்க வேண்டும்"
என்பதை நேர்
பொருளில் சிலர் புரிந்து கொள்கின்றனர்.
ஆனால், மேலே
"ஜெர்மன் சித்தாந்தம்"
நூலில் குறிப்பிட்டது போல்,
மனிதர்களால் புறநிகழ்வுகளை உருவாக்கி அந்த புறநிகழ்வுகளால் மனித
செயற்பாட்டை உருவாக்க வேண்டும். மனிதர்கள் சூழ்நிலைமைகளை மாற்றுகிறார்கள், கற்பிக்கிறவனுக்கே
கற்க வேண்டிய தேவை இருக்கிறது என்று
மூன்றாம் கருத்துரையில் மார்க்ஸ் கூறியதையும் நினைவில் கொள்வதே பொருளமுதல்வாதப் பார்வையாகும்.
இதற்கு மாறாகப் பொருள் கொள்வது மார்க்ஸ் எதை எதிர்த்தாரோ அதனை மார்க்சியமாக
தவறாகப் புரிந்து கொண்டதாகிவிடும். அதாவது, சமுதாயத்துக்கு மேம்பட்டதாக நடைமுறையையும்
சிந்தனையும் முன்னிருத்துகிற ஓவன் போன்றோர்களின் கருத்தை மார்க்சியமாகக் கருதுவதில்
போய்முடியும்