Tuesday 10 May 2016

ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் - லெனின் (நூல் அறிமுகம்)

1905ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது காங்கிரசில் ஏற்பட்ட செயற்தந்திரம் (tactics) பற்றிய விவாதத்தின் தொடர்ச்சியாக ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார்.

                இந்நூலில் இரண்டுவித செயற்தந்திரங்கள் பற்றிய விவாதங்கள் அடங்கியிருக்கிறது. ஒன்று போல்ஷிவிக்குகளின் மார்க்சிய புரட்சிகர போக்கு, மற்றொன்று மென்ஷிவிக்குகளின் சந்தர்ப்பவாதப் போக்கு. 1905ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற மென்ஷிவிக்குகளின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட செயற்தந்திரத்தையும் லெனின் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். முன்னுரையில் இந்நூலின் நோக்கத்தை லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.

“ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் செயற்தந்திரத் தீர்மானங்களையும், மாநாட்டின் செயற்தந்திரத் தீர்மானங்களையும் கவனமாகப் பயில்வதும், அவற்றிலேயுள்ள மார்க்சியக் கோட்பாடுகளினின்று வழுவிய திரிபுகள் எவை என்று வரையறுத்துக் கொள்வதும், ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயக பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தூலமான பணிகளைப் பற்றித் தெளிந்த அறிவைப் பெறுவதும் புரட்சிகரமான சமூக-ஜனநாயகவாதிகளின் மிகமிக அவசரமான பணி என்று கருதுகிறோம். இந்தப் பணியின் காரணமாகத்தான் இச்சிறுநூல் எழுதப்பட்டிருக்கிறது.

 

ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சி முழுவதும் எதிர்காலத்தில் முற்றாக ஒன்றுபடுவதற்கு அடிப்படையாக செயற்தந்திர ஒற்றுமைக்குச் சொல்லளவில் இணங்கச் செய்வதோடு நின்று கொள்ளாமல் நடைமுறையில் அதற்கான வழியைச் செப்பனிட விரும்புகிறவர்களுக்கு மார்க்சியக் கோட்பாடுகளின் நிலையிலிருந்து புரட்சியின் படிப்பினைகளின் நிலையிலிருந்து நமது போர்த்தந்திரங்களைச் சோதித்தறிவது அவசியமாகும்.”1

 

இன்றைய நிலையில் ஜனநாயகக் குடியரசின் தேவையை முன்வைக்கிறார்.

 

“ஒருங்கே பாட்டாளி வர்க்கத்தின் உடனடி நலன்கள் என்னும் நோக்கு நிலையிலிருந்தும் மற்றும் “சோஷலிசத்தின் இறுதியான குறிக்கோள்கள்” என்கிற நோக்கு நிலையிலிருந்தும் “முடிந்தவரை ஆக முழுவளவான அரசியல் சுதந்திரம்” தேவைப்படுகிறது என்பதை விளக்குகிறது. மேலும், முழுமையான அரசியல் சுதந்திரத்துக்கு ஜார் எதேச்சதிகார ஆட்சியை ஜனநாயகக் குடியரசு மூலம் மாற்றீடு செய்வது அவசியம், இதை நம் கட்சியின் வேலைத்திட்டம் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறது.

 

காங்கிரஸ் தீர்மானம் ஜனநாயகக் குடியரசு எனும் முழக்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது தர்க்க முறையிலும் சரி, கோட்பாடு முறையிலும் சரி அவசியமாகும். ஏனெனில், பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்தின் முன்னணி வீரன் என்கிற முறையில் முழுமையான சுதந்திரத்தைத்தான் அடைய முயன்று வருகிறது.”2

 

ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையை தெளிவுபடுத்துகிறார்.

 

“ஜனநாயகப் புரட்சியின் வர்க்கத் தன்மையைப் பார்க்காமல்விட்டால் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் முக்கியத்துவம் பற்றிய மதிப்பீடு முழுமையற்றிருக்கும், தவறாகவும் இருக்கும். ஆகவே, புரட்சி முதலாளி வர்க்கத்தின் ஆட்சியைப் பலப்படுத்தும் என்று தீர்மானம் சேர்த்துச் சொல்கிறது. இன்றைய முதலாளித்துவச் சமூக-பொருளாதார அமைப்பு முறையில் இது தவிர்க்க முடியாதது.

 

ஓரளவுக்கு அரசியல் சுதந்திரம் பெற்றிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கத்தின் ஆட்சி பலப்படுவது அதிகாரத்திற்காக அவற்றிடையே கடுமையான போராட்டம் தவிர்க்க முடியாதவாறு நிகழ்வதிலும் “பாட்டாளி வர்க்கத்திடமிருந்து புரட்சிக் காலப் பகுதியில் கிடைத்த ஆதாயங்களைப் பறித்துவிடுவதற்கு” முதலாளித்துவ வர்க்கம் கடுமையான முயற்சிகள் செய்வதிலும் கொண்டு போய்விடும். எனவே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்று அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிச் செல்கிற பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ளார்ந்திருக்கிற புதிய பகைகளையோ அல்லது புதிய போராட்டத்தையோ ஒரு கணமேனும் மறக்கலாகாது.”3

 

                கட்சியின் செயற்தந்திரத்தை அமைப்பதில் லெனின் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு கையாளுகிறார் என்பதை அறிந்திட முடிகிறது. பொருளாதா சூழ்நிலையின் புறநிலையோடு கட்சியின் செயற்தந்திரமான அகநிலைப்போக்கை அமைத்துக் கொள்வதை இங்கே காணலாம்.

 

“ஜார் அரசாங்கத்தை வீழ்த்தும் பிரச்சினையை “ஜனநாயகப் போக்குள்ள” முதலாளித்துவ வர்க்கத்தினர் பின்னணியில் வைக்கின்றனர், ஆனால் நாம் இதை முன்னணிக்குக் கொண்டுவந்து இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்தித்தீர வேண்டும். மேலும், இன்றைய காலப்பகுதியின் புறநிலைகளோடும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின் குறிக்கோள்களோடு பொருந்தும்படியான செயலுக்குரிய வேலைத்திட்டத்தை இப்படிப்பட்ட அரசாங்கத்துக்கு நாம் வரையறுத்துத் தர வேண்டும்.

 

இவ்வேலைத்திட்டம் நம் கட்சியின் முழுமையான குறைந்தபட்ச வேலைத்திட்டமாகும். இது உடனடியான அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றிய வேலைத்திட்டம், ஒரு புறத்தில் இவற்றை இன்றுள்ள சமூக, பொருளாதார உறவுமுறைகளின் அடிப்படையிலேயே முற்றாகக் கைகூடுமாறு செய்ய முடியும், மறுபுறத்தில், அடுத்து முன்னோக்கி அடி எடுத்து வைப்பதற்கு, சோஷலிசத்தைச் சாதிப்பதற்கு, இவை தேவைப்படுகிறன்றன.”4

 

                உடனடி சோஷலிசப் புரட்சியினை நடத்துவது பற்றிய அரை-அராஜகவாதிகளின் கருத்துக்களை லெனின் மறுத்துரைக்கிறார் அவர்களது விமர்சனத்தையும் மறுத்து பதிலளிக்கிறார். அரை-அராஜகவாதிகள் சோஷலிசப் புரட்சியை தள்ளிப்போடுவதாக குற்றம் சாற்றுகின்றனர். சோஷலிசப் புரட்சியைத் தள்ளிப்போடவில்லை, ஜனநாயகக் குடியரசுக்கான பாதை என்கிற ஒரே சாத்தியமான வழியில் முதலடி வைக்கபடுவதாக லெனின் கூறுகிறார். மேலும் கூறுகிறார், அரசியல் ஜனநாயகம் என்னும் பாதையைவிட்டு வேறெந்த வழியிலாவது சோஷலிசத்தை அடைய விரும்புகிறவர்கள் பொருளாதார அர்த்தத்திலும் அரசியல் அர்த்தத்திலும் ஒருங்கே அபத்தமான, பிற்போக்கான முடிவுகளுக்கே தவிர்க்க முடியாமல் வந்தடைகின்றனர் என்று விமர்சிக்கிறார். இதனை புற அக நிலைமைகளின் அடிப்படையில் விளக்குகிறார்.

 

“ருஷ்யாவின் பொருளாதார வளர்ச்சியின் அளவும் (இது ஒரு புறநிலைமை) பாட்டாளி வர்க்கத் திரள்களின் வர்க்க உணர்வின் அளவும் ஒழுங்கமைப்பின் அளவும் (இது புறநிலைமையோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ள அகநிலைமை) தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான முழுமையான விடுதலையை அசாத்தியமாக்குகின்றன. சிறிதும் விஷயமறியாத பேர்வழிகள்தாம் இன்று நிகழ்ந்துவரும் ஜனநாயகப் புரட்சியின் முதலாளித்துவத் தன்மையைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்ள முடியும். திரள்திரளான தொழிலாளிகள் சோஷலிசத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் அதைச் சாதிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் இன்னமும் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்கள் எனும் உண்மையை மிகவும் வெகுளித்தனமான நம்பிக்கை ஆர்வலர்கள்தான் மறக்க முடியும். தொழிலாளிகளின் விடுதலையைத் தொழிலாளிகள் தாம் வென்று கொள்ள வேண்டும் என்று நாமனைவரும் திடமாக நம்புகிறோம். முதலாளி வர்க்கம் முழுவதையும் எதிர்த்து நடக்கும் ஒரு பகிரங்கமான வர்க்கப் போராட்டத்திலே மக்கள் திரள் வர்க்க உணர்வும் ஒழுங்கமைப்பும் பயிற்சியும் போதனையும் பெறாவிட்டால் சோஷலிசப் புரட்சி எனும் பேச்சுக்கே இடமில்லை.”5

 

                இந்த இடத்தில் லெனின் இடது, வலது என்கிற இரு போக்குகளையும்  விமர்சிக்கிறார். மேலிருந்து செயல்படுவதை, அதாவது ஒர் இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்து கொள்வது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கது என்பதை மறுக்கிற இடதுஅராஜகப் போக்கை லெனின் கண்டிக்கிறார்.

 

“புதிய-இஸ்க்ரா கருத்தை, அதாவது இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில சமூக-ஜனநாயகவாதிகள் கலந்து கொள்வது ஒரு வகையான மில்லிரான்வாதமாக (பிரெஞ்சு சோஷலிச சீர்திருத்தவாதமாக) இருக்குமென்றும் முதலாளித்துவ ஆட்சி முறையைப் புனிதப்படுத்துவது ஆகிய வகையில் அது கோட்பாட்டு முறையில் அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் கூறும் கருத்தை, ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்சிரஸ் இந்தப் பிரகடனத்தின் வழியாக மாற்றவொண்ணா வகையில் நிராகரித்தது.”6

 

                இடது அராஜகவாதிகள், இடைக்காலப் புரட்சி அரசாங்கத்தில் கலந்து கொள்வது என்பது பிரெஞ்சு வகைப்பட்ட வலதுதிரிபாக பேசுவதை லெனின் இங்கே விமர்சிக்கிறார். மேலும் லெனின் கீழிருந்து மட்டுமே செயற்படுவதற்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்ட வலது போக்கையும் லெனின் மறுதலிக்கிறார். அதாவது தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே நடத்துவதற்கு மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தி கொண்டு, வலுவான தாக்குதலுக்கு தயாரிப்பு செய்வதற்கு பயிலாத போக்கை இங்கே குறிப்பிடுகிறார். இந்நூலின் மற்றொரு இடத்தில், ருஷ்யாவில் நாடாளுமன்றம் இன்னும் தோன்றவில்லை, ஆனால் அதற்குள் நாடாளுமன்ற மூடத்தனம் காணப்படுவதை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார்.

 

       நாடாளுமன்ற மூடத்தனம் (parliamentary cretinism) என்றால், நாடாளுமன்ற நடவடிக்கையைத் தவிர மற்றப் போராட்ட முறையை புறக்கணித்து, நாடாளுமன்றமே முழு வல்லமையான ஒரே நடவடிக்கையாக கருதுகிற சந்தர்ப்பவாதப் போக்காகும்.

 

“கடைசிப் பகுப்பாய்வில் பார்க்கும்போது, அரசியல் சுதந்திரம், வர்க்கப் போராட்டம் பற்றிய மாபெரும் பிரச்சினைகளை பலப்பிரயோகம் ஒன்றுதான் தீர்த்துவைக்கிறது, பாதுகாப்புக்காக மட்டுமின்றித் தாக்குதலுக்காவும் இந்த பலப்பிரயோகத்தைத் தயாரித்து ஒழுங்கமைப்பது தீவிரமாகப் பயன்படுத்துவதும் நம் வேலையாகும். ஐரோப்பாவில் அரசியல் பிற்போக்கு நீண்ட காலமாக நடத்திவரும் ஆட்சி- இது பாரிஸ் கம்யூன் நடந்த நாட்களிலிருந்து இடையறாது நீடித்து வருகிறது- செய்கை என்பது “கீழிருந்து” மட்டுமே நடந்தேற முடியும் எனும் கருத்துக்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது.

 

தற்காப்புப் போராட்டங்களை மட்டுமே பார்ப்பதற்கு நம்மை மிதமிஞ்சிப் பழக்கப்படுத்தியுள்ளது. ஐயமின்றி ஒரு புதிய சகாப்தத்தில நாம் நுழைந்திருக்கிறோம்- அரசியல் எழுச்சிகளும் புரட்சிகளும் நடக்கும் காலப்பகுதி தொடங்கிவிட்டது. இன்று ருஷ்யா கடந்து வரும் இப்படிப்பட்ட காலப்பகுதியில் நாம் பழைய, மாறுதலற்ற சூத்திரங்களோடு நிறுத்திக் கொள்வது அனுமதிக்கத்தக்கதல்ல. மேலிருந்து செயல் புரிவது  எனும் கருத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும், மிகவும் வலுவான, தாக்குச் செயலுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும், அப்படிப்பட்ட செயலுக்குரிய நிலைமைகளையும் வடிவங்களையும் பயில வேண்டும்.”7

 

                தற்போதைய ருஷ்யாவின் கட்டம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கானது என்பதை லெனின் மார்க்சிய வழியில் விளக்குகிறார். இந்த ஜனநாயகப் புரட்சியானது சமூக பொருளாதார சாரத்தில் முதலாளித்துவத் தன்மையுடையது, அதனால் இப்புரட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் அக்கறைக்கு உரியது கிடையாது என்று கருதுகிற புதிய-இஸ்க்ரா குழுவினருக்கு லெனின் பதிலளிக்கிறார்.

 

“ஒரு வகையினம் என்கிற முறையில் முதலாளித்துவப் புரட்சியின் அர்த்தத்தையும் உள்பொருளையும் புதிய-இஸ்க்ரா குழுவினர் முற்றாகத் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். முதலாளித்துவப் புரட்சி என்பது முதலாளி வர்க்கத்துக்கு மட்டுமே அனுகூலமாயிருக்க முடியும் எனும் கருத்து அவர்களின் வாதங்களிலே எப்போதும் இழையோடிக் கொண்டிருக்கிறது. எனினும் இதைவிட தவறான கருத்து வேறொன்றும் இருக்க முடியாது.

 

முதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா – அதாவது, முதலாளித்துவ- சமூக-பொருளாதார அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு விலகாத ஒன்றாகும். முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது, அது முதலாளித்துவத்தின் அடித்தளங்களை அழிப்பதற்குப் பதிலாக மறுபுறம் செயல் பட்டு அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது. எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமின்றி முதலாளி வர்க்கம் முழுவதின் நலன்களையும் வெளியிடுகிறது.

 

முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும், ஆனால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை அறவே வெளியிடுகிறதில்லை என்று நினைப்பது சுத்த அபத்தமாகும்.”8

 

                முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி எவ்வாறு பாட்டாளி வர்க்கத்திற்கு அனுகூலமானது என்பதை விவரிக்கிறார். மார்க்சிய அடிப்படைக் கூறுகளில் நின்று ருஷ்ய நிலைமைகளை பகுப்பாய்வு செய்கிறார்.

 

“பொதுவாகவும் சரி, குறிப்பாக ருஷ்யா சம்பந்தமாகவும் சரி, இந்த மார்க்சியக் கோட்பாடுகள் அனைத்தும் நுண்ணிய விவரத்தோடு நிரூபிக்கப்பட்டும் விளக்கப்பட்டும் உள்ளன. மேலும் முன்னேறுகிற முதலாளித்துவ வளர்ச்சியைத் தவிர வேறெதிலாவது தொழிலாளி வர்க்கத்தின் விமோசனத்தைத் தேடுவது எனும் கருத்து பிற்போக்கானது என்று இந்தக் கோட்பாடுகளிலிருந்து தொடர்கிறது. ருஷ்யா போன்ற நாடுகளில் முதலாளித்துவத்தால் தொழிலாளி வர்க்கம் துன்பப்படுகிறதை விட போதாக் குறையான முதலாளித்துவ வளர்ச்சியாலேதான் அதிகமாகத் துன்பப்படுகிறது.

… … …

முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் மீதமிச்சங்களை மிகவும் உறுதியாகத் துடைத்தெறிந்து விட்டு முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு மிக முழுமையாக உத்தரவாதம் செய்கிற புரட்சியெழுச்சியாகும்.

 

எனவேதான், முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வார்க்கத்துக்கு மிக உயர்ந்த அளவிலே அனுகூலமானதாகும். பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கு முதலாளித்துவப் புரட்சி முற்றிலும் அவசியமாகும். எவ்வளவுக்கெவ்வளவு முழுமையானதாகவும் உறுதியானதாகவும் முரணற்றதாகவும் முதலாளித்துவப் புரட்சி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்தும், சோஷலிசத்துக்காவும் நடத்துகிற போராட்டம் மிகவும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருக்கும். விஞ்ஞான சோஷலிசத்தின் அடிப்படைக் கூறுகளை அறியாதவர்கள்தான் இந்த முடிவு புதுமையானது, வேடிக்கையானது, முரணுண்மையாயுள்ளது என்று நினைக்க முடியும்.”9

 

                புரட்சிகர வழி அல்லாமல் சீர்திருத்தங்களின் வழியே செல்வது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. புரட்சிகர வழி என்பது பாட்டாளி வர்க்கத்துக்கு குறைந்த வலிகொடுக்கும் எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று நடத்தி முடிக்க வேண்டும்.

 

“முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கு எவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகப் புரட்சியால் கிடைக்கும் ஆதாயங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அது உத்தரவாதம் செய்யும்.

 

முதலாளித்துவப் புரட்சியில் இருந்து பாட்டாளி வர்க்கம் விலகி நிற்கக் கூடாது, அதன்பால் அசிரத்தையாய் இருக்கக்கூடாது, புரட்சித் தலைமையை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது, அதற்கு மாறாகப் புரட்சியைச் சாதித்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதில் தானே சக்திமிக்க பங்காற்ற வேண்டும், முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு மிகுந்த உறுதியுடன் போராட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்சியம் போதிக்கிறது.

 

ருஷ்யப் புரட்சியின் முதலாளித்துவ-ஜனநாயக எல்லைகளைத் தாண்டி நாம் போக முடியாது. ஆனால் இந்த எல்லைகளை நாம் மிகப் பெரிதாக விரிவாக்க முடியும், ஆனால் இந்த எல்லைகளுக்குள்ளே நாம் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் உடனடித் தேவைகளுக்காகவும் எதிர்காலத்திய முழுமையான வெற்றிக்கு அதனுடைய சக்திகளைத் தயாரிப்பதைச் சாத்தியமாக்கும் நிலைமைகளுக்காகவும் போராட முடியும், போராட வேண்டும்.”10

 

                பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதற்கு விவசாயிகளை இணைத்து பாட்டாளி வர்க்க, விவசாயி மக்களின் புரட்சிகரமான, ஜனநாயக சர்வாதிகாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

“பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயகத்துக்கு முரணின்றிப் போராடும் போராளியாக இருக்கமுடியும். அதன் புரட்சிப் போராட்டத்தில் திரளான விவசாயி மக்கள் கலந்து கொண்டால்தான் அது ஜனநாயகத்திற்காக வெற்றிகரமாகப் போரிடும் போராளியாக முடியும். இதற்குப் பாட்டாளி வர்க்கம் போதிய வலிமை பெற்றிராவிட்டால் முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் தலைமையில் இருக்கும். அந்தப் புரட்சிக்கு ஒரு முரணுள்ள, தன்னலமுள்ள தன்மையைக் கொடுக்கும், பாட்டாளிவர்க்க - விவசாயி மக்களின் புரட்சிகரமான - ஜனநாயக சர்வாதிகாரம் ஒன்றுதான் இதைத் தடுக்க முடியும்.”11

 

லெனினால் எழுதப்பட்ட இந்நூல், 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயிண்ட்பீட்ர்ஸ்பர்க் பத்திரிகைக் கமிட்டியால் தடை செய்யப்பட்டது. மார்ச் மாதம் இதனை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்தத் தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்நூல் ருஷ்யாவின் பல நகரங்களில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டு, கட்சி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களால் படிக்கப்பட்டது. போல்ஷிவிக் கட்சியின் வளர்ச்சியில் இந்நூல் குறிப்பிடத்தக்க பெரும் பங்கினை செலுத்தியுள்ளது.


குறிப்புகள்-

1. ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதிகளின் இரண்டு செயற்தந்திரங்கள்  -தேர்வு நூல்கள் தொகுதி 3 – பக்கம்- 20-21

2. மேற்கண்ட நூல் – பக்கம்- 28
3. மேற்கண்ட நூல் – பக்கம்- 30-31
4. மேற்கண்ட நூல் – பக்கம்- 31-32
5. மேற்கண்ட நூல் – பக்கம்- 33-34
6. மேற்கண்ட நூல் – பக்கம்- 35
7. மேற்கண்ட நூல் – பக்கம்- 36-37
8. மேற்கண்ட நூல் – பக்கம்- 65-66
9. மேற்கண்ட நூல் – பக்கம்- 67-68
10. மேற்கண்ட நூல் – பக்கம்- 70-71
11. மேற்கண்ட நூல் – பக்கம்- 85

No comments:

Post a Comment