Monday, 9 May 2016

கிராமப்புற ஏழைகளுக்கு- லெனின் (நூல் அறிமுகம்)


கிராமப்புற ஏழைகளுக்கு- லெனின்
தமிழாக்கம் கி.இலக்குவன்

விலை.ரூ.40/-

வெளியீடு:
பாரதிபுத்தகாலயம்
சென்னை

தொலை பேசி- 044-24332424, 24356935      
      விற்பனை
 044-24332924


கிராமப்புற ஏழைகளுக்கு என்ற நூல் விவசாய மக்களுக்கு கட்சியின் திட்டத்தை விளக்கும் முகமாக 1903ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லெனினால் எழுதப்பட்டது. பொதுவாக மக்களுக்கு எவ்வாறு கட்சித் திட்டத்தை விளக்குவது என்பதை அறிவதற்கான வழிமுறையாக இந்நூல் அமைந்துள்ளது.

நகர்ப்புறத் தொழிலாளர்களின் போராட்டம் என்ற முதல் இயலில் தொழிலாளர்களின் போராட்டத்தை அறிமுகம் செய்கிறார். தொழிலாளர்கள் கூடுதல் ஊதியத்திற்காகவும், வேலை நேரத்தை எட்டு மணியாக குறைப்பதற்காகவும், அன்றாட வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் போராடுகின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் தொழிற்கூடங்களை சீரமைக்க வேண்டும். பயன்படுத்தும் இயந்திரங்கள் தொழிலாளர்களின் கை கால்களை சேதப்படுத்தாத வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதான கோரிக்கைகளை முதலாளிகளிடம் வைக்கின்றனர். இப்போராட்டங்களின்போது  தொழிலாளர்களை காவல்துறை ஒடுக்குகிறது, சிறையில் அடைக்கிறது. இதைக் கண்டு தொழிலாளர்கள் அஞ்சவில்லை.

“…இந்த அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் அடிபணியவில்லை. தொடர்ந்து போராடுகின்றனர். “சித்ரவதைகளோ, சிறைத்தண்டனைகளோ, நாடு கடத்தல்களோ, கடுங்காவல் தண்டனைகளோ, மரணமோ எங்களை அச்சுறுத்த முடியாது” என்று தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். “எங்களுடைய குறிக்கோள் நியாயமானது. பாடுபடும் அனைத்து மக்களின் விடுதலைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் போராடி வருகிறோம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வறுமை ஆகியவற்றுக்கு இலக்காகியுள்ள லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காகப் போராடி வருகிறோம்” தொழிலாளர்களின் வர்க்க உணர்வு தொடர்ந்து மேலோங்கி வருகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள சமூக ஜனநாயகவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்து அடக்குமுறைகளையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம்!”1

தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதற்கு நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டுவிட்டது. இதில் இருந்து விடுபடுவதற்கு அவர்கள் தொழிற்சங்கங்களில் ஒன்றுதிரண்டு போராடுகின்றனர். சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு போராடி ஒரு புதிய சிறந்த சமூக அமைப்பை உருவாக்க முனைகின்றனர்.

இந்த சமூகத்தை லெனின் விவரிக்கிறார்:
“நாங்கள் அமைக்க விரும்பும் அந்த புதிய சமூக அமைப்பில் (அந்த மேம்பட்ட சமூக அமைப்பில்) பணக்காரர்களும் இருக்கமாட்டார்கள், ஏழைகளும் இருக்க மாட்டார்கள். அனைவரும் உழைக்க வேண்டும். பொதுவான உழைப்பின் பலனை விரல்விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்கள் மட்டும் அனுபவிப்பதற்கு மாறாக அனைத்து உழைப்பாளி மக்களும் அந்த உழைப்பின் பலனை அனுபவிப்பார்கள். இயந்திரங்களும், பிற முன்னேற்றங்களும் உழைப்பவர் அனைவரின் வேலையை எளிதாக்குவதாக இருக்குமே அன்றி லட்சக்கணக்கான – கோடிக்கணக்கான- தொழிலாளர்களின் நலன்களைப் பறித்து சிலரை மட்டும் பணக்காரர்களாக மாற்றும் ஏற்பாடாக அது இருக்காது. இந்தப் புதிய, மேம்பட்ட சமூகமே சோஷலிச சமூகம் என்று பெயர். இந்த மேம்பட்ட சமூக அமைப்பு முறைக்காகப் போராடும் உழைப்பாளர்களின் சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சிகள் என்று அழைக்கப்படும். ருஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் அனைத்திலும் இத்தகைய கட்சிகள் வெளிப்படையாகச் செயற்படுகின்றன. நம்முடைய தொழிலாளர்களும், படித்தவர்கள் மத்தியிலுள்ள சோஷலிஸ்டுகளும் இணைந்து செயற்பட்டு அப்படிப்பட்ட ஒரு கட்சியை அமைத்துள்ளனர். அதன் பெயர் ருஷ்ய சமூக-ஜனநாயக சோஷலிஸ்ட் கட்சி.”2

சமூக ஜனநாயகவாதிகள் விரும்புவது என்ன? என்ற இரண்டாம் இயலில் அரசியல் சுதந்திரத்தைப் பற்றியும் ருஷ்யாவில் அச்சுதந்திரம் இல்லாமையை பற்றியும் குறிப்பிடுகிறார். ருஷ்ய மக்கள் பண்ணை அடிமை முறையில் எப்படி அடிமையாக இருந்தார்களோ அதேபோல் இன்று அதிகாரிகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.

அரசியல் சுதந்திரம் பற்றி லெனின் மிகச் சுருக்கமாக இதில் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பான பொதுப் பிரச்சினைகளையும் அரசு தொடர்பான பிரச்சினைகளையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் உரிமையாகும். சட்ட மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, சட்டங்களை விவாதித்து நிறைவேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றத்துக்கே வரி விதிக்கும் உரிமை,  எவரிடமும் அனுமதி கோராமல் பத்திரிகை, நூல்களை வெளியிடும் உரிமை ஆகியவையே அரசியல் சுதந்திரம் என்று கூறப்படுகிறது.

“சமூக ஜனநாயகவாதிகளின் முதல் கோரிக்கையும் முதன்மையான கோரிக்கையும் அதுதான். “அரசியல் சுதந்திரம் வேண்டும்” என்று அவர்கள் எழுப்பும் முதல் கோரிக்கையின் பொருள் இது தான்:-
அரசியல் சுதந்திரம், நாடாளுமன்றத்துக்கு சுதந்திரமான தேர்தல், கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் சந்திக்கும் வறுமையில் இருந்தும், அடக்கு முறையில் இருந்தும் உடனடியாக விடுவித்து விடாது என்பதை நாம் அறிவோம். பணக்காரர்களின் லாபத்துக்காக வேலை செய்ய வேண்டிய சுமையில் இருந்து நகர்ப்புற ஏழைகளையும், கிராமப்புற ஏழைகளையும் விடுவிக்கக்கூடிய உடனடியான சாத்தியக் கூறுகள் அவற்றுக்கு இல்லை என்பது உண்மையே.

உழைக்கும் மக்கள் தங்கள் மீதுதான் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டும். வேறு எவரையும் நம்பியிருக்க முடியாது. உழைப்பாளி தன்னைத் தானே வறுமை நிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளவில்லை என்றால் வேறு எவரும் அவனை விடுவிக்க மாட்டார்கள். அவ்வாறு உழைப்பாளிகள் தங்களைத் தாங்களே விடுவித்துக கொள்ள வேண்டுமானால், ருஷ்யாவிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும் ஒரே சங்கமாக, ஒரே கட்சியாக ஒன்றுபட வேண்டும். சர்வாதிகார போலீஸ் ஆட்சி, கூட்டங்களுக்கு தடை விதித்தது என்றால், உழைப்பாளிகளின் பத்திரிகைகளுக்கு தடை வித்ததது என்றால், உழைப்பாளர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை விதித்தது என்றால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட முடியாது. உழைப்பாளிகள் ஒன்றுபட வேண்டுமானால் அனைத்து விதமான சங்கங்கள் அமைக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும். ஒன்றுபடுவதற்கான உரிமை வேண்டும். அரசியல் சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.

அரசியல் சுதந்திரம் உடனடியாக தொழிலாளர்களை அவர்களின் வறுமை நிலையில் இருந்து விடுவிக்காது என்பது சரிதான். ஆனால் வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஆயுதத்தை அரசியல் சுதந்திரம் உழைப்பாளிகளுக்கு அளிக்கும். வறுமையை எதிர்த்துப் போராட உழைப்பாளிகளின் ஒற்றுமைதான் ஒரே வழி. வேறுவழி எதுவும் இல்லை, இருக்கவும் முடியாது. அரசியல் சுதந்திரம் இல்லை என்றால் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபடுதல் சாத்தியமானதாக இருக்காது.”3

இந்த அரசியல் உரிமை என்பதின் மூலம் மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்காது, ஆனால் விடுதலைக்கான பாதையை அமைத்துத்தரும். மக்கள் அனுபவித்துவரும் வறுமையை நீக்குவதற்கு தனியார் சொத்துடைமை ஒழித்தலே ஒரே வழி என்று லெனின் கூறுகிறார்.

“மக்களின் வறுமைச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி- இன்றைய சமூக அமைப்பை மேலிருந்து கீழ்வரை முழுமையாக மாற்றி அமைப்பதுதான். நாடு முழுவதும் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்து ஒரு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். இதனையே வேறுவிதமாகச் சொன்னால் – பெரிய நிலப்பிரபுக்களின் பண்ணைகளைக் கைப்பற்ற வேண்டும், தொழிற்சாலை அதிபர்களிடம் இருந்து தொழிற்சாலைகளைக் கையகப்படுத்த வேண்டும். வங்கிகளிடமிருந்து நிதிமூலதனத்தைக் கைப்பற்ற வேண்டும், தனியார் சொத்துடைமை முறையை ஒழித்துக்கட்டி அனைத்து சொத்துக்களையும் நாடு முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் பொதுச் சொத்தாக மாற்ற வேண்டும்.
ஆனால் தற்போது நிலவும் சமூக அமைப்பை நாடு முழுவதும் மாற்றி அமைப்பது ஒர் எளிதான வேலையல்ல. அதற்கு விரிவான முயற்சியும், ஒரு நீண்ட உறுதிமிக்க போராட்டமும் தேவைப்படும். வசதி படைத்தவர்களும், சொத்துடைமையாளர்களும், முதலாளிமார்களும் தங்கள் செல்வங்களைப் பாதுகாக்க தங்களின் சதி முழுவதையும் பயன்படுத்துவார்கள். அதிகாரிகளும் ராணுவமும் வசதி படைத்த வர்க்கங்களுக்கு துணையாகக் களத்தில் இறங்கும். ஏனெனில் அரசாங்கம் வசதி படைத்த வர்க்கங்களின் கைகளில்தான் இருக்கிறது. பிறரது உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் நபர்களுக்கு எதிராக உழைப்பாளிகள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும். உழைப்பாளர்கள் தங்களிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்வதுடன் ஏழைகள் அனைவரையும் ஒரே உழைக்கும் வர்க்கமாக – பாட்டாளி வர்க்கமாக ஒன்றுபடுத்த உதவவேண்டும். அத்தகைய போராட்டத்தை உழைப்பாளி வர்க்கம் நடத்துவது எளிதானதாக இருக்காது என்பது உண்மையே.”4

எளிதல்ல என்ற உண்மையை சொன்னவர், அதனைப் புரிந்து கொள்ள செல்வமும் வறுமையும் என்ற அடுத்த இயலில் உதவிடுகிறார்.

விவசாயிகளுக்கு தங்களின் வாழ்வில் ஏன் வறுமை நிலவுகிறது என்பதை எளிய முறையில் விளக்குகிறார்.

“கிராமப்புறங்களில் உள்ள எந்தப் பிரிவு மக்கள் பணக்காரர்களின் பின்னே செல்வார்கள் என்பதையும். எந்தப் பகுதி மக்கள் உழைப்பாளர்கள் பின்னாலும் சமுக ஜனநாயகவாதிகள் பின்னாலும் அணிதிரள்வார்கள் என்பதைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும். நிலப்பிரபுக்களைத் தவிர மூலதனத்தைக் கையகப்படுத்தும் நிலையிலும் பிறர் உழைப்பில் பிழைக்கும் நிலையிலும் நிறைய விவசாயிகள் இருக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இப்பிரச்சினையின் ஆழத்துக்கே சென்று சரியான மதிப்பீட்டைச் செய்யாமல் வறுமை பற்றி விரிவாகப் பேசுவதால் மட்டும் எந்தப் பயனும் கிடைக்காது.

அவ்வாறு மதிப்பிடவில்லை என்றால் கிராமப்புறங்களில் எந்தப் பிரிவு எழைகளிடம் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் என்பதோ, நகர்ப்புற தொழிலாளர்களுடன் ஒற்றுமை எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதோ தெரியாத ஒன்றாகவே இருக்கும். நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் அமைப்பை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும். இப்படிப்பட்ட மதிப்பீடு செய்வதின் மூலமே விவசாயிகளை அவர்களது பிரிவைச் சேர்ந்த சக தோழர்களோ, பணக்கார விவசாயிகளோ, நிலப்பிரபுக்களோ ஏமாற்றும் நிலை உருவாகாமல் தடுக்க முடியும்.”5

விவசாயிகளில் பலர் வறுமையிலும், சிலர் பணக்காரர்களாக வளர்ந்துவிடுவதாக இருக்கின்றனர். இந்தப் பணக்கார விவசாயிகள் நிலப்பிரபுக்கள் பக்கம் சாய்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகவும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகர்புறத் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டுச் செயற்பட விரும்பும் கிராமப்புற ஏழைகள், இது குறித்து கவனமாக சிந்திக்க வேண்டும் என்கிறார் லெனின். பணக்கார விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களா? அவர்கள் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் கொண்டு, அவர்களுக்கு எதிரான அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு விவசாயி ஏழை விவசாயியா? பணக்கார விவசாயியா? என்பதை அவர்கள் வைத்துள்ள குதிரைகளின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடலாம்.  நிறைய குதிரை வைத்திருந்தால் அந்த விவசாயி பணக்கார விவசாயி ஆவார். இந்தப் பணக்கார விவசாயிகள் நிலப்புரபுக்களைப் போல் விவசாய வேலைகளுக்கு கூலி விவசாயிகளை அமர்த்திக் கொள்கின்றனர். இவர்களும் நிலப்பிரபுக்களைப் போலவே வசதி மிக்கவர்களாக வளர்ந்து வருகின்றனர்.

       அடுத்து ஏழை விவசாயியைப் பார்ப்போம்.  ஒரு குதிரைகூட இல்லாத விவசாயி ஏழ்மையிலும் கூலிக்காக விவசாய நிலத்தில் தமது உடலுழைப்பை செலுத்திட வேண்டிய நிலையிலும் இருப்பர். இத்தகைய விவசாயி பஞ்சம் ஏற்படும் போதும் விளைச்சல் பாதிக்கும் போதும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்.

இரண்டு குதிரைகளை வைத்துள்ளவர்கள் நடுத்தர விவசாயிகள். விவசாயம் நன்றாக  நடைபெறும் ஆண்டுகளில் இவர்களது அடிப்படைத் தேவைகள் ஒரளவிற்கு நிறைவேறும். விளைச்சல் பாதிக்கின்றபோது இவர்களும் வறுமையில் தள்ளப்படுகின்றனர். ஏன் என்றால் இவர்களிடம் பணச் சேமிப்பு என்பது மிகக்குறைவானதாக இருக்கும். இதனால் இவர்களும் நிலப்பிரபுக்களிடம் கொத்தடிமைகளாக மாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வசதி படைத்தவர்கள் ஒரு புறம், ஏழைகள் மறுபுறம் இந்த இருவருக்கும் இடையில் நடுத்தர விவசாயிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். இருவரில் யாரை சார்ந்து நிற்பது என்பது இவர்களுக்கு ஏற்படும் பெரும் சிக்கல். வசதி படைத்தவர்கள் இவர்களைப் பார்த்து நீங்கள் சொத்துடமையாளர்கள் அதனால் கூலி விவசாயிகளிடம் செல்லாதீர்கள் எங்களிடம் வாருங்கள் என்று அழைக்கின்றனர். பணக்கார விவசாயிகளின் தந்திரங்களில் அகப்பட வேண்டாம் என்று விவசாயத் தொழிலாளர்கள் கூறி, தங்களது போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி அழைக்கின்றனர்.

“பணக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். உங்களை கசக்கிப் பிழிவார்கள். அனைத்துப் பணக்கார்களுக்கும் எதிராக நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு உதவி செய்வதுதான் நீங்கள் விடுபடுவதற்கான வழி என்று நடுத்தர விவசாயிகளிடம் தொழிலாளிகள் கூறுவார்கள்.
..
நடுத்தர விவசாயிகளை ஏமாற்றுவதற்காக பணக்காரர்கள் கையாளும் தந்திரங்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை எவ்வாறு அம்பலப்படுத்துவது என்பதையும் கற்றுக் கொண்டு, நடுத்தர விவசாயிககளின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அவர்கள் அறிவதற்கு உதவிசெய்ய வேண்டும். ருஷ்ய சமூக ஜனநாயக அமைப்பின் ஊழியர்களின் பாதையை உடனடியாகத் தேர்ந்தெடுத்தால் கிராமப்புறத் தொழிலாளிகளுக்கும் நகர்ப்புறத் தொழிலாளிகளுக்கும் இடையே ஒரு உறுதியான ஒற்றுமையை விரைவாக உருவாக்க முடியும்.”6

நடுத்தர விவசாயி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதே நான்காம் இயலின் தலைப்பாகும்.

கூட்டுறவு போன்றவற்றின் உதவியோடு நடுத்தர விவசாயிகளில் சிலர் பணக்காரர்களாக மாறுவது உண்மையே, இது விதிவிலக்கானதே. பணக்கார விவசாயிகள் அனைவரையும் விரட்டியடிக்காமல் நடுத்தர விவசாயிகளுக்கு விடிவில்லை என்பதே உண்மையாகும். இவர்களை விரட்டியடிப்பதற்கு நகர்ப்புற தொழிலாளர்களுடனும் கிராமப்புறத் தொழிலாளர்களுடனும் இணைந்து போராட வேண்டும். அப்போதுதான் வலுவான நிலப்பிரபுத்துவத்தை முழுமையாகத் தூக்கி எறிய முடியும்.

அனைத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தெந்த முன்னேற்றங்களைப் பெற சமூக ஜனநாயகவாதிகள் விரும்புகிறார்கள்? என்பது பற்றி ஐந்தாவது இயலிலும், அனைத்து விவசாயிகளுக்கும் எத்தகைய முன்னேற்றங்கள் கிடைக்க வேண்டுமென்று சமூக ஜனநாயகவாதிகள் பாடுபடுகிறார்கள்? என்பது பற்றி ஆறாம் இயலிலும் எழுதப்பட்டுள்ளது.

ஏழாம் இயல் கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டம். உழைப்பாளிகளான ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பணம்படைத்தவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே வர்க்கப் போராட்டமாகும். இந்த போராட்டம் என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ருஷ்ய நாட்டில் கிராமப்புறங்களிலும் நடைபெறுகிறது.

1902ஆம் ஆண்டில் விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து போராடினர். போராடாமல் பட்டினி கிடந்து சாவதைவிட போராட்டங்களில் பங்கெடுத்து சாவது மேலானது என்று விவசாயிகள் சரியாகவே முடிவெடுத்துச் செயற்பட்டனர். போராட்டம் தோல்வியைக் கண்டது.  விவசாயிகளின் பேரெழுச்சி நசுக்கப்பட்டதற்கு காரணம் போராடியவர்களிடம் அரசியல் உணர்வு இல்லாமையும், அறியாமையில் ஆழ்ந்தவர்களாக இருந்ததுமாகும். இந்த அரசியல் அமைப்பே மாற்றப்பட வேண்டும் என்ற தெளிவான கோரிக்கையோடு அவர்கள் போராடவில்லை.

ஒரு போராட்டம் வெற்றியடைய வேண்டுமாயின், தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஓர் அரசியல் நோக்கம் இருக்க வேண்டும், அதற்கான தயாரிப்புகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும். இதல்லாமல் வெற்றியை அடைய முடியாது, சிறு தோல்வி, பெருந் தோல்வி என்று தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிராமப்புற விவசாயிகளை அரசியல் படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் அறிந்தவற்றில் இருந்து விளக்க வேண்டும்.

“நூல்களில் இருந்து மட்டும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளைக் கற்றுத் தந்தால் போதாது. நம்மைச் சுற்றி நிகழ்கின்ற ஒவ்வொரு அடக்குமுறை சம்பவத்தையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்திக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விளக்கங்களை அளிக்க வேண்டும். சமூக ஜனநாயகக் கோட்பாடு என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டக் கொள்கையாகும். அனைத்து பகற் கொள்ளைகளுக்கும் அனைத்து அநீதிகளுக்கும் எதிரான போராட்டக் கொள்கையாகும். எவனொருவன் இந்த அடக்குமுறைகளுக்கான காரணங்களை அறிந்து வைத்திருக்கிறானோ, எவனொருவன் தன் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு அடக்குமுறை நடவடிக்கைக்கும் எதிராகப் போராடுகிறானோ அவனே ஓர் உண்மையான சமூக ஜனநாயகவாதி.

இதை எவ்வாறு செய்வது? வர்க்க உணர்வு படைத்த சமூச ஜனநாயகவாதிகள் தங்கள் கிராமங்களிலோ நகரங்களிலோ கூடும்போது, உழைக்கும் வர்க்கம் முழுமைக்கும் மிகச்சிறந்த முறையில் சாதகமாக அமைய எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர்களே பேசி முடிவு செய்ய வேண்டும்.
…எழுதப் படிக்கத் தெரிந்த அனைத்து விவசாயிகளும் பிரசுரத்தைப் படித்துப் பார்க்கும்போது பிரச்சினைகள் என்னவென்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் பிறரை படிக்கச் சொல்லி அதைக் கேட்டு விளக்கம் பெறுவர். சமூக ஜனநாயகவாதிகள் தங்களை ஆதரிக்கிறார்கள் என்பதையும் அனைத்து விதமான சுரண்டல்களையும் சமூக ஜனநாயகவாதிகள் கண்டிக்கிறார்கள் என்பதையும் அப்போது விவசாயிகள் புரிந்து கொள்வார்கள். எத்தகைய நிவாரணமாக இருந்தாலும் (அவை சிறிய நிவாரணங்களாகவும் இருக்கலாம்) அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் உடனடியாகப் பெற முடியும் என்பதைப் புரிந்து கொள்வார்கள். அதேநேரத்தில் பெரிய முன்னேற்றங்களை நாடு முழுவதும் பெறுவதற்கு நகர்ப்புறத்தில் உள்ள சமூக ஜனநாயக ஊழியர்களுடன் இணைந்து நின்று மகத்தான போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்பதையும் புரிந்து கொள்வார்கள்.”7

குறிப்புகள்
1 .கிராமப்புற ஏழைகளுக்கு - பக்கம் 13-14
2. மேற்கண்ட நூல்- பக்கம் 12-13
3. மேற்கண்ட நூல்- பக்கம்21-22
4. மேற்கண்ட நூல்- பக்கம்28-29
5. மேற்கண்ட நூல்– பக்கம்30-31
6. மேற்கண்ட நூல்– பக்கம்49-50
7. மேற்கண்ட நூல்– பக்கம் 110-112


No comments:

Post a Comment