Saturday 7 May 2016

ஓரடி முன்னால் ஈரடி பின்னால்-லெனின்

ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலை லெனின் “நமது கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி” என்று முத்திரையிட்டு தொடங்கினார். இரண்டாம் காங்கிரசினால், கட்சியின் பயணம் ஒரடி முன்னே சென்றது என்றால் மென்ஷிவிக்குகளின் போக்கால் ஈரடி பின்னோக்கிச் செல்வது பற்றிய போக்கை இந்நூல் எடுத்துரைக்கிறது.

 

காங்கிரசின் முடிவுகளையும், அதன் தேர்தல்களையும் மறுதலிப்பதை நம்பிக்கைத் துரோகம் என்று லெனின் கடுமையாகச் சாடினார். நடந்து முடிந்த காங்கிரஸ் மிக்க கவனத்துடன் அனைத்து பிரதிநிதித்துவ அடிப்படையில் கூட்டப்பட்டது. அதனால் காங்கிரஸ் முழுமையாக அனைவரையும் கட்டுப்படுத்தும் என்பதை வலியுறுத்தினார். ஓர் உண்மையான கட்சியை உருவாக்குவதே இக்காங்கிரசின் நோக்கம் என்பதையும் அதற்கான ஆயத்தங்களை இஸ்க்ரா மூன்று ஆண்டுகளாக செய்ததையும், பெரும்பான்மையான கமிட்டிகள் இதனை அங்கீகாரம் செய்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

சொல்லளவில் அங்கீகரித்துவிட்டு, செயலில் தடுமாறிய அமைப்புகளும் காங்சிரசுக்கு வந்திருந்த காரணத்தால், வெற்றி அடைவதற்கு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. அதனால் காங்கிரஸ் போராட்ட அரங்கமாக காட்சியளித்தது என்கிறார் லெனின்.

 

“காங்கிரசின் அடிப்படையான பணி என்ன?

 

இஸ்க்ராவினால் முன்மொழியப்பட்டதும், விரிவான விளக்கம் செய்யப்பட்டதும் ஆன கோட்பாடுகள், நிறுவன ஒழுங்கமைப்புக் கருத்துக்கள் ஆகியவற்றின் மீதான அடிப்படையில் ஓர் உண்மையான கட்சியை உருவாக்குவதுதான் அதன் பணியாக இருந்தது. காங்சிரஸ் இந்தத் திசையில்தான் பணிபுரிய வேண்டும் என்பது இஸ்க்ராவின் மூன்றாண்டு நடவடிக்கைகளால் முன்நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரும்பான்மையான கமிட்டிகள் இஸ்க்ராவின் மூன்றாண்டுப் பணியை அங்கீகாரம் செய்திருந்தன.

 

இஸ்க்ராவின் வேலைத்திட்டமும, போக்கும், கட்சியின் வேலைத்திட்டமாகவும், போக்காகவும் மாற இருந்தன. இஸ்க்ராவின் நிறுவன ஒழுங்கமைப்புத் திட்டங்கள் கட்சியின் ஒழுங்கு விதிகளில் உருவம் பெற இருந்தன. ஆனால், போராட்டம்  இன்றி இதைச் சாதிக்க முடியாது என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை.

 

காங்கிரசஸ் அனைத்து பகுதியினரின் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருந்தபடியால், இஸ்க்ராவுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அமைப்புகளும் (புந்த், ரபோச்சியே தேலோ) இஸ்க்ராவை சொல்லளவில் தலையாய உறுப்பாக அங்கீகாரம் செய்துவிட்டு, செயலில் தங்களது சொந்தத் திட்டங்களைப் பின்பற்றி, கோட்பாடு தொடர்பான செயல்களில் உறுதியற்றவைகளாக இருந்த அமைப்புகளும் (யூழ்னி ரபோச்சி குழுவும், இத்தோடு நெருக்கமாக உறவு கொண்டிருந்த சில கமிட்டிகளின் உறுப்பினர்களும்) காங்கிரசில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தன. இப்படிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் “இஸ்க்ரா” போக்கின் வெற்றிக்காக நடத்தப் பெறும் போராட்ட அரங்கமாக காங்கிரஸ் மாறுவது தவிர வேறு வழியில்லை. அது அப்படிப்பட்ட அரங்கமாக மாறிற்று என்பது அதன் கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடுகளைச் சிறிதளவு கவனத்துடன் படிப்பவர்களுக்குத் தெளிவாகப் புலப்படும்”1

 

                கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். இப்படை மார்க்சியத்தை தமது கோட்பாடாகக் கொண்டுள்ளது. சமூகத்தை அணுகுவதில் அது வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சமூக வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவை தமது ஆயுதமாகக் கொண்டுள்ளது. இதனால்தான் இக்கட்சி தமது முன்னணி பணியினை செயற்படுத்த முடிகிறது.

 

கட்சியையும், தொழிலாளி வர்க்கத்தையும் ஒன்றாக சேர்த்துக் குழப்பக் கூடாது. தொழிலாளர் போராட்டத்தில் பங்குபெறும் அனைவரையும் கட்சி உறுப்பினராக ஏற்பது, கட்சி உணர்வை, ஒவ்வொரு வேலை நிறுத்தக்காரனுடைய உணர்வுநிலைக்குக் குறைப்பதாகிவிடும். கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்பது ஒவ்வொரு வேலை நிறுத்தக்காரனின் உணர்வை, அனைத்து தொழிலாளர்களின் உணர்வுநிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

 

“ஒரு வர்க்கத்தின் கட்சியாக நாம் இருக்கிறோம். எனவே கிட்டத்தட்ட முழு வர்க்கமும் நமது கட்சித் தலைமையின் கீழ் செயலாற்ற வேண்டும். எவ்வளவு நெருக்கமாக முடியுமோ அவ்வளவு நெருக்கமாக கட்சியைப் பின்பற்ற வேண்டும்.

முன்னணிப்படைக்கும், அதன்பால் ஈர்க்கப்பட்டு வரும் மக்கள் திரளுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை மறந்து விடுவது, இன்னும் பரந்ததான மக்கள் பிரிவுகளைத்தான் வளர்ச்சியுற்றுள்ள முன்னேற்ற நிலைக்கு உயர்த்தும் முன்னணிப்படையின் இடையறாத பணியை மறந்துவிடுவது ஆகியவை எல்லாம், தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வது என்றுதான் பொருள்படும், நம்முடைய பணிகளின் அளப்பரிய தன்மையினைக் காண மறுத்துக் கண்ணை மூடிக் கொள்வது என்றாகும், இந்தப் பணிகளைக் குறுக்கிக் கொள்வது என்பதுதான் இதன் பொருளாகும்.”2

 

கம்யூனிசக் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வழியிலான கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களாவதற்கு கட்சியின் ஏதாவது அமைப்பில் உறுப்பினராக இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும். கட்சியின் அமைப்பில் இணையாமல் இருப்போரையும் கட்சி உறுப்பினராகக் கொள்வது, கட்சியின் வர்க்க உணர்வின் உறுதி கட்டவிழ்ந்துவிடும். இப்படிப்பட்டவர்களை அமைப்பு வழியில் ஒன்றுபடுத்த முடியாமல் போய்விடும். கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்களின் கூடாரமாக காட்சியளித்தால், கட்சியினரிடையே ஒருமனதான கருத்தைக் காண முடியாது. ஒன்றுபட்டு செயற்படுவதை குலைக்கின்ற ஆபத்தாகிவிடும்

 

“வர்க்கத்தின் முன்னணியாகிய கட்சி சாத்தியமான அளவிற்கு அமைப்பு ஒழுங்குக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச அளவு அமைப்பு ஒழுங்கையாவது அனுமதிக்கும் அத்தகைய நபர்களை மட்டுமே கட்சி அதன் அணிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், என்னுடைய தேவையை என்னுடைய கோரிக்கையை இதன்மூலம் துல்லியமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறேன். அதற்கு மாறாக என்னுடைய எதிராளி, கட்சிக்குள்ளாக அமைப்புக்குட்பட்ட நபர்களையும், அமைப்புக்குட்படாத நபர்களையும் ஒன்றாகக் கலந்து வைக்கிறார்.

 

மேல் நெறியாண்மை செய்யப்பட இடமளிப்பவர்களையும் இடமளிக்க மறுக்கிறவர்களையும், முன்னேற்றம் அடைந்தவர்களையும், சீராக்க முடியாதபடி பிற்போக்கானவர்களையும் ஒன்றாகக் கலந்து வைக்கிறார். இந்தக் குழப்பம் உண்மையிலேயே ஆபத்தானது.” 3

 

 மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைகளில் செயற்படுகின்ற கட்சி தமது சித்தாந்த ஒருமைப்பாடுடன் உறுதியாக இருக்க வேண்டுமானால் அதற்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் கிடையாது. பல கோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாக ஒருங்கிணைக்கும் அமைப்பின் பொருளாயத ஐக்கியத்தால் மட்டுமே கட்சி ஒரு முன்னணிப் படைக்கான பணியினை செய்திட முடியும்.

 

“நமது வேலைத்திட்டம், நமது செயற்தந்திரங்கள் ஆகிய துறைகளில் போலவே, அமைப்புத் துறையிலும் சந்தர்ப்பவாதமானது பரிதாபகரமாக முதலாளித்துவ உளவியலுக்கு மண்டியிட்டு விடுகிறது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கருத்தோட்டத்தை விமர்சனம் ஏதுமின்றி ஏற்றுக் கொண்டு விடுகிறது, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட ஆயுதத்தை மழுங்கடிக்கிறது.

 

ஆட்சி அதிகாரத்திற்கான தனது போராட்டத்தில், பாட்டாளி வர்க்கத்துக்கு அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் ஏதும் கிடையாது.”4

 

                கட்சி ஜனநாயக வழிப்பட்டதாக செயற்படுவதற்கு ஜனநாயக மத்தியத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஓரே மாதிரியான விதிகளையும் ஒரே சீராக இருக்கக் கூடிய கட்சிதான் கட்டுப்பாடுகளை பெற்றதாக இருக்க முடியும். இதற்கு மத்தியத்துவம் அவசியமானதாகும். பெரும்பான்மையின் முடிவிற்கு சிறுபான்மை கட்டுப்பட வேண்டும், மேல் அமைப்புகளுக்கு கீழ் அமைப்புகள் கட்டுப்பட வேண்டும். இதனை மீறினால் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் ஜனநாயக வழிப்பட்டதாக இருக்க முடியாது. கீழிருந்து தேர்தல்கள் வழியில் அமைப்புகள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

 

“இப்போது நாம் அமைப்புத்திரட்சியுள்ள கட்சியாகிவிட்டோம். இது அதிகாரம் நிலைநிறுத்தப் படுவதைச் சுட்டிக் காட்டுகிறது, கருத்துக்களின் அதிகாரத்தை ஆட்சி அதிகாரமாக மாற்றுவது, கீழாக உள்ள கட்சி அமைப்புகள் உயர்மட்ட அமைப்புகளுக்குக் கீழ்ப்பட்டு நடப்பது ஆகியவை நிலை பெறுகின்றன.”5

 

                இவ்வகையிலான அமைப்பு வழியில் திரட்டப்பட்ட கட்சியே, தொழிலாளர்களின் முன்னணிப் படையாக செயற்பட முடியும்.

 

இந்த நூலில் லெனின், கட்சியில் “பெரும்பான்மை” (போல்ஷிவிக்) தான் புரட்சிகரமானது, “சிறுபான்மை” (மென்ஷிவிக்) சந்தர்ப்பவாதமானது என்பதை நிறுவுகிறார்.


குறிப்புகள்

1. ஓரடி முன்னால் ஈரடி பின்னால் - தேர்வு நூல்கள் தொகுதி 2 – பக்கம்- 16- 17

2. மேற்கண்ட நூல்– பக்கம்- 97- 98
3. மேற்கண்ட நூல்– பக்கம்- 93
4. மேற்கண்ட நூல்– பக்கம்- 358
5. மேற்கண்ட நூல்– பக்கம்- 277




No comments:

Post a Comment