Saturday, 2 April 2016

“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு- லெனின் (நூல் அறிமுகம்)


“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு என்கிற நூலை லெனின் 1920ஆம் ஆண்டில் எழுதினார். மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் போது இந்நூல் வெளிவர வேண்டும் என்ற முடிவோடு இதனை லெனின் எழுதினார். பிரெஞ்சு, ஆங்கில மொழிகளிலும் வெளியிடப்பட்டு, அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நூலில் காணப்படும் முடிவுகளின் அடிப்படையில் இந்தக் காங்கிரசின் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

       போல்ஷிவிக் கட்சியின் அமைப்பு, போராட்டம், வளர்ச்சி, வெற்றி ஆகியற்றின் வரலாற்று சிறப்பை இந்நூலில் பொதுமைப்படுத்தி விவரித்துள்ளார். போல்ஷிவிக் கம்யூனிஸ்ட் கட்சி தங்களது நாட்டின் பிரத்யேக இடையூறுகளை, மார்க்சிய சித்தாந்தத்தின் வழிகாட்டுதலின்படி எவ்வாறு கடந்து வந்தது என்பதை இந்நூல் சித்தரிக்கிறது. திட்டவட்டமான நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாது மார்க்சிய பொது உண்மைகளை இயந்திரத்தனமாக இணைத்திடும் போக்கைத் தவிர்த்து, ஸ்தூலமான நிலைமைகளை கணக்கில் எடுத்து, மார்க்சிய வழிகாட்டுதலின்படி போல்ஷிவிக் கட்சி எவ்வாறு செயற்பட்டது என்பதை லெனின் இதில் விவரித்துள்ளார்.

       ருஷ்யப் புரட்சியை அப்படியே தமது நாட்டில் நடத்துவது பற்றிய சிந்தனைப் போக்கையும், அதற்கு மாறாக இது ருஷ்ய நாட்டிற்கு மட்டுமானது என்பதாக புரிந்து கொள்வதையும் லெனின் இங்கு மறுதலிக்கிறார். முதல் இயலின் தலைப்பு, எப்பொருளில் நாம் ருஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து பேசலாம்.

“ருஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றது (அக்டோபர் 25, 1917) தொடக்க மாதங்களில், பிற்பட்ட ருஷ்யாவுக்கும் மேலைய ஐரோப்பாவின் வளர்ச்சியுற்ற நாடுகளுக்கும் இடைப்பட்ட மிகுதியான வேறுபாடு காரணமாய், இந்நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சி சிறிதும் எங்களுடையதை ஒத்ததாக இராதென நினைக்கத் தோன்றியிருக்கலாம்.

இப்பொழுது நமக்குக் கணிசமான அளவில் சர்வதேச அனுபவம் கிடைத்திருக்கிறது, எங்களுடைய புரட்சியின் குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு மண்டலத்துக்கோ, தனியொரு சேதத்துக்கோ, ருஷ்யாவுக்கோ மட்டும் உரித்தான முக்கியத்துவத்துடன் கூட, சர்வதேச முக்கியத்துவமும் பெற்றவை என்பதை இந்த அனுபவம் திட்டவட்டமாகப் புலப்படுத்துகிறது.

சர்வதேச முக்கியத்துவம் என்பதாக இங்கு நான் கூறுவது இப்பதத்தின் விரிவான பொருளில் அல்ல, எங்களுடைய புரட்சியால் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும் விளைவுகளின் பொருளில், இப்புரட்சியின் முதல் நிலைக்கூறுகளில் சிற்சில மட்டுமின்றி யாவுமே, மற்றும் அதன் துணைக் கூறுகளில் பலவுங்கூட, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தவையே. இப்பதத்தின் மிகக் குறுகிய பொருளில்தான், எங்கள் நாட்டில் நடந்தேறியது சர்வதேச அளவில் பொருந்துவதாகும், அல்லது சர்வதேச அளவில் திரும்பவும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாததாகும் என்கிற பொருளில்தான், இதைப் பற்றி இங்கு நான் கூறுகிறேன். எங்களுடைய புரட்சியின் சில அடிப்படை இயல்புகள் இந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இந்த உண்மையை மிகைப்படுத்திக் கூறி, எங்கள் புரட்சியின் சிற்சில அடிப்படை இயல்புகளுக்கு பெரும் பிழையாகிவிடும் என்பதைக் கூறத் தேவையில்லை. வளர்ச்சியுற்ற நாடுகளில் ஏதேனும் ஒன்றிலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடையுமாயின், அதைத் தொடர்ந்து பெரும் மாற்றம் ஏற்படக்கூடும், அதாவது ருஷ்யா முன்மாதிரியாக இருக்கும் நிலை விரைவில் முடிவுற்று திரும்பவும் (“சோவியத்”, சோஷலிசப் பொருளில்) பிற்பட்ட நாடாகிவிடக் கூடும் என்பதைக் காணத் தவறுவதும் பிழையேயாகும்.”1

ருஷ்யப் புரட்சியை அளவுக்குமீறி புகழ்வது எந்தவகையிலும் பயனுடையது கிடையாது.

இரண்டாம் இயல், போல்ஷிவிக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை.

இந்த நிபந்தனையானது பாட்டாளி வர்க்க கட்சியானது, முழுமையான மத்தியத்துவமும், கடுமையான கட்டுப்பாடும் ஆகும். முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனையாக இது இருக்கிறது. புரட்சிக்கு மட்டுமல்லாது வெற்றி பெற்று நிறுவப்பட்ட சோவியத் ஆட்சியை தக்கவைப்பதற்கும் இது தேவைப்படுகிறது. கட்டுப்பாடில்லாமல் ஆட்சியதிகாரத்தை இரண்டரை மாதங்களுக்குக்கூட நீடித்து வைத்திருக்க முடியாது என்கிறார் லெனின்.

போல்ஷிவிக் கட்சியின் வெற்றியானது ஒரேயொரு புரட்சிகரக் கோட்பாடான மார்க்சியத்தை ஏற்றதேயாகும். மார்க்சிய கோட்பாட்டிற்கு வந்தடைந்த விதத்தை லெனின் கூறுகிறார்.

“ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான அனுபவித்த வேதனையின் வாயிலாய் ருஷ்யாவானது பிழையற்ற ஓரேயொரு புரட்சிகரக் கோட்பாடான மார்க்சியத்தை வந்தடைந்தது.”2

       இந்நிலையை ருஷ்யா வந்தடைந்ததற்கு காரணமாக லெனின் கூறுகிறார், ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் புரட்சிகர ருஷ்யா வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளையும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் கோட்பாடுகளையும் பற்றிய சிறந்த தகவல்களையும் பெற்றுக் கொண்டது.  இந்த மார்க்சிய கோட்பாட்டு கருங்கல்லை அடித்தளமாகக் கொண்டு போல்ஷிவிசம் தோன்றியது. போல்ஷிவிசமானது சட்டவழியிலான, சட்டவழியற்ற போராட்ட முறைகளை சிறப்பாக கையாண்டதில் அடங்கியிருக்கிறது.

“கோட்பாடு என்னும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின்மீது (granite foundation of theory) எழுந்த போல்ஷிவிசமானது, மறுபுறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவமை காண இயலாத அனுபவச் செழுமைவாய்ந்த பதினைந்து ஆண்டுக் கால (1903-17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்தப் பதினைந்து ஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும்- சட்டவழியிலான மற்றும் சட்டவழியற்றதான, (legal and illegal) அமைதியானதும், புயலின் மூர்க்கம் கொண்டதும், தலைமறைவானதும் வெளிப்படையானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த பொதுமக்கள் வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற, பயங்கரவாத வடிவிலானதும் (parliamentary and terrorist forms) ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் – ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை.”3

       மூன்றாவது இயல், போல்ஷிவிச வரலாற்றின் பிரதான கட்டங்கள். இதில் புரட்சியின் தயாரிப்பு ஆண்டுகளான 1903-05யையும், அனைத்து வர்க்கங்களும் வெளிப்படையாக வெளிவந்து போராடிய புரட்சிகர ஆண்டுகளான 1905-07யையும், ஜாரிசத்தின் கையோங்கிய பிற்போக்கு ஆண்டுகளான 1907-10யையும், புத்தெழுச்சி ஆண்டுகளான 1910-14யையும், ஏகாதிபத்திய முதல் உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகளான 1914-17யையும், பிப்ரவரிப் புரட்சியில் இருந்து அக்டோபர் புரட்சிவரையிலான 1917யையும் சுருக்கமாக எழுதியிருக்கிறார்.

       நான்காவது இயல், தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் எந்தெந்தப் பகைகளுக்கு எதிரான போராட்டம் போல்ஷிவிசம் வளர்ந்து வலிமையுற்று உருக்கு உறுதி பெற உதவிற்று. இதில் போல்ஷிவிசம் எவ்வகையான சித்தாந்த பகைகளுக்கு எதிராகப் போராடி வளர்ந்து உறுதி பெற்றது என்பதையும், முதலும் முதன்மையாகவும் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடியதையும், இதற்கு அடுத்து மற்றொரு பகையான குட்டிமுதலாளித்துவப்  புரட்சிவாதத்தை குறிப்பிடுகிறார்.

“இவர்கள் எளிதில் புரட்சிகர அதிதீவிர நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள் என்றாலும், விடாமுயற்சியுடன் போராடவோ, ஒழுங்கமைப்பு பெறவோ, கட்டுப்பாடும் உறுதிப்பாடும் கொள்ளவோ திராணியற்றவர்கள் என்பதானது மார்க்சியவாதிகளுக்கு இந்தக் கோட்பாட்டின் வாயிலாக முழு அளவுக்கு நிலைநாட்டப்பட்டிருக்கிறது, ஐரோப்பியப் புரட்சிகள், புரட்சிகர இயக்கங்கள் ஆகியவற்றின் அனுபவத்தாலும் இது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் கொடுமைகளால் குட்டிமுதலாளித்துவப் பகுதியோர் “வெறிபிடித்த மூர்க்க நிலைக்குத்” தள்ளிவிடப்படுவதானது – அராஜகவாதத்தைப் போலவே – முதலாளித்துவ நாடுகள் யாவற்றுக்கும் இயல்பாகவே உரித்தான ஒரு சமூக நிகழ்வாகும்.

இந்தப் புரட்சிவாதத்தின் நிலையற்ற தன்மையும், அதன் வறட்டுத்தனமும், மற்றும் அடங்கி அடிபணிந்துவிடும் நிலையாகவும், மனச்சோர்வாகவும் மாயக் கற்பனைகளாகவும் ஏதேனும் ஒரு முதலாளித்துவ “ஐம்பக்” கருத்தின்பால் “பைத்தியக்கார” மோகங் கொண்டுவிடும் மடமையாகவுங்கூட அதிவிரைவாய் மாறிவிடும்படியான அதன் போக்கும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆயினும் கோட்பாட்டின் முறையிலோ, கருத்தியலான முறையிலோ இவ்வுண்மைகளை ஏற்றுக் கொள்வதனால் மட்டும் புரட்சிகரக் கட்சிகள் ஒருபோதும் தமது பழைய தவறுகளிலிருந்து விடுபட்டுவிட முடியாது. எதிர்பாராத சந்தர்பங்களில், ஓரளவு புதிய வடிவங்களில், இதுவரை கண்டிராத ஜோடனைகளிலோ, சுற்றுச்சார்புகளிலோ, விபரீதமான – அல்லது அனேகமாய் விபரீதமான- சூழ்நிலையிலோ இத்தவறுகள் எப்பொழுதும் தலைதூக்கிய வண்ணம்தான் இருக்கும்.”4

       இந்தப் புரட்சிகர குட்டிமுதலாளித்துவ அராஜகவாதம் என்பது, சந்தர்ப்பவாதக் குற்றங்களுக்கு ஒரு வகைத் தண்டனையாக லெனின் கருதுகிறார். இவ்விரு கொடும் கோரங்களும் ஒன்றுக்கொன்று துணையாகக் கரங்கோத்து ருஷ்யாவில் செயல்பட்டதை குறிப்பிடுகிறார்.

       சோஷலிஸ்டு-புரட்சியாளர் கட்சியின் அராஜகத்துடன் குலாவும் புரட்சிவாதத்தை எதிர்த்து போல்ஷிவிக் போராடியது. மார்க்சியத்தை நிராகரித்து, அரசியல் செயலையும், வர்க்க சக்திகளையும் அவற்றின் பரஸ்பரப் பலத்தை முற்றிலும் புறநிலையில் இருந்து புரிந்து கொள்ள திறனற்று இருத்தல் என்கிற இந்தப் போக்கை எதிர்த்து போராடியது.

“இரண்டாவதாக, அந்தக் கட்சி தனிநபர் பயங்கரவாதத்தை, தனியாட்களைக் கொலைபுரிவதை- மார்க்சியவாதிகளான நாம் தீர்மானமாய் நிராகரித்த இதனை- அங்கீகரித்த காரணத்தால் தன்னை அது மிகமிகப் “புரட்சிகரமானதாக”, “இடதுசாரித் தன்மையுடைதாகக்” கருதிக் கொண்டது.

தனிநபர் பயங்கரவாதம் உசிதமானதல்ல என்ற காரணத்துக்காக மட்டுமேதான் நாம் அதை நிராகரித்தோம். ஆனால் “கோட்பாட்டு அடிப்படையில்” மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரத்தை, அல்லது அனைத்து உலகின் முதலாளித்துவ வர்க்கத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கும் புரட்சிக் கட்சி ஒன்றால் கையாளப்படும் பயங்கரத்தைப் பொதுப்படையாகக் கண்டனம் செய்யக் கூடியவர்களை, 1900-03ல் பிளாகானவ், அவர் மார்க்சியவாதியாகவும் புரட்சியாளராகவும் இருந்தபோது, நையாண்டி செய்து எள்ளி நகையாடினார்.”5

       மூன்றாவதாக, நிலப்பிரச்சினையிலும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றிய பிரச்சினையிலும் தாமே சந்தர்ப்பவாதிகளாக இருந்தனர்.

       மிகவும் பிற்போக்கான ஒரு நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதின் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பிடிவாதமாய் மறுத்த “இடதுசாரி” ஒத்ஸொவிஸ்ட்டுகளை கட்சியில் இருந்து நீக்கியதை லெனின் குறிப்பிடுகிறார். நாடாளுமன்ற ஏற்பு, புறக்கணிப்பு என்பதை எதார்த்த நிலைமைகளின் அடிப்படையில் முடிவெடுக்காமல், புறக்கணிப்பு என்பதை கோட்பாடாக வைத்துசெயற்படுவதை விமர்சிக்கிறார். போல்ஷிவிக்குகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்ததைப் பற்றி லெனின் குறிப்பிடுகிறார், “அக்காலத்தில், புறக்கணிப்பே பிழையற்றதாக இருந்தது. பிற்போக்கான நாடாளுமன்றங்களில் பங்குகொள்ளாது இருப்பது பொதுவாகச் சரியானதே என்பதல்ல காரணம், எதார்த்த நிலைமையை நாங்கள் பிழையின்றி மதிப்பிட்டோம் என்பேதே காரணம்.”

       போல்ஷிவிக்குகளின் போராட்ட வெற்றியானது சட்டவழியிலான, சட்டவழியல்லாத என்ற இருவழிகளிலும் செயற்பட்டதில் அடங்கியிருக்கிறது. சட்டவழியிலான போராட்டத்தைக் கைக்கொண்டதால் போல்ஷிவிக்குகள் தங்களை வலுப்படுத்தி வளர்த்திடுவதோடு பாட்டாளி வர்க்கப் புரட்சியை சிதையாது பாதுகாக்கவும் செய்தனர்.

“முடிவுற்றவிட்ட இக்கட்டத்தை இன்று நாம் திரும்பிப் பார்க்கையில், சட்டவழியிலான போராட்ட வடிவங்களையும், சட்டவழியற்ற போராட்ட வடிவங்களையும் ஒன்றிணைத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும், மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான சட்டங்களால் கட்டுண்டிருக்கும் இதர பல நிறுவனங்களிலும் (நோய்க்கால உதவிச் சங்கங்கள் முதலானவை) பங்கெடுத்துக் கொள்வது இன்றியமையாத கடமையாகும் என்னும் கருத்தோட்டத்தை போல்ஷிவிக்குகள் மிக உக்கிரமாய்ப் போராடி நிலைநிறுத்தியிராவிடில், 1908-14ல் அவர்களால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுதியான மையப் பகுதியை (வலுப்படுத்தவதும் வளர்த்திடுவதும் இருக்கட்டும்) சிதையாது பாதுகாத்துக் கொள்ளக்கூட முடியாமற் போயிருந்திருக்கும் என்று மிகத் தெளிவாய்த் தெரிகிறது.”6

       இளம் சோவியத் குடியரசை ஏகாதிபத்திய ஜெர்மனியுடன் போரில் இழுத்துவிட்டு பெரும் நாசத்தை விளைவிக்கும் சாகசவாதக் கொள்கையை ஆதரிக்கும் தீவிர இடது போக்கை லெனின் எதிர்க்கிறார். எவ்வகையான சமரசம் என்பதை நோக்காமல் பொதுப்பட எல்லாச் சமரசங்களையும் நிராகரிப்பது  சிறுபள்ளைத்தனமானது என்கிறார்.

       ஐந்தாம் இயலில், நாடாளுமன்றம் போன்ற வசதியான சட்டவழியிலான முறைக்கு மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டதால், திடிரென்று ஜனநாயகமல்லாத, வசதியற்ற அதாவது சட்டவழியற்ற போராட்ட முறைக்கு மாறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டவுடன் குழப்பத்துக்கு இரையாகி போவதை லெனின் குறிப்பிடுகிறார்.     

“ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டவழியிலான நிலையில் இருந்து சட்டவழியற்ற நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்குமுள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பிவிட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பியா நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் சட்டவழியிலான நிலைக்கு மக்கள் தம்மை மட்டுமீறிப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் “தலைவர்கள்” தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற்சங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். இவர்களது இந்த வழக்கமான செயற்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப் போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டவழியிலான நிலையில் இருந்து சட்டவழியற்ற நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு “தலைவர்களது குழுக்களைத்” தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய “வசதியற்ற”, “ஜனநாயகமல்லாத” முறைகளைக் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டதும்- இவர்கள் நிலைதடுலைமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர்.”7

       சட்டவழியிலான  மற்றும் சட்டவழியற்றப் போராட்ட முறையை இணைக்க வேண்டியதை கம்யூனிஸ்டுகள் ஏன் அறிந்திருக்க வேண்டும் என்பதை லெனின் சுட்டுகிறார்.

“மிகவும் முன்னேறிய நாடுகள் அடங்கலாய்ப் பல நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம், கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குள் தனது உளவாளிகளை அனுப்பி வருகிறது என்பதில் ஐயமில்லை. இனியும் அது அவ்வாறே அனுப்பிவரும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முறைகளில் ஒன்று, சட்டவழியற்ற பணிகளையும், சட்டவழியிலான பணிகளையும் சாமர்த்தியமாய் இணைத்துச் செல்வதாகும்.”8

       புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா? என்ற கேள்வியை ஆறாம் இயல் எழுப்புகிறது. இக்கேள்விக்கு ஜெர்மன் “இடதுசாரிகள்” எதிர்மறையான பதிலையே அளிக்கின்றனர். இந்த பதில் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த போதிலும், உண்மையில் இது அடிப்படையிலேயே தவறானது, வெற்றுச் சொல்லடுக்குகளைத் தவிர வேறு எதுவும் இல்லாதது என்று லெனின் கூறுகிறார்.

இந்த இடதுபோக்கை மறுக்கும் முகமாக லெனின் கூறுகிறார்:-
“..கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற்சங்களில் வேலை செய்ய முடியாது, வேலை செய்யக் கூடாது என்றும், இது போன்ற வேலையைக் கைவிட்டுவிடலாம் என்றும், தொழிற்சங்களை விட்டு வெளியேறி மிக அருமையான (பெருமளவுக்கு மிக இளம் பருவத்தினராகவே இருக்கக்கூடிய) கம்யூனிஸ்டுகளால் கண்டு பிடிக்கப்பட்ட புத்தம் புதிய வகைப்பட்ட அப்பழுக்கற்ற “தொழிலாளர் சங்கத்தை” உருவாக்குவது அவசியம் என்றும், மற்றும் பலவாறாகவும் கூறும் ஜெர்மன் இடதுசாரிகளின் ஆடம்பரமான, மெத்தப் படித்த மேதாவித்தனமான, பயங்கரப் புரட்சிகரமான பல பேச்சுக்களையும் நாங்கள் நகைக்கத்தக்க, சிறுபிள்ளைத்தனமான அபத்தமாகவே கருத வேண்டியிருக்கிறது.”9

பொதுமக்களின் மனநிலைகளைப் கண்டறிவதற்கும், நெருங்கிச் செல்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், கட்சி சார்ப்பற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரது மாநாடுகள் ஏற்படுத்தியதைக் குறிப்பிடுகிறார்.

“எங்களது புரட்சியின்போது நடைமுறையானது கட்சிசார்பற்ற தொழிலாளர்கள், விவசாயிகளது மாநாடுகள் போன்ற ஏற்பாடுகளைத் தோற்றுவித்து. பொதுமக்களுடைய மனநிலையைக் கண்டறிந்து கொள்வது, அவர்களை மேலும் நெருங்கிச் செல்வது, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களில் மிகச் சிறந்தோரை அரசாங்கப் பதவிகளுக்கு உயர்த்துவது முதலான பலவும் செய்யும் பொருட்டு, இந்த ஏற்பாடுகளை ஆதரிக்கவும் வளர்த்துச் செல்லவும் விரிவுபடுத்தவும் நாங்கள் எல்லா வழிகளிலும் முயலுகிறோம்.”10

       புரட்சிக்கட்டத்திலும் கட்சி, தொழிற்சங்கங்களையே ஆதாரமாக் கொண்டு இயங்குவதை தெளிவுப்படுத்துகிறார்.

“கட்சி அதன் வேலைகளில் நேரடியாகத் தொழிற்சங்கங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது. தொழிற் சங்கங்கள், கடந்த காங்கிரசின் (1920 ஏப்ரல்) புள்ளிகளின்படி, நாற்பது லட்சத்துக்கும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. இவை உருவில் கட்சிசார்பற்ற நிறுவனங்கள். ஆனால் நடைமுறையில் மிகப் பெரும்பாலான தொழிற்சங்கங்களின் தலைமை அமைப்புகள் யாவும், முதன்மையாக அனைத்து ருஷ்யத் தொழிற்சங்கப் பொது மையம் அல்லது குழு கம்யூனிஸ்டுகளால் ஆனவைதான், கட்சியின் எல்லாத் தாக்கீதுகளையும் இவை நிறைவேற்றுகின்றன.

இவ்வாறாக, மொத்தத்தில் நாங்கள் உருவில் கம்யூனிஸ்டல்லாத, நெகிழ்வுள்ள, ஒப்பளவில் மிகவும் விரிவான, சக்தி மிக்க பாட்டாளி வர்க்க நிறுவன ஏற்பாட்டைப் பெற்றிருக்கிறோம். இதன் மூலம் கட்சியானது வர்க்கத்துடனும் பொதுமக்களுடனும் நெருங்கிய முறையில் பிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்தான் கட்சியினுடைய தலைமையில், வர்க்கச் சர்வாதிகாரம் செலுத்தப்படுகிறது.

தொழிற்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புகளின்றி, பொருளாதார விவகாரங்களில் மட்டுமின்றி ராணுவ விவகாரங்களிலுங்கூட அவற்றின் சக்தி வாய்ந்த ஆதரவும் பற்றுறுதி கொண்ட முயற்சிகளும் இன்றி, இரண்டரை ஆண்டுகள் இருக்கட்டும், இரண்டரை மாதங்களுக்குக்கூட நாட்டை அரசாள்வதும் சர்வாதிகரத்தைப் பாதுகாத்துக் கொள்வதும் முடியாமல் போயிருந்திருக்கும்.”11

       முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்கத்தில் தொழிற்சங்கத்தின் செயற்பாட்டையும், வளர்ச்சியடைந்த நிலையில் தொழிற்சங்கம் கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாக செயற்பட வேண்டியதையும் குறிப்பிடுகிறார்.

“தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்க நாட்களில் தொழிலாளி வர்க்கத்துக்கு மகத்தானதொரு படியைக் குறித்தன. எப்படியெனில் தொழிலாளர்கள் சிதறிய நிலையில் திக்கற்றவர்களாக இருந்ததிலிருந்து மாறி வர்க்க ஒற்றுமையின் கருத்துக்களைப் பெற்றதை அவை குறித்தன.

பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்சி உருவாகத் தொடங்கியதும் (கட்சியானது தலைவர்களை வர்க்கத்தோடும் பொதுமக்களோடும் பிரிக்க முடியாதவாறு ஒன்றிவிடச் செய்யத் தெரிந்து கொள்ளாத வரை அது கட்சி என்னும் பெயருக்கே ஏற்றதாகாது), தொழிற்சங்கங்கள் தவிர்க்க முடியாதபடி சிற்சில பிற்போக்கு இயல்புகளை, தேர்ச்சித் துறைக்குரிய ஒரு குறுகிய கண்ணோட்டத்தையும், அரசியல் அக்கறையின்மைக்கான ஒருவிதப் போக்கையும், ஒருவகை மந்த நிலைமையும், இன்ன பிறவற்றையும் வெளிப்படுத்தலாயின. ஆயினும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி உலகில் எங்கணுமே தொழிற் சங்கங்களல்லா பிற வழிகளில், தொழிற் சங்கங்களுகக்கும் தொழிலாளி வர்க்கக் கட்சிக்கும் இடையிலான பரஸ்பரச் செயற்பாட்டின் மூலமல்லாத பிறவழிகளில் நடைபெற்றதில்லை, நடைபெறவும் முடியாது. பாட்டாளி வாக்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்றதானது பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு வர்க்கம் என்ற முறையில் பிரம்மாண்டமானதொரு முன்னேற்றப் படியாகும்.

கட்சியானது இப்பொழுது பழைய வழியில் மட்டுமின்றி ஒரு புதிய வழியிலுங்கூட தொழிற் சங்கங்களுக்குப் போதனையளித்து வழிகாட்டியாக வேண்டும். அதேபோதில் தொழிற் சங்கங்கள் அத்தியாவசியமான “கம்யூனிசப் பயிற்சிப் பள்ளியாகவும்,” பாட்டாளி வர்க்கத்தினர் சர்வாதிகரத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பயிற்சி தரும் தயாரிப்புப் பள்ளியாகவும், நாட்டின் பொருளாதாரம் முழுவதுக்குமான நிர்வாகம் படிப்படியாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு (தனித்தனிப் பணிப் பிரிவுகளுக்கல்ல), பிற்பாடு உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் மாற்றப்படுவதற்கு அத்தியாவசியமான தொழிலாளர் ஒற்றுமைக்கான வடிவமாகவும் இருக்கின்றன, நெடுங்காலத்துக்கு அவ்வாறு இருக்கவும் செய்யவும் என்பதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.”12

       மேலும் லெனின் கூறுகிறார், தொழிற்சங்கங்களில் காணப்படும் பிற்போக்குத் தன்மையைக் கண்டு அஞ்சுவது, தட்டிக் கழிப்பது, தாவிச் செல்ல முயல்வது படுமோசமான மடமையாகும். தொழிலாளி, விவசாயி ஆகியோர்களில் பிற்பட்ட பகுதியோருக்கு போதனையளித்து, அறிவொளிபெறச் செய்கின்ற பாட்டாளி வர்க்க கட்சியின் முன்னணிப் படைக்குரிய அந்தப் பணியைக் கண்டு அஞ்சுவதாகும்.

       குறுகிய மனப்பான்மையும் தன்னலம் மிக்க, பேராசை பிடித்த, ஏகாதிபத்திய மனப்போக்கு மற்றும் ஏகாதிபத்தியத்தால் லஞ்சம் கொடுத்துக் கெடுக்கப்பட்டதுமான குட்டிமுதலாளித்துவ தொழிலாளர் பிரபுக்குலம் ஆகிய போக்குகள் தொழிற்சங்கங்களில் வளர்ச்சி பெற்றிருப்பது மறுக்கமுடியாததாகும். இதனைக் காரணம் காட்டி இங்கு செய்ய வேண்டிய அரசியலை மறுப்பது தவறானதாகும்.

“தொழிலாளர் வெகுஜனத் திரளினரது பெயரில் தான், அவர்களை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுத்தான், நாம் “தொழிலாளர் பிரபுக்குலத்தை” எதிர்த்துப் போராடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தை நம் பக்கத்துக்கு ஈர்த்துக் கொள்ளும் பொருட்டுதான் நாம் சந்தர்ப்பவாத, சமூக-தேசியவெறித் தலைவர்களை எதிர்த்துப் போராடுகிறோம். மிகவும் சர்வசாதாரணமான, கண்கூடான இந்த உண்மையை மறப்பது மடமையே ஆகும்.

ஆயினும் தொழிற் சங்க உச்சத் தலைவர்கள் பிற்போக்கு, எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டோராய் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தொழிற் சங்கங்களைத் துறந்துவிட்டு நாம் வெளியே வந்துவிட வேண்டும், அவற்றில் வேலை செய்ய மறுக்க வேண்டும், தொழிலாளர்களுடைய நிறுவன ஒழுங்கமைப்புக்கான செயற்கையான புதிய வடிவங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வருகையில் ஜெர்மன் “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் இதே மடமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்!! கம்யுனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆற்றக்கூடிய மிகப் பெருஞ் சேவையாகிவிடும் அளவுக்கு இது மன்னிக்க முடியாத மடமையாகும்.
கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யக் கூடாதென்னும் இந்த கேலிக்குரிய “கோட்பாடு”, “பொதுமக்களை”, வயப்படுத்தும் பிரச்சினையை “இடதுசாரி” கம்யூனிஸ்டுகள் எவ்வளவு துச்சமாய் மதிக்கிறார்கள் என்பதையும் “பொதுமக்களைப்” பற்றிய கூப்பாட்டை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. “பொதுமக்களுக்கு” உதவி செய்வதற்கும், “பொதுமக்களின்” நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்கும் தெரிந்து கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இன்னல்களையும் இந்தத் “தலைவர்களால்” ஏற்படும் தொல்லைகளையும் புரட்டுகளையும் அடக்குமுறையையும் கண்டு அஞ்சாமல் நிச்சயம் பொதுமக்கள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும்.”13

       சட்டவழியிலான போராட்டத்தைக் கைக்கொள்ளாத இந்த “இடதுசாரி” கம்யுனிஸ்டுகளை லெனின் தொடர்ந்து சாடுகிறார்.

“கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்குக்கிடையே வேலை செய்துவமேயன்றி, செயற்கைத் தன்மை வாய்ந்த சிறுபிள்ளைத்தனமான “இடதுசாரி” முழக்கங்களைக் கொண்டு அவர்களிடம் இருந்து தம்மைப் பிரித்து விலக்கி வேலை கட்டிக்கொள்வதல்ல”14

ஏழாம் இயல், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்பதாகும். இதற்கு “இடதுசாரி” கம்யுனிஸ்டுகள் பங்கெடுக்கக் கூடாது என்று எதிர்மறையில் பதிலளிக்கின்றனர். இடதுசாரி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகவிட்டதாக கருதுகின்றனர். இதற்கு லெனின் பதிலளிக்கிறார்.

“…ஜெர்மன் “இடதுசாரிகள்”, நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது” என்று 1919 ஜனவரியிலேயே கருதியது நமக்குத் தெரிந்ததே. “இடதுசாரிகளின்” இந்தக் கருத்து தவறானது என்பதும் நாம் அறிந்ததே. நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது” என்னும் நிர்ணயிப்பை ஒரே அடியில் ஒழித்திட இந்த ஒர் உண்மையே போதும். அக்காலத்தில் சர்ச்சைக்கு இடமில்லாததாய் இருந்த அவர்களது தவறு, இனி தவறல்ல என்றானது எப்படி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இந்த “இடதுசாரிகளுடையது” ஆகும். இதை நிரூபிக்க அவர்கள் துளிக்கூட சான்று அளிக்கவில்லை, அளிக்கவும் முடியாது.
ஜெர்மனியிலுள்ள “இடதுசாரிகள்” தமது விருப்பத்தை, தமது அரசியல்-சித்தாந்தப் போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது.”15

       வரலாற்று வழியில் காலாவதியானதை, நடைமுறையில் காலாவதியானதாக இடதுசாரிகள் சுருக்கிக்கொண்டனர். இந்த இடதுசாரிகள் தங்களது குறுங்குழுப் போக்கின் தவறைப் புரிந்து கொண்டு தங்களை வர்க்கத்தின் கட்சியாக வளர்த்தெடுக்க வேண்டும்.

“தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல், அதைச் சரிசெய்வதற்குரிய வழிகளை ஆராய்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் – இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம், இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும், இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு பொதுமக்களுக்கும் போதனையளித்து பயிற்றுவிக்க வேண்டும்.

ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறுகுழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத் துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி பொதுமக்களது கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”16

       பொதுமக்களுடைய நிலைக்கு, வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கு, கட்சி சரிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கை வேண்டும். நாடாளுமன்ற தப்பெண்ணங்களை எதிர்ப்பது அவசியமானதே, அதே நேரத்தில் வர்க்கம் அனைத்தின், உழைப்பாளி மக்களின் அனைவரின் வர்க்க உணர்வு, தயார் நிலை ஆகியவற்றின் எதார்த்த நிலவரத்தையும் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட வேண்டும் என்கிறார் லெனின்.

       மேலும் லெனின் கூறுகிறார், “இடதுசாரி” கம்யுனிஸ்டுகள் போல்ஷிவிக்குகளை புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, அவர்களுடைய செயற்தந்திரத்தை நன்கு தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்து தான் கம்யூனிஸ்டுகள் இந்தப் தப்பெண்ணங்களை அம்பலம் செய்யவும், களையவும், முறியடிக்கவும், விடாப்பிடியான நீண்ட போரட்டம் நடத்த முடியும்.

“சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங்கூட, முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு தீங்கிழைப்பதற்குப் பதிலாய், இது போன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள பொதுமக்கள் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத்” துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன. இந்த அனுபவத்தை உதாசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன்- தனது செயற்தந்திரத்தைச் சர்வதேசரீதியில் (குறுகலான, அல்லது தனிப்பட்டதான எந்தவொரு தேசத்துக்குமான செயற்தந்திரமாயிராது, சர்வதேச செயற்தந்திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யூனிஸ்டு அகிலத்துடன் – இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக்கொடுந்த தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாகவுமே அமைகிறது.”17

       நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது புரட்சிகர மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபமே, ஆனால் இது மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது என்கிறார் லெனின்.

இடதுசாரிக் கம்யூனிஸ்டுகள் புதிய சமூகத்தை அமைத்திட விரும்புகிறார்கள், ஆனால் திடநம்பிக்கை கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்டுகளான அவர்கள், சிறந்த நாடாளுமன்றக் குழு ஒன்றைப் பிற்போக்கு நாடாளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதில் உள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள், இது சிறுபிள்ளைத் தனம் என்கிறார் லெனின்.

பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும், பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் பங்கெடுப்பதை மறுப்பது “இடதுசாரி” இளம் பருவக் கோளாரின் வெளிப்பாடாகும். மறுக்கின்ற இத்தகைய செயற்தந்திரம் தவறானது என்கிறார் லெனின்.

“கண்கூடான காரணங்களில் ஒன்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுடைய தவறான செயற்தந்திரமாகும். இவர்கள் அச்சமின்றியும் நேர்மையுடனும் இந்தப் பிழையை ஏற்றுக் கொண்டு, இதனைத் திருத்திக் கொள்ளக் கற்றுக் கொண்டாக வேண்டும். பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தை இவர்கள் மறுத்ததில் இந்தத் தவறு அடங்கியிருந்தது, “இடதுசாரி” இளம்பருவக் கோளாறின் எண்ணற்ற வெளிப்பாடுகளில் இது அடங்கியிருக்கிறது. இந்த “இடதுசாரி” இளம்பருவக் கோளாறு இப்பொழுது வெளியே தெரியும்படி வெளிப்பட்டு விட்டது, இதனால் இது முன்னிலும் தீர்க்கமாகவும் விரைவாகவும் உடலுக்கு இன்னும் கூடுதலான அனுகூலம் உண்டாகும் முறையிலும் குணப்படுத்தப்படும்.”18

எட்டாம் இயல், சமரசம் கூடவே கூடாதா? என்பதாகும். “இடதுசாரிகள்” இதற்கு கூடாது என்று எதிர் மறையான பதிலையே அளிக்கின்றனர். லெனின் இதனை மறுத்துரைக்கிறார்.

“அரசியலில் சில நேரங்களில் வர்க்கங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான அளவு கடந்த சிக்கல் வாய்ந்த உறவுகள் (தேசிய, சர்வதேசிய உறவுகள்) தொடர்பான விவகாரங்கள் எழுவதால், “சமரசமா”, அல்லது கருங்காலியாலோ, துரோகமான “சமரசமா” என்கிற பிரச்சினையைக் காட்டிலும், மிகவும் கடினமான சந்தர்ப்பங்கள் பலவும் ஏற்படும் என்பது தெளிவு. எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு சூத்திரத்தையோ, பொது விதியையோ (சமரசம் கூடவே கூடாது!) வகுத்திடுவது அறிவுடைமையாகாது. அவரவரும் தமது சொந்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்தச் சந்தர்ப்பத்திலும் தமக்குரிய நிலையை வகுத்துக் கொள்ளும் ஆற்றலுடையவராய் இருத்தல் வேண்டும்.”19

       ஒன்பதாவது இயல், பிரிட்டனில் “இடதுசாரி” கம்யூனிசம் என்பதாகும்.

       தி ஒர்க்கர்ஸ் டிரட்னாட் என்ற பத்திரிகைக்கு எழுதப்பட்ட கடிதத்தை முன்வைத்து இந்த இயல் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் எழுதியவரிடம், முதலாளித்துவ அரசியல்வாதிகள் மீது வெறுப்புணர்ச்சி நிறைய இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

“…அரசியல் என்பது ஒரு விஞ்ஞானமும் கலையுமாகும், அது அப்படியே ஆகாயத்திலிருந்து வந்து குதித்துவிடுவதோ, வரப்பிரசாதமாய்க் கிடைப்பதோ அல்ல என்பதையும், பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின்மீது வெற்றி பெற விரும்பினால் அது முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு எவ்விதத்திலும் சப்பையில்லாத தனது சொந்தப் பாட்டாளி “வர்க்க அரசியல்வாதிகளை” உருவாக்க வேண்டுமென்பதையும் இக்கடிதத்தின் ஆசிரியர் பார்க்கத் தவறிவிடுகிறார் என்பது தெரிகிறது”20

பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அரசியல் பற்றிய அனுபவம் ஏற்பட வேண்டியுள்ளது. அதனால் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றச் செயற்பாட்டில் பங்கு கொண்டாக வேண்டும், நாடாளுமன்றதின் உள்ளிருந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளை கண்டுணருவதற்குத் துணை செய்ய வேண்டும். இதற்கு மாறாக சக்தியற்ற சிறுபான்மைத் தொழிலாளர்கள் இடமிருந்து வரும் “சமரசங்களின்றி, திருப்பமின்றி முன்னேறிச் செல்ல வேண்டும்” என்கிற முழுக்கம் தவறானது.

“வேறுவிதமாய்ச் செயல்படுவதானது, புரட்சிக் குறிக்கோளுக்கு ஊறு செய்வதாகவே இருக்கும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தில் பெரும்பாலோரது அபிப்பிராயங்களில் மாற்றம் உண்டாக்காமல், புரட்சி சாத்தியமன்று. இந்த மாற்றத்தை பொதுமக்களுடைய அரசியல் அனுபவத்தால் உண்டாக்க முடியுமேயன்றி, பிரச்சாரத்தினால் மட்டும் ஒரு நாளும் உண்டாக்கிவிட முடியாது.”21

இதனைத் தொடர்ந்து லெனின் மூன்று ருஷ்யப் புரட்சிகள் அடங்கலாய் அனைத்துப் புரட்சிகளிலும் உறுதிசெய்யப்பட்ட புரட்சி பற்றிய அடிப்படை விதியை தருகிறார்.

“..புரட்சி நடைபெற வேண்டுமானால், சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பொதுமக்கள் பழைய வழியில் தாம் வாழ்வது சாத்தியமல்ல என்பதை உணர்ந்து மாற்றங்கள் வேண்டுமெனக் கோரினால் மட்டும் போதாது. புரட்சி நடைபெற வேண்டுமானால், சுரண்டலாளர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமற்போவதும் அவசியமாகும். பழைய வழியில் வாழ “அடிமட்டத்து வர்க்கங்கள்” விரும்பவில்லை, “மேல் வர்க்கங்களால்” பழைய வழியில் நடத்திச் செல்ல முடியவில்லை என்கிற நிலை ஏற்படும்போது மட்டும்தான் புரட்சி வெற்றி பெற முடியும்.”22

       பத்தாவது இயல், சில முடிவுகள் என்ற தலைப்பில் இந்நூலில் காணப்படும் கருத்துக்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

       வலது சந்தர்ப்பவாதத்தையும், இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தையும் வெற்றி கொள்ள வேண்டும், வருவதை அறிந்து கூற வேண்டிய திறம் பெற்றாக வேண்டும் என்று இதில் வலியுறுத்துகிறார்.

“தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் சந்தர்ப்பவாதத்தையும் இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தையும் வெற்றி கொள்ளுதல், முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்த்தல், சோவியத் குடியரசையும் பாட்டாளி வார்க்கச் சர்வாதிகாரத்தையும் நிறுவுதல் என்னும் ஒருமித்த சர்வதேசப் பணியை அந்தந்த நாடும் நிறைவேற்றிட வேண்டிய ஸ்தூலமான முறையில் தேசிய வழியில் பிரத்தியேகமானவற்றையும் தேசிய வழியில் தனிச்சிறப்பானவற்றையும் அலசி ஆராய வேண்டும், தேடிப் பிடித்தாக வேண்டும், வருவது அறிந்து கூற வேண்டும், உணர்ந்து கொண்டாக வேண்டும் – இதுவே வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளும் (அவை மட்டுமல்ல) கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த வரலாற்றுக் கட்டத்தின் அடிப்படையான பணியாகும்.”23

       இதனைத் தொடர்ந்து லெனின் கூறுகிறார், அனுபவமில்லாத புரட்சியாளர்கள் சட்டவழியிலான போராட்டமுறைகளை சந்தர்ப்பவாத முறைகளாக கருதுகின்றனர். முதலாளித்துவ வர்க்கம் சட்டவழிமுறையில் தொழிலாளர்களை எண்ணற்ற முறை ஏய்த்தும் ஏமாற்றியும் விட்டதென்றும், சட்டவழியற்ற போராட்ட முறைகளே புரட்சிகரமானவை என்றும் அடிக்கடி கூறிவருகின்றனர் ஆனால் இது சரியல்ல. சட்டவழியற்ற போராட்ட முறைகளைக் கையாளத் திராணியில்லாத அல்லது விருப்பம் இல்லாத கட்சிகளும் தலைவர்களும்தான் சந்தர்ப்பவாதிகள், இவர்கள் தொழிலாளி வர்க்கத்துத்தின் துரோகிகள் என்கிறார். சட்டவழியற்ற போராட்ட வடிவங்களைச் சட்டவழியிலான போராட்டத்துக்கு உரிய எல்லா வடிவங்களோடும் இணைத்துக் கொள்ளும் திறனில்லாத புரட்சியாளர்கள் மட்டரகமான புரட்சியாளர்களே ஆவர் என்கிறார் லெனின்.

வலதுசாரி மற்றும் இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதிகளின் தவறுகளைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“வலதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் பழைய வடிவங்களை மட்டுமே அங்கீகரிப்பேன் என்று விடாப்பிடியாக நின்று, முற்றிலும் கையாலாகாததாகி விட்டது, புதிய உள்ளடக்கத்தை அது காணத் தவறியதே இதற்குக் காரணம். இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் கண்ணை மூடிக் கொண்டு சில பழைய வடிவங்களைப் பிடிவாதமாய் நிராகரிக்கிறது, புதிய உள்ளடக்கம் எல்லா வகையான வடிவங்கள் மூலமாகவும் வலுக்கட்டாயமாக வெளிப்படுகிறது என்பதையும், கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லா வடிவங்களிலும் புலமை பெறுவதும், மிகவும் கூடுதலான வேகத்திலும் ஒரு வடிவத்துக்குத் துணையாக மற்றொன்றை இணைத்துக் கொள்வதும், ஒன்றுக்குப் பதிலாய் இன்னொன்றை பயன்படுத்திக் கொள்வதும், நம்முடைய வர்க்கத்திடமிருந்தோ, நம்முடைய முயற்சிகளின் வாயிலாகவோ ஏற்படாத எந்த மாறுதலுக்கும் பொருத்தமாய் நம்முடைய செயல்தந்திரத்தை மாற்றியத்துக் கொள்வதும் நமது கடமையாகும் என்பதையும் அது பார்க்கத் தவறிவிடுகிறது.”24

இந்நூலை சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் விரைவாக முழுமையாக இடதுசாரி கம்யூனிசம் என்னும் இந்த இளம்பருவக் கோளாறில் இருந்து விடுபடும் என் முழு நம்பிக்கை தெரிவித்து லெனின் முடிக்கிறார். வலதுசாரி இடதுசாரி சூத்திரவாதங்களில் இருந்து விடுபட்டால் லெனினது நம்பிக்கை நிலைநாட்டப்படும்.

அடிக்குறிப்பு

1.“இடதுசாரி” கம்யூனிசம்- ஓர் இளம்பருவக் கோளாறு – தேர்வு நூல்கள் 10 - பக்கம்- 183-184
2. மேற்கண்ட நூல் - பக்கம்- 190-191
3. மேற்கண்ட நூல் - பக்கம்- 191
4. மேற்கண்ட நூல் - பக்கம்- 201-202
5. மேற்கண்ட நூல் - பக்கம்- 203-204
6. மேற்கண்ட நூல் - பக்கம்- 208
7. மேற்கண்ட நூல் - பக்கம்- 217-218
8. மேற்கண்ட நூல் - பக்கம்- 226
9. மேற்கண்ட நூல் - பக்கம்- 231
10. மேற்கண்ட நூல் - பக்கம்- 229-230
11. மேற்கண்ட நூல் - பக்கம்- 228-229
12. மேற்கண்ட நூல் - பக்கம்- 232-233
13. மேற்கண்ட நூல் - பக்கம்- 226-237
14. மேற்கண்ட நூல் - பக்கம்- 239
15. மேற்கண்ட நூல் பக்கம்- 244-245-246
16. மேற்கண்ட நூல் - பக்கம்- 244-245
17. மேற்கண்ட நூல் - பக்கம்- 249-250
18. மேற்கண்ட நூல் - பக்கம்- 272
19. மேற்கண்ட நூல் - பக்கம்- 263-264
20. மேற்கண்ட நூல - பக்கம்- 283-284
21. மேற்கண்ட நூல் - பக்கம்- 290
22. மேற்கண்ட நூல் - பக்கம்- 291
23. மேற்கண்ட நூல் - பக்கம்- 303-304

24. மேற்கண்ட நூல் - 10 பக்கம்- 323

No comments:

Post a Comment