Saturday, 2 April 2016

பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை- லெனின்

முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1875

(குட்டிமுதலாளித்துவ பொருளாதார அறிஞரான ஸிஸ்மொந்தீ கருத்திற்கும் இவரது கருத்துடைய ருஷ்ய ஸிஸ்மொந்தீவாதிகளின் கருத்திற்கு அளிக்கப்பட்ட விமர்சனம். புருத்தோனுக்கு மார்க்ஸ் அளித்த விமர்சன நூலான தத்துவத்தின் வறுமை-யைப் போல் இந்நூலும் படித்தறிய வேண்டும்.)

இந்நூலை ஆங்கிலத்தில் வாசிக்க:




1897ஆண்டில் பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை என்ற நூலை லெனின் எழுதினார். சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதார அறிஞரான ஸிஸ்மொந்தீயின் கருத்து ருஷ்ய நரோத்னிக்குகளின் சிற்றளவு உற்பத்தியின் கண்ணோட்டத்துடன் ஒத்ததாக இருந்தது. அதே போல் பெருந்தொழில் உற்பத்தி ஆதரவார்களுக்கும் எதிரான போக்கிலும், முதலாளித்துவத்துக்கு வேண்டிய உள்நாட்டுச சந்தை பற்றிய பிரச்சினையிலும் ஒத்த கருத்துடையவர்கள். முதலாளித்துவம் சாத்தியமற்றது என்பதே இவ்விருவரின் மையக் கருத்தாகும். மொத்தத்தில் குட்டிமுதலாளித்துவ சிந்தனைப் போக்குடையவர்களாகவர்.

விரைவான திரட்சி பெரும்விபத்து என்கிற ஸிஸ்மொந்தீயின் கருத்தை லெனின் மறுக்கிறார்.

“இப்போது நாம் திரட்சி பற்றிய ஸிஸ்மொந்தீயின் கருத்தை முழுமையாக மதிப்பீடு செய்யமுடியும். விரைவான திரட்சி பெருவிபத்துக்குக் கொண்டுபோய்விடுகிறது என்கிற அவரது வன்கூற்று முற்றிலும் தவறாகும், அது திரட்சியை அவர் புரிந்துகொள்ளத் தவறியதினாலேதான் விளைந்தது,  அதேபோல் நுகர்வுக்கு மேல் உற்பத்தி கோகக்கூடாது, ஏனெனில் நுகர்வுதான் உற்பத்தியை நிர்ணயிக்கிறது என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்லும் கூற்றுகளும் கோரிக்கைகளும் முற்றிலும் தவறாகும். உண்மையிலே, வழக்கு இதற்கு எதிர்நிலையாகத்தான் உள்ளது, மற்றும் தனிக்குறிப்பான, வரலாற்றுரீதியிலே நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திலுள்ள யதார்த்தத்தின் பக்கம் ஸிஸ்மொந்தீ வெறுமே முதுகைத் திருப்பிக்கொள்கிறார், பகுப்பாய்வுக்குப் பதிலாகச் சிறுபூர்ஷ்வா தர்மோபதேசங்களை வைக்கிறார்”1

ஆடாம் ஸ்மித்திடம் இருந்து ஸிஸ்மொந்தீ இரவல் வாங்கிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியைப் பற்றிய கருத்து தவறான கோட்பாடாகும். இவரது கருத்து உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கொண்டு நெருக்கடிக்கு விளக்கம் அளிக்கிறது.

நெருக்கடியைப் பற்றிய இரண்டு கோட்பாடுகள் இருப்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அழித்திடவும் இந்தப் பிரச்சினையை குழப்பிடவும் ஸிஸ்மொந்தீயின் ருஷ்ய ஆதவரவாளர்கள் முயற்சிக்கின்றனர். முதல் கோட்பாடு, நெருக்கடிக்கு காரணம் குறைநுகர்வு (underconsumption) என்கிறது. மற்றொரு கோட்பாடு சமூகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்திக்கும் தனியுடைமை விநியோக முறைக்கும் இடையே உள்ள முரண்பாடு என்கிறது. இதனை சற்று விரிவாக லெனின் விவரிக்கிறார்.

“நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்விரண்டு கோட்பாடுகள் நெருக்கடிகளைப் பற்றி முற்றிலும் வெவ்வேறான விளக்கங்கள் தருகின்றன. உற்பத்திக்கும் தொழிலாளி வர்க்கத்தின் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு முதல் கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமை முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைக் கொண்டு இரண்டாவது கோட்பாடு நெருக்கடிகளை விளக்குகிறது. எனவே, முந்தைய கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்திக்கு அப்பால் வெளியே இருப்பதாகக் காண்கிறது, பிந்தையக் கோட்பாடு நெருக்கடிக்குரிய வேர் உற்பத்தி நிலைமைகளிலேதான் இருப்பதாகக் காண்கிறது. மேலும் சுருக்கமாகச் சொல்வதனால், முந்தையக் கோட்பாடு குறைநுகர்வை கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது, பிந்தையக் கோட்பாடு உற்பத்தியின் அராஜகத்தன்மையைக் கொண்டு நெருக்கடிகளை விளக்குகிறது.”2

                இரண்டு கோட்பாடுகளும் பொருளாதார அமைப்பு முறைக்குள்ளேயே உள்ள முரண்பாட்டைக் கொண்டு விளக்கியப் போதிலும், முரண்பாட்டின் தன்மையில் வேறுபடுவதாக லெனின் குறிப்பிடுகிறார். குறைநுகர்வை மார்க்சியம் ஏற்றுக் கொள்கிறது ஆனால் அதனை அதற்கே உரிய கீழ்மட்டத்தில் வைக்கிறது, ஏன் என்றால் இதனைக் கொண்டு நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று மார்க்சியம் போதிக்கிறது.

“.. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு என்கிற உண்மையை இரண்டாம் கோட்பாடு மறுக்கிறதா? கிடையவே கிடையாது. அது அந்த உண்மையை முற்றாக அங்கீகரிக்கிறது, ஆனால் அதை அதற்குரிய கீழ்மட்ட இடத்தில் வைக்கிறது, முதலாளித்துவ உற்பத்தியின் முழுமையின் ஒரு பிரிவுடன் மட்டும் தொடர்புடைய உண்மையாக அதை வைக்கிறது. இந்த உண்மையால் நெருக்கடிகளை விளக்கமுடியாது என்று அது போதிக்கிறது, அந்த நெருக்கடிகளைத் தோற்றுவிப்பது இன்றையப் பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படையானதாக இருக்கும் மற்றொரு, மேலும் ஆழமான முரண்பாடு ஆகும், - அதாவது, உற்பத்தியின் சமூகமயமாக்கப்பட்ட தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையே உள்ள முரண்பாடுதான்.”3

                நெருக்கடிகள் பற்றிய இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை ருஷ்யத் தன்னுணர்ச்சிவாதிகள் மறைத்திட தன்னாலானத அனைத்தையும் செய்கின்றனர். ஆனால் இரண்டு கோட்பாடுகளும் முதலாளித்துவத்தைப் பற்றிய அடிப்படையாகவே வேறுபட்ட கண்ணோட்டக்கங்களைக் கொண்டுள்ளது.

       குறைநுகர்வுக் கோட்பாடு முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையை பொய்யானது என்று சொல்லி எதார்த்தத்தை மறுப்பதின் மூலம் வேறுபாதையை நாடத்தூண்டுகிறது. ஆனால் உற்பத்தியின் சமூகமயமாக்கல் தன்மைக்கும் விநியோகத்தில் தனியுடைமை தன்மைக்கும் இடையேயான முரண்பாடாகக் கொள்ளும் போது முதலாளித்துவத்தின் வளர்ச்சியே சோஷலிச சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்வதை சுட்டிக்காட்டுகிறது.

குறைநுகர்வு கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“உண்மையிலே, உற்பத்திப் பொருட்களைத் திருப்பி எடுத்துக் கொள்வது அசாத்தியம் என்பதை வைத்தோ உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்தோ நெருக்கடிகளை நாம் விளக்குவோமானால் நாம் எதார்த்தத்தை மறுத்திடும் நிலைக்குப் போவோம், முதலாளித்துவம் வளர்ந்துவரும் பாதையின் சரித்தன்மையை நாம் மறுத்திடும் நிலைக்கும் போவோம், இந்தப் பாதை ஒரு “பொய்யான பாதை” என்று சொல்லி “வெவ்வேறான பாதைகளை”த் தேடிச் செல்கிறோம். இந்த முரண்பாட்டை வைத்து நெருக்கடிகளைப் பற்றிய முடிவுக்கு வருகிறபோது அது வளர வளர அந்த முரண்பாட்டில் இருந்து விடுபட்டு வெளியே வருவது மேன்மேலும் கடினமாகிவிடும் என்று நாம் நிச்சயமாக எண்ணப்புகுவோம்.”4

மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-
“..உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் பறித்துடைமையாக்கிக் கொள்வதின் தனியுடைமைத் தன்மைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டை வைத்து நாம் நெருக்கடிகளை விளக்குவோமானால், அதன் வழியாக முதலாளித்துவத்துப் பாதை எதார்த்தமானது என்றும் முன்னேற்றகரமானது என்றும் அங்கீகரித்து “வேறான பாதைகளை”த் தேடிச்செல்வது முடடாள்தனமான தன்னுணர்ச்சிவாதம் என்று நிராகரிக்கிறோம். அதன் வழியாக, இந்த முரண்பாடு மேலும் வளர வளர அதிலிருந்து விடுபட்டு வெளிவருவது மேலும் எளிதாகிவிடும் என்பதையும், இந்த அமைப்புமுறையின் வளர்ச்சிதான் வெளிவருவதற்கான வழியையும் கொடுக்கிறது என்பதையும் அங்கீகரிக்கிறோம்.”5

ஆக குறைநுகர்வுக் கண்ணோட்டம் முதலாளித்துவத்தை தவிர்த்த வேறொரு பாதையைத் தேடி திசைத்தெரியாமல் தடுமாறச் செய்யும். மார்க்சியக் கண்ணோட்டம், முதலாளிதுவ உற்பத்தி சக்தியின் வளர்ச்சினால் உற்பத்திமுறை சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியாகவும் விநியோக முறை தனிவுடைமையின் அடிப்படையினால் நிகழ்வதனால் நெருக்கடி ஏற்படுவதாகக் கூறுகிறது. இந்த சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் சக்திகளை நிர்வகிக்க தனிவுடைமைத் தன்மையான முதலாளித்துவம் தடையாகிப் போகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. இந்த நெருக்கடிக்குத் தீர்வாக சோஷசலிசப் புரட்சி ஏற்படுகிறது. இந்நிகழ்வை எங்கெல்ஸ் தமது டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் விவரித்துள்ளார்.

“பாட்டாளி வர்க்கப் புரட்சி - முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்கிறது. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை இவ்விதம் அது பொதுச் சொத்தாக மாற்றுகின்றது. இந்தச் செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இது காறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. சமூகமயமான பொருளுற்பத்தி இனி முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் நடைபெறுவது சாத்தியமாகிறது.

பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது சமுதாயத்தில் வெவ்வேறு வர்க்கங்கள் இருத்தலை இனிமேல் காலத்திற்கொவ்வாததாக்குகிறது. சமூகப் பொருளுற்பத்தியில் ஆராஜகம் எவ்வளவுக்கு எவ்வளவு மறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அரசின் அரசியல் அதிகாரம் மடிந்து போகிறது. முடிவில் தனக்கு உரித்தான சமூக ஒழுங்கமைப்பை ஆட்சி புரியும் எஜமானனாகிவிடும். மனிதன், அதே போதில் இயற்கையின் அதிபதியும் ஆகி, தானே தனக்கு எஜமானன் ஆகிறான் - சுதந்திரமடைகிறான்.

உலகளாவிய இந்த விடுதலைப் பணியினைச் செய்து முடிப்பது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். இந்தச் செயலுக்கான வரலாற்று நிலைமைகளையும் அதோடு கூடவே இதன் தன்மையையும் தீர்க்கமாய்ப் புரிந்து கொண்டு, தற்போது ஒடுக்கப்பட்டதாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளையும் அது முடிக்க வேண்டிய சகாப்தகரச் சிறப்புடைத்த இந்தப் பணியின் முக்கியத்துவத்தை முழு அளவில் தெரியப்படுத்துவது தான் பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை வெளியீடாகிய விஞ்ஞான சோஷலிசத்தின் கடமை.

                குறைநுகர்வுக் கண்ணோட்டம் திசைமாறி அலையவிடுகிறது, மார்க்சியக் கண்ணோட்டம் எதார்த்தமான விடியலுக்கு வழிகாட்டுகிறது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி சோஷலிசப் புரட்சிக்கு புறக்காணரமாகிறது. பாட்டாளி வர்க்கம். விஞ்ஞான சோஷலிசத்தின் தெளிவான விவரிப்பால் வர்க்க உணர்வைப் பெற்று புரட்சிக்கு அகக் காரணமாகிறது. புற-அக காரணங்களால் புரட்சி ஏற்பட்டு சமூக மாற்றம் நிகழ்க்கிறது. நெருக்கடியில் இருந்து விடுபட்டசோஷலிச சமூகத்தில் திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


பயன்படுத்திய நூல்கள்

1. பொருளாதாரத் தன்னுணர்ச்சிவாதம் பற்றிய ஒரு பண்புரை - பக்கம் -43-44
2. மேற்கண்ட நூல் - பக்கம் – 61
3. மேற்கண்ட நூல் - பக்கம் – 61-62
4. மேற்கண்ட நூல் - பக்கம் – 68-69
5. மேற்கண்ட நூல் - பக்கம் – 69

No comments:

Post a Comment